*சொப்பனத்திருமணம்*...(*எது தோல்வி, எது வெற்றி...?...முடிவு உங்களிடம்*.)
சாயும்கால நீல வானத்தில் மேகத்தை வைத்தே கவிதை புனைந்து கொண்டிருந்த மீனாவுக்கு , ராஜனின், குரல் அதிர்வைத்தந்தது..
" என்ன பகல் கனவு கண்டுகிட்டு இருக்க..?. எத்தனை தடவை கூப்பிடுறேன்..."
திருமணம் முடிந்து 11 மாதம் ஆகிறது... வெளிநாட்டு வாழ்க்கை.. ஊரிலும், வெளியிலும் , நல்லவன் போல் நடித்தாலும், வெளிநாடு வந்ததும்தான் உண்மை புரிந்தது
மீனாவுக்கு..எதற்கெடுத்தாலும் கோபம்.. எரிச்சல்.. திருப்தியின்மை...அடுத்தவரோடு போட்டியோடு பேசுவது...ஆனால் பூஜை செய்வதிலோ, தாம்பத்யத்திலோ
குறைவில்லை... மொத்தமாக நிம்மதி இழந்தாள் மீனா... ஆசிரியரான அப்பாவும், இரண்டு தம்பி, தங்கைக்காகவும், இவ்வளவு நாள் பொறுத்துக்கொண்டாள்..
தன்னுடைய குடும்பத்தின் பொருளாதார நிலைமையை அடிக்கடி சுட்டிக்காட்டி அசிங்கப்படுத்துவது... இத்தனைக்கும் மீனாவும் தகவல் தொழில்
நுட்ப துறையில், மேற்படிப்பு படித்து வேலையிலிருப்பவள்...ஒன்றும் வாங்காமல் கல்யாணம் பண்ணியதையும், தன் தகுதிக்கு, இன்னும் அழகாக, வசதியான இடத்தில்
சம்பந்தம் எடுத்திருக்கலாம் என்றும் பீற்றிக்கொள்வான்... ஒன்றுமே பதில் சொல்லாமல் அமைதியாகிவிடுவாள் மீனா.. தன் குடும்பத்தாரை நினைத்து, எல்லாவற்றையும்
தாங்கிக்கொள்வாள்..ஆனால் இப்ப வர வர அவளால் தாங்க முடியாத நிலைமை... அலுவல் முடிந்து தாமதமாய் வந்தால் ஆயிரம் கேள்வி...
யாரும் வீட்டுக்கு தொலைபேசியில் அழைக்கக்கூடாது.. இல்லாவிட்டால், வேலை விட்டு நிற்கணும் என்ற கட்டளைவேறு..அது இன்னும் கொடுமை..
அவன் அலுவலக விருந்துக்கு சென்றாலும், யாரிடமும் சகஜமாக பழகக்கூடாது... ஒரு புன்சிரிப்போடு நிறுத்திக்கொள்ளணும்...
தாம்பத்யத்தின்போது மட்டும் அன்பாக இருப்பதுபோல் நடித்தும் கொள்வான்...
அன்று தற்செயலாக அவள் குடியிருக்கும் அடுக்ககத்தில் வீடு வாடகைக்கு பார்க்க அவள் அலுவலக தோழன் கோபி வந்துவிட்டான்..அவனுக்கோ
ராஜனைப்பற்றி ஒன்றும் தெரியாது...புதிதாக மணமுடித்தவன்.. கலகல பேச்சு...
" சார், மீனாதான் எங்க அலுவலகத்தில் முக்கியமான நட்சத்திரம்... எல்லவற்றையும் சிறப்பா , குறித்த நேரத்திற்குள் செய்ய அவளால் மட்டுமே முடியும்.."
"..ம்ம்."
" அதேபோல நல்ல நகைச்சுவையாளினி, பெரிய கவிதாயினி சார்.. நீங்க கொடுத்து வெச்சவங்கதான்..."
"...ஹாங்......"அவளை ஒருமாதிரியாக பார்த்துக்கொண்டே...,
கோபி போவதாய் தெரியவில்லை...மீனவுக்கும் அசதிதான்..
