Wednesday, September 16, 2009

செல்லக்குழந்தைகளும் சிறப்பான வளர்ப்பும்....பாகம் 2

பாகம் - 2
--------------


அடுத்து நாம் சொல்ல வேண்டிய பழக்கவழக்கத்தை கதை மூலம் எப்படி சொல்லலாம் என பார்ப்போம்..

குழந்தைகளுக்கு பிடித்தமான ஒன்று கதைகள்.. இதில்தான் பல சூட்சமம் அடங்கியிருக்குது என்பது பல பெற்றோருக்கு

தெரியவில்லை...அப்பா தொலைக்காட்சியிலும், அண்ணா , அக்கா வீட்டுப்பாடத்திலும், அன்னை சமையல் அறையிலும் இருக்கும்போது

குழந்தைக்கு என்ன செய்வதென்றே தெரியாது.. ஒருவேளை விளையாட்டு சாமானோடு விளையாடலாம்... ஆனால் அதுக்கும் துணை தேவைப்படும்.

அப்போது குடும்பத்தினர் யாரையாவது வம்பிழுக்கும் அவருக்குண்டான வேலையை செய்ய விடாமல்..அண்ணா அக்காவோடு சண்டை பிடிக்கும்..படிக்க விடாமல்..

இத்தகைய நேரத்தில்தான் குழந்தைக்கான லஞ்சமாக பயன்படுகிறது கதைகள்...

குழந்தையிடம், பக்குவமாக சொல்லணும், " நீ இந்த க்ரையான்ஸ் அல்லது கலர் பென்சில் வைத்து இந்த தாள் முழுவதும் படம் வரைவாயாம்...

நாமெல்லோரும் வேலை முடித்ததும் படுக்க செல்லும்போது உனக்கான அழகான கதை ஒன்று தயாராகிக்கொண்டு இருக்குது என் மூளையில்.." என குழந்தையின் கண்களைப்பார்த்து மிக உற்சாகமாக சொல்லிடணும்..

அப்போதே ஆர்வத்தை தூண்டி விட்டு திசை திருப்பிடலாம்.. விலங்குகள் பிடிக்காத குழந்தைகளே இருக்க மாட்டார்கள்..

அதற்கேற்றவாறு . " இன்று என்ன கதை தெரியுமா..? யாரைப்பற்றி தெரியுமா?.. பூனைக்குட்டி பள்ளிக்கூடம் சென்ற கதை " என்றோ ,

" எலியார் நீச்சல் படித்த கதை " என்றோ குழந்தையின் செயலோடு ஒப்பிட்டோ கதை சொல்வதாய் ஆர்வத்தை தூண்டிவிடலாம்..

குழந்தையின் கவனம் முழுதும் இப்போதே கேட்கப்போகின்ற கதையில்.. இப்போதே அவர் எலியாரைப்பற்றியோ பூனையாரைப்பற்றியோ கற்பனை

செய்ய ஆரம்பித்திருப்பார்... நீங்கள் சமையலறையில் இருக்கும்போதே இடையில் வந்து சொல்வார், " அம்மா , அந்த எலிக்கு நான் ஒரு பேர் வைத்துள்ளேனாக்கும்"

என்று.. அது சம்பந்தமான படங்களை கூட நீங்கள் தாளில் வரைந்துகொடுத்து கலர் செய்ய சொல்லலாம்...

வேலையெல்லாம் முடிந்து படுக்க செல்லும் நேரம் சொன்னது போல் குழந்தையின் கதை சொல்லும் நேரம்..பொன்னான பொழுது..

நீங்கள் சொல்லப்போகும் கதையிலேயே உங்கள் குழந்தைக்கான அத்தனை நல்ல பழக்க வழக்கங்களையும் , அவர்களுக்கு

பிடித்தமான விலங்குகளின் பாத்திரப்படைப்பில் ஏற்றி, சுவையாக்கி பறிமாறிடணும்...

கதையில் உங்கள் குழந்தை பேசும் அனைத்தையுமே பூனை, எலிகள் பேசும்..

குழந்தைகள் செய்யும் சேட்டை குழப்படி அனஇத்தும் விலங்குகள் செய்திடும்..

அதை கேட்டு குழந்தைகள் வெட்கச்சிரிப்பு ஒன்றை பரிசளிப்பார்கள்...

இடையிடையே கேள்வி கேட்டு அவர்களின் கற்பனை , ஆர்வம் எந்தளவு இருக்கிறது என பார்த்துக்கொள்ளலாம்..

அதுவே நீங்கள் கதையை யோசிப்பதற்கான இடைவேளையாகவும் எடுத்துக்கொள்ளலாம்..

விலங்குகள் செய்யும் சின்ன தவறுகள், சேட்டைகள், அதன் பாதிப்புகள், அதற்கான சின்ன தண்டனைகள் , அவைகள்

மீண்டும் நல்ல வழிக்கு மாறுதல் என்று கதையிலேயே வாழ்க்கைக்குண்டான அனைத்தையும் சொல்லிடலாம்...

முக்கியமாக பாவனைகள் , கை, விரல்கள் கொண்டும் முக மாற்றத்தோடும் விளக்கிடணும்..

குழந்தையின் கைகளை பிடித்துக்கொண்டே " எலி இப்படி நடந்து சென்றது" என கைகளில் நம் விரல்களைக்கொண்டு நடக்க செய்யலாம்..

அடக்க மாட்டாமல் சிரிப்பார்கள்...:)

அது அப்படியே குழந்தை மனதில் பதியும்..

குழந்தையே இடையிடையே கமெண்ட அடிக்கும்... அய்யோ பூனை ரொம்ப சேட்டைதான்.. அதானால்தான் அது கீழே விழுந்தது கை ஒடிந்தது..மருத்துவரிடம் சென்றது

என்றோ, எலியார், யாருக்கும் கொடுக்காமல் தான் மட்டுமே வைத்துக்கொண்டதால் அதற்கு யாரும் உதவவில்லை என்றும் குழந்தையே

நல்லது கெட்டதை பிரித்து பார்க்கும்...

மேலும் தூங்கும் பொழுது இனிமையாக பெற்றோரின் அரவணைப்பில் கற்பனையோடு தூங்கும்...

இதனை குடும்பத்தினர் யாரும் செய்யலாம்.. பாசப்பிணைப்பு அதிகமாகும்...கட்டுப்பாட்டுக்கு
ள் வரும் குழந்தை...

மாதத்தில் ஒரு நாள் நாம் சொன்ன கதையை அண்ணா அக்காவுக்கு குழந்தையை தன் மொழியில் சொல்ல சொல்லணும்..

அதை கேட்பது இன்னும் இனிமை...அந்த குழந்தையின் முக பாவனைகள் பார்ப்பதே ஒரு அழகு...

நம் குழந்தைக்கு மட்டுமல்ல அக்கம் பக்கம் உள்ள குழந்தைக்கும் நீங்கள் கதை சொல்வீர்களானால் நீங்கள் தான் ஹீரோ, ஹீரோயின்..

நீங்கள் சொல்வதையெல்லாம் கேட்பார்கள் குழந்தைகள்...

கதை சொல்வதை சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைக்கும் சொல்லலாம்.. அந்த நேரம் தட்டில் உள்ள காய்கறிகளையே கதாநாயகனாக்கிடலாம்..

அது இன்னும் சுவாரஸ்யாமகும்...அதே நேரம் காய்கறி சாப்பிடுவதால் குழந்தைக்கு என்ன பலம் கிடைக்கும் என்பதையும் விளக்கி , பலசாலி ஆகிவிட்டதாய் பிரம்மிக்க வைக்கலாம்..

சாப்பிடுமுன் எளிதாக தூக்கிய குழந்தையை சாப்பிட்ட பின் "தூக்கவே முடியலையே . நீ எவ்வளவு பலசாலி " என சொல்லி ஆச்சர்யப்பட வைக்கணும்..

சாப்ப்பிட்டு முடித்ததும் தட்டில் உள்ள கழிவுகளை குப்பை கூடையில் கொட்டவும் தண்ணீர் ஊற்றி அலம்பவும் கற்று தரலாம்..( அது அவ்வலு சிறப்பாக செய்யாவிட்டாலும் பரவாயில்லை.)

அவ்வேலையை செய்ததும் குழந்தையை குடும்பத்தார் முன்பு மெச்சி உச்சி முகர்ந்து பாராட்டிடணும்...குழந்தையும் குடும்பத்தில் ஒரு முக்கியமான

பெரிய மனிதர் என காண்பிப்பது தன்னம்பிக்கையை வளர்க்கும் ...

அடுத்து வீட்டிலேயெ சின்ன சின்ன வேலைகள், பொறுப்புகள் எப்படி கொடுக்கலாம் , விருந்தினர் வந்தால் எவ்வாறு நடக்கணும் என்பதை கவனிப்போம்..

1 comment:

Several tips said...

நன்றாக இருக்கிறது