Wednesday, February 2, 2011

வாழ்வின் எதிர்பாரா அதிர்ச்சிகள்






ஓவ்வொரு முறை ஊர் பயனத்தின் போதும் நல்ல சேதியோடு கெட்ட சேதியும் ரகசியமாக காத்திருக்கும்..

எதிர் வீட்டில் மெஸ் நடப்பதால் விரும்பிய உணவுகளை விரும்பிய நேரம் வாங்கிக்கொள்ளும் வசதி..

4 பெண் குழந்தையோடு செல்லமாக வளர்க்கப்பட்ட மகன்.சிவா ( கற்பனை பெயர் ) . அப்பா இலங்கையிலேயே ஹோட்டல் நடத்தி இந்தியாவுக்கு வந்தவர்கள் 50 வருடம் முன்பு.

கிட்டத்தட்ட 5 கிரவுண்ட் இடத்தில் முன்பக்கம் வீடும் பின்பக்கம் பால்மாடுகளும் தோட்டமும்..

நாங்கள் அனைவரும் ஓடி விளையாடி களைத்த இடம்..

தெருவுக்கே பால் சப்ளை அங்கிருந்துதான்..

தீபாவளிக்கு சிவா போடும் வெடிகள் கோபம் ஏற்படுத்துபவை.,. ஆனால் நம் கோபம் அவனுக்கு சிரிப்பு.:)

நான்கு பெண்களையும் சிறப்பா திருமணம் செய்துகொடுத்தாலும் , மகன் மட்டும் படிக்காமல் கெட்ட நட்போடு வீணாகிக்கொண்டிருந்தான்..

தந்தை அவனுக்கு ஒரு ஹோட்டல் வைத்து தந்தார் மருத்துவமனை எதிரில்.. நல்ல கூட்டம்..

கார் வாங்கினான்.. வசதி கூடியது.. அதோடு தீய நட்பும் அதிகரித்தது...

பெண் தர பலர் மறுத்ததால் ஏழை பெண்ணொருத்தி , அதிகம் படிக்காதவளை மணமுடித்து வைத்தனர்..

அவளுக்கு 16 வயது..

இரண்டு பெண் குழந்தைகள்.. மிக அருமையான குழந்தைகள்.. நான் ஊருக்கு செல்லும்போதெல்லாம் எங்க வீட்டு பொடியனை கொஞ்ச வருவார்கள்..

விளையாடுவார்கள்..

போனமுறை அவசரமாக நான் வங்கிக்கு செல்லும்போது

" யக்கா , கண்ணே தெரியலையா?.. நானும் கவனிக்கிறேன் நாலு நாளா.. கண்டுக்காம போறீங்களே..!" என உரிமையா கோபக்குரல்..முகம் நிறைய சிரிப்போடு..

திரும்பிப்பார்த்து ,

" மன்னிச்சுக்கோ சிவா.. கவனியாமல் இல்லை.. உன் மனைவி, அம்மா, குழந்தைகளிடம் பேசினேன்.. நீ ரொம்ப பிஸி என்பதால் தொந்தரவு செய்ய

வேண்டாமேன்னு நினைத்தேன்.."

எல்லா விசாரிப்புக்கு பின் அவன் மெஸ் ஆரம்பித்து மீண்டும் நல்லபடியாக முன்னேறி வருவது குறித்து என் மகிழ்ச்சியை தெரியப்படுத்தி ஊக்கமளித்தேன்.

( அவன் தந்தை மறைவுக்கு பின் அந்த ஹோட்டலை வித்துவிட்டு வீட்டிலேயே மெஸ்.. இதற்கு காரணமும் குடி கெட்ட நட்பும் )

குடி போதையில் , அம்மாவை , மனைவியை அடிப்பதும் அவர்கள் கோவித்துக்கொண்டு போவதும் வழக்கமானது..

இப்படி போன வருடம் மனைவி முடிவோடு குழந்தைகளை அழைத்துக்கொண்டு சென்னை சென்றுவிட , அம்மா, சகோதரி வீட்டுக்கு செல்ல ( எல்லோருமே சென்னை)

இவன போய் மனைவியிடம் சமாதானம் பேசி அழைக்க அவள் மறுக்க. , சகோதரி வீட்டுக்கு சென்று திட்டு வாங்கி கொஞ்சம் அழுதுவிட்டு ,

நேரே ஊருக்கு வந்து வெறுமையில் , தனிமையில் தற்கொலை செய்துவிட்டான்..

யாருமே எதிர்பார்க்கவில்லை.. அவன் நன்மைக்குத்தான் திட்டியிருப்பார்கள்..

கேள்விப்பட்டதுமே சென்று பார்த்தேன்.. அவன் அம்மா கட்டிபிடித்து கதறினார்..

மனைவி மெலிந்த தேகம் எப்பவுமே.. அவளுக்கு அழ கண்ணீர் இல்லை.,. எல்லாவற்றையும் ஏற்கனவே அழுது முடித்திருக்கணும்..

அந்த குழந்தைகள் சென்னையில். அவள் தம்பி வீட்டிலிருந்து படிக்கிறார்கள்.. . நல்லவேளை நான் காணவில்லை..:(

மனைவிக்கு 26 வயது.. !!!!!!!!!!..

இரண்டு பெண்கள் தனிமையில்..சொந்த வீட்டைவிட்டு , 50 வருடம் பழகிய இடத்தை விட்டு போக மனமின்றி அந்தம்மா..

அவன் என்னை அனுப்பியிருக்கணுமே.. அவன் குழந்தைக்காவது தகப்பனா இருக்கக்கூடாதா என கதறினார்கள்..

எங்கே நடந்தது தவறு?.. யாரை கேட்க?..

பெண் குழந்தைகளை மிக நன்றாக படிக்க வைக்க சொல்லி துணிவையும் ஆறுதலையும் மட்டுமே தர முடிந்தது..


தமிழ்நாட்டில் பெண்ணாக பிறந்த தலையெழுத்து என்று மட்டும் நினைத்து வெளியேறினேன்..

யக்கா , கண்டுக்காம போறீங்களே.." ஒலித்துக்கொண்டே இருந்தது ஒவ்வொருமுறையும் முகம் நிறைய சிரிப்போடு.!!!!!!!

-------------------------------------------------------------------------------------






போன வாரம் வீட்டுக்கு வந்து தன் ஒரே மகன் படிப்பை பற்றியும் அவன் எதிர்கால கனவுகள் பற்றியும் சிலாகித்து பேசிக்கொண்டிருந்தவர்,

திடீரென வேலை இழந்தார்..

குடும்பத்தை நினைத்து கதறி கதறி அழுதார் அந்த அதிர்ச்சியை தாங்க முடியாமல்...

ஆண் என்றால் அழமாட்டார்கள் என யார் சொன்னது?...

முடிந்தவரை தாங்குவார்கள்.. அதையும் தாண்டிய துக்கமென்றால்தானே அழுகை வந்திருக்க முடியும் , ?.

உடனடியாக ஏன் இப்படி வேலை விட்டு அனுப்புகின்றார்கள் என கோபம் வந்தது..:((..

அக்குழந்தையின் படிப்பு..?.

ஒவ்வொரு முறையும் இப்படி சிலர் வேலையை விடும்போது அந்த துக்கம் நம்மையும் வந்து சூழ்ந்து கொள்கிறது.. இயலாமை..

எதுவுமே நிரந்தரமற்ற தன்மை கொண்டது இவ்வுலகம்..என்னதான் புரிந்துகொண்டாலும் வாழ்வில் லட்சியம் , எதிர்பார்ப்புகள்

இலக்குகள் வைக்காமல் வாழ்வு நடத்தவும் முடியாதே..

ஓரளவு நாம் கடந்துவிட்டோம் என்றாலும் நம் குழந்தைகள் இதை கடக்கவேண்டியதை நினைத்தால் !!!!!!!..

-------------------------------------------------





ஊரிலிருந்து வந்ததுமே பெரிய மகனுக்கு முக பக்கவாதம் வந்தது ,பள்ளியில்..( Bell's Palsy ). பள்ளியிலிருந்து அழைத்து சென்று காண்பித்தார்கள்.

நானும் உடனே சென்றேன்.. என்னைவிட பள்ளி ஆசிரியர்கள்தான் அதிகம் வருந்தினர். ( அல்லது நான் காண்பித்துக்கொள்வதில்லை )

கண் இமை மூட முடியாது.. ஒரு பக்க உதடு செயலற்று..

இணையத்தில் பல தகவல் சேகரித்தேன்..

முக்கியமா மகனுக்கு ஊக்கம் தந்தேன்.. எதுவானாலும் வாழ்க்கையில் ஏற்க சொல்லி..

ஒரு கஷ்டம் வரும்போதுதான் நம்முடைய மறைந்திருக்கும் மற்ற திறமைகள் வெளிவரும் என நம்பிக்கை கொடுத்தேன்..

( சில நேரம் நினைப்பதுண்டு கஷ்டமே வராமல் இருந்தால் குழந்தைகளுக்கு தலைக்கனம் அதிகமாகுமோ என.

சக மனித உணர்வுகள புரிய தாங்கிக்கொள்ளும் கஷ்டம் வரணுமோ?.. Learning in the hard way?? )

தொடர்ந்து 3 வாரம் மருத்துவமனைக்கு சென்றோம் .. அதை ஒரு பெரிய விஷயமாகவே எடுக்கவில்லை..அதனால் அவனுமே கண்டுக்கொள்ளவில்லை.

இப்ப 2 நாளா நார்மலுக்கு திரும்பிவருகிறார்.. 90% நார்மல் இப்போது..

துணை நின்ற இணையத்துக்கும் தகவல் அளித்தவர்களுக்கும் நன்றிகள்..

( இத்தனைக்கும் குடும்பம் முழுவதும் மருத்துவர்கள் பல துறையில் இருந்தாலும்

யாரையும் அணுக விடாமல் செய்தது இணையமே.. :)) )

பெல்ஸ் பால்ஸி தகவல்

பெல்ஸ் பால்ஸி பயிற்சி




---------------------------------------------------------------------------

சுய புலம்பல் என்பதால் பின்னூட்டத்துக்கு நேரம் செல்வழிக்க வேண்டாமே..,.அதைவிட மீனவருக்காக டீவீட் செய்தால் மகிழ்வேன்..











படம்: நன்றி கூகுள்.

14 comments:

பொன் மாலை பொழுது said...

// சுய புலம்பல் என்பதால் பின்னூட்டத்துக்கு நேரம் செல்வழிக்க வேண்டாமே..,.அதைவிட மீனவருக்காக டீவீட் செய்தால் மகிழ்வேன்..//

இருந்தாலும், பிறருக்கு படிப்பினைகள் நிறைய இருகிறதே!அதல்லவோ வாசிபவர்களுக்கு வேண்டும். உங்களின் நல்ல மனிதம் புரிகிறது. பகிர்வுக்கு நன்றி.

Yaathoramani.blogspot.com said...

சிறந்த கவிதை ஏற்படுத்தும் பாதிப்பைவிட
உங்கள் பதிவு அதிக பாதிப்பை ஏற்படுத்தியது
அதிக ஈடுபாடோடு நல்ல நோக்கத்தோடு
எழுதியிருப்பது காரணமாய் இருக்கலாம்
நல்ல பதிவு.வாழ்த்துக்களுடன்...

சென்னை பித்தன் said...

மற்றவர் துயர் கண்டு மிக வருந்தும் நல்ல உள்ளம்,தன் துயரையும் பகிர்ந்து கொள்ளத்தான் வேண்டும்.நல்லதே நடக்க வேண்டுவோம்.
அன்பும் ஆறுதலும்.

Thoduvanam said...

நெஞ்சை நெகிழச் செய்த பதிவு ..முற்றிலும் குணமடைய என் பிரார்த்தனைகள் ...

எண்ணங்கள் 13189034291840215795 said...

ஆறுதலுக்கும் வருகைக்கும் மிக்க நன்றி சுக்குமாணிக்கம் , ரமணி , சென்னை பித்தன் மற்றும் காளிதாஸ்...அனைவருக்கும்..

http://thavaru.blogspot.com/ said...

நீங்க எடுத்துகற சமநிலை தாங்க எல்லாருக்கு வேணும்.இருக்குமா???இருக்குமா!!!

பெரியவர் முற்றிலும் நலமாய் இருப்பார் வாழ்த்துகள் பயணமும் எண்ணங்களும்.

எண்ணங்கள் 13189034291840215795 said...

தவறு said...

நீங்க எடுத்துகற சமநிலை தாங்க எல்லாருக்கு வேணும்.இருக்குமா???இருக்குமா!!!

பெரியவர் முற்றிலும் நலமாய் இருப்பார் வாழ்த்துகள் பயணமும் எண்ணங்களும்.//

வாங்க தவறு..

அனுபவம் கொண்டு வரும் னு நினைக்கிறேன் இந்த சமநிலையை..

நன்றிங்க வாழ்த்துக்கு..

Anisha Yunus said...

//நெஞ்சை நெகிழச் செய்த பதிவு ..முற்றிலும் குணமடைய என் பிரார்த்தனைகள் ... //

repeat!!

படித்த பின் மனசு முழுக்க கனம். வேறொன்றும் சொல்ல இயலவில்லை. :(

எண்ணங்கள் 13189034291840215795 said...

வாங்க அன்னு..

நன்றிங்க.

sriram said...

Need to email my apologies to you, will do soon,
till then... Take Care
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Avargal Unmaigal said...

வாழ்வின் எதிர்பாரா அதிர்ச்சிகள் என்று நீங்கள் எழுதியவைகளை படித்த பின் எனக்குள் எதிர்பாரா அதிர்ச்சிகள் ஏற்பட்டன. i hope your son feeling better now. i pray for him........

எண்ணங்கள் 13189034291840215795 said...

வாங்க ஸ்ரீராம், "அவர்கள் உண்மைகள்"..

பிராத்தனைக்கும் விசாரிப்புக்கும் நன்றி..

இப்ப 95% சரியாயிடுச்சு..

வருண் said...

***நேரே ஊருக்கு வந்து வெறுமையில் , தனிமையில் தற்கொலை செய்துவிட்டான்..***

இதுபோல் ஆண்களில் நெறையவே உண்டு. இப்போ எல்லோரையும் கில்ட்டியா ஃபீல் பண்ண வச்சிட்டாரு இந்த ஆளு.

"தற்கொலை" என்பது மற்றவர்களுக்கு/நம்மை நம்பி வாழும் நம்ம ரிலேட்டிவ்ஸ்க்கு நாம் செய்யும் மிகப்பெரிய துரோகம்!

என்ன ஒரு அவமானமா இருந்தாலும் எல்லாத்தையும் உதிர்த்துவிட்டு வாழனும்! திருந்தி வாழனும்!

எண்ணங்கள் 13189034291840215795 said...

இதுபோல் ஆண்களில் நெறையவே உண்டு. இப்போ எல்லோரையும் கில்ட்டியா ஃபீல் பண்ண வச்சிட்டாரு இந்த ஆளு.

"தற்கொலை" என்பது மற்றவர்களுக்கு/நம்மை நம்பி வாழும் நம்ம ரிலேட்டிவ்ஸ்க்கு நாம் செய்யும் மிகப்பெரிய துரோகம்!

என்ன ஒரு அவமானமா இருந்தாலும் எல்லாத்தையும் உதிர்த்துவிட்டு வாழனும்! திருந்தி வாழனும்!//

அப்படித்தான் ஆயிடுச்சு வருண்..தம்பிய ஏன் திட்டினோம்னு அக்காக்களும், மகனை ஏன் திட்டினோம் னு அம்மாவும் , ஏன் கோச்சுகிட்டோம் னு மனைவியுமா.. :(

திட்டுவதை அக்கறையா எடுக்கவேண்டாமா?.. படிக்காமல் இருக்கும்போது நானும் கூட என் மகனை அதிகமா திட்டுவதுண்டு.. ஏழை குழந்தைகள் எந்த வசதியுமில்லாமல் எத்தனை கஷ்டப்பட்டு படிக்கிறாங்கன்னு..

நாமும் திட்டுவாங்கி அவமானப்பட்டே வளர்ந்திருக்கோம்..

ஒருவித டிப்ரஷன்ல கொண்டு விடுது சிலரை.. மனநோய் போல..