Showing posts with label குழந்தைகள். Show all posts
Showing posts with label குழந்தைகள். Show all posts

Thursday, April 21, 2011

தத்தெடுத்தல்..:




குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் ஏன் 10 வருடமெல்லாம் காத்திருக்கிறார்கள் என அதிசயப்பட்டதுண்டு..( என் குடும்பத்திலும் )

எப்படி அந்த அன்பை சேமித்து வைத்திருப்பார்கள் பல்லாண்டுகள் வலியோடு , சுமை, ஏக்கத்தோடு ...?

திருமணத்தோடு யோசிப்பேன், " ஒருவேளை என் உறவினர்கள் மாதிரி குழந்தை இல்லாவிட்டால் உடனே தத்தெடுக்கணும் " என..

ஆளாளுக்கு பல காரணம் சொல்வார்கள்.. குழந்தை ஜீன் எப்படியோ, நோய் எப்படியோ, குணம் , குலம் எப்படியோ...


ஏன் அன்பு செலுத்த இவையெல்லாம் சப்பை காரணங்களாய்.?.. ஆனால் இத்தகைய காரணங்கள் சொல்பவர்கள் தத்தெடுக்காமல் இருப்பதே நல்லதும்.. அந்த குழந்தைகள் தப்பிக்கும்..

முன்பின் அறிமுகமற்றவரிடம் நட்பு , பாசம் வருது .?.. ஆனால் ஏதுமறியாத பச்சைக்குழந்தையிடம் அன்பு , பாசம் வராதா?..

கொஞ்ச நாள் வாழ்ந்திட்டு மண்ணுக்குள்ள போற நமக்கு ரிஷிமூலம், நதீமூலம்னு சொல்லி வாழும் நாட்களை அனுபவிக்காமல் கட்டுக்கதை சொல்லி நரகமாக்கியவர்களை என்ன சொல்ல..?

ஆகவே காத்திருக்காதீர்கள் , தத்து குழந்தையிடம் அன்பு செலுத்த .. இல்லையில்லை , அன்பை பன்மடங்கு அனுபவிக்க..


( ஏன் சொல்ல மாட்டீங்க.. நீங்க தத்தெடுக்கவா செய்தீர்கள் என்றால் , மனதளவில் நான் எப்பவோ தயார்.. ஆனால் வாய்ப்பில்லை.. அவ்வளவே.. )

என்னுடைய உறவினர் பெண்ணுக்கு தத்தெடுக்க ஆசை. ஆனால் கணவரின் ஆணாதிக்கம் தடுத்தது.. :(.. (இருவரும் ஒரே தினம் மரணமும்.... )

வாயில்லா பூச்சிகளாய் வாழ்ந்திருக்கிறார்களே பெண்கள்... ???

வாரிசு இல்லையென்றால் அதிலென்ன வெட்கம் , கேவலம் , ஏமாற்றம்..?.. அன்பு செலுத்த , பெற முடிந்தும் அன்பில்லாத வாழ்வுதான் வெட்கப்படவேண்டியது...வருந்தவேண்டியது..

பெற்ற குழந்தைகளை போட்டிகள் என தொலைக்காட்சியில் வருத்துவதும் , குடித்துவிட்டு வந்து பிள்ளைகள் முன்பு சண்டையிடுவதும்தான் கேவலம்.. வருத்தம் எல்லாம்..

ஊனமுற்ற குழந்தை என்றாலோ , மன நலம தவறிய குழந்தை என்றாலோ கூட நம்மால் துளியும் வித்யாசப்படுத்தி பார்க்காமல் , சொல்லப்போனால் இன்னும் அதிகமாக அன்பு செலுத்த முடிந்த நம்மால் ஏன் பரிதாபத்துக்குறிய பச்சிழங்குழந்தைகளை தத்தெடுக்க முடிவதில்லை.. நம் மேல் மட்டும் குற்றமில்லை.. நாம் அப்படி பழக்கப்பட்டிருக்கோம் இச்சமூகத்தில்.. விசாலமான மனதை வளர்க்காமல் குறுகிய மனப்பான்மையோடு வளர்க்கப்பட்டிருக்கிறோம்..


தாய்லாந்தில் நமக்கு பிடித்தமான குழந்தை, ஆணோ, பெண்ணோ பெற்றுக்கொள்ள லட்சக்கணக்கில் பல நாடுகளிலிருந்து வந்து செலவழிக்கிறார்கள்.. ஏன் இந்த பேராசை.. இப்படியான பேராசை சூழலுக்குள் தள்ளப்படுவது மிகப்பரிய கொடுமையும் , மனச்சுமையுமல்லவா பெண்ணுக்கு.. ???..


குழந்தையின்மை என்பது மிக சகஜமாக பார்க்கப்படவேண்டிய விஷயம்..

எல்லாரும் மருத்துவமனை , கோவிலுக்குள் படையெடுக்காமல் தத்தெடுக்க ஆரம்பித்தால் அதைவிட வேறு சிறப்பான ஆன்மீகம் , நற்செயல் மகிழ்ச்சி என்ன இருக்க முடியும்..

இதை எந்த ஆன்மீகவாதியும் , சோசியக்காரனும், மருத்துவரும் கூட சொல்வதில்லையா?.. குழந்தை வரம் கேட்டு வருபவர்களிடம்.. ?.

உலக மஹா படிப்பு படித்ததால் மருத்துவதுறையின் முன்னேற்றத்தால் ஒரு குழந்தையை பெற முடியும்தான்.. ஆனால் செலவே இல்லாமல் அன்பை பெற வழி இருக்கும்போது ..?.




யோசிக்கலாமே.. ..நமக்கு தெரிந்தவர்களுக்கு ஆதரவும் துணிவும் கொடுக்கலாமே.. சமூக பார்வையை அலட்சியப்படுத்தவும், அதோடு சமூகத்தில் மாற்றம் கொண்டு வரவும் செய்யலாமே, வாழப்போகிற இந்த சில ஆண்டுகளில்..

போலித்தனமான கற்பிதங்களிலிருந்து வெளியே வந்து ஒரு முன்மாதிரியாக இருக்கலாமே..?..அதற்கான தெம்பை , எதையும் துணிவாக சந்திக்கும் ஆற்றலை கொடுப்போமே..

எங்க ஊரில் ஒரு பெண்மணி தன்னுடைய ஆறாவது பிரசவத்துக்காக என் அக்கா அனுமதிக்கப்பட்ட அறையின் அடுத்த அறையில் இருந்தார்..5 குழந்தைகள் இறந்தபின்.. சொந்தத்தில் திருமணம்.. குழந்தை 6 மாதம் மேல் கர்ப்பத்தில் தங்குவதில்லை.. ஆக 4ம் மாதம் முதல் மருத்துவமனையே கதி..

ஒரு நாள் இரவு நாங்கள் தூங்கிக்கொண்டிருக்கும்போது சலசலப்பு..

பிரசவ வலி வந்தது.. 6 மாதத்திலேயே.. நாங்களும் கூட சேர்ந்து நகம் கடிக்க , சிறிது நேரத்திலேயே , குழந்தை இறந்த தகவல்.. மற்ற எல்லோரையும் விடுவோம்.. அந்த தாய்.?.. குழந்தை பெறும் இயந்திரம்..?.. படைத்தால் இயந்திரத்துக்கு வெற்றி .. இல்லையென்றால் இயந்திரம் வீண்.. ?.. அப்படித்தானே?.. 6 முறை கர்ப்பம் தரித்து , லட்சம் கனவுகள் கண்டு, பயத்தில் நாட்களை ஆடாமல் அசையாமல் கழித்து..???

ஏன் இந்த முட்டாள்தனமான எதிர்பார்ப்புகள்..?...சமூகத்தில் கட்டுடைக்க வேண்டியவற்றில் இதுவும் முக்கியமான ஒன்று..

சுமந்து பெறுவதால் மட்டுமே ஒருவர் தாய் ஆகவோ, தன் ரத்த உறவு என்பதால் மட்டுமே ஒருவர் தந்தை ஆகிடவோ முடியாது..

உலகிலுள்ள அனைத்து குழந்தைகளையும் நேசிக்க முடிந்தவர்கள் மட்டுமே பெற்றோர் என்ற சொல்லுக்கு அருகதையுள்ளவர்கள்.. மற்றவர்கள் வெறும் பேராசைகொண்ட சுயநலவாதிகள் மட்டுமே.. ( என்னையும் சேர்த்துதான் )

இதன் இன்னொரு வடிவம் வாடகைத்தாய்.. ஆரம்பத்தில் நானும் அதை சிறப்பென கருதி வேலாயி எனும் தொடர்கதை எழுதியதுண்டு..

யோசித்து பார்த்தால் , அதென்ன அப்படி ஒரு பிடிவாதம் , நம் வாரிசே உருவாகணும் என.. ?.. நாம் , நம் ஜீன்கள் , நம் சந்ததியினர் மட்டும் எந்தளவில் உசத்தி?.. யார் மதிப்பீடு செய்ய..?..

அப்படி ஒரு வாரிசை உருவாக்கிட , ஒரு ஏழைத்தாயின் உணர்ச்சிகளை அல்லவா விலை பேசுகிறோம்?.. அவருக்கல்லவா வாழ்நாள் முழுதும் குற்ற உணர்ச்சியை தருகிறோம்?.. யோசிப்பது கூட இல்லை .. நமக்கு காரியம் ஆனால் போதும்.. என்று பழகிவிடுகிறோம்.. அதை சமூகமும் ஏற்று நம்மை திட்டுவதற்கு பதில் விழா எடுத்து மாபெரும் வெற்றியாக அங்கீகரிக்கிறது... இது ஒரு வகை நுகர்வு கலாச்சாரமாய் மாறி வருகிறது.. அதிலும் இந்திய வாடகைத்தாய்கள் கம்மி விலையில்..:((!!

குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலை மட்டுமல்ல , ஒரு மகிழ்ச்சி, ஒரு நம்பிக்கை , வாழ்க்கையை முழுமையாக பொறுமையாக கற்பது போன்ற பல விஷயம் இருக்கிறது.. அந்த வாழ்வானது எல்லாருக்கும் மிக எளிமையான வழியில் கிடைக்கட்டும் , அனுபவிக்கட்டும்.. பெற்றால் தான் பிள்ளை என்ற பழைய குருட்டுத்தனமான நம்பிக்கையை உடைத்தெறிந்து விடுதலை தருவோம், பல குடும்பத்துக்கு , முக்கியமா பெண்களுக்கு...


வெளிநாடுகளில் அன்பு செலுத்த பிராணிகளை கூட பிள்ளைகள் போல் வளர்க்க ஆரம்பித்துவிட்டனர்..இப்ப நம் நாட்டிலும் அந்த பேஷன் வந்தாச்சு.. நாம் மட்டும் இன்னும் பிடிவாதமாய் பெட்ரமாக்ஸே வேணும் னு இருந்தா எப்படி?..




சரி குழந்தைகளை மட்டும்தான் தத்தெடுக்கணுமா..? இல்லை.. முதியோர் இல்லங்களில் இருக்கும் முதியோரை கூட தத்தெடுக்கலாம்.. உங்களால் வீட்டுக்கு அழைத்து வந்து கவனிக்க முடியாதுதான்.. ஆனால் மாதம் ஒருமுறை சென்று பேசிவிட்டு கூட வரலாம்.. முடிந்தால் பண உதவியும்.. சமீபத்தில் தெருவில் வீசப்பட்ட முதியோர்களை பார்த்து மிகுந்த வேதனையும் அதிர்ச்சியுமடைந்தேன்.. யாரை குற்றம் சொல்ல?.. பிள்ளைகளால் பராமரிக்க முடியாமல்தானே இந்த நிலைமை.?..

இது பற்றி எழுதிய தத்து குழந்தை கதை

சென்னையில் மட்டும் பணம் செலுத்தி கவனிக்கும் முதியோர் இல்லமே நூற்றி இருபத்தைத்துக்கு மேலாம்.. . இலவச இல்லங்கள் தனி.. இப்ப இது ஒரு புது வகை தொழில்..நல்லவை இல்லாமல் இல்லை.. ஆனால் இதைத்தான் நம் கலாச்சாரம் என கொண்டாடுகிறோமா?.. இதற்குத்தான் தியாகம் செய்து , உடல் வருத்தி வளர்த்தார்களா ..?


இன்னொரு தத்தெடுத்தல் நலிந்த கிராமங்களை.. அது பற்றி பிறகு பார்ப்போம்..

( விசாரித்து பார்த்ததில் , தத்தெடுப்பதும் கூட அத்தனை எளிதல்லவாம்.. அப்படியானால் ஏன் இத்தனை அனாதை இல்லங்கள்..??..தத்தெடுப்பதை எளிமைப்படுத்தணும்.. தன் சொந்தக்காலில் நிற்க முடிந்தவர் , ஆணோ , பெண்ணோ , நன்றாக வளர்க்க முடியுமானால் , குறிப்பிட்ட வருடங்கள் கண்காணிப்போடு தத்தெடுக்க அனுமதிக்கணும்..அதே போல் ஓரின சேர்க்கை தம்பதியினருக்கும்.. சரி இதை தனியா பேசணும்.. இன்னும் அதை ஏற்கும் பக்குவம் நம் மக்களிடம் இல்லை என்பதே வேதனை .. )


நம்மையறியாமல் நம்மீது திணிக்கப்பட்டுள்ள பல்வகை கற்பிதங்களை இனியாவது தடுக்கணும்..கலாச்சாரம் , பண்பாடு என்ற போர்வையில் சகஜமாக்கப்பட்ட மனித நேயமற்ற செயல்களை ஊக்குவிப்பதை தடுக்கணும்..


லஞ்சம் வாங்கியாவது பங்களா வீடும், காரும் இருந்தாத்தான் மதிப்பு என்றளவில் நம் பார்வை பழக்கப்பட்டுள்ளது..

எளிமை வாழ்வே கேலிக்குறியது.. தோல்வியாக கணக்கிடப்படுகிறது..

அடுத்தவர்களை திருப்தி படுத்த பல போலி சந்தோஷங்களை காண்பிக்க வேண்டியுள்ளது.. அதற்கு குழந்தைகளையும் பலியாக்குகின்றோம், தேவையற்றவைகளை படிக்க சொல்லி..ஆடி, பாட சொல்லி., அடுத்தவரோடு எதிலும் போட்டி போட சொல்லி..

தத்தெடுக்க சில சட்ட திட்டங்கள் பர்றி தகவல்கள் இங்கே..

http://www.indiaparenting.com/adoption/4_1347/adoption-rules-in-india.html http://en.wikipedia.org/wiki/Christian_law_of_adoption_in_India http://www.indiachildren.com/adoption/laws.htm

( தத்தெடுக்க நான் வழிகாட்டியல்ல. எனக்கு தகுதியுமில்லை என்ற குற்ற உணர்வுடனே இந்தப்பதிவு.... )


//Adoption means you grew in your mommy's heart instead of her tummy // "Our children are not ours because they share our genes... they are ours because we have had the audacity to envision them. That, at the end of the day...or long sleepless night, is how love really works." Author: உன்க்னொவ்ன்



படம்.: நன்றி கூகுள்


.

Saturday, April 2, 2011

நடிகையும் ஒரு பெண் என மதிப்போம்..






நான் சமீபத்தில் படித்த கமெண்ட் சில எனக்கு ஏற்படுத்திய எரிச்சலை வலியோடு பகிர்ந்துகொள்கிறேன்..

யார் எழுதியது என்பது நமக்கு தேவையில்லை.. தெரியாமலே இவை பழக்கப்படுத்தியிருக்கலாம்.. இது தவறு என சொல்வதும் நம் கடமை அவ்வளவே.. கமெண்ட் நாலு பேர் கூட சேர்ந்து அடிக்கும்போது சுகமாத்தான் இருக்கும்.. ஆனால் அது நம் வீட்டு பெண்ணா இருந்தால் அடிப்போமா என எண்ணிப்பார்ப்போம்..

-------------------------

வடிவேலு அம்பிகாவை வச்சிருந்த கதையெல்லாம் மேடையில் நாறுமோ? :-)

அம்பிகா கதை மட்டும் இல்லை... ஷ்ரேயா கதை எல்லாம் கூட வெளி வரும்.

மதுரைக்குத் தி.மு.க. அனுப்பிவைத்த பிரசார பீரங்கி குஷ்பு!

XXXX : சிங்கிள் பேரலா மல்ட்டி பேரலா?...

அடுத்து கனிமொழியையும் ராசாவையும் இணைத்து..

அப்புரம் குஷ்பூவின் பழைய நீச்சலுடை படம் போட்டு அவரை இழிவுபடுத்துதல்..

ஜெயா அம்மையாரையும் நடிகை என்ற பார்வையில் அசிங்கப்படுத்துவது..

--------------------------------------------------

என்ன ஒரு ஆர்வம்??...இவர்களுக்கெல்லாம்.?..அப்பப்பா.. ஒரு நொடி அந்த பெண்களை நம் வீட்டு பெண்களாய் எண்ணியிருந்தால்..?..

அடுத்தவர் அந்தரங்கத்தை பொதுவில் அலச ஆர்வமுள்ளவர்கள் அதே ஒழுக்கமற்றவர்களாய் இருப்பார்கள்..

இது ஒரு கீழ்த்தரமான உத்தி..

நன்றாக நியாபகம் வைத்துக்கொள்வோம் , நாம் எல்லோரும் அதே சூழலில் , முக்கியமா நம் வீட்டு பெண்களும் அதே சூழலில் இருந்தால் அதையே செய்திருப்போம் என நினைவில் கொள்ளுவோம்..

( நாளை நம் வீட்டு குழந்தையும் இதே போல செய்ய மாட்டார் என எத்தனை பேர் நிச்சயமா சொல்வீர்கள்..?. எதுவும் நடக்கும்.. யார் கையிலும் இல்லை .)

அம்பிகாவை தொடர்பு படுத்தி அசிங்கப்படுத்தவேண்டி
யதன் நோக்கம்.?

நடிகை என்றால் என்னவேணா பேசலாம்னா பேசுபவர் அப்படியானவரே என்னைப்பொறுத்தவரையில்..

இதுக்கு பலத்த எதிர்ப்போ, கும்மியோ, கண்டனமோ தெரிவித்தாலும் இதுவே என் பதில்..

பாலியல் தொழிலை விட இப்படியான பேச்சுகள்தான் சமூகத்தின் முக்கியமான சீர்கேடு . இப்படி பேசுபவர்களை விட பாலியல் தொழிலாளிகளும், நடிகைகளும் உயர்ந்தவர்கள் என்னைப்பொறுத்தவரையில்..


யாரும் திருந்தணும்னு கட்டாயப்படுத்தல்.. ஆனால் இதுதான் என் கருத்து..

அரசை , ஊழலை , விமர்சிக்கணும்தான். மக்களுக்கு அவர்கள் தவறை வெளிச்சம் போட்டும் காண்பிக்கணும்தான்.. ஆனால் இதுவல்ல வழி.. அவர்களுக்கும் நமக்கும் வித்யாசமே இல்லை..உடனே மாற்றம் வர , கோபம் வர வழி தேடாமல் நிரந்தரமாக நம் நாடும் சமூகம் நல்லதொரு சூழல் அமைக்க பாடுபடலாம்.. எடுத்தேன் கவிழ்த்தேன் என்பதை விட்டு.. அது நீண்ட கால பயனளிக்காது. ..



எது சரி எது தவறு என்று கூட தெரியாத அளவுக்கு தமிழர்கள் சிலர் , பொதுவாழ்க்கையில் ஈடுபட்ட பெண்களை, முக்கியமா நடிகைகளை , அவர்களின் அந்தரங்கங்களை பொதுவெளியில் அலசுவது மிக சர்வ சாதாரணமாக போய்விட்டது..ஆனா அதே பெண்களிடம் ஆட்டோகிராப் வாங்கவோ , குத்துவிளக்கு ஏற்றவோ க்யூவிலும் நிற்போம்..புகைப்படம் எடுப்போம்.

அதுமட்டுமா அந்த நடிகையின் படத்தை போட்டு ஹிட்ஸ் சேர்ப்போம். ஓட்டு பிச்சை எடுப்போம்.. ஏன்னா நாம நல்லவர்கள்....

அதெப்படி வெளிநாடு வாழ் தமிழர்கள் கூட வெளிநாட்டில் பெண்கள் எவ்வாறு மதிக்கப்படுகின்றனர் என பார்த்தபின்பும் , தனிமனித உரிமைகள் அதற்கான சட்டங்கள் பற்றி அறிந்த பின்னும் , தமிழரோடான பேச்சில் தம்மை மறந்து , அந்தரங்க அலசலில் இத்தனை ஆர்வம் காட்டுகின்றனர்..?

அருவருப்பா இருக்கு.. :((((((((..

இவர்களெல்லாம் நாட்டை திருத்த போறாய்ங்களாம்.. போங்க போங்க போய் மொதல்ல உங்களை நீங்க திருத்திக்கோங்க.. அப்புரம் நாட்ட திருத்த வாங்க..


திருந்தவே மாட்டாங்க சில ஆணாதிக்கவாதிகள் , தன் வீட்டு கதவை அந்த பிரச்னை தட்டும் வரை.. திருந்தவாவது , சீக்கிரம் அதே சூழல் அவரவர் குடும்பத்தில் வரட்டும் என மட்டும் வாழ்த்துவோம்..:)

உடனே கேட்கத்தோணும், உங்க வாரிசுகளுக்கு வந்தால் பரவாயில்லையா?..

நிச்சயமாக .. ஏனெனில் நான் பாலியல் தொழிலாளிகளின் வாழ்வு மேம்படத்தப்படணும் என பல வருடம் முன்பே பேச ஆரம்பிச்சாச்சு..

1. அத்தொழில் முற்றிலுமாக ஒழிக்கப்படணும்.

2. முடியாத பட்சத்தில் அவர்களுக்கு அங்கீகாரம் கொடுத்து கெளரவமாக நடத்தப்படணும்...

ஏன்னா, உலகிலேயே மிகவும் பரிதாபத்துக்குறிய , மனமும் உடலும் தினம் செத்து பிழைக்கும் தொழில் அது..

ஒன்ணு அவர்கள் வலியை உணரணும்.. அல்லது தம் வாரிசுகள் அதை அனுபவிப்பதன் மூலமே அறியணும்.. இது எனக்கும் பொருந்தும்..


( இதுக்கு ஒரு 100 பேராவது ( ஆணாதிக்கவியாதிகள் ) எதிரியாகணும் எனக்கு .. ).

நடிகைக்கும், பாலியல் தொழிலாளிக்கும் , அரசியலில் ஈடுபடும் பெண்களுக்கும் குடும்பம், குழந்தைகள் இருக்கு.. ஒன்றுமேயறியாத அக்குழந்தைகளை பலிகடா ஆக்கி மன உளைச்சல் தரும் மன நோயாளிகளே அந்தப்பாவம் உங்கள் வாரிசுக்கு வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்..

அப்படி பேசுபவர்களுக்கு ஆதரவு தந்து அக்குற்றத்தை வளர்க்க உதவாதீர்கள்...தவறு என துணிவாக எடுத்து சொல்ல தயங்காதீர்கள்..


தேர்தல் நேரமென்பதால் எப்படியாவது அடுத்தவரை இழிவுபடுத்தியே தான் பெரியவனாக காண்பித்துக்கொள்ள கட்சியினர் தான் அடித்துக்கொள்கின்றனர் என்றால் பதிவுலகிலும் ..



இது வளர்ச்சி அல்ல வீழ்ச்சி நோக்கி போய்க்கொண்டிருக்கிறோம் என்பதற்கான சான்று ..


படம் : நன்றி கூகுள்..


.

Tuesday, January 25, 2011

குழந்தைகளும் கற்பனைகளும்..:






கதை சொல்லி தூங்க வைப்பது எப்போதும் தொடர்ந்து நடைபெறும் விஷயமென்றாலும் எப்போதாவது சுவையான சம்பவமாகிடுவதுமுண்டு..

எத்தனை கோபம் பிடிவாதம் என்றாலும் கதை வைத்தே லஞ்சமாக பேசி காரியம் சாதிக்கவும் முடிகிறது குழந்தையிடம்..முக்கியமா வீட்டுப்பாடம் சடசடவென முடியும்.. உணவு உள்ளே தள்ளப்படும்...ஜெபமும்...

ஏன் கதைகள் அத்தனை சுவாரஸ்யமாகிப்போனது ?..

ஏனெனில் நிஜத்தைவிட கற்பனை உலகம் மிக மகிழ்ச்சிகரமானதாகவே இருக்கிறது குழந்தைக்கு...

குழந்தைக்கு மட்டுமா ?... நமக்கும்தான்,..

டாம் & ஜெர்ரி விரும்பி ரசித்து அதில் மயங்கி நேரம் செலவாகுவது கூட தெரியாமல் இருப்போருண்டே நம்மில்..


நேற்றும் விளக்கை எல்லாம் அணைத்துவிட்டு என்னை அணைத்துக்கொண்டே கதை கேட்க தயாரானார்...

ரொம்ப ஒண்ணும் கஷ்டமில்லை என்றாலும் அப்போதுதான் கதையும் தயாரிக்கணும் என் மூளை... பாத்திரங்கள் அவரே சொல்லிடுவார்.. யார் இருக்காங்களோ இல்லையோ அவர் இருக்கணும்.. அதாங்க அவர்தான் ஜெர்ரி மவுஸ் .( எலி )

நான் , அல்லது அவன் அண்ணாதான் டாம்..

கூட துணை நடிகர்களாக காட்டிலுள்ள விலங்குகள் ..

இதில் வேறு பல நேரம் ஜெரி மவுஸ் பைக் ரேஸ் வேற போகும்.. அதுதான் ஜெயிக்கும்.. இப்படி கதைக்கான கருவும் அவரே இடையிடையே சொருகிடுவார்.. சில நேரம் என் கற்பனை தடை செய்யப்படுவதாக நான் குற்றம் சுமத்த, அவர் கோவித்துக்கொண்டு சண்டையிடுவார்...

எப்போதும் ஜெரி வெற்றி பெருவதில் எனக்கு உடன்பாடில்லை.. ( அப்புரம் வாழ்வை எப்படி சமாளிப்பதாம் என அம்மாவான எனக்கு கவலை... நியாயம்தானே?... )

ஆனால் அவருக்கோ, ஜெர்ரி எப்படி அடி வாங்கினாலும் , போராடினாலும், ஜெர்ரிதான் வெற்றி பெறணும்...


பெரியவருக்கு கதை சொல்ல இத்தனை சிரமப்படவில்லை.. சீனு உதவினான்.. அதாங்க சீனு நம்ம கழுதையார்.. அவர்தான் பெரியவரோடு பள்ளிக்கு போவதும் , ஆசிரியருக்கு தெரியாமல் சீனுவை சக நண்பர்கள் ஒளித்து வைப்பதும் , உதவுவதும், விமானத்தில் செல்வதுமாய் ஏகத்துக்கும் கதை விடுவேன்.. சிரித்துக்கொண்டே தூங்கிடுவார்.. சில நாள், நான் சொல்லும்போதே தூங்கிடுவேன்.. எழுப்பி வைத்து கேட்பார்.. ( என்ன கதை சொன்னோம்னே மறன்னு போயி..இடையில் கனவு வேற டிஸ்டர்ப் செஞ்ஞல்லே ).


நேர்று கதை ஆரம்பித்ததுமே, ஒரு ஊர்ல , ......................................ஒரு ஊர்.....................................ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல னு இழுத்தேன்...



அவரே ஆரம்பித்து வைத்தார்.. " ஒரு ஜெர்ரி மவுஸ் இருந்தது.. அப்புரம் சீக்கிரம் சொல்லுங்கம்மா... " னு இன்னும் ஆசையோடு கட்டிப்பிடித்துக்கொண்டார்.. அதிலேயே அவர் ஆவல் புரியும்.. கற்பனை விண்டோ ஓப்பன் பண்ணிட்டார்னு அர்த்தம்...

அந்த ஜெர்ரி மவுஸ் பாலத்தில் செல்லும்போது டான்ஸ் ஆடிக்கொண்டே சென்றதால் பாலத்திலிருந்து தண்ணீருக்குள் விழுந்தது......................

........ஹெல்ப் என கத்தியது.. நண்பர்கள் ஓடி வந்து காப்பாற்ற முடியாமல் யானையை அழைத்து வந்தது.... இத்யாதி...


இதுக்குள் டென்ஷனாயிடுவார்... என்னாச்சு மா.. என்னாச்சுமா.. இப்படி காப்பாத்தி இருக்கலாமே அப்படி செய்திருக்கலாமே னு அடுக்குவார் ஐடியாக்களை...

" யானை வந்து தன்னோட நீண்ட தும்பிக்கையால் அந்த மவுஸ் ஏற செய்தது... அது உன்னை மாதிரி சேட்டைக்கார மவுஸ் ஆச்சே, யானை மூக்குக்குள் போய்விட்டது எலி.......................................வெளியே வரமாட்டேன் னு அங்கேயே உட்கார்ந்து கொண்டது..."


கை அசைவோடு சொல்லணும்.. என் கைதான் தும்பிக்கை.. அவர் விரல்கள் மவுஸ்.. பிடித்துக்கொண்டார்..

சொன்னதும் விழுந்து விழுந்து சிரிப்பு...


யானை மூக்கை சீந்தினாலும் வரமேட்டேன் னு பிடிவாதம்...

உடனே நண்பர்கள் ஒரு ஐடியா சொன்னார்கள் , நிறைய உறைப்பு சாப்பிடு... கண்ணீரும் தண்னீரும் வரும்.. அப்ப மவுஸ் வழுக்கி விழும்...

யானையும் உறைப்பு சாப்பிட்டு தண்ணீர் வந்ததும் , ஆவலோடு எல்லா விலங்குகளும் பள்ளிக்கு செல்லாமல் பாறைகள் மேலேறி உட்கார்ந்து காத்திருந்தன...

ஆனா மவுஸ் ஜாலியா , " ஐ வாட்டர் ஃபால்ஸ் ( நீர்வீழ்ச்சி ) னு குளித்து பாட ஆரம்பித்தது... ( ஏன்னா சின்னவருக்கு தண்ணீர்னா போதும் ஒரு நாளைக்கு 10 முறை கூட குளிப்பார்.. காய்ச்சல் என்றாலும் ) ..


சிரிப்பு தாங்க முடியலை...


சரி போதும் இன்னிக்கு.. தூங்கு னு சொன்னதும் கெஞ்ச கொஞ்ச ஆரம்பித்துட்டார்..

பிளீஸ் , ஒரு ஆயிரம் முறை...

சரி இன்னும் ஒரு சில வரிகள் என சத்தியம் வாங்கிக்கொண்டு , தொடர்ந்தேன்..

சின்ன சின்ன இலைகளை பூக்களை எடுத்து வந்து மூக்குக்குள் செலுத்தினால் மவுஸ் வெளியே வரும் என நட்புகள் சொல்ல ,

அதையும் செய்ய , அவற்றையெல்லாம் உள்ளேயிருந்து வாங்கிவைத்துக்கொண்டு , " ஆஹா நான் நல்ல மலர்படுக்கை செய்துவிட்டேன் .. நல்லா தூங்க போறேன் ' னு சொல்லி குட்நைட் சொல்லிச்சாம்...


சரி குட் நைட் சொல்லிடுச்சு போய் தூங்கு...


--------------------

தூக்கத்திலேயும் சிரித்தார்.. எந்த கதைக்குன்னு தெரியலை...

காலையில் எழுந்ததிலேருந்து சிரிப்பு.. பள்ளி விட்டு வந்ததுமே கதை தயாரா இருக்கணுமாம்...பள்ளி நட்புகளிடமும் ஆசிரியரிடமும் சொல்வாராம்....

குழந்தைகளின் கற்பனை உலகத்தை விரிவாக்கிடலாம் கதை மூலம்...அதில் நாமும் நுழைந்து ரசிக்கலாம் இலவசமாக.. உபயோகமாக...


கதையின் கரு ஒரு வரியாகக்கூட இருக்கலாம்.. ஆனால் சொல்லும் விதமும், குழந்தைகளை அந்த கற்பனை உலகில் சஞ்சீகரிக்க , அழைத்து செல்லும் மந்திர வித்தையும் வருவதற்கு முதலில் நாமே குழந்தையாகி அக்கதையை ரசிக்க பழகணும்... ( சொன்னா நம்பமாட்டீங்க.. இன்னும் என் கதையின் சீனு என்ற கழுதையார் ( 6 வருட பழக்கம் ) மற்றும் , தொடர்கதையின் நாயக நாயக்ர்கள் உயிரோடு வாழ்கிறார்கள் என்னில் )


அதே போல நிறைய கேள்விகள் கேட்க வைக்கலாம் குழந்தைகளை...


குழந்தைக்காக படம் வரைய கற்றுக்கொண்டிருக்கிறேன்....

http://www.ehow.com/how_5581915_draw-computer.ஹ்த்ம்ல்








படம் : நன்றி கூகுள்..

Monday, November 8, 2010

பூச்சிக்கடியும், கடவுளும் , சூப்பர்மேனும் - குழந்தையின் கும்மி.





























நேற்று ஆலயம் முடியும் தருவாயில், விளையாட செல்கிறேன் என சொல்லிவிட்டு சென்ற சின்னவர் சிறிது நேரத்தில் அழுகையை அடக்கிக்கொண்டு வந்தார்..

கையில் ஏதோ பூச்சி கடித்துள்ளது சருக்கு விளையாடும்போது.

சின்ன சிவப்பு வட்டமும் நடுவில் ஒரு சின்ன கரும்புள்ளியும்..

ஆனால் முள் ஏதும் இல்லை..

அந்த இடத்தை பார்த்துவிட்டு பூச்சியை தேடினால் ஒன்றுமில்லை..

உடனே வீடு வந்து மருந்து போட்டதும் மறந்துவிட்டார்..நாங்களும்..

ஞாயிறு என்பதால் கொஞ்சம் பக்கோடா செய்வதில் பிஸியானேன்..

சின்னவர் தூங்கி எழுந்ததும் வெடி போடணும் என சொல்ல அருகிலுள்ள காலி இடத்துக்கு சென்று மத்தாப்பு மட்டும் கொளுத்தி வந்தோம்..

அப்பவும் வலி இல்லை.. வாந்தி , தலை சுற்றல், உண்ண , குடிக்க மறுத்தல் ஏதுமில்லை....ஆக பயமின்றி இருந்தோம்..

இன்று காலை எழுந்து பார்த்தால் கைவிரல் மூன்று வீக்கம் பெருவிரலோடு சேர்த்து..சிவந்தும் காணப்பட்டது..

உடனே ஐஸ் பேக் போட்டோம்..

வலி பிராதானமாக இல்லையென்ப்தால் பள்ளிக்கும் தகவல் அனுப்பிவிட்டு அனுப்பி வைத்தோம்..

வந்ததுமே வீக்கம் வற்றியபாடில்லை.. உடனே மருத்துவரிடம் அழைத்து சென்றேன்..

போகும் வழியில் ஆரம்பித்தாரே பார்க்கலாம் , கடவுள் பற்றி கேள்விகளை..

நான் சும்மா இருக்க கூடாதா, நீ ஆலய நேரத்தில் விளையாடியதால் ஜீஸஸ் குட்டி தண்டனை கொடுத்திட்டார் போல னு விளையாட்டாய் சொல்ல ,

வந்தது வினை..

" அம்மா ஜீஸஸ், பாயா, கேர்ல் ஆ?.."

" கடவுளுக்கெல்லாம் பாய் கேர்ல் இல்லை "

" ஜீஸஸ் கு அம்மா அப்பா இருக்காங்களா?. '

" ஆமா. அம்மா பெயர் மேரி.. அப்பா ஜோசப் . மாட்டுக்கொட்டகையில் பிறந்தார்.."

" அவரையும் ஏஞ்சல்தான் கொண்டு வந்து தந்தாங்களா என்னை மாதிரி,.? அவர் எப்ப கடவுள் ஆனார்.? " ஏன்.?"

" அவர் மனிதனா பிறந்து வந்தார்.."

" எங்கிருந்து ?"

" பிதாவால் அனுப்பி வைக்கப்பட்டார்."

" பிதா எப்படி பிறந்தார்.. யார் வயற்றில்.?"

" அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. போதும் கேள்வி கேட்டது.. என்னை ஒழுங்கா கார் ஓட்ட விடும்மா.. உனக்கு இப்ப புரியாது சொன்னாலும்."

" இல்ல சொல்லுங்க எனக்கு புரியும்.. முதல் கடவுள் எப்படி பிறந்தார்...அவங்க அம்மா அப்பா எப்படி பிறந்தாங்க.."

" அது பற்றி நாம யோசிக்க நமக்கு மூளை வைக்கல.."

" இல்ல எனக்கு இருக்கு .. சொல்லுங்க.."



" அய்யோ கடவுளே.. காப்பாத்துமய்யா."

" அம்மா உச்சா வருது.."

அப்பாட.. தப்பிச்சேன்.. இனி பேச்சை மாத்திடலாம்.. என மணி பார்க்க சொன்னேன்.. 4.01 .

"4.10 க்கு மருத்துவமனைக்கு சென்றிடலாம்.. கொஞ்சம் பொருத்துக்கோ...."

அப்புரம் காரை நிப்பாட்டியதும் ஓடிய வேகத்தில் நல்லவேளை மறந்துட்டார்..

மருத்துவமனைக்கு செல்வதென்றால் குஷி.. அவருக்கு பிடித்தமான ஒரு திராட்சை ஜூஸ் இங்குதான் கிடைக்கும்.. ( புளிக்கும்.. அவருக்கு இனிப்பே பிடிக்காது ) .

வீக்கம் பார்த்து உடனே ஸ்பெஷலிஸ்ட் வர வைத்தார்கள்..

பயப்படும் சிம்டம்ஸ் இல்லையென்பதால் மருந்துகள் தந்தார்.

ஏகப்பட்ட மாத்திரை மருந்துகளை அள்ளிக்கொண்டு வந்தோம்.. ( ஆண்டிபயாடிக், இன்ஃப்ளமேஷனுக்கு, அலர்ஜிக்கு, காய்ச்சல்+வலிக்கு என . நான் எப்போதும் எல்லாம் கொடுப்பதில்லை... குழந்தை உடல்நலம் பொருத்து நிப்பாட்டுவேன் ..ஆண்டிபயாட்டிக் தவிர..)

வீடு வந்ததும் யு- டியூபில் சில பைபிள் கதைகளை போட்டுவிட்டேன் வீட்டுப்பாடம் செய்து முடித்ததும்..

இருந்தாலும் அந்த கேள்விகள் பெண்டிங் இருக்கு... எனக்கு அசைன்மெண்ட் ஆக..!!!!!!!!:(

இதற்கிடையில் அகதிக்குழந்தைகளுக்கு பாடம் எடுக்கும் வாய்ப்பொன்று வந்தது..( வாலண்டியர் பணிதான் )/ முடிந்தால் ஜனவரியில் வருவதாய் சொல்லியுள்ளேன்..

( முக்கியமா தமிழ் குழந்தைகள் )

குழந்தைகளோடு வேலை செய்வது மிக பிடித்தமான ஒன்று.. அவர்களின் கள்ளங்கபடமற்ற உலகமும் ,கேள்விகளும் , சிரிப்பும்..( ஆனா இப்படி எடக்கு மடக்கா கேள்வி கேட்டா என்ன செய்ய ?... )

முக்கியமா சொல்ல வந்த விஷயம் என்னன்னா ,

நாங்க சின்ன பிள்ளைகளா இருக்கும்போது ஓடி விளையாடாத இடமேயில்லை.. அப்பப்ப கட்டெறும்புகள் , தேனிக்கள், குழவிகள் என கடித்ததும் , கொட்டியதுமுண்டு..

ஒரு வீட்டில் மொசுக்கட்டான் பூச்சு வந்தால் அந்த தெரு முழுதும் பரவிடும்.. ( இன்றும் அலர்ஜி அதை நினைத்தாலே )

அதிகபட்சம் சுண்ணாம்பு தடவுவார்கள்..( சாவதற்குள் சரியாயிடும் என பாட்டிமார் கிண்டல் வேறு.. சுண்ணாம்புக்கு அவங்ககிட்டதான் போய் கெஞ்சணும் .:)) .)

ஆனால் ஒருமுறை ஒரு மரத்தில் கூடு கட்டியிருந்த குழவி ஒன்று 3 சிறுவர்களை கடித்ததில் ஒரு சிறுவன் மரணம் அடைந்துவிட்டான்..

அத்தனை விஷமாம்..

நாங்க காடு மேடெல்லாம் சுற்றிய போது கடிக்காத பூச்சு இப்ப மிக ஆரோக்கியமான இடமான ஆலயத்தில் குழந்தையை கடித்துள்ளது..

என்ன கடித்தது என்றும் தெரியவில்லை.. ( "அம்மா சூப்பர்மேன் கிட்ட சொன்னா கண்டுபிடிச்சுருவானா ?.." -" நான் சூப்பர்மேன் ஆகணும்னா என்ன செய்யணும்.?, என்ன படிக்கணும்...?" அந்த நேரமும் இந்த கேள்விதான் குழந்தைக்கு.. )


எல்லார் கிட்டேயும் , " என்னை பம்பிள் பீ ( Bumble bee ) கடிச்சிருச்சு னு சொல்லிட்டார்..

மருத்துவர் என்னிடம் பேசும்போது , நான் எனக்கு சரியா தெரியலனு சொன்னா, இவர் , " என்னை பம்பிள் பீ தான் கடிச்சிருச்சு " னு சொல்றார்..

" நீ பார்த்தியா?.எப்படி இருந்தது னு அவர் கதை கேட்கும் ஆர்வத்தில் கேட்க ,

" ப்ளூ கலர்ல இருந்தது...டூ விங்க்ஸ்...அப்புரம்..., அம்மா 'ப்ளூ கலருக்கு' தாய் பாஷை ல என்ன ?.."

" ஏய் குட்டி கத வுடாத..கதை இரவு வெச்சுக்கலாம் " னு சொல்லி கதையை முடித்தேன் ஒரு வழியா..

இதுபோன்ற சில விபத்துகளை தவிர்க்க முடியாதென்றாலும் , முதலுதவி தெரிந்துவைத்துக்கொள்ளணும்...

நான் பார்த்தவை இதோ உங்கள் பார்வைக்கும்...



Reactions that stay localized to the sight of the bite or sting are usually not serious.

More serious signs and symptoms of anaphylaxis, a type of life threatening reaction, can include trouble swallowing, throat and chest tightness, low blood pressure (hypotension), diaphoresis (sweating), dizziness, weakness, itching, hives, wheezing and difficulty breathing. These symptoms usually develop fairly quickly and usually within 30 minutes of being stung. You should seek immediate medical attention or activate your local emergency services if your child has these symptoms following an insect bite or sting.


http://pediatrics.about.com/cs/safetyfirstaid/a/dnt_lt_bugs_bte.htm

http://pediatrics.about.com/cs/safetyfirstaid/a/dnt_lt_bugs_bte_3.htm


What to Do About:

Bee and Wasp Stings

http://kidshealth.org/parent/firstaid_safe/emergencies/insect_bite.html


Should Your Child See a Doctor?
Insect Bites


http://www.seattlechildrens.org/medical-conditions/symptom-index/insect-bites/



------------------------------

படம் : நன்றி கூகுள்..

Monday, September 20, 2010

தெய்வக்குழந்தைகள்..












தெய்வக்குழந்தைகள்
..

வாரம்தோறும் எங்கு போகிறோமோ இல்லையோ பூங்காவுக்கு அழைத்து சென்று சருக்கு , ஊஞ்சல் , பந்து , சைக்கிள் என ஆடி ஓடி

ஓய்ந்து போய் வரணும்..

பெரியவர் முதலிலேயே சென்றிடுவார் சைக்கிளில்...கூடை பந்து விளையாட...

நாங்க பின்னாலே சென்று விளையாடிவிட்டு வரும்போது சைக்கிளை ஓரிடத்தில் நிப்பாட்டி விட்டு எம்கூட வருவார்..

நம் ஊரில் இப்படி சைக்கிளை பூட்டி வைத்தாலும் மீண்டும் இருக்குமா என்பது சந்தேகம்.

இங்கு எத்தனை நாளானாலும் அப்படியே இருக்கும்..



சரி இப்ப என்ன விஷயம்னா , பூங்காவுக்கு அழைத்து செல்வதென்பது நம் குழந்தைகளை விளையாட வைக்க மட்டுமல்ல. தாய் மக்கள் குடும்பத்தோடு வந்து குழந்தைகலோடு விளையாடி மகிழ்வதை காணவும்தான்.


குழந்தையோடு
குழந்தையாக , பெற்றோர் இருவரும் , பந்து , இறகுப்பந்து , சைக்கிள் என சிரித்துக்கொண்டே விளையாடுவதை பார்க்கும்போது ஒரு மகிழ்ச்சி
நம்மையும் தொற்றிக்கொள்ளும் இலவசமாக...

சின்னவர்
பூங்கா செல்லும்போது எல்லாவற்றையும் அள்ளி போடுவார்..
கிரிக்கெட் மட்டை , ஹாக்கி மட்டை , பந்துகள் 4 , ரிங், பூமராங் , ரோலர் ஸ்கேட்டிங் சைக்கிள்.. சப்பு சவருன்னு எல்லாம் ..

என்னமோ
அத்தனையையும் விளையாடிவிடுவது போல..


முதலில்
கிரிக்கெட் விளையாட ஆரம்பிப்பார்.. அவர் எப்பவும் பேட்ஸ்மேன்.. நாந்தான் பவுலிங்..
பந்தை சரியா அடிச்சுட்டா ஒரு பெருமிதமா சிரிப்பு சிரிப்பார்.. அப்பா கை தட்டணும்.. ஆனா பந்தை அடிக்க முடியலையோ , அம்மாவுக்கு பந்தை சரியா போட முடியலைன்னு பிராது வந்திடும்...

கிரிக்கெட்
விளையாடுவதை அதிசயமாக சுற்றி உட்கார்ந்து தாய் மக்கள் ( முக்கியமா பசங்க ) பார்ப்பாங்க..
தாய் மக்களுக்கு பிடிச்சது கால்பந்து தான்..

எங்கே
பார்த்தாலும் அதுதான் இங்கே பிரபலம்..


இவன்
அடிக்க அடிக்க அந்த பசங்க ஹோ னு சத்தம் போட்டு ஊக்குவிப்பார்கள் கை தட்டி.. கேட்கணுமா பெருமை முகத்தில் வழியும்..:)


அடுத்து
கால்பாந்து .. நான் கொஞ்சம் வேகமா அடிச்சாலோ , இல்லை வேறு பக்கம் அடித்தாலோ கோபம் வந்திடும்..
முகத்தை தூக்கி வைத்துக்கொள்வார், கை இரண்டையும் கட்டிக்கொண்டு.. இதை பார்த்து அந்த தாய் பசங்க விழுந்து விழுந்து சிரிப்பார்கள்..

ஏனெனில்
தாய் மக்களுக்கு கோபம் னா என்னன்னே தெரியாது அது நம்ம இந்திய சொத்தல்லவா?..


அவன்
கோபமும் அவன் முக கோணலும் அவர்களுக்கு பயங்கர சிரிப்பை வரவழைக்கும்..


அதே
போல ஊசி போடும்போதும் இங்குள்ள குழந்தைகள் அப்படி ஒண்ணும் பெரிதாக அழுவதில்லை..
வலியில் கண்ணீர் வந்தாலும் கத்துவதெல்லாமில்லை.. ஆனா இவன் ஊசி போடுமுன்னே ஊரை கூட்டுவான்...

என்னை
வெளியே போக சொல்லி 10 பேர் சேர்ந்து கட்டிபிடித்து அமுக்கி ஊசி போடணும்..
அப்பவும் விழுந்து விழுந்து சிரிப்பாங்க... அடக்க மாட்டாமல்.. ஏதோ ஏலியனை பார்த்ததுபோல்...:)

கீழே
வழுக்கி விழுந்தாலும் முதலில் சிரிப்புத்தான்.. விழுந்தவனும் சிரிச்சுக்குவான்..
வந்த புதிதில் என்னடா இது சரியான லூஸுப்பசங்களா இருப்பாய்ங்களோன்னு நினைத்ததுண்டு.. இப்ப அதிலும் நாங்களும் ...

முக்கியமா சொல்ல வந்த விஷயத்தை விட்டு வண்டி எங்கோ போய்விட்டது..

அருமையான விஷயம் என்னவென்றால் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை அழைத்து வருவார்கள்.. அக்குழந்தையை அவர்கள் குடும்பத்தினர் மட்டுமல்ல எல்லோருமே சேர்ந்து கொஞ்சி மகிழ்ந்து விளையாடுவார்கள்..

ஆக
ஒரு மனவளர்ச்சி குழந்தை இருந்தால் இங்கே தெய்வமாக கொண்டாடப்படுகிறது ..

அக்குழந்தையை எல்லா குழந்தையும் போல சாதாரணமாக விளையாட விடுவார்கள்.. இப்படி செய்வதால் சில நாளில் அக்குழந்தைகள் சாதாரண நிலைமைக்கு வருவதுமுண்டாம்..

எங்க
ஆலயத்தில் இப்படி ஒரு பெண் உண்டு..
அவருக்கு பிரசங்கம் நடக்கும்போது ம் நன்மை( நற்கருணை ) எடுக்கும் போதும் வரிசை ஒழுங்கு படுத்தும் வேலை கொடுத்துள்ளார்கள். அவர் மிக அழகாக புன்னகையோடு அதை செய்வார்..

ஆலய
வேலைகள் செய்வது எல்லோருமே வாலண்டியர்ஸ் தான்..


இப்படியான பொறுப்புகள் கொடுக்கும்போது அவர்கள் பெரும் முக்கியத்துவமே அவர்களை முன்னேறவைக்கும்... தாமும் மற்றவர்போல் சாதாரணம் என்ற எண்ணம் வரும்.. சங்கோஜமில்லாமல் பழக முடியும்.. ஒரு போட்டி வரும்..

எளிதில் கற்றும்கொள்வார்கள்..

சின்னவர் விளையாடும்போது அவனிடம் வந்து அக்குழந்தை பந்து கேட்டது.. இவர் கொஞ்சம் வெட்கப்பட்டுக்கொண்டே கொடுக்க , அதை வாங்கி திரும்ப இவனிடமே எறிய , இவனை விளையாட அழைத்தது..

நாங்கள்
ஊக்குவிக்கவும் இவரும் அக்குழந்தைக்கேற்றார்போல சிறிது நேரம் விளையாடினார்..


அப்பதான்
நாம் எத்தனை பாக்கியம் செய்திருக்கோம்னு புரியுது..இதை கூட இப்படி சொல்லிக்கொள்ளலாமான்னு தெரியலை..


அதே
போலொரு குழந்தை கிடைத்திருந்தாலும் நான் மனமுவந்து ஏற்றிருப்பேன் .. அதுவேறு விஷயம்..

( என் பிரசவத்தின்போது இதுபோல ஒரு குழந்தை பிறக்க வாய்ப்பிருக்கிறதென்றும் ( Down syndrome ) என்னிடம் மருத்துவர் சொன்னதும் அதற்கான பரிசோதனை செய்யவே மாட்டேன் என பிடிவாதம் பண்ணியதுமுண்டு. அப்பரிசோதனை கருவில் இருக்கும் குழந்தையை சேதப்படுத்தும் வாய்ப்பு அதிகமாம்.... )


இருப்பினும் அக்குழந்தைகளை கவனிப்பதென்பது நிச்சயமாக சவாலான விஷயம்.. தனி அர்ப்பணிப்பு தேவை..அதிக பொறுமையும்..

அது
நிச்சயமா என்னிடம் இருக்குமான்னு சந்தேகம்தான்..


கிளம்பும்போது
அக்குழந்தையிடம் பந்தை கொடுத்துவிட்டு வணக்கம் சொல்ல சொல்கின்றனர்..
அப்போதும் அவர்கள் முகத்தில் சந்தோஷமான புன்னகை.. நன்றியும்...

குழந்தையின் முகத்திலும் ஒரு உறவினை கண்ட மகிழ்ச்சி.. அக்குழந்தையும் இருகரம் கூப்பி மிக அழகான " ஸ்வாதிகாப் " ( வணக்கம் ) என சிரம் தாழ்த்தி சொன்னது..

மகன்
வரும்போது கேட்கின்றார் " அம்மா என்னாச்சு அந்த குழந்தைக்கு ?."


" அவர்கள் கடவுளின் மிக விசேஷமான செல்லக்குழந்தைகள்.. " என விளக்க ஆரம்பித்தேன்..

ஆக
பூங்கா செல்வதென்பது விளையாட்டு மட்டுமல்ல படிப்பினையும் ஆகிறது குழந்தைகளுக்கு...


இது
போன்ற சம்பவங்கள் நாம் பெற்ற ஆசீர்வாதங்களை எண்ண வைப்பதோடு நாம் இன்னும் செய்யவேண்டிய நல்ல விஷயங்களை
குறித்து நியாபகப்படுத்தி ஒரு குற்ற உணர்ச்சியை தந்திடுகிறதுதான்...



படம் : நன்றி கூகுள்.

Tuesday, August 17, 2010

எங்க வீட்டு குட்டியின் பள்ளி நகைச்சுவை..

























நன்றி : படங்கள் : கூகுள்


இந்த
பிளாக் ஆரம்பித்த போது தாய்லாந்து பெண்ணின் புன்னகை படம் போட்டு தந்தவரும், இப்ப அந்த படத்தை மாற்ற சொல்லி புதுப்படம் தந்தமைக்கும்,

தம்பி கண்ணனுக்கு விசேஷ நன்றி..


---------------------------------------------


சின்னவர் " அம்மா ஏன் எப்பா பார்த்தாலும் ஆக்டிவா இருக்கீங்க.?"

ஆமா உனக்கு பொண்ணு வந்து கல்யாணம் பண்ற வரை இப்படித்தான் "


உடனே அவர் , " அம்மா எனக்கு கேர்ல்ஸ் வேண்டாம் . அவுங்கள ரொம்ப டேக் கேர் பண்ணணும் . பாய்ஸ் தான் மேரி பண்ணிப்பேன்..பாய்ஸ் என்னையும் என் பைக்கையும் டேக் கேர் பண்ணுவாங்க.."

-----------------------------------------------

நேர்று தான் பள்ளி திறந்த முதல் நாள். புது பள்ளி..

" சரி சொல்லு வகுப்பில் எத்தனை பாய்ஸ் , எத்தனை கேர்ல்ஸ் , பேர் என்ன?.."

" நான் பாய்ஸ் பாக்கவேயில்லை... கேர்ல்ஸ் மட்டும்தான் பேசினாங்க.. ஐ திங் நான் ஹீரோ னு.. ( லீவுல தமிழ்ப்படம் பாக்காதே னு சொன்னா கேட்டாதானே?..படம் பக்கும்போதே அடுத்த சீன் சொல்லிடுவார்.. )

--------------------------------------------


கிண்டர்கார்டன் முடிந்து ஒன்றாம் வகுப்பு.. பல பாஷைகள் ஆரம்பிப்பார்கள்..


"அப்புரம் டீச்சர் என்ன சொன்னாங்க?"

டீச்சர் கேட்டாங்க "பஞ்சாபி அந்த பக்கம் போங்க,, ஹிந்தி இந்தப்பக்கம் போங்க , னு"

"சரி நீ எந்த பக்கம் போன?.."

நான் கேட்டேன் , " நான் தமிழ்நாடு எங்க போகணும்னு.?"




சிரிச்சு மாளல...,

அப்பாவியா ஏன் சிரிச்சீங்க ?..னு கேட்கிறார்..

----------------------------------

போன வாரம் காய்ச்சலுக்கு மருத்துவர் கிட்ட போனதும் , மருத்துவர் அவனிடம்

" எங்கெல்லாம் வலிக்குது"

" தலையில கொஞ்சம் சூடா இருக்கு.."

" அப்புரம்"

" தொண்டையில "

" எப்படி "

" இந்த எல்லோ சன் ( SUN) இருக்குல்ல அந்த மாதிரி ஹாட் ஆ இருக்கு.."

சீரியஸா இருந்த மருத்துவர் விவிசி..

------------------------------------------------------------------------



டீச்சர் என்னை குட் பாய் னு சொன்னாங்க.."

" அப்படியா , பரவால்லியே ,. முதல் நாளும் அதுவுமா.? ஆமா ஏன் அப்ப்டி சொன்னங்க?."

" நான் போய் முதல் சேர் உக்காந்தேன்.. அதை ஒரு பெண்ணுக்கு குடுக்க சொல்லிட்டு என்னை இரண்டாவதா உட்கார சொன்னாங்க.

நான் செய்தேன்.. அப்புரம் , முதலில் உட்கார்ந்த பெண்ணுக்கு போரடிச்சுது போல,.. நாந்தான் நாள் முழுக்க பேசி ஃபிரண்ட் ஆனேன்.."

" அவ்வ்வவ்வ்வ்"

----------------------------------------------------

Friday, July 16, 2010

சம்மர் வகுப்பு + சுற்றுலா..- பாகம் 2



















சும்மா விளையாட்டுக்கு ஆரம்பித்த சம்மர் வகுப்புகள் மிக சிறப்பாக நடப்பது எனக்கே ஆச்சர்யம்தான்...

என்னை யாரென்றே தெரியாத , எனக்கு யாரென்று தெரியாதவர்கள் எல்லாம் தொலைபேசியில் அழைத்து எங்கள் குழந்தைகளையும் அனுப்பட்டுமா என்று கேட்டு அனுப்புகின்றனர்..

பணம் எவ்வளவு ? இதுதான் அனைவரின் கேள்வியும்..

இல்லீங்க இலவசம்தான் னு சொன்னா நம்ப மாட்டேங்கிறாங்க... பணம் இல்லாமல் எப்படி அனுப்புவது .?

உங்களுக்கு தொந்தரவா இல்லையா?.. கொஞ்சமாவது
வாங்கிக்கோங்களேன்...

இல்லீங்க
இதனால் நானும் என் குழந்தையும் பயனடைகிறோமே...னு பல
காரணத்தை சொல்லி சமாதானபடுத்த ( ஆமா படுத்த ) வேண்டியுள்ளது..

ஆக ஆரம்பித்து 18 நாட்களானதால் ஒரு பிக்னிக் கூட்டிட்டு போகாட்டி எப்படி.. குழந்தைங்க கோச்சுக்காதா?.. ( முக்கியமா எனக்கு )

அதனால்
இந்த வெள்ளிக்கிழமை பிக்னிக் போகலாம்னு முடிவு செய்தோம்..

குழந்தைகளோடு பொழுதை கழிப்பது மிக சுவாரஸ்யமானது..

" ஆண்ட்டி , இந்த சட்டை நல்லாருக்கா.?"

" ஆண்ட்டி நான் கீழ விழுந்துட்டேன்."


" ஆண்ட்டி நான் கலர் பண்ணிட்டேன்.. சாக்லேட் தாங்க.."

" இந்த ஜூஸ் எனக்கா.?"

" கேக் வாங்கி வெச்சிருக்கீங்களா."


இப்படி
உரிமையான கேள்விகள்..


அதுல
ஒரு குட்டிப்பெண் பட்டுப்பாவாடை போட்டு வந்து அப்படியே கொள்ளை
கொண்டது.. ( ம்ம்.. பெண் குழந்தை இல்லையே என்ற ஏக்கத்தை கிளப்பி விட்டது :) )

முதலில்
9 மணிக்கு ஆரம்பித்த வகுப்புகள் ,


" ஆண்ட்டி 9.30 க்கு ஆரம்பிக்கலாமே."


" இல்ல நான் 10 மணிக்குத்தான் எழும்புவேன் .. பிளீஸ் ஆண்ட்டி.."
அப்படி இப்படீன்னு இப்ப 11 - 1 .30 மணி வரை வருகிறார்கள்..

வந்ததும்
கொஞ்சம் படம் வரைதல் , கலரிங் , கதை புத்தகம் படித்தல்..

அடுத்து ஓரிகேமி - காகிதத்தில் பூக்கள், தொப்பி, கிறுஸ்மஸ் மரம் , ஹேண்ட்பேக் , அன்னம் , என ஏதாவது ஒன்று தினமும் சொல்லித்தரப்படும்..( கூகுளய்யா வாழ்க )

அப்புரம் ஹிந்தி பாட்டு போட்டா ஒரே டான்ஸ் தான்...( இன்னாமா ஆடுறாய்ங்க..????. டேன்ஸ் மாஸ்டர் கிட்ட படிக்கிறாங்களாம். )

இப்ப
டயர்டா ஆனதும் எல்லாரையும் அமர வைத்து கையில் ஆளுக்கொரு
கீரைக்கட்டு.. அல்லது கேரட் துண்டு ...

எதுக்கு
?..


இப்ப
தான் முயலார் ஃபீடிங் டைம்...


அவரை
உள்ளே இருந்து கதவை திறந்து விட்டு மாப்பிள்ளை மாதிரி அழைத்து
வந்தால் ,

ஒரே கூச்சல் ..


முண்டியடித்துக்கொண்டு
நான் நீ என போட்டி போட்டு கீரை , கேரட் கொடுப்பதில்
முயலார் பயந்து ஓட , இவுக பின்னால் துரத்த..

அதனால்
இப்ப யாரும் எழும்ப கூடாது அமர்ந்து இருங்கள்.. முயலார் வந்து வாங்கி
சாப்பிடுவார் னு சொல்லி கண்ட்ரோல் பண்ணுவதற்குள்.......... ஹாஆஆஆ............

அதற்குள்
குழந்தைகளை அழைத்து செல்ல ஆயாக்களும் அம்மாமாரும்
வருவாங்க.. ஆனா போக மாட்டாங்க... பிடிச்சு இழுத்துட்டு போகணும்.. ( நம்ம வேலையும் பாக்கணுமே..)

இன்று வெள்ளிக்கிழமை... பிக்னிக் . அருகிலுள்ள பூங்கா.. போனால் பகல் பொழுது அடைப்பார்களாம்.. உடனே கொஞ்சம் தூரமுள்ள பூங்கா சென்றோம்.. அங்கு விளையாடிவிட்டு வெயிலாக இருந்ததால் அதன் மிக அருகிலுள்ள மரங்கள் அதிகமுள்ள பூங்கா சென்று விளையாடிவிட்டு கொண்டு வந்த உணவுகளை குழந்தைகள் சாப்பிட்டார்கள்..

அருகில்
ஒரு விஷ்ணு மந்திர் இருந்தது அங்கும் சென்றோம்..


எல்லா
குழந்தைகள் போல என் குழந்தையும் அவர்களை பார்த்து கீழே விழுந்து
நமஸ்கரித்தார்..

ஏன்
இவுங்க ஜீஸஸ் வேற மாதிரி இருக்கார்..? - மகன்..


அப்புரம்
உள்ளே ஒரு அடி அளவில் கோவில் மணிகள் சுமார் 6
தொங்கவிட்டிருந்தார்கள்.. அதிலேயும் சாமி சிலைகள்..

அதிலிருந்து
கயறு
தொங்கியது... எல்லா குழந்தைகளும் அந்த மணியை இழுத்துவிட்டு கைகள் குவித்து பிராத்தனை செய்ய மகனாரும் அதையே பின்பற்றினார்...

கோவில்
மிக உயரத்தில்..கீழே மண்டபம்.. ஏதோ பூனூல் விசேஷம் போல நடந்தது...
ஹீரோ/மாப்பிள்ளை ? மொட்டை போட்டு உச்சியில் குடுமி வைத்திருந்தார்.. ஆனா அவருக்கும் அழகு கலை நிபுணர் அலங்காரம் செய்தார்.. ஹால் நடுவில் 4 வாழைமரம் கட்டி, பூ அலங்காரம் செய்து புரோகிதர் ஓதிக்கொண்டிருந்தார்..( இதெல்லாம் எப்படி பார்த்தீங்கன்னு கேட்பீகளே.. ? ஜன்னல் வழியா தெரிந்தது... ) பர்மா காரர்கள் கூட்டமாய் இருந்தார்கள்..

கீழே இந்திய கடை இருந்தது..
ஒருவர் சூடா சமோசா போட்டு தந்தார்.. குலாப்ஜாமூன் இருந்தது.. விரும்பலை குழந்தைகள்..

பின்பு பிக்னிக் முடிந்து திரும்பியதும் அரட்டையோடு தாங்கள் எடுத்த மலர்களை ( புல்லில் விழுந்தது) வீட்டுக்கு கொண்டு செல்வதை பற்றி மகிழ்ச்சியா பேசிக்கொண்டே வந்தனர்...


இப்படியாக என் பொழுதுகள் மிக இனிமையாக உபயோகமாக சென்றதோடு என் குழந்தைகால நியாபகத்தையும் மீட்டியது......

நான் சிறு குழந்தையாக இருந்தபோது பெரிய விடுமுறைக்கு பாட்டி வீடு செல்வதென்றால் அத்தனை இஷ்டம்... பெரிய காம்பவுண்ட் வீடு.. உள்ளே சுமார் 12 குடித்தனங்கள் வாடகைக்கு இருந்தார்கள்..

அதன்
பின்புறம் பெரிய
மாட்டுத்தொழுவம்..மாட்டு வண்டிகள்... கூடவே கோழிகளும் , நாய்களும்...புளியமரம் , அதில் ஊஞ்சல்... அருகில் தாமிரபரணி ஆறு..நினைத்த போது குளியல்.. கணக்கில்லாமல்...

வாடகைக்கு குடியிருப்பவர் வீடுகளில்தான் முழு நேரமும் விளையாட்டு.. கேரம்போர்ட் , தாயம் , சோளி , சீட்டுகட்டு , கோலிக்குண்டு ,குச்சிகம்பு , என வகை வகையாக.. பின்னர் இரவானதும், முற்றத்தில் அனைத்து வீட்டு குழந்தைகளும் நிலாச்சோறு...அதன்பின் அங்குள்ள அக்காக்கள் கதை சொல்ல அங்கேயே தூங்கிடுவோம்... அத்தைகள் வந்து எழுப்பும் வரை..

அவர்களெல்லோரும் இப்ப எங்கெங்கு இருக்காங்களோ தெரியாது.. ஆனால் அந்த நினைவுகள் மிக சுகமானவை... இப்படி பணம் ஏதும் செய்யாமலே வருடா வருடம் 2 மாதங்கள் பணிவிட செய்துள்ளதை நினைக்கும்போது , அவர்களுக்கு மனதில் மட்டுமே நன்றியை செலுத்த முடிகிறது..

வாழ்வில்
சில வருடங்கள் உழைக்க , சம்பாதிக்க , நம் கடமைகள் செய்ய என
சென்றாலும் எப்போதாவது சில நாட்கள் /வேளைகள் தான் நிஜமாக வாழ்வதைப்போல ஒரு எண்ணம் ஏற்படும்.. அதைப்போல " நானும் வாழ்ந்தேன் ".

குழந்தைப்பருவம் மட்டுமே சுமைகள் இல்லாதவை...

இக்குழந்தைகளும் சில இனிய
நினைவுகளை சேமிக்கட்டும்...

( புலம்பல் வகை.. பின்னூட்டத்துக்கு நேரம் செலவிட வேண்டாமே...:) )

Friday, July 2, 2010

சம்மர் ஸ்கூல் என்ற பகல் கொள்ளையும் திடீர் சம்மர் வகுப்பும்..







குழந்தைகளுக்கு
இரு மாதம் விடுமுறை விட்டாச்சு.. அனேகம்பேர் ஊருக்கு செல்லும்
நேரம்.. சிலர் போவதில்லை.. கணவர்மார் உணவுக்கு கஷ்டப்படனுமேன்னு..!!!

இதை
சாக்காக வைத்து எல்லா பள்ளிகளும் இப்ப சம்மர் ஸ்கூல் என ஒரு பகல்
கொள்ளை திட்டத்தை ஆரம்பித்துள்ளன...

15 நாளுக்கு 15, 000... அதுவும் எத்தனை மணி நேரம்?. 9-12 , - 3 மணி நேரத்துக்கு..

அப்படி
என்னதான் சொல்லிக்கொடுப்பாங்க னு பார்த்தா கலரிங், கொஞ்சம் பேப்பர்
கட்டிங் , விளையாட்டு ஏற்கனவே நடத்திய பாடங்களை ரிவிஷன்..

சரி வீட்டுல தொல்லை பண்ணாமல் எங்கேயாவது ஒரு 3 மணி நேரம் போய்விட்டு வரட்டும் என அனுப்பலாம்தான்..

ஆனா
பாவம் குழந்தைகள் லீவிலும் அதே 6 மணிக்கு எழுந்து அவசர அவசரமா பல்
தேய்த்து , குளித்து , அறைகுறையா சாப்பிட்டு ( அதுக்கும் திட்டு வாங்கி ) தூக்கத்தோடே வேனில் ஏறி டிராபிக்கில் சிக்கி 1 மணி நேர பிரயாணத்துக்கு பின் பள்ளி அடையணும்..

அதுவும்
ஒரே வகுப்பு தோழ, தோழியர் என்றால் பரவாயில்லை.. எல்லா
வயதினருகும் ஒரே வகுப்பு.. ஏனெனில் ஒரு வகுப்புக்கு 4, 5 குழந்தைகளே சேருவதுண்டு..

இந்த
முறை பணம் கட்ட சென்ற போது எங்க இடத்துக்கு வேன் வராது .. ஏன்னா
உங்க பையன் மட்டுமே வருவதால் எனவும் , நானே கூட்டி வந்து விடணும் எனவும் சொல்ல நான் பரவாயில்லை வேண்டாம் என முடிவு செய்தேன்..

சரி இப்ப என்ன செய்ய பையனுக்கு பொழுது உபயோகமாக கழியணும்.. ஏன் நாமே சம்மர் ஸ்கூல் ஆரம்பிக்க கூடாது.?

எங்க
வீடே ஒரு பிளே ஸ்கூல் மாதிரிதான் வைத்துள்ளேன்.. சருக்கு , ஊஞ்சல் ,
டேபிள் டென்னிஸ் , கார் , ஸ்கூட்டி, சைக்கிள் , என இப்படி.. மேலும் இப்ப முயல்குட்டி வேற இருக்கு விளையாட..

படிப்புக்கு தேவையான புத்தகங்களும் கலர் பென்சில் , கிரயான்ஸ், பெயிண்ட் , பிளே டோவ் ( களிமண் போல ) , காகிதங்களும் ரெடி செய்தேன்.. குழந்தைகளுக்கு தேவையான வரையும் நோட்களும்..வாங்கி வைத்தேன்.

பின் எங்க குழுமத்தில் அறிவித்தேன் .. " சம்மர் பள்ளி இலவசம் " என

உடனே அழைப்புகள் வர தொடங்கின..

ஜூலை
1ம் தேதியிலிருந்து ஆரம்பிக்கலாம் என நினைத்தேன் ஆனால் போட்ட
அன்றே ஆள் வந்தாச்சு.. ஜூன் 29ம்தேதியிலிருந்து ஆர்வமாய் குழந்தைகள் வந்து இப்ப வீடு பள்ளியாகிவிட்டது..

குழந்தைக்கு
தேவையான ஆர்ட் ஒர்க் எல்லாம் இண்டெர்நெட்டில் அப்ப அப்ப பார்த்து
சொல்லி கொடுக்கலாம்.. லட்சக்கணக்கில் இருக்கு ஐடியாக்கள்..

வகுப்பு 10 மணிக்கு ஆரம்பிப்பதால் குழந்தைகள் நன்றாக தூங்கி மெதுவா எழுந்து குளித்து நிதானமா உணவருந்தி மகிழ்ச்சியோடு வருகிறார்கள் ..

மதிய உணவுக்கு 1-2 மணிக்கு அன்னையர் அழைக்கும்போது போக மாட்டேன் னு பிடிவாதமாய் சொல்கிறார்கள்.. ஒரு குழந்தை சாயங்காலம் வரையிலும் என் வீட்டிலேயே விளையாடுது..:), முயல் குட்டியை கவனிப்பதே அவர்கள் வேலை..

நேரம்
கிடைத்தால் கொஞ்சம் நடனமும் சொல்லிக்கொடுப்பேன்.. ( ச,.....ரி ச...ரி
பயம் வேண்டாம் )

இலவசம்
என்றாலும், ஒரு குஜராத்தி பெண்மணி , நான் ஏதாச்சும் உதவட்டுமா,
ஏதாவது வாங்கி தரட்டுமா என அன்போடு கேட்கிறார்..நான் அன்போடு மறுக்கவேண்டியுள்ளது...

நான் ஏற்கனவே குழந்தைகளுக்காக இப்படி இலவசமா பல முறை நிகழ்ச்சிகள் ( புதுவருட நிகழ்ச்சி, மாறுவேடப்போட்டி, அம்மாக்களுக்கு போட்டி , விளையாட்டு என ) நடத்தியதால் , பூங்கா , சுற்றுலா என அழைத்து சென்றுள்ளதால் எனக்கு இது கஷ்டமேயில்லை..


குழந்தைகளோடு அவர்கள் உலகத்தில் சஞ்சரிப்பது பிடித்தமான
விஷயம்.. நம்மை அவர்களுக்கு பிடித்துவிட்டால் நாம் சொல்வதையெல்லாம் கேட்பார்கள்.. ( என்ன, அப்பப்ப கொஞ்சம் சாக்லேட் , ஜூஸ் தந்தா போதும்..)

இடையில் சிறிது நேரம் கீழிருக்கும் பூங்கா சென்று உதிர்ந்த மலர்கள் , இலைகள் குச்சிகளை எடுத்து வர செய்து ஒட்ட சொல்வேன்.. இப்படி சின்ன சின்ன வேலைகள் பழக்கலாம்..

அப்புரம்
ஓடி ஆடி விளையாட்டு.. ஓய்ந்ததும் கொஞ்ச நேரம் கார்டூன் படம் டிவிடி
யில்..

வாரம்
ஒருமுறை நானே காரில் அவர்களை அழைத்துக்கொண்டு ஒரு சின்ன
சுற்றுலா செல்லவும் என்ணியிருக்கேன்.. அவர்கள் அன்னையரோடு..

இப்படி
திடீர் சட்னி, திடீர் குழம்பு போல " திடீர் சம்மர் வகுப்பு " தயார்..

தேவைதான் கண்டுபிடிப்புகளின் தாய் என சும்மாவா சொன்னாங்க..?

இதுபோல குழந்தைகளுக்கு மட்டுமல்ல நம் வீட்டில் வயோதிகர்கள் இருந்தால் அருகிலுள்ள வயோதிகர்களாய் அழைத்து இப்படி வாரம் ஒரு முறை ஒவ்வொருவர் வீட்டிலும் பொழுதுபோக்கிட செய்யலாம்.. நாம் அவர்களுக்கு முக்கியத்துவம் தருகிறோம் என்பதே அவர்களுக்கு மகிழ்ச்சியை அதிகரிக்கக்கூடும்..

நாம் முன்னின்று சுயநலம் கருதாது ஒரு காரியத்தை ஏற்பாடு செய்தோமானால் அதுக்கு கைகொடுக்க பலர் தயாராகவே இருக்கிறார்கள்..

புரிந்துகொண்டு
பலனடைவோம் நாமும்...

( சுயபுலம்பல் , தற்பெருமை வகையிது.. வழக்கம்போல் பின்னூட்டம் தவிர்க்கவும்.)

Saturday, May 15, 2010

பள்ளிக்கு போமாட்டேன்..












பள்ளிக்கு
போமாட்டேன்..

" அம்மா, குஷி இன்னிக்கு வாட்டர் பாட்டிலை எடுத்து வெச்சிட்டா."

" நீங்கல்லாம் டேர்டி ( அசைவம் ) சாப்பிடுறீங்கன்னு சொல்றா குஷி.. "

" என் கலர் பென்சிலை எடுத்து லெட் ஒடிச்சிட்டு குடுக்குறா.."

" என்னைய குண்டு பச்சா ன்னு சொல்லிட்டா.."

இப்படி தினமும் புலம்பல்.. நாளையிலிருந்து பள்ளிக்கு செல்லமாட்டேன் னு அழுகையும்..

இதற்கு காரணமான குஷி குஷ்பு மாதிரி ஒரு அழகிய ராட்சச குட்டி சுட்டிப்பெண்..எங்கள் அடுக்ககத்திலேயே குடியிருந்தாலும், இப்பதான் இருவரும் ஒரே பள்ளிக்கு ஒரு மாதமாய் செல்கிறார்கள்..(இவனை வேறு பெரிய பள்ளியில் சேர்க்க இப்பள்ளி சிறப்பு பயிற்சிக்கு மட்டும்..)

குஷியின் சேட்டை தாங்காமல் வேன் டிரைவர் அவளை தனியா வைத்தாலும் அங்கிருந்தே ஏதாவது பேசி அழ வைக்கிறாளாம் எல்லா குழந்தைகளையும்..

இவனை விட ஒரு வகுப்பு மூத்தவள்..

இரட்டை குதிரை வாலோடு துறுதுறுவென அங்குமிங்கும் ஓடிக்கொண்டே இருப்பாள்..

அவளை பார்த்து கொஞ்சம் அனுசரித்து போக சொல்லலாம்னு கீழே போனால் ,

" ஹாய் " னு நமக்கே வணக்கம் சொல்கிறாள்.. மனசு வருமா?.. அதுவும் பெண்குழந்தையை பார்த்து..?. கொஞ்சணும்னுதான் தோணுது..:)

நானும் , " ஹாய் குஷி.. எப்படி இருக்கே..? " னு ஒரு பேச்சுக்கு கேட்டதும் , சின்னவருக்கு கோபமாய் வருது..

" அம்மா யு ஆர் சோ பேட்... நீங்க குஷிக்கு சப்போர்ட் பண்றீங்க.?".

" இல்ல கண்ணே. கொஞ்சம் பொறு.. மெதுவா பேசணும் அவகிட்ட...குழந்தைதானே.."

எப்படியோ சொல்லியாச்சு..

ஆனா அம்மா மேல் நம்பிக்கை போச்சு..:(

படித்துக்கொண்டிருந்த அண்ணா கிட்ட போய் , " அண்ணா மா , ( தேவைக்கு மட்டும் அண்ணா மா னு ஐஸ்.... ) இந்த குஷி ரொம்ப டிஸ்டர்ப் பண்றா.."

" ஒஹ். அப்படியா.. டோண்ட் ஒர்ரி.. அவளை புடிச்சு ரேபிட் கூண்டுக்குள்ள போட்ரலாம்.."

" ஹாஹாஹாஹாஹாஹாஹாஹா.." னு ஒரே சிரிப்பு..

அவளை பிடிப்பதாகவும் பிடித்து அடைப்பதாகவும் கற்பனை பண்ணி பண்ணி ஒரே சிரிப்பு அடக்க மாட்டாமல்..

" ஏண்டா இப்படிலாம் சொல்ற ?. " னு நான் கண்டிச்சா , விடுங்கம்மா ஒரு டெம்பரரி சொல்யூஷன்.. இப்ப பாருங்க நிம்மதியா பள்ளி செல்வான்..

" ஆமா , அவளை எப்படிண்ணா தூக்கிட்டு வருவது?.."

" ( மனதுள் - ஆரம்பிச்சுட்டான்யா ) . அத நான் பாத்துக்குறேன்.. நீ சமத்தா தூங்கு..."

இப்படியே தினம் தினம் குஷியால் குஷி இழந்து போனார்..

இன்று பள்ளி விழாவுக்காக நடன பிராக்டிஸ் செய்ய அழைத்தார்கள்.. பாங்காக்கில் பிரச்னை என்பதால் பள்ளி வேன் வரவில்லை.. சரி என நானே அழைத்துக்கொண்டு சென்றேன்..

எல்லா குழந்தையும் ஒழுங்கா ஆடியது 3 இடியட்ஸ் பாட்டுக்கு..இவனை தவிர.. ( நான் இருப்பதால் வெட்கமாம்.. நொண்டி குதிரைக்கு சறுக்கியது சாக்கு ).

ஆமா அது யாரு சின்னவர் பக்கத்தில் ரொம்ப மகிழ்ச்சியா ஆடுவது...?

அட, அதே குஷிதான்...

ஹாஹா..

இவருக்கு அவள்தான் பார்ட்னர்.. அதான் ஐயா இம்புட்டு வெட்கப்பட்டாரா..?

இவன் அவள் கையை பிடிக்க மாட்டேன் னு சொல்ல அவளோ அவன் கையை வலுக்கட்டாயமாக பிடித்து இழுக்க எனக்கு ஒரே சிரிப்பு.. ஆனா சிரிக்க முடியாதே.. இன்னிக்கு பூரா கோபப்படுவாரே ன்னு அடக்குவதற்குள்.. :)))

" அம்மா பள்ளியை மாத்த போறீங்களா இல்லையா?.. "

" அடுத்த 2 மாதம் கழித்து வேறு பெரிய பள்ளிக்கு போறார்.. சரி அதை காண்பித்திடுவோம்னு சொல்லி அங்கு அழைத்து செல்ல வேண்டியதாயிற்று..

பெரியவர் கதை வேற மாதிரி .. அது அடுத்த பதிவில்...

--------------------------------------------------------------

இதற்கு பின்னூட்டம் போட நேரம் செலவழிக்காமல் அந்நேரத்துக்கு வேறு உபயோகமான பதிவை படிங்கப்பூ..