Thursday, October 7, 2010
திட்டோ திட்டு..சிறுகதை...
காலங்காத்தால எழுந்ததும் சுப்ரபாதம் கேட்குதோ இல்லியோ , நடராஜன் சார்வாள் வீட்டிலேருந்து காட்டு கத்தல் கேட்கும்.
வேற ஒண்ணுமில்ல மூத்த பிள்ளையாண்டான் பகத்சிங் மேல அம்புட்டு பாசம்.
அதிலேயும் தினமும் மறக்காம சொல்வது " உனக்கு போய் பகத்சிங் பேர வேச்சேனடா.."
இவன் கேட்டானா அந்த பேரை வைக்க சொல்லி... இல்ல பகத்சிங் மாதிரி வீரத்தை காண்பிக்க சுதந்திர போராட்டம் தான் இருக்கா என்ன?..
இப்படி மனசுக்குள்ளேயே கேள்வியும் கேட்டுக்கொண்டு சிரித்து வைப்பான்..
சில நேரம் அடக்க முடியாமல் சிரிப்பு வந்தால் வாந்தி எடுப்பது போல் பாவனை செய்துகொண்டு பின் கட்டில் போய் விழுந்து விழுந்து சிரித்து வைப்பான்..
கூடவே அம்மாவும் , தம்பி , தங்கையும் வந்திடுவதுமுண்டு..
அப்பத்தான் கொஞ்சம் எரிச்சலாயிருக்கும் அவனுக்கு.. சத்தமா சிரிக்காதீங்கன்னு நிஜமாவே கோபப்படுவான்..அவர்களிடம்..
என்னடா இவனை புரிஞ்சுக்கவே முடியலை னு அலுத்துகொண்டு செல்வார்கள்..
வழக்கம் போல இன்னிக்கும் ஆரம்பிச்சார் அப்பா..
" டேய் எலக்ட்ரிக் பில் கட்ட சொன்னேனே .. இன்னும் கட்டலியா.?.. நீயெல்லாம் எதுக்குத்தாண்டா இருக்க.. தண்டமா..?"
சத்தம் கேட்டதுமே , முதல் அலாரமாய் போர்வையை விலக்கி மணி பார்த்தான்.. சரிதான் 6.45.. அப்பா மார்க்கெட் க்கு போய்ட்டு வந்துட்டார்..போல..
15 நிமிடம் கழித்து..
" அடேய் , அறிவு இருக்கா உனக்கு.. இன்னிக்கு நேர்காணல் இருக்கே . மறந்துட்டியா?.. "
அட 7 மணி ஆயிடுச்சா.?..என எழுந்து உட்கார்ந்தான் சோம்பல் முறித்துக்கொண்டு...
அடுத்த 15 நிமிடத்தில்....
" ஏண்டா கணினி மேசையில் என்னத்த தான் வெக்கிறதுன்னு ஒரு விவஸ்தையே இல்லையா?.."
வெச்சது சின்னவன்.. ஆனா திட்டுவது இவனைத்தான்..
" 7.15 ஆயிடுச்சா..." பல் துலக்க போனான் பகத்சிங்.
" ஏங்க நீங்க கிளம்புங்க . நேரமாச்சு... " அம்மா..
" பெரியவன திட்டினா உனக்கு பொறுக்காதே.. சின்னவன பாரு அவன் வேலைய ஒழுங்கா செய்யுறான்.."
படிக்கும்வரை பெரியவனுக்கும் அளவாதான் இருந்தது திட்டு, இப்ப 3 மாசமா வேலை இல்லாமல் இருப்பதால் திட்டும் கோட்டா கூடிவிட்டது.
சின்னவன் அப்பாவின் முகத்தை நேரா பார்த்தான் ஒருமுறை.. அதாவது "என்னை ஒண்ணும் சொல்ல தேவை இல்லை " என்பது போல..
பெரியவனை திட்டுவது போல சின்னவனை திட்ட முடியாது என்று அப்பாவுக்கு தெரியும்...
அதனால் அடக்கி வாசிப்பார்...சின்னவனிடம்...
