Showing posts with label பாசம். Show all posts
Showing posts with label பாசம். Show all posts

Monday, August 22, 2011

வலிமையை கற்பது?



மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை பெற்றவர் எனக்குத்தெரிந்து இரு குடும்பம் உண்டு.. ஒருவர் மிகப்பெரும் பணக்காரர். மற்றொருவர் நடுத்தர வர்க்கம்.

பணக்காரர் வீட்டில் அக்குழந்தையை கவனிக்க பல ஆட்கள் உண்டு.. இருந்தாலும், அந்த தாய்தான் விரும்பி எல்லா வேலையும் அக்குழந்தைக்கு செய்வார்.. அந்த குழந்தையைத்தான் அதிகம் நேசிக்கவும் செய்வார். உலக சுற்றுலா செல்லும்போதெல்லாம் அக்குழந்தையையும் கூடவே கூட்டிச்செல்வார்கள்.. அப்போது அந்த தாய்தான் முழு கவனிப்பும்..அந்த தாய் முன்னாள் Miss. **** College . ஆனால் வாழ்க்கை இந்த குழந்தை வந்தபின் முற்றிலுமாக மாறிப்போனது அவருக்கு..

அடுத்த குடும்பத்தில் முதல் பெண் குழந்தை பிறக்கும்போது நல்லபடியாக பிறந்து ஒரு சிகிச்சை மூலம் மனவளர்ச்சி குன்றியது.. தாய் பார்த்துக்கொண்டிருந்த ஆசிரியர் வேலையை விட்டுவிட்டு முழு நேரமும் குழந்தையோடு. செய்யதா செலவில்லை.. எல்லோரும் அக்குழந்தையை மனவளர்ச்சி குன்றியோர் இல்லத்தில் விட சொன்னார்கள்.. அவரோ கோபப்பட்டார்.. நான் உயிரோடு இருக்கும்வரை அப்படி செய்யவேமாட்டேன் என அருமையாக வளர்த்தார்.. ஒரு தம்பியும் பிறந்து அவனும் இன்று அப்பெண்ணுக்கு மிக உதவியாக..

இது ஏன் திடீரென?.. நேற்று மார்க்கெட்டுக்கு சென்ற போது ஒரு பெண் தன் 12 வயது குழந்தையை Pram ( குழந்தைகளை எடுத்து செல்லும் வண்டி ) லிருந்து எடுத்து மடியில் வைத்துக்கொண்டே வியாபாரத்தையும் கவனித்தார்.. அந்த குழந்தை உயரம்தான் இவரும்.. மெலிந்த உடல்.. அவர் உடல்வாகுக்கு அக்குழந்தையை தூக்கவே முடியாது.. ஆனால் அப்படியே அள்ளி எடுத்து மடியில் உட்காரவைத்ததை பார்த்து அசந்து போனேன்..எங்கிருந்து கிடைத்தது அந்த சக்தி?.. வெறித்தனமான பாசம் இருந்தால் மட்டுமே இப்படியெல்லாம் செய்ய முடியும்.. தான் ஏழ்மை நிலையிலிருந்தாலும் , தன் குழந்தையை தன்னோடு வைத்துக்கொண்டு கவனிப்பது?..என்ன ஒரு வலிமை இருக்கணும் ?..

சில நேரம் நாம் நினைப்போம் , எனக்கு வந்தால் தாங்க முடியாது என.. ஆனால் வரும்போது வேறு வழி இருப்பதில்லை.. தாங்கித்தான் ஆகிறோம்..தாங்க முடியா சிலர் மட்டுமே மரித்துப்போவதும்.. வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் எல்லாமே ஒரு புதிர்போலத்தான்.. எல்லாவற்றுக்கும் விடை தயாராக இருப்பதில்லை..அவரவர் சிலுவைகளை அவரவரே சுமக்கணும் இங்கே.. ஆனால் இதில் முக்கியமான விஷயம், நல்ல மனிதர்கள் , ஊக்குவிப்போர் அமைவது , அல்லது அமைத்துக்கொள்வது.. எந்த ஒரு பிரமாண்டமான பிரச்னையென்றாலும், ஆறுதலுக்கு ஒரேயொரு துணிவான நல்ல மனம் கிடைத்தால்கூட போதும், உலகை ஜெயித்திடலாம்.. வலிமை பெற்றிடலாம்..

நான் சொன்ன மேற்கூறிய பெண்களுக்கும் இதே போல யாராவது இருக்கக்கூடும்.. அந்த நல்லவர்கள் வாழ்க.. அப்படியான ஒரு மனிதராக எவருக்காவது நாம் இருக்கிறோமா, இருந்தோமா, என நம்மை சுயபரிசோதனை செய்துகொள்வோம்.. அப்படி நாம் இருந்திருந்தால் அது தரும் மன திருப்திக்கு ஈடு எதுவுமே இல்லை..அப்படியான ஒரு வாய்ப்பு கிடைத்தாலும் விட்டுவிடாதீர்கள்..

இப்படியான மனிதர்களை சந்திக்கும் சம்பவங்கள் நம்மை , நம் வாழ்வை ஆன்மீக பாதைக்கு திருப்பிவிடும்..நம்மைச்சுற்றி நடப்பவைகளை பார்த்து சிந்திப்பதும், கேள்வி கேட்பதும், என்ன செய்யலாம் என யோசிப்பதும்தான் என்னைப்பொறுத்தவரை ஆன்மீகம்.. அதுதான் திருப்தியும்.. நிஜமான ஆன்மீகவாதிகள் என நீங்கள் கருதுபவர்களை கொஞ்சம் மனக்கண் முன் கொண்டு வாருங்கள்.. அவர் எளிமையானவராய் , அங்கீகாரம் விரும்பாதவராய் , சக மனிதனுக்கு என்ன செய்யலாம் என்ற சிந்தனையுள்ளவராய் இருக்கக்கூடும்..

குழந்தை வயற்றில் இருக்கும்போது ஒரு தாய்க்கு என்னென்ன கற்பனைகள் இருக்கும்.?.. நாள் நெருங்க நெருங்க , குழந்தை எவ்வித ஊனமுமின்றி நல்லபடியாக பிறந்தால் போதும் என நினைக்காத தாயே இருக்க முடியாது..ஆனால் நாம் நல்லபடியாக பிறந்து வந்தாலும் , மனிதர்களை , எத்தனை விதமாக பிரித்துப்பார்த்து பழகுறோம்?.. சாதி , மதம் , ஆணா, பெண்ணா, என்ன இனம், மொழி, கருப்பா , சிவப்பா, ஏழையா பணக்காரனா என..

இப்படி செய்வதால் நிஜமாகவே மனம் மகிழ்வாக இருக்கிறதா என்றால் நிச்சயமாக இருக்க முடியாது.. ஆனாலும் ஆட்டு மந்தைக்கூட்டமாக ஏன் எதுக்கு என கேள்வி கேட்காமல் பின்பற்றித்தொலைக்கிறோம்.. சிந்தியுங்கள்.. எது உங்கள் ஆழ்மனதுக்கு சரி எனப்படுகிறதோ அதை கேள்வி கேளுங்கள்.. தனித்திருப்பதைப்பற்றி கவலைப்படவேண்டியதில்லை.. அப்படியானவர்களே மாற்றம் கொண்டுவந்தார்கள்.. மனிதநேயம் வளர்த்தார்கள்..

சாதி , மதம் , இனம் , எல்லாவற்றையும் கடந்து ஒரு குழந்தையின் மனநிலைக்கு வர முயலுவோம். வலிமை பெறுவோம்..இப்படியானவர்களை சந்திக்கும்போதெல்லாம் அவர்கள் வலிமை எனக்கும் தொற்றிக்கொள்கிறதுதான்..இப்படி விசேஷ குழந்தைகளை கவனித்துக்கொள்ளும் ஒவ்வொருவரையும் வணங்குகிறேன் . ஆதரித்து ஊக்குவிக்கும் ,பல ஆசிரியர்கள் , பல தொண்டு நிறுவனங்கள் , முக்கியமாக பெற்றோர், உடன்பிறந்தோர்க்கு , சொந்தங்களுக்கு எம் வணக்கங்கள்..





( என் இரண்டாவது குழந்தைக்கு Down syndrome பரிசோதனை செய்யணும் என மருத்துவர் சொன்னபோது மறுத்துவிட்டேன்..கருப்பையில் இருக்கும் குழந்தைக்கு ஊசி செலுத்தி சாம்பிள் எடுப்பார்களாம்.. அது தவறி வேறெங்கோ படக்கூடிய வாய்ப்புண்டாம். அதை கற்பனை செய்துகூட பார்க்கமுடியாமல் மறுத்தேன்.. அப்படி ஒரு குழந்தை பிறக்கணும்னா பிறக்கட்டும் என பிடிவாதமாக இருந்தேன்.. இது என் கருத்து மட்டுமே.. வளர்க்க முடியாதவர்கள் செய்வது நல்லதே )


டவுன் சின்ட்றோம் பற்றிய தகவலுக்கு கிளிக் செய்யவும்.


( அலுவல் நேரம் பின்னூட்டம் தவிர்க்கவும்..நன்றி. )

படங்கள் நன்றி கூகுள்




Friday, June 17, 2011

குழந்தைகளா அடிமைகளா , முதலீடுகளா ?..


வாழ்க்கை எனப்து எதற்கு?.. மிக சந்தோஷமாக வாழணும் என்று இல்லாவிட்டாலும் ஓரளவு திருப்தியாக வாழணும்..

முடியுமா?.. நிச்சயமாக முடியும்.?.

எப்படி.?.. ஆசைகளையும் எதிர்பார்ப்புகளையும் அளவோடு வைத்துக்கொண்டோமானால்..

ஆனால் என்ன ஆகியுள்ளது?.. அளவுகோள்களே மாறிவிட்டது...

ஆசை பேராசையாக மாறியதை அறியவில்லை..

எதிர்பார்ப்புகள் திணிப்புகளாக மாறியதையும் அறியவில்லை..

சமீபத்தில் படித்திருப்பீர்கள் சரண்யா பார்த்தசாரதி பற்றி செய்திகளில்..

ஒரு காதலை ஏற்க முடியாமல் மருமகனை கொலை செய்த பெண்ணின் பெற்றோர்கள்..

இத்தனைக்கும் பெண்ணின் தாய் ஒரு ஆசிரியை..நம்பவே முடியாத செயல்..

தான் கொலை செய்வோம் என என்ணியிருப்பார்களா?..நிச்சயம் மாட்டார்கள்..

நல்ல ஒரு குடும்பமாகத்தான் இருந்திருக்கும்.. கஷ்டப்பட்டே குழந்தைகளை வளர்த்திருப்பார்கள்..

கொஞ்சி , கெஞ்சி நம்மைப்போலவே வளர்த்திருப்பார்கள்..

பணம் கொடுத்தே மெடிக்கல் சீட் வாங்கியிருப்பார்கள்.. குழந்தை படிக்க எல்லா உதவியும் தியாகமும் செய்திருப்பார்கள்..

ஆனால் எங்கே தவறு நடந்தது?..

அன்பு வைப்பதாக சொல்லி நம்மையறியாமலேயே அடிமைத்தனத்தை புகுத்துவதை நாமே அறிவதில்லைதான் சில சமயம்..

ஏனெனில் சுற்றமும் சூழலும் , நமக்கு அப்படி அமைகிறது.,.

மெடிக்கலோ , பொறியியலோ படித்தால்தான் வாழ்க்கை இனிமையாக அமையும் என எண்ண வைக்கப்படுகிறோம்..

இப்படி விழுந்து விழுந்து படிக்கும் குழந்தைகள் முகத்தில் மகிழ்ச்சியை பார்த்துள்ளீர்களா.?


எல்லாத்துக்கும் டியூஷன், அல்லது சிறப்பு வகுப்புகள் என நேர இடைவெளி இல்லாமல் படும்பாடு..

இதில் பெற்றோர் இருவருமே வேலைக்கு செல்வதால் அன்பா ஆதரவா உட்கார்ந்து பேசி குழந்தைகளிடம் மனம் திறந்து பேசக்கூட நேரமில்லை
இந்த வேகமான உலகில்..அதோடு நம் விருப்பப்படி பாடம் எடுத்து படிக்கும்போது வேண்டா வெறுப்பாகவும், பெற்றோரை எதிர்த்து பேச முடியாத மன அழுத்தமும்..

மொத்தத்தில் நம் பெருமைக்காக குழந்தைகளை ஒரு முதலீடாக ஆக்கிக்கொண்டு வருகிறோம்..

படிக்கவேண்டிய வயதில் படிக்கணும்தான்.. மறுப்பில்லை.. ஆனால் அதுவே திணிப்பாக இருந்திடக்கூடாது..

இதில் மட்டுமல்ல , மத திணிப்பும், கலாச்சார திணிப்பும், இன்னும் பலவித பழக்கவழக்க திணிப்பையுமே நாம் செய்கிறோம் சிந்திக்க விடாமல்..


இத்தகைய குழந்தைகள் வெளியில் பாசம் கிடைத்தால் அதையே காதல் என நினைத்து தவறிவிட வாய்ப்புகள் அதிகம்..

வருகிற சினிமா எல்லாமே காதலைத்தான் சொல்கிறது.. தொலைக்காட்சியிலும் அதே..

பருவ வயது வந்ததும் காதல் வயப்படலாம் என நாம் அறியாததா?.. அதை மறைத்துத்தான் வைக்க இயலுமா?

அடிமைகளாக வளர்க்கப்படும் குழந்தைகள் , தனக்கான மரியாதையும் அங்கீகாரமும் வெளியே கிடைக்கும் பட்சத்தில் அதையே பெரிதாக
எண்ணுவதில்லை வியப்பில்லை..

இதேதான் திருமணம் தாண்டிய உறவுகளிலுமே காண்கிறோம்..

அடிமைத்தனமும், அதிகாரமும் இருக்குமிடமெல்லாம் இதே போல நடைபெற வாய்ப்புண்டு.. இது ஒரு சமூக பிரச்னையாக பார்க்கப்படவேண்டிய
விஷயம்..



வாலிப வயது வந்ததுமே பிள்ளைகளைன் நடவடிக்கையில் மாற்றம் ஏற்படும்.. எரிச்சல் வரும் ஹார்மோன் மாற்றங்களால். நாம் சொல்வது எதுவுமே பிடிக்காது. நமக்கோ கோபம் வரும்.. நாம் நல்லதுதானே சொல்கிறோம் , இதுவரை நம் பேச்சை கேட்ட பிள்ளை நம்மை மதிக்கலையோ என்ற பயமும் ஈகோவும் நமக்கு..

கொஞ்சம் விட்டுப்பிடிக்கவேண்டிய வயது.. சில குழந்தைகளுக்கு வீட்டை விட்டு தப்பிச்சா போதும் என்ற எண்ணம்.. ( வெளியே போய்
பார்த்தால்தான் தெரியும் வீட்டிலுள்ள சுகம் ) .

நாம் மட்டுமே வளர்க்கவில்லை குழந்தைகளை. புற சூழலுமே சேர்ந்துதான் அவர்களை நாலாபக்கமும் இழுக்கின்றது..

முரண்டு பிடிக்கும்போது விட்டுப்பிடித்தும் கண்டிப்பை கொஞ்சம் பொறுமையாகவும் எடுத்தாள வேண்டும்.

இங்கே சரண்யா விஷயத்தில் அவர் தன் காதலை சொன்னதும் அவசரம் அவசரமாக அமெரிக்க மாப்பிள்ளைக்கு நிச்சயம் செய்ததாலேயே அவர்
உடனே திருமணம் செய்துள்ளார் பெற்றோர் சம்மதமின்றி..

இதே போல பெற்றோர் மிரட்டியதும் , பிளாக் மெயில் செய்ததும் , அவசரப்பட்டதுமாய் ஏகப்பட்ட கதைகளுண்டு..

ஏன் இந்த நிலைமை?..

ஆழுமைதான் காரணம்.. குழந்தை எனக்கு சொந்தம் என்ற எண்ணம்.. இது மிக தவறு..

என்னதான் நாம் பெற்றாலும் நம் குழந்தை என்றாலும் சொந்தம் கொண்டாடுவதிலும் ஒரு அளவு இருக்கிறது..


இதை கலீல் ஜிப்ரான் மிக அழகாக சொல்கிறார் பாருங்கள்..


“Your children are not your children.
They are the sons and daughters of Life’s longing for itself.
They come through you but not from you,
And though they are with you, and yet they belong not to you.
You may give them your love but not your thoughts,
For they have their own thoughts.
You may house their bodies but not their souls,
For their souls dwell in the house of tomorrow,
which you cannot visit, not even in your dreams.





ஆசை ஆசையாய் வளர்த்த மகள் இன்று அழுதபடி கண்ணீரில்.. அப்பாவோ சிறையில்..


சமீபத்தில் படித்திருப்போம் பஸ் விபத்து பற்றி.. அதில் திவ்யா என்ற பெண் நிச்சயதார்த்ததுக்காக சென்றவர்.. அந்த மகளையும் இழந்துவிட்டதே
அந்த குடும்பம்..


ஆனால் விபத்து என்றால் ஏற்கும் மனம் காதல் என்றால் கொலைவெறி வருவது ஏன்?.


ஏழை, பணக்காரன், சாதி, மதம் , இனம் என பல்வேறாக நம்மை நாமே பிரித்துக்கொண்டு கோழைகளாக வாழப்பழகியுள்ளோம்..

எது வந்தாலும் அதை ஒரு சேலஞ்சாக எடுத்து வாழப்பழகவில்லை.. அப்படி பழகியிருந்தால் இந்த வித்யாசங்களெல்லாம் எப்பவோ அழிந்து
போயிருக்குமே..


சக மனிதனை மனிதன் என்ற அளவுகோல் மட்டுமே கொண்டு நேசிக்க பழகியிருந்தா இத்தனை சுயநலமும் வெறித்தனமா பணம் சேர்க்கும் எண்ணமும் வந்திருக்காதே...

நானுமே திணிக்கப்பட்டே வளர்ந்தவள்தான்..( மதம் , சாதி, படிப்பு என ) .. இருப்பினும் இப்பதான் விபரங்கள் புரிய ஆரம்பித்தது..

என் குழந்தைகளுக்கு முழு சுதந்திரம் தருவதோடு , பொறுப்புகளை மட்டும் சொல்லித்தருவதும், எல்லா செயலுக்குமான விளைவுகள் பற்றியும்
எடுத்து சொல்வதுமே என் கடமை.. மற்றவை அவர்கள் பொறுப்பு..


லண்டனில் 16 வயதானதும் தனியே அனுப்பிடுவார்களாம் குழந்தைகள் பொறுப்பெடுக்க பழகிக்கொள்ள..அச்சமூகமும் அவர்களுக்கான
பாதுகாப்பையும் , பொறுப்பையும், ஊக்கத்தையும் அளிக்கின்றது.. பாலியல் குறித்த பயம் இல்லை.. ஒரே இடத்தில் ஆணும் பெண்ணுமாய் சேர்ந்தே
தங்குகின்றார்கள்.. இருவரின் பிரச்னைகளையும் புரிந்து கொள்கிறார்கள்.. சமாளிக்க பழகுகின்றார்கள்..

காமம் குறித்த தெளிவான பார்வையும் பாலியல் புரிதலும் இருக்கின்றது..

ஆனால் நமக்கோ ஆயுசுக்கும் குழந்தை என்றே கொஞ்சிக்கொண்டும் , அடிமைப்படுத்திக்கொண்டும் இருக்கிறோம்..அவர்களை சுயமாக சிந்திக்க
விடாமல்..வாழ்நாளெல்லாம் கைதியாக்கி சுமை சுமக்க வைத்து?..

நமக்கு பிடித்தமில்லாத காரியத்தை செய்துவிட்டு சிக்கலில் மாட்டினால் , சில நேரம் தோல்வி அடையவும் வாய்ப்பு கொடுங்கள்.. அவர்கள்
அதிலிருந்து மீண்டு வரும்போது துணையாக , ஆறுதலாக இருங்கள்.. அப்படி வளர்க்கப்படும் குழந்தை எல்லா சிக்கலையும் சமாளிக்கும் ..

தோளுக்கு மேல் வளர்ந்தால் தோழன் னு சும்மாவா சொன்னாங்க.. நம்மைவிட பல விஷயம் தெரியுது இக்கால குழந்தைகளுக்கு..

நாம் யாருமே தவறே செய்யாதவர்கள் இல்லையே.. தவறிலிருந்தே பல பாடங்களை கற்கிறோம்..

வாழ்நாள் முழுதும் இறுதி மூச்சுவரை கற்றுக்கொண்டே இருக்கிறோம்..நமக்கு எல்லாம் தெரியும் என்ற பிரமையிலிருந்து விடுபடுவோம்..

நாமுமே குழந்தைகள் தான் சில நேரம்..

நம்மிடம் இருக்க போவது சில வருடங்களே அவர்கள்,.. சிறகு முளைத்ததும் பறந்துவிடுவார்கள்.. இந்த குறுகிய காலத்தை இனிமையாக கழிப்போம்..


மெல்ல மெல்ல நாமும் மாறி நம்மை சுற்றியுள்ள இந்த போலி சமூகத்தை மாற்றுவோம்..



நீண்டு விட்டது பதிவு.. பொறுமையாக படித்தமைக்கு நன்றிகள்..:)


இது தொடர்பான பதிவை படிக்க - http://www.vinavu.com/2011/06/14/chennai-murder/


(படம் : நன்றி கூகுள்.. அலுவல் வேளை பின்னூட்டம் தவிர்க்கவும்.. )



Tuesday, January 25, 2011

குழந்தைகளும் கற்பனைகளும்..:






கதை சொல்லி தூங்க வைப்பது எப்போதும் தொடர்ந்து நடைபெறும் விஷயமென்றாலும் எப்போதாவது சுவையான சம்பவமாகிடுவதுமுண்டு..

எத்தனை கோபம் பிடிவாதம் என்றாலும் கதை வைத்தே லஞ்சமாக பேசி காரியம் சாதிக்கவும் முடிகிறது குழந்தையிடம்..முக்கியமா வீட்டுப்பாடம் சடசடவென முடியும்.. உணவு உள்ளே தள்ளப்படும்...ஜெபமும்...

ஏன் கதைகள் அத்தனை சுவாரஸ்யமாகிப்போனது ?..

ஏனெனில் நிஜத்தைவிட கற்பனை உலகம் மிக மகிழ்ச்சிகரமானதாகவே இருக்கிறது குழந்தைக்கு...

குழந்தைக்கு மட்டுமா ?... நமக்கும்தான்,..

டாம் & ஜெர்ரி விரும்பி ரசித்து அதில் மயங்கி நேரம் செலவாகுவது கூட தெரியாமல் இருப்போருண்டே நம்மில்..


நேற்றும் விளக்கை எல்லாம் அணைத்துவிட்டு என்னை அணைத்துக்கொண்டே கதை கேட்க தயாரானார்...

ரொம்ப ஒண்ணும் கஷ்டமில்லை என்றாலும் அப்போதுதான் கதையும் தயாரிக்கணும் என் மூளை... பாத்திரங்கள் அவரே சொல்லிடுவார்.. யார் இருக்காங்களோ இல்லையோ அவர் இருக்கணும்.. அதாங்க அவர்தான் ஜெர்ரி மவுஸ் .( எலி )

நான் , அல்லது அவன் அண்ணாதான் டாம்..

கூட துணை நடிகர்களாக காட்டிலுள்ள விலங்குகள் ..

இதில் வேறு பல நேரம் ஜெரி மவுஸ் பைக் ரேஸ் வேற போகும்.. அதுதான் ஜெயிக்கும்.. இப்படி கதைக்கான கருவும் அவரே இடையிடையே சொருகிடுவார்.. சில நேரம் என் கற்பனை தடை செய்யப்படுவதாக நான் குற்றம் சுமத்த, அவர் கோவித்துக்கொண்டு சண்டையிடுவார்...

எப்போதும் ஜெரி வெற்றி பெருவதில் எனக்கு உடன்பாடில்லை.. ( அப்புரம் வாழ்வை எப்படி சமாளிப்பதாம் என அம்மாவான எனக்கு கவலை... நியாயம்தானே?... )

ஆனால் அவருக்கோ, ஜெர்ரி எப்படி அடி வாங்கினாலும் , போராடினாலும், ஜெர்ரிதான் வெற்றி பெறணும்...


பெரியவருக்கு கதை சொல்ல இத்தனை சிரமப்படவில்லை.. சீனு உதவினான்.. அதாங்க சீனு நம்ம கழுதையார்.. அவர்தான் பெரியவரோடு பள்ளிக்கு போவதும் , ஆசிரியருக்கு தெரியாமல் சீனுவை சக நண்பர்கள் ஒளித்து வைப்பதும் , உதவுவதும், விமானத்தில் செல்வதுமாய் ஏகத்துக்கும் கதை விடுவேன்.. சிரித்துக்கொண்டே தூங்கிடுவார்.. சில நாள், நான் சொல்லும்போதே தூங்கிடுவேன்.. எழுப்பி வைத்து கேட்பார்.. ( என்ன கதை சொன்னோம்னே மறன்னு போயி..இடையில் கனவு வேற டிஸ்டர்ப் செஞ்ஞல்லே ).


நேர்று கதை ஆரம்பித்ததுமே, ஒரு ஊர்ல , ......................................ஒரு ஊர்.....................................ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல னு இழுத்தேன்...



அவரே ஆரம்பித்து வைத்தார்.. " ஒரு ஜெர்ரி மவுஸ் இருந்தது.. அப்புரம் சீக்கிரம் சொல்லுங்கம்மா... " னு இன்னும் ஆசையோடு கட்டிப்பிடித்துக்கொண்டார்.. அதிலேயே அவர் ஆவல் புரியும்.. கற்பனை விண்டோ ஓப்பன் பண்ணிட்டார்னு அர்த்தம்...

அந்த ஜெர்ரி மவுஸ் பாலத்தில் செல்லும்போது டான்ஸ் ஆடிக்கொண்டே சென்றதால் பாலத்திலிருந்து தண்ணீருக்குள் விழுந்தது......................

........ஹெல்ப் என கத்தியது.. நண்பர்கள் ஓடி வந்து காப்பாற்ற முடியாமல் யானையை அழைத்து வந்தது.... இத்யாதி...


இதுக்குள் டென்ஷனாயிடுவார்... என்னாச்சு மா.. என்னாச்சுமா.. இப்படி காப்பாத்தி இருக்கலாமே அப்படி செய்திருக்கலாமே னு அடுக்குவார் ஐடியாக்களை...

" யானை வந்து தன்னோட நீண்ட தும்பிக்கையால் அந்த மவுஸ் ஏற செய்தது... அது உன்னை மாதிரி சேட்டைக்கார மவுஸ் ஆச்சே, யானை மூக்குக்குள் போய்விட்டது எலி.......................................வெளியே வரமாட்டேன் னு அங்கேயே உட்கார்ந்து கொண்டது..."


கை அசைவோடு சொல்லணும்.. என் கைதான் தும்பிக்கை.. அவர் விரல்கள் மவுஸ்.. பிடித்துக்கொண்டார்..

சொன்னதும் விழுந்து விழுந்து சிரிப்பு...


யானை மூக்கை சீந்தினாலும் வரமேட்டேன் னு பிடிவாதம்...

உடனே நண்பர்கள் ஒரு ஐடியா சொன்னார்கள் , நிறைய உறைப்பு சாப்பிடு... கண்ணீரும் தண்னீரும் வரும்.. அப்ப மவுஸ் வழுக்கி விழும்...

யானையும் உறைப்பு சாப்பிட்டு தண்ணீர் வந்ததும் , ஆவலோடு எல்லா விலங்குகளும் பள்ளிக்கு செல்லாமல் பாறைகள் மேலேறி உட்கார்ந்து காத்திருந்தன...

ஆனா மவுஸ் ஜாலியா , " ஐ வாட்டர் ஃபால்ஸ் ( நீர்வீழ்ச்சி ) னு குளித்து பாட ஆரம்பித்தது... ( ஏன்னா சின்னவருக்கு தண்ணீர்னா போதும் ஒரு நாளைக்கு 10 முறை கூட குளிப்பார்.. காய்ச்சல் என்றாலும் ) ..


சிரிப்பு தாங்க முடியலை...


சரி போதும் இன்னிக்கு.. தூங்கு னு சொன்னதும் கெஞ்ச கொஞ்ச ஆரம்பித்துட்டார்..

பிளீஸ் , ஒரு ஆயிரம் முறை...

சரி இன்னும் ஒரு சில வரிகள் என சத்தியம் வாங்கிக்கொண்டு , தொடர்ந்தேன்..

சின்ன சின்ன இலைகளை பூக்களை எடுத்து வந்து மூக்குக்குள் செலுத்தினால் மவுஸ் வெளியே வரும் என நட்புகள் சொல்ல ,

அதையும் செய்ய , அவற்றையெல்லாம் உள்ளேயிருந்து வாங்கிவைத்துக்கொண்டு , " ஆஹா நான் நல்ல மலர்படுக்கை செய்துவிட்டேன் .. நல்லா தூங்க போறேன் ' னு சொல்லி குட்நைட் சொல்லிச்சாம்...


சரி குட் நைட் சொல்லிடுச்சு போய் தூங்கு...


--------------------

தூக்கத்திலேயும் சிரித்தார்.. எந்த கதைக்குன்னு தெரியலை...

காலையில் எழுந்ததிலேருந்து சிரிப்பு.. பள்ளி விட்டு வந்ததுமே கதை தயாரா இருக்கணுமாம்...பள்ளி நட்புகளிடமும் ஆசிரியரிடமும் சொல்வாராம்....

குழந்தைகளின் கற்பனை உலகத்தை விரிவாக்கிடலாம் கதை மூலம்...அதில் நாமும் நுழைந்து ரசிக்கலாம் இலவசமாக.. உபயோகமாக...


கதையின் கரு ஒரு வரியாகக்கூட இருக்கலாம்.. ஆனால் சொல்லும் விதமும், குழந்தைகளை அந்த கற்பனை உலகில் சஞ்சீகரிக்க , அழைத்து செல்லும் மந்திர வித்தையும் வருவதற்கு முதலில் நாமே குழந்தையாகி அக்கதையை ரசிக்க பழகணும்... ( சொன்னா நம்பமாட்டீங்க.. இன்னும் என் கதையின் சீனு என்ற கழுதையார் ( 6 வருட பழக்கம் ) மற்றும் , தொடர்கதையின் நாயக நாயக்ர்கள் உயிரோடு வாழ்கிறார்கள் என்னில் )


அதே போல நிறைய கேள்விகள் கேட்க வைக்கலாம் குழந்தைகளை...


குழந்தைக்காக படம் வரைய கற்றுக்கொண்டிருக்கிறேன்....

http://www.ehow.com/how_5581915_draw-computer.ஹ்த்ம்ல்








படம் : நன்றி கூகுள்..

Wednesday, November 24, 2010

அம்மா புராணம் - 2. ( முதம் மனைவி இருக்கும்போதே இரண்டாம் கல்யாணம் )



































" அக்கா நான் இந்த வாரம் கிளம்பி வருகிறேன்..திருமணம் நடக்குமா?..." பயத்தோடு கேட்டார் மாமா..

என் அம்மாவின் சொந்தக்கார தம்பி அவர்..பொறியாளர்.. கை நிறைய சம்பாத்யம்.. வசதியும்..

திருமணம் முடிந்து 10 வருடம் குழந்தையில்லை.. மனைவியிடம் கோளாறு..

அதுமட்டுமல்ல அந்த காலத்தில் பாருங்க பெண்ணுக்கு அதிக வயதிருந்தாலும் , தன் மத/ஜாதியில் மாப்பிள்ளை கிடைக்காவிட்டால் , மாப்பிள்ளை வயது குறைந்திருந்தாலும்

மணமுடித்துள்ளனர்.. இப்படி பல பேரை பார்த்துள்ளேன்..

அதே தான் இந்த மாமாவின் கதையும்..

அத்தையை பார்த்தால் மாமாவுக்கு அம்மா/அக்கா போல் வயதானவராய் தோன்றுவார்..வியாதியஸ்தரும் கூட..

ஆனால் இருவருமே அன்பான தம்பதிதான்.. சண்டை சச்சரவேதுமில்லை..

ஆனால் மாமாவுக்கு இல்வாழ்க்கை திருப்தியோ இல்லை , குழந்தையின்மை வருத்தமோ , ஏதோ ஒன்று இருந்துள்ளது பல வருடம்..

மனைவியை விவாகரத்து செய்ய பல காரணமிருந்தும் செய்ய மனமில்லை..

ஆனால் மறுமணம் செய்ய மட்டும் அனுமதி பெற்றார் ...

அம்மாவிடம் தன் குறையை சொல்ல , அம்மாவுக்கு தன் சொந்தத்தில் திருமணமாகாமல் இருக்கும் பெண் நியாபகத்துக்கு வந்தது..

அதை மாமாவிடம் சொல்ல , மாமா சம்மதிக்க , அம்மா அப்பெண்ணிடம் பேச , அவரும் விருப்பம் சொல்ல ...

ஆனால் அம்மாவின் சொந்தங்கள் அனைவருமே இதுக்கு எதிர்ப்பு...

மாமா வெளியூரிலிருந்து நெல்லைக்கு வருவதற்குள் அம்மா மற்ற விஷயங்களை ரகசியமாக கவனிக்கணும்...

என்ன அது.?..

அம்மாவின் அந்த அத்தை பெண் ஜாதக பலனால் திருமணம் ஆகாமலேயே இருந்தார் பல வருடம்..

அதற்கான முயற்சி எடுக்க பெற்றோரும் இல்லை..

சகோதர சகோதரிகளுக்கும் முடியவில்லை.. தட்டிக்கொண்டே போனது..

அந்நேரம் அம்மா இந்த மாமாவுக்கு அந்த பெண்ணை முடிக்க பேசியதும் பலத்த எதிர்ப்பு..

( உடனே என்ன சொல்வார்கள் தெரியுமா , அம்மாவிடம் . ? . உன்கிட்ட 4 பெண் இருக்கே.. அதை கட்டிக்கொடு.. )

10 வருட வித்யாசம்.. இரண்டாவது திருமணம் வேறு..ஆனால் அந்த அத்தைக்கு ( பெண்ணுக்கு ) மாமாவை கட்டிக்கொள்ள சம்மதம்..

மாமாவின் குணம் அப்படி. யாருக்குமே பிடிக்கும் ..பார்க்க கருப்பு சரத்குமார் போல இருப்பார்..

இப்ப அம்மாவை அந்த பெண்ணை பார்க்கவே அனுமதிக்க மாட்டேனென்கிறார்கள்..

அம்மாவோ அவ்வூரிலுள்ள இன்னோரு மாமா வீட்டுக்கு சென்று ரகசியமாக அப்பெண்ணை வரவழைத்து பேசுகிறார்..அவர்கள் வீட்டிலுள்ளவர் பாதி பேருக்கு கூடதெரியாமல் ரகசியமாக பேசணும்.. அங்கேயும் எதிர்ப்பு..

மாமா வந்தார்கள்.. நெல்லைக்கு..

அப்பெண்ணை ரகசியமாக சொந்தக்கார பெண்ணோடு எப்போதும் செல்லும் கோவிலுக்கு வர வழைத்தார்கள்..அம்மா...

நம்பிக்கைக்குறிய சிலரோடு சென்று கோவிலில் வைத்தே மாமா அத்தை திருமணம் நடந்தது..

திருமண செய்தி பரவியதும் அவ்வளவுதான்...

அம்மா மேல் காவல்துறையில் புகார் செய்துவிட்டனர்..அத்தையின் சகோதரர்..

கூடவே அம்மாவை பிடிக்காத சிலரும் கூட்டாளிகளாக.. :)

காவலர்கள் எங்கள் வீடு தேடி வந்தனர்.." உங்கம்மா பெண்ணை கடத்திக்கொண்டு போனதாக தகவல் வந்துள்ளது . விசாரிக்கணும் " என..

நாங்க பயந்துதான் போனோம்.. :)

ஆனால் சொந்தக்காரர் ஒருவர் இன்ஸ்பெக்டராக இருந்தார் அப்போது.. நெல்லையிலேயே

அம்மா தொலைபேசினார்.. தாங்கள் எல்லாரும் மிக பத்திரமாக காவல் நிலையத்துக்கு சென்று விளக்கமளித்துவிட்டு வந்தாச்சு

பயப்பட வேண்டாம் என..அப்புரம்தான் நிம்மதியானோம்..( முதல் அத்தையின் சம்மத கடிதம் இருந்தது.. அவரிடமும் தொலைபேசினர் காவலர் )

பின் மாமாவும் அத்தையும் எந்த உறவினர் வீட்டிலும் தங்காமல் விடுதியில் தங்கிவிட்டு அக்கம் பக்கம் ஊர்களுக்கு சென்றுவிட்டு

மாமா தான் வேலை பார்க்கும் இடத்துக்கு அழைத்து சென்றார்.

முதல் அத்தையும் இரண்டாவது அத்தையும் நட்பாக சில காலம் பிடித்தது..

ஆனால் இரண்டாவது அத்தை மிக நன்றாக சமைப்பதோடு வீட்டையும் நோயாளி அத்தையையும் பார்த்துக்கொண்டதும் குடும்பத்துக்கு திருப்பம் வந்தது..

அதோடு அத்தைக்கு இரண்டு குழந்தை பிறந்தது குடும்பமே மகிழ்ச்சியானது...குழந்தைகள் முதல் அத்தையை "மம்மி" என்றும் இரண்டாவது அத்தையை "அம்மா
" என்றும் அழைப்பார்கள்..

நெல்லைக்கு வந்தால் எங்க வீட்டுக்கு வருவதோடு சரி.. தன் சகோதரர் வீட்டுக்கு கூட அத்தை செல்லாமல் இருந்தார் சில காலம்..

முதல் அத்தை ஆசிரியராக இருந்ததால் படிப்பெல்லாம் அவர் கவனிப்பார்... பெருமையாக...

இரண்டாவது அத்தை கூட இப்ப ஸ்டைலா உடுத்த , மாற ஆரம்பித்தார்கள்..மாமாவின் பதவிக்கு பொருத்தமாக..

இன்று குழந்தை இருவரும் நன்று படித்து வேலையிலும்... பெற்றோர் மூவரையும் அருமையாக கவனித்துக்கொண்டு..

ஆனால் இன்று அந்த அத்தை மாமா நெல்லைக்கு வந்தால் அம்மாவை சந்திப்பதில்லை.. இடையில் பலரின் குசும்பு வேலைகளை சொல்லவும் வேண்டுமா என்ன?

இதுதானே உலகம்..?.. ஆனால் அம்மாவுக்கு அந்த மன திருப்தி போதுமே.. அவர்கள் இன்று மகிழ்ச்சியாக இருப்பதே இவரின் வெற்றி..

அதுதானே முக்கியமேயொழிய அவர்கள் கஷ்டப்பட்டுக்கொண்டு இருந்து தம்மோடு அவர்கள் நட்பாயிருப்பதை விட?..

அம்மாவுக்கு எத்தனை எத்தனை நல்ல நட்புகள் உண்டோ அத்தனைக்கு அத்தனை எதிராளிகளும்...உருவாகினர் ..:)

( சராசரி மனிதர் நட்பில்லாவிட்டாலும் , எதிரிகள் இருக்ககூடாது என்ற கவனத்திலேதானே நல்லது செய்யாமலும், தீமையை கண்டிக்காமலும் செல்கிறார்.? நமக்கெதுக்கு வம்பு என ?.. ) .

ஆக நட்புகள் எதிரியாவதும், எதிரிகள் நட்பாவதும் மாறி மாறி வந்தது அம்மாவுக்கு..

ஆக அவரது ஒவ்வொரு செயலும் ஒரு போராட்டமாகவே அமையும்..

அதே போல நன்மை செய்தவரெல்லாம் கூட பழி போட்ட காலமும்..

இது இயற்கையின் விதி என எடுத்துக்கொள்வாரேயொழிய அதனால் அவர் காரியம் எதுவும் தடை பட்டு நின்றதேயில்லை...

மிக மிக என்னை ஆச்சர்யப்படுத்தும் விஷயம் என்னவென்றால் , எதிரி எனப்படுபவர், சண்டையிட்டிருப்பார், அம்மாவை மோசமாக பேசியிருப்பார், ஆனால் அவர் பிள்ளைகளுக்கோ , அவருக்கோ ஒரு பிரச்னை என்றால் எவ்வித மனக்கச்சப்புமின்றி இவர் வலிய சென்று உதவுவார்...அவர்கள் வெட்கப்பட்டுக்கொண்டு தயங்கினாலும் கூட..

மனதில் வஞ்சம் வைத்து பார்த்ததில்லை.. ஏனெனில் அதை பற்றி நினைக்ககூட அவர் நேரம் செலவழித்திருக்க மாட்டார் என நினைக்கிறேன்..

She was always on the run to help someone .. She kept moving , occupied, busy always & a very active personality .... Never remained stagnant.. Never worried about comments or complaints..

அவர் எதைக்கண்டும் தன் ஓட்டத்தை உதவியை நிப்பாட்டியதில்லை.. உதவி செய்ய ஒரு சந்தர்ப்பம் மட்டுமே வேணும் அவருக்கு..

அம்மாவை யார் திட்டினாலும் எமக்கு கோபம் வரும்.. ஆனா அவர் கண்டுக்கிட்டதேயில்லை..

அதையே தன் வாழ்வின் வெற்றியாக , லட்சியமாக நினைத்திருக்கக்கூடுமோ?..


சொந்தமோ, நட்போ எப்போதும் ஒருபோதும் இருப்பதில்லை. அவரவர் சூழல் மாற , வட்டங்கள் மாற மனிதனும் மாறுவார்கள் என்பதை தெரிந்து வைத்து எமக்கும் கற்றுதந்தார்.. அதை ஏற்க பழக்கினார்...

படம் : நன்றி கூகுள்..

அம்மா புராணம் - 1 துணிவு படிக்க

அம்மா செய்துவைத்த மறுமணம் படிக்க





.

Thursday, October 7, 2010

திட்டோ திட்டு..சிறுகதை...








































காலங்காத்தால எழுந்ததும் சுப்ரபாதம் கேட்குதோ இல்லியோ , நடராஜன் சார்வாள் வீட்டிலேருந்து காட்டு கத்தல் கேட்கும்.

வேற ஒண்ணுமில்ல மூத்த பிள்ளையாண்டான் பகத்சிங் மேல அம்புட்டு பாசம்.

அதிலேயும் தினமும் மறக்காம சொல்வது " உனக்கு போய் பகத்சிங் பேர வேச்சேனடா.."

இவன் கேட்டானா அந்த பேரை வைக்க சொல்லி... இல்ல பகத்சிங் மாதிரி வீரத்தை காண்பிக்க சுதந்திர போராட்டம் தான் இருக்கா என்ன?..

இப்படி மனசுக்குள்ளேயே கேள்வியும் கேட்டுக்கொண்டு சிரித்து வைப்பான்..

சில நேரம் அடக்க முடியாமல் சிரிப்பு வந்தால் வாந்தி எடுப்பது போல் பாவனை செய்துகொண்டு பின் கட்டில் போய் விழுந்து விழுந்து சிரித்து வைப்பான்..

கூடவே அம்மாவும் , தம்பி , தங்கையும் வந்திடுவதுமுண்டு..

அப்பத்தான் கொஞ்சம் எரிச்சலாயிருக்கும் அவனுக்கு.. சத்தமா சிரிக்காதீங்கன்னு நிஜமாவே கோபப்படுவான்..அவர்களிடம்..

என்னடா இவனை புரிஞ்சுக்கவே முடியலை னு அலுத்துகொண்டு செல்வார்கள்..

வழக்கம் போல இன்னிக்கும் ஆரம்பிச்சார் அப்பா..

" டேய் எலக்ட்ரிக் பில் கட்ட சொன்னேனே .. இன்னும் கட்டலியா.?.. நீயெல்லாம் எதுக்குத்தாண்டா இருக்க.. தண்டமா..?"

சத்தம் கேட்டதுமே , முதல் அலாரமாய் போர்வையை விலக்கி மணி பார்த்தான்.. சரிதான் 6.45.. அப்பா மார்க்கெட் க்கு போய்ட்டு வந்துட்டார்..போல..

15 நிமிடம் கழித்து..

" அடேய் , அறிவு இருக்கா உனக்கு.. இன்னிக்கு நேர்காணல் இருக்கே . மறந்துட்டியா?.. "


அட 7 மணி ஆயிடுச்சா.?..என எழுந்து உட்கார்ந்தான் சோம்பல் முறித்துக்கொண்டு...

அடுத்த 15 நிமிடத்தில்....

" ஏண்டா கணினி மேசையில் என்னத்த தான் வெக்கிறதுன்னு ஒரு விவஸ்தையே இல்லையா?.."

வெச்சது சின்னவன்.. ஆனா திட்டுவது இவனைத்தான்..

" 7.15 ஆயிடுச்சா..." பல் துலக்க போனான் பகத்சிங்.

" ஏங்க நீங்க கிளம்புங்க . நேரமாச்சு... " அம்மா..

" பெரியவன திட்டினா உனக்கு பொறுக்காதே.. சின்னவன பாரு அவன் வேலைய ஒழுங்கா செய்யுறான்.."

படிக்கும்வரை பெரியவனுக்கும் அளவாதான் இருந்தது திட்டு, இப்ப 3 மாசமா வேலை இல்லாமல் இருப்பதால் திட்டும் கோட்டா கூடிவிட்டது.

சின்னவன் அப்பாவின் முகத்தை நேரா பார்த்தான் ஒருமுறை.. அதாவது "என்னை ஒண்ணும் சொல்ல தேவை இல்லை " என்பது போல..

பெரியவனை திட்டுவது போல சின்னவனை திட்ட முடியாது என்று அப்பாவுக்கு தெரியும்...

அதனால் அடக்கி வாசிப்பார்...சின்னவனிடம்...

"ஏண்டா அந்த பைக் துடைத்து வைக்க சொன்னேனே .. ஒரு அப்பாவுக்கு இந்த உதவி கூட செய்ய கூடாதாடா.?.

உங்களுக்காக மாடா உழைக்கிறேனே...%#%^$%&*^%*(^^...... " ஆரம்பித்துவிட்டார். முழு கச்சேரியை...

ஆஹா 7.45 ஆயிடுச்சா... இனி குளிக்க போயிடணும்... னு நினைத்து கதவை பூட்டிக்கொண்டு உள்ளே சென்று பாட ஆரம்பித்தான்..

" நான் இவ்வளவு கத்துறேன்.. அவன் காதுல போட்டுக்காம பாட்டு பாடுறான் பாரு..."

" ஏங்க அந்த புள்ள பதில் பேசினா , எதிர்த்து பேசுறான் னு திட்டுவீங்க.. பேசாட்டியும் திட்டுறீங்க.. என்னமோ போங்க.." அம்மா..

" ஏண்டி எனக்கென்ன ஆசையா.. திட்டிகிட்டே இருக்கணும்னு..அவனுங்க நல்லதுக்குத்தானே சொல்றேன்..எனக்கெதிராவே வளர்த்து வை...

சரி சரி..சாப்பாடை எடுத்து வை..."

குளித்து முடித்து சாமி கும்பிட்டுவிட்டு நெற்றியில் விபூதி இட்டு வந்தான் பகத்சிங்...

" இந்த பக்திக்கொண்ணும் குறைச்சலில்லை..." சொல்லிட்டே மூக்கில் சிந்தியிருந்த விபூதியை துடைத்தும் விட்டார்.. முகத்தை மறக்காமல் உர்ர்ர் என வைத்துக்கொண்டே..

" டேய் நேர்காணல் நடக்கும் இடத்துக்கு எப்படி போக போற.?."

" பஸ் ல தான் பா."

" ஏன் என்னை கூட்டிட்டு போனா மதிக்க மாட்டாங்களோ.?"

வாந்தி வருவது போல கையை வாயில் வைத்து அடக்கிக்கொண்டான்... வேறு பக்கம் திரும்பி.. தோசை போட வந்த அம்மாவோ தோசை போடாமல்

உள்ளே போய்விட்டார்..சிரித்துக்கொண்டே..

" கெளம்பு டா. சீக்கிரம் . போற வழியில இறக்கி விடுறேன்."

" இல்லப்பா நான் பஸ் ல..." முடிக்குமுன் ,

" ஏய் வெளங்காதவனே.. நேர்காணல் னா சொன்ன நேரத்துக்கு 30 நிமிஷத்துக்கு முன்னால அங்க இருக்கணும் தெரியுதா?.. என்கூட வர

இஷ்டமில்லன்னா ஆட்டோல யாவது போய் தொலை அப்ப..இந்தா 200 ரூபாய்..."

' 100 ரூபாய் போதும் பா..."

" திரும்பி வர உங்க தாத்தாவா தருவார்..கடனா வெச்சுக்கடா.. சம்பாதிச்சதும் வாங்கிக்கிறேன்..என்னமோ நான் கஞ்சன் மாதிரி ஊரெல்லாம் நினைக்க வெப்பீங்களே...."

சின்னவன் முறைத்தான்.. இப்ப அண்ணனையும் , அம்மாவையும் சேர்த்து...அண்ணனை திட்டிய கோபத்தில் சின்னவன் சாப்பிடாமலேயே போனான்..

----------------------------------------------------

நேர்காணல் முடிந்து சோகமா வீடு வந்தான் ..

" சரி விடுப்பா ..அவங்களுக்கு கொடுத்து வைக்கல உன்னை வேலையில் சேர்க்க.." அம்மா.

" இல்லம்மா வேலை கிடைச்சுடுச்சு..சென்னைக்கு போகணும் "

அம்மாவுக்கு முகமெல்லாம் மலர்ச்சி... " நெசமாவாப்பா..?" அம்மா


" அப்புரம் ஏன் அண்ணா , வருத்தம்.. ஜாலியா கொண்டாடிடுவோம்..." சின்னவன் கணினி விட்டு எழுந்து வந்தான்...

" இல்லடா உன்கிட்ட கொஞ்சம் பேசணும்...அப்பா பத்தி"

" என்னண்ணா.இனி அவர் தொல்லை உனக்கு இருக்காது ..திட்டமாட்டார்.. தப்பிச்சுட்ட.எஞ்சாய்..."

" இல்லடா... அதான் என் கவலை.. நம்ம அப்பா ரொம்ப நேர்மையானவர் டா. அதிக பாசக்காரரும்.. சின்ன வயதிலேயே தன்னோட அம்மாவை இழந்து

அப்பாவோட கண்டிப்பிலே வளர்ந்து அத்தைமார் இருவரையும் கரை சேர்த்த அயர்ச்சி அவருக்கு... ரொம்ப கஷ்டப்பட்டுட்டார்டா..வாழ்க்கையில்...

இப்ப இவர் பதவியிலும் நேர்மையா இருப்பதால் பல தொந்தரவுகள்.. அந்த எரிச்சலையெல்லாம் தான் கோபம் போல என்னிடம் கொட்டி தீர்ப்பார்..

சர்க்கரை வியாதி வேறு அப்பாவுக்கு..அதனால் அவர் என்னை திட்டும் ஒவ்வொரு முறையும் எனக்கு அவர் மேல் பரிதாபமாய்தான் இருக்கும்..

இனி அவர் என்னை திட்ட முடியாதே.. தயவுசெய்து எனக்கு பதிலா அந்த திட்டுகளை நீ வாங்கிக்குவியா டா தம்பி.?.. அதுமட்டும் இல்லடா, அப்பா கிட்ட

திட்டு வாங்கி வாங்கி யார் திட்டினாலும் சிரித்துக்கொண்டு சகிச்சு போகும் பழக்கம் வந்தது.. அதனாலேயே எனக்கு நிறைய நட்புகளும்..தெரியுமா டா..".

சிரித்துக்கொண்டே சொன்னான்...

கேட்டுக்கொண்டிருந்த அம்மா, தம்பி, தங்கை மூவர் கண்ணிலும் கண்ணீர்...

பேச வார்த்தையின்றி மெளனமாயினர்.. சின்னவன் மட்டும் அண்ணா கை பிடித்து சம்மதம் சொல்லிவிட்டு


" அண்ணா நீ உண்மையிலேயே வித்யாசமான வீரன் பகத்சிங் தான் ணா.பொறுத்து போவதும் ஏற்றுக்கொள்வதும் வீரம்தான் ன்னு நிரூபிச்சுட்ட..."

சொல்லிவிட்டு அழுகையை மறைக்க உள்ளே சென்றான்..

வீடு அமைதியானது...


உள்ளே நுழைந்தார் அப்பா..

" என்ன எழவு வீடு மாதிரி இருக்கு... இன்னிக்கும் உன் மகன் பல்பு வாங்கிட்டானா ..?" கிண்டலோடு வண்டியை நிப்பாட்டினார்...

அம்மா, தம்பி, தங்கையிடம் " ஏதும் சொல்லாதீங்க " என கண் காட்டிவிட்டு , கடைசி முறையாக அப்பாவிடம் ஆசையாக திட்டு வாங்க தயாரானான் பகத்சிங்..



படம் : நன்றி கூகுள்