" மீனா என் மனைவியை அடுத்த மாதம் வீடு பார்த்ததும் அழைத்துவரப்போகிறேன்... நாக்கு செத்துப்போச்சு, இந்த பர்கரிலும், பிசாவிலும்...
இன்னிக்கு உங்க வீட்டுல தமிழ்நாட்டு சாப்பாடு கெடைக்குமில்ல...?.. " வெகுளியாய்..
" ஹங்... ஆமா.. ஆ....................மா..." கணவரை பயத்துடன் பார்த்துக்கொண்டே...
எல்லாம் முடிந்து கோபி சென்றதும் யுத்தத்தை ஆரம்பித்துவிட்டான்..மீனாவுக்கோ அசதியில் தூக்கம் வருகிறது..
" சோ.. எல்லாம் முன்னேற்பாடோடதான் செஞ்சுருக்க...."
" என்ன சொல்றீங்க..?."பதருகிறாள்...தவிக்கிறாள்.. உண்மையை உணரவைக்க போராடுகிறாள்... ஆத்திரம் அதிகரிக்க ஓங்கி ஒரு அடி
கொடுத்துவிட்டு, தூங்கச்செல்கிறான்.. வந்த தூக்கம் , துக்கமாய் மாறி, அழுதுகொண்டே இரவு முழுதும் யோசிக்கிறாள்..
---------------------------------------------------------------------------------------------------------
" மீனா, துண்டு எங்க... ?."
"....."
" கேக்கிறேன்ல..."
"....."
" காது கேக்குதா இல்லையா?..மெதுவாக அருகில் வந்து அவனை தீர்க்கமாய் பார்த்து..
" துண்டு எல்லாத்தையும் இனிமேல் நீங்களே எடுத்துக்கணும் ராஜன்..." அமைதியாக...
" என்ன..எ..ன்....னா...?.....திமிரா..."
" நான் போறதா முடிவு பண்ணிருக்கேன்.... "
" எங்க போற..?....எதுக்கு இப்ப... பணம் செலவழிக்க முடியாது இப்ப...."
" நான் உங்களை விட்டு பிரியரதா இருக்கேன் னு சொன்னேன்..." அவனைப்பார்க்காமலே...அழுத்தமாய், மெதுவாய்..அதிர்ச்சி, கோபம் அவனுக்கு..
" போய்த்தொலை.....அதிகம் படித்த , சம்பாதிக்கிறோம்கற திமிர்..... போ..போடி..போய் கஷ்டப்படு அப்ப தெரியும்... உங்கப்பாவுக்கு
முதல் கல்யாணம் செய்து வைக்கவே வழியில்லாமல் என் தலையில் கட்டி வெச்சார்...போ...போ...சனியன் ஒழிந்ததுன்னு நிம்மதியா தலை முழுகுவேன்.."
"......" ஒன்றுமே பேசவில்லை.. எல்லாம் எதிர்பார்த்திருந்தாள்... பிரிவதென்பதே அவளைப்பொறுத்த வரையில் பெரிய முடிவு...இனி இதை
நல்லபடியாக வேறு நிறைவேத்தணுமே.. அவன் கோபத்தை அதிகரிக்காமல் வெளியேறணுமே... அவன் பேச்சு எல்லாத்துக்கும் மெளனம் காத்தாள்...
அலுவலகத்தில் லீவு மட்டும் சொல்லிவிட்டு சென்னை சென்றதும் மாற்றல் கேட்கலாம், இல்லாவிட்டால் ராஜினாமா பண்ணலாம் என்றிருந்தாள்...
உதவி தேவைப்படலாம் என்று தன் நெருங்கிய தோழியிடம் மட்டும் பிரச்சனையை கால்வாசி சொல்லிவைத்தாள் ...பெற்றோருக்கு தெரியாமல் , கூறாமல்,
அவர்களை வேதனைப்படுத்தாமல் மறைப்பதுதான் ரொம்ப கஷ்டமாயிருக்கு... எப்படி தாங்குவார்கள்... தம்பி, தங்கையை நல்லமுறையில் படிக்க வைக்கணும்...
யோசித்த வேளையில் தொலைபேசி அலறியது....
" உன்னோட பாஸ்போர்ட் டிக்கெட் எல்லாம் ரெடி.. என்னிக்கு கிளம்புற....?.."அதிகாரமாய், அலட்சியமாய்..
எதிர்பார்த்தே இருந்தாலும், வலிக்குது , முள்ளாய் தைக்குது வார்த்தை....
"வருகிற சனிக்கிழமை...."
ஞாயிறு அவர்களது திருமண நாள்... 1 வருடம் முடியும்...
இன்னும் 4 நாள் உள்ளது.....எல்லாம் நல்லபடியாய் நடக்கணும்.. நரகமாய் நகருது நேரம்...பிடிமானமின்றி , பிணமாய் கடவுள்மீதே கோபம் வருது..
-----------------------------------------------------------------------------------------------------------------------
கோபத்தில் அலுவலகம் சென்றாலும் ஒன்றுமே ஓடவில்லை ராஜனுக்கு... என்னுடைய உரிமை என்றல்லவா நினைத்திருந்தேன்...என்ன தைரியம்?..
அவள் பெற்றோர்மேல் உள்ள மரியாதையில் அவர்களுக்கு களங்கம் விளைவிக்க இப்படியெல்லாம் எண்ணகூட மாட்டாள் என்றல்லவா நினைத்திருந்தேன்...
சே,, உண்மையிலேயே தோத்துவிட்டேன்... அவளிடம் என்ன குறை கண்டேன்... எல்லாத்துக்கும் நான்தான் காரணம்... சொந்தம் கொண்டாடி அடிமை
படுத்தியுள்ளேன்... இப்படி ஒரு முடிவுக்கு அவள் வருவாள் என நினைத்துக்கூட பார்க்கவில்லை.. இப்ப என்ன செய்வது...என்னுடைய அகந்தை தடுக்குது...
அவளை சமாதானம் செய்யணுமா, மன்னிப்பு கோரணுமா...?.." மாட்டேனென்று சொல்லிவிட்டால்..?..என்ன அவமானம்....?
குழம்பி போயிருந்தவனைப்பார்த்துவிட்டான் நண்பன்...வேறு வழியின்றி சொல்லுகிறான் அனைத்தையும்.. நம்ப முடியவில்லை அவனால்...
நீயா இப்படி.. உங்க இருவரையும் பார்த்தா அப்படி தெரியவில்லையே... மேட் ஃபார் ஈச் அதர் மாதிரி இருப்பீங்களே..
" பாதிபேர் உலகத்துக்காக நடிப்பதில்தான் தோற்றுப்போகிறார்கள்.. அவள் உனக்கு உரிமைன்னு தெரிஞ்சப்புரம் உன்னுடைய உடைமைன்னு புரிஞ்சுக்காம, உன் கண்ணையே
குத்தி வேதனைப்பட்டுருக்கியே ராஜன்... "
" என்னுடைய வளர்ப்பிலேயோ, பார்வையிலேயோ தவறு நடந்திருக்குடா..எங்கம்மா, அப்பாவுக்கு பயந்தேதான் இருப்பாங்க..அக்காவும் அப்படியே..."
" உனக்கெங்கு போச்சு புத்தி... வெளிநாட்டில் அதுவும்... அவள் சந்தோஷமா இருந்தாதானே நீ சந்தோஷமா இருக்க முடியும்...பயத்துலயோ, மரியாதையிலயோ,
ரொம்ப நாள் உறவு தங்காது...நல்ல நட்பு வேணும் முதலில்...ஆயுசு முழுக்க துணையா வரவேண்டியவளை இப்படி அநியாயமா.....போ..போய் சமாதானம் பண்ணு.."
சமாதானம் பண்ண சொல்கிறான்..அகங்காரம் தடுக்குது...
----------------------------------------------------------------------------------------------------------------------
வெள்ளிக்கிழமைவரை இருவரும் பேசிக்கொள்ளாமலேயே நகருகிறது... அவளாய் பேசுவாள் என்று இவன்.. அவன் திருந்தவே வாய்ப்பில்லை .,
தப்பித்தால் போதும் என்று இவள்..சனிக்கிழமை சாயங்காலம் விமானம்...எதையும் எடுத்துவைக்ககூட ஆர்வமில்லாதவளாய், இரு சிறு பெட்டிகள்
மட்டும் எடுத்துக்கொள்கிறாள்.. அவனால் நம்பமுடியாத அதிர்ச்சி.. ஆனாலும் தோல்வியை ஒப்புக்கொள்ள முடியவில்லை..தன்னுடைய அறையை பூட்டிக்கொண்டு
குட்டிப்போட்ட பூனையாய் நடந்துகொண்டே இருக்கிறான்.. அவள் போய்விடுவாளோ, எவ்வளவு பெரிய தோல்வி.. இந்த சந்தர்ப்பத்தை விட்டால் மறுபடி
கிடைக்காது.... பரவாயில்லை, என் மனைவிதானே.. .ஒருவாட்டி பேசிப்பார்க்கலாம்.. எப்படி ஆரம்பிப்பது, இருந்தாலும்...கதவு தட்டும் சத்தம்..
" விமான நிலையம் கிளம்ப நேரமாச்சு...." அமைதியாக...
"...ம்..."
" நான் கிளம்பவா...?" பயத்தோடு..
"..ம்.. இரு நான் வந்து விடுகிறேன்...."
" இல்ல பரவாயில்லை.. நானே சென்றுகொள்கிறேன்..." பக்குவமாக...
"..ம்..." என்று சொன்னதும் பெட்டியை தூக்கிக்கொண்டு வாசல் அருகில் செல்கிறாள்..........
" ஒரு நிமிஷம்"
ராஜன் மீனாவைக்கூப்பிட, அவளோ பயத்துடன்...
" நான் பண்ணினது தப்புதான்னு உணர்கிறேன்... ஆனாலும் உன்னை கட்டாயப்படுத்தவில்லை..."
கொஞ்சம் ஆச்சர்யமாய் இருந்தாலும், 20 நிமிடம் ஒன்றுமே பேசவில்லை அவள்.. அவன் மட்டும் ஏதேதோ சொல்லிக்கொண்டிருந்தான்.. முடிவாக, மீனா,
" ..ம்.. இனிமேலும் எனக்கு சேர்ந்து வாழ்வதில் உள்ள நம்பிக்கை குறைந்து விட்டது....கொஞ்சங்கூட அன்பில்லாமல், சந்தேகித்தது.., இன்னும் பல கொடுமையை பெற்றோருக்காக பொறுத்துக்கொண்டேன்... இனிமேலும் சக்தியில்லை ராஜன்...ஆனால் ஒன்று செய்யலாம்.. புதுசா நம் நட்பை முதலில் ஆரம்பிக்கலாம்....
அது வளர்ந்து காதலாகட்டும்.... அது ஒத்துவந்தால் திருமண வாழ்க்கையை தொடங்குவோம்... அதுவரை இருவரும் இடைவெளி விட்டு, பிரிந்தே இருப்போம்...
இருந்தாலும் இதுவும் நீங்கள் இவ்வளவு தூரம் இறங்கியதற்காக மட்டுமே..ஒரு உதவி மட்டும் செய்யுங்கள், அதுவரை நம் குடும்பத்தினருக்கு தெரியவேண்டாம்... "
பெரிய ஏமாற்றம் ராஜனுக்கு, இருந்தாலும் இந்த தண்டனைகூட தேவைதான் என உணர்ந்தான்...வலியுடனே வழியனுப்பி வைத்தான்..
ஞாயிற்றுக்கிழமை.. காலையில் மீனாவை அழைத்தான் தொலைபேசியில்..
" *திருமணநாள் வாழ்த்துகள்*... மீனா"
" நன்றி ராஜன்.... ஆனால் ஒரு சின்ன மாற்றம் .. நம் *நட்பின் ஆரம்ப தின வாழ்த்துகள்.. இதுவரை நடந்தது ஒரு சொப்பனமே...."*
" ஹஹா"
" ஹஹா".......
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment