Wednesday, February 27, 2008

பாகம் - 15- நீ என் தோழியா இல்லை காதலியா?..

ஆஸ்திரேலியா பயணத்துக்குண்டான அனைத்து ஏற்பாடுகளுடன் 5 பேர் குழுமமாக ஏர்போர்ட்டில்.. மது பேண்ட் சட்டையில்.. முதல்முதலாக அவளை இந்த உடையில் பார்த்து, ரசிக்க, தன்னையே கட்டுப்படுத்துகிறார்..

அழகுக்காகவா விரும்புகிறேன்? இருந்தாலும் இடத்திற்கேற்ப ஆடை உடுத்தும் அழகு.. ரசிக்கிறார்தான் .

கடைசிவரை ரகுவுக்கு சொல்லிவிட்டு சொல்லலாம் என்றால் அவன் தொலைபேசியில் பதிலில்லை..

அன்று வேந்தனுடன் இந்த நிலைமையிலும் சிரித்து பேசியதை கூட தப்பாக எடுத்திருப்பானோ.. ??. பேசவே மாட்டேங்கிறார்..

கலக்கத்துடன் மது... அவள் கலக்கம் அறிந்து மிகவும் அனுசரணையாக வேந்தன், ஏர்போர்ட்டில் எல்லா வேலைகளையும் அவரே செய்கிறார், அவளை அமரச்செய்துவிட்டு...

-------------------------------------------------------------------------------------

ஆஸ்திரேலியாவில் பொருட்காட்சியில் இவர்கள் கம்பெனிக்கு ஒதுக்கப்பட்ட இடம் கிடைக்க ஒருவாரம் தள்ளிப்போடப்படுகிறது...

எல்லோரிடமும் போனிலேயே பேசி சரிசெய்கிறாள் மது..
அவள் வேகமும்,விடா முயற்சியும் கண்டு அதிசயிக்கிறார்...

ஒரு வாரம் இருப்பதால் ஊர் சுற்றிப்பார்க்கக்கட்டாயப்படுத்தி அவளையும் கூட்டிச்செல்கிறார்...அவளை சந்தோஷப்படுத்துவதிலேயே வேந்தன் குறியாயிருக்கிறார்..,,

ஆனாலும் அந்த சோகமான முகம் வேந்தனை வருத்துகின்றது....அவளைவிட்டு இனி ஒருநாள் கூட பிரிவது என்பது முடியாத காரியமாகிவிடுகின்றது வேந்தனுக்கு...

எல்லாம் நல்லபடியாக வெற்றிகரமாக முடிந்து ஏர்போர்ட்டில் விமானத்துக்காக காத்திருக்கையில் மது மெதுவாக அவரின் திருமணப்பேச்சை ஆரம்பிக்கின்றாள்.

" சரி மறுமணம் பற்றி என்ன முடிவு.. அய்யாவிடம் நான் என்ன சொல்லட்டும்..?"

" ம்.. ஹி... ஹி.." சிரிப்பை மட்டுமே பதிலாக ..

" சொல்லுங்கள். வேந்தன், என்ன உங்கள் பதில் " ஆம். " தானே..?"

" அப்படியே வைத்துக்கொள்ளுங்கள்..."

" உண்மையாகவா...???" மிகுந்த சந்தோஷத்துடன் மது துள்ளிக்குதிக்காத குறைதான்..

-----------------------------------------------------------

புகை படங்களை பார்க்கிறார்..கோவமாய் வருகிறது ..

" மது , என்ன இது..போட்டோக்கள்.."

" மன்னிக்கவும்..சொல்ல மறந்துட்டேன் வேந்தன்.. நான் பார்த்துள்ள பெண்ணின் படங்கள்.."

" நான்.. உங்ககிட்ட.. சரி சாயங்காலம் அலுவலகம் முடிந்ததும் வாருங்கள்.. பேசணும்..."கோபமாக வைத்தான் போனை..

மதுவோ சந்தோஷமாக அவன் அறைக்குள் நுழைய,புன்னகைகூட புரியாமல், வேந்தன் குழப்பத்தில்., எப்படி ஆரம்பிக்க என்று தெரியாமல்.

" கொஞ்சம் , உணவருந்துங்கள் மது ,அதிக நேரமாகலாம், பின்பு பேசலாம்.." ஏதோ குழப்பம் போல என்று மரியாதைக்காக சாப்பிடுகிறாள்..

அங்கும் இங்கும் நடக்கிறான் ..கொஞ்சநாள் தள்ளிப்போடலாம் என்றால் நீ அவசரப்படுகிறாயே..வேறு வழியில்லை.. சொல்லியாகணும் உன் பெண்பார்க்கும் வேகத்தைத் தடுக்க.

" மது , யாரை கேட்டுட்டு எனக்கு, பெண் பார்க்கிறாய்..?"

" ஏன் , உங்களுக்கு சம்மதம்தானே, மறுமணத்துக்கு..?"

" ஆமாம்.. ஆனா நான் ஏற்கனவே பெண் பார்த்தாச்சு.. அவள்தான் சம்மதிக்கணும்...அவளுக்கே தெரியாது."

" ஓ. என் வேலை சுலபம் இப்போது.. சொல்லுங்கள் யாரென்று, அவர்களை சம்மதிக்க வைப்பது என் பொறுப்பு.." சந்தோஷமாக..

அய்யோ, உனக்கு எப்படி நான் புரியவைப்பேன்.. நீ எப்படி எடுத்துக்கொள்வாயோ என்று நினைத்தாலே பயமாயிருக்கு..

"சொல்லுங்கள் , சீக்கிரம்..." நிதானமாக காபியை அருந்திக்கொண்டே மது..வேந்தன் ஜன்னல் புறமாக திரும்பிக்கொண்டு, அவளை, பார்க்க தைரியமற்று,

" மது, நான் சொல்லப்போற விஷயத்துக்கு நீ அதிர்ச்சி அடையவேண்டாம்.. அவசரமுமில்லை, கட்டாயமுமில்லை.. ஆனால் தயவுசெய்து கோபப்படாமல் நிதானமாக என்னை பேச மட்டும் விடு.."

காபி கிண்ணத்தை கையிலெடுத்து, நெற்றியை சுருக்கி ஒன்றுமே புரியாதவளாய், எழுந்து நிற்கிறாள்..கூர்மையாக அவன் சொல்வதை கேட்கும் ஆவலுடன்..

" சொல்லுங்கள், வேந்தன்...நிதானமாகவே இருக்கிறேன்..", வேந்தனோ ,ஜன்னல் திரைச்சீலைகளை விலக்கிக்கொண்டு,

"...ம்...ம்ம்.."..கைகளால் நெற்றியை அழுத்தி தேய்க்கிறான்...

" சொல்லுங்கள் , சீக்கிரம்.."சட்டென்று திரும்பி, அவள் கண்களைப்பார்த்து,

" நீதான் என் மனதில் இருக்கும் அந்த மகாராணி , மது...

"கையிலிருந்த கோப்பை நழுவி கீழேவிழுவதுகூட தெரியாதவளாய், அதிர்ச்சியும், கோபமும், வெறுப்புமாய், வேந்தனை நேருக்கு நேர் பார்க்க,

" நான் உன்னை கட்டாயப்படுத்தல , மது.. ஆனா மறுமணம் நடந்தா அது உன்கூடமட்டும்தான்.. இல்லாட்டி நான் இப்படியே இருந்துகொள்கிறேன்..எனக்கு பெண் பார்க்காதே..உன்னை நான் விரும்ப மட்டும் அனுமதிகொடு..உன் நிலைமை அனைத்தும் எனக்கு, அப்பாவுக்கு எல்லோருக்கும் நன்றாகத் தெரியும்..நம்ம கம்பெனிக்காக நீ செய்துள்ள தியாகம் மிகப்பெரிது..உனக்கு சேவை செய்ய, எங்களுக்கும் ஒரு சந்தர்ப்பம் கொடு...ஆனால் உன் விவாகரத்து ஆன பின்னே..மட்டும்தான்.."

" வேந்தன், என் நிலைமை ,புரியாமல் பேசுகின்றீர்கள்.. நான் திருமண வாழ்க்கைக்கே லாயக்கில்லாமல் தான் இந்த முடிவுக்கு வந்துள்ளேன்.."

" எனக்கும் . அதேதான் மது.. தாம்பத்யம் தான் முக்கியம் என்றால் பத்து வருடம் வீணாக்கியிருக்கமாட்டேன்..தாம்பத்யம் எனக்கு தேவையில்லை மது..எனக்கு ஆயுசுக்கும் ஒரு நல்ல தோழியாக என்னுடனே இருக்கணும் .நீ!. அவ்வளவே..நீ என் கம்பெனிக்கு சேவை செய்.. நான் உனக்கு சேவை செய்ய எனக்கு அனுமதி தா...உடனே அல்ல.. நான் காத்திருக்கிறேன்..நாம் இருவரும் இணைந்து இந்த வேலையை தொடர்வோம்.."

" அப்படி நான் சம்மதிக்கலை என்றால்..?" அழுத்தமாக...

"நான் கட்டாயப்படுத்தமாட்டேன், நான் மறுபடியும் அமெரிக்கா திரும்பிச்செல்வேன் ஆயுசுக்கும்.." புன்னகைக்கிறான்..

" என்ன , மிரட்டுறீங்களா?."


" நோ. நோ.. அது உன் விருப்பம்...என்னால் மனதில் ஆசை வளர்த்துகிட்டு, போலியா உன்னிடம் பழகமுடியாது, மது..நீ தனிமையில் கஷ்டப்படுவதை பார்க்கவும் முடியாது."

"அதுக்காக சொந்தத்தை , அப்பாவை , கம்பெனியை விட்டு செல்லும் அளவிற்கு, முடிவெடுப்பீர்களா?..உங்கள் மேலுள்ள மரியாதை குறைகிறது வேந்தன்.."

" பாத்தியா, மது, என்னைவிட என் அப்பாமேல் , கம்பெனிமேல் உனக்குதான் எவ்வளவு அக்கறை..இதுக்குத்தான் எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சுருக்கு.."

"பேச்சை மாத்தவேண்டாம்.. என் முடிவில் மாற்றமில்லை.. வயதான காலத்தில் பெரியவர்களுக்கு வேதனை தராதீங்க...நான் கிளம்புறேன்.."

"எல்லோருக்கும் சம்மதமே.. ஏன் உன் மாமியார், பிள்ளைகள், டாக்டர், சுந்தர், நிஷா, சீதாம்மா, எல்லோரும் வந்து இது குறித்து ஏற்கனவே பேசியாச்சு மது.. உன்னிடம் பேச தான் தயக்கம் ..."

"ஓ. எனக்கு தெரியாமல் இவ்வளவு நடந்துள்ளதா..சரி நான் உடனே போகணும்...இனி பேச விருப்பமில்லை.."

" சரி நான்தான் உன்னைக்கொண்டுவந்து விடணும்.. ஓட்டுனரை அனுப்பிவிட்டேன்"

இருவரும் காரில் ஒன்றுமே பேசவில்லை.. மெளனத்தை போக்க பாட்டு போடுகிறான்...

" லேசா லேசா, நீயில்லாமல் வாழ்வது லேசா " என்ற பாடல்.. மாத்துகிறான்

" ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுத்துகின்றதே.." மாத்துகிறான்..சிரிப்பாக வருகின்றது அவனுக்கு.. நேரம் காலம் தெரியாமல்.. ஒரே காதல் பாட்டு.. அவள் கோபத்தை அதிகரிக்கவேண்டாம் என்று சிரித்துக்கொண்டே குசும்பாக அணைக்கிறார் வேந்தன்..

வீட்டில் இறக்கி விடும்போது ஒரு பார்சல் தருகிறான்.. வீட்டிற்கு சென்று திறந்து பார்க்கும்படி...நல்லவேளை ரகு வெளியூர் சென்றுள்ளான்.

குளித்து, சாப்பிட்டு, அம்மாவிடம் பேசிவிட்டு மாடியில் சென்று பார்சலை பிரித்துபார்த்தால், ஆஸ்திரேலியாவில், ஒவ்வொரு பொழுதும் அவன் எழுதியகவிதைத்தொகுப்பும் போட்டோக்களும் மதுவையும் இயற்கையும் பற்றியே..எப்ப எழுதினார், எப்ப எடுத்தார்...

பெருமூச்சுடன் வாசிக்க ஆரம்பித்தாள்..யாருக்கோ எழுதியதாக நினைத்து எழுத்தை, திறமையை, ரசித்தாள்..

No comments: