Saturday, November 20, 2010

லிவிங் - டுகெதர் + என் பயணமும். , ஜெனரேஷன் கேப்... பாகம் 2
" நீ நல்லா இருப்பியா.?. உன் பெண்கள் நல்லா வாழ்ந்திடுவாங்களா?.. என் சாபம் உன்னை உன் குடும்பத்தை சும்மா விடாது..%$^*&*(&**"

என வீட்டு வாசலில் வந்து சபித்து விட்டு போனார்கள் ஒரு ஆண்ட்டி..

இது போதாதா ?. உடனே அக்கம் பக்கம் உள்ளவர்களெல்லாம் வரிசையா வந்து துக்கம் விசாரிக்க வந்தார்கள்..

எங்களுக்கே சங்கடமா இருந்தது .. அம்மாவுக்கு ஏன் எப்பவும் இந்த வீண் வேலைகள்..????????

அடுத்தவர் பிரச்னையில் ஏன் தலையிடுகிறார்கள்.. இதனாலேயே அப்பாவுக்கும் அம்மாவுக்கும் எத்தனை சண்டைகள்..?.

அம்மா மேல கோபமா வரும்....:((((

ஆனா அம்மா இதையெல்லாம் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் அண்ணாவை விட்டு மாங்காய் பறிக்க சொல்வதும் , முருங்கை காய் பறிப்பதும் , தெருவில் கேட்டு வந்தவர்களுக்கு கொடுத்து அனுப்புவதுமாய்..சாதாரணமாய் இருப்பார்..காய்கறி விற்பவர், நெல் சுமப்பவர், பூ விற்பவர், பால் காரர், தபால் காரர் அனைவரும் இளைப்பாறும் இடம் எங்க வீட்டு முற்றம்.. அந்த மாமர நிழல்.. எல்லார் சோகத்திலும் தன் சோகத்தை மறந்தவர்..

அப்படி என்னதான் நடந்தது.?. ஒரு அக்காவின் சோக கதை இங்கே..

புது வீடு கட்டும்வரை அந்த அக்கா வீட்டில்தான் நாங்கள் சின்ன வயதில் குடியிருந்தோம். எங்களையெல்லாம் வளர்த்தவர்கள்..

எங்களுக்கு வேதாகமம் , கதை சொல்லி தந்தவர்கள்..

நாங்க வீடு கட்டியதும் இடம் மாறினோம். அக்காவுக்கு திருமணம் ஆனது..ஒரு வயதில் ஒரு மகன் இருந்தபோது பேரூந்தில் செல்லும்போது விபத்து ஏற்பட்டு மூவரும் தூக்கி எறியப்பட்டு , கணவர் அந்த இடத்திலேயே மரணம்..

அடுத்த 9 ஆண்டுகள் எல்லா சோகத்தையும் சுமந்து கொண்டு தமிழ் ஆசிரியர் வேலைக்கு சென்றார் அக்கா.. கருப்பு என்றாலும் முத்துப்பற்கள் , முட்டு வரை கூந்தல் , இனிமையான பேச்சு கொண்ட பேரழகி அக்கா..

பார்க்கும் யாருக்குமே பிடித்து போகும் அக்காவை.. தமிழ் துள்ளி விளையாடும் கணீரென்ற குரலில்..

ஆக அவர் ஞாயிறுதோறும் குழந்தையை என் பக்கத்து வீட்டுக்கு ( அக்காவின் நெருங்கிய சொந்தம் ) அழைத்து வரும்போது அம்மாவிடம் வந்து கண்ணீர் சிந்துவார் எமக்கு தெரியாமல்..

இருவரும் ரகசியம் பேசுவார்கள் எம்மை வெளியே துரத்தி விட்டு..

அக்கா பூ வைக்க கூடாதாம் , ஆனால் அவர் அம்மா பூ வைத்து நகை போட்டுக்கொள்வார். கணவனோடு தனியறையில் படுப்பாராம்..

என்ன கொடுமை..?.. ( கலாச்சாரம் ? )

இவ்வேளையில் மனைவியை இழந்த ஒருவர் ( அவருக்கு 12, 10 வயதில் இரு குழந்தைகள் ) அக்காவை மணமுடிக்க ஆசைப்படுகிறாராம்..அக்காவை பள்ளியில் சந்தித்துவிட்டு ..

ஆனல் வீட்டில் பலத்த எதிர்ப்பு அக்காவுக்கு..எங்க பக்கத்து வீட்டினர் எங்களுக்கு ரொம்ப பிடித்தவர் மட்டுமல்ல ரொம்ப உதவியும் எல்லா விஷயத்திலும்..

ஆனால் அவர்களும் இதற்கு எதிர்ப்பு..மறுமணம் செய்ய கூடாது பையனுக்கு 10 வயதாகிவிட்டது என்று..( கலாச்சாரம் ?.. )

அம்மா உடனே தன் துணிவான இரு தோழிகளை ( ஒருவர் கவுன்சிலராக இருந்தார். மற்றொருவர் மலேஷியாவில் பல வருடம் வாழ்ந்தவர். ) அழைத்து ஆலோசித்து இத்திருமணத்தை மிக ரகசியமாக முடிக்க ஏற்பாடு செய்தனர்..

அப்பதான் என் இரண்டாவது அக்காவுக்கு பிரசவ நேரம்.. சம்பந்தி , நாத்தனார் என்ற கூட்டங்கள் வேறு..

மருத்துவமனையில் வைத்து ரகசிய கூட்டம் நடைபெறும்.. நான் அம்மா மடிமீது படுத்துக்கொண்டே கதை கேட்பேன்..

மேலும் நானும் ஒரு முக்கிய தூதுவர்...தகவல் அனுப்ப..:)

அக்காவை டிஸ்சார்ஜ் செய்துவிட்டு உறவினரையெல்லாம் வழியனுப்பி வைத்துவிட்டு , அம்மா ஒருநாள் காலையிலேயே கிளம்பி போனார்கள்.. எங்கேன்னு கேட்டா சொல்லலை... ஆனா போய்விட்டு வந்ததும் மகிழ்ச்சியா இருந்தார்கள்..

பக்கத்து வீட்டு ஆண்டி அங்கிளை பார்க்க மட்டும் வெட்கப்பட்டுக்கொண்டு இருந்தார்கள்..

(பக்கத்து வீட்டு ஆண்டி பற்றி " சந்தித்த அற்புதமானவர்கள் " பகுதியில் எழுதியிருக்கேன் பார்க்கலாம். அன்னை தெரசா அவர்..நாங்க நேரில் கண்ட தெய்வம்.. )

இரண்டு நாள் கழித்து அந்த அக்காவின் அம்மா வந்து மேலே சொன்னது போல அசிங்கமா கத்திவிட்டு போனதும் தான் தெரிந்தது , அக்காவுக்கு திருமணம் ஆன விஷயம்..

" ஏம்மா ஆண்டி இப்படி சபிச்சுட்டு போறாங்களே..?" னு நாங்க வருத்தப்பட்டா , அம்மா எளிதா சொல்வாங்க ,

" ஹ அடுத்த கிறுஸ்மஸ் க்கு பாரு .. எல்லாரும் குடும்பமா கேக் வாங்கிட்டு வருவாங்க... "

தீர்க்கதரிசியா அம்மா?.. இல்லை.. அவர் பார்த்த , சந்தித்த பிரச்னைகள் , அனுபவங்கள்..

அக்காவுக்கு திருமணம் ஆனதும் தான் பெரும் சோதனை காத்திருந்தது...

கணவனின் இரு குழந்தைகளும் தம் சொந்தங்களின் பேச்சை கேட்டு அக்காவை வெறுத்தனர்.. அக்காவின் மகனை ஏற்றுக்கொள்ளவில்லை.. அக்காவின் அன்பும் பொறுமையும் அவர்களையும் சில வருடங்களில் கரைத்தது..

And they lived happily ever after.. இப்ப பிள்ளைகள் மூவரும் அமெரிக்காவில்..

அப்புரம் ஒருநாள் அந்த ஆண்டி , எங்கம்மா கை பிடிச்சு அழுதுகொண்டே, '" சாந்தியம்மா , நீங்க மட்டும் அன்னிக்கு அப்படி ஒரு துணிச்சலான செயல் செய்யாவிட்டால் என் பொண்ணு நிலைமை என்னவாயிருக்கும்..? "

அப்பவே இப்படி பல புரட்சியை செய்தவர் சத்தமில்லாமல்.. இது ஒரு சாம்பிள் மட்டுமே..


பக்கத்து வீட்டு அங்கிள் கூட எங்க அம்மா மேல் கொஞ்ச நாள் வருத்தத்தோடு இருந்தாங்க..

ஆனா அம்மா சொல்வாங்க , ஒரு இளம் விதவையை வீட்டுக்குள் வைத்துக்கொண்டு பெற்றோர் மட்டும் எப்படி தனியறையில் வாழ முடிந்தது?..

ஊரில் எல்லாரும் சொன்னாங்க , உங்களுக்கு நான்கு பெண் பிள்ளைகள் இருக்காங்க .நல்ல சம்பந்தம் கிடைக்காது... எதுக்கு உங்களுக்கு வேண்டாத வேலை என..

" என் பிள்ளைக்கு இந்த நிலைமை வந்தால் என்ன செய்வேனோ அதைத்தான் நான் அவளுக்கு செய்தேன். யார் தடுத்தா என்ன என்ன சாபம் போட்டா என்ன.?. என் பிள்ளைகளை கட்டிக்க நான் , நீ ன்னு போட்டி போட்டு வருவாங்க.. யாரும் கவலைப்படவேண்டாம் " என வாயடைத்துவிடுவார்கள்..

பிரச்னை என வந்தபோது ஓடி ஒளிந்தவரெல்லாம் மெல்ல மெல்ல என் அம்மாவிடம் தத்தம் பிரச்னைகளை இப்ப துணிவா சொல்ல வந்தாங்க...

வீடே ஒரு பஞ்சாயத்து ஆல( மா ) மரம் ஆனது..

அக்கம் பக்க ஏழைகள் , கூலித்தொழிலாளிகள் எல்லார் வீட்டு பிரச்னைகளும் அம்மாவிடம்.. குடிகாரர்களின் மனைவி புகார் செய்தா அம்மா சென்று அதட்டி விட்டு வருவார்.. அப்போதைக்கு சரிம்மா சரிம்மா என பெட்டிப்பாம்பாய் அடங்கினாலும் நல்லா தண்ணி போட்டுவிட்டு வந்து இரவு கத்திவிட்டு போவான்.. :)).. அடுத்த நாள் மன்னிப்பு கேட்டு வேலைக்கு வந்தும் நிற்பார்..:)

ஏழைப்பிள்ளைகளை பள்ளியில் சேர்ப்பது , வேலை வாங்கி தருவது, திருமணத்துக்கு மாப்பிள்ளை பார்த்து தருவது என இஷ்டமாய் உதவுவார்கள்..

எந்த வீட்டில் மரணம் என்றாலும் எங்க வீட்டுக்கு முதல் தகவல் வரும் ...வந்ததுமே காஃபி பெரிய பானையில் தயாராகும்..

எங்க வீட்டு முற்றத்தில் நாற்காலிகள் போடப்படும்..


எங்கள் தெருவில் கிறுஸ்தவர்கள் அனேகர்..

பின் தெரு தேவர் இனத்தவர்கள்.. பாசக்காரர்கள்.. ( இதை எழுதலாமா னு தெரியவில்லை தப்பென்றால் நீக்கிடுவேன் ) . ஆனா அவர்களுக்குள் சண்டைன்னு வந்தால் அறுவாள் , டியூப்லைட் என கிடைத்த ஆயுதத்தை தூக்கிக்கொண்டு ஊரே வேடிக்கை பார்க்குமளவுக்கு நடக்கும்..எல்லாரும் எங்க வீட்டு மூன்றாவது மொட்டை மாடியில் ஆஜர்.. லைவ் ரிலே... தெரு முழுதும் பேர்ட்ஸ் ஐ வ்யூ..

பயமா இருக்கும் கொலை விழுமோ என.. அர்த்தமே புரியாத கெட்ட வார்த்தைகள் ..:))

அப்பவும் அம்மாவுக்குத்தான் தகவல் அனுப்புவாங்க..

" சாந்தியம்மா பேச்சுக்குத்தான் கட்டுப்படுவான்.. ஆள் அனுப்புங்க "

அப்பா இருந்தா அம்மாவால் போக முடியாது.. சில நேரம் பின்பக்கம் வழியா போவாங்க..சில வேளை அப்பா கண்டுக்கமாட்டாங்க..

நானும் முந்தானை பிடித்துக்கொண்டே அம்மாவுக்கு ஏதாச்சும் ஆகிடுமோ னு கூட போவேன்..

அப்பா வெளியூர் போயிருந்தா " என்னப்பா என்னாச்சு , னு மெதுவா பேசி சண்டையிட்டவரை வீட்டுக்கு அழைத்து வருவாங்க கையை பிடித்து .."

பார்க்கவே பயமா இருக்கும்..எங்க வீட்டு முன்னால் கூட்டம் கூடும்..வேடிக்க பார்க்க..எங்க அண்ணா இருவரும் கூட்டத்தை அனுப்புவார்கள்.. என் அண்ணா இருவரும் அமைதின்னா அமைதி அப்படி ஒரு அமைதி..:)). ( ஆனா எனக்கு போய் அமைதின்னு பேர் வெச்சுட்டாங்களே..:)) )

வீட்டுக்குள் பெண் பிள்ளைகள் இருக்காங்களே னு அம்மா ஒருபோதும் பயந்ததில்லை..

அந்த அண்ணாமார் எல்லாம் எங்களை எங்கே கண்டாலும் மிக மரியாதை செலுத்துவார்கள் அம்மா மேலுள்ள மரியாதையால்...

ஆக தேவர் வீட்டு விசேஷத்தில் அம்மா எப்பவும் முன்னால் நிற்பாங்க.. அனேகர் எங்களை தேவர் என்றே நினைத்திருந்தனர்.. :)).

( இப்ப என் பிள்ளைக்கு தான் எந்த சாதின்னே தெரியாது.. சாதின்னாலே என்னன்னு தெரியாது.. )

அதே போல் எங்க வீட்டு விசேஷம் அனைத்திலும் அவர்களும்..

இது பலருக்கு ஆச்சர்யமான விஷயம் அப்போது...

இத்தனைக்கும் அம்மா இந்து.. அப்பா கிறுஸ்தவர்.. ஆனாலும் கிறுஸ்தவ முறைப்படி ஞானஸ்தானம் பெற்று திருமணம் செய்ததால் கிறுஸ்தவ முறைப்படியே எம்மை வளர்க்க பிரியப்பட்டார் அம்மா.

ஏன்னா பெண்ணுக்கு கல்வி , உரிமை இங்கு அதிகம் என்பது அவர் எண்ணமாயிருந்திருக்கும்....

மனசுக்குள் அவர் இந்து என்பது மட்டும் அப்பப்ப வெளிப்படும்.. :)

இந்து கோவிலை தாண்டும்போது செருப்பை கழற்றிவிட்டு கன்னத்தில் போட்டுக்குவார்.. கையெடுத்து கும்பிடுவார்.. அப்பாவுக்கு தெரியாமல் வருடந்தோறும் குத்துவிளக்கு அனுப்பி வைப்பார் கோவிலுக்கு.. பின் தெருவில் கொடை விழாவுக்கு எங்க கிறுஸ்தவர் தெருவில் எங்க வீட்டிலிருந்து மட்டுமே பணம் தரப்படும்.. சாமியாடி வந்து எங்க வீட்டு முற்றத்தில் மட்டும் ஆடி விபூதி தருவார்..

எதையும் மறுக்காது ஏற்க பழக்கினார் அம்மா..


கிராமத்திலிருந்து பாளை பெரிய மருத்துவமனைக்கு யார் வந்தாலும் முதல் செய்தி தொலைபேசியில் அம்மாவுக்கு வரும்..

ரொம்ப தியாகி மாதிரி , " அதுக்கென்ன வர சொல்லு . தம்பியை வைத்து நல்லா பார்க்க சொல்வோம் . நம்ம வீட்டிலேயே இரவு தங்கிக்கலாம்.."

மாமாதான் பெரிய மருத்துவர் அப்போ..

விருந்தினர்களுக்கு என் தலையணை வரை நான் தானம் செய்யணும் ..முகத்தில் புன்னகை , அகத்தில் வருத்தம்..:)..

விருந்தினர் குளிக்க , தண்ணீர் வராத நாட்களில் 100 குடம் தண்ணீர் எடுக்கணும் அடி பம்பிலிருந்து..( ? ) அதெல்லாம் கஷ்டமாய் தெரிந்ததேயில்லை..

ஏன்னா பாராட்டு மழையில் நனைந்திருப்போம்.. மேலும் கிராமத்துக்கு போகும்போது பிரமாண்டமான வரவேற்பு இருக்கும்..


இதுக்கும் இடையில் நாங்க படிக்கணும்..தேர்வுக்கு .. வந்தவங்களுக்கு காஃபி போட்டு, டிபன் செய்து கொடுக்கணும்..

ஆக ஒரு காது வழியா சமூக பாடம் . மற்றொரு காதில் பள்ளி பாடம்...:).

இப்படிப்பட்ட அம்மாவை வெளிநாட்டில் கொண்டு வந்து வைத்தால் என்னாகும். பிரச்வத்துக்காக ஒரு வருடம் விசா எடுத்து வரவழைத்தால் குழந்தை பிறந்ததுமே என்னை அனுப்பிவிடு என அழ ஆரம்பித்தார்கள்..

அதே தான் அமெரிக்காவிலும் . ஒரு வருடம் என சென்றவர்கள் , மூச்சை பிடித்துக்கொண்டு மூன்று மாதம் இருந்தார்களாம்..அண்ணாவிடம்..

வாழ்நாளிலே அம்மாவுக்கு மிகப்பெரிய தண்டனை அதுதான்.. எது ?. ஆட்கள் இல்லாமல் இருப்பது..

அம்மா சென்னைக்கு சென்றாலே அக்கம் பக்கம் உள்ளவர்கள் தேட ஆரம்பித்திடுவார்கள்..

" தம்பி அம்மாவை சீக்கிரம் வர சொல்லுங்க ஒரு முக்கியமான பிரச்னை.." என அண்ணாவிடம் இன்றும் ஆட்கள் வருகிறார்கள்...


அம்மா பட்ட கஷ்டத்தை சொல்லணும்னா தனியா புத்தகம்தான் போடணும்..ஆனால் அதுதான் அவர் சக்தி..வசதியான வீட்டில் பிறந்து வசதியான வீட்டுக்கு மூத்த மருமகளாய் வந்து வேலை வேலை வேலைதான்...அம்மா திருமணத்தின் போது அவர் கடைசி தம்பி கைகுழந்தை.. அதே போல அப்பாவின் கடைசி தம்பியும்... ஒரே வீட்டில் மாமியார் மருமகள் , அம்மா, மகள் தொட்டில் .:))..

ஆனால் நிறைவான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார் என்பது மட்டும் உண்மை..

அவருக்கு தெய்வம் , பிடிமானம் , மகிழ்ச்சி எல்லாமே மிக சாதாரண மனிதர்களே..மனிதன் கஷ்டப்பட கலாச்சாரம் ஒரு தடைன்னா அதை தூக்கி எறியணும் னு நினைப்பவர்.. இலக்கியமோ , புரட்சி புத்தகமோ படித்ததில்லை..

தாம் செய்வது புரட்சியா , என்பதெல்லாம் தெரியாது.. ஆனா ஒருத்தரோட துயர் துடைக்கணும் அது மட்டும்தான் கண்ணில் தெரியும்..அதற்கான விமர்சனங்களை சட்டை செய்யாதவர்.மகிழ்ச்சியா தாங்கியவர்...எத்தனை எத்தனை திருமணங்கள் நடத்தி வைத்தார்.?. பணம் செலவு செய்தல்ல , தன் நேரம் , துணிவு , அறிவை செலவழித்து.

அவர் தூங்கியே நான் பார்த்ததில்லை.. ஆனால் பொத்தென்று விழுந்து பார்த்துள்ளேன் பலமுறை.. குறைந்த ரத்த அழுத்தம் உண்டு..

பேசிக்கொண்டிருக்கும்போதே மயங்கி விழுவார்.. ஆனாலும் மருத்துவரிடம் சென்று தன் உடம்பை காண்பிக்க மாட்டார்.. பிடிவாதம்..

மாமா அப்பப்ப திட்டி மருந்து கொடுப்பார்கள்.. அப்பவும் நக்கல் " என்னை பரிசோதித்தா 100 வியாதி லிஸ்ட் சொல்லுவாங்க.. எனக்கு தெரியாதா?.. " என ..

ஊரிலுள்ளவருக்கு மட்டுமல்ல டாக்டர் மாமாவுக்கு உடல்நிலை சரியில்லாட்டி கூட கைப்பக்குவ மருத்துவம் , சூப் ,ரசம், லேகியம்னு செய்துகொடுப்பார்..:)).

பிரசவத்துக்கு ,பாலூட்ட , வயற்று வலி , சளி இருமல் என பல்வேறு லேகியம் செய்ய ஆலோசனை வேறு..நாங்க அம்மா சொல்வதை கேட்காமல் மருத்துவரிடம் குழந்தை அழைத்து செல்வோம்.. கிண்டலடிப்பார்..

நான் சொல்றத கேட்டா 2 நாளில் சரியாகும்.. மருத்துவர் சொல்றத கேட்டா ஒரு வாரமாகும்.. குழந்தையை ஏன் இப்படி படுத்துற.? சாப்பாட்டை திணிக்காதே.. ஒரு நேரம் சாப்பிடாட்டி ஒண்ணும் செத்து போகாது.தன்ணி மட்டும் கொடு . என துணிச்சலாக பட்டினி போட சொல்வார்...

கல்லூரியிலோ பள்ளியிலோ எமக்கு ஒரு பிரச்னை என்றால் உடனே அங்கு இருப்பார்.. பருத்து சேலை என்றாலும் நேர்த்தியாக உடை அணிந்து கிட்டத்தட்ட எம்.எஸ்.சுப்புலஷ்மி மாதிரி மங்களகரமாக இருப்பார், அப்பா மரணத்துக்கு பின் எல்லாவற்றையும் இழந்தார் , அண்ணாக்கள் எத்தனை சொல்லியும்.. ( கலாச்சாரம் )


அவருடைய சக்தியே எளிமை.. சென்னையில் அக்காவிடமிருந்து தொலைபேசி வரும்.. அம்மா உடனே வாங்கன்னு..( அக்கா வீட்டுக்காரர் வெளிநாடு பயணம் செய்யும்போது ) ...இந்த 76 வயதிலும் ,

" அடுத்த டிரெயின் எப்ப தம்பி ?" னு ஒரு பையில் இரண்டு சேலைகளை எடுத்து வைத்து கிளம்பிடுவார்.. ரிசர்வேஷன் வேணுமே, படுக்கணுமே . என்ற கவலையெல்லாம் கிடையாது.. தாலி செயினை மட்டும் பையினுள் இரவு எடுத்து வைத்துக்கொள்வாராம்.. ".ரயிலில் ஏறியதுமே எல்லாருடனும் சகஜமா பேசி அதுக்குள்ள நட்பாயிடுவாரே.. அவருக்கு என்ன கவலை.?..

சரி இந்த பதிவில் அம்மா பற்றி எழுதியதும் லிவிங்-டுகெதர் மறந்துட்டேன் மன்னிக்க..

( எடிட் செய்யாமல் அப்படியே போட்டிருக்கேன் . போரடிச்சா திட்டிருங்க.:) .)

அடுத்து அதை கொஞ்சம் பார்ப்போம்..


லிவிங்-டுகெதர் பற்றி
படம் : நன்றி கூகுள்..

18 comments:

சௌந்தர் said...

ஆனால் அவர்களும் இதற்கு எதிர்ப்பு..மறுமணம் செய்ய கூடாது பையனுக்கு 10 வயதாகிவிட்டது என்று..( கலாச்சாரம் ?.. )///

இது தவறான கலாச்சாரம் தான்...( இப்ப என் பிள்ளைக்கு தான் எந்த சாதின்னே தெரியாது.. சாதின்னாலே என்னன்னு தெரியாது.. )////

ரொம்ப நல்ல விசயம்

சென்னை பித்தன் said...

hats off to your mother.

பயணமும் எண்ணங்களும் said...

நன்றி செளந்தர், சென்னை பித்தன் சார்.

ரோஸ்விக் said...

போற்றப்பட வேண்டியவர். இன்னும் பலகாலம் இவர் வாழனும். இவரிடமிருந்து இளைய தலைமுறைகள் நிறையக் கத்துக்கணும்.

அவருக்கு என் வணக்கங்கள்.

பயணமும் எண்ணங்களும் said...

நன்றி ரோஸ்விக்..


வாழ்த்துகளை சொல்லிடுவேன்

வருண் said...

*** அம்மா உடனே தன் துணிவான இரு தோழிகளை ( ஒருவர் கவுன்சிலராக இருந்தார். மற்றொருவர் மலேஷியாவில் பல வருடம் வாழ்ந்தவர். ) அழைத்து ஆலோசித்து இத்திருமணத்தை மிக ரகசியமாக முடிக்க ஏற்பாடு செய்தனர்..***

பதிவுலகில் துணிவா ஆயிரம் பேசலாம்ங்க. ஆனால் இதுபோல் உண்மையில் செய்வதற்கு ரொம்ப தைரியம் வேணும். Very nice to get to know about your mom!

பயணமும் எண்ணங்களும் said...

வருண் said...


பதிவுலகில் துணிவா ஆயிரம் பேசலாம்ங்க. ஆனால் இதுபோல் உண்மையில் செய்வதற்கு ரொம்ப தைரியம் வேணும். Very nice to get to know about your mom!//

நன்றி வருண்

இது ஒரு சாம்பிள் மட்டுமே..

அம்மா இப்படி துணிவா செயல்கள் செய்ய ஆரம்பித்ததும் அவரது வட்டத்து தோழிகளும் அவ்வாறே அமைந்தன்ர்..

அவர்கள் எல்லாரும் இணைந்து செய்யும் செயல்கள் பிரமிப்பூட்டுபவை..

முதலில் எதிர்த்த கணவன்மார்கள் இப்ப நாளடைவில் பின்னாலிருந்து ஆதரிக்கவும் தொடங்கினர்..

ஒரு நண்பர் அம்மா பத்தி புத்தகமா எழுத சொல்லியிருக்கார் தாம் வெளியிடுவதாக..

நேரமிருந்தால் அம்மாகிட்ட தகவல் சேகரித்து எழுதணும்..

இது அம்மாவுக்கும் அவரைப்போன்ற அக்கால சாதனை பெண்ணுக்கும் செய்யும் நன்றிக்கடன்..

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

//அம்மா உடனே தன் துணிவான இரு தோழிகளை ( ஒருவர் கவுன்சிலராக இருந்தார். மற்றொருவர் மலேஷியாவில் பல வருடம் வாழ்ந்தவர். ) அழைத்து ஆலோசித்து இத்திருமணத்தை மிக ரகசியமாக முடிக்க ஏற்பாடு செய்தனர்..//

உங்கம்மாவுக்கும் அந்த தோழிகளுக்கும் ஒரு சல்யூட்..

பயணமும் எண்ணங்களும் said...

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

உங்கம்மாவுக்கும் அந்த தோழிகளுக்கும் ஒரு சல்யூட்..//

நன்றி எல் போர்ட் . உங்க சல்யூட் அம்மாவுக்கு அனுப்புகிறேன்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

உங்கள் அம்மாவிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளம். பகிர்தலுக்கு நன்றி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இன்னும் நிறைய எழுதுங்கள், உங்கள் அம்மா சந்தித்த பிரச்சனைகள், அதற்கு அவர் தீர்வு கண்ட விதம் எல்லாம்!

பயணமும் எண்ணங்களும் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இன்னும் நிறைய எழுதுங்கள், உங்கள் அம்மா சந்தித்த பிரச்சனைகள், அதற்கு அவர் தீர்வு கண்ட விதம் எல்லாம்! //

மிக்க நன்றிங்க..

ரொம்ப பெருமை பேசுவதாக இருக்குமேன்னு நினைத்தேன்..

ஆனால் அவரும் அவர்கள் தோழிகளும் , அந்த காலத்தில்யே சந்தித்த பிரச்னைகள் சவால்கள் அதை தீர்த்தது ஒரு புரட்சிதான்..

எழுதுவேன் தொடர்ந்து..

ஊக்கத்துக்கு நன்றிங்க..

அன்னு said...

அருமையான ஒரு பதிவு, அலுப்பு தட்டாமல் வியக்க வைக்கிறது. தற்போதைய பதிவான புரட்சிக்கல்யாணத்திலிருந்து நூல் பிடித்து இந்த பதிவு வரை வந்தேன். உண்மையில் போற்றத்தக்கவர்கள், நம்மை பெற்றெடுத்தவர்கள். இந்த பதிவை படித்தவுடன் உங்களின் அம்மாவை நேரில் சந்திக்கவேண்டும் போல தோன்றியது. :) அவர்களுக்கு எங்களின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவியுங்கள், எல்லோருக்கும் தொள் கொடுக்கும் ஆன்மாவாய் வாழ்வதற்கு :)

பயணமும் எண்ணங்களும் said...

அன்னு said...

அருமையான ஒரு பதிவு, அலுப்பு தட்டாமல் வியக்க வைக்கிறது. தற்போதைய பதிவான புரட்சிக்கல்யாணத்திலிருந்து நூல் பிடித்து இந்த பதிவு வரை வந்தேன். உண்மையில் போற்றத்தக்கவர்கள், நம்மை பெற்றெடுத்தவர்கள். இந்த பதிவை படித்தவுடன் உங்களின் அம்மாவை நேரில் சந்திக்கவேண்டும் போல தோன்றியது. :) அவர்களுக்கு எங்களின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவியுங்கள், எல்லோருக்கும் தொள் கொடுக்கும் ஆன்மாவாய் வாழ்வதற்கு :)//

வாங்க அன்னு..நன்றிங்க..

அம்மாவின் துணிவில் கால் வாசி கூட எனக்கில்லை..:) .

RMS Danaraj said...

அருமையான பதிவு . அம்மாவிற்கு என் வணக்கங்கள்

பயணமும் எண்ணங்களும் said...

RMS Danaraj said...

அருமையான பதிவு . அம்மாவிற்கு என் வணக்கங்கள்//

நன்றி தன்ராஜ் அவர்களே..

சொல்கிறேன் அம்மாவிடம்..

உங்க வலைப்பூ நிபுணத்துவமாய் உள்ளது.. உபயோகமாகவும் ..மாணவர்களுக்கு...

துளசி கோபால் said...

அம்மா ஒரு அற்புதமனுஷி!!!!!

படிக்கப்படிக்க எனக்குத் தாங்கலைப்பா!!!!!

கொடுத்துவச்சவங்க நீங்க. இப்படி ஒரு தாயை அடைஞ்சதுக்கு!

என் மகளுக்கும் சாதின்னா என்னன்னே தெரியாமத்தான் வளர்த்துருக்கோம்.

பயணமும் எண்ணங்களும் said...

துளசி கோபால் said...

அம்மா ஒரு அற்புதமனுஷி!!!!!

படிக்கப்படிக்க எனக்குத் தாங்கலைப்பா!!!!!

கொடுத்துவச்சவங்க நீங்க. இப்படி ஒரு தாயை அடைஞ்சதுக்கு!//

வாங்க துளசிம்மா,.,.

நிச்சயமா அம்மா. எனக்கு அம்மாதான் உலகம் என்றிருந்தேன் திருமணம் வரை.. :)

// என் மகளுக்கும் சாதின்னா என்னன்னே தெரியாமத்தான் வளர்த்துருக்கோம்.//

அருமை...நாமும் மாறி , மாற்றுவோம் அம்மா..நம்மால முடிந்தவற்றை...

மிக்க நன்றி..