ஒரு வார காலமாக சுறுசுறுப்பு ஏதுமில்லாததை கவனித்திருந்தான் ஹமீது..
கேட்கணும்னு நினைத்தாலும் தன்னை விட வயதிலும் பதவியிலும் பெரியவராய் இருப்பதால்
வாய் வரை வந்ததை தள்ளிப்போட்டே வந்தான்..ஆனால் இப்ப கேட்டே விடுவது என கேட்டான்.
" கதிரண்ணா , நானும் பாக்குறேன் ஒரு வார காலமா ஊருக்கு போற உசாரில்லாம இருக்கிறீகளே.. ஏன் ணா?.."
" அதொண்ணுமில்லப்பா.. சம்பாதிப்பது மட்டுமே நம்ம பொழப்புன்னு ஆயி போச்சு..கடைசி வரை இதான் போல.."
வெறுமையோடு சொன்னார்..
" அதுக்கேண்ணா வருந்தணும்.. நம்ம குடும்பம் நல்லா இருப்பது பெருமைதானே நமக்கு.. அதுக்கு சின்ன தியாகம்னு நெனச்சுக்கோங்க.."
" அப்படித்தான் நெனச்சு 15 வருசம் ஓட்டிட்டேன்.. ஆனா ஒவ்வோரு முறையும் ஊருக்கு போய்விட்டு வரும்போது அங்க நடக்கிற ஆடம்பரமும், அவங்க எதிர்பார்ப்பும்
எனக்கு கவலை அளிக்குது.. பணம் என்பது தேவைக்குத்தான் என்ற நிலை மாறி, விட்டா நாய்க்குட்டிக்கு தங்க பிஸ்கட் போட்டாலும் போடுவாங்க போல..இதைவிட சுற்றியிருக்கும் பொய் சொந்தங்களும்..ம்..ம். என்ன சொல்ல..."
"சரி ணா , அப்ப நான் சொல்றத கேளுங்க.."
கலங்கலாய் தெரிந்த மேகத்தை வருத்தமாய் பார்த்து விமானத்தின் ஜன்னலை மூடினார் தூங்கிட..
மறுநாள் காலை வேலை தேடுவதாக சொல்லிவிட்டு 2 நாள் கழித்தே திரும்பி வந்தார்..
வந்ததும் இனியும் தன் விடுமுறை 2 வாரமே இருப்பதால் குடும்பத்தினரை வருத்திடக்கூடது என எண்ணியவராய், மனைவி பிள்ளைகளை அழைத்தார்.
வருமானம் தரக்கூடிய 2 தோட்டங்களையும் , அதனோடு அமைந்த வீட்டையும் விலை பேசியிருப்பதை காண்பித்தார்..
" இப்ப எதுக்கு இது " என அவசரப்பட்டு பேச முனைந்த மனைவியை செய்கையால் அமர்த்தினார்.
அருகிலுள்ள ஊனமுற்றோர் மற்றும் முதியோர் இல்லத்துக்கு மாதாமாதம் தான் பணம் அனுப்புவதாய் வாக்களித்த பத்திரத்தையும் காண்பித்தார்.
இவருக்கென்ன பித்து பிடித்ததா என எரிச்சலோடு உள்ளே செல்ல எண்ணிய மனைவி கையை பிடித்து அமர வைத்தார்..
மெதுவாக விளக்க ஆரம்பித்தார்..
ஒவ்வொரு முறையும் பணத்தோடு பொருளோடு வரும் தமக்கு கிடைத்த போலி மரியாதையையும், தன் இல்லத்தில் நிரம்பி வழிந்த
போலியானவர்களையும் அவர்கள் நடவடிக்கையையும் , தற்போது வேலையின்றி வந்ததால் ஏற்பட்டுள்ள மாற்றத்தையும் ஒப்பிட்டார்..
பிள்ளைகளுக்கு பொறுப்பை பற்றி நிதர்சனமாய் எடுத்துச்சொன்னார்..
மனைவியின் ஆடம்பரம் தேவையற்றதாகவும் , தற்போது ரசிக்கவோ , மதிக்கவோ ஆளில்லாமல் போனதையும் சுட்டிக்காட்டினார்..
நிஜமான மகிழ்ச்சியை ஊனமுற்றோர் , முதியோர் இல்லம் சென்று எப்படியெல்லாம் பெருக்கிக்கொள்ளலாம் என மென்மையாக சொன்னார்.. அதில் நம் எல்லோருக்கும் கடமை இருப்பதையும் எடுத்துரைத்தார்..
பொட்டில் அடித்தாற்போல் இருந்தது குடும்பத்தினருக்கு..
தான் மீண்டும் அதே வேலைக்கு வெளீநாட்டுக்கு செல்வதாக கூறினார்..
தாம் ஏமாற்றப்பட்டதை அறிந்தாலும் எல்லாம் நன்மைக்கே என்பதை கொஞ்சம் கோபத்தை காட்டிவிட்டு புரிந்துகொண்டாள் மனைவி..
அந்த நாளும் வந்தது... மனைவி கலங்கிய கண்களோடு ,
" பணம் மட்டுமே இருந்தா போதும்னு நினைத்திருந்தேன்.. இப்பத்தான் நிஜமான வாழ்வுக்கான அர்த்ததை சொல்லித்தந்தீர்களே, இன்னும் பணம்
சம்பாதிக்க நீங்க போய்த்தான் ஆகணுமா..? நம்மிடம் இருப்பதை வைத்து எளிமையாகவே நான் இல்லறம் நடத்துவேனே இனி.. தயவு செய்து போகவேண்டாமே"
என கெஞ்சினாள்..
வாழ்நாளில் முதன்முறையாக மனைவியிடமிருந்து இப்படி ஓர் வார்த்தையைக்கேட்டு மனமகிழ்ந்தார் கதிரேசன்..
தன் பொறுப்புகளை மற்றொருவரிடம் கொடுத்துவிட்டு முறைப்படி வேலையிலிருந்து விடைபெற்றுக்கொண்டு வருவதாக சொல்லி விடை பெற்றார் .
சிறுவனாயிருந்தாலும் ஹமீது சொன்ன யோசனை , வலிகள் பல தந்தாலும் எத்தனை தெளிவை தந்துள்ளது என எண்ணியவாறே
நிறைந்த மனதோடு விமானத்தின் ஜன்னலில் கடக்கும் மேகங்களை குழந்தையின் மகிழ்வோடு ரசிக்க ஆரம்பித்தார் முதன்முறையாக....
Simple, Kind, Hardworking ,Artistic, Courageous, Willing to take challenges , Sports person,like to be with kids , Agnostic ?, human activist??, feminist? , I dont know..:)