Wednesday, November 17, 2010

கலாச்சார மாற்றம் - ஏற்பதும் மறுப்பதும்.


































கற்காலித்திலிருந்து மனிதன் தன் வாழ்க்கையை, முறைகளை கலாச்சாரம் , பண்பாடு என்ற பெயரில் மாற்றிக்கொண்டே வந்துள்ளான்.

புதிதாக ஒரு கலாச்சாரம் பரவும் போது ஏற்கனவே பழகிய கலாச்சாரத்திலிருப்பவனுக்கு அதை குறித்தான பயமே அவன் வெறுப்புக்கு முதல் காரணியாகிறது.

பயம் எதனால் ?.. முழுமையான புரிதல் இல்லாமை..

ஏன் புரிதல் இல்லாமை..?.. தீ என்றால் சுடும் என்று மட்டுமே நினைத்திருந்தால் தீயினால் அடையக்கூடிய நன்மையை யாரும் அடைந்திருக்க முடியாது..

கலாச்சாரம் கத்தி , தீ போன்றதுதான்.. ஆபத்துகள் நிறைந்தவைதான்..

நாம் விரும்பி இவ்வுலகத்துக்கு வரவில்லை.. விரும்பிய நாட்டில் பிறக்கவுமில்லை..

மனிதனின் மனமும் குணமும் அவன் வாழும் சூழலை ஒத்து தீர்மானிக்கப்படுகிறது..

இப்படியே ஒவ்வொரு இனத்துக்கும், நாட்டுக்குமான பண்பாடு கலாச்சாரம் அவர்கள் வசதிக்கேற்ப , சக மனிதனுக்கு தொந்தரவு செய்யாமல் வாழ ஏற்படுத்தப்பட்டது..

ஆக கலாச்சாரம் என்பது ஒரு ஒழுங்குமுறை..

நாம் பிறந்த நாட்டில் ஒருவிதமான கலாச்சாரத்தில் வளர்க்கப்படுகிறோம். பின் சூழலால் வேறொரு இடத்துக்கு புலம்பெயரும்போது அங்குள்ள கலாச்சாராம்

அதிக சுதந்திரத்தை தரக்கூடியதாகவும் எளிதாகவும் படுகிறது.. ஆக அந்த சூழலுக்கு நம்மை மாற்றிக்கொள்கிறோம்..

தவறில்லை.. நாம் நம் சுதந்திரத்தை தேர்ந்தெடுப்பதும் , நமக்கு மட்டுமே ஒத்துபோகக்கூடியதை தேர்ந்தெடுப்பதில் தவறில்லை..

ஏனெனில் பாதகமோ , சாதகமோ அதை நாம் தாங்க்கிகொள்ள நம்மை தயார்படுத்திக்கொள்வோம், அல்லது தயார்படுத்திக்கொள்ள வைக்கப்படுவோம்..

ஆனால் அதற்காக நாம் புழங்கும் ஒரு கலாச்சாரமே சிறந்தது என யாராலும் உறுதியாக கூற முடியாது..

குளிர் பிரதேசத்திலுள்ளவன் கோர்ட் போட்டால் அதையே வெயில் பிரதேசத்திலுள்ளவனும் பின்பற்றுவது எத்தனை முட்டாள்தனமோ அத்தனை முட்டாள்தனம் வேறொரு கலாச்சாரத்தை கண்மூடித்தனமாக அப்படியே பின்பற்றுவது..


நம் நாட்டு திருமண முறைகளிலும் சில தவறுகள் இருக்கத்தான் செய்கிறது.. மறுப்பதற்கில்லை..வரதட்சணை , சாதி , மதம் , இனம் , நிறம் என எத்தனை எத்தனை அழுக்குகளை தாண்டி ஒரு திருமணம் நடத்தவேண்டியுள்ளது..

அறிமுகமற்ற இருவரை அறையினுள் தள்ளி , " இன்றிலிருந்து நீங்கள் தம்பதிகள்... குழந்தை பெற்று அமோகமாக வாழுங்கள் . நாங்களும் பக்க பலமாய் இருப்போம்" என அனுப்பி வைப்பது காலங்காலமாய் தொடர்ந்து வருவது..

அவர்களும் வாழ தொடங்குகின்றார்கள் சுற்றத்தின் நம்பிக்கையில்..

அந்த தம்பதிகள் வாழவில்லையா வெற்றிகரமாக..?

அவர்களுக்குள்ளும் பிரச்னைகள் இருந்திருக்கும்.. ஆனாலும் அன்பு கொண்டு அனுசரித்தே போனார்கள்..

இடையில் பெண்கள் சுயமாக சம்பாதிக்க ஆரம்பித்ததும் தம் சுதந்திரத்தை நிலை நாட்ட தாமே துணையை தேடிக்கொள்ள ஆரம்பித்தனர்.

அதற்கும் சமூகம் வளைந்து கொடுத்தது சில எதிர்ப்புகள் வந்தாலும்..

பின்பு வேலைக்கு செல்லும் பெண்ணுக்கு பிரச்னைகள் வர ஆரம்பித்தது .. அதனால் ஆணுக்கும்தான்..

அதுவரை வீட்டிலிருந்து தன் அப்பாவை கவனித்துக்கொண்ட அன்னையையே பார்த்து வளர்ந்தவனுக்கு இதை ஏற்க கடினமாயிருந்தது..

அனுசரிப்பில் , புரிதலில் பிரச்னைகள்.. பொறுமையோடு , பிரச்னையை விவாதித்தவர்கள்: சுமூகமாக இருவரின் குறைகளையும் ஏற்றனர்..

முடியாதவர்கள் விவாகரத்தாகி பிரிந்தனர்..

இதில் கூட நகைச்சுவை என்னவென்றால் , பூதாகரமான பிரச்னை உடையவர்கள் கூட ஒன்று சேர்ந்து வாழ்ந்தனர்.. சின்ன விஷயத்தை கூட அனுசரிக்க முடியாமல் ஈகோவால் நான் சொல்வதுதான் சரி என்பவர்கள் பிரிந்தனர்..

ஆக எப்படி இருந்தாலும் சேர்ந்து தான் வாழணும் என்ற கட்டாயத்தில் இருந்து பிரிந்தும் வாழலாம் என்ற முறையை கலாச்சாராம் அனுமதித்தது.. அல்லது ஏற்றுக்கொண்டோம்.. மெல்ல மெல்ல..

பெண் தனியே முடிவெடுக்க, வாழ பழகிக்கொண்டாள்.. ஆணும் அப்படியே..

திருக்குறள் அருமையா சொல்லிதருது..


உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்.
கலைஞர் உரை:
தம்முடைய வலிமையின் அளவை அறியாமல் உணர்ச்சி வயப்பட்டு ஒரு செயலைத் தொடங்கி இடையில் கெட்டுப் போனவர்கள் பலர் உண்டு..


இப்படித்தான் ஈகோவினால் அழிந்தவர்கள் உண்டு... வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதை அறியாமல் , நான் நினைப்பதே, சொல்வதே சரி என்ற மனப்பான்மையில் அடுத்தவரை மதிக்காது அல்லது அடுத்தவரை இழிவுபடுத்தி மேலே வர நினைப்பது..

இவர்களுக்கு இல்லற வாழ்க்கை மட்டுமல்ல வாழ்க்கையே கசப்பாகத்தான் இருக்கும்..


"அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்."


திரு மு.வரதராசனார் உரை

பொருளின் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை (பல வளமும்) இருப்பது போல் தோன்றி இல்லாமல் மறைந்து கெட்டு விடும்.


தன்னுடைய சக்தி என்ன , என தெரியாமலே , புரியாமலே வாழ்பவர் ஏமாற்றமடைவர்..


தன் சக்திக்கேற்ற துணையை தேடுவதில்லை.. அனுசரிப்பதில்லை... தன் சக்திக்கு மீறிய துணை கிடைத்தால் எவ்வகையிலாவது அடிமைப்படுத்துவது.. இர்து இருபாலார்க்கும் பொருந்தும்..


அடுத்து இல்லறத்தில் மிக முக்கியமான நபர் குழந்தைகள் தான்..

நமக்கு பிடித்த துணை அமைகிறார்களோ இல்லையோ, குழந்தைகள், அவர்கள் நல்வாழ்வுக்காக சில தியாகங்கள் செய்துதான் ஆகவேண்டும்..

இப்படியான தியாகத்தினால்தான் நம் கலாச்சாரம் மேம்பட்டு சிறப்பாக உள்ளது..

குழந்தைகளின் முன்னேற்றம் குறித்தே தன் சுக துக்கங்களை மறைத்தவர்கள் பலருண்டு நம் நாட்டில்..முட்டாள்களா அவர்கள்.. இல்லை புத்திசாலிகள்..

மேல்நாட்டு கலாச்சாரம் என்றாலே மோசம் என நினைக்கிறோமே , அப்படியா?..

இல்லவே இல்லை.. நம் கலாச்சாரத்தில் உள்ள அழுக்குகள் ( வரதட்சணை , சாதி , மதம் , இனம் , நிறம் இத்யாதி ) அங்கில்லை.. அல்லது மிக குறைவாக..

அங்கேயும் திருமணங்கள் உண்டு..சட்டதிட்டங்கள் உண்டு.. சொல்லப்போனால் குழந்தைகளுக்காக மெனக்கிடுபவர்கள் அதிகம் அங்கே..

பொறுப்பற்ற குடிகார தகப்பன்களை இங்கே நாம் அதிகம் காணலாம்.. ஆனால் விவாகரத்தானாலும் , குழந்தைகளை அன்போடு கவனித்து அவர்கள் வாழ்க்கைக்கு உதவும் பெற்றோர் அனேகர் அங்கே..

பெண்ணடிமைத்தனத்திலிருந்து மெதுவாக எழுந்து வந்து கொண்டிருக்கும் சமூகம் நம்முடையது..

தன் தாய் ஒரு அடிமையான வாழ்வு வாழ்ந்ததை ஏமாற்றமாக நினைக்கும் , சொந்தக்காலில் நிற்கும் பெண்ணொருத்திக்கு இயல்பிலேயே திருமணம் /ஆண் என்ற வெறுப்பு இருப்பதில் ஆச்சர்யமொன்றுமில்லைதான்..அதே போல ஆணுக்கும் பலவிதமான அனுபவங்கள் இருக்கக்கூடும்..தன் சகோதரனை பணத்தால் அடிமைப்படுத்தி வைத்திருக்கும் பெண் என பலவாராக,...

அவர்களின் எதிர்மறை எண்ணத்தை மாற்றவேண்டியது இச்சமூகமும் அவர்களுக்கு கிடைக்கும் துணையும்..

ஏற்கனவே அடிபட்ட பாம்பாக இருக்கும் இவர்கள் சிறிது இடைவெளி கிடைத்தாலும் சுதந்திரமாக இருக்க எண்ணுவதில் தவறேதுமில்லை..

ஆனால் அதற்காக ஒட்டுமொத்த கலாச்சாரமுமே தோல்வி என முடிவு செய்யக்கூடாது.. அதுதான் தவறு..

கமலஹாசனையும் கெளதமியையும் பற்றி இழிவாக பேசுகின்றனர் சிலர்..

நாம் அவர்கள் நிலைமையில் இருந்து யோசித்தால் மட்டுமே அவர்களின் நியாயம் நமக்கு புலப்படும்..

இருவருமே முறைப்படி திருமணம் செய்தவர்கள்தான்.. அதில் அடிபட்டவர்கள்தான்..மேலும் பிரபலங்களின் வாழ்வு எல்லாராலும் ஈவு இறக்கமின்றி அலசப்படுபவை..நம் வீட்டில் நடந்தால் அதை பற்றி மூச்சு விடமாட்டோம்...

தற்போதைய முடிவும் அவர்களுக்கு சரியானதே.. அது அவர்கள் வாழ்க்கை..

எத்தனையோ விஷயத்துக்காக அவர்கள் இணைந்து வாழலாம் . காமம் மட்டுமே பிரதானம் என நாம் முடிவு செய்ய கூடாது..

அதேதான் லிவிங்-டுகேதரிலும் .. கூட சேர்ந்து வாழ்க்கை . காமம் மட்டும் என்றால் நிலைக்காது எதுவுமே..



இப்படி ஒருவர் இருவர் செய்வதால் ஒட்டு மொத்த கலாச்சாரமே சீரழிந்துவிட்டதாய் பரப்பரப்புறை செய்வதுதான் ஆரோக்கியமற்றது..

எனக்கு நம் இந்திய கலாச்சாரம்தான் பிடிக்கும்.. முன்பின் தெரியாத ஒருவரை மணப்பதும் அவர்களை மெல்ல மெல்ல அனுசரிப்பதும் , புரிந்துகொள்வதுமே ஒரு சுவாரஸ்யம்..ஆனால் ஒருவேளை என் பிள்ளைகள் லிவிங்-டுகெதர் என்ற முறையில் வாழ்வார்களேயானால் அதையும் ஏற்கும் மனப்பக்குவமும் உண்டு..ஏனெனில் அவர்கள் பிறந்து பார்த்து வாழ்வது முற்றிலும் வேறொரு கலாச்சாரம்.. அதையும் நாம் புரியணும்..

வீட்டுக்குள் மட்டும் இந்திய கலாச்சாரம்... படி தாண்டினால் வேறு பல நாட்டு கலாச்சாரம்..

இப்படி செய்தால் இது அனுகூலம், இது நஷ்டம் என சொல்லுவதும் , நம் கலாச்சாரத்தில் வெற்றிகரமாய் வாழ்பவர்களை காண்பிப்பதும் மட்டுமே என் பொறுப்பு..

தீ என்றால் சுடும் என சொல்வோம்.. மீறி சுட்டு காயப்பட்டு வந்தாலும் ஏற்போம்..

வெளிநாட்டிலும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று இல்லற வாழ்வில் இணைவதோ, குழந்தை பெற்றுக்கொள்வதோ கிடையாது..

காமம் ஒரு பெரிய விஷயமே இல்லை..20 வயதுக்குள் காமத்தை பற்றிய அனைத்து புரிதலும் இருக்கிறது அவர்களுக்கு.. நம் நாட்டில்தான் காமத்துக்காக கல்யாணம் செய்பவர் உண்டு.. அதனாலேயே காமம் முடிந்ததும் திருமணமும் புளித்து போகிறது சிலருக்கு..

ஆக வெளிநாட்டில் திருமணம் வரை வருகிறார் என்றால் எல்லா பொறுப்புகளையும் சுமக்க தயாராகிறார்கள் என்றே அர்த்தம்..

இதிலும் சில விதிவிலக்குகள் இல்லாமல் இல்லை..

எந்த ஒரு திருமணத்திலும் குழந்தைகளுக்கு முன்னுரிமை கொடுப்பதாயிருக்கணும்..அது மட்டுமே வெற்றி பெறும்..

அங்கேயே அனுசரிப்புகள் , தியாகங்கள் , பொறுமைகள் தொடங்கும்..

அப்படி முடியாதவர்கள் , தயவுசெய்து குழந்தைகள் பெற்றுக்கொள்ளவேண்டாம்தான்..

நாட்டின் சட்டமே லிவிங்-டுகெதரை அனுமதிக்கிறது என்றால் அதிலும் உண்மையில்லாமலில்லை..

ஏதோ 10 வயது குழந்தைக்கான சட்டம் அல்ல. இது.

வயது வந்த இரு பெரியவர்களுக்கே இந்த அனுமதி.. அதன் பொறுப்புகளை அவர்கள் உணர்ந்தே அதில் ஈடுபடணும்..

ஆக அதிகமா பயந்து வெறுத்து ஒதுக்குவதை விட அதிலுள்ள லாப நஷ்டங்களை அவர்களுக்கு எடுத்து சொல்லலாம்..

பொறுப்புகளை தட்டிக்கழித்து ஓடாமல் பொறுப்புகளை சுமக்க பழக்கலாம்..

லிவிங்-டுகதரில் சம உரிமை இருப்பதாக நம்பலாம்..

காலம் மாறும் போது கலாச்சாரமும் மாறும் என்ற உண்மையை ஏற்கத்தான் வேணும் நமக்கு பிடிக்காவிட்டாலும் கூட..

ஏனெனில் உலகமயமாகிக்கொண்டு வரும் இந்நாளில் சிலவற்றை நாம் இழப்பதும் ஏற்பதும் தவிர்க்க முடியாதது...

அதிலொன்றுதான் முதியோர் இல்லங்களும்..

இருப்பது ஒன்றோ இரண்டோ பிள்ளைகள்...வேகமாக ஓடும் வாழ்க்கையில் உறவுகளை அறிமுகப்படுத்தக்கூட மற( று)க்கிறோம்..

பிள்ளைகளை வெளிநாடு அனுப்பணும் என்ற ஆசையோடு நாமும் மூட்டை முடிச்சுகளோடு முதியோர் இல்லம் செல்ல தயாராகிக்கொள்ளணும்தான்..:)


ஆனால் காலங்காலமாய் தொடர்ந்து வரும் நம் கலாச்சாரத்தை இழிவாக மட்டுமே பேசுபவர்களுக்கு , பார்ப்பவர்களுக்கு கீழே உள்ள குறள் பதில்..



அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்.


கலைஞர் உரை:
மற்றவர்களை மதிக்காமலும், தன் வலிமையை உணர்ந்து கொள்ளாமலும், தன்னைத் தானே பெரிதாக விளம்பரப் படுத்திக் கொண்டிருப்பவர்கள் விரைவில் கெட்டுத் தொலைவார்கள்.


படம் : நன்றி கூகுள்..

14 comments:

ஜோதிஜி said...

தன்னைத் தானே பெரிதாக விளம்பரப் படுத்திக் கொண்டிருப்பவர்கள் விரைவில் கெட்டுத் தொலைவார்கள்.

ஆகா..........

தனி காட்டு ராஜா said...

//எனக்கு நம் இந்திய கலாச்சாரம்தான் பிடிக்கும்.. முன்பின் தெரியாத ஒருவரை மணப்பதும் அவர்களை மெல்ல மெல்ல அனுசரிப்பதும் , புரிந்துகொள்வதுமே ஒரு சுவாரஸ்யம்..ஆனால் ஒருவேளை என் பிள்ளைகள் லிவிங்-டுகெதர் என்ற முறையில் வாழ்வார்களேயானால் அதையும் ஏற்கும் மனப்பக்குவமும் உண்டு..ஏனெனில் அவர்கள் பிரந்து பார்த்து வாழ்வது முற்றிலும் வேறொரு கலாச்சாரம்.. அதையும் நாம் புரியணும்..//

நல்ல அலசல் ....பக்குவம் எழுத்திலும் ....புரிதலிலும் உள்ளது :-)

எண்ணங்கள் 13189034291840215795 said...

நன்றி ஜோதிஜி , தனிக்காட்டு ராஜா..

sivakumar said...

அருமையான பக்குவமான கருத்துக்கள்
//ஆனால் காலங்காலமாய் தொடர்ந்து வரும் நம் கலாச்சாரத்தை இழிவாக மட்டுமே பேசுபவர்களுக்கு , பார்ப்பவர்களுக்கு// காலங்காலமாகத் தொடர்ந்து வரும் கலாச்சாரத்தை மிகவும் புனிதமானது என்கிற ரீதியில் மிகைப்படுத்தி கூறும்போது, அதன் குறைகளை, அதன் மீதான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் வேண்டும். தேவையற்றவைகளை விமர்சிப்பது, குறைசொல்லுவது என்பது இழிவுபடுத்துவதிலிருந்து வேறுபடுகிறது. கலாச்சாரம் என்பது தமக்கு தேவையான இடத்தில் அனைவரும் (நேரடியாகவும் மறைமுகமாகவும்) மீறிக்கொள்கின்றனர். மற்றவர் அதிகமாக மீறும்போது அவர்கள் மீது விமர்சனம் அதிகமாகிறது. கலாச்சாரத்திலும் சரி, கலாச்சாரத்தை மீறுவதிலும் சரி அடுத்தவர் சுதந்திரத்தை, உணர்வை மதிப்பது முதன்மையானது என்பது எனது தாழ்மையான கருத்து.

எண்ணங்கள் 13189034291840215795 said...

நன்றி தமிழ் வினை..


// காலங்காலமாகத் தொடர்ந்து வரும் கலாச்சாரத்தை மிகவும் புனிதமானது என்கிற ரீதியில் மிகைப்படுத்தி கூறும்போது, அதன் குறைகளை, அதன் மீதான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் வேண்டும்.//

நிச்சயமாக..

//கலாச்சாரத்திலும் சரி, கலாச்சாரத்தை மீறுவதிலும் சரி அடுத்தவர் சுதந்திரத்தை, உணர்வை மதிப்பது முதன்மையானது //

மிக சரி..

அவரவர் எண்ணங்களுக்கு மதிப்பளிக்கணும் என்பதே என் கருத்தும்..

துளசி கோபால் said...

அருமையான பதிவு சாந்தி.

எங்கூர்லே ரெண்டு வருசம் லிவிங் டுகெதரா இருந்துட்டால்.....கணவன் மனைவிக்குள்ள எல்லா சட்டங்களும் உரிமைகளும் அவுங்களுக்கும் உண்டு.

இன்னும் சொல்லப்போனா...கணவன் மனைவி என்ற சொற்களே கூட அருகி வருது அங்கே. இப்பெல்லாம் பார்ட்னர்ஸ் ன்னே சொல்றாங்க.

அசம்பாவிதமா எதாவது நடந்து பிரிஞ்சுட்டாங்கன்னா....... இருக்கும் பணம் பொருள் எல்லாமே ஆளுக்கு 50% பங்கு. மனைவி இல்லை கணவன் சம்பாரிச்சதா மட்டுமே இருந்தாலும் கூட.

குழந்தை பெற்றுக்கொள்ள அவசரப்படுவதில்லை இங்கே!

அந்த லிவிங் டுகெதரும்கூட பல வருடங்கள் நட்பா, காதலர்களா பழகுனபிறகு எடுக்கும் முடிவுதான்.

அண்ணலும் நோக்கி அவளும் நோக்கினதும் தனிக் குடித்தனம் ஓடுவதில்லை.

ஒரே கூரையின்கீழ் ப்ளாட் எடுத்து வசிக்கும் நண்பர்கள் செக்ஸ் சம்பந்தமா ஏதும் வச்சுக்கமாட்டாங்க.
வெறும் நண்பர்கள்தான்.

இன்னும் நிறைய இருக்கு இதுபற்றிச் சொல்ல. பின் ஒரு நாளில் அலசலாம்.

எண்ணங்கள் 13189034291840215795 said...

வாங்க துளசிம்மா..

பாருங்க உங்களை மாதிரி நேரில் இதை பார்த்தவர்கள் பார்வைக்கும் கேள்விப்படுபவர்களின் பார்வைக்கும் எத்தனை வித்யாசம்..

என் கூட வேலை பார்த்த பெண்ணொருத்தி லிவிங் -டுகெதர் தான்.

நாய்கள் னா கொள்ளை பிரியம்.. குழந்தை பெற்றுக்கொள்ளலாமேனு கேட்டால் , இல்லை நானும் பாய் பிரண்டும் நாய்களே போதும் என தீர்மானிச்சிருக்கோம் னு சொல்லுவா..

அது அவள் விரும்பும் வாழ்க்கை னு தோணும்..


// ஒரே கூரையின்கீழ் ப்ளாட் எடுத்து வசிக்கும் நண்பர்கள் செக்ஸ் சம்பந்தமா ஏதும் வச்சுக்கமாட்டாங்க.
வெறும் நண்பர்கள்தான். //

அருமையா சொன்னீங்க.. இதுதான் நம் மக்களை கோபப்பட செய்யுது..

காமம்பிரதனமல்ல.அவர்களுக்கு..

எழுதுங்கம்மா நீங்களும்..நன்றிம்மா.

வருண் said...

***நாம் பிறந்த நாட்டில் ஒருவிதமான கலாச்சாரத்தில் வளர்க்கப்படுகிறோம். பின் சூழலால் வேறொரு இடத்துக்கு புலம்பெயரும்போது அங்குள்ள கலாச்சாராம் ***

என் ரிலேட்டிவ்ஸ் எல்லாருமே அமெரிக்கா வரவில்லை. அதனால் அவங்க நம்ம கலாச்சாரத்தில்தான் இருக்காங்க.

திடீர்னு நீங்க லிவ்-டுகெதெர் கல்ச்சருக்கு மாறுங்கனு நான் சொன்னால் அது என் முட்டாள்த்தனம்.

அதேபோல் எனக்குப்பிறக்கப்போகும் குழந்தைக்கு அரேஞிட் மேரேஜ் செய்ய என் ரிலேட்டிவ்ச் வலியுறுத்தினால் அதுவும் நகைக்கத்தக்கதுதான்.

இந்தப்பக்குவம் பொதுவா நாடுவிட்டு நாடுபோய் இன்னொரு கலாச்சாரத்தில் வாழ்பவர்களுக்குப் புரியும்.

ஆனா ஒரு சில இந்தியன் பார்ன் கன்ஃப்யூஸ்ட் டேசிகள்தான் என்னவோ நம்ம ஊர்ல இப்படி வாழனும் அப்படி வாழனும்னு நாலு நடிகர் நடிகைகள் வாழ்க்கையை மேற்கோள் காட்டி எதையாவது சொல்லிக்கிட்டு இருப்பாங்க.

"My way is high way" kind of attitude is only an immature attitude. Someone lives in India can have culture way off from one who immigrated in a foreign country and settles there. If I expect my old-fashioned mom to understand living-together culture, then it is my foolishness!

Being an educated means, you need understand the situation of others and the practicality. Not talking as if I am the know-it-all and others are all fools!

எண்ணங்கள் 13189034291840215795 said...

Being an educated means, you need understand the situation of others and the practicality. Not talking as if I am the know-it-all and others are all fools! //

மிக அழகா சொன்னீங்க வருண்.

சென்னை விமான நிலையம் வந்திறங்கும் வரை மேற்கத்திய கலாச்சாரம் எனக்கு..

ஏனெனில் என் தேவை அது..

ஆனால் என் சொந்த ஊருக்கு சென்றதும் அவர்களுக்கு பிடித்தமான , அவர்கள் மரியாதையை காப்பாற்றக்கூடிய உடையும் பழக்கவழக்கமும் மட்டுமே இன்னும் எனக்கும் குழந்தைகளுக்கும்..

இது நடிப்பு அல்ல. மற்றவர்களுக்கு நாம் செலுத்தும் மரியாதை.

இன்னும் எங்க வீட்டு பெரியவர்கள் முன்னால் சமமாக உட்கார்ந்து பேச மாட்டோம்.. அது எம் ஊர் கலாச்சாரம்...

சில விஷயங்களை விட்டு கொடுப்பதில் தப்பேயில்லை.. அது அவரவர் விருப்பமும்.

ஆனந்தி.. said...

ம்ம்...லிவிங் டுகெதர் பத்தி..கலாச்சாரம் பத்தி அலசிருக்கிங்க..நான் மதுரைக்காரி..வெளிநாடு பத்தி எல்லாம் தெரியாது மேடம்..ஆனால் கணவன் மனைவி என்ற ஒரு பந்தம் சமுதாயத்தால் அங்கீகரிக்கப்படும்போது ஓர் காம்ப்ரமைஸ் இயல்பாவே வந்துடுது ரெண்டுபேருக்கும்...கலாச்சாரம்,பண்பாடு கட்டாயம் நம் குழந்தைகள் பெற்றோரை பார்த்தும் வளரும் சூழல் என்னவோ நம்ம நாட்டு கலாச்சாரம் அமைச்சு கொடுக்குது இல்லையாங்க..உனக்கு ஒரு ரசனை..எனக்கு ஒரு ரசனை..என் இஷ்டம் இது..உன் இஷ்டம் இது..நமக்குள்ளே ஒத்துவராட்டி பிரிஞ்சுடலாம் அப்டிங்கிற வாழ்க்கை யில் என்ன சுவாரஸ்யம் இருந்திடும் னு யோசிக்கிறேன்...காதல் அப்டிங்கற விஷயமே அதிகமாவது, விட்டு கொடுத்தல் பரஸ்பரம் அப்டிங்கிற நாடி ஜீவனில் தானே...லிவிங் டுகெதர் இல் ஒரு நிச்சயமில்லா தன்மை தான் இருக்கும் இல்லையா..ஒரு காதலர்கள் கூட என்னைக்கு கல்யாணம் ஆகுதோ அப்போ இன்னும் கூடுதல் உரிமை,ஈர்ப்பு,லயிப்பு,எனக்கு மட்டுமே நீ அப்படிங்கிற ஒரு சுகானுபவம் வெறும் லிவிங் டு கெதர் இல் கிடைக்குமான்னு எனக்கு தெரில...முற்போக்கு எண்ணங்கள் எல்லாவற்றையும் மீறி மேற்கத்தி காரங்களை விட இன்னும் நம்ம மேலே அவங்களுக்கு ஒரு டிவைன் இருக்குனால் இந்த லிவிங் டு கெதர் இல்லாமல் சமூதாயம் அங்கீகரிக்கும் அழகான திருமண முறை தான் இல்லையா...எனக்கு தெரில..உங்க அளவுக்கு என்னாலே யோசிக்க முடில மேடம்..நான் ஜஸ்ட் வளர்ந்த கிராமத்து பொண்ணாய் மட்டுமே இந்த பின்னூட்டம் இடுகிறேன்...தவறு இருந்தால் மன்னிச்சுக்கோங்க...அன்புடன்..ஆனந்தி from மதுரை..

ஆனந்தி.. said...

ஒரு காதலர்கள் கூட என்னைக்கு கல்யாணம் ஆகுதோ அப்போ இன்னும் கூடுதல் உரிமை,ஈர்ப்பு,லயிப்பு,எனக்கு மட்டுமே நீ அப்படிங்கிற ஒரு சுகானுபவம் வெறும் லிவிங் டு கெதர் இல் கிடைக்குமான்னு எனக்கு தெரில...முற்போக்கு எண்ணங்கள் எல்லாவற்றையும் மீறி மேற்கத்தி காரங்களை விட இன்னும் நம்ம மேலே அவங்களுக்கு ஒரு டிவைன் இருக்குனால் இந்த லிவிங் டு கெதர் இல்லாமல் சமூதாயம் அங்கீகரிக்கும் அழகான திருமண முறை தான் இல்லையா...எனக்கு தெரில..உங்க அளவுக்கு என்னாலே யோசிக்க முடில மேடம்..நான் ஜஸ்ட் வளர்ந்த கிராமத்து பொண்ணாய் மட்டுமே இந்த பின்னூட்டம் இடுகிறேன்...தவறு இருந்தால் மன்னிச்சுக்கோங்க...அன்புடன்..ஆனந்தி from மதுரை..

எண்ணங்கள் 13189034291840215795 said...

மதுரை மல்லி மணம் போல வந்த ம்துரைக்கார ஆனந்தி அவர்களே ,

நன்றி..

உங்க புரிதல் , ஆதங்கத்தை அழகா சொல்லியிருக்கீங்கம்மா..

எல்லோருக்கும் உள்ள பயம் நம் கலாச்சாரம் வாழ்க்கை முறை பற்றியும் அது கெட்டுவிடுமோ என்ற அச்சமும்..

சரியேதான்..

திருமணம் முக்கியம் என்பதை மேல்நாட்டினரும் அறிந்தே வைத்துள்ளனர்.. இன்னும் சொல்ல போனால் தம்பதி இருவருமே திருமண விழாவுக்காக மெனக்கிடுவது அங்கே அதிகம்..

இன்னும் விலாவாரியா லிவிங்-டுகெதர் பர்றொ பேசுவோம்.. பாதக , சாதக விஷய்ங்களை..

Thekkikattan|தெகா said...

ஆனால் ஒருவேளை என் பிள்ளைகள் லிவிங்-டுகெதர் என்ற முறையில் வாழ்வார்களேயானால் அதையும் ஏற்கும் மனப்பக்குவமும் உண்டு..ஏனெனில் அவர்கள் பிரந்து பார்த்து வாழ்வது முற்றிலும் வேறொரு கலாச்சாரம்.. அதையும் நாம் புரியணும்..//

இந்த புரிதல் இருந்திட்டா போதுமுங்க. அப்படியே நமக்கு நடந்திட்டாலும் தாங்கிக்கிற சக்தியை மன அளவில பயிற்சி பண்ணி வைச்சிக்கிறது என்னிக்குமே நல்லது. இல்லன்னா, சும்மா காச்சோ, மோச்சோன்னு கன்றாவி வார்த்தையெல்லாம் போட்டு தன்னையே விமர்சிச்சிக்கிற மாதிரிதான் ஆகிப்போவுது. பக்குவம் வேணுமில்லையா?

அதுக்குத்தான் இன்னிக்கி what if... அப்படின்னு வைச்சு ஒரு பதிவு போட்டேன். தாங்கிப் போற பக்குவத்தைப் பத்திதான் அந்தப் பதிவு.

எண்ணங்கள் 13189034291840215795 said...

வாங்க Thekkikattan சார்..


படிக்கிறேன் சார் ..

உங்க கருத்துகள் நல்லாருக்கு...

நானும் இணைந்து வாழ்தல் பற்றி மிக தெளிவான புரிதலோடு எடுத்து சொல்லலாம் என இருக்கேன்.. நேரம் இருக்கும்போது..

நம்ம மக்கள் கெடுதல் நடந்திடுமோ என்ற அச்சத்தினால்தான் பொங்கினார்கள்..

அன்பா எடுத்து சொன்னா புரிஞ்சுப்பாங்க...:)