"ஏண்டா அந்த பைக் துடைத்து வைக்க சொன்னேனே .. ஒரு அப்பாவுக்கு இந்த உதவி கூட செய்ய கூடாதாடா.?.
உங்களுக்காக மாடா உழைக்கிறேனே...%#%^$%&*^%*(^^...... " ஆரம்பித்துவிட்டார். முழு கச்சேரியை...
ஆஹா 7.45 ஆயிடுச்சா... இனி குளிக்க போயிடணும்... னு நினைத்து கதவை பூட்டிக்கொண்டு உள்ளே சென்று பாட ஆரம்பித்தான்..
" நான் இவ்வளவு கத்துறேன்.. அவன் காதுல போட்டுக்காம பாட்டு பாடுறான் பாரு..."
" ஏங்க அந்த புள்ள பதில் பேசினா , எதிர்த்து பேசுறான் னு திட்டுவீங்க.. பேசாட்டியும் திட்டுறீங்க.. என்னமோ போங்க.." அம்மா..
" ஏண்டி எனக்கென்ன ஆசையா.. திட்டிகிட்டே இருக்கணும்னு..அவனுங்க நல்லதுக்குத்தானே சொல்றேன்..எனக்கெதிராவே வளர்த்து வை...
சரி சரி..சாப்பாடை எடுத்து வை..."
குளித்து முடித்து சாமி கும்பிட்டுவிட்டு நெற்றியில் விபூதி இட்டு வந்தான் பகத்சிங்...
" இந்த பக்திக்கொண்ணும் குறைச்சலில்லை..." சொல்லிட்டே மூக்கில் சிந்தியிருந்த விபூதியை துடைத்தும் விட்டார்.. முகத்தை மறக்காமல் உர்ர்ர் என வைத்துக்கொண்டே..
" டேய் நேர்காணல் நடக்கும் இடத்துக்கு எப்படி போக போற.?."
" பஸ் ல தான் பா."
" ஏன் என்னை கூட்டிட்டு போனா மதிக்க மாட்டாங்களோ.?"
வாந்தி வருவது போல கையை வாயில் வைத்து அடக்கிக்கொண்டான்... வேறு பக்கம் திரும்பி.. தோசை போட வந்த அம்மாவோ தோசை போடாமல்
உள்ளே போய்விட்டார்..சிரித்துக்கொண்டே..
" கெளம்பு டா. சீக்கிரம் . போற வழியில இறக்கி விடுறேன்."
" இல்லப்பா நான் பஸ் ல..." முடிக்குமுன் ,
" ஏய் வெளங்காதவனே.. நேர்காணல் னா சொன்ன நேரத்துக்கு 30 நிமிஷத்துக்கு முன்னால அங்க இருக்கணும் தெரியுதா?.. என்கூட வர
இஷ்டமில்லன்னா ஆட்டோல யாவது போய் தொலை அப்ப..இந்தா 200 ரூபாய்..."
' 100 ரூபாய் போதும் பா..."
" திரும்பி வர உங்க தாத்தாவா தருவார்..கடனா வெச்சுக்கடா.. சம்பாதிச்சதும் வாங்கிக்கிறேன்..என்னமோ நான் கஞ்சன் மாதிரி ஊரெல்லாம் நினைக்க வெப்பீங்களே...."
சின்னவன் முறைத்தான்.. இப்ப அண்ணனையும் , அம்மாவையும் சேர்த்து...அண்ணனை திட்டிய கோபத்தில் சின்னவன் சாப்பிடாமலேயே போனான்..
----------------------------------------------------
நேர்காணல் முடிந்து சோகமா வீடு வந்தான் ..
" சரி விடுப்பா ..அவங்களுக்கு கொடுத்து வைக்கல உன்னை வேலையில் சேர்க்க.." அம்மா.
