Showing posts with label கலாச்சாரம். Show all posts
Showing posts with label கலாச்சாரம். Show all posts

Friday, June 17, 2011

குழந்தைகளா அடிமைகளா , முதலீடுகளா ?..


வாழ்க்கை எனப்து எதற்கு?.. மிக சந்தோஷமாக வாழணும் என்று இல்லாவிட்டாலும் ஓரளவு திருப்தியாக வாழணும்..

முடியுமா?.. நிச்சயமாக முடியும்.?.

எப்படி.?.. ஆசைகளையும் எதிர்பார்ப்புகளையும் அளவோடு வைத்துக்கொண்டோமானால்..

ஆனால் என்ன ஆகியுள்ளது?.. அளவுகோள்களே மாறிவிட்டது...

ஆசை பேராசையாக மாறியதை அறியவில்லை..

எதிர்பார்ப்புகள் திணிப்புகளாக மாறியதையும் அறியவில்லை..

சமீபத்தில் படித்திருப்பீர்கள் சரண்யா பார்த்தசாரதி பற்றி செய்திகளில்..

ஒரு காதலை ஏற்க முடியாமல் மருமகனை கொலை செய்த பெண்ணின் பெற்றோர்கள்..

இத்தனைக்கும் பெண்ணின் தாய் ஒரு ஆசிரியை..நம்பவே முடியாத செயல்..

தான் கொலை செய்வோம் என என்ணியிருப்பார்களா?..நிச்சயம் மாட்டார்கள்..

நல்ல ஒரு குடும்பமாகத்தான் இருந்திருக்கும்.. கஷ்டப்பட்டே குழந்தைகளை வளர்த்திருப்பார்கள்..

கொஞ்சி , கெஞ்சி நம்மைப்போலவே வளர்த்திருப்பார்கள்..

பணம் கொடுத்தே மெடிக்கல் சீட் வாங்கியிருப்பார்கள்.. குழந்தை படிக்க எல்லா உதவியும் தியாகமும் செய்திருப்பார்கள்..

ஆனால் எங்கே தவறு நடந்தது?..

அன்பு வைப்பதாக சொல்லி நம்மையறியாமலேயே அடிமைத்தனத்தை புகுத்துவதை நாமே அறிவதில்லைதான் சில சமயம்..

ஏனெனில் சுற்றமும் சூழலும் , நமக்கு அப்படி அமைகிறது.,.

மெடிக்கலோ , பொறியியலோ படித்தால்தான் வாழ்க்கை இனிமையாக அமையும் என எண்ண வைக்கப்படுகிறோம்..

இப்படி விழுந்து விழுந்து படிக்கும் குழந்தைகள் முகத்தில் மகிழ்ச்சியை பார்த்துள்ளீர்களா.?


எல்லாத்துக்கும் டியூஷன், அல்லது சிறப்பு வகுப்புகள் என நேர இடைவெளி இல்லாமல் படும்பாடு..

இதில் பெற்றோர் இருவருமே வேலைக்கு செல்வதால் அன்பா ஆதரவா உட்கார்ந்து பேசி குழந்தைகளிடம் மனம் திறந்து பேசக்கூட நேரமில்லை
இந்த வேகமான உலகில்..அதோடு நம் விருப்பப்படி பாடம் எடுத்து படிக்கும்போது வேண்டா வெறுப்பாகவும், பெற்றோரை எதிர்த்து பேச முடியாத மன அழுத்தமும்..

மொத்தத்தில் நம் பெருமைக்காக குழந்தைகளை ஒரு முதலீடாக ஆக்கிக்கொண்டு வருகிறோம்..

படிக்கவேண்டிய வயதில் படிக்கணும்தான்.. மறுப்பில்லை.. ஆனால் அதுவே திணிப்பாக இருந்திடக்கூடாது..

இதில் மட்டுமல்ல , மத திணிப்பும், கலாச்சார திணிப்பும், இன்னும் பலவித பழக்கவழக்க திணிப்பையுமே நாம் செய்கிறோம் சிந்திக்க விடாமல்..


இத்தகைய குழந்தைகள் வெளியில் பாசம் கிடைத்தால் அதையே காதல் என நினைத்து தவறிவிட வாய்ப்புகள் அதிகம்..

வருகிற சினிமா எல்லாமே காதலைத்தான் சொல்கிறது.. தொலைக்காட்சியிலும் அதே..

பருவ வயது வந்ததும் காதல் வயப்படலாம் என நாம் அறியாததா?.. அதை மறைத்துத்தான் வைக்க இயலுமா?

அடிமைகளாக வளர்க்கப்படும் குழந்தைகள் , தனக்கான மரியாதையும் அங்கீகாரமும் வெளியே கிடைக்கும் பட்சத்தில் அதையே பெரிதாக
எண்ணுவதில்லை வியப்பில்லை..

இதேதான் திருமணம் தாண்டிய உறவுகளிலுமே காண்கிறோம்..

அடிமைத்தனமும், அதிகாரமும் இருக்குமிடமெல்லாம் இதே போல நடைபெற வாய்ப்புண்டு.. இது ஒரு சமூக பிரச்னையாக பார்க்கப்படவேண்டிய
விஷயம்..



வாலிப வயது வந்ததுமே பிள்ளைகளைன் நடவடிக்கையில் மாற்றம் ஏற்படும்.. எரிச்சல் வரும் ஹார்மோன் மாற்றங்களால். நாம் சொல்வது எதுவுமே பிடிக்காது. நமக்கோ கோபம் வரும்.. நாம் நல்லதுதானே சொல்கிறோம் , இதுவரை நம் பேச்சை கேட்ட பிள்ளை நம்மை மதிக்கலையோ என்ற பயமும் ஈகோவும் நமக்கு..

கொஞ்சம் விட்டுப்பிடிக்கவேண்டிய வயது.. சில குழந்தைகளுக்கு வீட்டை விட்டு தப்பிச்சா போதும் என்ற எண்ணம்.. ( வெளியே போய்
பார்த்தால்தான் தெரியும் வீட்டிலுள்ள சுகம் ) .

நாம் மட்டுமே வளர்க்கவில்லை குழந்தைகளை. புற சூழலுமே சேர்ந்துதான் அவர்களை நாலாபக்கமும் இழுக்கின்றது..

முரண்டு பிடிக்கும்போது விட்டுப்பிடித்தும் கண்டிப்பை கொஞ்சம் பொறுமையாகவும் எடுத்தாள வேண்டும்.

இங்கே சரண்யா விஷயத்தில் அவர் தன் காதலை சொன்னதும் அவசரம் அவசரமாக அமெரிக்க மாப்பிள்ளைக்கு நிச்சயம் செய்ததாலேயே அவர்
உடனே திருமணம் செய்துள்ளார் பெற்றோர் சம்மதமின்றி..

இதே போல பெற்றோர் மிரட்டியதும் , பிளாக் மெயில் செய்ததும் , அவசரப்பட்டதுமாய் ஏகப்பட்ட கதைகளுண்டு..

ஏன் இந்த நிலைமை?..

ஆழுமைதான் காரணம்.. குழந்தை எனக்கு சொந்தம் என்ற எண்ணம்.. இது மிக தவறு..

என்னதான் நாம் பெற்றாலும் நம் குழந்தை என்றாலும் சொந்தம் கொண்டாடுவதிலும் ஒரு அளவு இருக்கிறது..


இதை கலீல் ஜிப்ரான் மிக அழகாக சொல்கிறார் பாருங்கள்..


“Your children are not your children.
They are the sons and daughters of Life’s longing for itself.
They come through you but not from you,
And though they are with you, and yet they belong not to you.
You may give them your love but not your thoughts,
For they have their own thoughts.
You may house their bodies but not their souls,
For their souls dwell in the house of tomorrow,
which you cannot visit, not even in your dreams.





ஆசை ஆசையாய் வளர்த்த மகள் இன்று அழுதபடி கண்ணீரில்.. அப்பாவோ சிறையில்..


சமீபத்தில் படித்திருப்போம் பஸ் விபத்து பற்றி.. அதில் திவ்யா என்ற பெண் நிச்சயதார்த்ததுக்காக சென்றவர்.. அந்த மகளையும் இழந்துவிட்டதே
அந்த குடும்பம்..


ஆனால் விபத்து என்றால் ஏற்கும் மனம் காதல் என்றால் கொலைவெறி வருவது ஏன்?.


ஏழை, பணக்காரன், சாதி, மதம் , இனம் என பல்வேறாக நம்மை நாமே பிரித்துக்கொண்டு கோழைகளாக வாழப்பழகியுள்ளோம்..

எது வந்தாலும் அதை ஒரு சேலஞ்சாக எடுத்து வாழப்பழகவில்லை.. அப்படி பழகியிருந்தால் இந்த வித்யாசங்களெல்லாம் எப்பவோ அழிந்து
போயிருக்குமே..


சக மனிதனை மனிதன் என்ற அளவுகோல் மட்டுமே கொண்டு நேசிக்க பழகியிருந்தா இத்தனை சுயநலமும் வெறித்தனமா பணம் சேர்க்கும் எண்ணமும் வந்திருக்காதே...

நானுமே திணிக்கப்பட்டே வளர்ந்தவள்தான்..( மதம் , சாதி, படிப்பு என ) .. இருப்பினும் இப்பதான் விபரங்கள் புரிய ஆரம்பித்தது..

என் குழந்தைகளுக்கு முழு சுதந்திரம் தருவதோடு , பொறுப்புகளை மட்டும் சொல்லித்தருவதும், எல்லா செயலுக்குமான விளைவுகள் பற்றியும்
எடுத்து சொல்வதுமே என் கடமை.. மற்றவை அவர்கள் பொறுப்பு..


லண்டனில் 16 வயதானதும் தனியே அனுப்பிடுவார்களாம் குழந்தைகள் பொறுப்பெடுக்க பழகிக்கொள்ள..அச்சமூகமும் அவர்களுக்கான
பாதுகாப்பையும் , பொறுப்பையும், ஊக்கத்தையும் அளிக்கின்றது.. பாலியல் குறித்த பயம் இல்லை.. ஒரே இடத்தில் ஆணும் பெண்ணுமாய் சேர்ந்தே
தங்குகின்றார்கள்.. இருவரின் பிரச்னைகளையும் புரிந்து கொள்கிறார்கள்.. சமாளிக்க பழகுகின்றார்கள்..

காமம் குறித்த தெளிவான பார்வையும் பாலியல் புரிதலும் இருக்கின்றது..

ஆனால் நமக்கோ ஆயுசுக்கும் குழந்தை என்றே கொஞ்சிக்கொண்டும் , அடிமைப்படுத்திக்கொண்டும் இருக்கிறோம்..அவர்களை சுயமாக சிந்திக்க
விடாமல்..வாழ்நாளெல்லாம் கைதியாக்கி சுமை சுமக்க வைத்து?..

நமக்கு பிடித்தமில்லாத காரியத்தை செய்துவிட்டு சிக்கலில் மாட்டினால் , சில நேரம் தோல்வி அடையவும் வாய்ப்பு கொடுங்கள்.. அவர்கள்
அதிலிருந்து மீண்டு வரும்போது துணையாக , ஆறுதலாக இருங்கள்.. அப்படி வளர்க்கப்படும் குழந்தை எல்லா சிக்கலையும் சமாளிக்கும் ..

தோளுக்கு மேல் வளர்ந்தால் தோழன் னு சும்மாவா சொன்னாங்க.. நம்மைவிட பல விஷயம் தெரியுது இக்கால குழந்தைகளுக்கு..

நாம் யாருமே தவறே செய்யாதவர்கள் இல்லையே.. தவறிலிருந்தே பல பாடங்களை கற்கிறோம்..

வாழ்நாள் முழுதும் இறுதி மூச்சுவரை கற்றுக்கொண்டே இருக்கிறோம்..நமக்கு எல்லாம் தெரியும் என்ற பிரமையிலிருந்து விடுபடுவோம்..

நாமுமே குழந்தைகள் தான் சில நேரம்..

நம்மிடம் இருக்க போவது சில வருடங்களே அவர்கள்,.. சிறகு முளைத்ததும் பறந்துவிடுவார்கள்.. இந்த குறுகிய காலத்தை இனிமையாக கழிப்போம்..


மெல்ல மெல்ல நாமும் மாறி நம்மை சுற்றியுள்ள இந்த போலி சமூகத்தை மாற்றுவோம்..



நீண்டு விட்டது பதிவு.. பொறுமையாக படித்தமைக்கு நன்றிகள்..:)


இது தொடர்பான பதிவை படிக்க - http://www.vinavu.com/2011/06/14/chennai-murder/


(படம் : நன்றி கூகுள்.. அலுவல் வேளை பின்னூட்டம் தவிர்க்கவும்.. )



Sunday, May 1, 2011

மே தினம்


அல்லோகலமாய் மேதின கொண்டாட்டம்
அடுப்படியில் இடுப்பொடிய திண்டாட்டம்

உழைக்கும் வர்க்கத்திற்கே ஓய்வின்றாம்
உனக்கில்லை பெண்ணே ஒதுங்கிக்கொள்

தொழிலாளிக்கு மட்டுமிங்கே அங்கீகாரம்
தொய்வில்லாது சுமப்பாய் குடும்ப பாரம்..

குழந்தைவளர்ப்பு , வீட்டுவேலை தொழிலல்ல
குற்றம் குறை சொல்வதுமுனக்கு அழகல்ல...


பணக்கூலிபெற்றால் தொழிலாளிவர்க்கமாம்
பத்துதேய்ப்பவள் பட்டியலில் இல்லையாம்.:(

செவிலியரென்றால் ஊதியம் மரியாதை,
செத்துமடியும்வரை முடிவில்லாத வதை?..

பாட்டிலோடு ஓய்வுக்கு தேவை ஒரு டாஸ்மாக்
பாலியல் தொழிலாளி உன் தேவை ஒரு மாஸ்க்..

குடும்பத்துக்கு உழைக்கும் பெண்ணே உனக்கும்
குடிமக்கள் துயர்நீக்க உழைக்குமனைவருக்கும்


எல்லாம் சமமென சொல்வதே மேதினவாழ்த்துகள்
எவருக்கும் அடிமையில்லை வானுயறட்டும் உம்புகழ்.




படம்: நன்றி கூகுள்..





.

Wednesday, April 27, 2011

ஏழை என்ற இளக்காரம்?.

http://timesofindia.indiatimes.com/city/chennai/Chennai-school-urges-parents-to-protest-against-RTE/articleshow/8085252.cms

மேலே உள்ள சுட்டியில் ஏழைகள் வசதியான பள்ளியில் ஒதுக்கீடு முறையில் கல்வி கற்கும் உரிமையை மறுக்க ஒரு பள்ளி அழைப்பதாக செய்தி..

Admitting poor students may bring down discipline and the quality of education and also demoralize teachers, says Sri Sankara Senior Secondary School.


ஏழைகள் எல்லாரும் மொத்தமா நாடு முழுக்க வேலை நிறுத்தம் செய்தா என்னய்யா பண்ணுவீங்க?.. முட்டாள்கள்.

ஏழை என்றால் ஒழுக்கமில்லைனு உங்களுக்கு யார் சொல்லித்தந்தா.?

In a circular issued to students by the Adyar-based school, principal Subala Ananthanarayanan has linked a student's performance to his/her economic status and asked parents to protest against the Right To Education Act.

ஒழுக்கத்த சொல்லித்தரவேண்டிய உங்ககிட்டயே ஒழுக்கமில்லையே..

வன்மையாக கண்டிக்கத்தக்கது..

எத்தனை துணிவு..?.. இதை சொல்ல?..

டிசிப்பிளீன் னா எது?,.. இந்த இங்கிலிபீசுல கெட்ட வார்த்தை பேசிட்டு அது சரின்னு அர்த்தம் சொல்ற கேவலமா?..

இல்ல பெரிய படிப்பு படிச்சுட்டு வொயிட்காலர் பிராடுதனம் , லாபியிங் பணறதா?..
குடிச்சுட்டு வேகமா கார் ஓட்டி பாதசாரிகளை கொல்வதா?.. ஈவ் டீஸிங் செய்து தற்கொலைக்கு தூண்டுவதா?.. எழுத்தில் விபச்சாரம் செய்வதா?..ரேகிங் ல் மாணவனை துண்டு துண்டாக வெட்டுவதா?.. நீதிக்கு 15 வருடம் காத்திருக்க வைப்பதா?.. எதை சொல்லுவோம் டிசிப்ளின் என.?..



ஆமா அது தெரியாதுதான் ஏழைகளுக்கு.

"All this will make all schools perform exactly like government schools in quality and discipline. //

குவாலிட்டியா?.. மாநில ரேங்க் எடுக்குது அரசு பள்ளிகள்..

(http://www.dinamalar.com/News_detail.asp?Id=19020, http://www.dinamalar.com/news_detail.asp?Id=215485 : குரோம்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பிரின்டிங் டெக்னாலஜி, மருத்துவ ஆய்வகம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் மாநில அளவில் முதலிடத்தில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது,http://article.wn.com/view/WNAT7d5d8a4fa74cee7b251d08ec41ba41d9/ தாமரன்கோட்டை அரசு பள்ளி மாணவி மாநில அளவில் சாதனை.http://silakurippugal.blogspot.com/2008/06/blog-post.html ).

இந்த மாணவ/மாணவிகள் ஆசிரியர்கள் கேள்விப்பட்டால் எத்தனை வருத்தம் வரும்.. இதைவிட கேவலப்படுத்த முடியுமா இவர்கள் உழைப்பை..???

Is this why we have admitted our children in this or any good school?" the circular asks.

குட் ஸ்கூல் கு அர்த்தம்/அளவுகோல் என்னென்ன?.. காமிராவில் சக மாணவியை படம் பிடித்து இணையத்தில் போடும் பிள்ளைகள் படிக்கும் பள்ளியா?..போதை மருந்துக்கு அடிமையாகும் குழந்தைகள் படிக்கும் பள்ளியோ.?.

இதை சொல்பவர் வீட்டில் சமையல்காரர், தோட்டக்காரர் , ஓட்டுனர், இவர்களெல்லாம் ஒழுக்கமற்றவர்களா?.. அப்படி இருந்தால் இவர்களால் இன்று இப்படி பேசமுடியுமா?..

கல்வி என்பது என்ன?..

அறிவியலும், பூகோளமும் , பொருளாதாரம் பற்றி படிப்பது மட்டுமா?.. வாழ்வில் பணம் சம்பாதித்து வெற்றி பெற்று பின் மன அமைதியின்றி வாழ்நாளெல்லாம் மருத்துவரே கதி என அலைவதா?..

நல்ல கல்வி வாழ்க்கைக்கான பாடமாக இருக்கணும்.. உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் சக மனிதனை மனிதத்தன்மையோடு நேசிக்க, அவனும் சுவாசிக்க வழி வகுக்குமாறு கல்வி இருக்கணும்..

முரண்களை ஏற்றத்தாழ்வுகளை ஏற்கும் பக்குவம் சொல்லித்தருவதாக அல்லவா இருக்கணும்.?

சிறு வயதிலேயே பிரிவினையை போதிக்கும் கூடங்களை மூடிவிட்டால்தான் என்ன?..

ஜப்பானில் சுனாமி வந்தா பதறாம இருக்கிறார்கள்.. ஏன்.. எப்படி வந்தது அந்த பொறுமை..?. பெருந்தன்மை..?.. எப்படியும் மண்ணுக்குள் போக போறோம்.. இப்பவோ எப்பவோ.. என வாழ்நாள் முழுதும் குழந்தைப்பருவத்திலிருந்தே தயார்படுத்தப்படுகின்றனர்.. வாழும் நாட்களில் நம்மால் முடிந்ததை சக மனிதருக்கு செய்யணும் என்ற ஆவல் அங்கே பழக்கப்படுத்தப்படுகிறது..


நம்மூர் தமிழர்கள் மலேஷியாவில் கழிப்பறை சுத்தம் செய்யும் வேலை செய்வதை பார்த்தேன்.. மகிழ்ச்சியாக , மரியாதையாக நடத்தப்படுவதாக சொல்கிறார்கள்.. நம் நாட்டில்.?.. எப்ப இந்த மாற்றம் வரும்.. யார் செய்யப்போகிறார்கள்..?

டிஸ்கவரி சேனலில் , காட்டில் ஒருவன் அகப்பட்டுக்கொண்டால் பாம்பை தின்று ஓடையில் ஓடும் நீர் குடித்து, மரணித்த ஒட்டகக்கறியை பிச்சி எடுத்து தின்பதாக காண்பிக்கின்றார்கள்.. ஆக மரணிக்கும் சூழல் வந்தால் அடுத்தவனை கொன்றாவது நாம் பிழைக்கணும் எனும் என்ணமுள்ள அல்ப மனிதர்களே நாம்.. ஆனால் நாகரீகம் என்ற பேரில் பல விதங்களில் மனிதன் முன்னேற்றம் அடைந்தாலும், எண்ணம் இன்னும் கீழ்த்தரமான சக மனிதனை பிரித்து பார்க்கும் விதமாக அல்லவா போய்க்கொண்டிருக்கிறது..

எத்தனை மதம் வந்தாலும், நான் மதவாதி என சொல்லத்தான் பெருமைப்பட்டுக்கொள்கிறோமே தவிர அதிலுள்ள நல்ல விஷயங்கள் நம் கண்ணில் படாமலே இருப்பது விந்தைதான்..

யோகா , ஆன்மீக சொற்பொழிவெல்லாம் யார் கேட்கிறார்கள் னு கவனித்துள்ளீர்களா?.. ஏழைகளின் யோகா, ஆன்மீகம் எது?.. ஏன் அவர்கள் மகிழ்ச்சியாக வயல் வேலையோ மற்ற வேலையோ ஈடுபாட்டுடன் செய்கிறார்கள் வெள்லந்தி மனதோடு.?.. ஏனெனில் அடுத்தவனை கெடுத்து , போட்டுக்கொடுத்து வாழ்க்கையில் எப்படி முன்னேற என்ற எண்ணம் அவர்களை அரிப்பதில்லை.. தெளிவா இருக்காங்க.. இன்னிக்கு செத்தா நாளைக்கு பால் னு தெரியுது.. உயர்தர சிகிச்சைக்காக வெளிநாடு செல்வதில்லை..ஆனாலும் எதையும் ஏற்கும் பக்குவம் அவர்களிடமல்லவா இருக்கிறது..

கிலோமீட்டர் கணக்கில் நடக்க முடியும்.,. ஆனா நாம் வீட்டுக்குள்ளேயே மெஷின் வாங்கி வைத்து அதே நடையை வெட்டியாக நடக்கிறோம்.. உலகத்தை அவர்கள் சுமக்கிறார்கள்.. நம்மைப்போன்றவர் நவீன உபகரணங்களால் பாரமாக்குகின்றோம்..மின்சாரம் இல்லாமல் நம்மால் இருக்கவே முடியாது.. அவர்களுக்கு அப்படியில்லை.. எச்சூழலிலும் வாழ முடியும்.. யார் பலசாலி?.. யாரிடமய்யா ஒழுக்கம் அதிகமிருக்குது.?..

பசிக்காக ஏழை திருடுகிறான்.. ஏழைப்பெண் பாலியல் தொழில் செய்கிறாள்.. படித்தவன் பெரிய அளவில் ஊழல் செய்கிறான்.. சீதாம்மா தன் எழுத்தில் சொன்னது போல சில பணக்காரன் ( அந்த காலத்திலேயே ) கார் கீயை மாற்றிக்கொள்கிறான்.. சினிமாவில் பெண்ணை போகப்பொருளாய் காண்பிப்பது , உடை குறைய குறைய அவளுக்கு பணத்தை புகழை அள்ளி அள்ளிக்கொடுப்பது மேல்தட்டு நாகரீகம்..???. அப்படித்தானே?.


ஏழைகளில் சேற்றில் கைவைக்காமல் நாம் சோற்றில் கை வைக்க முடியாது என்பதை ஒவ்வொரு முறை உண்ணும்போதும் எண்ணணும் என குழந்தைகளை பழக்குவோம்.. இனியாவது நாமும் திருந்துவோம், இதுவரை எப்படி இருந்தாலும்..

சுத்தப்படுத்தும் வேலையில் அவர்கள் இல்லையென்றால் நாடே நாறிவிடும் என்ற நியாபகமிருக்கட்டும் நமக்கு..

நல்லவர் கெட்டவர் எல்லா நாட்டிலும், இனத்திலும் , உண்டு.. அதுக்கு ஏழை என்ற அப்பத்தமான காரணம் சொல்லும் அருவருப்பை களைவோம்.. பணக்காரரிலும் நல்லவர் உண்டு.. பணக்காரர் எல்லாம் கெட்டவர் என ஏழை ஒதுக்குவதில்லையே..

*சக மனிதனை சமமாக பாவிக்காத, மனிதத்தனமை வளர்க்காத எந்த நாடும் அந்த மக்களும் , இல்லாமலே போகட்டும்*..


போலித்தனத்திலிருந்து இனியாவது வெளிவந்து சக மனிதனை நேசித்து ஒடுக்கப்பட்டவர்களுக்கு வாழ்நாளில் ஏதாவது செய்தோம் என்ற மன நிறைவோடு மரணிப்போம்.. அப்போது யோகம் , தியானம் ஆன்மீகம் எதுவும் நமக்கு தேவையிராது...

( செய்தி பார்த்த அவசரத்தில் எழுதியது.. தவறிருப்பின் மன்னிக்கவும்..தயவுசெய்து அலுவலிலிருந்து பின்னூட்டம் தவிர்ப்போம்.. நன்றிகள்.)

லேட்டஸ்ட் செய்தி -




படம் .: நன்றி கூகுள்..

Wednesday, March 2, 2011

கள்ளன் பெரிசா காப்பான் பெரிசா?.:






சினிமாக்களில் அன்றிலிருந்து இன்றுவரை பெண்ணை வன்புணர்ச்சி செய்தாலோ , அவளை கள்ளத்தனமாக ஓட்டை வழியாக அவள் உடம்பை பார்த்துவிட்டால்லோ ஏனோ குடியே முழுகியதுபோல் வெட்கி , தலை குனிந்து , அவமானப்பட்டு ,விரக்தியடைந்து , மனநோய் வந்து ,பித்து பிடித்து , உண்ணாமல் உறங்காமல் , இறுதியில் பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை செய்வதாக காட்டுவது ஏன்.?..


அதற்கப்புரமே வீரம் வந்து பழிவாங்கி , எதிரியும் செத்து , தானும் செத்து சுண்ணாம்பு ஆவதுதான் கதை..


இது இன்று யுத்தம் செய் வரையிலுமே..


தன்னை ஒருவன் தவறாக பார்க்கிறான் என்றால் அந்த இடத்திலேயே அவனை எதிர்கொள்ள பழக்காமல் தடுப்பது எது?.


நம் ஊர்களில் , ஆறு , குளத்தில் குளித்து விட்டு அப்படியே அதே ஈரத்துணியோடு நடந்து செல்வார்கள் குடும்பப்பெண்கள்.. எத்தனை பேர் தப்பா பார்த்தார்கள்..அப்படி பார்த்தவர்களையும் , ஏதோ கெட்ட வார்த்தை போட்டு திட்டிவிட்டு சபித்துவிட்டு செல்வார்கள்.. எங்கே இருந்து வந்தது அந்த துணிவு..?..


பெண் உடம்புக்கு மட்டும் கற்பு என்ற ஒரு அபத்தமான விலை வைத்ததன் விளைவா இது.?


சட்டத்தை நம் கையில் எடுக்க வேண்டியதுதான் சில நேரம்.. ஆனால் எல்லாமே காத்திருந்து வன்முறையாகவும் கொலையாகவும் இருக்கவேண்டியதில்லை..


நிர்வாணப்படுத்திவிட்டான் என்றதும் தற்கொலை செய்யவேண்டியதுமில்லை என்று சொல்லி வளருங்கள் குழந்தைகளை.. என்னடா செய்த, ஏன் பார்த்த, என தெருவுக்கு இழுத்து வந்து தர்ம அடி வாங்கித்தர பழகுங்கள்.. சமூகம் என்ன சொல்லுமோ , பெண் பிள்ளைக்கு வரன் அமையாதே என்ற முட்டாள்தனமான கவலையை ஒதுக்கினால் மட்டுமே நம் சமூகம் முன்னேறும்.. இப்படி தினமும் ஒரு பெண்ணாவது நிமிர்ந்து நின்றாள் என்ற செய்தி வந்தால் தன்னாலேயே மாற்றம் வரும்..




அதைவிட்டுவிட்டு , ரூமுக்குள் போய் குமுறி குமுறி அழுதுவிட்டு உடனே யாரையோ பழிவாங்குவதாய் நினைத்து செத்து தொலைய சொல்லி படம் எடுக்காதீர்கள்.. தயவுசெய்து அப்படியான கோழைப்படங்களை உங்க குழந்தைகளுக்கு காண்பிக்கவும் செய்யாதீர்கள்.. ,


என் வீட்டில் காமிரா வை னு சொன்னதையே ஆணாதிக்கவாதிகள் எப்படியெல்லாம் திரித்து பேசி தன் வக்கிர உணர்ச்சிகளுக்கு பசியாற்றினார்கள்.. இன்னும் அதை பேசி பேசி இன்பம் காண்கிறார்கள்..

ஆனால் இவர்கள் மறந்தது இவர்கள் வீட்டு பெண்ணையே இவர்கள் வன்புணர்கிறார்கள் என்பதுதான்...சந்தர்ப்பம் கிடைத்தால் இப்படியான வக்கிர புத்தியுடையவர்கள் அதையும் கண்டிப்பாக செய்வார்கள்..


சபலம் தட்டுவது போல உடை உடுத்தக்கூடாதுதான்.. ஆனால் நம்மூர் பெண்கள் ( நம் , அம்மா, நம் அத்தை , சித்தி , அண்ணி , அக்கா ) ஆற்றில் குளித்துவிட்டு உடம்பை ஒட்டிய ஆடையோடு அரைகுறையோடு எத்தனை துணிவோடு நடந்துவந்தார்கள்.. இன்றும் நடந்து வருகிறார்கள் என்பதை நினைவு கொள்வோம்.. கிராமத்து பெண்களுக்கு இருக்கும் துணிவுகூடவா நகரத்து பெண்களுக்கு இல்லை..?????


டெலிவரி பார்க்கும் ஆண் மருத்துவரை நம்பி திருமணமான பெண்களே உடலை தயங்காமல் சிகிச்சைக்கு ஒப்படைக்கும் காலமிது.. எனக்கு டெலிவரி இரண்டு முறை பார்த்ததும் ஆண் மருத்துவர்தான்..


ஒவ்வொருமுறையும் நாம் பாதுகாத்துக்கொண்டே இருந்தாலும் கள்ளன் நிப்பாட்ட போவதில்லை.. காப்பான் எப்பவும் கடைசியில்தான் வரமுடியும்.. அதனால் அப்பப்போ , அங்கங்கே எதிர்கொள்ள செய்யுங்கள்..


இவர்களை விட முக்கிய எதிரி, ஆபாத்தானவர்கள் நம்மை சுற்றியிருப்பவர்கள் சிலர்... அவர்களை சமாளிப்பதுதான் பெரிய விஷயம் பலருக்கு.. நாகரீகமற்று இது குறித்து வருத்தத்தோடு பேசுவது போல் நாடகமாடி தகவல் கறந்து பரப்பும் வேலை செய்பவர்கள்.. இப்படியானவர்களை மொத்தமாக வாழ்விலிருந்தே தவிர்த்திடணும்..


சம்பவம் குறித்து பேச வந்தாலே முகத்தில் அடித்தாற்போல் , "வேற பேசலாமா .?" என சொல்லிடுங்கள்.. எப்படியும் கெடுதல் எண்ணமுடையவர்கள் வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்க போவதில்லை.. வம்பழத்து குதூகலிக்கும் கூட்டமாய் சேர்ந்து.. தூசியென பலரை அற்பர்கள் என துணிவோடு ஒதுக்கினால் மட்டுமே நல்லவர்களை நாம் காண முடியும்..நல்ல பக்குவமடைந்தவர் பலர் இருக்கின்றனர் . பயம் வேண்டியதேயில்லை..

நல்லவர்கள் பலர் அமைதியாக இருப்பதால் கெட்டவர்களின் ஆட்டம் பெரிதாக தெரிகிறது சமூகத்தில்.. அவர்களின் பெரும்பான்மை குறித்து எவ்வித அச்சமும் தேவையேயில்லை..

எல்லாரும் வாழத்தான் வாழ்க்கை இங்கே என்பதை புரிந்துகொண்டு சொல்லிக்கொடுங்கள்.. உதவிக்காக காத்திருப்பதைவிட , உதவ முன்வருவதை பழக்கிடுங்கள்.. எங்கே தப்பு நடந்தாலும் தட்டிக்கேட்க துணிவு தாருங்கள்..


அதற்கு பலனாக ஆபாச வார்த்தைகள் என நினைத்து , விபச்சாரி , ( இன்னும் பல கெட்ட வார்த்தைகள் தெரியவில்லை ) , என பல பட்டம் தருவார்கள்தான். அவற்றையெல்லாம் ஒரு புன்னகையோடு கடந்து சென்று அவ்வார்த்தைகளின் மதிப்பிழக்க செய்திடுங்கள்.. ஏனெனில் பாலியல் தொழிலாளியும் மனிதர்தான் என்று மனிதாபிமானத்தை பழக்காதவருக்கே , ஆணாதிக்கவாதிகளுக்கே அவை ஆபாசமாகத்தெரியும்..


*உடலிலல்ல கற்பு.. எண்ணங்களில் இருக்கு ." .. துணிவை கொடுப்போம் பெண்ணுக்கு..

( மகளிர் தினத்துக்கான பதிவு. )

( இன்றும் 8 வயது குழந்தை அனுசூயா கோவையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.. ஆழ்ந்த அனுதாபங்களும் , கண்டனங்களும்.. ஆபாச பதிவும் , எழுத்தும் செய்யும் வீரர்கள் ,ஊடகங்கள் , சினிமாக்கள் , சரோஜாதேவி புத்தகத்துக்கு வக்காலத்து வாங்குபவர்கள் , தொடர்ந்து நடத்துங்கள் உங்க சேவையை , உங்க வீட்டு கதவுகளை தட்டும் வரையிலும் .. இது ஒரு பக்கமிருக்க , ஆபாச பதிவர்களை பல ஆண் பதிவர்கள் துணிவாக எதிர்க்க முன்வந்திருப்பது மகிழ்வான விஷயம்.. வாழ்த்துகள்.. )


[ என் கணினியிலும், தொலைபேசியிலும், மிரட்டலும் , தொந்தரவும் வருகிறது.. பின்னூட்டங்களையும் மாற்றுகின்றனர்.. எனக்கு மரணத்தையே தந்தாலும் என் மனதின் எண்ணங்களை ஒருபோதும் மாற்ற முடியாது என்பதை புரிவீரா?..தொடரும் என் கருத்துகள்..நிலைபெற்றும் நிற்கும்.. சமூகத்தில் மாற்றம் கொண்டு வர முன்பைவிட அதிக துணிவை தருவதற்கு நன்றிகளும்.. எதிரிகள் யாரென்று தனியா சொல்லவேண்டியதில்லைதானே?..:)) ]



படம் : நன்றி கூகுள்..




.

Monday, February 21, 2011

நடுநிசி நாய்கள் - வாங்க சைக்கோவாகலாம்.



நாய்கள் என்ன பாவம் செய்ததுன்னு தெரியலை.?.. நாய்கள் கிட்ட அன்பா இருந்து பார்த்துள்ளீர்களா?..

சரி எதாவது விலங்குகள் கிட்ட?.. அது ஒரு தொத்துவியாதிங்க.. பாடா படுத்திடும்..

இப்ப ஏன் சம்பந்தா சம்பந்தமில்லாம உளறல்னு நினைக்கிறீங்க..ஆமா உளறலாத்தான் தெரியுது நாட்டு நடப்புகள்..


நாளையிலே இருந்து மருத்துவமனைகள் எல்லாம் அறுவை சிகிச்சைகளை பொது மேடை போட்டு நடுத்தெருவிலேயே கண்ணாடி திரைக்குள் செய்யணும்..

அப்புரம் ,

எல்லா தாம்யத்யங்களும் கூட இதே போல நடுத்தெருவில்..

குப்பை கூளங்களை குப்பை தொட்டியில் கொட்டலாமா ?.. கூடவே கூடாது.. ஏன் காட்டில் குப்பை தொட்டிகள் இருக்கா என்ன?.. விலங்குகள் சுத்தம் செய்வதில்லையா?...

அப்புரம் முக்கியமா யாருமே உடை உடுத்த கூடாது...

என்னங்க பைத்தியமா உங்களுக்கு னு கேட்குறீங்க..

விடை: நான் என்னங்க வித்யாசமா சொல்லிட்டேன்.. வீட்டில் சின்னத்திரையில் இவையெல்லாம் தானே விளம்பரம் என்ற பேரில் விருந்தாக படைக்கின்றீர்கள்.?.. பொழுதுபோக்க , நல்ல விஷயம் கற்க என இருந்த சினிமாக்கள் சைக்கோ ஆவது எப்படி என பாடம் நடத்த ஆரம்பித்துவிட்டனர்..

அதனால் இனி எல்லோருமே விலங்காகிவிட்டால் பிரச்னையேயில்லைதானே?..

அன்பா , - அப்படீன்னா என்னங்க.. ?.. அதுவா அது வந்து என் வீட்டில் , என் குழந்தை குடும்பத்தாரிடம் மட்டும் நான் போட்டுகாட்டும் நாடகம்.. அத மாதிரி எல்லாரும் நாடகம் போட்டுக்குவோம்.. பொதுவுல வரும்போது ஒருவரை ஒருவர் வசவுகளால், ஆபாச படங்களால் , மறைமுக மிரட்டலால் , கிசுகிசுக்களால் கிட்டத்தட்ட ஒரு சைக்கோவாக மாறிவிட்டு , பின் வீட்டுக்குள் சென்றதும் நம் நாடகத்தை தொடரணும்...

யுத்தம் செய், என சொல்லி யுத்தம் செய்ய பழக்குவோம்.. மறந்துபோய்கூட பெண்ணை சுயமா எதிர்கொள்ளும்படி கராத்தேவோ, தற்காப்பு கலையோ கற்றுக்கொடுக்காமல் , அவளை ஒருவன் மானபங்கபடுத்தியபின், அவள் தூக்கில் தொங்கியபின் வீரம் வந்து கொலைசெய்ய ஆரம்பிப்போம்.. அதாங்க யுத்தம் செய்ய.. ஏன்னா அதுதான் வீரம் , அதுதான் அழகு.. .அதை வரிக்கு வரி பாராட்டிட்டோம்னா வாழ்நாள் சாதனை செய்த மகிழ்ச்சி.. அப்பாட..நமக்கெதுக்குங்க சமூக அக்கறையெல்லாம் . அத கவனிக்க ஏதாச்சும் இ.வா வேல வெட்டியில்லாம இருப்பாங்க கவனிச்சுக்குவாய்ங்க..( படத்த எப்படி மோசமா எடுத்த என்ன ?. அதான் கலெக்ஷன் ஒரு பங்க அனாத குழந்தைங்களுக்கு குடுக்கோம்ல.. வாய மூடுங்க.. )

என்னோட அல்ப கட்டுரையோ, கவிதையோ, பதிவோ மிக மோசமான பத்திரிக்கையில் வெளிவந்தா கூட போதும். அதுக்காக யார் காலைவேணா பிடிக்க ரெடியாயிருக்கேன்.. யாரை வேணா புகழ்வேன்.. எனக்கு புகழ் முக்கியம்..

எழுத்துகளில் பாலியல் தொழில் செய்கிறாரா?. அவரை தூக்கி பிடிக்காட்டி என்னை அந்த நல்ல?? கூட்டத்திலிருந்து ஒதுக்கி வைப்பாங்க.. அதாவது பரவாயில்லை.. கூட்டமா சேர்ந்து தண்ணி அடிக்கும்போது என்னை பற்றி பேசுவாங்க.. பயமா இருக்கு எதுக்கு வம்பு.. பேசாம தலையாட்டிட்டு போறேன்...ஊரோடு ஒத்துவாழ்னு பெரியவா சும்மாவா சொல்லிருக்காங்க.. பெரியவா சொன்னா பெருமாள் சொன்னாப்ல.. கன்னத்துல போட்டுக்குறேன் குவாட்டரும் குடிச்சிக்கிறேன்.. பின்ன ஒசி வேற..


அட அவர் பகுத்தறிவாதிய்யா.. ரொம்ப அறிவாளி..

அப்படியா அப்ப ஏன் அசிங்க அசிங்கமா பேசுறார்?..

ஹ அது அப்படித்தான்.. ஏன்னா அது ஒரு கெத்து பாருங்க.. ஒரு பய கிட்ட வரமாட்டான். கெட்ட வார்த்தைக்கு பயந்தே என்னை அறிவாளின்னு ஒத்துக்குவானா இல்லையா?..

இத பாருங்க ரொம்ப நியாயம் பேசுனீங்கன்னா , உங்க பக்கம் யாரும் திரும்பி கூட பார்க்க மாட்டாங்க அன்னந்தன்னி புழங்கமாட்டாங்க.. ஓஹ் . அப்படியா.. அப்ப நான் என்ன செய்யணும்.. ?.. பிடிக்குதோ பிடிக்கலையோ, தப்புன்னா தட்டி கேக்காம, எல்லா இடத்திலேயும் போய் நல்லபுள்ளையா அட்டெண்டன்ஸ் போட்டுரணும்.. அப்ப உங்களை முன்புறமா குறை சொல்ல மாட்டாங்க ( "1- அப்ப பின்புறமா ?".. "2- ஹலோ ரொம்ப கேள்வி கேட்டா..." " 1- அய்யோ சாரி இனி கேக்கல.. " ).


பெரியார் பெண்ணுரிமைன்னு சொன்னத சிலர் தப்பா புரிஞ்சுட்டாங்க போல.. பாலியல் சுதந்திரம்னு எண்ணி அதுக்கொருபக்கம் கிழி கிழி.. நோக்கமே மறந்து போச்சா இல்லை நோக்கமே இதுதானோ.?..


ஆட்சியில் இருந்துகொண்டு ஊழல்செய்து சிறை செல்வது கூட நட்சத்திர விடுதிக்கு சென்று ஏதோ பத்ம பூஷன் அவார்ட் ரேஞ்சுக்கு மதிப்பு போலவும் குழந்தைகள் மனதில் பதிய வைக்கிறோமே ...?.

ஆக மொத்தம் எவை எவை தடுக்கப்படணுமோ அவை அழகாக கூட்டமாக நிறைவேறிக்கொண்டேயிருக்குது.. சுயநலத்தோடு ஆங்காங்கே..

இதைவிடவா நடுநிசி நாய்கள் பயம் தந்துட போகுது..?.. என்ன மேலே சொன்னதுபோல இனி பொதுவெளியில் விலங்குகள் போல வாழ பழக்குது இத்தகைய அறிவார்ந்த , ஆழமான , கலைநயத்தோடான, கற்பனாசக்தி மிகுந்த , உயர்தர படங்கள்.. வாங்க சைக்கோவாகலாம்..

எல்லாத்தையும் சகிச்சுகிட்டு , தாங்கிகிட்டும் உங்களால அமைதியா இருக்க முடியுதுன்னா, பூர்வ ஜென்ம புண்ணியமா இருக்கலாம்.. அந்த புண்ணியாத்மாக்கள் வயோதிகர் இல்லங்களில் ( அனாதை, மனநிலை சரியில்லாதோர் இல்லம் ) இருந்தா ஒரு எட்டு போய் பார்த்துட்டு வரலாம்.. .. ஒருமுறை விசிட் செய்வது அவர்களுக்கு 100நாள் பலம் தரும்..அது முடியாதவங்க, தப்புகளை துணிவா தட்டி கேட்கலாம்.. ஆனா உலகின் மொத்த சாக்கடையும் உங்க மீது கொட்டப்படும்..


எங்கே யாரிடமிருந்து ?..


நடுநிசி நாய்கள் - ஜாக்கிரதை... நம்முள்...

ஆனா சமூகத்தையும், சக மனிதர்களையும் அதிகமா, ஆழமா நேசிப்பவராலேயே தப்புகளை துணிவா தட்டி துணிவா கேட்க முடியும்.. அப்ப நீங்க?..



எனது கண்டனங்கள் இப்படி படம் எடுத்து சமூகத்தை கெடுக்கும் அனைவருக்குமே..

( அதில் உழைத்திருக்கும் அனைவருக்கும் எனது அனுதாபங்களும் )

மீண்டும் ,


நாய்கள் கிட்ட அன்பா இருந்து பார்த்துள்ளீர்களா?..மனிதர்களை விட அன்பை கொட்டும்..

அவை மட்டுமல்ல எல்லா விலங்குகளையுமே அன்பால் கட்டிப்போட முடியும்போது மனிதர்கள் நாம் மட்டும் ஏன் இப்படி விசித்திரமாய் , விகாரமாய் ?...

அன்பும் கொட்டிக்கிடக்கு.. அள்ள தெரியாமல் , பகிர முடியாமல்... மென்மையை சொல்லும் படங்கள் எப்ப வரும்?..நம் குழந்தைகளுக்கு.?.










படம்: நன்றி கூகுள்..

Friday, February 4, 2011

மாற்றம் கொண்டுவர காத்திருப்பேன் தோழி..!


கோபத்தை குறைக்க வேண்டிக்கொண்டாய் பிரியமானவளே..

அன்பாகவும் மென்மையாகவும் மட்டுமே எனைப்பார்த்துவந்த என் தோழி.

எனைப்பற்றிய கவலை , என் நலம் மீதான அக்கறை உனக்கு .

கோபம் என்பதே அதிகமான அன்பினால்தான் என புரிவதில்லை உனக்கு.

முகத்தில் உமிழ சொன்ன ஆண்,.நம் பாரதி.. அது கோபமா தோழி?.

அன்பாலே சாதிக்க முடியாதா என்கிறாய்..அன்பானவளே..

அலுத்து தோற்றுவிட்டேன் , பொறுமைக்கிங்கே மதிப்பில்லையே தோழி..

என் வாழ்வு நிறைவாய் முடிந்ததென எப்போது புரிவாய் என் தேவதையே?.

சமூகத்தில் புறையோடிக்கிடக்கும் அழுக்குகளுக்கு அன்பெனும் ஆயுதம்

காலாவதியானதை சீக்கிரம் விளங்கிக்கொள்வாயா?.

கோபம்,அல்லது கோபம் கொள்வதான நடிப்பு மட்டுமே எடுபடுமிங்கே.

மனதைக்கொலை செய்யும் கொலைகார கும்பலிடமிருந்து..

வன்முறையை தடுக்க வன்முறையே தேவை என்ற சாபக்கேடு அறிவாயா?.

யாரையவது பலிகொடுத்தே பல பலிகளை தடுக்க வேண்டிய காலகட்டாயம்..

நேற்றொரு திவ்யா..நாளை யாரோ..!!!!. அன்பெங்கே ???




சாதி , மதம், இனம் , மொழி கடந்து மனித நேயம் வளர தேவை அன்பு.

ஆனால் அதை வளர்க்க தேவை கோபம்.. முரணாயிருக்கிறதா?..

ஆன்மீகம் என்பது அன்பு பாதை மட்டுமல்ல தோழி..

சுயம் அறிவது மட்டுமல்ல , சுற்றுமுற்றும் அறிவதுமே அறிவு என் அன்புத்தோழி..

நச்சு நாகம் வந்து குழந்தைகளை , நல்லவர்களை

நயவஞ்சகமாய் தீண்டும் போது நாதம் கேட்க சொல்வாயோ தோழி?.




நீரின் ஓட்டத்திலேயே பிணமாய் செல்ல நீயே போதும்.. நானல்ல , நாணல்.

அன்பால் என்னை கட்டிப்போட எண்ணாதே.. கோபப்படவிடு..கோபப்பட்டுவிடு

சட்டத்தின் கதவுகளையும் சத்தம் போட்டே தட்டவேண்டியுள்ளதிங்கே..

அமைதிகாக்க அமைதிக்கு விலங்கிடும் சூழலிங்கே..அதுமட்டுமே சாந்தியிங்கே..

கண்முன்னே நடப்பதை கண்டுகொள்ளாமல் ,பதைக்காமல்

கண்மூடி ,கண்ணீரோடு தியானம் செய்யமுடிகிறதா தோழி..?.






நிறைய நேசம் இழந்தாய், எதிரிகளை சம்பாதிக்கணுமா என்கிறாய்..

ஆம், நிஜம் தோழி.. இழந்தது நேசத்தையல்ல.. போலிகளை..

பெற்றது எதிரிகளை அல்ல.. நியாயங்களை..வளரட்டும் எதிரிகள்..

வீசப்பட்டது வீண் விமர்சனங்களல்ல. வீரத்தழும்புகள் அவை.

வலிக்கவில்லை தோழி.. வலிமையே கூடியது..உன் வருத்தேமே என் வலி.

நாளை மரணிக்கவேண்டியிருப்பின் திருப்தியாக இருக்கணும் என்/நம் பயணம் .

தனிப்பட்ட இன்ப துன்பம் ஏகத்துக்கும் அனுபவித்த மகிழ்ச்சி மட்டுமல்ல ,

குரல்கொடுக்க முடிந்த மகிழ்ச்சியும் இதில் அடங்கணும்..

எனக்கான உன் வருத்தம் , உன் அன்பு என்னை தடுக்கக்கூடும்,

துணிவை குறைக்கும் , நான் தோற்கக்கூடும் , ஆகையால் தள்ளியே நில் தோழி..

என்னோடு வந்து இதில் நீயும் கைகோர்க்கும் நாளே

எனக்கு , இல்லையில்லை, நமக்கு வெற்றி., பலம் ..

அன்பொழுக பேசி ஆதாயம் தேடுவோர் பலரிருக்கட்டும்.

அழிக்கவேண்டிய ஊழல்,பேதம்,அடிமைத்தனத்தில் நம் கவனம் இருக்கட்டும்.

அன்பாய் பேசி ஆட்டுக்குட்டிகளாய் மாற்றி பின்னால் வரச்செய்யும்

அருமை வித்தை அறிவேன் தோழி , ஆனால் அதுவா நம் தேவை..?

நாம் தூங்க யாரோ எவரோ எங்கோ விழித்திருக்க , நம் சந்ததி

நாளை நிம்மதியடைய சில நேரம் நாமும் விழிப்போமே தோழி...

கைகோர்ப்பாயா தோழி ?..காத்திருப்பேன் விடியல்வரை..உன் அன்போடிங்கே







திவ்யாவின் தற்கொலைக்கு காரணமான அந்த ஆசிரியர்களுக்கும் இந்த ஏற்றத்தாழ்வுக்கு வழிவகுத்த இந்த சமூகத்துக்கும் என் கடுமையான கண்டனங்கள்..




படம் : நன்றி கூகுள்...

Tuesday, November 30, 2010

இறுதிவரை லிவிங்-டுகெதர் - சிறுகதை..

































அமெரிக்காவில் இருந்து வந்த தொலைபேசி அழைப்புக்கு அடையாரிலிருந்து பேசினாள் ஷான் என

செல்லமாக முன்னாள் கணவனால் அழைக்கப்படும் ஷாந்தினி.

வழக்கமான விசாரிப்புக்கு பின் ,

" சொல்லு ஷிவா. என்ன தயங்குற .?"

" எனக்கே என் மேல் அவமானமா இருக்கு ஷாந்தினி.."

" ஹேய்.. என்ன இது.. நான் உன்னோட பெஸ்ட் பிரண்ட் னு நினைச்சு சொல்லு."

" ம்."

" எ.......ன்...........ன. சொல்லு.?"

" நா.........ன் கீர்த்தி கி.........ட்ட புரோபஸ் பண்ண...............லாம் னு இருக்................கேன்.."

" ஹேய்.. வாட் எ சர்ப்ரைஸ்... ஐம் வெரி ஹேப்பி பார் யு.."

" நிஜமா.?"

" இல்ல பொய்யா..:))"

" அதில்ல ஷான் , என்னமோ உனக்கு துரோகம் செய்ராப்ல தோணுது.."

" என்ன இது.?. நாம பிரிஞ்சு 4 வருஷம் ஆகுது.. இன் ஃபேக்ட். நானே உனக்கு நல்ல பொண்ணு பார்த்துட்டு இருந்தேன்.."

" அம்மா கிட்ட சொல்லவா.?"

" வேண்டாம் ஷிவா. அம்மா பழைய காலத்து ஆள்.. அவங்களால இதை உடனே ஏத்துக்க முடியாது..லீவ் இட் டு மி.."

" சரி நம்ம பையன் கிஷன் கிட்ட.?"

" ஷ்யூர்.. அவன் கிட்ட கண்டிப்பா சொல்லு.. ஹி வில் ஆல்சோ பி வெரி ஹேப்பி.. ஃபார் யூ.."

" ஷான் அதுக்கு முன்னால சில செட்டில்மெண்ட்ஸ் பண்ணிறலாம் னு நினைக்கிறேன்.. "

" வாட். " கொஞ்சம் எரிச்சலோடு.

" அதான் , உன் பேர்லயும், கிஷன் பேர்லயும் சொத்துக்கள் வாங்கலாம்னு..." முடிப்பதற்குள் ,

" டோண்ட் பி ரப்பிஷ். ஷிவா.. நீ தேவைக்கும் மேல செய்துட்ட.. உன்னோட அம்மாவை என்கூட வாழ அனுமதிச்சிருக்க..எனக்கு விருப்பமான

இந்த டீச்சிங் புரொபஷன் க்காக இந்த பள்ளி ஆரம்பிச்சு கொடுத்த . உன்னோட அறிவியல் ஆராய்ச்சிக்காக அமெரிக்காவில் இருக்க விருப்பம் உனக்கு..

எனக்கு நம்ம நாட்டுல வாழணும்னு ஆசை.. எல்லாத்துக்கும் அனுமதிச்ச.. அழகான நட்போட பிரிஞ்சோம்..

பிரிஞ்சதிலிருந்து உன் மேல மரியாதை கூடிட்டேதான் இருக்கு.. நம்ம மகனை ஒரு நல்ல தகப்பனா வளர்ப்பதைவிட , ஒரு மிகச்சிறந்த நண்பனா பார்க்கிற..

என்னை விட அதிகமா நீதான் அவன்கிட்ட அமெரிக்காவிலிருந்து தினமும் பேசுற..வழிநடத்துற. லிசன் பண்ற அவன் பிரச்னைகளை... "

" அதுக்கில்ல ஷான்.. நாளைக்கே எனக்கு இன்னொரு குழந்தை வந்தப்புரம் நான் செய்ய முடியுமோ இல்லையோ.?"

" ஸ்டாப் இட் ஷிவா.. ஏன் இப்படிலாம் திங்க் பண்ற..?.. நான் செய்வேன் உன் குழந்தைக்கு.. ஏன் நம்ம மகன் செய்வான் . அவனை அப்படித்தானே கொடுக்க சொல்லி பழக்கி வெச்சிருக்கோம்..

ஹி வில் எஞ்சாய் கிவ்விங்.பணம் நமக்குள் எப்பவாவது பிரச்னையா வருமா என்ன.? "


" சரி அம்மா கிட்ட எப்ப சொல்றது.?"

" உனக்கு ஒரு குழந்தை பிறக்கட்டும்.. அப்ப இந்தியாவுக்கு கூட்டிட்டு வருவல்ல.. அப்ப சொல்லிக்கலாம். கிஷனோட தம்பி, தங்கைன்னு.. சரியா..?.. "

" உன்னை மாதிரி ஒரு நல்ல மனைவியை இழந்தாலும் , ஒரு நல்ல தோழியா ஆயுசுக்கும் நீ இருப்பன்னு நினைக்கும்போதே என் வாழ்க்கை பூரணமா இருக்கு ஷான்.."

" நான் தான் உனக்கு நன்றி சொல்லணும் ஷிவா.. உன்னோட உறவுகளையெல்லாம் எனக்கு கொடுத்தியே.. நம்ம மகனுக்கு ஒரு நல்ல தோழனா , வழிகாட்டியா இருக்கியே.."

" இருந்தாலும் ஒரு கில்டி ஃபீலிங்.. ஷான்."

" நோ..நோ.. நெவர் ஃபீல் லைக் தட்.. உனக்கு துணை அவசியம் னு எனக்கு நல்லா தெரியும்.. உன்னோட முன்னேற்றத்துக்கு அது தேவை.. ஆனா எனக்கு அப்படியில்ல.. தம்பத்யம் எனக்கு

முக்கியமல்ல னு உனக்கும் தெரியும்... சோ.வாட் ஸ்டில் வி ஆர் லிவிங் டுகெதர் அஸ் குட் பிரண்ட்ஸ்.. இனி கீர்த்தியும் என்னோட தங்கைதான்.. விஷ் யு போத் ஆல் த பெஸ்ட் திங்ஸ் இன் லைஃப்...."

" சரி ஷான். பிலீஸ் , கொஞ்சம் பணம் மட்டுமாவது அனுப்பி வைக்கிறேனே.."

" இதப்பாரு . நீதானே சொல்வே, பொன்ணுங்கல்லாம் சொந்த கால் ல நிற்கணும். னு. என்னை அப்படி நிற்க வெச்சுட்டு இப்ப கையேந்த சொல்றியே நீயே.. வேண்டாம் ஷிவா.. ஏதாச்சும் டிரஸ்டுக்கு

அனுப்பி வை. நிறைய பணம் வெச்சிருந்தீன்னா.." சிரித்தாள்..

" உன் மேல மதிப்பும் மரியாதையும் கூடிட்டே இருக்கு ஷான்.. யு ஆர் எ வெரி டிஃப்ரண்ட் பெர்சன்.. உன்னை மாதிரி ஒரு பெண் குழந்தை பெற்று வளர்க்கும் ஆசை வந்துடுச்சு."

" ஐ ஃபீல் ஹானர்ட் ஷிவா..."

" கீர்த்தி என்ன செய்றாங்க.?.. எப்போ கல்யாணம்..?"

" அவங்க ஃப்ரீலான்ஸ் ஜர்னலிஸ்ட்.. திருமணம் இப்ப இல்ல.. இப்போதைக்கு லிவிங் டுகெதர் மட்டும் .கொஞ்சம் எனக்கு என்மேல பயம்தான். :) "


" எனக்கு உன் மேல அதிகமா நம்பிக்கை இருக்கு. நீ நிச்சயமா ஒரு நல்ல கணவனா இருப்ப னு .. கோ அஹெட்.. "




.


படம் : நன்றி கூகுள்..




.

Monday, November 29, 2010

லிவிங் டுகெதர் வலையுலக புரிதல்



































லிவிங் டுகெதர் பற்றிய அனேக பதிவுகள் வந்தது..

பல புரிதல்கள்.. பல புதிய பார்வைகள்.. புதிதாக கற்றுக்கொண்டவையும் ஏராளம்.

அதைவிட புதிதாக சந்தித்த அறிவுபூர்வமான வலைத்தளங்கள்.. இத்தனை நாள் பார்க்காமல் விட்டோமே என வருந்துமளவுக்கு..

சரி இப்ப என்ன சொல்ல வரே னு கேட்கிறீங்களா.?

பல பதிவுகளை படித்ததுமே அவர்கள் புரிதலை பார்த்து வியப்பும் ,சிரிப்பே வந்தது..:)

சரி போக போக புரிவார்கள் .

பலரின் புரிதல் இங்கே..


லிவிங் டுதெர்னா

1. ஆபாசம் அபச்சாரம் , கலியுகம்..கலாச்சார மீறல்...

2. காமத்துக்கு மட்டுமே.

3. மேல்நாட்டிலிருந்து அழிக்க வந்த ஆயுதம்

4. பணம் படைத்தவருக்கு மட்டுமே..

5. ஜோடி மாத்திகிட்டே இருக்கலாம்..

6. பாலியல் தொழில்..மாதிரி

7. குழந்தைகள் பற்றி அக்கறை இல்லாதவர்கள்..

8. எய்ட்ஸ் வரும்.

9. ஒருத்தனுக்கு ஒருத்தியல்ல../ஒருத்திக்கு ஒருத்தனல்ல.

10. சொந்த பந்தங்களை விட்டு விலகுதல்./விலக்குதல்..

11. மத விரோதம்.. /துரோகம் ..

12. பெண்ணாதிக்கம்..

13. திருமணம் என்பது சடங்கல்ல.. புனிதம்.. மேலே சொன்னவை திருமணத்தில் கிடையாது..






ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ப்பாஆஆஆஆஆஆஆஆஆ.. முடியல..

இப்படி ஒரு புரிதல் இருப்பதால் தான் அவர்களுக்கு கோபம் வந்துள்ளது என எண்ணியதும் பாவமா இருக்கு..


சிலர் விரைவில் புரியலாம்,.. சிலர் விடாப்பிடியாக நாங்க ஏன் புரியணும்.. அதெல்லாம் புரிஞ்சுக்கவே மாட்டோம் னு அடம் பிடிக்கலாம்..முயலுக்கு காலே இல்லைன்னு சொல்லலாம்..

பெண்ணுக்குரிய உரிமைகளையே கொடுக்க மறுக்கும் சில ஆணாதிக்கவாதிகள் , மதவாதிகள் இருக்கும்போது இதுவும் அதிசயமில்லை..

இன்னும் காதல் என்றாலே வெட்டி போடும் சமூகம் நம்மிடையே இருக்கு..

என் குடும்பத்திலேயே இந்த வருடம் தான் முதல் காதல் திருமணம் ( சாதி, மத வேறுபாட்டோடு ) பலத்த எதிர்ப்போடு நடந்துள்ளது...

ஏன் எதிர்க்கிறோம் னு பார்த்தா , நாம அடுத்தவங்கள கிண்டல் அடிச்சிருப்போம்.. இப்ப நம்ம டர்ன் வந்துட்டதே.. தாங்க முடியாதே...அதான் ரொம்ப தோல்வியா நினைப்பது...


நாம் இன்னும் அறிந்துகொள்ளவேண்டிய உளவியல் கூற்று அனேகம் உள்ளது.. குண்டு சட்டியில் குதிரை ஓட்டாமல் , "கற்போம் கற்பிப்போம்.."

---------------------------------------------------


என் குழந்தை சின்னவரிடம் ,

" பெரியவங்க சொன்னா கேட்கணும். அவங்களுக்கு நிறைய தெரியும் , அனுபவம் இருக்கும் இல்லையா.?."

" எனக்கும் நிறைய தெரியும்.. Parts of the Computer , CPU is the brain.. இப்படி எல்லாமே.. அது உங்களுக்கு தெரியுமா?.. "

" அவ்வ்வ்.. இதெல்லாம் யுகேஜி ல கத்துகிட்டியா.. நீ பெரிய ஆளு தாம்பா... "

" இப்ப புரிஞ்சுதா.. அதனால நான் சொல்றதையும் நீங்க கேளுங்க..."

" சரிங்க ஐயா..."

---------------------------------


கோச்சுக்கவா முடியும் குழந்தைகளிடம்?.....



--------------------------

கொஞ்சம் மெச்சூரிட்டி உடையவர்களுக்கு../அடைய விரும்புபவருக்கு மட்டும்...

http://www.psychologytoday.com/blog/sex-dawn/201003/anti-marriage-counseling


Readers with a more open-minded disposition might enjoy this interview with Dr. Perel.



படம் : நன்றி கூகுள்..






..

Tuesday, November 23, 2010

அம்மா புராணம் - 1. ( துணிவு )














































புரட்சி திருமணம் : 1


" நான் குடும்பத்தோடதான் தற்கொலை செய்யணும்." அழுதுகொண்டே வந்தார் எங்க சொந்தக்கார பெண்.. அம்மாவுக்கு அக்கா முறை..

கணவனை இழந்தவர்.. சொத்துக்கள் உண்டு.. ஆனால் கிராமம்...பொறுப்பில்லாத மூத்த மகன்..

வந்தவரை சாப்பிட வைத்து சாவகாசமாய் சமையல் வேலையெல்லாம் முடித்துக்கொண்டே பேசுகிறார் அம்மா..

எங்க வீடு முன்னறையிலேதான் அம்மா காய்கறி நறுக்குவார். அங்கேதான் தொலைபேசுவார்.. எல்லாமே அங்கேதான்..

ஆக மிக அலங்காரமெல்லாம் காண முடியாது..

என் தோழிகளின் வீடெல்லாம் மிக நேர்த்தியாக இருப்பதுபோல் ஏன் நம்ம வீடும் அப்படி இருக்கலாமே னு நினைப்பேன்..

ஆனா அதுக்கெல்லாம் முக்கியத்துவமே கிடையாது..

யார் வேணுமானால் எளிதாக அம்மாவை அணுகி பேசும்படியான வசதிகளை மட்டுமே கொண்டது..


அம்மாவோட அப்பா பெரிய காம்பவுண்ட் வீட்டில் 12 வீடுகள் கட்டும்போதும் அம்மாதான் கணக்குப்பிள்ளையாம்..

சில நேரம் செங்கல்கள் கூட வேலையாளோட சுமந்ததுண்டாம், ஆள் குறைவாய் இருந்தபோது..

பாட்டிக்கு பிள்ளை பெறுவதே வேலை.. அம்மாவுக்கு கீழ் 5 குழந்தைகள் .. ( இறந்தது தனி கணக்கு ) .

ஆக அம்மாதான் ஆண்பிள்ளை மாதிரி தாத்தாவுக்கு...அதோடு மாடுகள், கோழி , நாய் வளர்ப்பு, தோட்டம், வயல் வேலை, மாட்டுவண்டி,

என வீடு நிறைய ஆட்கள் விலங்குகளோடு வளர்ந்தவர்..எப்பவும் தானியங்கள் நெல், உளுந்து என காயும் மாடியில் முற்றத்தில்..


அதிலும் எங்க வீட்டு முற்றத்தின் வாசப்படிகளில்தான் அதிகம் அம்மா உட்கார்ந்திருப்பார்.... எதிர் வீட்டு மிகப்பெரிய வேப்பமரமும் அதன் சுகமான குளிர்ந்த காற்றும் ,

எங்க வீட்டு மாமரம் , அசோக மரம் , முருங்கை நிழலுக்கடியில்...

மிக சுகம் தரும்..

" என்ன பிரச்னை " என விசாரித்தார் அம்மா..

" திரும்பவும் அந்த பெண்கிட்ட பேசியிருக்கான் என் மகன்.. அவனை வெட்டுவேன் னு அலையுறாங்க அந்த சாதிக்காரங்க.."

" வேலை வெட்டி இல்லன்னா இப்படித்தான்.. சரி எங்க இருக்கான் உன் மகன்.?"

" தெரிஞ்சவங்க வீட்டில்..."

"என்ன முடிவு செய்திருக்க .?"

" அந்த தாழையூத்து பெண்ணை பேசி முடிச்சு வெச்சிருக்கேன்..அவங்க இவனுக்கு வேலையும் வாங்கி தருவாங்க.. பெண்ணுக்கு ஜாதகத்தில் ஏதோ தோஷமாம்.. அதனால வரன் அமையல... இவன் சம்மதிக்க மாட்டேங்கிறான்.. காதலிச்ச அந்த பெண்ணைதான் கட்டுவேன் னு சொல்றான்..

அந்த சாதிக்காரங்க இவனை கொலையே செய்திருவாங்க..எத்தனை நாள் இப்படி திரிவான்?.."

" சரி கிளம்பு.. "

" எங்க.?"

" தாழையூத்துக்கு முதல்ல போறோம்.. சம்பந்தம் பேசிட்டு.. அவனை கூட்டிட்டு நாளைக்கு கல்யாணத்த முடிச்சிரலாம்.. "

" நெசமாத்தான் சொல்றியா .?"

சென்றார்கள் . அண்ணாவோடு இரவு வந்தார்கள்..கூடி கூடி பேசினார்கள்..

விடிந்ததும்தான் தெரிந்தது அன்று எங்க வீட்டில் வைத்தே கல்யாணம் என்று..

அக்கா ,சின்ன அண்னாவிடமும் என்னிடமும் , அம்மா, அந்த அண்ணனை காண்பித்து ,

" இவன் வெளியே எங்காவது போகணும்னு சொன்னா போக விடக்கூடாது.. இந்த ரூம் விட்டு வெளியே அனுப்ப கூடாது , பாத்ரூம் தவிர.."

" எப்படீம்மா .?"

" நாங்க போய் தாலி வாங்கிட்டு சீக்கிரம் வந்திருவோம்.. .."

நானும் அக்காவும் , சின்ன அண்ணாவும் காவல்...

பெரிய அண்ணா, அப்பா எல்லாரும் சாப்பாடுக்கு சொல்ல போனார்கள்...

அண்ணி மாடியை தயார் செய்தார்.. தம்பதிகளுக்கு..

ஒரு பதினோரு மணியளவில் , அந்த அண்ணன் மெதுவா முன்னறைக்கு வந்தார்கள்..

அப்படியே முற்றம் வந்தார்கள்.. நாங்கள் மூவரும் ஒருவரையொருவர் பார்த்துகொண்டோம்..

" அண்ணே உள்ள வாங்க.." சின்ன அண்ணா.

" இருல.. வாரேன்.. மாங்கா நல்லா காய்ச்சிருக்கே.. "

சொல்லிக்கொண்டே இருந்தவர் தப்பி ஓடினார் பின் தெரு வழியாக..

அண்ணா துரத்திக்கொண்டு பின்னால் ஓட ,

அவரை தொடர்ந்து அக்காவும் ஓட ,

சிலர் வேடிக்கை பார்த்ததும் ,

அக்கா சம்யோசிதமாக , திருடன் , திருடன் , " என கத்த ,

மூன்றாம் தெருவிலுள்ளவர்கள் கூட ஓடி சென்று அண்ணாவை பிடித்தார்கள்..

அடி விழுமுன் , சின்ன அண்ணா விபரம் சொல்லி வீட்டுக்கு அழைத்துவந்தார்..

இப்ப எல்லா கதவையும் பூட்டி வைத்தோம்..பூட்டு போட்டு..:)

அம்மா வந்ததும் , கேள்விப்பட்டதும் , அந்த அண்ணாவை திட்டோ திட்டுன்னு அப்படி திட்டினார்கள் .

" ஒன்ணு செய். இப்பவே இங்கேயே உங்கம்மாவுக்கு விஷம் வாங்கி கொடுத்துவிட்டு நீயும் செத்துப்போ.. உன்னால தான் அவளுக்கு எத்தனை நாள் பிரச்னை..

கணவனும் இல்லை.. நீயும் தறுதலை..உனக்கு காதல் ஒரு கேடு..அம்மாவை காப்பாத்த வழியில்லை.. இதுல..%&*^&%^(%^(&**% " அப்படி இப்படின்னு..

அந்தம்மா அழ, அந்த அண்ணன் வெட்கி தலை குனிய....கொஞ்சம் நேரம் சோகமானது அந்த சீன்...

மதியம் எல்லாரும் சாப்பிட்டுவிட்டு தாழையூத்துக்கு சென்று பெண் அழைத்து வந்தார்கள்...

கூடவே சொந்தங்களும்.. எல்லாருக்கும் மாடியில் சாப்பாடு..

எங்களுக்கு தெரிந்த ஒரு பாதிரியார் அழைத்து ஆசீர்வதித்து , குத்துவிளக்கேற்றி திருமணம் நடந்தது வீட்டிலேயே சாமி படம் முன்பு..

சில பெரிய மனிதர்கள் சாட்சியோடு..

அப்புறம் அன்று எங்க வீட்டிலேயே மணமக்கள் தங்கினர் மாடியில்..

3 ஆண் குழந்தைகள் பெற்று , நல்ல நிலைமையில் வாழ்கிறார்கள்...இன்று..

இப்ப நினைத்து பார்த்தாலும் என்னால் நம்பவே முடியாது..

எப்படி ஒரே இரவுக்குள் அம்மாவால் அத்தனை காரியத்தையும் , அலைச்சலையும் அலுப்பின்றி செய்ய முடிந்தது..?

அதிலும் ரொம்ப ஆச்சாரமான இந்துக்களுக்கு , கோவிலில் சென்று கூட திருமணம் செய்யாமல் , அப்பவே , பெரியவர்கள் அழைத்து ,

புரட்சி திருமணம் செய்தார்கள் என்று.. ?.

உணவோ, உறக்கமோ எப்போதும் பெரிதாகவே தோன்றாது அவருக்கு..

எந்த நேரத்திலும் கூட சென்று உதவ தயாராயிருப்பார்.. எம்மையும் சில நேரம் , கிராமத்திலிருந்து வருபவர்கள் கூட பள்ளிகளுக்கு அனுப்புவார் அட்மிஷன் விஷயமென்றால்.. .எரிச்சலா இருக்கும்.. ஆனால் ஒருபோதும் மறுக்கவே முடியாது அம்மாவின் கட்டளைக்கு..

அதே போல மருத்துவமனைக்கும்.. எனக்கு அந்த வாடையே மயக்கம் தரும்.. ஆனா மாமாவிடம் அறிமுகப்படுத்த நான் கூட போவேன்.. விருப்பமேயில்லாமல்..

அம்மாவை திட்டிக்கொண்டே.. :).. அதிலும் கடைசியா பிறந்து தொலைச்சா அவ்வளவுதான்.. எல்லாருக்கும் எடுபிடி நாமதான்..:)

இதுல எனக்கும் சின்ன அக்காவுக்கும் அக்ரிமெண்ட் உண்டு..

அவளுக்கு வேண்டிய வெளி வேலைகள் நான் செய்து தரணும் வாங்கிக்கொடுக்கணும்.. அவள் எனக்கு இஸ்தரி போடுவது , படம் வரைந்து தருவது னு ஒப்பந்தம்..

இதில் வேற எங்க வீட்டில்தான் அந்த காலத்தில் தொலைபேசி இருந்தது..( இன்னும் சிலர் வீட்டில் ஆனா அனுமதி கிடையாது மற்றவருக்கு ) .. ஊர் முழுக்க எண் கொடுத்து வெச்சிருப்பாங்க.. யாருக்காவது தொலைபேசி அழைப்பு வந்தால் நாந்தான் ஓடி போய் சொல்லணும்..சில டிப்ஸ் மாதிரி பரிசும் கிடைக்கும்தான்.. :)

அதே போல செய்தித்தாள் பரிமாறலும்.. " ஏய் பொடிசு " னு எதிர் வீட்டு அங்கிள் கூப்பிட்டா " பேப்பர் வந்தாச்சா " னு அர்த்தம்,...

அவர்களுக்கு பெண் குழந்தை இல்லையென்பதால் என் மீது பிரியமும்.. விசேஷ கவனிப்பு உண்டு எனக்கு... அதனாலேயே அவங்க மகனுக்கும் எனக்கும் சண்டை வரும்..

அதனால எனக்கு உடம்பு சரியில்லாட்டி தெருவில் பலர் வந்து விசாரிப்பார்கள்.( எடுபிடியாச்சே ) . பெருமையாயிருக்கும்..:)

அதுவும் சரியா முழுப்பரிட்சையோடு ஏதாச்சும் ஒண்ணு வரும்.. அம்மை , டைபாய்டு , கை உடைத்தது.. என தொடர்ந்து 3 வருடம் தேர்வுக்கு போகவில்லை..

ஒருமுறை இப்படித்தான் எடுபிடி வேலையில் தவறு நடந்தது....ரொம்ப காமெடியா போச்சு... அது என்னன்னு கேட்கிறீங்களா?.. அடுத்த பதிவில்.....அதோடு இன்னொரு புரட்சி திருமணமும்...

முக்கியமா போலித்தனமற்றவராய் தன் சொந்தங்களை அக்கம் பக்கமுள்ளவர்களை அவர்கள் கஷ்டங்களை புரிந்து நேசித்தார்..

அதனால் அவருக்கு அலங்காரம் தேவையற்றதாய் இருந்திருக்கும் எதிலும்..

ஏற்கனவே அவர் செய்துவைத்த விதவை மறுமணம் பற்றி படிக்க

விதவை மறுமணம்





படம் : நன்றி கூகுள்..

Monday, November 22, 2010

கோ-ஹபிடேஷன் /லிவிங்-டுகெதர் என்ற இணைந்து வாழ்தல் - 3.

லிவிங்-டுகெதர்











































மனிதர்கள் பலவிதம்..சிலர் நாத்திகர் சிலர் ஆத்திகர்..சிலர் நடுவில்..

சில்ர் பிறந்தோம் வளர்ந்தோம் வாழ்வோம்..

சிலருக்கு பிறப்பே அற்புதம்.. நாம் அனுபவிப்போம்..அனுபவித்ததை பகிர்வோம்.

சிலருக்கு நான் வாழ்ந்ததுபோல் எல்லாரும் வாழட்டுமே...

சிலர் எதிர்மறை எண்ணம், சிலர் நேர்மறை எண்ணம் , மீதமுள்ளவர், நிதர்சன எண்ணம் கொண்டவர்கள்..

சிலர் எதிலும் துணிவு, சிலர் எப்போதும் பயம், சிலர் ஜாலி, சிலர் கோபம் .

இவற்றில் பல விஷயம் ஜீன்களிலேயே தீர்மானிக்கப்படுகிறது.. சிலது வளர்ப்பு முறையிலும் மீதம் சூழலிலும்..



இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்..இப்படி பலவேறு குணநலன்களும் ரச்னையும் உள்ளவன் மனிதன்..எல்லாரையும் ஒரே விதத்தில் கட்டுப்பாடிட்டு அடைக்க முடியாது...



திருமணம் என்பது இருவர் மனமொத்து மகிழ்ச்சியாக வாழ்ந்து பிள்ளைகள் பெற்று மகிழ்ச்சியை இன்னும் வளர செய்வது..

இந்த மகிழ்ச்சி என்பது பணமோ, புகழோ , அழகோ, படிப்போ, நல்ல குணமோ, வீரமோ ,காமமோ எதுவோ , ஒன்றோ , பலதோ அடிப்படையாக கொண்டிருக்கலாம்..

ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்தலில் பெண்ணே கரு சுமந்து பிள்ளை வளர்ப்பதில் அதிக பங்கேற்பதால் , அவளின் முதன்மையான தேவை பாதுகாப்பு..

பாதுகாப்பு என்பதிலும் பல விஷயத்தை அடிப்படையாக கொண்டது..

ஆனால் ஆணுக்கு திருமண பந்தத்தில் முக்கியமாக உடல்தேவை என்பது இயற்கையாகவே ஏற்பட்டது..


அதற்காக தன் வருங்காலத்தை , குழந்தை வளர்ப்பை சட்டை செய்யாதவனுமல்ல..

ஆக இருவர் இணைந்து இன்ப துன்பங்களில் பல்லாண்டு ஒரே இடத்தில் இருந்தும் , குழந்தைகள் பெற்றும் , அவர்கள் பிரச்னைகளை சமாளித்து வெற்றிகரமாக

, நிம்மதியாக வாழணும் என்றால் அவர்கள் பல விஷயங்களை முன்கூட்டியே திட்டமிடணும்..

எதிலெல்லாம் ஒத்து போகலாம் எதெல்லாம் அனுசரிக்கணும், விட்டுக்கொடுக்கணும் என இருவருமே இணைந்து திட்டமிடல் வேண்டும்..

ஆனால் இளவயதில் ஹார்மோன் தொந்தரவால் கண்டதுமே சிலருக்கு காதல் ஏற்படுகின்றது..


என்ன காரணம் என தெரியாமலேயே ஒருவரை பிடித்தும்விடுகின்றது..இவர்/ள் தான் தனக்கு பொருத்தமான துணை என மனம் நினைக்கின்றது..

திருமணம் செய்ய முடிவெடுக்கின்றார்கள்.. ஒன்றாக வாழ தொடங்குவார்கள்.. அப்போதுதான் இருவருக்குமான அன்றாட வேறுபாடுகள், ரசனைகள் , பழக்கவழக்கங்கள் புரிபடுகிறது..

ஆனாலும் ஏதோ ஒரு காரணி மிக உறுதியாக இருக்கும்பட்சத்தில் ஒத்து வராத ரசனைகளும்கூட , அனுசரித்தோ விட்டுக்கொடுத்தோ போக முடிகிறது..


இப்படி எல்லார் விஷயத்திலும் நடைபெறுவதில்லை..

ஒருவருக்கு உணவு மற்றொருவருக்கு விஷமாக இருக்கும்பட்சத்தில் அனுசரிப்புக்கே அங்கு இடமில்லை..

பிரிய முடிவு செய்வார்கள்.. செலவு செய்த திருமணம் முறிவடையக்கூடாதே என பலர் பிராயாசையால் சில திருமணம் கடனேன்னு தொடரும்.. சில பிரியும்..வலியோடு...

சில துணைகள் தமக்குள் ஒற்றுமை இல்லாவிட்டாலும் பிள்ளைகள், அவர்கள் வாழ்வுக்காக பொறுத்துக்கொண்டு தம் ஆசைகளை கனவுகளை தியாகம் செய்வதுமுண்டு..தவறில்லை.. நல்லதும் கூட.. கட்டாயத்துக்கன்றி , மனமொத்த அனுசரணையாக இருக்கும்பட்சத்தில்....


இப்படி திருமணங்களில் உள்ள பல தவறான விஷயங்களே கோ-ஹேபிட்டேஷன் என்ற முறைக்கு வழிவகுத்திருக்கணும்..

காதலில் விழுந்தால் மட்டும் போதாது , வாழ்ந்து பார்த்து பின் குழந்தை பெறுவதை முடிவு செய்கிறார்கள்..

வாழும்போது மட்டுமே போலித்தனமற்று நிதர்சனமான வாழ்க்கை தெரிய வரும்..அடுத்தவரின் குறைகள் புரியும்...


அதைக்கொண்டே முடிவுகளும் எடுக்கின்றார்கள்:..

இத்தகைய திருமணங்களில் பிரிவு அதிகம் என்பது உண்மை..

ஆனால் எத்தனை நல்லது முன்கூட்டியே பிரிந்துவிடுவது.?.

பிடிக்காத துணையோடு காலத்துக்கும் குழந்தைக்காக மல்லுக்கட்டி , குழந்தைகளையும் நிம்மதியில்லாமல் மனச்சோர்வுக்கு ஆளாக்கி மொத்தத்தில் அது ஒரு மோசமான சமூக சூழலுக்கு வித்திடுவதை விட?..

சில சமூக விரோதிகள் உருவாகுவதைவிட?..


எல்லா திருமணங்களுமே இப்படியான முடிவுதான் என சொல்லவரவில்லை.. காலப்போக்கில் ஒருவரையொருவர் புரிந்து நேசிக்க ஆரம்பித்து வெற்றி பெரும் திருமணங்கள் அனேகமுண்டு..அதுமட்டுமல்ல முன்பின் அறியாதவர்கள் இருவர் திருமணம் ஒரு சுவாரஸ்யமே சாதனைவிரும்பிகளுக்கு .. முக்கியமா இரு துணையும் நல்ல அனுசரணையாக , விட்டுக்கொடுப்பவராய் , அன்பானவர்களாய் இருந்துவிட்டால் அது எப்படியும் வெற்றி பெரும்..

ஆனால் வெளியே பார்க்க நல்ல குணமாய் அமைதியாய் யார் வம்புக்கும் போகாதவராய் இருப்பவரின் நிஜம் ( சைக்கோத்தனம் , கோபம், நோய், உடல்குறை , இத்யாதி ) கூட துணைக்கு மட்டுமே தெரிய வரும்...திருமணத்துக்கு பின்..


எனக்கு தெரிந்த ஒரு பெண் நல்ல அழகி , மென்மையானவர் என வரதட்சணையே வாங்காமல் ஒருவர் மணமுடித்தார். நல்ல வேலை கை நிறைய சம்பளம் என பெருமிதப்பட்டனர் பெற்றோர்.

ஆனால் காமக்கொடூரனாய் இருந்தார்.. எப்போதும் தேவை அவருக்கு.. ஆனால் கார் வாங்கி மனைவியை பெருமையா ஹோட்டலுக்கு அழைத்து செல்வதும் விலையுயர்ந்த பட்டுப்புடவை , நகை , சொத்து வாங்கிதருவதுமாய் வெளி உலகுக்கு நல்ல மனிதனாய் தெரிந்தார்..

முதல் குழந்தை பிறந்தது.. உடனே அடுத்த குழந்தை உருவானது.. அபார்ஷன் செய்தாள்..


அடுத்த சில மாதத்தில் அடுத்த குழந்தை.. அதையும் பெற்றார்

அடுத்து சில அபார்ஷன்கள்..

உடம்பும் மனதும் சீரழிந்து மன நோய் வந்தது.. கொஞ்சம் கொஞ்சமாய் மறதி வர ஆரம்பித்தது..உலகையே வெறுத்தாள்..


அப்பதான் அவள் சீரியஸ்நஸ் புரிந்து மருத்துவ உதவி நாடினர்..

வீட்டில் வேலைக்காரி வைக்க அனுமதியில்லை. ஏனெனில் வீட்டு விஷயம் வெளியே செல்லுமாம்..ஆனால் கணவர் உதவி செய்வார்தான்...

அப்பெண்ணின் அம்மா மட்டும் வந்து உதவ அனுமதி..

இப்படி எத்தனை எத்தனை கதைகள்? .வெளியில் சொல்ல முடியாமல்?..தெரியாமல்..?

ஆனால் இதுபோன்ற கதைகள் என்னதான் கலாச்சார மாற்றம் வந்தாலும் நடைபெறும்..

இது மன துணிவு சம்பந்தப்பட்ட விஷயமும் கூட.. வளர்க்கும்போதே கொடுக்கவேண்டிய துணிவும் தற்காப்பும்..



விவாகரத்தும் எல்லாராலும் செய்ய முடியாது.. பெண்ணுக்கு குழந்தைமேலுள்ள உரிமை ஆணுக்கும் உண்டே..

முக்கியமா குழந்தைகள் ஏன் அந்த பிரிவின் தண்டனையை அனுபவிக்கணும்..?


ஆக நல்ல இல்லறம் , நல்ல குழந்தைகள் , அதனொட்டி நல்ல சமூகம் அமையணும் என்றால் நல்ல திட்டமிடல் கண்டிப்பா இருக்கணும்..

கோ-ஹேபிட்டேஷன் என்ற முறையில் இது சாத்தியமாகிறது.. அதற்காக இதில் இருப்பவரெல்லாம் திருமணமே செய்ய விரும்பாதவரில்லை..


திருமணம் செய்வதர்கான முன்னேற்பாடுதான் இது பலருக்கு..

மற்றும் சிலருக்கு , ' வாழ போறது நாம் இருவரும், மனமொத்த பரஸ்பர நம்பிக்கையிலும் , அன்பிலும்.. இதுக்கெதற்கு ஒரு பேப்பர் ஒப்பந்தம்., செலவுகள்..பரபரப்புகள் ???" என்பதாய் கேள்வி..


இணைந்து வாழ்தல் என்றாலே உடனே காமம் மட்டும்தான் என்றால் அது அலுத்துபோகும் மனமொத்து போகாபட்சத்தில்...

இப்படியான வாழ்வில் பெண்ணுக்குத்தான் அதிக பாதிப்பு என்று பயப்படுகின்றனர் பலர்..

நிஜம்..

பெண்ணுக்கு பாதிப்பு எல்லாவற்றிலும் உண்டு.. திருமணத்திலும் இதே பாதிப்புகள் உண்டு..

இதிலிருந்து தப்பி தனியாகவோ குழந்தையோடோ வரும் பெண்ணுக்கு சட்ட ரீதியாக ஜீவனாம்சம் கிடைக்காதாமே?.. " ********* " , " ***********" , என பட்டம் சூட்டி அவளை அவமதிப்பார்களே?.. சமூகம் அவளை ஒதுக்கி வைக்குமே ?..

இதுபோன்றவற்றுக்கு பயப்படுபவர்கள் தாராளமாக திருமணம் செய்துகொள்ளலாம்..


இவற்றையெல்லாம் துச்சமென நினைப்பவர் மட்டுமே , எத்தனை குழந்தையென்றாலும் நான் வளர்ப்பேன் தனியாக என துணிபவர் ஈடுபடலாம்..

மேல் நாட்டில் இதற்கு சட்டமும் இருக்கின்றது .நம், நாட்டில் இதுவரை அனுமதி மட்டுமே உண்டு.. ஆனால் ஜீவனாம்சம் கிடைக்க வழி இல்லை ( மஹாராஷ்டிராவில் மட்டும் சில வழிவகை இருப்பதாக தெரிய வந்தது.. உறுதியா தெரியலை ) .


படிக்காமலோ, வேலைக்கு செல்லாமலேயோ கூட துணையை இழந்தவர், விவாகரத்து செய்தவர்கள் பலர் குழந்தை பெற்று வளர்க்கவில்லையா என்ன ?..

அப்படியிருக்கும்போது படித்து தன் சொந்தக்காலில் நிற்பவர்கள் தன் துணை வருங்காலம் பற்றி முடிவெடுக்க முழு உரிமை உண்டு..

அதனால் ஏற்படும் இன்ப துன்பங்களுக்கு அவர்களே முழு பொறுப்பு என்பதையும் அவர்கள் அறிந்தே இருக்கின்றார்கள்..


லிவிங்-டுகதெரிலிருந்து பிரிவது " ****** " த்தனமாக தெரியுமென்றால் , காதலித்து கைவிடப்பட்டு மற்றொருவனை/ளை மணமுடிப்பது எதில் சேர்த்தி.?

காதல் வயப்பட்டதுமே அவர்களோடு மனதளவில் வாழ்வதில்லையா?.. இல்லையென்றால் மருத்துவரை பார்க்கணும்...

சில போலித்தனமான கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டு விதியேன்னு வாழ்வதை விட இவ்வுலகில் ஒருமுறை வாழப்போகிற நாம் நம் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ வழியிருக்குமானால் , அதனால் யாருக்கும் எவ்வித தொந்தரவும் இல்லையென்றால் அதை தேர்ந்தெடுப்பதில் தவறேதுமில்லை..

எல்லா விஷயத்திலும் பாதகமும் இருப்பதுபோல் இதிலும் பாதகமுண்டு.. இதை தன் இஷ்டத்துக்கு தவறாக உபயோகப்படுத்தவும் , ஏமாற்றவும் செய்ய வழியுண்டுதான்... ஏன் காதலிப்பது போல நடித்து ஏமாற்றுவதில்லையா?..


ஆனால் அதெல்லாம் விதிவிலக்குகள் மட்டுமே.. விதிவிலக்குகள் விதியாகாது...

இத்தனை சொல்லியும் எனக்கு திருமணம் என்பதிலும் சடங்குமுறைகள் , கல்யாண விழாக்கள் , சொந்த பந்தங்களிலும் ஒரு சுவாரஸ்யம் இருப்பதாகத்தான் தெரிகிறது..அது என் சொந்த கருத்து மட்டுமே..

இருப்பினும் லிவிங்-டுகெதர் ஒன்றும் மோசமான பயப்படும் விஷயமில்லை என்பதற்கே இந்த விளக்கம்..

லிவிங்-டுகெதரில் நுழைபவர்கள் 100% இல்லற வாழ்வை ஆயுசுக்கும் அதே நபரோடு தொடரணும் என்ற ஆவலில்தான் தொடங்குகின்றார்கள்.. விளையாட்டுக்கல்ல...

அதுமட்டுமல்ல 50 வயதுக்கு மேலுள்ளவர்கள் , விவாகரத்தானவ்ர்கள் ,துணையை இழந்தவர்கள் , பல காரணத்துக்காக மேல்நாட்டில் இணைந்து வாழ்கின்றனர்..

முக்கிய காரணிகள் ,

1. வசதி , எளிது , சிக்கலற்றது..

2. முன்கூட்டியே உறவுமுறை சரிவருமா என பரிசோதித்தல்..

3. சிக்கனம்.( விழா எடுத்து கொண்டாடவேண்டியதில்லை )

4. திருமண ஒப்பந்தத்தில் நம்பிக்கையின்றி தங்களை அதிகமாய் நம்புவது..

5. விவாகரத்து , அதுக்காக நேரம் , சட்டதிட்டம் , பணம் செலவழித்தல் , ஆகியவற்றை தவிர்க்க..

6. சமூக கேள்விகளை தவிர்க்க ( இது வயாதானவர், முக்கிய புள்ளி , போன்றோர் ) .

எனக்கு தெரிந்த ஒரு பெண்ணுக்கு விவாகரத்தாகவே 5 வருடம் ஆனது..:(. அதற்குள் அவர் குடும்பம் பட்ட கஷ்டம் சொல்லி மாளாது.

இக்கட்டுரை ஒரு அறிமுகம் மட்டுமே.. பலர் இது ஏதோ பேராபத்தை , கலாச்சார சீரழிவை ஏற்படுத்த வந்ததாய் நினைத்து வருந்துவதால் சில புரிதல்கள் மட்டுமே...


நிஜமான , பயத்துக்குறிய கலாச்சார சீரழிவுகள் தொலைக்காட்சியிலும் ஊடகத்திலும் இப்ப பதிவுலகிலும் ஆபாசம் என்ற பேரிலும் , நடனம் , சீரியல் , வன்முறை என்றும் வந்துகொண்டுதானிருக்கிறது...


அதுதான் நம் குழந்தைகளுக்கு ஆபத்து...நம் கலாச்சாரத்தில் ரிஸ்க் எடுக்க ஊக்குவிக்காமல்/பாராட்டாமல் பாசம் என்ற பயத்திலேயே குழந்தைகளை வளர்த்துவிடுகிறோம்..

புயலும் சீற்றமும் இருக்கும் கடலிலே கப்பலோட்டக்கூடிய மாலுமியே சிறந்தவன்.. நம் பெண்களுக்கு அதுதான் மிக தேவை..

தனியே நம் நாட்டில் கெளரவமாக வாழக்கூடிய சூழல் பெண்ணுக்கு வரணும்.. ஏனெனில் பெண்ணுக்கு மட்டுமே " **** , ****** " என்ற பட்டங்களை கொடுத்து பழகியுள்ளோம்.. அதையெல்லாம் சட்டை செய்யாமல் மற்றவருக்கு முன்னுதாரணமாக நம் பெண்களை வளர்ப்போம்..தேவையில்லாமல் பெண்களுக்கு பட்டம் கொடுத்தால் அதுக்கு மரியாதை இல்லாமல் போய்விடும்..கெட்ட வார்த்தைகளை கேட்டு கேட்டு பழகும் துணிவை வழங்குகின்றீர்கள்..அவ்வளவே..:)

பாலியல் தொழில் ஒழிக்கவே முடியாது.. உலகிலேயே மிக பாவப்பட்ட தொழில் அது.. கோடி கொட்டிக்கொடுத்தாலும் நம் வீட்டு பெண்கள் செய்வார்களா ?.. ஆசை துணைக்கே அலுத்துபோகும் பெண்கள் இருக்கையில் , பாலியல் தொழிலை கண்ட சாக்கடை ஆணுக்கும் பறிமாறுகிறாளே.. நோய் வாங்கி நோய் தீர்க்கிறாளே..? பாலியல் தொழிலாளி குழந்தைகளுக்கு நாம் ஒரு துரும்பாவது நகர்த்தியிருப்போமா?.. ஆனா வாய்கிழிய பேசுவோம் கேவலமாக ...!!

வாழ்நாளெல்லாம் அவளுக்கு ஒருவர் துணைக்கு இருந்தே ஆகணும் என்ற பயசூழலை தவிர்ப்போம்... பாலியல் ஆபத்துகளை , அதை எதிர்க்கும் துணிவை பெண் குழந்தைக்கு கொடுப்போம்...



மாற்றங்களில் உள்ள நல்லவற்றை சிந்தித்து ஏற்க பழகுவோம்... ஏனெனில் நமக்கு பிடிக்காவிட்டாலும் புதியன , மாற்றங்கள் வந்தே தீரும்...

சில குறிப்புகள் சங்க காலத்திலிருந்து .

" காந்தர்வம் என வைதிக மரபில் குறிப்பிடப்படுகின்ற திருமண முறை எந்தவித நிர்ப்பந்தமும் பொய்மையும் பாசாங்குகளுமற்ற உறவு முறையாகும். உத்தரகுரு என்றும் போகபூமி என்றும் புராணங்களில் குறிப்பிடப்படும் நாட்டில் இத்தகைய உறவுமுறை இருந்தது எனத் தெரியவருகிறது.6 தமிழ் மரபில் களவு மணம் எனக் குறிப்பிடப்படுவதை வைதிக மரபில் நிலவிய காந்தர்வ மணத்தோடு ஒப்பிடுவதுண்டு.7 களவு என்ற சொல்லே கள்ளத்தனமாக, பிறர் அறியாமல் மேற்கொள்ளப்படும் காதல் ஒழுக்கம் எனப் பொருள்படும். களவு மணமே தமிழ் நெறி என்று கூறும் அளவிற்குக் களவு மணத்திற்குச் சங்கப் புலவர்களிடையே குறிப்பிடத்தக்க அங்கீகாரம் கிட்டியிருந்தது. இந்நெறி காமன் வழிபாட்டோடு தொடர்புடையது என்பதற்குப் பிற்காலக் காப்பியமாகிய சீவகசிந்தாமணி அசைக்கமுடியாத சான்றாகத் திகழ்கிறது. சீவகனும் சுரமஞ்சரியாரும் காமன் கோட்டத்துக் கடியறை தன்னில் இரகசியமாகச் சந்தித்துக் கூடி மகிழ்ந்ததை ”இன்றமிழ் இயற்கை இன்பம்” நுகர்ந்தார்கள் எனச் சீவகசிந்தாமணி (பா. 2003,2055,2063) குறிப்பிடுகிறது. "

நன்றி : http://www.sishri.org/kaaman.html

----------------


பழங்குடியினர் திருமணத்தில் சில முறைகளைக் கடைபிடித்து வருகின்றார்கள். பொதுவாக ஆணோ, பெண்ணோ மணந்து கொள்ள விரும்பினால் அவர்கள் இருவரையும் ஒன்றாகப் பழகவிடும் பழக்கம் இன்றும் கடைப்பிடிக்கப்படுகிறது. இருவரையும் காட்டிற்குள் அனுப்பிவிடுகிறார்கள். தங்களுக்குள் மனம் விட்டுப் பேசி தனியே தங்கி சில நாட்கள் பழகுகின்றனர். பின்னர் திரும்புகின்ற போது பெரியோர்களின் முன் நிறுத்தப்படுகின்றனர். இருவரும் மனம் ஒத்து மணந்து கொண்டால் மட்டுமே கணவன் மனைவியாகலாம். விரும்பாவிடில் இருவரும் பிரிந்து வேறு ஒருவரை (இருபாலரும்) மணக்கலாம்.

ஒரு பெண்ணை மணக்க விரும்பும் ஆடவனைப் பெண் வீட்டிற்கு அனுப்பி அங்கேயே இருந்து உழைத்து வர வேண்டும். சரியான தகுதியுள்ள மாப்பிள்ளை என்று பெண்ணும், பெண் வீட்டாரும் கருதினால் மட்டுமே பெண் கொடுக்கப்படும் இல்லையேல் பெண் கொடுக்க மறுத்து விடுவார்கள். ஆண்டுக்கணக்கில் உழைப்பவரும் உண்டு.


http://www.eegarai.net/-f15/-t7337.htm?theme_id=13515


படம் : நன்றி கூகுள்.

Saturday, November 20, 2010

லிவிங் - டுகெதர் + என் பயணமும். , ஜெனரேஷன் கேப்... பாகம் 2
































" நீ நல்லா இருப்பியா.?. உன் பெண்கள் நல்லா வாழ்ந்திடுவாங்களா?.. என் சாபம் உன்னை உன் குடும்பத்தை சும்மா விடாது..%$^*&*(&**"

என வீட்டு வாசலில் வந்து சபித்து விட்டு போனார்கள் ஒரு ஆண்ட்டி..

இது போதாதா ?. உடனே அக்கம் பக்கம் உள்ளவர்களெல்லாம் வரிசையா வந்து துக்கம் விசாரிக்க வந்தார்கள்..

எங்களுக்கே சங்கடமா இருந்தது .. அம்மாவுக்கு ஏன் எப்பவும் இந்த வீண் வேலைகள்..????????

அடுத்தவர் பிரச்னையில் ஏன் தலையிடுகிறார்கள்.. இதனாலேயே அப்பாவுக்கும் அம்மாவுக்கும் எத்தனை சண்டைகள்..?.

அம்மா மேல கோபமா வரும்....:((((

ஆனா அம்மா இதையெல்லாம் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் அண்ணாவை விட்டு மாங்காய் பறிக்க சொல்வதும் , முருங்கை காய் பறிப்பதும் , தெருவில் கேட்டு வந்தவர்களுக்கு கொடுத்து அனுப்புவதுமாய்..சாதாரணமாய் இருப்பார்..காய்கறி விற்பவர், நெல் சுமப்பவர், பூ விற்பவர், பால் காரர், தபால் காரர் அனைவரும் இளைப்பாறும் இடம் எங்க வீட்டு முற்றம்.. அந்த மாமர நிழல்.. எல்லார் சோகத்திலும் தன் சோகத்தை மறந்தவர்..

அப்படி என்னதான் நடந்தது.?. ஒரு அக்காவின் சோக கதை இங்கே..

புது வீடு கட்டும்வரை அந்த அக்கா வீட்டில்தான் நாங்கள் சின்ன வயதில் குடியிருந்தோம். எங்களையெல்லாம் வளர்த்தவர்கள்..

எங்களுக்கு வேதாகமம் , கதை சொல்லி தந்தவர்கள்..

நாங்க வீடு கட்டியதும் இடம் மாறினோம். அக்காவுக்கு திருமணம் ஆனது..ஒரு வயதில் ஒரு மகன் இருந்தபோது பேரூந்தில் செல்லும்போது விபத்து ஏற்பட்டு மூவரும் தூக்கி எறியப்பட்டு , கணவர் அந்த இடத்திலேயே மரணம்..

அடுத்த 9 ஆண்டுகள் எல்லா சோகத்தையும் சுமந்து கொண்டு தமிழ் ஆசிரியர் வேலைக்கு சென்றார் அக்கா.. கருப்பு என்றாலும் முத்துப்பற்கள் , முட்டு வரை கூந்தல் , இனிமையான பேச்சு கொண்ட பேரழகி அக்கா..

பார்க்கும் யாருக்குமே பிடித்து போகும் அக்காவை.. தமிழ் துள்ளி விளையாடும் கணீரென்ற குரலில்..

ஆக அவர் ஞாயிறுதோறும் குழந்தையை என் பக்கத்து வீட்டுக்கு ( அக்காவின் நெருங்கிய சொந்தம் ) அழைத்து வரும்போது அம்மாவிடம் வந்து கண்ணீர் சிந்துவார் எமக்கு தெரியாமல்..

இருவரும் ரகசியம் பேசுவார்கள் எம்மை வெளியே துரத்தி விட்டு..

அக்கா பூ வைக்க கூடாதாம் , ஆனால் அவர் அம்மா பூ வைத்து நகை போட்டுக்கொள்வார். கணவனோடு தனியறையில் படுப்பாராம்..

என்ன கொடுமை..?.. ( கலாச்சாரம் ? )

இவ்வேளையில் மனைவியை இழந்த ஒருவர் ( அவருக்கு 12, 10 வயதில் இரு குழந்தைகள் ) அக்காவை மணமுடிக்க ஆசைப்படுகிறாராம்..அக்காவை பள்ளியில் சந்தித்துவிட்டு ..

ஆனல் வீட்டில் பலத்த எதிர்ப்பு அக்காவுக்கு..எங்க பக்கத்து வீட்டினர் எங்களுக்கு ரொம்ப பிடித்தவர் மட்டுமல்ல ரொம்ப உதவியும் எல்லா விஷயத்திலும்..

ஆனால் அவர்களும் இதற்கு எதிர்ப்பு..மறுமணம் செய்ய கூடாது பையனுக்கு 10 வயதாகிவிட்டது என்று..( கலாச்சாரம் ?.. )

அம்மா உடனே தன் துணிவான இரு தோழிகளை ( ஒருவர் கவுன்சிலராக இருந்தார். மற்றொருவர் மலேஷியாவில் பல வருடம் வாழ்ந்தவர். ) அழைத்து ஆலோசித்து இத்திருமணத்தை மிக ரகசியமாக முடிக்க ஏற்பாடு செய்தனர்..

அப்பதான் என் இரண்டாவது அக்காவுக்கு பிரசவ நேரம்.. சம்பந்தி , நாத்தனார் என்ற கூட்டங்கள் வேறு..

மருத்துவமனையில் வைத்து ரகசிய கூட்டம் நடைபெறும்.. நான் அம்மா மடிமீது படுத்துக்கொண்டே கதை கேட்பேன்..

மேலும் நானும் ஒரு முக்கிய தூதுவர்...தகவல் அனுப்ப..:)

அக்காவை டிஸ்சார்ஜ் செய்துவிட்டு உறவினரையெல்லாம் வழியனுப்பி வைத்துவிட்டு , அம்மா ஒருநாள் காலையிலேயே கிளம்பி போனார்கள்.. எங்கேன்னு கேட்டா சொல்லலை... ஆனா போய்விட்டு வந்ததும் மகிழ்ச்சியா இருந்தார்கள்..

பக்கத்து வீட்டு ஆண்டி அங்கிளை பார்க்க மட்டும் வெட்கப்பட்டுக்கொண்டு இருந்தார்கள்..

(பக்கத்து வீட்டு ஆண்டி பற்றி " சந்தித்த அற்புதமானவர்கள் " பகுதியில் எழுதியிருக்கேன் பார்க்கலாம். அன்னை தெரசா அவர்..நாங்க நேரில் கண்ட தெய்வம்.. )

இரண்டு நாள் கழித்து அந்த அக்காவின் அம்மா வந்து மேலே சொன்னது போல அசிங்கமா கத்திவிட்டு போனதும் தான் தெரிந்தது , அக்காவுக்கு திருமணம் ஆன விஷயம்..

" ஏம்மா ஆண்டி இப்படி சபிச்சுட்டு போறாங்களே..?" னு நாங்க வருத்தப்பட்டா , அம்மா எளிதா சொல்வாங்க ,

" ஹ அடுத்த கிறுஸ்மஸ் க்கு பாரு .. எல்லாரும் குடும்பமா கேக் வாங்கிட்டு வருவாங்க... "

தீர்க்கதரிசியா அம்மா?.. இல்லை.. அவர் பார்த்த , சந்தித்த பிரச்னைகள் , அனுபவங்கள்..

அக்காவுக்கு திருமணம் ஆனதும் தான் பெரும் சோதனை காத்திருந்தது...

கணவனின் இரு குழந்தைகளும் தம் சொந்தங்களின் பேச்சை கேட்டு அக்காவை வெறுத்தனர்.. அக்காவின் மகனை ஏற்றுக்கொள்ளவில்லை.. அக்காவின் அன்பும் பொறுமையும் அவர்களையும் சில வருடங்களில் கரைத்தது..

And they lived happily ever after.. இப்ப பிள்ளைகள் மூவரும் அமெரிக்காவில்..

அப்புரம் ஒருநாள் அந்த ஆண்டி , எங்கம்மா கை பிடிச்சு அழுதுகொண்டே, '" சாந்தியம்மா , நீங்க மட்டும் அன்னிக்கு அப்படி ஒரு துணிச்சலான செயல் செய்யாவிட்டால் என் பொண்ணு நிலைமை என்னவாயிருக்கும்..? "

அப்பவே இப்படி பல புரட்சியை செய்தவர் சத்தமில்லாமல்.. இது ஒரு சாம்பிள் மட்டுமே..


பக்கத்து வீட்டு அங்கிள் கூட எங்க அம்மா மேல் கொஞ்ச நாள் வருத்தத்தோடு இருந்தாங்க..

ஆனா அம்மா சொல்வாங்க , ஒரு இளம் விதவையை வீட்டுக்குள் வைத்துக்கொண்டு பெற்றோர் மட்டும் எப்படி தனியறையில் வாழ முடிந்தது?..

ஊரில் எல்லாரும் சொன்னாங்க , உங்களுக்கு நான்கு பெண் பிள்ளைகள் இருக்காங்க .நல்ல சம்பந்தம் கிடைக்காது... எதுக்கு உங்களுக்கு வேண்டாத வேலை என..

" என் பிள்ளைக்கு இந்த நிலைமை வந்தால் என்ன செய்வேனோ அதைத்தான் நான் அவளுக்கு செய்தேன். யார் தடுத்தா என்ன என்ன சாபம் போட்டா என்ன.?. என் பிள்ளைகளை கட்டிக்க நான் , நீ ன்னு போட்டி போட்டு வருவாங்க.. யாரும் கவலைப்படவேண்டாம் " என வாயடைத்துவிடுவார்கள்..

பிரச்னை என வந்தபோது ஓடி ஒளிந்தவரெல்லாம் மெல்ல மெல்ல என் அம்மாவிடம் தத்தம் பிரச்னைகளை இப்ப துணிவா சொல்ல வந்தாங்க...

வீடே ஒரு பஞ்சாயத்து ஆல( மா ) மரம் ஆனது..

அக்கம் பக்க ஏழைகள் , கூலித்தொழிலாளிகள் எல்லார் வீட்டு பிரச்னைகளும் அம்மாவிடம்.. குடிகாரர்களின் மனைவி புகார் செய்தா அம்மா சென்று அதட்டி விட்டு வருவார்.. அப்போதைக்கு சரிம்மா சரிம்மா என பெட்டிப்பாம்பாய் அடங்கினாலும் நல்லா தண்ணி போட்டுவிட்டு வந்து இரவு கத்திவிட்டு போவான்.. :)).. அடுத்த நாள் மன்னிப்பு கேட்டு வேலைக்கு வந்தும் நிற்பார்..:)

ஏழைப்பிள்ளைகளை பள்ளியில் சேர்ப்பது , வேலை வாங்கி தருவது, திருமணத்துக்கு மாப்பிள்ளை பார்த்து தருவது என இஷ்டமாய் உதவுவார்கள்..

எந்த வீட்டில் மரணம் என்றாலும் எங்க வீட்டுக்கு முதல் தகவல் வரும் ...வந்ததுமே காஃபி பெரிய பானையில் தயாராகும்..

எங்க வீட்டு முற்றத்தில் நாற்காலிகள் போடப்படும்..


எங்கள் தெருவில் கிறுஸ்தவர்கள் அனேகர்..

பின் தெரு தேவர் இனத்தவர்கள்.. பாசக்காரர்கள்.. ( இதை எழுதலாமா னு தெரியவில்லை தப்பென்றால் நீக்கிடுவேன் ) . ஆனா அவர்களுக்குள் சண்டைன்னு வந்தால் அறுவாள் , டியூப்லைட் என கிடைத்த ஆயுதத்தை தூக்கிக்கொண்டு ஊரே வேடிக்கை பார்க்குமளவுக்கு நடக்கும்..எல்லாரும் எங்க வீட்டு மூன்றாவது மொட்டை மாடியில் ஆஜர்.. லைவ் ரிலே... தெரு முழுதும் பேர்ட்ஸ் ஐ வ்யூ..

பயமா இருக்கும் கொலை விழுமோ என.. அர்த்தமே புரியாத கெட்ட வார்த்தைகள் ..:))

அப்பவும் அம்மாவுக்குத்தான் தகவல் அனுப்புவாங்க..

" சாந்தியம்மா பேச்சுக்குத்தான் கட்டுப்படுவான்.. ஆள் அனுப்புங்க "

அப்பா இருந்தா அம்மாவால் போக முடியாது.. சில நேரம் பின்பக்கம் வழியா போவாங்க..சில வேளை அப்பா கண்டுக்கமாட்டாங்க..

நானும் முந்தானை பிடித்துக்கொண்டே அம்மாவுக்கு ஏதாச்சும் ஆகிடுமோ னு கூட போவேன்..

அப்பா வெளியூர் போயிருந்தா " என்னப்பா என்னாச்சு , னு மெதுவா பேசி சண்டையிட்டவரை வீட்டுக்கு அழைத்து வருவாங்க கையை பிடித்து .."

பார்க்கவே பயமா இருக்கும்..எங்க வீட்டு முன்னால் கூட்டம் கூடும்..வேடிக்க பார்க்க..எங்க அண்ணா இருவரும் கூட்டத்தை அனுப்புவார்கள்.. என் அண்ணா இருவரும் அமைதின்னா அமைதி அப்படி ஒரு அமைதி..:)). ( ஆனா எனக்கு போய் அமைதின்னு பேர் வெச்சுட்டாங்களே..:)) )

வீட்டுக்குள் பெண் பிள்ளைகள் இருக்காங்களே னு அம்மா ஒருபோதும் பயந்ததில்லை..

அந்த அண்ணாமார் எல்லாம் எங்களை எங்கே கண்டாலும் மிக மரியாதை செலுத்துவார்கள் அம்மா மேலுள்ள மரியாதையால்...

ஆக தேவர் வீட்டு விசேஷத்தில் அம்மா எப்பவும் முன்னால் நிற்பாங்க.. அனேகர் எங்களை தேவர் என்றே நினைத்திருந்தனர்.. :)).

( இப்ப என் பிள்ளைக்கு தான் எந்த சாதின்னே தெரியாது.. சாதின்னாலே என்னன்னு தெரியாது.. )

அதே போல் எங்க வீட்டு விசேஷம் அனைத்திலும் அவர்களும்..

இது பலருக்கு ஆச்சர்யமான விஷயம் அப்போது...

இத்தனைக்கும் அம்மா இந்து.. அப்பா கிறுஸ்தவர்.. ஆனாலும் கிறுஸ்தவ முறைப்படி ஞானஸ்தானம் பெற்று திருமணம் செய்ததால் கிறுஸ்தவ முறைப்படியே எம்மை வளர்க்க பிரியப்பட்டார் அம்மா.

ஏன்னா பெண்ணுக்கு கல்வி , உரிமை இங்கு அதிகம் என்பது அவர் எண்ணமாயிருந்திருக்கும்....

மனசுக்குள் அவர் இந்து என்பது மட்டும் அப்பப்ப வெளிப்படும்.. :)

இந்து கோவிலை தாண்டும்போது செருப்பை கழற்றிவிட்டு கன்னத்தில் போட்டுக்குவார்.. கையெடுத்து கும்பிடுவார்.. அப்பாவுக்கு தெரியாமல் வருடந்தோறும் குத்துவிளக்கு அனுப்பி வைப்பார் கோவிலுக்கு.. பின் தெருவில் கொடை விழாவுக்கு எங்க கிறுஸ்தவர் தெருவில் எங்க வீட்டிலிருந்து மட்டுமே பணம் தரப்படும்.. சாமியாடி வந்து எங்க வீட்டு முற்றத்தில் மட்டும் ஆடி விபூதி தருவார்..

எதையும் மறுக்காது ஏற்க பழக்கினார் அம்மா..


கிராமத்திலிருந்து பாளை பெரிய மருத்துவமனைக்கு யார் வந்தாலும் முதல் செய்தி தொலைபேசியில் அம்மாவுக்கு வரும்..

ரொம்ப தியாகி மாதிரி , " அதுக்கென்ன வர சொல்லு . தம்பியை வைத்து நல்லா பார்க்க சொல்வோம் . நம்ம வீட்டிலேயே இரவு தங்கிக்கலாம்.."

மாமாதான் பெரிய மருத்துவர் அப்போ..

விருந்தினர்களுக்கு என் தலையணை வரை நான் தானம் செய்யணும் ..முகத்தில் புன்னகை , அகத்தில் வருத்தம்..:)..

விருந்தினர் குளிக்க , தண்ணீர் வராத நாட்களில் 100 குடம் தண்ணீர் எடுக்கணும் அடி பம்பிலிருந்து..( ? ) அதெல்லாம் கஷ்டமாய் தெரிந்ததேயில்லை..

ஏன்னா பாராட்டு மழையில் நனைந்திருப்போம்.. மேலும் கிராமத்துக்கு போகும்போது பிரமாண்டமான வரவேற்பு இருக்கும்..


இதுக்கும் இடையில் நாங்க படிக்கணும்..தேர்வுக்கு .. வந்தவங்களுக்கு காஃபி போட்டு, டிபன் செய்து கொடுக்கணும்..

ஆக ஒரு காது வழியா சமூக பாடம் . மற்றொரு காதில் பள்ளி பாடம்...:).

இப்படிப்பட்ட அம்மாவை வெளிநாட்டில் கொண்டு வந்து வைத்தால் என்னாகும். பிரச்வத்துக்காக ஒரு வருடம் விசா எடுத்து வரவழைத்தால் குழந்தை பிறந்ததுமே என்னை அனுப்பிவிடு என அழ ஆரம்பித்தார்கள்..

அதே தான் அமெரிக்காவிலும் . ஒரு வருடம் என சென்றவர்கள் , மூச்சை பிடித்துக்கொண்டு மூன்று மாதம் இருந்தார்களாம்..அண்ணாவிடம்..

வாழ்நாளிலே அம்மாவுக்கு மிகப்பெரிய தண்டனை அதுதான்.. எது ?. ஆட்கள் இல்லாமல் இருப்பது..

அம்மா சென்னைக்கு சென்றாலே அக்கம் பக்கம் உள்ளவர்கள் தேட ஆரம்பித்திடுவார்கள்..

" தம்பி அம்மாவை சீக்கிரம் வர சொல்லுங்க ஒரு முக்கியமான பிரச்னை.." என அண்ணாவிடம் இன்றும் ஆட்கள் வருகிறார்கள்...


அம்மா பட்ட கஷ்டத்தை சொல்லணும்னா தனியா புத்தகம்தான் போடணும்..ஆனால் அதுதான் அவர் சக்தி..வசதியான வீட்டில் பிறந்து வசதியான வீட்டுக்கு மூத்த மருமகளாய் வந்து வேலை வேலை வேலைதான்...அம்மா திருமணத்தின் போது அவர் கடைசி தம்பி கைகுழந்தை.. அதே போல அப்பாவின் கடைசி தம்பியும்... ஒரே வீட்டில் மாமியார் மருமகள் , அம்மா, மகள் தொட்டில் .:))..

ஆனால் நிறைவான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார் என்பது மட்டும் உண்மை..

அவருக்கு தெய்வம் , பிடிமானம் , மகிழ்ச்சி எல்லாமே மிக சாதாரண மனிதர்களே..மனிதன் கஷ்டப்பட கலாச்சாரம் ஒரு தடைன்னா அதை தூக்கி எறியணும் னு நினைப்பவர்.. இலக்கியமோ , புரட்சி புத்தகமோ படித்ததில்லை..

தாம் செய்வது புரட்சியா , என்பதெல்லாம் தெரியாது.. ஆனா ஒருத்தரோட துயர் துடைக்கணும் அது மட்டும்தான் கண்ணில் தெரியும்..அதற்கான விமர்சனங்களை சட்டை செய்யாதவர்.மகிழ்ச்சியா தாங்கியவர்...எத்தனை எத்தனை திருமணங்கள் நடத்தி வைத்தார்.?. பணம் செலவு செய்தல்ல , தன் நேரம் , துணிவு , அறிவை செலவழித்து.

அவர் தூங்கியே நான் பார்த்ததில்லை.. ஆனால் பொத்தென்று விழுந்து பார்த்துள்ளேன் பலமுறை.. குறைந்த ரத்த அழுத்தம் உண்டு..

பேசிக்கொண்டிருக்கும்போதே மயங்கி விழுவார்.. ஆனாலும் மருத்துவரிடம் சென்று தன் உடம்பை காண்பிக்க மாட்டார்.. பிடிவாதம்..

மாமா அப்பப்ப திட்டி மருந்து கொடுப்பார்கள்.. அப்பவும் நக்கல் " என்னை பரிசோதித்தா 100 வியாதி லிஸ்ட் சொல்லுவாங்க.. எனக்கு தெரியாதா?.. " என ..

ஊரிலுள்ளவருக்கு மட்டுமல்ல டாக்டர் மாமாவுக்கு உடல்நிலை சரியில்லாட்டி கூட கைப்பக்குவ மருத்துவம் , சூப் ,ரசம், லேகியம்னு செய்துகொடுப்பார்..:)).

பிரசவத்துக்கு ,பாலூட்ட , வயற்று வலி , சளி இருமல் என பல்வேறு லேகியம் செய்ய ஆலோசனை வேறு..நாங்க அம்மா சொல்வதை கேட்காமல் மருத்துவரிடம் குழந்தை அழைத்து செல்வோம்.. கிண்டலடிப்பார்..

நான் சொல்றத கேட்டா 2 நாளில் சரியாகும்.. மருத்துவர் சொல்றத கேட்டா ஒரு வாரமாகும்.. குழந்தையை ஏன் இப்படி படுத்துற.? சாப்பாட்டை திணிக்காதே.. ஒரு நேரம் சாப்பிடாட்டி ஒண்ணும் செத்து போகாது.தன்ணி மட்டும் கொடு . என துணிச்சலாக பட்டினி போட சொல்வார்...

கல்லூரியிலோ பள்ளியிலோ எமக்கு ஒரு பிரச்னை என்றால் உடனே அங்கு இருப்பார்.. பருத்து சேலை என்றாலும் நேர்த்தியாக உடை அணிந்து கிட்டத்தட்ட எம்.எஸ்.சுப்புலஷ்மி மாதிரி மங்களகரமாக இருப்பார், அப்பா மரணத்துக்கு பின் எல்லாவற்றையும் இழந்தார் , அண்ணாக்கள் எத்தனை சொல்லியும்.. ( கலாச்சாரம் )


அவருடைய சக்தியே எளிமை.. சென்னையில் அக்காவிடமிருந்து தொலைபேசி வரும்.. அம்மா உடனே வாங்கன்னு..( அக்கா வீட்டுக்காரர் வெளிநாடு பயணம் செய்யும்போது ) ...இந்த 76 வயதிலும் ,

" அடுத்த டிரெயின் எப்ப தம்பி ?" னு ஒரு பையில் இரண்டு சேலைகளை எடுத்து வைத்து கிளம்பிடுவார்.. ரிசர்வேஷன் வேணுமே, படுக்கணுமே . என்ற கவலையெல்லாம் கிடையாது.. தாலி செயினை மட்டும் பையினுள் இரவு எடுத்து வைத்துக்கொள்வாராம்.. ".



ரயிலில் ஏறியதுமே எல்லாருடனும் சகஜமா பேசி அதுக்குள்ள நட்பாயிடுவாரே.. அவருக்கு என்ன கவலை.?..

சரி இந்த பதிவில் அம்மா பற்றி எழுதியதும் லிவிங்-டுகெதர் மறந்துட்டேன் மன்னிக்க..

( எடிட் செய்யாமல் அப்படியே போட்டிருக்கேன் . போரடிச்சா திட்டிருங்க.:) .)

அடுத்து அதை கொஞ்சம் பார்ப்போம்..


லிவிங்-டுகெதர் பற்றி




படம் : நன்றி கூகுள்..