Saturday, May 14, 2011

விடைகொடுத்தனுப்பியது விரும்பியபடி மீண்டு(ம்) வரவே.:




அன்புள்ள கலைஞருக்கு , தமிழக மக்கள் அன்போடு எழுதுவது ,

வணக்கம்..

பல நல்ல திட்டங்களை தமிழக மக்களுக்கு வழங்கினீர்கள்.. மறுப்பில்லை.. பணக்காரனுக்கு கிடைத்தாலுமே ஏழைக்கு கண்டிப்பாக கிடைக்கணும் என இலவச திட்டம் பல கொண்டுவந்தீர்கள் .. மறுப்பில்லை..108 நோய் சிகிச்சையும் குடிசையை மாற்றி வீடுகளும், பெண்களுக்கான சிறப்பு சலுகைகளும் கொண்டு வந்து எம் மனதில் நீங்கா இடம் பிடிக்க நினைத்தீர்கள் . மறுப்பேயில்லை..சென்னையை அழகுற மட்டுமல்ல , போக்குவரத்து வசதியோடும் , பல பூங்காக்களும் , நூலகமும், சட்டமன்ற கட்டிடமும் , தண்ணீர் வசதியும் , தொழில் வளர்ச்சியும், மெட்ரோ ரயில் திட்டமும் மிக நன்றுதான்.. மறுப்புண்டா.?

துணை முதல்வர் ஸ்டாலின் அவர்களின் உழைப்பும் , கனிமொழியின் பங்கெடுப்பும், இருவரின் எளிமையும் கவர்ந்துள்ளதுதான். மறுக்கலாமோ.?.

ஆனால் இவை எல்லாவற்றுக்கும் அடித்தளமாக மிகப்பெரிய ஊழல் இருந்துள்ளதே தலைவரே..?..!!!

ஒரு விவசாயி வயற்றில் அடித்து மற்றவருக்கு பசியாற்ற நினைத்தது ?..

மின் வெட்டினால் மக்களை அவஸ்தைப்பட வைத்தது..

மேலும் மதுரை என்றாலே அராஜகம் தானே நியாபகத்துக்கு வந்தது ?..

எல்லாவற்றுக்கும் மேலே ஈழத்தமிழர் துயர் துடைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தது..?. தமிழினத்தலைவர் மேலுள்ள நம்பிக்கையே போனதே..

இதுதான் பெரியார் வழி வந்த திராவிடமா?.. அசிங்கப்படுத்திவிட்டதே பெரியாரையும் அண்ணாவையும்..

குடும்ப ஆட்சி என ஆளாளுக்கு வாய்ப்பினை பிரித்துக்கொடுத்து தமிழகத்தில் தலை நிமிர்ந்தல்லவா நின்றிருக்கணும் நீங்களும் உங்கள் குடும்பமும்..அதைவிடுத்து தமிழகத்தையே கைக்குள் போடுவது போலல்லவா எல்லா துறையிலேயும் உங்க குடும்ப ஆட்சி சகிக்க முடியாமல் ?..

தமிழக மக்களின் பொறுமையை சகிப்புத்தன்மையை தவறாக நினைத்துவிட்டீர்கள் தலைவரே..

எத்தனை வெறுப்பு இருந்தால் எம்மால் விரும்பாத இன்னொரு அராஜக தலைமைக்கட்சிக்கு நாங்கள் ஓட்டுப்போட விதிக்கப்பட்டோம்?..வேறு வழியில்லாமல்தானே.?.. அந்த நிலைமைக்கு எம்மை தள்ளலாமா தலைவரே.?.

இன்னமும் எமக்கு நம்பிக்கை இருக்கிறது.. மதுரை அராஜகம் , ஊழல் , குடும்ப ஆட்சி இன்னும் பலவற்றை சரிபடுத்தி திரு.ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி நடத்த முடியும் என்று..

அடுத்த முறை வரும்போது எவ்வித இலவசமும் இல்லாமலேயே மக்கள் உங்களை தேர்ந்தெடுக்குமளவுக்கு கட்சி முன்னேறியிருக்கணும் கட்டுப்பாட்டோடு, கண்ணியத்தோடு, மக்கள் சேவையே முக்கியம் என்ற கடமையுணர்ச்சியோடு, என்ற ஆவலோடு இப்போதைக்கு விடை கொடுத்துள்ளோம்..

நாங்கள் ஏழைகள் தலைவரே. ஏற்கனவே அம்மையார் வீட்டு ஆடம்பர திருமணத்துக்கு பாடம் கற்பித்தோமே மறந்தீர்களா?..

அதே தானே மதுரையில் உங்கள் குடும்ப திருமணத்திலும், மருத்துவர் ராம்தாஸ் அவர்கள் இல்லத்திலும் நடந்ததாக தொலைக்காட்சியில் பெருமைப்பட்டுக்கொண்டது?..

எமக்கு எளிமையான தலைவர்கள் திரு,காமராஜ் போல , திரு.நல்லக்கண்ணு போல தேவை.. . நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டாம் என ஒருபோதும் சொல்லவில்லை...ஆனால் அதை உங்கள் வீட்டோடு வைத்துக்கொள்ளுங்கள்.. தொலைக்காட்சியில் போட்டு கிட்னி கொடுத்து கடனடைத்த விவசாயியான நாங்களெல்லாம் வயிறு எரியும்படி செய்யணுமா?..யோசிக்கத்தான் சொல்கிறோம் தலைவரே..

பெரியார் தம் சொத்தை இழந்து மக்களுக்கு சேவை செய்ய வந்தார்.. அவர் வழி வந்ததாக சொல்லும் கட்சிகள் அதுக்கு நேர் மாறாக...?????...

எத்தனையோ பேர் தங்கள் உயிரைக் கொடுத்து, கல்வியை பறி கொடுத்து, உணர்வுகளை ஊட்டி வளர்த்த கட்சியல்லவா திராவிடக்கட்சி .....
மிக வருத்தமாக இருக்கிறது .. ( நன்றி - நட்பின் வரிகள் )

மொத்தத்தில் ஆட்சி மாறியதில் எங்களுக்கு பெரிதாக மகிழ்ச்சியாக எல்லாம் இல்லை.. :(


கடந்த ஆண்டுகளில் மக்களுக்காக செய்த நல்ல பல திட்டங்களுக்கு மனதில் நன்றியுடனுமே...


நன்றி ,

தமிழக மக்கள்..








படம்: கூகுள் நன்றி..




.

Sunday, May 1, 2011

மே தினம்


அல்லோகலமாய் மேதின கொண்டாட்டம்
அடுப்படியில் இடுப்பொடிய திண்டாட்டம்

உழைக்கும் வர்க்கத்திற்கே ஓய்வின்றாம்
உனக்கில்லை பெண்ணே ஒதுங்கிக்கொள்

தொழிலாளிக்கு மட்டுமிங்கே அங்கீகாரம்
தொய்வில்லாது சுமப்பாய் குடும்ப பாரம்..

குழந்தைவளர்ப்பு , வீட்டுவேலை தொழிலல்ல
குற்றம் குறை சொல்வதுமுனக்கு அழகல்ல...


பணக்கூலிபெற்றால் தொழிலாளிவர்க்கமாம்
பத்துதேய்ப்பவள் பட்டியலில் இல்லையாம்.:(

செவிலியரென்றால் ஊதியம் மரியாதை,
செத்துமடியும்வரை முடிவில்லாத வதை?..

பாட்டிலோடு ஓய்வுக்கு தேவை ஒரு டாஸ்மாக்
பாலியல் தொழிலாளி உன் தேவை ஒரு மாஸ்க்..

குடும்பத்துக்கு உழைக்கும் பெண்ணே உனக்கும்
குடிமக்கள் துயர்நீக்க உழைக்குமனைவருக்கும்


எல்லாம் சமமென சொல்வதே மேதினவாழ்த்துகள்
எவருக்கும் அடிமையில்லை வானுயறட்டும் உம்புகழ்.




படம்: நன்றி கூகுள்..





.