Friday, February 4, 2011

மாற்றம் கொண்டுவர காத்திருப்பேன் தோழி..!


கோபத்தை குறைக்க வேண்டிக்கொண்டாய் பிரியமானவளே..

அன்பாகவும் மென்மையாகவும் மட்டுமே எனைப்பார்த்துவந்த என் தோழி.

எனைப்பற்றிய கவலை , என் நலம் மீதான அக்கறை உனக்கு .

கோபம் என்பதே அதிகமான அன்பினால்தான் என புரிவதில்லை உனக்கு.

முகத்தில் உமிழ சொன்ன ஆண்,.நம் பாரதி.. அது கோபமா தோழி?.

அன்பாலே சாதிக்க முடியாதா என்கிறாய்..அன்பானவளே..

அலுத்து தோற்றுவிட்டேன் , பொறுமைக்கிங்கே மதிப்பில்லையே தோழி..

என் வாழ்வு நிறைவாய் முடிந்ததென எப்போது புரிவாய் என் தேவதையே?.

சமூகத்தில் புறையோடிக்கிடக்கும் அழுக்குகளுக்கு அன்பெனும் ஆயுதம்

காலாவதியானதை சீக்கிரம் விளங்கிக்கொள்வாயா?.

கோபம்,அல்லது கோபம் கொள்வதான நடிப்பு மட்டுமே எடுபடுமிங்கே.

மனதைக்கொலை செய்யும் கொலைகார கும்பலிடமிருந்து..

வன்முறையை தடுக்க வன்முறையே தேவை என்ற சாபக்கேடு அறிவாயா?.

யாரையவது பலிகொடுத்தே பல பலிகளை தடுக்க வேண்டிய காலகட்டாயம்..

நேற்றொரு திவ்யா..நாளை யாரோ..!!!!. அன்பெங்கே ???




சாதி , மதம், இனம் , மொழி கடந்து மனித நேயம் வளர தேவை அன்பு.

ஆனால் அதை வளர்க்க தேவை கோபம்.. முரணாயிருக்கிறதா?..

ஆன்மீகம் என்பது அன்பு பாதை மட்டுமல்ல தோழி..

சுயம் அறிவது மட்டுமல்ல , சுற்றுமுற்றும் அறிவதுமே அறிவு என் அன்புத்தோழி..

நச்சு நாகம் வந்து குழந்தைகளை , நல்லவர்களை

நயவஞ்சகமாய் தீண்டும் போது நாதம் கேட்க சொல்வாயோ தோழி?.




நீரின் ஓட்டத்திலேயே பிணமாய் செல்ல நீயே போதும்.. நானல்ல , நாணல்.

அன்பால் என்னை கட்டிப்போட எண்ணாதே.. கோபப்படவிடு..கோபப்பட்டுவிடு

சட்டத்தின் கதவுகளையும் சத்தம் போட்டே தட்டவேண்டியுள்ளதிங்கே..

அமைதிகாக்க அமைதிக்கு விலங்கிடும் சூழலிங்கே..அதுமட்டுமே சாந்தியிங்கே..

கண்முன்னே நடப்பதை கண்டுகொள்ளாமல் ,பதைக்காமல்

கண்மூடி ,கண்ணீரோடு தியானம் செய்யமுடிகிறதா தோழி..?.






நிறைய நேசம் இழந்தாய், எதிரிகளை சம்பாதிக்கணுமா என்கிறாய்..

ஆம், நிஜம் தோழி.. இழந்தது நேசத்தையல்ல.. போலிகளை..

பெற்றது எதிரிகளை அல்ல.. நியாயங்களை..வளரட்டும் எதிரிகள்..

வீசப்பட்டது வீண் விமர்சனங்களல்ல. வீரத்தழும்புகள் அவை.

வலிக்கவில்லை தோழி.. வலிமையே கூடியது..உன் வருத்தேமே என் வலி.

நாளை மரணிக்கவேண்டியிருப்பின் திருப்தியாக இருக்கணும் என்/நம் பயணம் .

தனிப்பட்ட இன்ப துன்பம் ஏகத்துக்கும் அனுபவித்த மகிழ்ச்சி மட்டுமல்ல ,

குரல்கொடுக்க முடிந்த மகிழ்ச்சியும் இதில் அடங்கணும்..

எனக்கான உன் வருத்தம் , உன் அன்பு என்னை தடுக்கக்கூடும்,

துணிவை குறைக்கும் , நான் தோற்கக்கூடும் , ஆகையால் தள்ளியே நில் தோழி..

என்னோடு வந்து இதில் நீயும் கைகோர்க்கும் நாளே

எனக்கு , இல்லையில்லை, நமக்கு வெற்றி., பலம் ..

அன்பொழுக பேசி ஆதாயம் தேடுவோர் பலரிருக்கட்டும்.

அழிக்கவேண்டிய ஊழல்,பேதம்,அடிமைத்தனத்தில் நம் கவனம் இருக்கட்டும்.

அன்பாய் பேசி ஆட்டுக்குட்டிகளாய் மாற்றி பின்னால் வரச்செய்யும்

அருமை வித்தை அறிவேன் தோழி , ஆனால் அதுவா நம் தேவை..?

நாம் தூங்க யாரோ எவரோ எங்கோ விழித்திருக்க , நம் சந்ததி

நாளை நிம்மதியடைய சில நேரம் நாமும் விழிப்போமே தோழி...

கைகோர்ப்பாயா தோழி ?..காத்திருப்பேன் விடியல்வரை..உன் அன்போடிங்கே







திவ்யாவின் தற்கொலைக்கு காரணமான அந்த ஆசிரியர்களுக்கும் இந்த ஏற்றத்தாழ்வுக்கு வழிவகுத்த இந்த சமூகத்துக்கும் என் கடுமையான கண்டனங்கள்..




படம் : நன்றி கூகுள்...

6 comments:

ஆனந்தி.. said...

நானும் திவ்யாவின் தற்கொலைக்கு என் வருத்தங்களையும்..அந்த பேராசிரியைகளின் மேலே என் கடுமையான கண்டனங்களையும் பதிவு செய்கிறேன்...

சென்னை பித்தன் said...

//கோபம்,அல்லது கோபம் கொள்வதான நடிப்பு மட்டுமே எடுபடுமிங்கே.//
இது மிக அவசியம்.நிச்சயம் ரௌத்திரம் பழகத்தான் வேண்டும். பாம்பு கூடக் கடிக்கா விட்டாலும் சீறினால்தான் பயப்படுவார்கள்.
எனக்கு மிக அருகில் நடந்த நிகழ்ச்சி.நானும் வருந்தினேன். ஆனால் எங்கோ இருக்கும் நீங்கள் அக் கண்டனத்தைப் பதிவில் சொல்லி விட்டீர்கள்.நானும் இதன் மூலம் என் கண்டனங்களை பதிவு செய்கிறேன்.

http://thavaru.blogspot.com/ said...

//கோபம்,அல்லது கோபம் கொள்வதான நடிப்பு மட்டுமே எடுபடுமிங்கே.//

அவசியம் பயணமும் எண்ணங்களும்.

Thekkikattan|தெகா said...

நிறைய நேசம் இழந்தாய், எதிரிகளை சம்பாதிக்கணுமா என்கிறாய்..

ஆம், நிஜம் தோழி.. இழந்தது நேசத்தையல்ல.. போலிகளை..

பெற்றது எதிரிகளை அல்ல.. நியாயங்களை..வளரட்டும் எதிரிகள்..//

மிக மிக உண்மை. பின்னூட்டமிடாமல் மூடிவிட முடியவில்லை. அருமையா தார்மீக கோபத்தையும், பிழைத்துக் கிடக்கும் வித்தையையும் ஒருங்கே கவனிச்சு கொடுத்திருக்கீங்க. நன்றி!

எண்ணங்கள் 13189034291840215795 said...

வருகைக்கு நன்றிங்க , ஆன்ந்தி , சென்னை பித்தன் , தெகா ..

எண்ணங்கள் 13189034291840215795 said...

தவறு உங்க கமெண்ட் இப்பதான் பார்த்தேன்.

நன்றிங்க.