" இல்லம்மா வேலை கிடைச்சுடுச்சு..சென்னைக்கு போகணும் "
அம்மாவுக்கு முகமெல்லாம் மலர்ச்சி... " நெசமாவாப்பா..?" அம்மா
" அப்புரம் ஏன் அண்ணா , வருத்தம்.. ஜாலியா கொண்டாடிடுவோம்..." சின்னவன் கணினி விட்டு எழுந்து வந்தான்...
" இல்லடா உன்கிட்ட கொஞ்சம் பேசணும்...அப்பா பத்தி"
" என்னண்ணா.இனி அவர் தொல்லை உனக்கு இருக்காது ..திட்டமாட்டார்.. தப்பிச்சுட்ட.எஞ்சாய்..."
" இல்லடா... அதான் என் கவலை.. நம்ம அப்பா ரொம்ப நேர்மையானவர் டா. அதிக பாசக்காரரும்.. சின்ன வயதிலேயே தன்னோட அம்மாவை இழந்து
அப்பாவோட கண்டிப்பிலே வளர்ந்து அத்தைமார் இருவரையும் கரை சேர்த்த அயர்ச்சி அவருக்கு... ரொம்ப கஷ்டப்பட்டுட்டார்டா..வாழ்க்கையில்...
இப்ப இவர் பதவியிலும் நேர்மையா இருப்பதால் பல தொந்தரவுகள்.. அந்த எரிச்சலையெல்லாம் தான் கோபம் போல என்னிடம் கொட்டி தீர்ப்பார்..
சர்க்கரை வியாதி வேறு அப்பாவுக்கு..அதனால் அவர் என்னை திட்டும் ஒவ்வொரு முறையும் எனக்கு அவர் மேல் பரிதாபமாய்தான் இருக்கும்..
இனி அவர் என்னை திட்ட முடியாதே.. தயவுசெய்து எனக்கு பதிலா அந்த திட்டுகளை நீ வாங்கிக்குவியா டா தம்பி.?.. அதுமட்டும் இல்லடா, அப்பா கிட்ட
திட்டு வாங்கி வாங்கி யார் திட்டினாலும் சிரித்துக்கொண்டு சகிச்சு போகும் பழக்கம் வந்தது.. அதனாலேயே எனக்கு நிறைய நட்புகளும்..தெரியுமா டா..".
சிரித்துக்கொண்டே சொன்னான்...
கேட்டுக்கொண்டிருந்த அம்மா, தம்பி, தங்கை மூவர் கண்ணிலும் கண்ணீர்...
பேச வார்த்தையின்றி மெளனமாயினர்.. சின்னவன் மட்டும் அண்ணா கை பிடித்து சம்மதம் சொல்லிவிட்டு
" அண்ணா நீ உண்மையிலேயே வித்யாசமான வீரன் பகத்சிங் தான் ணா.பொறுத்து போவதும் ஏற்றுக்கொள்வதும் வீரம்தான் ன்னு நிரூபிச்சுட்ட..."
சொல்லிவிட்டு அழுகையை மறைக்க உள்ளே சென்றான்..
வீடு அமைதியானது...
உள்ளே நுழைந்தார் அப்பா..
" என்ன எழவு வீடு மாதிரி இருக்கு... இன்னிக்கும் உன் மகன் பல்பு வாங்கிட்டானா ..?" கிண்டலோடு வண்டியை நிப்பாட்டினார்...
அம்மா, தம்பி, தங்கையிடம் " ஏதும் சொல்லாதீங்க " என கண் காட்டிவிட்டு , கடைசி முறையாக அப்பாவிடம் ஆசையாக திட்டு வாங்க தயாரானான் பகத்சிங்..
படம் : நன்றி கூகுள்
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
செம டச்சிங் கதை...
முடிவு நல்லாயிருக்கு...:)
யதார்த்தமாக இருந்தது
தொடரவும் வாழ்த்துக்கள்
சூப்பர் :-)
நல்லாயிருக்கு சகோதரம் வாழ்த்துக்கள்....
நன்றி பாலாஜி சரவணா , பாலாஜி சங்கர் , உழவன் & சுதா .
மனதைப் பாதித்த முடிவு. நன்றாயிருக்கிறது. வாழ்த்துக்கள்
Post a Comment