Wednesday, September 22, 2010

இருமனம் இணைவதும் பின் பிரிவதும் ஏன் - பாகம் 3


































இந்த தொடரில் அடுத்த இரண்டாவது குணமான " அதிகாரத்தை கையிலெடுத்து ஆட்டிவிப்பது " குறித்து பார்ப்போம்...


2. அதிகாரம் /ஆளுமை..- நீயா ?.. நானா.?..

எனக்கான மதிப்பும் மரியாதையும் நான் அதிகாரம் செய்தால் மட்டுமே கிடைக்கின்றது என்ற ஒரு தவறான புரிதல்..


அன்பாலேயே
ஆளுமை செய்ய முடியும்.. ஆனால் அதற்கு மிக அன்பும் பொறுமையும் தேவையாயிற்றே.. என்னால் பொறுமையால்லாம் இருக்க முடியாது..

நான் சொல்வதை உடனே இவர்கள் கேட்டாகணும்..அதற்கு ஒரே வழி அதிகாரம் செய்வது
ஆளுமையை கையில் எடுத்துக்கொள்வது.

பள்ளி என்றால் ஒரு குழந்தையின் வித்யாசமான போக்கை வைத்தே கவனிக்கலாம்..பிடிவாதம் , ஆசிரியையிடமே எதிர்த்து/மறுத்து பேசுதல் , கத்துதல் , போன்றவை.


துணை விஷயத்தில் அல்லது அலுவலகம் என்றால் , ஒரு முக்கிய விஷயம் குறித்து பேசுமுன்னரே அது தமக்கு பிடிக்கவில்லை என்றோ, தேவையில்லை என்றோ நடக்காது என்றோ எதிர்மறையாக மட்டுமே பேசுவது...

பேசுபவர் நியாயமான கருத்தை சொன்னாலும் கூட அதை மறுப்பதிலே ஒரு ஆனந்தம்..ஒரு வெற்றி..
சில நேரம் அதுவும் வேலைக்காகாவிட்டால் மிரட்டும் தோரணை ஆரம்பமாகும்..

ஏதாவது வைத்து மிரட்டல் விடுவார்கள்.. " அடிப்பேன் " ." கவைனிச்சுக்கிறேன் " போன்ற வார்த்தையோடு..அது தனக்கே ஆபத்தாக முடியும் என புரியாமல்... தன் ஆளுமையை நிரூபிக்க மட்டுமே வீண் நேர விரயம் செய்வார்கள்..

இவர்களின் தொடர் மிரட்டலால் அலுத்து போன அலுவலர்களோ துணையோ, சலிப்புடன் விலகிக்கொள்வார்கள்..
இதனால் இறுதியில் அதிக சந்தேகமும், அதிக பொறாமையும் அதனால் அதிக கோபமும் மட்டுமே விளையும்...


ஆரம்பத்தில் தன்னோடு கூட இருந்து தமக்கு ஆதரவளித்தவர்கள் தன் வீரத்தை மெச்சியவர்கள், விலக விலக , இன்னும் அதிக ஆளுமை காட்ட கூட இருந்தவர்களையே மிரட்ட ஆரம்பிப்பார்கள்..

கிட்டத்தட்ட ஒரு மனநோய் அளவுக்கு அவர்களின்
ஆளுமை பாதிக்கப்பட்டிருக்கும்..

வரம்பு மீறிய , முறைகேடான , கெட்டவார்த்தை பேச்சின் மூலமாவது அல்லது வதந்தி கிசுகிசு மூலம் கவன ஈர்ப்பு செய்து பின்பு அந்த
ஆளுமையை தக்க வைக்க போராடுவார்கள்...

அவர்களின் சுற்றமும் அப்படியே அமைவது ஆச்சர்யமல்ல..


ஆக அமைதியாக இதை எதிர்கொள்ளும் துணையோ அலுவலரோ , எத்தனை அமைதியானவரானாலும் , பண்புள்ளவரானாலும் ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல் இவரது செயல்களை வெளிக்கொணருவார்..


தண்டனை வழங்கினால் மட்டுமே திருத்த முடியும் என ஆசிரியர்/பெற்றோர் கூட தண்டிப்பதுமுண்டு தாங்க முடியாமல்..


ஆக தாங்க முடியாத
ஆளுமை அதிகாரம் எத்தனை பொறுமைசாலியையும் கோபம் கொள்ள செய்யும்...எத்தனை தான் விலகி நின்றாலும்..

அப்படி ஒரு நடவடிக்கை எடுத்தாலும் ஆசிரியர் பெற்றோர் மேலுள்ள நியாயத்தை புரிந்துகொள்ளாமல் , " இந்த முறை அடங்கி போகிறேன்.. ஆனால் மீண்டும் என்
ஆளுமையை நான் காண்பித்தே தீருவேன் " என தன்னையே புரிந்துகொள்ளாமல் தன்னையே அழித்துக்கொள்ளும் அளவுக்கு சென்றுவிடுவதுண்டு..

மற்றொரு வகையினர் உண்டு.. இவர்கள் மென்மையானவர்கள் தான்.. நியாயமானவர்களும்.. பள்ளியிலோ அலுவலகத்திலோ , வீட்டிலோ மிக பொறுமையாக , தாழ்ச்சியோடு அனுசரித்தே போகிறவர்கள்..

இவர்கள் தொடர்ந்து சிலரால் எரிச்சலூட்டப்படும்பொழுது , மட்டுமே தன் ஆளுமையை காண்பிப்பர்.. அதில் வெற்றியும் பெறுவர்..

" என்னடா இவரை ரொம்ப பண்பானவர், அமைதி னு எண்ணினோமே, இப்படி வெகுண்டெழுந்தாரே " னு ஆச்சர்யப்பட வைக்கும் அவரது செயல்கள்..


இது நேர்மறையான
ஆளுமை அல்லது அதிகாரம்.. முற்றிலும் ஏற்ககூடியதே.. உதாரணமாய் , எப்பவுமே தன் அம்மா வீட்டுக்கு போக பிரியப்படாத துணை ஒரு முக்கிய விஷயத்துக்காக போகணும் னு சொன்ன போது ஏதாகிலும் முட்டுகட்டை போட்டால் , மிக நிதானமாய் கிளம்பி ஊருக்கு பயணிப்பார்..தன் ஆளுமையை காண்பித்து..

எப்போதும் மனைவி பேச்சை கேட்கும் துணை, திடீரென மனைவி பேச்சை மீறி தன் நண்பரையோ , அல்லது பிடித்த பொழுதுபோக்கவோ செல்வது..


சமத்தா எது கொடுத்தாலும் சாப்பிடும் குழந்தை பிடிவாதமாக ஒருநாள் சாப்பிட மறுப்பது...


இது போன்ற நேரத்தில் கொஞ்சம் விட்டு பிடித்தே ஆகணும் புரிந்துகொண்டு...
அதுமட்டுமல்ல ஒருவரின் குணத்தை , போக்கினை முழுதுமாக மற்றொருவர் மாற்ற முடியாது என்பதையும் இதனால் புரிந்துகொண்டோமானால் , சகிப்புத்தனமையும் அனுசரிப்பும் வந்துவிடும்..

அதைவிட்டு ஒரளவு நியாயமாக யாருக்கும் தொந்தரவில்லாதவர்களை திருத்துகிறேன் என்ற நோக்கில் நாமும் அதிகாரத்தை கையிலெடுத்தால் அது விபரீதமாக முடியக்கூடும்...


ஆக
ஆளுமையில் நல்லதும் உண்டு கெட்டதும் உண்டு... ஆனால் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும்போதே பாதிப்புகள் அதிகம்...

இதில் சக்தி தேவையற்று வீணடிக்கப்படுகிறது..

இதுபோல் பல்வேறு நாட்டில் பல்வேறு அடிமைத்தனம் மூலம் பார்த்திருப்போம்..

பொதுவா தமிழ்நாட்டில் பெண்ணடிமை, கீழ் சாதி , பணக்காரன் ஏழை இத்யாதி...என்ற வித்யாசம் மூலமும் இதை நடைமுறைப்படுத்தியவர்கள் உண்டு..
இவை இப்ப வெகுவாக குறைந்தும் வருகிறது என்பது நல்ல விஷயம்..


அடுத்து பழிவாங்குதல் பற்றி பார்ப்போம்..



படம் நன்றி : கூகுள்

Tuesday, September 21, 2010

ஐடிசியில் உகாண்டா பெண்ணுடன் சந்திப்பு































கடந்த இரு வாரமாக ஐடிசிக்கும் , சிறைச்சாலைக்கும் செல்ல முடியவில்லை...

இந்த வாரம் எப்படியாவது சென்றே ஆகணும் என்று எண்ணினேன்..

அதே போல ஆலயத்தோழியிடம் சொல்லி நான் சந்திக்க இருக்கும் நபர்களின் விபரம் கேட்டேன்.

ஹிந்தி பேச தெரியுமா என கேட்டார்.... இல்லை ஆங்கிலமும் தமிழும்தான்..

ஹிந்தி சமாளிக்கும் அளவுதான் தெரியும்..

ஆங்கிலம், தமிழ் பேசும் அகதிகளை மட்டும் சந்திக்கிறேன் என்றேன்.

முன்பு சிறைச்சாலையில் சந்தித்த பாகிஸ்தானியரிடமும் ஆங்கிலத்தில் தான் பேசமுடிந்தது..

( இதுபோன்ற நேரங்களில்தான் ஏந்தான் ஹிந்தி படிக்காம விட்டோமோ னு வருத்தமா இருக்கும்.. )

போன முறை ஈழத்தமிழ்ப்பெண்ணை சந்தித்தேன்.. கூடவே ஒரு சிறுமியையும் , சிறுவனையும்...

ஒருவர் ஒரு நபரைத்தான் சந்திக்க முடியும்..

ஆனால் நான் காத்திருக்கும்போதே ஈழத்தமிழர்கள் சிலர் வெளியில் நம்மோடு அமர்ந்திருக்கையில், வந்து பேசி நட்பாகிடுவார்கள்..


9.30 க்கே நான் போய் படிவங்கள் எல்லாம் நிரப்பி கொடுத்தாலும் 10.30 க்குத்தான் உள்ளே உள்ள கதவை திறப்பார்கள்...

ஈழத்தமிழர்கள் பேசும் தமிழை கேட்பதே ஒரு இன்பம்.. மிக மரியாதையாகவும் தாழ்ச்சியோடும் இருக்கும்..

சில நொடிகளிலேயே அக்கா என அழைத்து உறவும் பாராட்டினால் கேட்கணுமா?..

நாம் ஏதும் பேச வேண்டாம் கேட்டுக்கொண்டிருந்தாலே போதும் .. அத்தனை துயரம் நிறைந்த கதைகள் ஒவ்வொன்றும்..

நான் போன முறை சென்ற போது இப்படி ஒரு தம்பி மீன் குழம்பு செய்து அக்குழந்தைகளுக்கு எடுத்து வந்திருந்தார்..

பெண்ணுக்கு 13, சிறுவனுக்கு 11 வயதாம்.. கடந்த 6மாத வாசம் ...

அக்கா அவளோடு பேசுறீயளா ?. னு கேட்டதும் சரின்னு சொன்னேன்..

சில சாமான்களை உள்ளே வரை கொண்டு தரும்படியும் கேட்டார்..

நான் என் தோழியிடம் அனுமதி கேட்டேன் .. அவர் சிங்களவர்.. மிக நல்ல பெண்மணி..சேவைக்காக தன் வசதியான வாழ்க்கையையே விட்டு வந்தவர்.

அவர் சரின்னு சொன்னதும் அந்த தம்பியிடம் 2 பெரிய பைகளை வாங்கிக்கொண்டேன்..

எல்லா வகையான பரிசோதனைகளும் செய்துதான் உள்ளே அனுமதிப்பார்கள்..

நம்முடைய பாஸ்போர்ட் டிரைவிங் லைசென்ஸ் எல்லாம் வாங்கி வைத்துக்கொள்வார்கள்..

நான் சந்திக்க வேண்டிய ஈழப்பெண்ணை சந்தித்த பின் அக்குழந்தைகளை எனக்கு அறிமுகப்படுத்தினார்..

அதுவரை மிக துணிச்சலாக இருந்த நான் நொறுங்கிப்போனேன் ..

அவர்கள் முன்னால் கண்ணீர் சிந்தக்கூடாது என முகத்தில் ஒரு புன்னகையை வரவழைத்துக்கொண்டு பேசினேன்..

இருப்பினும் முடியவில்லை... என் குழந்தைகளே உள்ளே இருப்பது போல் ஒரு பிரமை...

மற்றொரு முக்கியமான கஷ்டம் என்னவென்றால் கிட்டத்தட்ட 50 பேரை ஒரே நேரம் இரு கம்பி வலை தடுப்புக்கு பின்னால் இருந்து பேச சொல்வார்கள்..


பல்வேறு நாட்டினர் , பல்வேறு பாஷைகள் என கூச்சலும் குழப்பமுமாய் இருக்கும்..

நாம் பேசுவது அந்த பக்கமுள்ளவருக்கு கேட்காது..

அவர் வாயசைவை வைத்தே அவர் என்ன சொல்ல வருகிறார் என கூர்ந்து கவனிக்கணும்..

ஏற்கனவே நொந்து போய் இருக்கும் அவர்களை மேலும் கத்த சொல்லி கொடுமைப்படுத்துவதாய் தோணும்..

இருந்தாலும் யாருமே பார்க்க வரமுடியாத அயல்நாட்டில் இப்படி யாராவது வந்து பேசுவது அவர்களுக்கு மிக மகிழ்ச்சியான விஷயம்..

ஒரே நேரம் ஒரு அறையில் 600 பேருக்கும் மேலாக கூட அடைத்ததுண்டாம்..

படுக்க முடியாமல் இடுக்கிக்கொண்டு உட்காரணுமாம்..

நம்பவே முடியாத அளவுக்கு இருக்கு அவர்கள் விவரிக்கும் ஒவ்வொண்ணும்..

ஒருவர் மேல் ஒருவர் படுப்பதுண்டாம்..

வாயில் வைக்க முடியாத உணவாம்..சோப்பு , ஷாம்பு, லோஷன், நாப்கின் ஏதுமின்றி பெண் பிள்ளைகள் சிலருண்டாம்.

இப்படி யாரவது சொந்தமோ நட்போ இருந்தால் அவர்கள் பிழைத்துக்கொள்வர்..

அதிலும் ஒரு ஆளுக்கு இவ்வளவுதான் எடை னு பொருள்கள் தர முடியுமாம்..

அதே தம்பி அடுத்த முறை பொருள்கள் எடுத்து செல்லும்போது பிடிபட்டாராம்.. பவுடர் டப்பாவுக்குள் செல் போன் பேட்டரி இருந்ததை

காவலர் கண்டுபிடித்து விட்டனர்.. அவ்வளவுதான் இனி அவர் போகவே முடியாது சந்திக்க...

இது எனக்கு எச்சரிக்கையும்.. நான் இனி ஒருபோதும் அடுத்தவருக்காக இரக்கப்பட்டு பொருள்களை உள்ளே கொண்டு செல்லமாட்டேன்...

வேணுமென்றால் பணமாக கொடுக்கலாம்...உள்ளே கடை உள்ளது விலை அதிகமென்றாலும் தேவைப்படும் போது வாங்கிக்கொள்ளலாம்..

நான் இன்று சந்தித்த உகாண்டா நாட்டு பெண் 21 வயது..

கூட படித்த சிவிட்சர்லாந்து பெண்ணொருத்திக்கு வாடகை தாயாக முடிவு செய்து ட்ரீட்மெண்டுக்காக தாய்லாந்து அழைத்து வரப்பட்டிருக்கிறாள்.

இங்கு ஒரு நல்ல ஹோட்டலில் வைத்து பரிசோதனைகளும் நடந்திருக்கு...ஆனால் இவளுக்கான விசா முடிந்து விட இமிகிறேஷனில் மாட்டிக்கொண்டார்..

அந்த பெண் சுவிஸ் சென்றுவிட்டாராம்.. நல்ல பெண் என்றே கூறுகிறார்.. தான் படிக்க அவர்தான் உதவினாராம்.

இடையில் என்ன நடந்தது என தெரியவில்லை..

இப்போது ஆலயம் மூலமாக அவளை உகாண்டாவுக்கு அனுப்ப ஏற்பாடு செய்கிறார்கள் போல..

கடந்த 5 மாதமாக பித்து பிடித்தவளாய் இருக்கிறேன் என்கிறார்.

நீ சீக்கிரம் உன் நாட்டுக்கு திரும்ப ஏற்படு செய்கிறார்கள் என்றதும் முகத்தில் கொஞ்சம் பரவசம் , மகிழ்ச்சி..

கொஞ்சம் துணிவையும் , ஊக்கத்தையும் கொடுத்து அவரை மகிழ்விக்க வேண்டியதாயிருந்தது...

தன் பெற்றோர், தன் தம்பி, தங்கைகளுக்காக இந்த வாடகை தாய் வேலைக்கு சம்மதித்ததாக சொன்னார்...

இப்படி வந்து ஐடிசி யில் கிடப்பேன் என கனவிலும் நினைக்கவில்லை..என வருந்தினார்..

இப்படி எத்தனை எத்தனை பேர் உலகில் காரணமில்லாமல் கஷ்டப்படுகிறார்கள்..?

பணத்துக்காக முன்பின் அறியாதவரிடம் உயிரையே பணயம் வைக்கும் தேவைக்கு எதனால் தள்ளப்பட்டார்கள்..?


ஒருபோதும் தீராத பல கேள்விகளோடு விடைபெற்றேன்...



படம் : நன்றி கூகுள்

Monday, September 20, 2010

தெய்வக்குழந்தைகள்..












தெய்வக்குழந்தைகள்
..

வாரம்தோறும் எங்கு போகிறோமோ இல்லையோ பூங்காவுக்கு அழைத்து சென்று சருக்கு , ஊஞ்சல் , பந்து , சைக்கிள் என ஆடி ஓடி

ஓய்ந்து போய் வரணும்..

பெரியவர் முதலிலேயே சென்றிடுவார் சைக்கிளில்...கூடை பந்து விளையாட...

நாங்க பின்னாலே சென்று விளையாடிவிட்டு வரும்போது சைக்கிளை ஓரிடத்தில் நிப்பாட்டி விட்டு எம்கூட வருவார்..

நம் ஊரில் இப்படி சைக்கிளை பூட்டி வைத்தாலும் மீண்டும் இருக்குமா என்பது சந்தேகம்.

இங்கு எத்தனை நாளானாலும் அப்படியே இருக்கும்..



சரி இப்ப என்ன விஷயம்னா , பூங்காவுக்கு அழைத்து செல்வதென்பது நம் குழந்தைகளை விளையாட வைக்க மட்டுமல்ல. தாய் மக்கள் குடும்பத்தோடு வந்து குழந்தைகலோடு விளையாடி மகிழ்வதை காணவும்தான்.


குழந்தையோடு
குழந்தையாக , பெற்றோர் இருவரும் , பந்து , இறகுப்பந்து , சைக்கிள் என சிரித்துக்கொண்டே விளையாடுவதை பார்க்கும்போது ஒரு மகிழ்ச்சி
நம்மையும் தொற்றிக்கொள்ளும் இலவசமாக...

சின்னவர்
பூங்கா செல்லும்போது எல்லாவற்றையும் அள்ளி போடுவார்..
கிரிக்கெட் மட்டை , ஹாக்கி மட்டை , பந்துகள் 4 , ரிங், பூமராங் , ரோலர் ஸ்கேட்டிங் சைக்கிள்.. சப்பு சவருன்னு எல்லாம் ..

என்னமோ
அத்தனையையும் விளையாடிவிடுவது போல..


முதலில்
கிரிக்கெட் விளையாட ஆரம்பிப்பார்.. அவர் எப்பவும் பேட்ஸ்மேன்.. நாந்தான் பவுலிங்..
பந்தை சரியா அடிச்சுட்டா ஒரு பெருமிதமா சிரிப்பு சிரிப்பார்.. அப்பா கை தட்டணும்.. ஆனா பந்தை அடிக்க முடியலையோ , அம்மாவுக்கு பந்தை சரியா போட முடியலைன்னு பிராது வந்திடும்...

கிரிக்கெட்
விளையாடுவதை அதிசயமாக சுற்றி உட்கார்ந்து தாய் மக்கள் ( முக்கியமா பசங்க ) பார்ப்பாங்க..
தாய் மக்களுக்கு பிடிச்சது கால்பந்து தான்..

எங்கே
பார்த்தாலும் அதுதான் இங்கே பிரபலம்..


இவன்
அடிக்க அடிக்க அந்த பசங்க ஹோ னு சத்தம் போட்டு ஊக்குவிப்பார்கள் கை தட்டி.. கேட்கணுமா பெருமை முகத்தில் வழியும்..:)


அடுத்து
கால்பாந்து .. நான் கொஞ்சம் வேகமா அடிச்சாலோ , இல்லை வேறு பக்கம் அடித்தாலோ கோபம் வந்திடும்..
முகத்தை தூக்கி வைத்துக்கொள்வார், கை இரண்டையும் கட்டிக்கொண்டு.. இதை பார்த்து அந்த தாய் பசங்க விழுந்து விழுந்து சிரிப்பார்கள்..

ஏனெனில்
தாய் மக்களுக்கு கோபம் னா என்னன்னே தெரியாது அது நம்ம இந்திய சொத்தல்லவா?..


அவன்
கோபமும் அவன் முக கோணலும் அவர்களுக்கு பயங்கர சிரிப்பை வரவழைக்கும்..


அதே
போல ஊசி போடும்போதும் இங்குள்ள குழந்தைகள் அப்படி ஒண்ணும் பெரிதாக அழுவதில்லை..
வலியில் கண்ணீர் வந்தாலும் கத்துவதெல்லாமில்லை.. ஆனா இவன் ஊசி போடுமுன்னே ஊரை கூட்டுவான்...

என்னை
வெளியே போக சொல்லி 10 பேர் சேர்ந்து கட்டிபிடித்து அமுக்கி ஊசி போடணும்..
அப்பவும் விழுந்து விழுந்து சிரிப்பாங்க... அடக்க மாட்டாமல்.. ஏதோ ஏலியனை பார்த்ததுபோல்...:)

கீழே
வழுக்கி விழுந்தாலும் முதலில் சிரிப்புத்தான்.. விழுந்தவனும் சிரிச்சுக்குவான்..
வந்த புதிதில் என்னடா இது சரியான லூஸுப்பசங்களா இருப்பாய்ங்களோன்னு நினைத்ததுண்டு.. இப்ப அதிலும் நாங்களும் ...

முக்கியமா சொல்ல வந்த விஷயத்தை விட்டு வண்டி எங்கோ போய்விட்டது..

அருமையான விஷயம் என்னவென்றால் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை அழைத்து வருவார்கள்.. அக்குழந்தையை அவர்கள் குடும்பத்தினர் மட்டுமல்ல எல்லோருமே சேர்ந்து கொஞ்சி மகிழ்ந்து விளையாடுவார்கள்..

ஆக
ஒரு மனவளர்ச்சி குழந்தை இருந்தால் இங்கே தெய்வமாக கொண்டாடப்படுகிறது ..

அக்குழந்தையை எல்லா குழந்தையும் போல சாதாரணமாக விளையாட விடுவார்கள்.. இப்படி செய்வதால் சில நாளில் அக்குழந்தைகள் சாதாரண நிலைமைக்கு வருவதுமுண்டாம்..

எங்க
ஆலயத்தில் இப்படி ஒரு பெண் உண்டு..
அவருக்கு பிரசங்கம் நடக்கும்போது ம் நன்மை( நற்கருணை ) எடுக்கும் போதும் வரிசை ஒழுங்கு படுத்தும் வேலை கொடுத்துள்ளார்கள். அவர் மிக அழகாக புன்னகையோடு அதை செய்வார்..

ஆலய
வேலைகள் செய்வது எல்லோருமே வாலண்டியர்ஸ் தான்..


இப்படியான பொறுப்புகள் கொடுக்கும்போது அவர்கள் பெரும் முக்கியத்துவமே அவர்களை முன்னேறவைக்கும்... தாமும் மற்றவர்போல் சாதாரணம் என்ற எண்ணம் வரும்.. சங்கோஜமில்லாமல் பழக முடியும்.. ஒரு போட்டி வரும்..

எளிதில் கற்றும்கொள்வார்கள்..

சின்னவர் விளையாடும்போது அவனிடம் வந்து அக்குழந்தை பந்து கேட்டது.. இவர் கொஞ்சம் வெட்கப்பட்டுக்கொண்டே கொடுக்க , அதை வாங்கி திரும்ப இவனிடமே எறிய , இவனை விளையாட அழைத்தது..

நாங்கள்
ஊக்குவிக்கவும் இவரும் அக்குழந்தைக்கேற்றார்போல சிறிது நேரம் விளையாடினார்..


அப்பதான்
நாம் எத்தனை பாக்கியம் செய்திருக்கோம்னு புரியுது..இதை கூட இப்படி சொல்லிக்கொள்ளலாமான்னு தெரியலை..


அதே
போலொரு குழந்தை கிடைத்திருந்தாலும் நான் மனமுவந்து ஏற்றிருப்பேன் .. அதுவேறு விஷயம்..

( என் பிரசவத்தின்போது இதுபோல ஒரு குழந்தை பிறக்க வாய்ப்பிருக்கிறதென்றும் ( Down syndrome ) என்னிடம் மருத்துவர் சொன்னதும் அதற்கான பரிசோதனை செய்யவே மாட்டேன் என பிடிவாதம் பண்ணியதுமுண்டு. அப்பரிசோதனை கருவில் இருக்கும் குழந்தையை சேதப்படுத்தும் வாய்ப்பு அதிகமாம்.... )


இருப்பினும் அக்குழந்தைகளை கவனிப்பதென்பது நிச்சயமாக சவாலான விஷயம்.. தனி அர்ப்பணிப்பு தேவை..அதிக பொறுமையும்..

அது
நிச்சயமா என்னிடம் இருக்குமான்னு சந்தேகம்தான்..


கிளம்பும்போது
அக்குழந்தையிடம் பந்தை கொடுத்துவிட்டு வணக்கம் சொல்ல சொல்கின்றனர்..
அப்போதும் அவர்கள் முகத்தில் சந்தோஷமான புன்னகை.. நன்றியும்...

குழந்தையின் முகத்திலும் ஒரு உறவினை கண்ட மகிழ்ச்சி.. அக்குழந்தையும் இருகரம் கூப்பி மிக அழகான " ஸ்வாதிகாப் " ( வணக்கம் ) என சிரம் தாழ்த்தி சொன்னது..

மகன்
வரும்போது கேட்கின்றார் " அம்மா என்னாச்சு அந்த குழந்தைக்கு ?."


" அவர்கள் கடவுளின் மிக விசேஷமான செல்லக்குழந்தைகள்.. " என விளக்க ஆரம்பித்தேன்..

ஆக
பூங்கா செல்வதென்பது விளையாட்டு மட்டுமல்ல படிப்பினையும் ஆகிறது குழந்தைகளுக்கு...


இது
போன்ற சம்பவங்கள் நாம் பெற்ற ஆசீர்வாதங்களை எண்ண வைப்பதோடு நாம் இன்னும் செய்யவேண்டிய நல்ல விஷயங்களை
குறித்து நியாபகப்படுத்தி ஒரு குற்ற உணர்ச்சியை தந்திடுகிறதுதான்...



படம் : நன்றி கூகுள்.

Friday, September 17, 2010

இருமனம் இணைவதும் பின் பிரிவதும் ஏன் - பாகம் 2




























தவறான
வழிமுறை மூலம் அடைய நினைக்கும் நான்கு முக்கிய குறிக்கோள்.

முதல் பாகத்தில் சொன்னது போல் நான்கு முக்கிய குணங்களை பற்றி பார்ப்போம் இங்கு..

ஏன்
இந்த நான்கு குணங்களும் ஏற்படுகிறது?.. சமூகத்தில் எத்தனை நேர்மையாக இருந்தாலும் தம் கடமையை சரிவர செய்தாலும் தமக்கு கிடைக்கவேண்டிய மரியாதையோ , அரவணைப்போ ,
அங்கீகாரமோ, தகுதியுள்ள பாராட்டோ சரியான நேரத்தில் கிடைக்காவிட்டால் மனிதன் இத்தகைய குணங்களை வளர்த்துக்கொள்கிறான்.


சில நேரம் நியாயமாக, பல நேரம் நியாயமற்றும்..

நான் இப்படித்தான் .. என் குணம் , வளர்ப்பு இப்படித்தான்.. இருந்தாலும் என்னை கவனிக்கவேண்டும் ..என்ற பிடிவாதமும்..


ஆக எத்தகைய தவறான நடத்தை எந்த குறிக்கோளை அடைய நினைக்கிறது என்பதை சக மனிதர்கள் புரிந்துகொண்டு சரிபார்த்து திருத்திக்கொள்ளவேண்டும்..

இந்த குறிக்கோள்கள் அனேகமாய் சுயபுத்தியோடு வேலைசெய்வதில்லை.. நம்மை அறியாமலேயே இவை உருவாகிவிடுகின்றன.. ஆக இதன் அடிப்படைகளை அராய்ந்து எதனால் இந்த பிரதிபலிப்பு என்பதை புரிந்து அதை தவிர்க்க பழகிக்கலாம்..

நாம் இங்கே திருமண உறவினில் இவை எப்படி பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை பார்க்க போகிறோம். ஆனால் இந்த குணங்கள் மனிதர் அனைவருக்குமே ஏன் குழந்தைகளுக்குமே பொருந்தும்..முக்கியமாய் ஹார்மோன் மாற்றத்தினால் அவதியுறும் வாலிப வயதிலும்..


1. கவன ஈர்ப்பு :



தம்பதியினரில்
ஒருவருக்கு
சுய மரியாதை இல்லை எனும் பட்சத்தில் நியாயமாகவும், சுயநலத்தினால் நேர்மையற்றும் , இந்த கவன ஈர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கும்.

நேரடியாக
சொல்லாமல் பாத்திரங்களை சத்தமாக பொடுவதோ, தொலைக்காட்சியை அலற விடுவதோ , தொலைபேசியில் மணிக்கணக்காய் பேசுவதோ,( இப்ப இணையமும் சேர்த்துக்கலாம்)
ஆணாக இருந்தால் புதுசாக குடித்துவிட்டோ புகைத்துவிட்டோ வருவது..,

குழந்தைகளை
திட்டுவது அடிப்பது...
இப்படி சம்பந்தமில்லாமல் கவன ஈர்ப்புகள் இருக்கும்..

தங்களுக்கு
கிடைக்கவேண்டிய அன்பு, அனுசரணை கிடைக்காவிட்டால் இப்படி ஏதாவது ஒரு வழிமுறையை பின்பற்றி தம்மை நியாயப்படுத்த நினைப்பார்கள்..


அலுவலகத்தில்
கூட தாம் கவனிக்கப்படவில்லையென்றால் , சத்தமாக பேசிக்கொண்டோ , கூட்டத்தின் போது பென்சில் பேனாக்களை மேசையில் தட்டிக்கொண்டோ , மேலே போட்டிருக்கும் லைட்டை
வெறித்து பார்த்துக்கொண்டோ , சீரியஸான நேரத்தில் நக்கல் அடித்துக்கொண்டோ , கெட்ட வார்த்தை சொல்லி யாரையாவது திட்டிக்கொண்டோ இருப்பார்கள்...

எந்த
ஒரு நல்ல விஷயத்துக்கும் எதிர்ப்பை காண்பித்தும் அதற்கு ஒரு பிடிவாதமான காரணத்தை சொல்லி நியாயப்படுத்திக்கொண்டு அனைவரையும் எரிச்சலடைய செய்வார்கள்..


எளிதாக
சொல்ல போனால் திசை திருப்பியாவது காரியம் சாதிக்க நினைக்கும் எண்ணம்..

அது
தோல்வியில் முடிந்தாலும் அதனால் பலர் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்கு கவலையேதுமில்லை..
ஏனெனில் என்னை கவனிக்கவில்லை... எனக்குண்டான மரியாதை கிடைக்கவில்லை.. ஆக இது மட்டுமே என் வழி என்ற தவறான குறிக்கோள்..

சரி
இந்த தொல்லையிலிருந்து விடுபட எண்ணி கவனிச்சுத்தான் தொலைப்போமே னு அவர்கள் பிடிவாதத்துக்கு செவிசாய்த்தால் ,
" ஆஹா நாம் நினைத்தது சரிதான்.. இதே அடாவடியை தொடர்ந்தால் நமக்கு வெற்றி நிச்சயம் என்றெண்ணி இந்த எதிர்மறை குறிக்கோளோடே வாழ்க்கையை தொடருவதோடு அதே போல நட்புகளையும் இணைத்து கொள்வர்..

அதனால்
இது போன்ற எதிர்மறை குறிக்கோள்களுக்கு ஒருபோதும் செவிசாய்க்காமல் , ஆனால் அதே நேரம் அந்த நபர் செய்யும் நல்ல விஷயங்களை பாராட்டி ஊக்குவித்தால் ,
" நாம் என்னதான் கத்தினாலும் கதறினாலும் நம் பிடிவாதத்தை யாரும் கண்டுகொள்ளவில்லையே , ஆனா நல்ல விஷயத்தை பாராட்டினாங்களே " என்றெண்ணி மெதுவாக நியாயமான கவன ஈர்ப்புக்கான வழிமுறைகளை மட்டுமே பின்பற்ற ஆரம்பிப்பார்..

குழந்தைகளின் பிடிவாதமும் இதேதான்.. அடம்பிடித்து காரியம் சாதிக்கும் குழந்தை ஒருபோதும் வளராது மனதளவில்..

தனக்கு
வேண்டிய நகையோ புடவையோ கேட்டு பிடிவாதம் செய்யும் பெண்கள்...,
இல்லறத்தில் நினைத்த நேரம் இன்பமடைய முடியா ஆண்கள் , கட்டுப்பாடு போடும் பெண்களிடம், இத்தகைய கவன ஈர்ப்பு போராட்டம் நடக்கும்...

என்னால் விலையுயர்ந்த நகை வாங்கி தர முடியாது .. என்னிடம் போதிய வருமானமில்லை.. அல்லது நகையில் போடுவதைவிட வேறு உபயோகமான வழியில் சேமிக்க எண்ணுகிறேன்...ஆக அதற்காக நீ கோபித்துக்கொண்டு என்னை கவனிக்காவிட்டால் வேறு வழியில்லை நான் பொறுத்துத்தான் போகவேண்டும் என்ற பிரச்னையை விளைக்கி நம்மை விட்டுகொடுத்தல் ஒரு தீர்வு..


அதைவிடுத்து
சரி சரி இப்படி முகத்தை தூக்கி வைக்காதே வாங்கி தொலை னு வாங்கி கொடுத்தால் இது அடுத்த முறையும் வழக்கம்போல தொடரும்..


அதே
போல நண்பர்களோடு பார்ட்டிக்கு போக அனுமதிக்காவிட்டால் முகம் தூக்கும் கணவருக்கும் பரிதாபப்பட்டு அனுமதித்தால் அதுவே தொடரும்...
அதைவிட , " நீங்க என்னிடம் பேசாவிட்டாலும் சரி.. இந்த பழக்கம் நம் குடும்பத்துக்கும் , குழந்தைகளுக்கும் நல்லதல்ல என நான் நினைக்கிறேன்... அதனால் இந்த வலியை ஏற்றுக்கொள்கிறேன் .. இருப்பினும் எப்பவும் போல் என் கடமையை நான் தொடர்ந்து செய்வேன் " என மிக உறுதியோடு நிற்கணும் இத்தகைய கவன ஈர்ப்பு குறிக்கோளுக்கு எதிராக...

ஆரம்பத்தில்
பொறுமை இருக்காது.. நாம் செய்வது தவறோ என்ற பயம் கூட வரலாம்..
ஆனால் மிக மிக உறுதியோடு இருந்தால் , " அட , இங்க வேலைக்காகாது போலயே " னு வழிக்கு வந்தே ஆகணும் துணை என்றாலும், குழந்தை என்றாலும் வாலிபம் என்றாலும்...

இந்த குணத்தை குடும்பத்தில் திருத்துவது குடும்பத்துக்கு மட்டும் நல்லது என நினைக்காதீர்கள்... ஒட்டு மொத்த சமூகத்துக்கே நீங்கள் நல்லது செய்கின்றீர்கள்...

இதிலும் வெற்றி காண முடியாதவர்கள் என்ன செய்வார்கள்?.. அதிகாரத்தை தாமே எடுத்துக்கொள்வார்கள்.. ஆனால் தோல்வியை ஒத்துக்கொள்ளமாட்டார்கள்..


அடுத்த தொடரில் அடுத்த இரண்டாவது குணமான " அதிகாரத்தை கையிலெடுத்து ஆட்டிவிப்பது " குறித்து பார்ப்போம்...

தொடரும்...........



Thursday, September 9, 2010

இருமனம் இணைவதும் பின் பிரிவதும் ஏன்.?






































நம்மில்
எத்தனை பேர் உளவியல் ரீதியாக திருமணத்தை பற்றி அறிந்துள்ளோம்.?
திருமணம் என்ற சடங்கு தோன்றிய காலம்தொட்டே, ஆணும் பெண்ணும் தம்மை முழுதுமாய் ஆயுசுக்கும் அர்ப்பணித்து புது உயிரை உலகுக்கு கொண்டு வருவதே அதன் அர்த்தம்.. .

பின்
அக்குழந்தையும் மகிழ்வாய் வளர்ந்து சமூகத்துக்கு நம்பிக்கை, விசுவாசம், சேவை
கொண்டு வருதேயன்றி அன்புக்காக ஏக்கமடைவதல்ல..நான் நல்லபடியா வளர்ந்தேன் .. என்னை பார்த்து இல்லற வாழ்வை நம்புங்க.. நான் மகிழ்வாயிருக்கேன்.. ஆக நானும் இச்சமூகத்துக்கு திரும்ப ஏதாகிலும் செய்வேன் என்ற உயர்ந்த நோக்கத்தில் குழந்தைகள் வளர்க்கப்படவேண்டுமாயின் பெற்றோரும் மகிழ்வான இல்லறம் தரவேண்டியது கடமையாகும்..

ஆக
திருமணம் என்பதே ஒருவித சேவை மனப்பான்மை உடையவர்க்கு மட்டுமே..
அதைவிட்டு நம் உரிமையை நாம் நிலைநாட்டுமிடமல்ல..நமக்குள் இருக்கும் தனிமைக்கு தற்காலிக இடம் தேடுவதல்ல.. அப்படியான எண்ணம் கொண்டவர்கள் தயவுசெய்து திருமணத்தோடு நின்றுகொண்டு குழந்தை பெற்றுக்கொள்வதை 100% தவிர்த்திடணும்..

ஆனால்
காலம் செல்ல செல்ல , கலாச்சார மாற்றத்திலும் , திருமணம் என்பதே வெறும் பண , பதவி , அதிகார பறிமாற்றம்
கொண்ட ஒரு வியாபார ஒப்பந்தமாகிப்போனது..இச்சூழலில் வளரும் குழந்தைகளும் தமது வம்சாவழி நிரூபிக்க ஒரு வாரிசு என்ற நிலையிலே மட்டும் பெற்று வளர்க்கப்படுகிறார்கள்...இத்தகைய திருமணம் அன்புக்கோ காதலுக்கோ சிறிதும் சம்பந்தமில்லாதவை.. இலவசமாய் காமம், வசதி , மதிப்பு, அந்தஸ்து கிடைக்கும் ஒரு ஒப்பந்த திருமணம் என்றாலும் ஆழ்மனதில் அனைவரும் ஏங்குவது அன்புக்குத்தான்.

ஒரு
நிஜமான அக்கறை கொண்ட திருமணத்தில் குழந்தையின் வாழ்வு வளர்ப்பு முக்கிய பங்கு வகித்தே வந்தது காலந்தொட்டு..
இந்த அக்கறை குறையும்போது , பிரிவினால் சுதந்திரம் கிடக்கும் என நினைப்பது , வீட்டை விசாலமாய் அழகுபடுத்த எண்ணி முக்கிய தூணை/சுவற்றை நீக்குவது போலாகும்.. மெல்ல மெல்ல வீடு இடியலாம்..


ஒரு
திருமணத்தில் மிக முக்கிய முடிவுகள் குழந்தைகள் கொண்டே எடுக்கப்படணும்..
விவாகரத்தினால் அதிகம் பந்தாடப்படுவது குழந்தைகளின் எதிர்காலமும் , மனமும்.., அவர்களின் வளர்ச்சியும்தான்.. ஒரு குழந்தை தன் பெற்றோரில் ஒருவரை விவாகரத்தின் மூலம் இழக்கும் வலியானது மரணத்தில் அந்த ஒரு பெற்றோரை இழப்பதை விட கொடியதாம்.

அக்குழந்தை அச்செய்தியை எப்படி எடுக்க வைக்கப்படுகிறது.? வளர்க்கப்படுகிறது.?

" ஏய் குழந்தையே , உன்னை விட, உன் வளர்ச்சியை விட , என்னுடைய தனிப்பட்ட சுகமே முன்னுரிமை பெறுகிறது..குடும்பம் என்பது எனக்கு முக்கியமல்ல..
அதில் நீ ஒரு பொம்மை மட்டுமே ...நான் நினைத்தபடி உன்னை ஆட்டிவைத்து என் சந்தோஷங்களை அடைய முடியும்.." நம்ப முடியுதா.?... ஆனால் இதுதான் உண்மை..


குழந்தைகள் சிறு வயதிலேயே குடும்ப சண்டைகளால் பாதிப்படைகிறார்கள்..அவர்கள் குடும்ப சண்டையை வேடிக்கை பார்க்க மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.. தங்களின் இயலாமையை சொல்ல தெரிவதில்லை.. ஆனால் அந்த கோபம் வேறு வழியில் கட்டாயம் காண்பிக்கப்படுகிரது குடும்பத்தில் , சமூகத்தில் அதிக உணவுண்பது, மது , புகை, காமம் , தற்கொலை போதை மருந்து , இன்னும் பல போபியாக்களோடு வலம் வர வைக்கப்படுகிறார்கள்..


குழந்தைக்கு சமூகத்தின் மேலே உள்ள நம்பிக்கை போய்விடுகிறது.. குழந்தையின் திறமை முழுக்க மழுங்கடிக்கப்படுகிறது.. வெளியே சொல்ல முடியா வெட்கம் , வருத்தம் , ஆத்திரமாய் மாறுகிறது..அவை பொருள்களால் பணத்தால் ஈடு செய்ய முடியாது.. பெற்றோரின் பிரிவில் ஒருவராவது அதை முழுதுமாக ஈடு செய்யக்கூடியவராய் , துணிவானவராய் , மிக அன்பானவராய் இருந்துவிட்டால் பரவாயில்லை.. ஆனால் அந்த பெற்றோரும் , பிரிவினால் ஏற்பட்ட கோபத்தோடு , இயலாமையோடு அக்குழந்தையை வளர்ப்பார்களானால் அவ்வாழ்க்கை நரகமாகிடும் குழந்தைக்கு..


சரி முடியாத பட்சத்தில் என்ன செய்யலாம்.. கண்டிப்பாக பிரியலாம் ..

ஆனால் அதற்கு முன்னால் சரி செய்துகொள்ள முடியுமா என பார்க்கணும்.. உணர்ச்சி வேகத்திலோ , ஈகோவினாலோ பிரியவே கூடாது..


முக்கியமா
நான்கு வகையான பிரச்னைகள் சரி செய்ய முடியுமா என பார்க்கணும்..தவறு யாரிடம் இருந்தாலும் பரவாயில்லை, ஒத்துக்கொண்டு சரி செய்ய முயலணும்..
துணையிடம் என்றாலும் மெதுவாக சொல்லி திருந்த அவகாசம் தரலாம்..


1. விமர்சித்தல்...


துணையை
மோசமாக விமர்சிப்பது.. குற்றத்தை கூட ஆக்கபூர்வமாக சொல்லாமல் சண்டையிழுக்கும் நோக்கில் சொல்வது..
" எங்க அம்மா கடிதம் வந்ததை கொடுக்க மறந்தாய் போல " என சிறு புன்னகையோட சொல்வதற்கும் , " எப்படி நீ எங்கம்மா கடிதத்தை மறைக்கலாம்.? என கோபமாக கேட்பதற்கும் வித்யாசம் உள்ளது... அதேபோல நடை ,உடை, வேலை என எல்லா விஷயத்திலும் விமர்சனம் ஆக்கபூர்வமாக ஊக்கமாக இருக்கணும்.


2. அதிகாரம்/அடிமைப்படுத்துதல்..


மரியாதை
குறைத்து நடத்துவது துணையை.. துணையின் இயலாமையை சுட்டிக்காட்டி பேசுவது , கோபம் வரவழைப்பது..
எங்கப்பா என்னை இப்படி வளர்த்தார். எங்கண்ணா ரொம்ப அழகு.. .. எங்கம்மா சமையல் கிட்ட நீ வர முடியாது.. நீ ஏழை. படிப்பு , அழகு ,அறிவு பத்தாது என குறைகளை மட்டுமே சொல்லி தான் உன்னைவிட உசத்தி என்று சொல்லியே ஆழ்மனதில் அடிமைத்தனத்தை உருவாக்குவது..


3. தற்காத்துக்கொள்ளல்.


இது
இயல்புதான் என்றாலும் , நாளடைவில் உதவாது ..
பிரச்னையை முழுமையாக புரிந்துகொள்லாமல் தற்காத்துக்கொள்வதிலேயே ( வெற்றிபெருவதிலேயே ) குறியாய் இருக்கும்போது பிரச்னையே திசை திருப்பப்பட்டு பலமாய் பூதாகரமாய் மாறிட வாய்ப்புள்ளது.. ஒருவர் கோபமாக இருக்கும் நேரத்தில் புரிய வைக்கவே முயலாமல் அவர் நிதனத்துக்கு வந்தபின் நாமும் நிதானமாக நம் பக்க நியாயங்களையும் துணையின் தவறுகளையும் பட்டியலிடலாம்.. துணையின் தவறுக்கு உதவியாய் நிற்பதாகவும் சொல்லலாம்.. மன்னிப்பை கூட எதிர்பாராமல் தாமே ஒரு குழந்தையை மன்னிப்பதுபோல மன்னித்தும் விடலாம். இல்லை தற்காத்துக்கொண்டு தம் நியாயத்தை நிரூபிக்க போய் , பொறுப்புகளை அலட்சியப்படுத்தவும், தப்பிப்பதற்கான காரணங்களை தேடவுமே வாழ்நாள் முழுதும் விரயம் செய்வோம்..

4. முழுதுமாக ஒதுங்குதல்..ஒதுக்குதல்..


சரி
இனி வழியேயில்லை.. என் பேச்சுக்கு மரியாதை இல்லை. அதனால் நான் ஒதுங்குறேன் என முற்றிலுமாக வெறுப்போடு ஒதுங்குவது..
தம்மையே தனிமைப்படுத்துவது.. இது தற்காலிகம் என்றால் பரவாயில்லை. ஆனால் நிரந்தரம் என்றால் ஆபத்தை நாமே விளைவிப்பதாகும்..பேச்சுவார்த்தையினால் பல பிரச்னைகளை தீர்க்க முடியும் என நம்பணும்.. பேச்சுக்கே வரமாட்டேன் என்றால் நான் செய்வதே சொல்வதே சரி என நிர்ப்பந்தப்படுத்துவதாகிடும்..


மேலே
சொன்ன நான்கையும் தம்பதியினர் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் எதிர் நோக்கியிருக்கக்கூடும்தான்..
ஆனால் இதுவே அடிக்கடி நிகழுமாயின் , விவாகரத்து ஏற்பட்டே தீரும்.. இருவரில் ஒருவர் அனுசரிப்பதில்லை.. மாறப்போவதில்லை என்பதையே காண்பிக்கின்றது இது..


அடுத்ததாக
குடும்பத்தின் பிரச்சனைக்கு ஆணி வேறான நான்கு மிகத்தவறான கோல்களும் , அதற்கேற்ற தவறான நடவடிக்கைகளும் பார்க்கலாம்..


( இவை தம்பதிகளிடம் மட்டுமல்ல , வளரும் குழந்தைக்கும் பொருதும் இக்குணங்கள்..முக்கியமா , வாலிப வயதினருக்கு..)



--------
தொடரும்..

படம்
: நன்றி கூகுள்..




Monday, September 6, 2010

பெண்ணே உனக்குத்தான் எத்தனை பெயர்.?























































ப‌த்துமாத‌ம் வ‌ய‌ற்றில் சும‌ந்து
- தாலாட்டி
வ‌ள‌ர்த்த‌ பெண்ணே உன்னை
அம்மா என்று அழைக்கிறேன்!!


என் உட‌னாய் பிற‌ந்து - பாச‌ம‌ழைப்
பொழிந்த‌ பெண்ணே உன்னை
ச‌கோத‌ரி என்று அழைக்கிறேன்!!




வெள்ளைத் தோல் உன்ன‌ழ‌கில் - ம‌ய‌ங்கி
வ‌சீக‌ரித்த‌ பெண்ணே உன்னை
காத‌லி என்று அழைக்கிறேன்!!




அடிமையாய் வ‌ந்து என‌க்கு - ப‌ணிவிடை
செய்யும் பெண்ணே உன்னை
ம‌னைவி என்று அழைக்கிறேன்!!



என்னைவிட‌ அதிக‌ம் ப‌டித்து - பொதுவில்
ஆணிய‌ த‌வ‌றுக‌ளை சுட்டுவ‌தால்
புர‌ட்சி பெண்ணே உன்னை
விப‌ச்சாரி என்று அழைக்கிறேன்!!



க‌டைசியில் சொன்ன‌து நிஜ‌மாய்
போனால்,
மேலே சொன்ன‌து பொய்யாய்
போகுமோ!!!!






இழிவினால் முன்னேற்றம்....- சிறுகதை..




-----------------------------------











படம் : நன்றி கூகுள்

-----------------------------------



"இதப்பாரும்மா.. உனக்கு நல்ல முகவெட்டு.. சினிமா துறையில் நல்லதொரு எதிர்காலம் இருக்கு "

" வேண்டாம் சார். என் குடும்பத்துல பழக்கமில்ல.. விடமாட்டாங்க சார்.. தொந்தரவு பண்ணாதீங்க."

" ஏம்மா இது உன்னோட வாழ்க்கை.. நீ பிரபலமானதும் அவங்க ஏத்துக்குவாங்க.. அதுவரை நான் கவனிச்சுக்கிறேன் உன்னை.."

" யோசிக்கிறேன் சார். "

-----------------------------------------------------------------

2 வருடத்துக்கு பின்..



"இதப்பாரு இந்த படம் பயங்கர வெற்றின்னு ஏகப்பட்ட தயாரிப்பாளர்கள், இயக்குனர் உன்னை நெருங்குவாங்க.. என்கிட்ட கேட்காம கால்ஷீட் கொடுத்திடாதே.."

" சரிங்க.."

" உன்னை எந்த உசரத்தில் கொண்டு போய் சேர்க்கணும்னு எனக்கு தெரியும்.. என்கிட்ட மோதக்கூடிய பணமோ, பலமோ இண்டஸ்ட்ரில யாருக்கும்
கிடையாது .. தெரியுமுல்ல.. "

" ஆமாங்க.."


" ஆனா அதுக்கு நீ ஒண்ணு செய்யணும்...எனக்கு ----------------- இருக்கணும்.."

" அய்யோ , மன்னிச்சுடுங்க சார்.. நவீனும் நானும் உயிருக்குயிரா ......"


" சுத்த பையித்தியக்கார பொண்ணாயிருக்கியேம்மா.. அவன் ஹீரோ.. அவன் ஆயுசுக்கும் நடிச்சுட்டே இருப்பான்.. ஆனா இண்டஸ்ட்ரீல பெண்ணோட மதிப்பு அவ வயசுக்குத்தான்... அதான் சில பெரிய நடிகையெல்லம் இப்படி செட்டில் ஆயிடுறாங்க . கேள்விப்பட்டதில்லையா.? "

--------------------------------------------------------


5 வருடத்துக்கு பின்...

" ஹலோ..."

" ஏங்க நாந்தான்.. எப்ப நம்ம கல்யாணம்.?"


" நீயா.. இந்த நம்பர் புதுசா இருக்கே.. சரி ரொம்ப தொந்தரவு பண்ணாத.. நான் ஸ்விட்சர்லாந்து போய்ட்டு வர 3 மாதமாகும்..
ஏதாச்சும் சீரியல் ல அம்மா , அக்கா வேஷத்துக்கு முயற்சி பண்ணேன்... என்னை இனி அணுகாதே .. நான் ரொம்ப பிஸி.."

" என்னங்க இப்படி சொல்றீங்க.. உங்களை நம்பி எந்த படத்துக்கும் ஒத்துக்காம என் வாய்ப்புகளையெல்லாம் விட்டேனே.. நீங்க கல்யாணம் பண்ணிக்கிறேன்னு..."


" இத பாரு...இது சகஜம் இந்த இண்டஸ்ட்ரீ ல..பொலம்புரத விட்டுட்டு, பொழைக்கிற வழிய பாரு.."


" நான் சும்மா விடமாட்டேன் உங்களை.. எங்கிட்ட சாட்சி இருக்கு..."


" என்ன செய்யணுமோ செய்யும்மா.. வரட்டா.. உடம்பு பத்திரம்.."

---------------------------------------------------------------

" இன்ஸ்பெக்டர் சார் , அந்த நடிகை நம்மை ரொம்ப தொந்தரவு செய்றாப்ல..."

" சொல்லிட்டீங்கல்ல.. செஞ்சுருவோம்...நீங்க நல்லபடியா பேசுற மாதிரி அவள அந்த விடுதிக்கு மட்டும் வர சொல்லிடுங்க.."

---------------------------------------------------------------

" அட என்னம்மா இது.. கோழையாட்டம் தற்கொலை அது இதுன்னு..."

" மேனேஜர் சார்.. பார்த்தீங்கதானே?.. என்கூட 5 வருஷமா இருக்கீங்க.. நடந்ததெல்லாம் உங்களுக்கு தெரியும்தானே?."


" விடுங்கம்மா.. சில ஊடகம் இப்படித்தான் போடுவாங்க .. அதுக்கு சில காவலர்களும் ஆதரவு ..என்ன செய்ய,..பெண் னா விபச்சாரினு..நா கூசாம எழுதுவாங்க."

" எனக்கு உயிரோட இருக்க பிடிக்கல சார்.."

" அட என்னகங்கம்மா நீங்க.. உயிர விட்டா அவனுங்க சொன்னது நெசமாயிடும்.. காலையிலேயிருந்து எத்தனை அழைப்புகள் தெரியுமா.?"

" எதுக்கு சார்.. " பயத்தோடு...


" பல கட்சியில் உங்களை கூப்பிடுறாங்கம்மா.."

" நிஜமாவா.?"


" ஆமாம்மா.. அதிலும் ஆளுங்கட்சி பிரமுகர் நேரில் சந்திக்க ஆள் அனுப்புவதாய் சொல்லிருக்கார்...இனி கவலை பட ஓண்ணுமேயில்லை.."

" எனக்கென்ன அரசியல் தெரியும் சார்.."


" எல்லாம் கத்துக்குவீங்க.. இனி நீங்க அந்த தயாரிப்பாளரை ஒரு கை பார்க்கவாவது அரசியலில் சேர்ந்தே ஆகணும்மா.. "

" ஏன்
என்னை போய் கூப்பிடணும் சார்.. என்னை பற்றி இத்தனை மோசமா செய்திகள் வந்தும்.?"


" அதான் மா ரகசியம்.. இனி நீங்க இழக்க எதுவுமேயில்லை.. எதையும் தாங்கும் இதயம் உங்களைப்போன்றவர்களிடம் மட்டும்தான் இருக்கும்... விமர்சனம் என்ற சாக்கடையை அலட்சியம் செய்ய உங்களால் மட்டும் தான் முடியும்... "

" ஆமா சார்.. இகழ்ச்சியே எனக்கு இப்ப துணையா இருக்கு.. இனி என்னைப்பற்றி பேசினாலே அது விளம்பரமாயிடும் எனக்கு.... இனி என் வாழ்க்கையில் நான் செய்ய நினைத்தவற்றை துணிவா செய்யலாம்... "

" அம்மா , அப்ப மொதல்ல போன் போட்டு தகவல் சொல்லிடுறேன் கட்சிக்கு..."



" ஆமா சார். அப்படியே அந்த தயாரிப்பாளருக்கும் ஒரு நன்றி சொல்லிடுங்க...என் சார்பில்.."