Thursday, April 16, 2009

தவறி உடைந்த பொம்மை - குட்டி கதை...



கோடை விடுமுறைக்கு பேரப்பிள்ளைகள் வருகிறார்கள் என்றதும் லஷ்மியம்மாவுக்கு மனம் கொள்ளாத மகிழ்ச்சி.. அவர்களுக்குக்கான அறையை சுத்தப்படுத்தி ஒழுங்குபடுத்துவதிலும், பிடித்த பலகாரங்கள் செய்வதும், ஊர் சுற்றிப்பார்ப்பதற்கான ஏற்பாடுகளை செய்வதுமாய் இருந்தார்.. பட்டணத்தில் படிக்கும் பிள்ளைகள் இந்த கிராமத்தில் , ஆறு , வயல்வரப்பு,தோப்பு, மாட்டுவண்டி பயணம் என பலவற்றையும் ரசிப்பதைக்கண்டு அவரும் குழந்தையாவார்.. டில்லியில் பெரிய உத்யோகத்தில் மகன் . கூடவே வந்து தங்கும்படி அழைத்தபோதெல்லாம் அந்த சிறை வாழ்க்கையை தவிர்த்து வந்தார்கள் இருவருமே...சில நாட்கள் மட்டுமே பேருக்கு சென்று தங்குவதுண்டு.. வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டடும் ஓடி சென்று பேரப்பிள்ளைகளை முத்தமிட்டு அனைவரையும் உள்ளே அழைத்து வந்தார்.. 8, 6ம் வயதான குழந்தைகள் இருவரும் வீடு , தோட்டம் என விளையாட ஆரம்பித்தனர்.. வீட்டுக்குள் விளையாடும்போது மட்டும் மிக அன்பாக சொல்லி பார்த்தார், சீழே விழுந்து காயப்படுவீர்கள், மேலும் முக்கிய பொருள்கள் தவறிவிழுந்து உடையலாம் எனவும்.. குழந்தைகளோ கேட்பதாயில்லை... சிரித்து மழுப்பி மீண்டும் அப்படியே விளையாடுகிறார்கள்.. வீட்டுக்குள்ளேயே ஓடி ஓடி விளையாட்டு...அப்படி விளையாடிக்கொண்டிருக்கையிலேயே சுவர் முக்கில் வைத்திருந்த பழங்கால பொம்மை ஒன்று தவறி விழுந்து உடைந்தது.. மருமகள் வந்து இருவரையும் திட்டி விட்டு விழுந்த துண்டுகளை அகற்றிவிட்டு சென்றுவிட்டார்...மகனும் தன் பங்குக்கு திட்டி விட்டு சென்றார்...லஷ்மியம்மாவால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.. திட்டு வாங்கிய குழந்தைகளை மார்போடு அணைத்து ஆறுதல் சொல்ல மட்டுமே முடிந்தது...லீவை மகிழ்வாக கொண்டாட வந்த குழந்தைகளை என்ன சொல்ல..? விடுமுறை முடிந்து கிளம்பும் நாள் வந்தது... அம்மாவிடம் வந்து பேசிக்கொண்டிருந்தபோது, " ராஜா, மறக்காமல் அடுத்த முறை வரும்போது அதே பொம்மை ஒன்றை வாங்கிவந்துவிடு " என சொல்லவும் மகன் அதிர்ந்தார்.. " என்னம்மா சொல்றீங்க..? மிஞ்சிப்போனால் 100 ரூபாய் இருக்குமா , அந்த பொம்மை... அதுக்கு போய்?.. நான் பணம் எவ்வளவு வேணா தருகிறேன், எனக்கு நேரமில்லை அம்மா, நீங்களே வாங்கிடுங்க..." என்று தன் பணப்பையை திறந்தான்.. இதை கவனித்துக்கொண்டிருந்த அப்பா உடனே அருகில் வந்து அவன் கையை பிடித்து, அந்த பணப்பையை மூடச்செய்து, " அம்மா சொன்னது புரியவில்லையா ராஜா?.. தவறி விழுந்து உடைந்தது பொம்மை மட்டுமில்லையப்பா..தவறியது பலவும்.. நீயே யோசித்துப்பார் " என்றார் " ம். புரியலையே..." என்றான் நெற்றியை சுருக்கிக்கொண்டு.. " நீ சொன்னியே நேரமில்லை என்று, அதுதான்... உன் குழந்தைகள் மிக அன்பானவர்கள்.. அதிலொன்றும் குறையில்லை.. ஆனால் அவர்களுக்கு செலவிட உங்கள் இருவருக்கும்தான் நேரமில்லை போல.. நீ குழந்தையாய் இருக்கும்போது செய்யாதே என அன்பாக ஒரு முறை சொன்னால்போதும் , உடனே அதை செய்ய மாட்டாய்.. அது எப்படி வந்தது அந்த பழக்கம்?.. நாங்கள் இருவரும் உனக்கு பொறுமையோடு , விளக்கமாய் எடுத்து சொல்லி செலவழித்த நேரம் தான் முக்கிய காரணி...கட்டளையாக சொன்னதேயில்லை எதையும்.. வீட்டுக்குள் விளையாடாதீர்கள் என சொல்லி சொல்லி அலுத்துப்போனார் உன் அம்மா... ஆனால் பிள்ளைகள் கேட்பதாயில்லை...ஏன் என யோசித்தால், அவர்களுக்கு கட்டளையோ, திட்டு வாங்கியோ பழக்கமாகிவிட்டது போல தோன்றுகிறது... உடைத்தால் மிஞ்சி மிஞ்சி திட்டுவாங்க, பரவாயில்லை, என போக்கு வந்துவிட்டது.. ஆனால் கவனமாக இருக்க வேண்டும் என்கிற அக்கறையை தவறவிட்டார்கள்... அந்த அக்கறையைத்தான் உன் அம்மா வாங்கித்தர சொல்கிறார்..பொம்மையை அல்ல.. இப்ப புரியுதா ?" என சொல்லிவிட்டு நகர்ந்தார் சிரிப்போடு.. " அ..............ம்.............
..............மா என்னை மன்னியுங்கள். அவசர யுகத்தில் முக்கியமானதை இழக்க இருந்தேன்...வெட்கப்படுகிறேன்.. இனி நேரம் செலவழிப்பேன்.. " என காலில் வந்து விழுந்தான் மகன்..

அவனை அப்படியே எடுத்து முதுகில் தட்டியவர்,

" கவலைப்படாதேப்பா, உன் மனைவியும் பெரிய உத்யோகத்தில் இருப்பதால், உங்களிருவருக்குமே நேரமில்லைதான் அன்பாய் பேசிட.. குழந்தைகள், பாவம்தான்.. பொறுமையாய் எடுத்து சொல்ல ஆளில்லை..

நானும் உன் அப்பாவும் சீக்கிரமே உன்னுடன் வந்து ஒரு 6 மாத காலம் தங்கியிருந்து சில பழக்கவழக்கத்தை சொல்லித்தரலாம் என நினைக்கிறோம்"

என்றதும், மருமகளும் பேரப்பிள்ளைகளும் லஷ்மியம்மாவை வந்து அணைத்துக்கொண்டார்கள்...

தவறியது உருவாக ஆரம்பித்தது..

No comments: