Friday, August 29, 2008

ஆண்மகனுக்கோர் கவிதை...

பெண் என்றால் எல்லா கலைகளும்
தெரிந்திருக்கணுமென எல்லாம் கற்றுகொள்ளச்செய்தாய்.

மணமானதும் கணவன் பேச்சை மட்டும் கேள்,
மணாளன் ரசிக்காததை விட்டுவிடு..

மாப்பிள்ளைக்கு பிடித்தமாதிரி நடந்துகொள் என்கிறாயே??
இதுதான் அதிமுக்கியமான கலையா அண்ணா?.

உன்மீது வருத்தமில்லை அண்ணா, ஆனால்
வரப்போகிற அண்ணியிடம் நீயாவது ரசிக்கக்கற்றுக்கொள்..

ஆண்மகனுக்கோர் கவிதை

ரிமோட் எடுக்கும் உன் பிஞ்சு கைகளை
பிடித்து இழுத்து முத்தமிடுகிறேன்..

குளித்து முடித்து உடை உடுத்த ஒடி
ஒளிகின்ற உன் பாதம் எடுத்து கிச்சுமூட்டுகிறேன்..

சமையலறையில் அழிச்சாட்டியம் பண்ணும் உன்னை
இருக அணைத்தே பல்லைக்கடித்து கொஞ்சுகிறேன்..

அலுக்காமல் சேட்டை பண்ணி சலிக்காமல்
தண்டனையும் அன்பாலே பெறுகிறான் குழந்தை..

நான் செய்தால் இத்தண்டனை எனக்குண்டா என்கிறாய்..
தண்டனையில்தானே வந்ததிந்த பெருஞ்சேட்டை என்றறிந்தும்..

ஆண்மகனுக்கோர் கவிதை...

இன்றைய கவி:


இரவு கண்டு பயப்பட்டேன்..
உறங்காதிருப்பேன் அருகில் என்றாய்.

சைக்கிள் கற்க மாட்டேன் என்றேன்,
உபயோகம் சொல்லி கற்றும்தந்தாய்

அறிவியல் பாடம் பிடிக்காதென்றேன்
அறிவாளி என்தங்கை என சொல்லிதந்தாய்..

தண்ணீரென்றாலே பயந்தோடுவேன்,
தள்ளியே விட்டு நீச்சல் பழக்கினாய்..

எல்லாம் கற்றுத் தந்தாய், தந்தையாய்,
கணவரை, குழந்தையை சமாளிக்க கற்கவில்லையே ணா????

ஆண்மகனுக்கோர் கவிதை...

அதிசயமாய் தானிருக்குது இப்போதெல்லாம்
நீ உன் பைக்கில் என்னை அழைத்துச்சென்று
கல்லூரியில் விடுவதும்,பின்பு காத்திருந்து அழைத்து வருவதும்..

பெட்ரோலுக்கு காசு தருகிறேன் என்றா?.. இருக்காதே...???

ஆனால் ஒன்றுதான் புரியவில்லை ,
அடுத்த தெரு முனைக்கு சென்றதும்
தினமும் மக்கர் பண்ணுதே உன் பைக்கும் உன் மனம் போல..???

பின்பு நடுரோட்டில் வீரன் போல சரி செய்வதும்,
முடித்ததும் கண்ணாடிக்கு முத்தம் கொடுப்பதும்...
நான் வரவில்லையடா அண்ணா நாளையிலிருந்து ...!!!

ஆண்மகனுக்கோர் கவிதை...

இனி அண்ணா என்ற கோணத்தில்....

அது ஏன் அண்ணா என் தோழிகள்

நம் வீட்டுக்கு வரும்போது மட்டும்
உன் சாமான்கள் தொலைவதும்,
அதை அவர்கள் அமர்ந்துள்ள
அறைகளில் மட்டும் தேடுவதும்.
எப்போதும் கைபேசிக்கு வரும் அழைப்புகள்
வீட்டு தொலைபேசிக்கு வருவதும்
தொலைக்காட்சி அலறுவதும்,
ஒழுங்காய் உடற்பயிற்சி செய்பவன் போல
அதற்கான உபகரணங்களை எடுத்து செல்வதும்
நீ என்னை என்னடா, என்னம்மா

என செல்லமாக அழைப்பதும்...????

தாங்கத்தான் முடிவதில்லை...:-))

ஆண்மகனுக்கோர் கவிதை...

இனி அண்ணா என்ற கோணத்தில்....

வருகிற மாப்பிள்ளையெல்லாம் பிடிக்கவில்லை
என் நீ தட்டிக்கழிக்கிறாயே அண்ணா..

சந்தேகமாயிருக்கு, உன் நண்பரான,
சோடாபுட்டியின் பார்வையும்,
நம் வீட்டு ஜன்னலை அரை மணிநேரம்
கடக்கும் யானைக்குட்டி அவனும்,
தெருவில் நின்றே உன்னை எட்டிப்பார்க்கும்
ஒட்டகச்சிவிங்கியும்
எனக்கு மாப்பிள்ளையாய் முடிவு செய்திட்டாயோ என.

தொடர்ச்சியாய் என்னால் கொடுமைப்படுத்த முடியாதென்றும்,
உன் தங்கை உன்னைப்போல் பொறுமைசாலி இல்லையெனவும்
சொல்லிவை அவர்களிடம்...

ஆண்மகனுக்கோர் கவிதை...

பல வேலை பல சுமைகளோடு
பள்ளி செல்லும் குழந்தை அனுப்பி
பகட்டாய் உடுத்தி அலுவல் வந்து
படபடப்புடன் வேலையும் பார்த்து
பத்திரமாய் வாகனம் ஓட்டி
பசியோடு போக்குவரத்தில் சிக்கி
பதில்பேச முடியாது தொலைபேசி செயலிழக்க‌‌,
பயத்தில் நேரமானதால் கற்பனை கொண்டு ,

பட்டம்பூச்சியின் பரிதவிப்புடன் திட்டுகிறாய் நீ.
பரபரப்பிலும் உன் பாசத்தைமட்டும் காண்கிறேன் நான்.

ஆண்மகனுக்கோர் கவிதை...

அதிக காரமாய் இருந்தாலும்
அதிராமல் சாப்பிட்டு
அளவோடு எடுத்துக்கொள்ள
அறிவுறைத்துவிட்டு
அருகேயே நின்ற பொழுதும் உரைக்கவில்லை

என் உறைப்புதாங்காமல்
தும்மும் போது
தலையில் தட்டி
தண்ணீர் கொடுக்கவே
நின்றாய் எனும்போது
கண்ணீர் வந்தது
உறைத்ததால் அல்ல, நீ உரைக்காத( காத)லால்

ஆண்மகனுக்கோர் கவிதை

எதைக்கேட்டாலும்
உனக்கொண்ணும் தெரியாது
என என்னிடம் சொல்லி
எல்லாமே நீயே செய்ய ஆசைப்பட்டாய்.:-)

ஆனால்
எல்லாம் தெரிந்த உன்னிடம்
உன் பிள்ளை வந்தால் மட்டும்
அம்மாவிடம் கேள் என்கிறாய்
புரியவேயில்லை இன்னும்..????

ஆண்மகனுக்கோர் கவிதை...

எனக்கான பொருளையும் நீயே சுமந்து வரும்போது பங்கு கேட்டால் தர மாட்டேன் என்கிறாய்.

காரணம் கேட்டால் என் பிள்ளையை மட்டும் நீ ஒத்தையில் சுமக்கிறாயே, எனக்கு பங்கில்லையா என்கிறாய்.




ஆண்மகனுக்கோர் கவிதை ...


அம்மா வீட்டிலிருந்து தொலைபேசி அழைப்பு
அருமையாய் பேசிவிட்டு என்னிடம் முக‌ம் சுழிப்பு.


அக்கா வீட்டு விசேஷ‌ம் கூட‌மாட‌ ஒத்தாசை.

எப்ப‌டியாவ‌து த‌டுத்துவிட‌ போடுகிறாய் பெரும் ஓசை.


ம‌ருத்துவ‌ம‌னையில் ப‌க்க‌த்து வீட்டுக்கு சாப்பாடு.

உன்னைத்த‌விர‌ ஊராரைக்க‌வ‌னிப்ப‌தாய் கூப்பாடு.


உன் அக்கா குழ‌ந்தைக்குதானே காதுகுத்து

அரைப்ப‌வுன் போதும் அதுக்கும் மேலென்றால் வீண் க‌த்து..


வேலைதேடும் கொழுந்த‌னுக்கு உப‌ச‌ரித்து க‌வ‌னிப்பு

வேண்டாத‌வ‌னாயிட்டேனா என‌ ஒரு வீராப்பு...


எல்லாமே ஆண்சிங்கம், தானே முக்கியம் என்ற‌ க‌ர்வ‌ம்..

இருந்தாலும் காரியம் சாதிக்கிறேனே நீதான் என் த‌ங்க‌ம்...

Tuesday, August 26, 2008




பிடிக்கும் உன்னை பிடிக்கும்..:-))

" அட அவளேதான் வந்துட்டா... அவ கார்தான் ,. அதே சிவப்பு நிற மாருதி..."
இன்னிக்கு எப்படியாவது முந்திட வேண்டியதுதான்... தினமும் சரியாக 7.45 க்கு வந்திடுறா...?.. கொஞ்சம் குண்டாயிருந்தாலும் ஆப்பிள் மாதிரி கன்னங்கள் அழகாத்தானிருக்கு...
ஆனா அந்த தலை அலங்காரமும் அதில் உள்ள பூவும் தான் பிடிக்கவில்லை... சே சே, என்ன ரசனையோ...??.

அடுத்த சிக்னலில் அவள் வண்டிக்கு முன்னால் வந்து கிரீச்சுட்டு வந்து நின்னாச்சு... ஆனாலும் அவளை பார்க்காத மாதிரியே பார்த்தும் விட்டான்...அது அவனுக்கு மட்டும் கைவந்த கலையோ??... அட ஆமா அவளும் என்னைத்தான் பார்க்கிறாள்... பார்க்காத மாதிரி..புன்னகைக்கிறாளா என்ன?. இலை அவள் வாயே அப்படித்தானா?..

" வ‌ந்துட்டானா?.. ஆளைப்பாரு, அவ‌னும் அவ‌ன் பொருத்த‌மில்லாத ஷுவும், சாக்ஸூம்...அதென்ன‌ எண்ணெய் க‌டை சொந்த‌க்கார‌னா?.. த‌லையில் இப்ப‌டி வ‌ழியுது முக‌த்தின் அச‌டுக்கு போட்டியாக‌...?????
" அடிக்க‌டி கைக்க‌டிகார‌த்தை ஸ்டைலாய் பார்த்துக்கொள்கிறான்.. ஹிஹி... ரொம்ப‌த்தான்..."

' பெரிய சூப்பர்மேன் னு நினைப்பு.. சட்டை பட்டனை ஒழுங்கா போட்டா என்னவாம்... கையில் என்ன வளையலா இல்லை வளையமா?.. பம்பிளிமாஸ் மாதிரி.. கன்னம்...ஹிஹி...அழகாய்தானிருக்கான்..."
சிக்ன‌ல் போட்ட‌தும் ஒரே சீராக‌ ப‌க்க‌த்தில் போகுது அவ‌ள‌து மாருதியும் , பைக்கும்...
ரோஸ் நிற‌ உத‌டுக‌ள்... லிப்ஸ்டிக்கா இல்லை இய‌ற்கையிலேயே அப்படித்தானா?..
யோசித்துக்கொண்டிருக்கும்போதே வ‌ண்டி ப‌ள்ள‌த்தில் ஏறி இற‌ங்கிய‌தில் உடையில் த‌ண்ணீர் தெறித்துவிட‌, உட‌னே அவ‌ளைத்தான் பார்க்க‌த்தோணுது...
வாயை மூடிக்கொண்டு க‌ண்க‌ளால் சிரித்தாலும் க‌ன்ன‌க்குழி காண்பித்து கொடுத்துவிடுகிற‌தே...
இப்ப‌ என்ன‌ சிரிப்பு வேண்டிகிட‌க்கு... ?.. கைகுட்டை எடுத்து துடைத்துக்கொள்கிறான், முக‌த்தில் வ‌ழிந்த‌ அச‌டை...

ச‌ரி அடுத்த‌ சிக்ன‌லில் திரும்பி விடுவாள்.. ஆமா அவள் பேர் என்ன‌வாயிருக்கும்?... ப‌த்மா, தேவி, திவ்யா?... என்ன‌ இது என்ன‌வா இருந்தா என்ன‌.. ராட்ச‌சி....
" அட‌ இன்னிக்கு என்ன‌ ஆச்ச‌ர்ய‌மா சிக்ன‌லில் திரும்பாம‌ல் நேரே வ‌ருகிறாள்?..அதுவும் இன்னிக்கு பார்த்தா?... ம் இருக்க‌ட்டும்.. என்னை ஃபாலோ ப‌ண்ணுகிறாயா?...
ச‌ரி நான் திரும்ப‌ப்போகிறேன்... என் இட‌ம் வ‌ந்துவிட்ட‌து... கைய‌சைத்து டாட்டா காண்பிக்க‌ணும் போல் ஒர் உண‌ர்வு...
என்ன‌ ஆச்ச‌ர்ய‌ம், அவ‌ள் கைய‌சைக்கிறாள்... என‌க்கா, இல்லை என் பின்னால் யாருக்காவ‌தா?.. இல்லை என‌க்குத்தான்.. இப்ப‌ ரொம்ப‌வே அழ‌காய் தெரிகிறாள்..
என்ன‌ இது நான் நுழையும் காம்ப‌வுண்டில் அவ‌ளும் நுழைகிறாள்....
ம்.ம்.. எ...எ...எ.ன்னைப்பார்த்து ம‌றுப‌டியும் சிரிக்கிறாள்.. நான் ஏன் இன்னும் முகத்தை க‌டுக‌டுன்னு வெச்சுக்க‌ணும்..... என் உடடயைப்பற்றி இப்ப கவலைப்பட வேண்டாம்...

இனி தினமும் உன்னை இங்கு சந்திக்கப்போகிறேன் .. எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்குது..?

நானும் சிரிக்க‌ப்போகிறேன் என் அப்பாவின் தோளில் சாய்ந்துகொண்டு...உன்னைப்போல‌வே...நீயும் எல்கேஜி யா..?

Monday, August 18, 2008




குழந்தையின் கும்மி... பாகம் 6


" சுபாஷ் சந்திர போஸ்.." இதுல வருகிற ஷ், ஸ், நாம் கடன் வாங்கிய வடநாட்டு எழுத்துகள்... பெரியவனுக்கு தமிழ் பாடம் நடக்குது...
" அம்மா அந்த கடனை எப்போ திருப்பி கொடுப்பாங்க..." சீரியஸா. பெரியவன்..
" க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... இப்படியெல்லாம் குண்டக்க மண்டக்கனு கேள்வி கேக்கக்கூடாது..."
சீரியஸா சொல்லிட்டு மறுபடியும் பாடம் நடத்த ஆரம்பிக்க... முடில.. சிரிப்பு பொத்துக்கொண்டு வருது எனக்கு...
" என்னாச்சு மா..?" பெரியவன்..
" மா. என்ன.. ஏன் சிரிக்கிற?.." டேனி...
" அம்மா சிரிக்காதீங்க டேனி பயப்படுவான்.."
அதற்குள் உள்ளேயிருந்து யோகர்ட் ( yogurt -ல‌ஸ்ஸி போல‌‌..) 4 பாக்கெட் எடுத்து வ‌ருகிறான் டேனி...
" ஒண்ணுதான் எடுக்க‌ணும் .. மீதி கொண்டு உள்ளே வைம்மா.."
" ம்ஹூம்.. மாத்தேன்... சிங்கு நீ போய் வை..."
" டேனி .. நீதான் வெக்க‌ணும்..."
" அப்பா, இங்க‌ வா.. நீ கொண்து போய் வை.. டேனிக்கு கால் வ‌லிக்குது.."
இந்த‌ வ‌ய‌சிலேயே ஈகோ.." டேனிதான் வெக்க‌ணும்...இல்ல‌ன்ன‌ டைம் அவுட் த‌ருவேன் அம்மா..."
" பாவ‌ம் அம்மா விடுங்க‌... "
அண்ணா ச‌ப்போர்ட் கிடைத்த‌தும் ரொம்ப‌ குஷி... ஒன்றை குடித்துவிட்டு அப்ப‌டியே கீழே போடுகிறான்.. எப்ப‌வும் அழ‌காய் குப்பையில் போடுப‌வ‌ன்...இப்ப‌ ம‌ட்டும் ஈகோ.
" டேனி என்ன‌ இது புது ப‌ழ‌க்க‌ம்... குப்பையில் போடு.."
அப்பாவையும் , அண்ணாவையும் ப‌ரிதாப‌மாக‌ பார்த்துவிட்டு, இருவ‌ரும் இப்ப‌ ச‌ப்போர்ட் ப‌ண்ணாத‌தால்,
" அத‌ சாஃப்டா சொல்லு. தித்தாத டேனிய.. .." க‌ண்ணில் நீர் எட்டிப்பார்க்க‌..
" ச‌ரி க‌ண்ணே, டேனி செல்ல‌ம், குப்பையில் போடுங்கம்மா.."
வேண்டா வெறுப்பாக‌ அதை காலில் த‌ள்ளிக்கொண்டே...பின் கையில் எடுத்து குப்பையில் போட்டுவிட்டு வ‌ந்து என் த‌லைமேல் உட்கார்ந்து கொள்கிறான்...
" அய்யோ கீழ‌ இற‌ங்கு... முடி வ‌லிக்குது.."
" மாத்தேன்.. நீ ரொம்ப‌ தித்தின‌ டேனிய‌.. டேனி ரொம்ப‌ சேட் ஆயிட்டேன்...நாக்கு கோப‌ம்.."
அடுத்து குளிக்க‌.கூப்பிட... ஓடிப்போய் சோப், ஷாம்பூவை எடுத்து ஒளித்து வைக்கிறான்...
என‌க்கு சோப் போடாத‌...னு அழுகை... ச‌மாதான‌ப்ப‌டுத்தி ஒரு வ‌ழியா வெளிவ‌ந்த‌தும், எல்லாரும் கைதட்டி ஆச்ச‌ர்ய‌ப்ப‌ட‌ணும்..
" ஐ... யார் இந்த‌ பியூட்டிஃபுல் பைய‌ன்... எப்ப‌டி இவ்ளோ அழ‌காயிட்டான்.. " என‌..
அவ‌ர் வெக்க‌ப்ப‌ட்டு நெளிந்து கிளிந்து எல்லாரும் த‌ன்னை பாராட்டுறாங்க‌ளானு க‌வ‌னிப்பான்... அப்பா எப்ப‌வும் போல் டிவியில்...
மெதுவா, அப்பா அப்பா, என‌ அழைப்பான்...வெட்கிக்கொண்டு..
அப்பாவும் பார்த்து " யாரிந்த‌ த‌ங்க‌ப்பைய‌ன், வாச‌மாயிருக்கான் " நு உச்சி முக‌ர்ந்து கொஞ்சிட‌ணும்..
எல்லாம் முடிந்து சாப்பிட்டு கொஞ்ச‌ம் ஓய்வெடுக்க‌லாம் நு நினைக்கும்போது அவ‌ன் கார் க‌ட்டிலுக்க‌டியில்.
பெரிய‌ உட‌ம்பை வைத்துக்கொண்டு க‌ட்டிலுக்க‌டியில் நுழைந்து அதை க‌ம்பால் தேடி எடுத்துக்கொடுக்கும் வ‌ரையில் நல்ல‌ ட்ரில்.வாங்குவான்..அவ‌னுக்கு முக‌மெல்லாம் வெற்றிச்சிரிப்பு..
இப்ப‌ தூங்க‌ப்ப‌ண்ண‌னும்... அறையை இருட்டாக்க‌ணும்.. பிடித்த‌ கார்டூன் போட‌ணும்... சோபாவில் அவ‌னுக்கு பிடித்த‌ த‌லைய‌ணை.. அம்மா முடியை கொத்தாக பிடித்துக்கொண்டே உற‌க்க‌ம்...நான் தலையை சாய்த்துக்கொண்டே அவன் தூங்கும் வரையிலும்..

எழுந்ததும் பந்து விளையாடணும், ..இவனை இடுப்பில் வைத்துக்கொண்டே அண்ணாவுடன்..
ம். ச‌னி ஞாயிறு இப்ப‌டி க‌ழியும்...



சந்தித்த அற்புதமானவர்கள் ‍பாகம் 4 - கண்ணா..

" பாட்டீ"
"" யாரு தம்பி நீங்க.. என்ன வேணும்?.. " "பாட்டி இல்லையா?.. சாவி கொடுத்தேன் .. அதான்.."
என் முகத்தை கூட பார்க்காமல், தயக்கத்துடன் எங்க அம்மா வீட்டு வாசலில்...
" யாரம்மா அந்த பையன்.. ஹஹ உங்களை பாட்டி என்று உரிமையாக கூப்பிடுகிறான்..?'"
தெரியாதா அவந்தான் கண்ணன்.. அவன் அப்பா அமெரிக்காவிலிருந்து வந்து 17 வரடம் பின்பு இப்போதுதான் சேர்ந்துள்ளார்கள் , அவனது பெற்றோர்...அவர்கள் திருமணம் இந்த வீட்டில்தான் நடந்தது...( ஆகாயப்பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா.. இன்னும் அந்த பாடல் ஒலிக்குது காதில்..)
கண்ணனின் அம்மா நடிகை அஸ்வினி யென்றால் அவன் அப்பா மேஜர் சுந்த்ரராஜன் போல.. அவர்களுக்கு அழகான குழந்தை கண்ணன்..
அவன் பிரசவத்துக்காக இந்தியா வந்த அவரது தாயார், சில குடும்ப பிரச்னையால் அதன்பின் பிரிந்தே வாழ , அது அவருக்கு மனநோயையும் தர, பாட்டி வீட்டிலேயே மாமா, சித்திகளோடு வாழ்ந்துள்ளான் கண்ணன்..
பல வருட ஞானோதயத்துக்குப்பின், அவர் அப்பா எங்கள் வீட்டுக்கு எதிர் வீட்டை( சொந்த வீடு)சீர்செய்து அவர்களை குடிவைத்துவிட்டு, பையனை நன்றாக படிக்க வைக்க ஏற்பாடு செய்கிறார்...
கண்ணனை எப்படியாவது அமெரிக்கா அனுப்ப முழு ஆதரவும் என் அன்னையிடமிருந்து...பின் அதற்கும் ஏற்பாடு செய்தார்..
யாரிடமும் பேச பழக மாட்டான் கண்ணன்.. அவர் அன்னைக்கோ கொஞ்சம் மன நிலை சரியில்லை.பார்த்தால் தெரியாது.. எல்லா வேலையும் செய்வார்... க‌ண்ண‌ன் மேல் உயிர்..
ராஜாவாட்ட‌ம் பிள்ளை இருப்ப‌து க‌ண்டு பெற்ற‌வ‌ளுக்கும், த‌ந்தைக்கும் பெருமை...ஆனால் அவ‌னால் ப‌டிக்க‌ முடிய‌வில்லை.. அப்போதுதான் நான் க‌ட்ட‌ட‌ பொறியாள‌ரிலிருந்து க‌ணினிக்கு போக‌லாம் என‌ முடிவு செய்து எம்சிஎஸ்சி படிக்க வந்தேன் தாய்லாந்திலிருந்து... நான் படிப்பதை பார்த்து அவனும் புத்தகத்தை எடுத்து வந்து சந்தேகம் கேட்பான்...முகம் கூட பார்க்க மாட்டான்.. ஆனால் என் பையனிடம் நன்றாய் விளையாடுவான்...
நானே நேரமில்லாமல், பையனை பள்ளியில் விடுவதும், வீடெல்லாம் சுத்தி சாப்பாடு கொடுப்பதும், பின் தூங்க வைத்துவிட்டு டவுணுக்கு சென்று படிப்பதுமாய் ஒய்வில்லாமல் இருப்பேன்... ஆனால் இவன் வந்து அமைதியாக உட்கார்ந்திருப்பான்..
எனக்கு அவனிடம் என்ன பேச என தெரியாது... ஏன் வந்துள்ளான் என்றும்.."உனக்கு நண்பர்கள் இல்லையா கண்ணா?.."
" இல்லக்கா எல்லாம் செலவு பண்ணதான் இருக்காங்க.. அப்பா அமெரிக்கா என்பதால்... ஆனால் நானே அதிகம் செலவு செய்ய மாட்டேன்.."
என் பையன் விளையாட அவன் வீட்டில் உள்ள பெரிய வேப்பமரத்தில் ஊஞ்சல் கட்டி தந்தான்... ( அந்த வேப்பமரம்தான் அனைவருகும் மருந்துக்கும் விசேஷங்களூக்கும்.. அது பெரிய கதை..புயல்வரும்போதெல்லாம் பயமாயிருக்கும் எப்ப விழுமோ என..ஆனால் கோடை காலத்தில் அதுதரும் நிழலும், சுகமான காற்றும்.. அற்புதம்..)
இப்படியாக என் சொந்த அக்கா பசங்க மாதிரி வீட்டோடு ஒன்றிவிட்டான் கண்ணன்.. என் பையனுக்கு என விசேஷமாக எது செய்தாலும் கண்ணனுக்கும் உண்டு... சின்ன் பிள்ளைபோல் என்ன நடந்தாலும் என்னிடம் வந்து சொன்னால்தான் திருப்தி அவனுக்கு..
நான் படித்து முடித்து மறுபடி தாய்லாந்துக்கு வந்துவிட்டேன்.. அவனும் அமெரிக்கா சென்றான்..ஆனால் இங்கு செல்லமாக வளர்ந்ததால், அவனால் அங்கு சமாளிக்க முடியவில்லை.. மேலும் ஆங்கிலமும்... இங்கு தமிழில் படித்தவன்..
அடுத்த முறை விடுமுறைக்கு வந்தபோது வருத்தப்பட்டேன் அவனிடம்.. நல்ல சந்தர்ப்பத்தை இழந்தாயே கண்ணா...ஆனால் அவனோ ஒரே சோகமாய் இருந்தான்..
அப்போது திடீரென்று ஓர்நாள் காலை என் வீட்டுக்கு வந்து,
" அக்கா வணக்கம் " என்று சல்யூட் அடிக்கிறான்... மீண்டும் மீண்டும்... நான் துணி காயப்போட்டுக்கொண்டிருந்தேன், அப்படியே அதிர்ச்சியில்..ஒண்ணுமே பேச வரவில்லை எனக்கு... நடிக்கிறானா, விளையாடுகிறானா, இல்லை , என்னாச்சு கண்ணனுக்கு,..?
அப்போதான் தெரிய வந்தது அவனுக்கும் மன நிலை சரியில்லாமல் ஆகா ஆரம்பித்துள்ளது... தீவீர டிப்ரஷனாம்... அப்படியே உலுக்கிவிட்டது ..
சிரிது நேரத்துக்கெல்லாம் மறுபடியும் வந்து மிக சாதாரணாமாய் பேசுகிறான்...
" அக்கா நான் ஏதாவது சொல்லியிருந்தால் தயவுசெய்து மனதில் ஒண்ணும் வெச்சுக்காதீங்க என்று.."
கண்ணீர்தான் வருகிறது அவன் நிலைமை கண்டு...
" அப்படீல்லாம் ஒண்ணும் இல்ல கண்ணா...நீ ஒண்ணும் சொல்லல.. அக்காவும் ஒண்ணும் நெனக்க மாட்டேன்.. சரி தீபாவளிக்கு என்ன பிளான் ?" என பேச்சை மாத்தினேன்...
மிகவும் சந்தோஷமாக தன் அத்தை, வீட்டுக்கு போவதாய் சொன்னான்...
நானும் என் அக்கா வீட்டுக்கு மகனை வெடி காண்பிக்க அழைத்துச்செல்வதாய் சொன்னேன்..
" சீக்கிரம் வாங்க அக்கா.. நானும் நிறய வெடி வெச்சிருக்கேன் என்றான்..
நான் கோவில்பட்டிக்கு சென்றேன்...
தீபாவளி மறுநாள் என் அண்ணாவிடமிருந்து தொலைபேசி.."செய்தி பார்த்தாயா?.." "இல்லையே ணா..."
"முதலில் பார்.."
" சொல்லுங்க என்னாச்சு ன்னு.."
" நீயே பார்.. நம் தெரு பற்றி செய்தியை.." வைத்துவிட்டார் ...
அரக்க பரக்க எடுத்து வாசித்தேன் புரியவில்லை...
மறுபடியும் தொலைபேசியில் அழைத்தேன் ..அப்படியே சிலையானேன் செய்தி கேட்டு...அழுகை கூட வரவில்லை அப்படி ஒரு அதிர்ச்சி...
தீபாவளி விருந்து முடிந்து வீட்டுக்கு வந்தவன் டிப்ரஷனுக்கான மாத்திரை எடுத்துக்கொண்டு, சிகரெட்டும் பிடித்துவிட்டு அணைக்காமலே மாடியில் கதவை பூட்டிக்கொண்டு தூங்கியுள்ளான்...
அது மெத்தையில் பற்றி , தீயாக எரியாமல் , புகை மண்டலத்தில் மூச்சு திணறி இறந்துள்ளான்...
பக்கத்து வீட்டினர் , புகை வருவதைப்பார்த்து தெரிவித்ததும் தான் கீழே அன்னைக்கு தெரிந்துள்ளது.. எப்பவும் மாமன் மார் யாராவது இருப்பார்கள்.. அன்று மட்டும் இல்லை.
அவன்மேல் ஒரு காயம் கூட இல்லையாம்... குளிப்பாட்டி அவனை எடுத்துச்செல்லும் போது தூங்குபவன்போல அவ்வளவு அழகாக இருந்தானாம்...
என் வீட்டில் யாருமில்லை இவையெல்லாம் காண.. எல்லாரும் ஊரில்...
கடைசிவரை அவனைப்பார்க்காமலே...நான் இருந்திருந்தால் நடந்திருக்காதோ என ஒரு நப்பாசை.. ஆறாத ரணம்.. மனதில்..
என்னை மிகவும் உலுக்கியது அவன் மரணம் வாழ்வில் முதன்முதலாக... வாழ்க்கையே வெறுத்துப்போனது இவன் மரணத்தில்.. அவன் அப்பா மொத்தமாக நொறுங்கிப்போனார்...அம்மா ஒரே புலம்பல் ... ஆறுதல் சொல்லவே முடியாதபடி..
சிலசமயம் ஆறுதல் படுத்திக்கொள்வேன் அவன் மனநிலை சரியில்லாததால் கடவுள் அவனை அழைத்துக்கொண்டாரோ, மேலும் கஷ்டம் தராமல்... என..
அதன்பிறகு எத்தனையோ கண்ணன்களை சந்தித்தாலும், அவன் நியாபகம்தான் வரும்...(இணையத்திலேயே 4 கண்ணன் இதுவரை...)
இன்னும் என் வீட்டுக்கு சென்றால், மொட்டை மாடியில், எதிர்வீட்டில் நின்று " அக்கா " என்று புன்னைகையோடு கண்ணா அழைப்பது போலிருக்கும்...அந்த பக்கமே பார்க்கக்கூடாது என்றாலும் மனம் கேட்குமா என்ன... ???
வாழ்க்கையில் பல செய்திகள் பாசத்தோடு சொல்லிவிட்டு சென்றவன் கண்ணன்...

Thursday, August 14, 2008



பாஸ்கர்: ம். அப்ப எப்ப வார விமானத்துல??கூட யார் வாரா?
அஞ்சலி: ம். கெளம்பியாச்சு.. நாளை காலை அங்கே இருப்பேன்.. எப்படா உன்னை பார்க்கப்போறோம்னு இருக்குடா..ம். பேபி வருவாங்க..அங்க எப்படி?
பாஸ்கர்.. : அதேதான் இங்கயும்... போட்டோ கூட பாக்கல... ரொம்ப ஆர்வமாயிருக்கு,..ம். கூட சின்னா வரலாம்.
அஞ்சு: ம்.. ஹிஹி.


********************************************************************************************************************************"தாத்தா


என்ன இது காலையிலேயே விமான நிலையம் போகணும்னு சொல்லிட்டு தண்டால் எடுத்துட்டு இருக்கீங்க... "
"படவா மெதுவா பேசு... தாத்தான்னு கூப்பிடாதன்னு எத்னி தடவை சொல்றது... கால் மி சின்னா..பாஸ்கி..ஐ வில் ஜாயின் யூ இன் 5 மின்."
" ச‌ரி அப்ப‌ நான் ஸ்லோக‌த்தை சொல்லிட்டு வர‌ட்டா?.."
" வ‌ராதே .. அப்ப‌டியே போய் உன் வேஷ்டி குர்தாவை க‌ழ‌ட்டிட்டு ஜீன்ஸ் போட்டுட்டு வா.."
" தாத்தா , சாரி, சின்னா. என்ன‌ இது... இந்த‌ சென்னை வெயிலுக்கு இதுதான் இத‌மா இருக்கு..."
" ந‌ல்லாத்தேன் வ‌ள‌ர்த்திருக்கா உன் அம்மா, அதான் என் ம‌க‌ள்... அதுவும் டெல்லியிலிருந்துகொண்டு.."
" ம். ந‌ல்ல‌வேளை த‌ப்பிச்சேன்... உங்க‌கிட்ட‌ வ‌ள‌ராம‌ல்..:-))) "
"..ம்.. என்ன‌ முன‌குற‌?... ச‌த்த‌மாத்தான் சொல்ற‌து... அதான் ஏழு க‌ழுத‌ வ‌ய‌சாகியும் க‌ல்யாண‌ம் வேண்டாங்கிற‌..."
" அய்யோ தாத்தா க‌ல்யாண‌த்த‌ ம‌ட்டும் ப‌த்தி பேசாதீங்கோ...ஆமா அதென்ன‌ இப்ப‌டி கொட்டுறேள் த‌ண்ணியை?"
" அட‌ அது சென்டுடா .. நீ இன்னும் ஜ‌வ்வாது போட்டுட்டு இரு... "
" தாத்தா இதென்ன‌ ஜீன்ஸ் இப்ப‌டி கிளிச‌லா?.. அய்யோ நான் வ‌ர‌மாட்டேன்பா உங்க‌ளோட‌.."
" டேய் க‌ரும‌ம் பிடிச்ச‌வ‌னே...லைஃப்ப‌ எஞ்சாய் ப‌ண்ண‌ க‌த்துக்கோடா... க‌ண்ணு வெக்காத‌..."
" அச‌த்துரீங்க‌ தாத்தா.. ஆனா அந்த‌ க‌ருப்பு க‌ண்ணாடிதான்.."
" டேய் கால் மீ சின்னா...டேய் அந்த செருப்பை போட்டுட்டு வந்து என் மானத்தை வாங்காத..."
" ஒகே..ஒகே.. சின்னா, இப்ப‌ உங்க‌ள‌பாத்தா என் த‌ம்பியாட்ட‌ம் தான் இருக்கு... ரிபோக் ஷோ என்ன‌, டிஷ‌ர்ட் என்ன‌, ...ஆனா பாத்து க‌ண்ணு ம‌ண்ணு தெரியாம‌ யார் மேலயாவ‌து மோதிராதீங்க‌...என‌க்கு அவ‌மான‌ம்..."
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍***************************************************************************************************************************************
தாத்தா சீக்கிர‌ம் உன் தோழ‌ர்க‌ளை அழைத்துக்கொண்டு வ‌ந்து சேருங்க‌.. நான் ம‌ஹாப‌லிபுர‌ம் போக‌ணும் , ஆராய்ச்சிக்கு..."

" அடேய் பாஸ்கி, தோழர் இல்லைடா, தோழி...ஹி ஹி ஹி.."

" அய்யே.. இது வேறயா?.."

" நீ இந்த அட்டையை வைத்துக்கொண்டு இங்கே நில்... நான் அந்தப்பக்கமா போய் பார்க்கிறேன்.."
அட்டையில் அஞ்சுவின் பேரைப்பார்த்த‌ப‌டி புன்சிரிப்புட‌ன் வ‌ருகிறார் பாட்டி ம‌ட்டும் த‌னியே.
" ஹ‌லோ என் பேர் பேபி.. நீங்க‌தான் பாஸ்க‌ரா?.."
" ஹ‌.. ஆமா ஆமா.. இருங்க‌ சின்னா வ‌ந்துடுவார் இப்ப‌..."
" வாங்க‌ த‌ம்பி , நாம் கொஞ்ச‌ம் பேசுவோம் ஓர‌மாய் போய்.."
யாருமில்லை என்ப‌தை உறுதி செய்துகொண்டு, சட்டை காலரை பிடித்து,
" ஏண்டா ர‌ஸ்க‌ல், என் பேத்திகூட‌வா சேட்டிங் ப‌ண்ற‌ .. நான் யார் தெரியுமா?.. அந்த‌ கால கராத்தே வீராங்க‌னையாக்கும்..."
க‌ராத்தேயை இல‌வ‌ச‌மா போட்டு காட்டுறாங்க‌ பாட்டிய‌ம்மா.அம்மா, அய்யோ னு அல‌ற‌ தான் முடியுது... பேச‌ விட்டாதானே???
அத‌ற்குள் தாத்தாவின் கைபிடித்து சிரித்து பேசிய‌படி ரொம்ப‌ பாச‌மாக‌ ம‌ஞ்சு வ‌ந்து பார்த்து, அதிர்கிறார்க‌ள் இருவ‌ரும்...
" அய்யோ பாட்டி என்ன‌ இது இங்க‌யுமா?" மெல்ல‌ கைபிடித்து தூக்கி ம‌ன்னிப்பு கேட்கிறாள்..
"அவனை ஏன் அடிக்கீங்க?.."கூலிங் கிளாஸை கூலா கழற்றிக்கொண்டே..சின்னா.
" ம். என் பேத்திகிட்ட சாட்டிங் பண்றான், திருமணம் பண்ணிப்பானாம்... சே சே.. "
" அய்யோ பாஸ்க‌ருக்கு எதுவும் தெரியாதுங்க‌.. நான்தான் அவ‌ன் பேரில் சேட் ப‌ண்ணிய‌து..அவ‌ன் திரும‌ண‌மே வேண்டாமென்றும் ப‌த்தாம்ப‌ச‌லித்த‌ன‌மாய் இருப்ப‌தாலும்...நான்தான் ல‌ண்ட‌ன் பெண் பார்த்தேன்..." கொஞ்சம் தள்ளியே நின்றுகொண்டார்.கவனமாய்.
" ஆமா.. இத‌ப்ப‌ற்றி ம‌ஞ்சு கூட‌ ஒண்ணும் சொல்ல‌லையே...?அவதான் என்கூட இஷ்டமா பேசினா??" சின்னா
" ஆமா .. அவ‌ளுக்கும் ஒண்ணும் தெரியாது .. அவ‌ள்பேரில் சேட் ப‌ண்ணிய‌து நான்தான்... அவ‌ளும் த‌மிழ்நாடு , கலாச்சாரம் , இந்தியா ,சுதந்திர தினம் னு திரியுர‌வ‌...க‌ல்யாண‌ம் வேண்டாம்னு.."
" அட‌.." என்று பாஸ்க‌ரும், ம‌ஞ்சுவும் ஒருவ‌ரை ஒருவ‌ர் பார்த்துக்கொள்ள‌, பார்வையை மீட்டெடுக்க முடியாமல்.
மாட்டிக்கொண்ட‌ பாட்டிக்கும் தாத்தாவுக்கும் வெட்க‌ம் க‌ல‌ந்த‌ சிரிப்பு...

" ச‌ரி இனியாவ‌து நீங்க‌ இர‌ண்டு பேரும் உங்க‌ ஒரிஜின‌ல் பேரில் சேட் ப‌ண்ணுங்க‌" ம‌ஞ்சு.
" அய்யோ அப்ப‌ நீங்க‌?.. " கோர‌ஸாக‌ வ‌ருத்த‌த்துட‌ன் பேபியும், சின்னாவும்...
" ம். இனி சேட்டிங் தேவையில்லைனு நினைக்கிறேன்...( மஞ்சுவை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே) தேங்ஸ்டா தாத்தா , சாரி சின்னா..." பாஸ்கி.




**********************************************************************************************************************************************

Sunday, August 10, 2008




நள்ளிரவு வே(தொல்) லை




அலுவலில் ஒருவர் மாற்றம் ஆகிப்போவதால் அவர் வேலையும் சேர்த்து இப்ப எனக்கு... ( வெச்சுட்டாங்க ஆப்பு..)
அதனால் இண்டர்னல் பயிற்சி இந்த வாரம்.. அதுவும் தாய் பாஷையில்.. சும்மாவே பயிற்சி அறையில் போட்டிருக்கும்
விளக்கு தூங்க ஏற்றாற்போல் இருக்கும்.. இதி அவர் தாலாட்டு பாட தூக்கம் கண்களிடம் கெஞ்சுது... நோ..நோ..
மரியாதையில்லை அவர் வருத்தப்படுவார் என்று சொன்னா கேட்குதா பிடிவாதமா கண் மூடுது... ஆனா இடையிடயே பதில் சொல்லிவிடுவோம்ல..
இப்படி மும்மரமா படைக்கும்போது என் தலைவர் வந்து என்னைமட்டும் அழைக்க ...ஆஹா.. ஈராக்கிலிருந்து தப்பிச்ச கதை...
சந்தோஷமா வந்தா அவர் என்னை கஸ்டமருக்கு ஏதோ பிரச்னையாம் , உடனே ஓடுங்கள் என்கிறார்...முதலில் தயக்கமாயிருந்தாலும்,
இப்படிப்பட்ட வேலைகள்தான் நம் மதிப்பை கூட்டும் என்பதால் மறுபேச்சு பேசாமல் ஓடினேன் க்ளையண்ட் சைட்டுக்கு...30கிமீ
அங்கு போனதும் தான் தெரிந்தது ஈராக்கிலிருந்து தப்பித்து அ·ப்கானிஸ்தான் வந்திருக்கேன் என்று...
3 மாதம் முன்பு புதிதாக வந்த புராடக்டை இன்ஸ்டால் பண்ணி பயிற்சியும் கொடுத்துவிட்டு வந்தேன்...
என்ன நடந்ததோ என்னவோ, டேட்டாபேஸையே காணும்.. ஹஹஹா.. சிரிக்கவா அழவா..?.. அதெப்படி காணாமப்போக இதென்ன
நகையா... அது சீன புராடகட் தன் வேலையை காண்பித்து உள்ளது... அதை கிளையண்டிடம் சொல்ல முடியுமா?..
சரி ஒண்ணும் கவலைவேண்டாம் .. இன்னொரு சர்வர் ரெடி பண்ணுங்க.. என்கிட்ட எல்ல சிடியும் இருக்கு இன்ஸ்டால் பண்ணிடலாம்...
என்று சொல்லிவிட்டு, வீட்டுக்கும் கணவருக்கும் பேசிவிட்டு...
மதியம் 1 மணிக்கு உட்கார்ந்தேன்... இன்ஸ்டாலேஷன் முடிய ஆன்லைன் அப்கிரேடு பண்ண னு 8 மணி யானது... நெட்வொர்க் அறையில் குளிர் தாங்க முடியவில்லை..
அதைவிட சாப்பிடாதது அப்பத்தான் நியாபகம் வருது.. கேண்டீன் எல்லாம் இங்கு 7 மணிக்கெல்லாம் மூடிவிடுவார்கள்..
சரி னு தண்ணி குடித்துவிட்டு வேலையை தொடர்ந்தேன்... கிளையண்ட் கேட்டார் சாப்பாடு , காபி ஏதாவது வேணூமா, வாங்கிவரச்சொல்கிறேன் என்று..
நம்ம பெருந்தன்மையை என்ன சொல்ல... சரி அது முக்கியமில்லை னு வேலையை முடித்து சீக்கிரம் வீட்டுக்கு போலாம்னு நினைத்தேன்..
இப்ப பரிசோதனை... நானும் கிளியண்டும் லாகின் பண்ணினால் தோல்வி.. அவர் ·பையர்வால் போய் பார்க்கிறேன் என்று சென்றார்..எல்லாம்

சரி செய்து விட்டு அவர் மட்டும் வெளியிலிருந்து லாகின் பண்ண, நான் குளிருக்குள் உள்ளே..
" கிளையண்ட் கணினி ல லாகின் வந்ததோ வந்ததோ...???""
" வரல்ல...வரல்ல..."
"லைசென்ஸ் போல ஏதோ ஒண்ணு புரோக்கிராம்ல சிக்கிக்கிட்டு மாட்டேன் மாட்டேன் என்று சொல்லுதே..."
சரின்னு பழைய மெஷின் ல உள்ள லைசென்ஸ் சாவி ( usb) எடுக்கணும்.. இப்பதான் இருக்கு சர்க்கஸ்..
எங்க சர்வரை ரேக்கின் (rack ) கீழே வைத்துள்ளார்கள் .. அதுல இத்துனூண்டு சாவி வெளியில் எடுக்க எல்லா வயர்களையும் நகர்த்தணும்..
குனிந்து பார்த்தால் முடியலை... சாஷ்டாங்கமா படுத்துக்கொண்டு தான் பண்ணியாகணும்...சரி செய்யும் தொழிலே தெய்வம் னு அதையும் செஞ்சு எடுத்துட்டு.
மறுபடியும் பரிசோதனை பண்ணினோம்.. இவர் வெளியிலிருந்து கைகாண்பிக்கிறார்.. இல்லை என்று..
நான் அப்போ சரி மறுபடியும் வேறுவிதமாக இன்ஸ்டால் பண்ணுவோம்னு சொல்லும்போதே அங்கே லாகின் சக்ஸஸ்...
ஆனா இங்கதான் விதின்னு ஒண்ணு இருக்கே.. அது விளையாடுமாமே.. அவர் வெளியிலிருந்து தலையசைக்க நான் ஒஹ்ஹொ இல்லை என்று நினைத்துக்கொண்டு,
அத்தனையும் டிலீட் பண்ணி முடித்து ரீன்ஸ்டால் பண்ண ஆரம்பிக்க, நிதானமா வந்து , லாகின் ஓகே ங்கிறார்...மறுபடியும் சிரிக்கவா அழவா..
இவர்கள் தலையசைப்பு ஆமாவுக்கும் , இல்லைக்கும் ஒரே மாதிரி.. சரி சந்தோஷமா வந்து சொல்லியிருக்கலாமே.. பாவம் தூக்ககலக்கமோ என்னவோ..
மறுபடி அதே வேலை இப்ப மணி 3.. அவருக்கு தூக்கம் வந்துவிட்டது போல.. மேடம் நாளை தொடரலாம்..என்றதும், வெளியில் வந்து
டாக்ஸிக்கு காத்திருந்தோம்.. கம்பெனி வண்டி எடுத்து வரவில்லை..இது நகரத்தை விட்டு 60 கிமீ இருப்பதால் டாக்ஸியும் குறைவு..
எப்ப்டியோ ஒன்று வந்தது.. ஏறி சிறிது தூரத்தில், இன்னொரு டாக்ஸிகாரனைப்பர்த்ததும் நிப்பாட்டினான்.... ஹிஹி பெற்றோல் இல்லை என்றான்..
எபவும் சங்கிலியை கழற்றி வைத்துவிட்டு வருவேன் இதுபோல் இரவு வேலைக்கு.. அன்று எதிர்பார்க்கவில்லை... அதுமட்டும்தான் பயம்..
(மற்றபடி என் அழகுக்கு??? என்னை பத்திரமாக வீட்டில் கொண்டு விட்டுடுவான் என்ற நம்பிக்கை 100% உண்டு.. )
வீடுவந்து சேர 4 மணி சாப்பிட கூட பிடிக்கலை..கிட்டத்தட்ட 20 மணி நேரம் தொடர் வேலை.. அப்போதே மண்டையார், தொண்டையார் எல்லாம் வேலையை காண்பிக்க ஆரம்பித்துவிட்டார்..

சரியாக 7 மணிக்கு குழந்தைகள் இருவரும் " ஹை. அம்மா வந்தாச்சு என்று வந்து தொப்பென்று விழ தூக்கம் போனது..
அப்பதான் தெரியுது காய்ச்சலும் வந்துவிட்டது...
9 மணிக்கு தலைவரின் போன்.. அன்போடு விசாரித்துவிட்டு 1 மணிக்கு மறுபடியும் போகச்சொன்னார்... சரியென்று மறுபடியும் கிளம்பிப்போய் 6 மணிக்கெல்லாம்
நல்லபடியாய் முடித்து கொடுத்தேன்.. அப்பா.. கிளையண்ட் முகத்தில் சிரிப்பு...
இதற்கிடையில் அவர் ·பையர்வால் செக்க பண்ண சென்ற போது நான் 1 மணி நேரம் காத்துக்கிடக்க, கொஞ்சம் குழுமம் பக்கம் போனால்,
அன்புத்தம்பிங்க வந்து " அக்கா என்ன உங்க கதையே காணோம்".. என் சோகக்கதய சொன்னதும் ஆறுதலடைந்து விட்டார்கள் ஜூட்..
இதுல புதுசா ஒரு தம்பி மலேஷியாவிலிருந்து, என்னை ஆண் என நினைத்து...
" jmms சார், டிஸ்பிளேல இருப்பது உங்க மனைவியா?.."
" ஆமாய்யா ஆமா.."
" சார், இன்னுமா வீட்டுக்கு போகலை, உங்க மனைவி , பிள்ளைகள் தேடுவாங்களே."
" ஆமாய்யா..ஆமா.."
சரி வேலை பாருங்க சார்.. "
" சரிய்யா சரி" கடி தாங்க முடியாமல் பாவம் ...ஓடிவிட்டார்..
கொஞ்சம் உற்சாகத்துடன் மீண்டும் தொடர்ந்தேன் என் வேலையை...
பி.கு..
யாருக்காவது வேலை கடினமா இருந்தால் என்னை நினைத்துக்கொள்ளுங்கள்.
இல்லை என் வேலையை விட கடினமாயிருந்தால் கண்டிப்பாக எழுதுங்கள் ..நான் பரவாயில்லை என நினைத்துக்கொள்கிறேன்..
( அப்பாடா கட்டுரை வரும் ) என்னைவிட நிறைய பேர் கஷ்டப்படுகிறார்கள் என்று எப்போதும் நினைத்துக்கொள்வேன்..
அதனால் ஜாலியாகவே எடுத்துக்கொள்வேன்..என்ன இப்ப அடுத்த 1 வாரம் ஒரே லொக்கு லொக்கு தான்.. ( அதாங்க இருமல்...)










பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுத் திருவிழா.. - ஒரு பார்வை...
2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் மக்கள் சீன குடியரசுத் தலைநகரான பெய்ஜிங்கில் ஆகஸ்ட் 8, 2008 தொடங்கி ஆகஸ்ட் 24, 2008 வரை நடைபெறவுள்ளன. சீனப் பண்பாட்டில் 8ஆம் இலக்கம் இராசியாக கருத்தப்படுவதால், ஆரம்ப நிகழ்வுகள் மாலை 08:08:08 மணிக்கு நடைப்பெறும்.
கால்பந்தாட்டப் போட்டிகள், படகோட்டம், நீச்சல்ப் போட்டிகள், மரதன் ஓட்டம் உட்பட சில போட்டி நிகழ்வுகள் சீனாவின் வேறு நகரங்களில் நடைப்பெறும். குதிரைப் பந்தயங்கள் ஹாங்காங்கில் நடைபெறும்.
விளையாட்டின் முக்கிய அடையாளமாக "நடனமாடும் பெய்ஜிங்" என்பது பெய்ஜிங் பெயரில் காணப்படும் இரண்டாவது சீன எழுத்தான "ஜிங்" என்பதன் அழகியல் வடிவமாகும். போட்டியின் குறிக்கோளாக "ஒரே க‌ன‌வு ஒரே உல‌க‌ம்" தேர்ந்தெடுத்துள்ளார்கள்.. இவ்விளையாட்டில் 10, 500 க்கும் அதிகமான வீரர்கள் பங்கேற்கலாம்..மொத்த நிகழ்ச்சிகளும் 300 கும் அதிகமே.



கடந்த மார்ச் 24ஆம் நாள் கிரீசு நாட்டில் ஏற்றப்பட்ட சுடர் 5 மாத காலத்தில் 19 நாடுகள் வழியாக சீனா வந்தடைந்தது.

மிகப் பெருமையுடைய ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியைத் தான் நடத்துவதில் பெருமிதம் கொண்டது சீனா.

சீனாவின் பிடிக்குள் சிக்கி, பெயரளவிலான தன்னாட்சிப் பகுதியாகக் கிடக்கும் திபெத், தனது உரிமைக் குரலை தொடர்ந்து எழுப்பியது. , சீனாவின் ஆக்கிரமிப்பை எதிர்க்கும் நோக்கில் சீனாவிற்குக் கொண்டு செல்லப்படும் ஒலிம்பிக் சுடரைத் திபெத்தின் விடுதலைச் சுடராக மாற்றிக் கொண்டது திபெத்.

ஒலிம்பிக் விளையாட்டு என்பது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்ட கிரேக்கர்களின் தேசியத் திருவிழா. கிரேக்கர்களின் தெய்வம் வாழ்ந்த ஒலிம்பியா மலையில், கிரேக்க தெய்வத்தை வழிபட கிரேக்கர்கள் ஒலிம்பிக் விழாவை விளையாட்டு போட்டிகளை நடத்திக் கொண்டாடினார்கள்.
பெய்ஜிங்கில் பண்பாட்டு மற்றும் விளையாட்டு மையம், ஆங்கில மொழியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவும் பொருட்டு ஆங்கிலம் விசேஷமாக கற்றுத்தருகிறது... ஆச்சர்யம் என்னவென்றால் ,மாணவர்களின் சராசரி வயது, 58 .
பெய்ஜிங் மாநகர அரசின் திட்டத்தின் படி, 2008ம் ஆண்டு பெய்ஜிங்கில் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி நடைபெறும் போது, 40முதல் 60 லட்சம் வரையான பெய்சிங் நகரவாசிகள் ஆங்கில மொழி பேச முடியும்.

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெறும் போது, பெய்ஜிங் காற்று தர பிரச்சினையில் , காற்று தரத்துக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், பெய்ஜிங் சுற்றுச்சூழல் துறை மிகவும் கவனம் செலுத்தி பல கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.


ஒலிம்பிக் குழுவின் உலக ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டாளி, தொலைக்காட்சி ,அஞ்சல் நிறுவனங்கள், பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்பு குழுவின் சந்தை வளர்ச்சி ஆகிய திட்டங்கள், பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்பு குழுவின் ஏற்பாடு மற்றும் அனைத்து பணிகளுக்கு, அதிக நிதி, வசதிகள், தொழில் நுட்பம், சேவை ஆகியவற்றை திரட்டியுள்ளன.


பெய்ஜிங் ஒலிம்பிக் பூங்காவின் மையப் பிரதேசத்திலுள்ள தென் பகுதியில் , போட்டிக்கான சிறப்பு வாய்ந்த அரங்குகளில் ஒன்றான 17 ஆயிரம் இருக்கைகள் கொண்ட, சுமார் 80 ஆயிரம் சதுரமீட்டருள்ள ,நீர் கன சதுர விளையாட்டரங்கு, அதிகாரப்பூர்வமாகக் கட்டி , பயன்படுத்தப்படத் துவங்கியது.

பெய்ஜிங், 31 விளையாட்டரங்குகளையும் பயிற்சியரங்குகளையும் ,இதர 30 விளையாட்டரங்குகள், 44 பயிற்சியரங்குகளுடன் , 29வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் தேவையை நிறைவு செய்யும் வகையில்,கட்டியமைத்துள்ளது

கிட்டத்தட்ட 63 தொழில் நிறுவனங்கள் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஒத்துழைப்பு நிறுவனங்களாக மாறியுள்ளன.நிதி, பொருட்கள், தொழில் நுட்பம் மற்றும் சேவை போன்று பல்வேறு வகையிலும் ஆதரவுகளை இந்தத் தொழில் நிறுவனங்கள் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு வழங்கும். இதனால் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி வெற்றிகரமாக நடைபெறுவதற்கு தலைசிறந்த பொருட்களின் அடிப்படை உருவாக்கப்பட்டுள்ளது.
சர்வதேச தொழில் நிறுவனங்களைப் பொறுத்து, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, சீனாவின் சந்தையை விரிவாக்குவதற்கு வலிமையான வாய்ப்பை வழங்கும்.
சீனாவின் மிகப்பரப்பிலான ஆழமான பண்பாட்டையும் "ஒரே உலகம், ஒரே கனவு" என்ற தலைப்பின் அடிப்படையில் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை நடத்திக்காட்ட விரும்பியுள்ளது..
பெய்ஜிங்கிற்கு வருகை தரும் வீரர்கள், பயிற்சியாளர்கள் பல்துறை அதிகாரிகள், வெளிநாட்டு பார்வையாளர்கள் ஆகியோரின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 6 இலட்சம் இரூக்கலாம்.பண்பாட்டு நடவடிக்கைகள் ஒலிம்பிக் நடவடிக்கைகளின் முக்கிய பகுதியாகும். அனுமதிபெற்றுள்ள 20,000 மக்கள் தொடர்பு ஊடகங்கள் நேரடி ஒளிபரப்பு செய்யும்..
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி தொடக்க விழாவின் தீபத்தை ஏற்றும் வழிமுறை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், திட்டவட்டமான நுணுக்கங்கள், இரகசியமானது .தொடக்க விழா சடங்கு, கலைநிகழ்ச்சிகள், வீரர்கள் விளையாட்டரங்கில் நுழைவது, தீபத்தை ஏற்றுவது ஆகிய 4 பகுதிகளை இத்தொடக்க விழா உள்ளடக்கும்.

வண்ணமயமான வான வேடிக்கைகள் மூலம் ஒலிம்பிக் சின்னமான ஐந்து வளையங்களை முதன்முறையாக ஆகாசத்தில் காண்பிக்கப்படும்.. மேலும் கொடி ஏற்றத்தின்போது மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு செல்லும் அளவிற்கு கணினியின் துணையோடு வான வேடிக்கைகள் வெடிக்கப்படும்..

நிகழ்ச்சியின் இறுதியில் 2008 முகங்கள் உலகம் முழுவதிலிருந்தும் காண்பிக்கப்படுவது விசேஷமாக இருக்கும்..


மேலதிக விசேஷமான பாதுகாப்புகள், பார்வையாளருக்கும், வீரர்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..இதில் FBI யும் அடங்கும்..

மேலும் பெய்ஜிங்கில் வாகன , போக்குவரத்து வசதிகளும் , அதி வேக ரயில்கள் ஓவ்வொரு 5 நிமிடங்களுக்கு ஒன்றாக வசதியாகவே உள்ளது பெய்ஜிங்கில் மட்டும் 60 ஆயிரத்துக்கும் அதிகமான வாடகை மகிழ்வுந்துகள் இருக்கின்றது..

இதைத்தவிர உணவகங்கள், சர்க்கர நார்காலி வசதியுடன் கூடிய வண்டிகள், மது அருந்துமிடங்கள், தொலைபேசி வசதிகள், புகைப்பட வீடியோ வசதிகள்,மருத்துவ வசதிகள், இப்படி தேவையான அனைத்து வசதிகளும் அதிக அளவில் செய்யப்பட்டுள்ளன... பொது மக்களுக்கும் உதவி செய்திட விசேஷ பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது..
இந்த விளையாட்டை காண்பதற்காக விற்கப்பட்ட அனைத்து டிக்கெட்டுகளும் அதிரடியாக விற்றுத் தீர்ந்தன... இதற்காக 2 நாள்கள் கூட வரிசையில் காத்திருந்தார்கள் மக்கள்..

சீன கலாச்சாரத்தோடு இணைந்த சில நகைச்சுவை பாத்திரங்களாய் விளையாட்டுகளை சித்தரித்து மகிழ்கிறார்கள்..படத்தில் உள்ளது போல..மேலும் அழகான வேலைப்பாடுகள் நிறைந்த சிறபங்கள் பூங்காக்களை அலங்கரிக்கின்றன்..


பல பிரச்னைகளுக்கிடையிலும் இந்த விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதோடு தம் கலாச்சாரத்தையும் , பண்பாட்டையும் பேணும் சீனாவையும், இந்த விளையாட்டுக்கள் நல்ல முறையில் நடைபெறவும் நாமும் மன மகிழ்வுடன் வாழ்த்துவோம்...


பால் கெட்டியதோ தாய் பாசம் கெட்டியதோ?????


" அம்மா , அம்மா?.."
" அம்மா தூங்குறீங்க போல. பலகாரம் தர வந்தேன்.... சரி அப்புரமா வாரேன்.."
" யாரு விக்னேஷ் தம்பியா?.."
" இல்லம்மா நான் அருண்.."
" எப்பப்பா வந்த ஊர்ல இருந்து?. எல்லாரும் சொகந்தானே?"

" ஆமாம்மா.. இப்பத்தான், ஊர்ல எல்லோருக்கும் நிம்மதி உங்களைப்பற்றி சொன்னதிலிருந்து..இதோ அம்மா அனுப்பிய பலகாரம்"
" அட.. வெச்சிருந்து சாப்பிடுவியா.. சரி சரி. குளிச்சுட்டு வா.. ஆப்பம் தயார் பண்ணுறேன் .. சாப்பிடு.."
----------------------------------------------------------------------------
கடந்த 3 மாதமாக சுகந்தி அம்மா தன் வீட்டு மாடியில் குடியிருக்கும் பசங்களுக்கு சமைத்து கொடுப்பதும்
அவர்களும் தன் அன்னையைப்போலவே நினைப்பதும், தாங்க முடியா சந்தோஷம் சுகந்திக்கு..
ஆனால் இவை யாவும் இதுவரை ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் உயர் அதிகாரியாக இருக்கும் வேணுகோபாலுக்கு
தெரியாது... பாதி நாட்கள் வெளிநாட்டுப்பயணம்... மீதி நாட்களும் படுக்க மட்டுமே வீட்டுக்கு...
அந்தஸ்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்..மிக வெற்றிகரமாக 2 பிள்ளைகளை வளர்த்து வெளிநாட்டுக்கு அனுப்பியவர்..
சொந்த வீட்டை வாடகைக்கு கூட கொடுக்கமல் இருந்தவர், மனைவியின் கட்டாயத்தின்பேரில், துணைக்காக சரி என்றார்..
இன்று ஞாயிறு ,அதிசயமாக வீட்டில் , வாசலில் பேப்பருடன்...
"அம்மா..."
" யாருப்பா நீங்க?.. ஓ மாடியில் உள்ளவரா.. என்ன வேணும்"
" அம்மா இல்லியா.. இந்த பாத்திரத்தை கொடுக்க வந்தேன் அங்கிள்.."
-------------------------------------------------------------------------------------------------
" என்ன நடக்குது இங்க?..பாத்திரங்கள் எல்லாம் ?..."
" நானே சொல்லணும்னு இருந்தேன் .. மாடியில் உள்ள 5 பேருக்கும் நானே சமைத்து தருகிறேன்.. அவர்கள்
அதற்கு பணம் 10,000 மாதம் தருகிறார்கள்..."
" ஓஹோ.. உனக்கு தேவையான பணத்தை நானும் , உன் பிள்ளைகள் இருவர் தரவில்லையா?.. ஏன் இப்படி
என் மானத்தை வாங்குகின்றாய்..?.. ஒரு சமையல்காரியாய்..???"
" அதாங்க வித்யாசம்.. உங்களுக்கு தெரிவதெல்லாம் அந்த பணம். அதனால்தான் அப்படிச்சொன்னேன்...இப்பத்தான்
வாழ்க்கையில் முதல்முறையாக முழுவதும் வாழ்வதுபோல் உணர்கிறேன்.. பிள்ளை பிறந்ததுதான் தெரியும்.. நான் பட்டிக்காடு
என்று சொல்லி குழந்தைகளை படிக்க வைக்க ஊட்டி காண்வெண்ட் அனுப்பினீர்கள்.. அப்புரம் ஐஐடியாம், வெளிநாடாம்..."

" ஓ பணம் சம்பாதிக்கிறோம் என்ற திமிர் வந்துவிட்டதா?.. என்னிடம் அனுமதி கேட்காமல் செய்கிறாயென்றால் ,என்னை கூட விட்டு போகத்தயாரா ?"
".நான் ஏங்க போகணும்.. என்ன குறை வெச்சீங்க இதைத்தவிர.. எனக்கும் கடமை இருக்கு உங்களுக்கு ஆயுசுக்கும் சேவை செய்ய..ஆனா; எனக்காக முதல்முறையா
வாழ்க்கையை ஆரம்பித்துள்ளேன் , இதை நிப்பாட்ட மாட்டேன் என்றே தோன்றுகிறது...பேரப்பிள்ளையாவது கொஞ்சலாம் என்றால் பேசும் பாஷை புரியவில்லை..
பிரசவித்தவளுக்கு ஒரு வருடம்தான் பால் கெட்டி அவதிப்படுவாள்... ஆனால் நானோ 25 வருடமாக பாசத்தை கெட்டி வைத்து அவதிப்பட்டுள்ளேன், இந்த போலி
வாழ்க்கையில்... இப்பதான் 5 குழந்தைகளுக்கு தாயாகியிருக்கேன்.. என் மனத்தில் சுமையாக தேக்கி வைத்திருந்த பாசமெல்லாம், அவர்கள் " அம்மா" என்று அழைக்கும்போது
அப்படியே பீறிச்சு வெளிவருகிறது..... கடைசி காலத்தில் இதற்காக எதையும் இழக்க தயார்..
பயமுருத்தவில்லை... புரிந்து கொள்ளுங்கள்.." என்று கண்ணீருடன் சென்றுவிட்டாள் சுகந்தி..
பெருமிதம் கொண்டிருந்த தன் போலி வாழ்க்கையின் மறுபக்கத்தினை உணர்ந்தவராய் அதிர்ச்சியில் மாடிக்கு ஏறினார் வேணுகோபால்..
" அங்கிள் நீங்களா?.. கூப்பிட்டா நானே வந்திருப்பேனே?." பயத்துடன் சீனு..
" அங்கிள் இல்லப்பா, அப்பான்னு சொல்லுவியா?.."
*******************************************************************************************************************
தத்து குழந்தை..சிறுகதை



" என்னம்மா , இன்னுமா கிளம்புற.. நேரமாச்சு.. சீக்கிரம்..."
" இதோ வந்துட்டேங்க... குழந்தைக்களுக்கு பரிசாக வாங்கிய சில பொருள்களை எடுத்துவைக்கிறேன்.."
ரிஷியும், ரேஷ்மாவும், ஆசையோடு , சந்தோஷமாக காரில் வந்து அமர்ந்தனர்..., ஏகப்பட்ட பரிசுபொருள்களோடு.
" ரேஷ்மி, நான் சொல்றேன்னு தப்ப எடுத்துக்காத..."
" இல்லை, இல்லை .. சொல்லுங்க....தப்பா எடுத்துக்கிறமாதிரி சொல்லமாட்டீங்க..." சிரிப்புடன்..
" நாம தத்தெடுக்கப்போற குழந்தையை பரமாரிக்க ரொம்ப பொறுமை வேணும்பா..."
"ஆமா, அதுக்கென்ன?.."
" இல்ல , ஒரு குழந்தைன்னா பரவாயில்லை.. இரண்டு குழந்தை.. அதுதான் ..."
" அதுக்கெல்லாம் தயாராதான் இருக்கேங்க..."
"அதுகில்லப்பா, இரண்டு குழந்தைக்கும் வேளாவேளைக்கு கவனிப்பு, வேணும்.. நீ ரொம்ப பொறுமைசாலி... ஆனாலும், குழந்தை தெரியாமல்
இருப்பிடத்திலேயே , மலம் கூட கழிக்கலாம்... அதுதான்.."
" ஏன் ரிஷி , இதுக்கெல்லாமா யோசிக்கணும்.. அந்த குழந்தைங்க தரப்போற புன்னகை, மனநிம்மதியும் , மகிழ்ச்சியும், நான் செய்யப்போற
எல்லாத்துக்கும் ஈடாகாதே...இத்தனை நாள் இதனையெல்லாம் இழந்ததற்கு மொத்தமா சேர்த்து அனுபவிக்கப்போறேன்னு நினைக்கும்போதே
சந்தோஷமாயிருக்கு ரிஷி..."
" சரிங்க தலைவியே, ஆனா இந்த ரிஷியையும் கொஞ்சம் அப்பப்ப கவனிச்சுக்கோங்க, தயவாக....."கெஞ்சுவதுபோல்..
" ரி....................ஷ்ஷ்ஷ்ஷீஈஈஈஈஈஈஈஈஈஈ" செல்லமாக இடித்தாள் ..
" அடிக்கடி மருத்தவமனை, செலவுகள் என்று எதிர்பாராத விஷயங்கள் வரலாம்... "
" அய்யோ .. என்ன ரிஷி... இதுகூடவா புரியாமலா..?.."
" இல்லம்மா, அதுமட்டுமல்ல, குழந்தைகளுக்கு என்ன வருத்தம் , நோய் என்றுகூட நமக்குத்தெரியாது.. ரொம்பவும் பாசம் வெச்சுட்டு ..அப்புரம், ஒருவேளை பிரிய..."
ரிஷியின் வாயைப்பொத்தினாள் ரேஷ்மி..
" போதும் ரிஷி.. இதுக்குமேல ஒண்ணும் பேசாதீங்கப்பா... கடவுள் இருக்கிறார்..."
வண்டியை நிறுத்தி கண்கலங்கியவளை அணைத்துக்கொண்டான்...
" உன்னுடைய வெகுளித்தனமான , இளகிய மனம் தெரிந்துதான் சொன்னேன்டா, மன்னிச்சுக்கோம்மா"
கார் மெதுவாக, முதியோர் இல்லத்துள் நுழைந்தது, இரு முதியோரை, குழந்தையாக, கொஞ்சுவதற்கு, தத்தெடுக்க ஆவலாய் வந்தார்கள் குழந்தைப்பேறு
இல்லாத, காதல் திருமணத்தால் உறவுகளையும் இழந்த ரிஷியும் , ரேஷ்மாவும்...



குழ‌ந்தையின் கும்மி.. - 5

அன்று வார‌ விடுமுறை ..ஷாப்பிங் போயே ஆக‌ணும்.. என்ன‌ ச‌ட்டை போட்டாலும் பிடிக்காதாம்.. அதாவ‌து ப‌ர‌வாயில்லை.. நான் என்ன‌ உடுத்தினாலும் " இது வேனாமா. வேற‌ போடு.. இப்ப‌டியே 4 முறை மாற்றியாச்சு..."
அவுக‌ அப்பா கூட‌ சொன்ன‌தில்லை...இப்ப‌டி.
ஒருவ‌ழியா கிள‌ப்பி டிபார்ட்மெண்ட் ஸ்டோர் சென்றோம்.
எப்போதும் வ‌ண்டிக்குள்ள‌ தூக்கி போட்டாதான் நான் சாமான் வாங்க‌ முடியும்...
இன்னிகு பிடிவாத‌ம் .. கீழே விடுன்னு.. இறக்கி விட்டா அவ‌னும் ஒரு கூடையை எடுத்துக்கொண்டு, என் பின்னாலேயே க‌ண்ட‌ சாமானும் ( அவ‌னுக்கு பிடித்ததை ) எடுத்துப்போடுகிறான்..
அண்ணாவும் அப்பாவும் சொல்லி பாத்து , கெஞ்சிப்பாத்தாலும் முடிய‌லை..
"ச‌ரி விடுங்க‌.. ஏதோ உடையாத‌ சாமான் எடுக்கானான்னு ம‌ட்டும் பாருங்க‌..."
அவ‌னுக்கு நான் ச‌ப்போர்ட் ப‌ண்ற‌துக்கு ந‌ன்றியா உட‌னே என‌க்கு ஒரு முத்த‌மும், .....
அய்யோ என்ன‌ இது... இப்ப‌ என் வ‌ண்டியையும் சாமானால் நிற‌ப்ப‌ ஆர‌ம்பிக்கிறான்..
கேக்க‌ணுமா அண்ணாக்கும் அப்பாக்கும் சிரிப்பை.. மெதுவாக க‌ழ‌ண்டுகொண்டார்க‌ள்..நீயாச்சு பையனாச்சு என்று.
" என்ன‌ங்க‌.. ஏய் த‌ம்பி..கொஞ்ச‌ம்.. /..."ம்கூம்.. ஆள காணோம்..இப்ப‌ ட‌புள் வேலை...சின்ன‌வ‌ன‌ மேய்க்க‌ணும்.. சாம‌னன்க‌ளை ஞாப‌க‌மா வாங்க‌ணும்.. அப்ப‌ப்ப‌ அவ‌ன் கீழே போடுற‌தை எடுத்து குடுக்க‌ணும்.. எங்க‌யும் இடிக்காம‌ ச‌ர்க்கஸ் ப‌ண்ண‌னும்..முக்கியமா, கவுண்டரில் அவன் வாங்கிய சாமானை அவனுக்குத்தெரியாமல், மறக்காமல் எடுத்துவிடணும்.. சிலசமயம் வீடு வந்தபிந்தான் தெரியும் , இது எப்படி வந்தது என்று..?.
ஒருவ‌ழியா வாங்கிய‌தும் உண‌வு செக்ஷ‌‌‌ன்..
அங்கே சாம்பிளுக்கு ஒரு கேக்கை ப‌ல‌ துண்டா வெட்டி வெச்சுருந்தாங்க‌.. நான் எவ்வ‌ள‌வு ந‌ல்லா ( ????) கேக் ப‌ண்ணினாலும் வாச‌ம் கூட‌ பிடிக்காத‌வ‌ன், அந்த‌ பொண்ணு குடுத்த‌தும் வாங்கிக்கொண்டான்.. ஆச்ச‌ர்ய‌ம்.. ஓ அவ‌ அழ‌கா இருக்கான்னா.. ?//.
அவ‌ள் மேலும் மேலும் கொடுக்க‌ வாங்கி சாப்பிடுறான்.. அங்கே வ‌ந்த‌ அண்ணாவுக்கும் அப்பாவுக்கும் ஆச்ச‌ர்ய‌ம்.. என‌க்கோ ச‌ந்தோஷ‌ம் , பிள்ளை புதுசா கேக் சாப்பிடுறானேன்னு.. அண்ணாக்கு கோவ‌ம் வ‌ருது.." அம்மா , போதும்.. முழுதும் சாப்பிடுவான் போல‌.. என்ன‌ நினைப்பாங்க‌.."

" ப‌ர‌வாயில்லை மா.. நான் காசு கொடுக்கிறேன்...ஒரு சின்ன துண்டுதானே மா"
" அய்யோ அம்மா.. என‌க்கு அசிங்க‌மா இருக்கு..."
" ச‌ரி நீ அப்ப‌ கொஞ்ச‌ம் ஒதுங்கிக்கோ. என‌க்கு என் பிள்ளை சாப்பிடுற‌தே பெரிச‌ப்பா..புதுசா ஒன்று கத்துக்கொண்டிருக்கிறான் தொந்தரவு செய்யவேணடாமே.."
அதே கேக் ஒரு பார்ச‌லும் வாங்கிக்கொண்டேன்..வீட்டுக்கு வந்து அத தொட்டுகூட பாக்கலங்கறது வேற விஷயம்...
அடுத்து நான் காய்க‌றி வாங்க‌, அவ‌னோ திராட்சை பார்த்துவிட்டான்..ம்.. ரொம்ப‌ பிடிக்கும்.. அதுவும் க‌டையில் இருந்தால் ம‌ட்டும்..
திராட்சை கொத்தில் ஒன்றினை ம‌ட்டும் பிய்த்துவிட்டு, ஒடுகிறான், ப‌ண‌ம் செலுத்துமிட‌ம்..
பின்னாலே நானும்.. ஓடினேன்...க‌வுண்ட‌ரில் வைக்கிறான் அந்த‌ ஒரு திராட்சையை, ரொம்ப‌ உத்த‌ம‌னாட்ட‌ம்.. அவ‌ளோ சிரிக்கிறாள்.. அதற்குள் அப்பா ஒரு பையில் திராட்சையுட‌ன் வ‌ந்து ப‌ண‌ம் செலுத்த‌, அவ‌ன் திராட்சைக்கு ம‌ட்டும் அவ‌ன் கையில் ப‌ண‌ம் த‌ந்து. அதையும் ஒரு சின்ன‌ பையில் போட்டு கொடுத்த‌தும் ஏதோ சாதித்த‌ ச‌ந்தோஷ‌ம் .. ஆனா அண்ணாவுக்குதான் இதெல்லாம் பிடிக்க‌வில்லை... அவ‌ர் செய்த‌ குள‌ப்ப‌டிக‌ள் ம‌ற‌ந்து விட்டாரே.......

அடுத்து ஐஸ்கிரீம்... அப்பாவுக்குத்தெரியாம‌ல் வாங்க‌ணுமே... இல்லாட்டி திட்ட‌ ஆர‌ம்பித்தால் என் ப‌ர‌ம்ப‌ரை ப‌ல்லின் பெருமையெல்லாம் இழுப‌டுமே....
************************தொட‌ரும்..******************

லேசான தூறல்.. சிறுகதை..


" சாரிப்பா மன்னிச்சுக்கோ.."
" செய்றதையெல்லாம் செஞ்சுட்டு மன்னிப்பா?.. "
" அதான் சொன்னேன்ல.. மறந்துட்டேன்... திருமண நாளை.."
" அப்ப இப்படியே ஒரு நல்ல நாள் பார்த்து என்னையும் மறந்துடுங்க.."
" ம். சரி.."
" என்னாஆஆஆஆ.....து?"

" ம். இல்ல இல்ல ..கோவத்த பாரு.. ஆமா இந்த கோவத்தையெல்லாம் ஏன் கல்யாணத்துக்கு முன்னாடி காட்டல??"
" ம். பதில் சொல்ல மாட்டேன்.. "
" ஆமா.. ஏன் காட்டலன்னா, நீங்க ஒழுங்க இருந்தீங்க.. இப்படி இல்ல.."
" பதில் சொல்லிட்ட.. கிகிகி.."
" போதும் சிரிப்பு.."
" அய்யோ என் வேலை அப்படிம்மா... புரிஞ்சுக்கோ."
" அதுக்காக நம்ம கல்யாண நாள்கூட மறக்குமா?.. எங்க அப்பா எவ்வளவோ பரவால்ல.."
" என்ன .. எல்லா நாளையும் மறந்துடுவாரா மொத்தமா?..கிகிகி"
" ரொம்ப கோபப்படுத்தாதீங்க.. இப்பவே நான் அப்பா வீட்டுக்கு போறேன்...1 வாரம்..க்ர்ர்ர்"
" ஆ..ஊ ன்னா அப்பா னு சொல்லி எதுக்கு கம்பேர் பண்ற... உங்க அப்பா ஓட்டை ரைஸ்மில் வெச்சுட்டு வீட்டுக்கு
பக்கத்திலேயே வண்டிஓட்டுறார், வக்கணையா 3 நேரம் சாப்பிட்டு தூங்கி... என் நிலைமை அப்படியா கணினி யை கட்டி அழுவுறேன்,
நேரம் காலம் இல்லாம.."
" சரி.சரி, என் தேவதையே, வழக்கம்போல வழியனுப்புவியாம்... "
" மரியாதையா போய்டுங்க, இன்னும் கோவம் வரதுக்குள்ள.. சே என் பிரண்ட்ஸ் எல்லாம் என்ன நினைப்பாங்க.."
-----------------------------------------------------------------------------------------மதியம்
தோழியுடன்...அரட்டை...
" நல்லா டோஸ் விட்டேன் .. பயந்துட்டாருப்பா.."
" அதானே .. அதெப்படி திருமண நாளை மறக்கலாம்.."
" ம். இப்பத்தான் திருப்தியா இருக்கு...ஆனா பாக்க பாவமாயும் இருக்கு வருக்கு வேலை அப்படி.."
" நீயும் கொஞ்சம் பொறுமையா போயிருக்கலாமோ என்னவோ.."

" சரி சரி அப்புரம் பேசுறேன்.,.சாயங்காலத்துக்கு ஏதாவது விசேஷமா ஸ்வீட் பண்ணனும்.."
"ம். விட்டுக்கொடுக்க மாட்டியே.."
---------------------------------------------------------------------------------------------------
சாயங்காலம்..
அலுவல் முடிந்து கோபத்துடன் வீட்டிற்கு வருகிறான் .
" கிளம்பு.."
" எங்க..?."
" ம். உங்க அப்பா வீட்டுக்குதான்.."
" ம். எதுக்குங்க."
" ம். காலங்காத்தால கோபப்படுத்தி மனுசன அலுவலகம் அனுப்ப வேண்டியது... அங்க போய் நான்
தப்பு தப்பா செய்ய வேண்டியது.."
" சரி அது காலையிலேயே முடிஞ்ச விஷயம்.. இப்ப போய்."
" அதெல்லாம் தெரியாது.. இன்னும் 1 வாரம் உங்க அப்பா வீட்டுலதான் .,.. அப்பதான் என்னால புராஜெக்ட் ஒழுங்கா முடிக்க முடியும்.."
" ச்......என்ன இது திடீரென்று..."
" இப்ப நீ கிளம்புறயா இல்ல நான் எடுத்து வைக்கவா?."
எரிச்சலுடன் எடுத்து வைக்கிறாள்..
காரை எரிச்சலுடன் ஓட்டிக்கொண்டே செல்கிறான்... அவளோ தொண தொணன்னு..
" சரி இப்பவாவது ஒரு முடிவுக்கு வாங்க... ஏன் இந்த அவசரம்..."
" நீ மட்டும் கோபப்ப்டலாம் நான் படக்கூடாதா.."
" அதுக்கு பழிக்குப்பழியா.. ?. சரி சாமி இனி கேட்கல போதுமா?."
" அதெல்லாம் போதாது.."
" அப்ப.. என்ன மன்னிப்பு கேட்கணுமா?.."
" ம்.....ம்.. சரி ஆனா மன்னிப்பு நான் சொல்ற மாதிரி சொல்லும்போது கேளு போதும்..."
" என்ன புதிர் போடுறீங்க?.. ஆமா கார் எங்க போகுது ஸ்டேஷன் போகாம..?."
" பேசாம வா.."
" அட நீங்களே என்னை அப்பா வீடு வரை கொண்டு விடப்போறீங்களா??."
" இந்த தொண தொணப்பு தாங்காமதான் " பல்லை கடித்துக்கொண்டு...
" தங்காமதான்???" பயத்துடன்...
" 1 வாரத்துக்கு.."
" 1 வாரத்துக்கு..?????" திகிலுடன்
" ஹஹஹஹா.."
" நம்ம திருமண நாளை கொண்டாட ஊட்டி போறோம்....இப்ப உன் மன்னிப்பை தாராளமா இங்க தரலாம்.."

"..............:-)) " நாணத்துடனும் பொய் கோபத்துடனும்......
--------------------------------------------------------------------------------------------------
சரி இப்படில்லாம் சர்பிரைஸ் கொடுக்காதீங்க புதுசா கல்யாணம் ஆனவங்க... தாய்குலத்துக்கு பிடிக்காது...:-)))
அலெக்ஸ் தொடர்ச்சி..

அடுத்து வந்த நாட்களில் அலெக்ஸின் வருகை குறைந்தது.. விஷயம் தெரிந்து வேதனைப்பட்டோம்..
அலெக்ஸின் அப்பாவுக்கு திடீரென்று வேலை போய்விட்டது... அது ஒரு பன்னாட்டு நிறுவனம்..எங்களால் முடிந்த அளவு
தேடினோம்.. இங்கு தாய் பாஷை கண்டிப்பாக தெரியணும்...இல்லாவிட்டால் கொஞ்சம் கடினமே.. இதனால் பாதிப்பு அலெக்ஸுக்கு..
அவன் படிப்பை தொடர முடியாத நிலைமை.
என்ன கொடுமை.. குழந்தைக்கு அது ஒன்றுதான் ஆறுதல்.. அதுவும் முடியாவிட்டால்...?..அவர் அப்பாவே வீட்டில் பாடம்
எடுக்க நினைத்தார்.. நானும் உதவுவதாய் சொன்னேன்.. அப்பதான் நான் மும்முரமாய் CCNP படித்துக்கொண்டிருந்தேன்,
ஆனால் இதை எதையும் வெளிக்காட்டாமல் அலெக்ஸ்..பின்பு ஒருவழியாக அவர் பள்ளி முதல்வரிடம் ( எனக்கு தெரிந்தவர்)
பேசி செலவுகளை பின்னாளில் தருவதாய் கூறி அந்த பிரச்னையை சமாளித்தோம்..பள்ளிக்கு சென்று அவன் ஆசிரியரை சந்தித்தால்
" அலெக்ஸ் சேட்டைக்காரந்தான்" என்கிறார்கள்.. நம்பவே முடியவில்லை.. இருந்தாலும் சந்தோஷம் .. பிள்ளைக்கு சமாளிக்கவும் தெரியணுமே உலகில்... தாய்க்கு எப்போதும் தன் பிள்ளை நல்ல பிள்ளையோ????
அவர் தந்தை இப்போது அமெரிக்கா செல்ல முயற்சி எடுத்தார்.. அவர் சகோதர சகோதரி அங்கு இருப்பதால்.. இடையில் அவர் மட்டும் போவதாயும் , அலெக்ஸ்ஸை எங்களிடம்
விட்டுப்போவதாயும்.. எனக்கே தத்து கொடுத்தது போல அப்படி ஒரு சந்தோஷம் ...என் மகனுக்கும்..கற்பனையில் மிதக்க ஆரம்பித்தேன்..
முதல் முறை விசா நிராகரிக்கப்பட்டது... அலெக்ஸ் அப்பா வந்து என்னிடம் ஜெபம் செய்யச்சொன்னார்கள்.. ஆனால் என் மகனோ,
" கடவுளே அலெக்ஸுக்கு விசா கிடைக்கக்கூடாது " என்று ஜெபிக்கிறான்... அவனுக்கு புரிய வைப்பதற்குள் பெரும்பாடு.
அலெக்ஸ் நல்லா இருக்கவேண்டாமா, அவன் நம்ம கூட இருப்பதைவிட அவன் வாழ்வு சிறக்கணுமே தம்பி.. ம்கூம்.. புரியவில்லை.
இதற்கிடையில்தான் என் மகன் நச்சரிக்க ஆரம்பித்தான் தனக்கு துணையாக ஒரு தம்பி வேண்டுமென்று.அலெக்ஸ் போய்விட்டால்
தான் தனிமைப்படவேண்டுமென்று..
அப்படி ஒரு எண்ணமே கிடையாது.. ஆனாலும் கடவுளிடம் ஜெபிக்கும்படி சொல்லிவைத்தேன்.. அவன் அதை வேத வாக்காய் எடுத்துக்கொண்டு
2 வருடம் தவறாமல் ஜெபித்தான்... நான் சிரித்துக்கொள்வேன்..

அலெக்ஸுக்கு விசா கிடைத்தது.. அதே நேரம் கடவுள் கிருபையால் ஒரு குழந்தையும்...அலெக்ஸுக்கும் என் மகனுக்கும் ரொம்ப மகிழ்ச்சி..
ஆனால் அலெக்ஸ் மார்ச் மாதம் அமெரிக்காவுக்கு செல்ல எங்க வீட்டுக்கு மே மாதம் குழந்தை வந்தான்..
அலெக்ஸ் க்கு சிறப்பாக ஒரு பிரிவுபசார விழா வைத்தேன்.. பிரிய மனமின்றி..உணர்ச்சிகளையும், அழுகையையும் கட்டுப்படுத்தி..
அவனுக்கு அலெக்ஸ் என்றே பெயரிட ஆசை.. ஆனால் ஆண்ட்ரி பிரியன் டேனி என வைத்தோம்...இவனோ அலெக்ஸுக்கு எதிர்புரம்.
அலெக்ஸ்ஸை மறப்பதற்கே வந்த குழந்தை... ஆனாலும் அலெக்ஸுக்கான இடம் யாராலும் நிரப்பப்படமாட்டாது..
என்றாவது சந்திக்கலாம்.. சந்திக்காமலே போகலாம்... ஆனால் பல இனிய நினைவுகளை தந்துவிட்டு சென்றுவிட்டான்..அவனுக்கான நேசம் வட்டியோடு வளர்ந்துகொண்டிருக்கிரது..:-))
நிறய அவனைப்பற்றி எழுதலாம் .. என் மேசையின் பேப்பர் ( டிஷ்யூ) காலியாகிவிட்டது...:-((
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நமக்கான அன்பானவர்களும் ,பிரச்னைகளும், தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவே நம்புகிறேன்.... அந்தந்த காலங்களில்..
கசப்போ, இனிப்போ ,அவற்றின் சுவையை பருகிக்கொள்ளவேண்டியுள்ளது.., .. இந்த நீண்ட வாழ்க்கை பிரயாணத்தில்..