Monday, July 28, 2008

சந்தித்த அற்புதமானவர்கள்- பாகம் 3

இவனைப்பற்றி எழுதப்போகிறேன் என்றதுமே அப்படி ஒரு மகிழ்ச்சி மனதுள்... அவனோடு வாழ்ந்த அந்த 4 வருடங்களும்
என் வாழ்நாளின் பொற்காலம் அல்லவா?.. என் ரத்தம் இல்லை, என் உறவும் இல்லை... என் ஊர்?. என் பகுதி?. என் நாடு?, என் குலம்?.
ம்கூம்ம்... இல்லையே.. ஆனால் என் மனதில் ஒளிந்து கிடந்த அன்பை பன்மடங்காக பெருக வைத்தவன்... பெற்ற குழந்தைக்கு தாயாய் இருப்பது
ஆச்சர்யமேயில்லை... தன்னால் ஊறும் தாய்மை.. ஆனால் இவனுக்கு.. அதைவிட ஒரு படி அதிகம்..
அவன் தான் அலெக்ஸ்...
பள்ளியில் சரியான துணை கிடைக்காமலும், கேலி கிண்டலுக்கு ஆளாகி மனம் வருத்தமாயிருந்த நேரத்தில் விடுமுறை வகுப்புக்கு சென்று வந்தான்
மகன்.. வந்ததும் சொன்னான், அம்மா என்னைப்போலவே ஒரு புது பையன் வந்துள்ளான் ..அவனும் தனியாக எப்போதும்..
சொல்லிகொண்டிருந்தபோதே " அம்மா சீக்கிரம் வாங்க.. நான் சொன்ன பையன் இவந்தான்"
பால்கனியிலிருந்து அடுத்த அப்பார்ட்மெண்டில் பார்த்தால் அலெக்ஸ் அவன் துணியை காயப்போட்டுக்கொண்டிருந்தான்..
குழப்பமாயிருந்தது..
என் மகன் இங்கிருந்து அழைத்ததும் புன்னகையுடன் வருவதாகச்சொன்னான்..
சிறிது நேரத்தில் வந்து வீட்டின் மணியை அடித்து, நான் கதவை திறந்ததும், சுவரோடு சுவராக வெட்கத்தில்
குழந்தை ஒன்றி நின்று சாய்ந்து என்னை ஒருமாதிரியாக பார்க்க, மகிழ்ச்சியாக உள்ளே அழைத்து வந்தேன்..
அவனை எல்லா பசங்க மாதிரி சாதாரணமாக எண்ணிக்கொண்டு நான் என் சமையலை தொடர்ந்தேன் .
அவனுக்கு குடுத்த பழச்சாரு அருந்தும் முறையும் , அவன் என் மகனோடு சத்தமின்றி விளையாடும் முறையும்,
என் கவனத்தில் தவறவில்லை, நான் பிஸியாயிருந்தாலும்... அடுத்த 1 மணி நேரத்துக்குள்ளே அவன் மிகவும் பிடித்துப்போனான்..
எனக்கும் என் மகனுக்கும்...
அடுத்து வந்த நாள்களில் வளர ஆரம்பித்தது எங்களுக்கிடையிலான பாசம், நேசம் அன்பு எல்லாமாய்..
1 மாதத்திலேயே அவனை தேட ஆரம்பித்தோம் அவன் இல்லாத பொழுதுகளை..
என் மகனும் ரொம்ப மிருதுவான குணம் கொண்டவன்.. அவனுக்கு ஏற்றார்போல அதே மென்மையுடன்..
இருவரும் ஒன்றாக விளையாடுவதும், ஒன்றாக நீச்சல் பழகுவதும், தோட்டத்தை சுற்றி குருவி கூடு தேடி அதுக்கு சாப்பாடு
ஊட்டுவதும்...பின் வந்து அந்தக்கதைகளை என்னிடம் சொல்லி சிலாகிப்பதும்...
ஆனால் ஒன்று மட்டும் புரியவில்லை.. அவன் வீட்டில் அவன் அன்னையை பார்க்க முடியவில்லை...
கேட்கவும் தயக்கம்... அப்புரம் ஓர்நாள் என் மகன் அவன் வீட்டுக்கு சென்று வந்ததும் சொன்னான், அவன் அன்னையும் அப்பாவும்
பிரிந்து வாழ்கிறார்கள் என்றும், அம்மா பர்மாவில் இருப்பதாகவும்...
அவன் மேல் வைத்த பாசம் இப்போது 2 மடங்காகியது...
குழந்தை தனியே தன் படுக்கையை விரிப்பதை பார்த்து நான் இங்கு கண்கலங்கிக்கொண்டு இருப்பேன்...
என் குழந்தை என் மேல் கால்போட்டு தூங்க அவன்மட்டும் தனியே..
என் வீட்டு சாம்பார் அவனுக்கு ரொம்ப பிடிக்கும்.. அதை அவன் கரண்டியால் சாப்பிடும் அழகை
பார்த்துக்கொண்டே இருக்கலாம்.. நான் என்ன சொன்னாலும் ஒரு தலையசைப்புதான்..
என் மகனைவிட அவன்மேல் பாசம் வந்துவிட்டதோ என்றுகூட எனக்கு சந்தேகம் வருமளவிற்கு
அப்படி ஒரு நல்ல பையன்... சாது... எங்கு சென்றாலும் அவன் இல்லாமல் போகமாட்டோம்...
பழகிய முதலில் ஓர்நாள் நான் என் பையனை அழைத்துக்கொண்டு மிருகக்காட்சி சாலைக்கு சென்ற போது அவனும்
வருவதாகச்சொல்ல, கிளம்பி கீழே போனதும்தான் தெரியுது அவன் அப்பாவும் கூட வருவதாய்... எனக்கோ தர்மசங்கடம்..
அவன் தந்தையோ யாருட்னும் குழந்தையை அனுப்ப பயம் .. என்னத்த சொல்ல, நால்வருமாய் சென்றோம்..அவன் தந்தையிடம்
அவனும் பிள்ளையிடம் அப்பாவும் வைத்திருக்கும் பாசம் அப்போது புரிந்தது... ஆனாலும் இருவரும் நண்பர்கள் போல
பேசி சிரித்துக்கொள்வார்கள்.. வீட்டு வேலையும் அப்படியே.. அப்பா பொறியாளர்... வீட்டில் சமையல் , எல்லா வேலையும் அவரே..
அலெக்ஸ் எங்க கூட பழகி 6 மாதம்பின்தான் அவர் அப்பாவுடன் எங்களுக்கு பழக்கம்.. ( நான் எளிதாக யாரிடமும் பழகுவதில்லை அப்போதெல்லாம்)
இப்ப குடியிருப்பில் எல்லா பசங்களுக்கும் பொறாமை வருமளவிற்கு என் மகனும் அலெக்ஸும்..
அதைவிட அலெக்ஸுக்கு நான் அம்மாவாகவும் , அவன் எனக்கு பிள்ளையாக இருப்பதும்...அவனைப்பார்க்கும்போது
எனக்கான என் கஷ்டங்கள் பறந்து ஒடிவிடும்.. அந்த சின்னவயசிலேயே அந்த சாந்தமான முகம், கஷ்டங்களை , சுமைகளை தாங்கிய அந்த ஆழம்...
கணவருக்கே , ஏன் என் மகனுக்கே, நான் அலெக்ஸ் மேல் வைத்திருக்கும் பிரியம் பொறாமை கொள்ளச்செய்கிறது..
யாருக்குமே பிடிக்கும் அலெக்ஸை..இப்படியான சந்தர்ப்பத்தில்தான் அந்த துன்பம் வந்தது அலெக்ஸ் வாழ்வில்....என்னையும் புரட்டி போட்டது..
****************************************தொடரும்**********************************************

No comments: