skip to main |
skip to sidebar


கடந்த இரு வாரமாக ஐடிசிக்கும் , சிறைச்சாலைக்கும் செல்ல முடியவில்லை...இந்த வாரம் எப்படியாவது சென்றே ஆகணும் என்று எண்ணினேன்..அதே போல ஆலயத்தோழியிடம் சொல்லி நான் சந்திக்க இருக்கும் நபர்களின் விபரம் கேட்டேன்.ஹிந்தி பேச தெரியுமா என கேட்டார்.... இல்லை ஆங்கிலமும் தமிழும்தான்..ஹிந்தி சமாளிக்கும் அளவுதான் தெரியும்..ஆங்கிலம், தமிழ் பேசும் அகதிகளை மட்டும் சந்திக்கிறேன் என்றேன்.முன்பு சிறைச்சாலையில் சந்தித்த பாகிஸ்தானியரிடமும் ஆங்கிலத்தில் தான் பேசமுடிந்தது..( இதுபோன்ற நேரங்களில்தான் ஏந்தான் ஹிந்தி படிக்காம விட்டோமோ னு வருத்தமா இருக்கும்.. )போன முறை ஈழத்தமிழ்ப்பெண்ணை சந்தித்தேன்.. கூடவே ஒரு சிறுமியையும் , சிறுவனையும்...ஒருவர் ஒரு நபரைத்தான் சந்திக்க முடியும்..ஆனால் நான் காத்திருக்கும்போதே ஈழத்தமிழர்கள் சிலர் வெளியில் நம்மோடு அமர்ந்திருக்கையில், வந்து பேசி நட்பாகிடுவார்கள்..9.30 க்கே நான் போய் படிவங்கள் எல்லாம் நிரப்பி கொடுத்தாலும் 10.30 க்குத்தான் உள்ளே உள்ள கதவை திறப்பார்கள்...ஈழத்தமிழர்கள் பேசும் தமிழை கேட்பதே ஒரு இன்பம்.. மிக மரியாதையாகவும் தாழ்ச்சியோடும் இருக்கும்..சில நொடிகளிலேயே அக்கா என அழைத்து உறவும் பாராட்டினால் கேட்கணுமா?..நாம் ஏதும் பேச வேண்டாம் கேட்டுக்கொண்டிருந்தாலே போதும் .. அத்தனை துயரம் நிறைந்த கதைகள் ஒவ்வொன்றும்..நான் போன முறை சென்ற போது இப்படி ஒரு தம்பி மீன் குழம்பு செய்து அக்குழந்தைகளுக்கு எடுத்து வந்திருந்தார்..பெண்ணுக்கு 13, சிறுவனுக்கு 11 வயதாம்.. கடந்த 6மாத வாசம் ...அக்கா அவளோடு பேசுறீயளா ?. னு கேட்டதும் சரின்னு சொன்னேன்..சில சாமான்களை உள்ளே வரை கொண்டு தரும்படியும் கேட்டார்..நான் என் தோழியிடம் அனுமதி கேட்டேன் .. அவர் சிங்களவர்.. மிக நல்ல பெண்மணி..சேவைக்காக தன் வசதியான வாழ்க்கையையே விட்டு வந்தவர்.அவர் சரின்னு சொன்னதும் அந்த தம்பியிடம் 2 பெரிய பைகளை வாங்கிக்கொண்டேன்..எல்லா வகையான பரிசோதனைகளும் செய்துதான் உள்ளே அனுமதிப்பார்கள்..நம்முடைய பாஸ்போர்ட் டிரைவிங் லைசென்ஸ் எல்லாம் வாங்கி வைத்துக்கொள்வார்கள்..நான் சந்திக்க வேண்டிய ஈழப்பெண்ணை சந்தித்த பின் அக்குழந்தைகளை எனக்கு அறிமுகப்படுத்தினார்..அதுவரை மிக துணிச்சலாக இருந்த நான் நொறுங்கிப்போனேன் ..அவர்கள் முன்னால் கண்ணீர் சிந்தக்கூடாது என முகத்தில் ஒரு புன்னகையை வரவழைத்துக்கொண்டு பேசினேன்..இருப்பினும் முடியவில்லை... என் குழந்தைகளே உள்ளே இருப்பது போல் ஒரு பிரமை...மற்றொரு முக்கியமான கஷ்டம் என்னவென்றால் கிட்டத்தட்ட 50 பேரை ஒரே நேரம் இரு கம்பி வலை தடுப்புக்கு பின்னால் இருந்து பேச சொல்வார்கள்..பல்வேறு நாட்டினர் , பல்வேறு பாஷைகள் என கூச்சலும் குழப்பமுமாய் இருக்கும்..நாம் பேசுவது அந்த பக்கமுள்ளவருக்கு கேட்காது..அவர் வாயசைவை வைத்தே அவர் என்ன சொல்ல வருகிறார் என கூர்ந்து கவனிக்கணும்..ஏற்கனவே நொந்து போய் இருக்கும் அவர்களை மேலும் கத்த சொல்லி கொடுமைப்படுத்துவதாய் தோணும்..இருந்தாலும் யாருமே பார்க்க வரமுடியாத அயல்நாட்டில் இப்படி யாராவது வந்து பேசுவது அவர்களுக்கு மிக மகிழ்ச்சியான விஷயம்..ஒரே நேரம் ஒரு அறையில் 600 பேருக்கும் மேலாக கூட அடைத்ததுண்டாம்..படுக்க முடியாமல் இடுக்கிக்கொண்டு உட்காரணுமாம்..நம்பவே முடியாத அளவுக்கு இருக்கு அவர்கள் விவரிக்கும் ஒவ்வொண்ணும்..ஒருவர் மேல் ஒருவர் படுப்பதுண்டாம்..வாயில் வைக்க முடியாத உணவாம்..சோப்பு , ஷாம்பு, லோஷன், நாப்கின் ஏதுமின்றி பெண் பிள்ளைகள் சிலருண்டாம்.இப்படி யாரவது சொந்தமோ நட்போ இருந்தால் அவர்கள் பிழைத்துக்கொள்வர்..அதிலும் ஒரு ஆளுக்கு இவ்வளவுதான் எடை னு பொருள்கள் தர முடியுமாம்..அதே தம்பி அடுத்த முறை பொருள்கள் எடுத்து செல்லும்போது பிடிபட்டாராம்.. பவுடர் டப்பாவுக்குள் செல் போன் பேட்டரி இருந்ததைகாவலர் கண்டுபிடித்து விட்டனர்.. அவ்வளவுதான் இனி அவர் போகவே முடியாது சந்திக்க...இது எனக்கு எச்சரிக்கையும்.. நான் இனி ஒருபோதும் அடுத்தவருக்காக இரக்கப்பட்டு பொருள்களை உள்ளே கொண்டு செல்லமாட்டேன்...வேணுமென்றால் பணமாக கொடுக்கலாம்...உள்ளே கடை உள்ளது விலை அதிகமென்றாலும் தேவைப்படும் போது வாங்கிக்கொள்ளலாம்..நான் இன்று சந்தித்த உகாண்டா நாட்டு பெண் 21 வயது..கூட படித்த சிவிட்சர்லாந்து பெண்ணொருத்திக்கு வாடகை தாயாக முடிவு செய்து ட்ரீட்மெண்டுக்காக தாய்லாந்து அழைத்து வரப்பட்டிருக்கிறாள்.இங்கு ஒரு நல்ல ஹோட்டலில் வைத்து பரிசோதனைகளும் நடந்திருக்கு...ஆனால் இவளுக்கான விசா முடிந்து விட இமிகிறேஷனில் மாட்டிக்கொண்டார்..அந்த பெண் சுவிஸ் சென்றுவிட்டாராம்.. நல்ல பெண் என்றே கூறுகிறார்.. தான் படிக்க அவர்தான் உதவினாராம்.இடையில் என்ன நடந்தது என தெரியவில்லை..இப்போது ஆலயம் மூலமாக அவளை உகாண்டாவுக்கு அனுப்ப ஏற்பாடு செய்கிறார்கள் போல..கடந்த 5 மாதமாக பித்து பிடித்தவளாய் இருக்கிறேன் என்கிறார்.நீ சீக்கிரம் உன் நாட்டுக்கு திரும்ப ஏற்படு செய்கிறார்கள் என்றதும் முகத்தில் கொஞ்சம் பரவசம் , மகிழ்ச்சி..கொஞ்சம் துணிவையும் , ஊக்கத்தையும் கொடுத்து அவரை மகிழ்விக்க வேண்டியதாயிருந்தது...தன் பெற்றோர், தன் தம்பி, தங்கைகளுக்காக இந்த வாடகை தாய் வேலைக்கு சம்மதித்ததாக சொன்னார்...இப்படி வந்து ஐடிசி யில் கிடப்பேன் என கனவிலும் நினைக்கவில்லை..என வருந்தினார்..இப்படி எத்தனை எத்தனை பேர் உலகில் காரணமில்லாமல் கஷ்டப்படுகிறார்கள்..?பணத்துக்காக முன்பின் அறியாதவரிடம் உயிரையே பணயம் வைக்கும் தேவைக்கு எதனால் தள்ளப்பட்டார்கள்..?ஒருபோதும் தீராத பல கேள்விகளோடு விடைபெற்றேன்...படம் : நன்றி கூகுள்

அந்த பாகிஸ்தானிய இஸ்லாமியர் கூறியதை அப்படியே இங்கு பதிகிறேன்.
" நான் அடிக்கடி கார்மெண்ட் விஷயமாக பாங்காக் வழியாக ஹாங்-காங் செல்வதுண்டு. அப்படி ஒருமுறை செல்லும்போது என் விசா முடிவடைய நான் ஹாங்-காங் விமான நிலையத்திலிருந்து பாங்காக் டிடென்ஷன் செண்டருக்கு அனுப்பப்பட்டேன்..
அங்கு ஒருநாள் இருந்துவிட்டு என்னை அதிகாரிகள் மீண்டும் விமான நிலையம் அனுப்பினர்.. நான் மீண்டும் பாகிஸ்தானுக்கு தான் அனுப்ப போகிறார்கள் போலும் என நிம்மதியாக இருந்தேன்..
திடீரெனெ 2 அதிகாரிகள் வந்து என் பேக்-பேக் பையை பரிசோதனையிட்டு அதிலிருந்து சுமார் 200 கிராம் எடையுள்ள போதை மருந்தினை எடுத்தனர்..எனக்கு அதிர்ச்சியும் ஆச்சர்யமும்..
என்ன நடக்கிறது என நான் புரிவதற்குள் , ஏதும் பேசாமல் என்னை விசாரணைக்கு அழைத்து சென்றனர்.. நான் ஹாங்-காங்கிலிருந்து வந்ததையும் டிடென்ஷன் செண்டரில் வைக்கப்பட்டதையும் எடுத்து சொல்லியும் யாரும் செவி மடுப்பதாயில்லை..
பிடிக்கணும் னா பல சோதனைகளை தாண்டி வந்த போதே என்னை பிடித்திருக்கலாமே. அல்லது நான் அப்படி போதை பொருள் கடத்தணும்னா , அதை என் லக்கேஜில் வைத்திருப்பேனேயொழிய கேரி லக்கேஜிலா வைப்பேன்..எல்லாரும் பார்க்கும்படி?..
எனக்காக ஆஜரான அரசாங்க வக்கிலோ ஆமா, சரி என்ற இரு வார்த்தையை தவிர ஏதும் பேசவில்லை.. எனக்கு தண்டனை குறைந்த பட்சம் 15 வருடம் என தெரியும்..
ஆனால் இவர்களோ , ஃப்ர்ஸ்ட் டிகிரி, செகண்ட் டிகிரி, தேர்ட் டிகிரி என என்னெல்லாம் போட முடியுமோ அத்தனையையும் போட்டு 100 வருடம் தண்டனை என சொல்லிவிட்டனர்..கேட்டதும் அப்படியே பிரமை பிடித்தவனானேன்.. உலகமே இருண்டது..
கொஞ்சம் வசதியான சூழலில் வளர்ந்து பழக்கப்பட்ட நான் கைதிக்கான உடையணிந்து கூட்டத்தோடு அடைக்கப்பட்டேன்.. சிறைக்குள் பல விதமான குற்றவாளிகள்.. முரடர்கள்.. என பல்வேறு நாட்டினர்...
சிலர் வெறி வந்து சண்டையிடுவதுண்டு.. அலறுவதுண்டு..மனசிதைவில் கத்தி ஆர்ப்பாட்டம் செய்வதுண்டு.. இதெல்லாம் கண்டு ஆடிப்போனேன்..
நல்லவேளை எனக்கு திருமணம் ஆகவில்லை.. ஆனாலும் என் சகோதர சகோதிரிகளுடனும் அவர்கள் பிள்ளைகளுடனும் குடும்பமாக வாழ்ந்து வந்தேன்..குடும்பத்தின் மூத்த மகன் நான்..
இஸ்லாமிய முறைப்படி வளர்க்கப்பட்டேன்.. என் பெற்றோர் , குடும்பத்தார் 5 முறை தொழுகை செய்பவர்கள்..நாங்கள் சொந்தமாக ஆடை தயாரிக்கும் நிறுவனம் வைத்திருந்தோம்..அடிக்கடி வெளிநாடு செல்வதால் என் பெற்றோரை அதிகமா நான் கவனிக்கவில்லையோ என்ற மனக்குறை எப்போதும் எனக்குண்டு.. ஆனால் என் தம்பியை பாராட்டணும்.
அமெரிக்காவில் 20 வருடம் இருந்துவிட்டு பாகிஸ்தான் வந்து என் அன்னையை கவனித்துக்கொண்டார் அப்பாவின் மறைவுக்குப்பின்.. அந்த பாவம்தான் எனக்கு இத்தண்டனையை தந்திருக்கணும் என நானே என்னை சமாதானப்படுத்திக்கொண்டேன்.. எனக்கு தண்டனை வழங்கும் காலம் பாகிஸ்தானுக்கும் தாய்லாந்துக்கும் ஒப்பந்தம் ஏதும் இல்லை..
ஆனால் 2 வருடம் கழித்து அந்த நல்ல விஷயமும் நடந்தது.. ட்ரீட்டி மூலம் என் தண்டனை காலம் 30 வருடமாக குறைக்கப்பட்டது.. அதன்பின் ஒவ்வொரு வருடமும் தாய்லாந்து அரசரின் பிறந்த நாள் மன்னிப்பு என சொல்லி 15 வருடத்துக்கு தண்டனையை குறைத்தார்கள்..
இப்பதான் கொஞ்சம் வாழ்க்கையில், பிடிமானமும் நம்பிக்கையும் வந்தது.. பின்பு நன்னடத்தை காரணமாக என்னை இந்த வருடம் ( 11 ஆண்டுக்கு பின் ) விடுவிப்பதாக சொல்லியுள்ளனர்...காகித வேலைகள் முடிவடைந்ததும் என்னை பாகிஸ்தான் அனுப்பிடுவார்கள்..
முதலில் என் குடும்பத்தாருக்கு கடிதம் போட்டேன்.. பதிலில்லை.. ஒருவேளை காவலர்கள் முறையாக கடிதத்தை தரவில்லையோ என்ற எண்ணமுமுண்டு...
நல்லவேளை எனக்கு சர்ச் மூலம் அறிமுகமானார் பிரிட்டனிலுள்ள தோழி ஒருத்தி.. அவர் திருமணமானவர்.. குழந்தைகள் இரண்டு..அற்புதமான பெண்மணி..
எனக்கு வருடந்தோறும் 100 டாலர் அனுப்புவார்.. என்னைப்போல பலருக்கும் அனுப்புவாராம்.. அவர் மூலம் என் குடும்பத்தாரை தொடர்பு கொண்டேன் பின்பு.. அதன்பின் யாரையும் தொந்தரவு படுத்த விரும்பவில்லை.. என்னால் அவர்களுக்கேதும் பிரச்னையும் வந்திடக்கூடாது..
சிறைக்குள்ளே அவர்கள் கொடுக்கும் உணவைதான் உண்ணணும்.. ஒரு கடை உண்டு.. அதில் கோக் , பெப்ஸி போன்ற பானங்கள் , பண்டங்கள் இருக்கும்.. ஆனால் விலை அதிகம்..
ஒரு கோக் வாங்க நான் ரொட்டி போட்டு விற்று தான் வாங்க முடியும்.. ஆக, கோக் குடிப்பது என்பது எமக்கு அதிகமான ஆடம்பரம்..மேற்படி தனிப்பட்ட செலவுகளை நம் காசில்தான் பார்த்துக்கொள்ளணும்..
என்னைப்போல் சொந்தம் ஏதும் இல்லாதவர்களை இப்படி உங்களைப்போல சர்ச் மூலமா வந்து பார்ப்பார்கள்.. அது எங்களுக்கு மிகுந்த உற்சாகமும் , ஆறுதலும்..
என் தந்தையின் நிலமொன்று அரசு எடுத்தது.. ஏக்கர் கணக்கில்.. அது குறித்து கோர்ட்டில் கேஸ் நடந்தது.. என்னாயிற்று என தெரியவில்லை.. என்னிடம்தான் பவர் ஆஃப் அட்டார்னி இருக்கிறது.. நான் சென்றுதான் குடும்பத்தார்க்கு சில விஷயங்களை செய்யணும்..
ஒருவேளை அவர்கள் என்னை ஏற்காவிட்டால் என்ன செய்வது என நான் என் மனதை திடப்படுத்திக்கொண்டிருக்கிறேன்..
சிறையில் நாங்கள் 6.30 திறந்து விடப்படுவோம் ..பின்பு மதியம் 3 மணிக்கு அடைக்கப்படுவோம்.. காலை 6.30 மணிக்கு சமையலறை சென்று நானும் சிலரும் பரோட்டா போடுவோம்.. நான் கறி பரோட்டா போடுவதில் வல்லுனர் .. இதை கவனித்த பிரிட்டன் கைதி ஒருவர், நான் விடுதலையானதும் கேமரூன் எனும் தீவில் எனக்கு ஒரு சின்ன உணவகம் அமைத்து தருவதாக சொல்லியுள்ளார்..
என் குடும்பத்தார் என்னை நிராகரிக்கும்பட்சத்தில் அங்கு சென்று ஒரு புது வாழ்க்கையை தொடங்கலாம் என்றுள்ளேன்..
உங்க கூட வந்திருக்காங்களே அந்த சிங்கம் போன்ற சிங்களப்பெண்மணி, அவர்தான் எனக்கு கேமரூன் தீவு பற்றி இணையத்தில் தகவல் எடுத்து அனுப்புவார் புத்தகம் போல.. நான் படித்துக்கொண்டிருக்கிறேன்..
சிறைக்குள் நூலகம் இருக்கிறது.. பல விதமான புத்தகங்கள்.. வாசிக்கவோ எழுதவோ நேரமின்று சுற்றிக்கொண்டிருந்த எனக்கு இங்கு அதுதான் முழுநேர வேலை.. அறையில் தொலைக்காட்சி உள்ளது உலக செய்திகள் அறிவேன்.. பகலில் டேபிள் டென்னிஸ் விளையாடுவேன்..
நான் பாகிஸ்தானில் டென்னிஸ் விளையாடியுள்ளேன்..மற்றவர்கள் , முக்கியமா தாய் காரர்கள் கால்பந்து ஆர்வமாய் விளையாடுவார்கள்..
தாய்லாந்து கைதிகளுக்கு மட்டுமே தையல் தொழில் கற்றுத்தந்து சம்பாதிக்கவும் வழி செய்கிறார்கள்.. வெளிநாட்டு கைதிகளுக்கு வேலை ஏதும் இல்லை.. எங்கள் குடும்பம் தையைல் தொழிலில் இருந்ததால் எனக்கு மிக ஆர்வமாய் இருக்கும் அதை காண..
இரவு எழுந்து எழுத தோணும் எழுதுவேன்..
ஒருமுறை நான் தூங்கிக்கொண்டிருந்த போது திடீரென சில வார்த்தைகள் எழுத்து வடிவில் வந்து போனது..
எனக்கு அது புரியவில்லை.. ஆனால் உடனே காகிதம் எடுத்து எழுத தூண்டியது.. எழுதும்போது " நான் உன்னை மன்னித்தேன் .. எப்பவும் நேசிக்கிறேன்... " என்று என் அன்னை சொல்வது போல இருந்தது.. அதுவே எனக்கு மிகப்பெரிய விடுதலையாக இருந்தது...
இத்தனை நடந்தும் நான் மனதளவில் துணிவா இருப்பதற்கு இறை பற்றே காரணம்.."
இவர் பேசிக்கொண்டிருக்கும்போதெ பல கைதிகள் இவரிடம் வந்து கட்டியணைத்து அன்பை தெரிவித்துக்கொள்கின்றனர்... விடுதலை ஆகப்போவது குறித்து ஒருபக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும் குடும்பத்தார் வரவேற்பை குறித்து கலக்கத்தோடு காத்திருக்கிறார்...
நான் எடுத்து வளர்த்த குழந்தைகள் எல்லாம் இப்ப திருமணமாகி பிள்ளைகள் இருக்கிறதாம்... என் சகோதர சகோதிரிகள் தாத்தா , பாட்டி ஆகிவிட்டனர் என சிரிக்கிறார்..
எல்லாம் நன்றாகவே நடக்கும் என வாழ்த்தி விடைபெற்றோம்.. அவர் குற்றம் செய்தாரா, இல்லையா என்பது கடவுளுக்கே வெளிச்சம்.. அதை சட்டமும் பார்த்துக்கொள்ளட்டும்.. எமது வேலை குற்றத்தை மனதார உணர்ந்த/உணர வைக்க ஒரு மனித மனத்துக்கு மனிதாபிமானத்தோடு ஆறுதலளிப்பது மட்டுமே...எல்லாம் நன்றாகவே நடக்கும் என வாழ்த்தி விடைபெற்றோம்..
அடுத்து டிடென்ஷன் செண்டரிலுள்ள கைதிகள் ( குற்றமிழைத்தவர்கள் அல்ல , விசா , பாஸ்போர்ட் இல்லாதவர்கள் ) முக்கியமா இலான்கை
அகதிகள் பற்றி பார்க்கலாம்...
(பொன்னான நேரத்தை அவசியம் இருந்தாலொழிய பின்னூட்டத்தில் செலவழிக்க வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.. எழுதுவது என் திருப்திக்கும் , சில செய்திகளை தர மட்டுமே... )
சிறை சந்திப்பு - தனிமைப்படுத்துதல் - 1 ...
தலைநகருக்கு வெளியே கிட்டத்தட்ட 40 கி.மீ தூரத்தில் அமைந்திருக்குது முக்கிய குற்றவாளிகளின் மிகப்பெரிய சிறை...பாங்குவாங் சிறைச்சாலை..
80 ஏக்கர் பரப்பளவில்.. சுமார் 8000 கைதிகள் இருக்கிறார்கள்.. வெளி சுவர் சுமார் 2400 மீட்டர் நீளமும் , 6 மீட்டர் உயரமும் , 1 மீட்டர் பூமிக்கடியில் ஹை வோல்டேஜ் வயர்கள் பதிக்கப்பட்டும் இருக்கிறதாம்....
இதில்தான் வெளிநாட்டவர் பலரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்..
ஆலயத்தின் மூலம் பலர் சமூக சேவையாக இச்சிறையிலுள்ள வெளிநாட்டவரை சந்திப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
பல காலமாக நானும் இதில் பங்கெடுக்க ஆவல் கொண்டிருந்தாலும் வேலை குடும்பம் நிமித்தமாக அதற்கான சந்தர்ப்பம் கிடைக்காமலே தள்ளிப்போட்டுக்கொண்டே வந்துள்ளேன்..
இந்த வாரம் தோழியர் இருவர் தாம் செல்லவிருப்பதாகவும் முடிந்தால் கலந்துகொள்ளுமாறும் சொல்லவே அதற்கான ஏற்பாடுகளோடு கிளம்பினோம்..
காலை 8 மணிக்கு பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பிவிட்டு தயாரானேன்..கிட்டத்தட்ட 1 மணி நேர பயணம்.. மழை வேறு தூர ஆரம்பித்தது..தோழி ஃபார்சூனரை அதி வேகத்தில் ( 120-140 கிமீ )மோட்டார் வே யில் முன்னால் ஓட்ட, நான் அவரை பின்பற்றி ஓட்ட , சில நேரம் இடையில் புகும் வாகனங்களும் மழையும் தடுமாற செய்தது...இருப்பினும் அப்பப்போ தொலைபேசிக்கொண்டார்..புது இடம் ...புது வழி..
ஒருவழியாக 9 மணிக்கெல்லாம் அங்கு சென்று பாஸ்போர்ட் ( அல்லது ஓட்டுனர் லைசென்ஸ் ) காண்பித்து நாம் சந்திக்கவிருக்கும் நபரின் முழு விபரங்கள் தந்து அங்குள்ள அலுவலில் சமர்ப்பித்து காத்திருந்தோம்.
தோழி ஒரு பெரிய லிஸ்ட் வைத்திருந்தார்.. பல நாட்டினர்..யாரை சந்திக்க விருப்பம் என என்னை கேட்டார்.. எனக்கு என்ன தெரியும் நீங்களே யாரையாவது சொல்லுங்கள்.. என்றேன்.
சரி , ஒரு நபர், சீக்கிரம் விடுதலையாகிறார்.. பாகிஸ்தானியர்.. நன்றாக பேசுவார். என்றார்.
அவர் விபரம், அவர் தங்கியிருக்கும் அறை, கட்டிட எண், நாடு , எல்லா விபரமும் அளித்தோம்..
தோழிகள் கடந்த 2 வருடமாக சந்தித்துள்ளதால் என்னை தயார்படுத்தினார்கள்..
நான் அவர்களிடம் கேட்டுக்கொண்டதெல்லாம், எப்படி பேசுவது என்பதல்ல , எதெல்லாம் பேசக்கூடாது, தவிர்க்கணும் என்பதை மட்டுமே..
அதற்கு அவர்கள் " நீ ஒண்ணுமே கவலைப்பட வேண்டாம்.. உன் காதுகளை, புன்னகை படற விட்டு மட்டும் கொடுத்தால் போதும்.. அதுமட்டும்தான் அவர்களுக்கு தேவை.." என்றார்கள்..
உள்ளுக்குள் சின்ன பயம்.. நான் சந்திக்க விருக்கும் நபர் போதை மருந்து கடத்தலில் மாட்டிக்கொண்டவராம்.. எப்படி இருப்பார்.?.. என்ன பேசுவது?..
யோசித்துக்கொண்டிருக்கும்போதே 9.30 க்கு அழைத்து அனுமதிக்கான படிவம் கொடுத்தார்கள்.. பின் ரோட்டை கடந்து எதிரிலுள்ள மிகப்பெரிய சிறைச்சாலைக்குள் வலது காலெடுத்து நுழைந்தோம்..
மிகப்பெரிய ராட்சத கதவுகள், ராட்சத பூட்டுகளோடு ..கொண்டிகளோடு.. பல காவலர்கள் துப்பாக்கியோடு...
அருகில் புத்த பிட்சுகள் சின்ன மண்டபம் போன்ற இடத்தில் ஓதிக்கொண்டிருந்தார்கள்.. சுமார் 30 பேர்..
கையில் வேறெதுவும் எடுத்துக்கொள்ள வேண்டாம் என சொன்னதால் எல்லாவற்றையும் வண்டியிலேயே வைத்தேன்.. வாகன சாவியும் மொபைலும் மட்டும் கையில்..
அவர்கள் இருவரையும் பரிசோதித்துவிட்டு என்னை மட்டும் நிப்பாட்டினார் ஒரு பெண்.. தொலைபேசியை லாக்கரில் வைத்து விட்டு வர சொன்னார்..
மீண்டும் வெளியே சென்று அங்குள்ள லாக்கரில் வைத்துவிட்டு வந்தேன்.
உள்ளே தாய்மக்களுக்கு என தனியாக இடமும், வெளிநாட்டவருக்கு என தனியாக இடமும் ஒதுக்கப்பட்டிருந்தார்கள்..நீண்ட தாள்வாரம் . கிட்டத்தட்ட 50 தொலைபேசிகள்.. ஒவ்வொன்றிர்க்கும் நாற்காலி போடப்பட்டிருந்தது..
கண்ணாடியாலும் கம்பிகளாலும் தடுக்கப்பட்டிருந்தது.. பின் 3 அடி இடவெளியில் நீண்ட தாள்வாரம்.. அதே போல அந்தப்பக்கமும் கண்ணாடியாலும் கம்பிகளாலும் தடுக்கப்பட்டிருந்தது.. இருவருக்குமான இணைப்பு தொலைபேசி வழியாக...காத்திருந்தோம் . 10.30 வரை.. ஒவ்வொருவராக வந்தார்கள் ..
வந்தவரெல்லாருமே நம்மையும் பார்த்து சிரித்து கையாட்டிவிட்டு சென்றார்கள்.. நம்மை தெரியாவிட்டாலும்..
மனிதர்களை பார்ப்பதே ஒரு குதூகலம் போல,... மிக அழகாக ஆடை அணிந்திருந்தார்கள் சலவை செய்யப்பட்டு.. வாடிய முகம் ஏதுமில்லை..
முகச்சவரம் செய்யப்பட்டு தெளிவாக இருந்தார்கள்.. சினிமாவில் பார்ப்பதுபோல்.. ( நம்ம தமிழ்நாட்டு கைதிகள் தான் பாவமோ?.. இல்லை எனக்கு அவர்களைப்பற்றி தெரியவில்லையா..?)
எனது தோழியில் ஒருவர் சிங்களத்தவர், மற்றொருவர் டெல்லியை சேர்ந்தவர்,... சிங்கள தோழி பன்னாட்டு சேவை நிறுவனத்தில் பகுதி நேர வேலை செய்கிறாராம்... ( ரெட் க்ராஸ் மாதிரி ). ஆள் ஆஜானுபாகு தோற்றம் .. கம்பீரமான பெண்மணி,... அவர் காண வந்த நபர் சீக்கிரம் வந்துவிட சிங்களத்தில் இனிமையாக பேசத்தொடங்கினார்.. ஒட்டுக்கேட்டும் புரியவில்லை.:)
அடுத்த தோழிக்கும் ஆள் வந்துவிட்டார்.. அவர் மனைவி வெளிநாட்டிலிருந்து எழுதிய கடிதத்தோடு தோழி வந்திருந்தார்..அதை பற்றி சொல்லிக்கொண்டிருந்தார்..அருகிலேயே..
நான் சந்திக்க வேண்டிய நபர் மட்டும் வந்த பாடில்லை.. வந்தால் மட்டும் அடையாளம் தெரியுமா என்ன?.. செல்வோரையெல்லாம் இவராய் இருக்குமோ என பார்த்து கொண்டிருந்தேன்..
அதற்குள் அருகில் யாருடனோ பேசிக்கொண்டிருந்த பஞ்சாபி நபர் ஒருவர், நீங்க இந்தியரா, எனக்கு மேகசின் அனுப்பி தர இயலுமா என ஆசையோடு என் தொலைபேசி எடுத்து கிடைத்த சிறிது நேரத்தில் கேட்டார்..
தான் 16 வருடம் சிறையில் இருப்பதாகவும் எம்பஸியை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் சொன்னார்.. நான் கேட்டுக்கொண்டேன்..
எவ்விதமான சத்தியமும் அவர்களுக்கு தந்துவிடக்கூடாது.. ஆனால் கேட்டுக்கொண்டு முயல்கிறோம் என மட்டும் சொல்லணும்..
இவரிடம் பேசிக்கொண்டிருந்த போதே நான் சந்திக்க வேண்டிய நபர் வந்தார்.. வந்ததும் தோழி கண்டுகொண்டு என்னை அறிமுகம் செய்து வைத்தார்..இந்தப்பக்கம் உள்ள தொலைபேசியில்..
மிகுந்த மலர்ச்சியுடன் பேச ஆரம்பித்தார்.. மிகுந்த மரியாதையோடு, வரிக்கு வரி என் பேரை மரியாதையோடு உச்சரித்து பல வருடம் பழகிய நபரைப்போல் பேசினார்..( அவர்கள் பெயர் இங்கே பதிய இயலாது...இஸ்லாமியர்.. பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்..அடுத்த முறை பெண்கள் சிறைக்கு செல்லலாம் என இருக்கிறோம்..முக்கியமாக இலங்கை அகதிகள் இருக்கும் டிடென்ஷன் செண்டர்... )
தன் கதையை சொல்ல ஆரம்பித்தார்.. போதை கடத்தல் என சொல்லி 100 வருட தண்டனை கொடுத்தார்களாம் ...வெளிநாட்டவர் என்பதால்...
இங்கு போதை கடத்தல் என்றால் உடனே மரண தண்டனைதான்.. இப்படி கொல்லப்பட்டவர்கள் லட்சக்கணக்கில் இங்கே...
தொடரும்.................
( எனக்கு பின்னூட்டமிட நேரம் இருப்பதில்லை. அதனால் எதிர்பார்ப்பதுமில்லை.. ஆகையால் பொன்னான நேரத்தை அவசியம் இருந்தாலொழிய பின்னூட்டத்தில் செலவழிக்க வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.. எழுதுவது என் திருப்திக்கும் , சில செய்திகளை தர மட்டுமே... )