Tuesday, August 3, 2010

த்ரில்லர் பயணம் - தொடர்ச்சி






\






காய்ச்சலோடு ஊசி போட்டபின் ரூம் காலி செய்துவிட்டு பயணம் தொடர்ந்தோம்..

தாய்லாந்தில் பார்க்க வேண்டிய இடங்களை நீல பலகையில் ஆங்காங்கே எழுதி வைத்திருப்பார்கள்..

அதனால் பெரிய பிளான் ஏதும் தேவையில்லை..


மேலும் அருகிலுள்ள கடையில் , அங்குள்ள சுற்றுலா இடம் பற்றி கேட்டால் அழகாக சொல்லுவார்கள் . ஆனால் தாய் பேச தெரிந்திருக்கணும்.. அவ்வ்வ்

கிள்ம்பும்போதே விடுதியிலுள்ள பெண்ணிடம் கேட்டபோது மிக அருகிலேயே ஒரு நீரூற்று இருப்பதாக சொன்னார்..

சுமார் 10 கிமீ தொலைவுதான்...ஆறு போல் ஓடி வருகுது நீர்.. அதன் மூலத்தை பார்க்க சென்றால் , ஒரு நீர்த்தொட்டி போன்ற இடத்தில் மிக அழகான ஊற்று நீல கலரில்..
குழந்தைகள் பலர் விளையாடிக்கொண்டிருந்தனர்..

அப்படியே அள்ளி பருகலாம் போன்றதோர் தெளிவான கண்ணாடி போன்ற நீர்..அப்பழுக்கின்றி..


இதற்கு முன் வேறு மலைப்பயணங்களில் பார்த்துள்ள ஊற்றுகள் சுடு தண்ணீர் .. அதில் நேரடியாக குளிக்க முடியாது.. கொதிக்கும் சூடு.. ஆனால் அதில் கால் வைத்து அமர்ந்திருப்பார்கள்..


பின்பு சிறிது தூரத்தில் அறைகள் கட்டிவிட்டு குளிர்ந்த நீரையும் கலந்துகொண்டு குளித்திட ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்.
சின்னவர் மட்டும் குளிக்க இறங்கினார்.. ஆனால் நாங்களெல்லோரும் இறங்காததால் , அவருக்கும் மூடு இல்லை..

அதை முடித்துவிட்டு , நேராக இப்போது அம்யூஸ்மெண்ட் பூங்கா செல்ல பயணித்தோம்.. சுமார் 60 கிமீ தொலைவுதான்..


அதை தேடிக்கொண்டே போன போது அந்த பாதையை தவற விட்டு வேறொரு மலையில் ஏறிவிட்டோம்..
எனக்கோ எதுவுமே சேலஞ்ச் தான்..

நாங்கள் ஏறிய மலையில் ஏரி ஒன்று இருந்தது.. அதனை சுற்றுலா தளமாக ஆக்கி பூங்கா , அதனை சுற்றி உணவகம் என மக்கள்
கொண்டாடிக்கொண்டிருந்தார்கள்..

அங்கு நேரம் செலவழிக்க விரும்பாமல் திருப்பிக்கொண்டு , வரும் வழியில் கால்பந்து போல ஒரு சோபா (சிறுவர் அமருவது ) கடையில் இருந்தது. (நீண்ட நாள் தேடியது )

அந்தக்கடைக்கு சென்று அதை வாங்கிவிட்டு தெளிவாக வழி கேட்டு பின் ஒருவழியாய் தொங்-சொம்பூன் அம்யூஸ்மெண்ட் பார்க் வந்தடைந்தோம்..

அதுவரை காய்ச்சலில் இருந்த பெரிய மகன் சுறுசுறுப்போடு எழுந்துவிட்டார்..தாம் என்னவெல்லாம் விளையாடணும் என ஆர்வத்தோடு சொல்லவும் , நான் முறைக்கவும், அவர் வழியவும்,

சரி பொழச்சு போ னு டிக்கெட் எடுத்துவிட்டு , மலைக்கு அழைத்து செல்லும் ரயிலில் உட்கார்ந்தோம்.
குழந்தைகளுக்கான ஒரு சிறந்த இடம் ..

குதிரையேற்ற பயிற்சி, கவ் பாய் வாழ்க்கை , ஃபார்ம் விலங்கு வளர்ப்பு என இயற்கையோடு ஒன்றிய இடம்..மலையடிச்சாரல் , புல், புதர்கள், குளுமை

என.
அங்கு தங்கிட கவ் பாய் வண்டிகளையே ரிசார்ட் ஹோம் மாதிரி செய்து வைத்துள்ளார்கள்.. புதியதொரு அனுபவம் கிடைக்கும்.. இதில் ஹனி மூன் தம்பதியருக்கென்று சிறப்பான இடமும்..

ரயில் சுமார் 7-10 கிமீ பயணம் செய்து மலை உச்சியை அடைந்தது..


கோ கார்ட், மாதிரி ஏகப்பட்ட கார் ரேஸ்கள் விதவிதமாய்.. மலையிலிருந்து சரிந்து கீழே செல்லும்,.. பின் அங்கிருந்து கேபிள் கார் மூலம் மேலே ஏறி வரணும்.


அடுத்து மிகப்பெரிய பிளாஸ்டிக் பந்து அதனுள் நாம் நுழைய, மலையிலிருந்து ஒரு பாதையில் உருட்டி விடுவார்கள்..
ஒரு நீண்ட பிளாஸ்டிக் சீட்டில் வட்டப்படகு போன்ற மிதவை ஒன்றை நாம் அமர்ந்துகொள்ள அதை தள்ளிவிடுவார்கள்.. அது சுற்றிக்கொண்டே மிக வேகமாய் கீழிறங்கும்..

அப்புரம் மலைப்பகுதியில் ATV ஓட்டுவது..


சின்னவருக்கு Go Kart போக ஆசை. வயது 5 என்றாலும் 10 வயது மதிக்கலாம் , தாய் குழந்தையை ஒப்பிடும்போது..
அதனால் டிக்கெட் வாங்கிக்கொண்டு தயாரானார்.

எங்களுக்கு தான் உள்ளூர பயம்..
அவனுடைய கனவே தான் ஒரு மிகப்பெரிய பைக் ரேசரா வரணும் என்பதுதான்.. அதைபற்றியே தான் நாள் முழுக்க பேசிக்கொண்டிருப்பான்..

பசங்க இருவருக்குமே எப்படா 18 வயதாகும் னு இதுக்காகவே அவசரப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்..


தலையில் ஹெல்மெட் மாட்டும்போதும் , " பயமா இல்லையா, நீ ஓட்டிருவியா?. " என கேட்டோம்.


ஜம்முன்னு போய் உட்கார்ந்தால் கால் எட்டவில்லை.. பின்னால் 2 தலையணை வைத்து சரி செய்தார்கள்..
ஆக்சிலேட்டர், பிரேக் சொல்லி தந்தார்கள்... கிளம்பிட்டார்..

வளைவுகளில் திருப்ப முதலில் கொஞ்சம் கஷ்டப்பட்டாலும், பின் வேகத்தை கூட்டி குறைத்து சாகசம் செய்தார்.
பின்னால் வந்த பெரிய பையனை முந்துவதே குறிக்கோளாய் இருந்தார்..

வேண்டாம்னு சொன்னா கேட்டாதானே?..
வேகத்தில் போய் அடுக்கி வைத்திருந்த டயர்களில் மோதினார்.. முகத்தில் பீதியில் அழுகை வரும்போல இருந்தது.. ஆனாலும் அசடு வழிய , திருப்பிக்கொண்டு மும்முரமாக மீண்டும் ஓட்டினார்..

ரேஸிங்கில் முதல் படி ஏறிவிட்ட பெருமையோடு விண்வெளி வீரர் போல இறங்கினார்..
அண்ணா, அப்பா , எல்லாரும் தூக்கி வைத்து கொஞ்ச வெட்கம் வந்துவிட்டது..:)

அடுத்து Free fall னு நம்மை கொக்கியில் மாட்டி கேபிளில் தொங்க விடுவார்கள்.. மேலேஉள்ள கம்பியை பிடித்தோ பிடிக்காமலோ , கையை வீசிக்கொண்டே மலையிலிருந்து கீழே பறக்கலாம்.
இதை ஏற்கனவே பலமுறை பத்தாயா என்ற கடற்கறை சாகசங்களில் செய்துள்ளதால் செய்யவில்லை..

ATV மட்டும் அண்ணனும் தம்பியும் மீண்டும் மீண்டும் போக ஆசைப்பட்டார்கள்.. அங்கிருந்து நகர்த்தி கூட்டி வருவதற்குள் பெரும்பாடானது..
பசங்களுக்கு ஏந்தான் காரோட்ட பைக் ஓட்ட இப்படி ஆசை வருதோ..?..

விளையாட்டை முடித்ததும் கிளம்புகையில் ,
" அந்த காய்ச்சல் காரன் எங்கேன்னு தேட வேண்டியதாயிற்று..

திரும்பவும் காவ் யாய் மலை வழியே சென்று , அங்குள்ள பல அருவிகளுக்கு நடந்தே சென்று குளித்ததெல்லாம் முக்கியமல்ல. ஒவ்வோன்றும் சுமார் 3 மிகீ, காடுகளுக்குள்ளே, ஒத்தையடிப்பாதையில் கல் முள்ளோடு..கொஞ்சம் தவறினாலும் அகால பாதாளத்தில் விழணும்.. கவனமா நடக்கணும்..

ஒரு பெரிய மரம் சாய்ந்து கிடந்தது.. சுமார் 3-4 அடி உயரம். அதை ஏறி கடக்க சின்ன மரம் ஒன்றை போட்டிருந்தார்கள்.. சின்னவர் தான் துறுதுறுன்னு வேகமாய் நடந்தார்;

இந்த மரத்தில் ஏறி இறங்கும்போது பிடிச்சுக்கோ னு சொன்னத கேட்காம " ஹ நான் என்ன பேபியா ?." னு சொல்லிட்டே இறங்கும்போது தொப்பென விழுந்தார்.
எனக்கு சிரிப்பு .

ஆனாலும் அடக்கிக்கொண்டு, அவரை எழுப்பி , அட்வைஸ் சொல்ல வாயெடுப்பதற்குள் , " ஒண்ணுமில்லம்மா , டோண்ட் ஒர்ரி " ன்னுட்டார்...
இதெல்லாம் பழகணும்னுதானே இப்படி அழைத்து வருவதே.. காயப்படாமல் வாழ்க்கை இனிக்குமா?.

------------------------------

பின் மலைப்பயணத்தை முடித்துக்கொண்டு அடுத்த நாள் நக்கோன் நயோக் என்ற அருவி பக்கம் தங்கலாம்னு சென்றால் அங்கும் இதே கதைதான் ரூம் தேட.


போகும் வழியில் சரிகா அருவி க்கு இடது புறம் திரும்பவும் னு சைகை பார்த்து இடது பக்கம் போனால் போய்ட்டே இருக்கு மலையை காணோம்..( யாரோ சதி செய்துட்டாங்க )


அப்ப எதிரில் வந்த ஒரு காரை நிப்பாட்டி வழி கேட்டோம்..
கார் கண்ணாடியை இறக்கியவர் என் முகத்தை பார்க்காமல் பேசினார்.. ( அத்தனை ஐ கொடூரமா ? )

தலை வேறு மொட்டை அடித்திருந்தார்.. கிட்டத்தட்ட ஒரு தாதா மாதிரி நினைத்து கொஞ்சம் பயம் கொண்டேன்.
இருட்ட வேறு ஆரம்பித்தது..

ஆள் அரவம் ஏதுமில்லாத இடம்.


" Follow me " னு சொல்லிட்டார்..


நாங்க அந்த சின்ன ரோட்டில் காரை திருப்புவதற்குள் படாத பாடு பட்டோம்.. (காரை அப்படியே திருப்பும் மாடல் வந்திருக்காமே..ஜப்பானில். ? )

அதுவரை காத்திருந்து இங்க சுத்தி அங்க சுத்தி அழைத்து சென்றார்..

பென்ஸ் கார் அவரோடது.. சும்மா வழுக்கிக்கொண்டு போகுது , திரும்புது..
சரியா ஒரு பெரிய ரோட்டின் சிக்னலில் வந்து நின்றார்..

அங்கே சரிகா அருவிக்கான வழி இடது பக்கம் திரும்ப சொல்லி போட்டிருந்தது..
ஆனா இவரோ நேராக செல்லும் வழியில் காரில் நிற்கிறார். வழி புரிஞ்சாச்சு.

ஆனா எப்படி சொல்ல. என நினைக்கும்போதே , மொட்டைத்தலை தாதா போன்ற அந்த ஆள் காரின் கதவை திறந்துகொண்டு இறங்கி வந்தார் எங்களை நோக்கி.


ஆச்சர்யத்தில் மூர்ச்சைதான் ஆகவில்லை நாங்கள்...


அனைவரும் ஒரு சேர கைகளை குவித்தோம் ..

தலை வணங்கினோம்...



காவி உடை அணிந்திருந்தார்.. சாதாரண காலணியும்.. தெய்வத்தை பார்த்தது போல இருந்தது ஒரு நிமிடம்..



அவர் அங்குள்ள புத்த பிட்சுகளின் தலைவர்...

அந்த ஊரின் பல இடங்களில் இவரின் புகைப்படங்கள்...


அவர்கள் பெண்களை நோக்கி பேசுவதில்லை...

வெட்கினேன்..என் எண்ணத்துக்காக...


--- தொடரும் .

No comments: