Thursday, January 21, 2010

சிக்கு புக்கு ரயில் அண்ணா..சிறுவர் கதை..




சிக்கு புக்கு ரயில் அண்ணா..




[ என் மகனுக்கு தினசரி கதை சொல்வது வழக்கம்.. சொல்லாவிட்டால் தூங்க மாட்டார்..இதற்காக நானும் பெரிதாக தயாரித்துவைத்துக்கொள்ளவும் முடியாது.. படுத்ததும் கற்பனையில் என்ன தோணுதோ அதுதான் கதை..

அப்படி நேற்று இந்தக்கதையை சொன்னதும் அவருக்கு ரொம்ப பிடித்து ரயில் அண்ணாவோடு
ஒன்றிவிட்டார்.. இதே போல மரங்கள் விலங்குகளோடும்..

அவருக்கு சொன்ன கதைகளை , பாட்டுகளை வைத்து ஒரு புத்தகமே போட்டிருக்கலாம்..:)
இப்பவாவது சில கதைகளை எழுதி வைக்கலாம்னு தோணியது..

இக்கதைகளை படிக்குமுன்பு 4-5 வயது சிறுவறாய் மாறிடுங்கள் ரசித்திட..]


" கூஊஊஊஊஊஊஊஊ. குச்...குச்...குச்...குச்.................."

" வந்தாச்சு வந்தாச்சு ரயில் அண்ணா , வந்தாச்சு...."


" பேராண்டி ஒனக்கும் ரயில் அண்ணாவா?.. எங்களுக்குத்தான் அவர் அண்ணா. உங்களுக்கெல்லாம் ரயில் மாமா.."


" இல்ல தாத்தா எங்களுக்கும் ரயிலண்ணா தான் .."

" என்ன முத்தையா சார், பேரப்பிள்ளையோடு பேரம் ? ." ரயிலண்ணா..

இப்படித்தான் அந்த தானியங்கி ரயில் எல்லோர் மனதிலும் உறவாய் ஆக்கிரமித்திருந்தது கடந்த பல வருடங்களாக... மலை தேச ரயில் மட்டுமல்ல , இதுவரை ஒருமுறை கூட விபத்து ஏற்படாமல் பயணிகளை பத்திரமாக சேர்ப்பதோடு அவர்களுக்கு பிடித்த வளைவு நெளிவான மலைகளில் நிறுத்தி நிதானமாக இயற்கை எழில் காட்சிகளை கண்டுகளித்திடவும் செய்வார் ரயிலண்ணா.

ஆறிலிருந்து அறுபது வரை அவருக்கு விசிறிகள் உண்டு...


ரயிலில் ஏறி அமர்ந்ததுமே இசைக்க ஆரம்பித்துவிடுவார்... அந்த மகிழ்ச்சியில் இணைந்து பயணிகளும் தாளத்துக்கேற்ப பாடலோடு ஆடவும் ஆரம்பித்திடுவார்கள்.. ரயிலை யாரும் அசுத்தப்படுத்துவதும் கிடையாது.. கீழே இறங்குமுன் தன்னால் முடிந்தளவு சுத்தப்படுத்திவிட்டே செல்வார்கள்.. இதை காணும் ரயிலண்ணாவுக்கு விழிகளில் நீர் முட்டும்... அதை அவர் சில சமயம் ஆவியாய் வெளியிடுவார்...

இப்படி மகிழ்வோடு இருந்த நாளில் வந்தது சோதனை...
நீலகிரி மலையில் சென்று கொண்டிருந்தபோது கனத்த மழையினால் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்தமையால் கவனமாகவே சென்ற ரயிலண்ணா சிறிது தடம் புரண்டுவிட்டார்... உடனே நிறுத்தியும் விட்டார், பயணிகளுக்கு சேதம் ஏதும் ஏற்படாமல்... எல்லோரும் இறங்கி வந்து அதிகாரிகளுக்கு தகவல் அனுப்புவதுமாய் பாதையை செப்பனிட உதவுவதுமாய் இருந்தார்கள்..

அதிகாரிகள் வந்து பார்த்துவிட்டு இந்த ரயிலுக்கு வயதாகிவிட்டது கேரேஜில் வைத்திடலாம் என அறிக்கை சமர்ப்பித்து சென்றார்கள்..

கேரேஜில் வைக்கப்பட்ட ரயிலண்ணாவுக்கு மிகுந்த கவலையாகிவிட்டது...ஆனாலும் அங்கும் வந்து குழந்தைகளும் பெரியவர்களும் குடும்பத்தோடு வந்து விளையாடி சென்றனர்.. இருப்பினும் ரயிலண்ணா கவலை தீரவில்லை...

இதை கவனித்த குழந்தைகள்


" ரயிலண்ணா, ரயிலண்ணா, ஏன் முன்பு மாதிரி நீங்க மகிழ்ச்சியா இல்லை ?.."


" குழந்தைகளே , எனக்கு இன்னும் நல்ல தெம்பு இருக்குது பயணம் செய்ய.. ஆனால் சின்ன விபத்தால் என்னை இங்கே கொண்டு வந்து போட்டுவிட்டார்கள்.
ஏதோ புது ரயில் வரப்போகிறதாம்.. அதான் ... என்னோட உறவுகள் ஒவ்வோரு ஊரிலும் இருக்காங்களே அவர்களெல்லாம் என்னை தேடுவார்களே.. இப்படி சொல்லாமல் கொள்ளாமல் நின்றுவிட்டால் அவர்கள் பாடு பரிதாபமல்லவா?.." என வருந்தியது...

" அழாதீங்கண்ணா ...நாங்கல்லாம் இருக்கோம்.."

[[ இதை சொல்லிக்கொண்டிருக்கும்போதே சின்னவருக்கு பொத்துக்கொண்டு வருது வீரமும் , சோகமும்..... அதுவரை ..ம்..ச்.. கொட்டிக்கொண்டிருந்தவர் , " நான் அந்த கேரேஜை திறந்து அந்த ரயிலண்ணாவை
உடனே விடுவித்துவிட்டு வெளியில் ஓட செய்வேனே... ".. பொறுமை பொறுமை என அடக்கவேண்டியிருந்தது.. ]]]

" நீங்கல்லாம் சின்ன பிள்ளைகள் .. என்ன செய்ய முடியும்.. பரவாயில்லை...நான் உங்களுக்காக இனி மகிழ்ச்சியாக இருக்க முயல்கிறேன்.." ரயிலண்ணா கண்ணீரை துடைத்துக்கொண்டார்..

எல்லா சிறுவர்களும் வீடு சென்று எப்படியாவது இந்த ரயிலண்ணாவை விடுதலை செய்யணும்னு ஒரே பிடிவாதம் . அன்றிரவே ஊர் கூடியது..குழந்தைகளின் தொல்லை தாங்காமல்


அதிகாரிகளிடம் பேசினார்கள் பெரியவர்கள்... அதிகாரிகளும் வந்து பார்த்து சின்ன சின்ன கோளாறுகளை செப்பனிட்டார்கள்...


ரயிலண்ணா ஓட தயாரானார்.. அப்பதான் ரயில் அழுக்கேறி இருப்பதை பார்த்த குழந்தைகள் ரயிலண்ணாவுக்கு வண்ணம் தீட்டினால் என்ன என யோசனை சொன்னார்கள்.


அதற்கு அதிகம் செலவாகும் என சொன்னதும் எல்லோரும் வீட்டுக்கு சென்று உண்டியலையும் தம் சேமிப்பையும் எடுத்து வந்தார்கள்..
மொத்தமே ஆயிரம் ரூபாய் கூட தேரவில்லை...எல்லோருக்கும் சிரிப்பு..

இருப்பினும் குழந்தைகளின் உற்சாகத்தை பார்த்த அதிகாரிகள் ரயிலுக்கு வண்ணம் தீட்டுவதோடு பலவிதமான விலங்குகள், இயற்கை காட்சிகள் நிறைந்த
படங்களையும் ரயிலில் வரைய உத்தரவிட்டார்..

ரயிலண்ணா இப்போது மிக இளமையாக தோற்றமளித்தார்... முன்பை விட பன்மடங்கு உற்சாகத்தில் விசிலடித்துக்கொண்டே கிளம்பியதும் அந்த
உற்சாகம் அனைவருக்கும் தொற்றிக்கொள்ள எல்லோரும் ஏறிக்கொண்டனர் அந்த சோதனை ஓட்டத்தில்...

குழந்தைகளுக்கோ பெருமை பிடிபடவில்லை....

Wednesday, January 6, 2010

MP உயர்திரு.பீட்டர் அல்போன்ஸ் அவர்களுக்கு எம் நன்றி.

MP உயர்திரு.பீட்டர் அல்போன்ஸ் அவர்களுக்கு எம் நன்றி.

ஒவ்வொரு வருடமும் 1 மாதம் முன்புதான் ரயில் பயணத்துக்கான முன்பதிவு செய்வது வழக்கம்.

விமான பயண தேதி கன்பர்ம் ஆனதுமே ரயில் பயண டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்..

அதே போல் இந்த வருடமும் செய்தால் நெல்லைக்கு செல்லும்போது RAC . திரும்பும்போது WL.

நெல்லைக்கு செல்லும்போது கன்பர்ம் ஆனது.. ஆனால் திரும்பும்போது WL ..15,16,17

சரி எப்படியும் கன்ஃப்ர்ம் ஆகிடும் என்று நம்பிக்கையோடு இருந்தேன்..

ரயில்வேயில் பொறியாளராய் இருக்கும் என் அக்கா கணவரிடம் சொன்னபோது EQ போடலாம் , பயம் வேண்டாம் என சொன்னார்.

ஆனால் ஸ்டேஷனுக்கு வரும்போதும் WL 5, 6 , 7 என்றே இருந்தது..

2 AC பெட்டியில் உள்ள உதவியாளரிடம் கேட்டால் வெயிட்டிங் லிஸ்ட் பயணியை

ஏற்ற விடமாட்டார்கள் , ஆனால் பரிசோதகர் மனது வைத்தால் ஒருவேளை முடியும் என சொன்னார்

6.30 க்கு வண்டி புறப்படும் நேரம்.

6 மணியளவில் திரு.பீட்டர் அல்போன்ஸ் குடும்பத்தினர் அதே பெட்டிக்கு வந்தார்கள்..

என்னை வழியனுப்ப வேறு அக்கா , அண்ணா, குழந்தைகள் என பெருங்கூட்டம்..

பரிசோதகர் 6.15 க்கு வந்தார் . கேட்டபோது தயவுசெய்து ஏறாதீங்கன்னு சொல்லிட்டார்.

என்ன செய்வதென்றே தெரியவில்லை..

ஆளாளுக்கு யோசனை.. வாகைக்குளத்திலிருந்து விமானத்தில் செல்லல்லாம் என்றால் அங்கும் உடனடியாக டிக்கெட் கிடைக்காதாம்.

சென்னை வரை காரிலேயே பயணிப்பது ????

பஸ்ஸில் இத்தனை பெரிய பெட்டிகளை எப்படி ஏற்றுவது?.பஸ்ஸில் டிக்கெட் வேறு உடனே கிடைக்காது..

6.20 ஆனதும் 2AC உதவியாளர் என் நிலைமையை பரிதாபத்தோடு பார்த்து பெட்டியை வண்டியில் ஏற்றிக்கோங்கம்மா என சொல்லிவிட்டு

நான் சொன்னதாக சொல்லிடாதீங்கன்னார்..

கடைசியில் வேறு வழியின்றி அருகிலிருந்த MP திரு.பீட்டர் அல்போன்ஸ் அவர்களிடம் நேரடியாக சென்று என் பிரச்னையை சொன்னேன்..

அவரும் நான் பேசி முடிப்பதற்குள்ளேயே உடனே வண்டியில் ஏறிக்கோங்க ன்னு சொன்னாங்க..

என் குடும்பத்தாருக்கு மிக்க மகிழ்ச்சி...

பின் பரிசோதகரிடம் அவர் சொன்னபோது கண்டிப்பா 2 AC யில் டிக்கெட் இல்லை என அவர் சொல்ல., 3 AC க்கு

மாற்றிக்கொடுத்தார்கள்.. MP ஐயாவின் உதவியாளர்கள் ( நெல்லை கவுன்சிலர் ஐயா - பேர் தெரியவில்லை..மன்னிக்கவும்.)ஓடி ஓடி எனக்கு உதவினார்கள்..

அவர்கள் கோட்டாவில் உள்ள டிக்கெட் கொடுத்து எனக்கு

உதவி குழந்தைகளோடான என் பயணம் மகிழ்ச்சியாக அமைய பெரிதும் உதவினார்கள் ,.

கடவுள் போல் தக்க சமயத்தில் வந்து உதவிய MP உயர்திரு.பீட்டர் அல்போன்ஸ் அவர்களுக்கும் அவர்கள் உதவியாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..

Friday, December 4, 2009

கிறுஸ்மஸ் மரமும் குழந்தைகளும் கேக்கும்..






கிறுஸ்மஸ் பண்டிகை வருகின்றபோதே அந்த குளிரும், கிறுஸ்மஸ் மெல்லிசை பாடல்களும் ஊரெங்கும் அலங்கார விளக்குகளும் மனதில் விவரிக்க முடியாத ஒரு குழந்தைத்தனமான மகிழ்ச்சியை நம்மில் கொண்டு வருகின்றன...

ஒவ்வொரு முறையும் ஊருக்கு செல்வதிலேயே குறியாய் இருப்பதால் சாமான்கள் பட்டியலிட்டு யார் யாருக்கு என்னென்ன வாங்கிடணும் என அலைந்து திரிந்து
வாங்குவதே இன்னொரு மகிழ்ச்சி..

கிறுஸ்மஸ் என்றாலும் பகிர்தல்தானே?
அலுவலில் வேலை அதிகமாய் இருந்தாலும் இம்முறை கிறுஸ்மஸ் மரம் அலங்கரிக்கணுமா என கேள்வியாய் இருந்தது..

பெரியவருக்கு தேர்வு நேரம் ..
சரி அவனை தொந்தரவு படுத்தாமல் நாமே வைத்திடலாம் என அலாமாரியின் மேலுள்ள கிறுஸ்மஸ் மரத்தையும் அலங்கார பொருள்கள் உள்ள பெட்டியையும் எடுத்து வந்து பிரிப்பதற்குள் சின்னவர் குதூகலத்தோடு வந்து ஒவ்வொன்றாய் வெளியில் எடுத்து பரப்ப ஆரம்பித்தார்..

சரி இனி அவருக்கு ஒரு வேலையை கொடுத்தால்தான் நாம் ஒழுங்காக மரத்தை விரிக்க முடியும் என நினைத்து நான்
மரத்தை ஒழுங்குபடுத்த படுத்த அலங்கார தோரணங்களை மரத்தில் மாட்ட சொன்னேன்..

அவரும் அவர் விருப்பப்படி மாட்டவும் அது கீழே விழவும் ஓடி சென்று பிடிக்கவுமாய் ஒருவழியாய் குழந்தையின் கைவண்ணத்தில்
மரம் தயாரானது. இப்ப விளக்கு போடணும்...

எல்லா விளக்குகளையும் எடுத்து வைப்பதற்குள் அப்பா வரவும் சரியாய் இருந்தது...
வந்ததுமே குழந்தையின் உற்சாகத்தில் அவரும் உற்சாகமாய் ஒவ்வொரு சீரியல் பல்புகளை எடுத்து பரிசோதனை செய்து அதை மரத்தில் மாட்டினார்..

4 செட் சரியாக இருந்தது முக்கியமான இசையோடான விளக்கு மட்டும் எரியவில்லை..
அதுதான் விலையும் அதிகம்.. நீளமும்.. அதை போட்டாலே பளிச்சென உற்சாகம் வரும்... எரியவில்லை என்றதும் உடனே குப்பையில் போட்டார் .

நமக்குதான் மனசு கேட்காது .. உபயோகமில்லை என தெரிந்தாலும் பெண்களுக்கு
உடனே கடாசிவிட மனம் வருவதில்லை எதையும் எப்போதும்...ஏனோ.?

ஒருவழியாக கிறுஸ்மஸ் மரம் ரெடியாகி வீட்டின் விளக்கெல்லாம் அணைத்துவிட்டு பாடலும்
போட்டு ரசித்தாகிவிட்டது...

அடுத்து கேக் செய்ய உட்கார்ந்தால் ரகசியமாக செய்யலாம் என சமையலரைக்குள் நுழைந்தால் வாலு போல பின்னாலே
தொடர்கிறார்கள் வால்கள் இரண்டும்..

" அம்மா என்ன செய்ய போறீங்க..?"


" ஒண்ணுமில்லை சஸ்பென்ஸ்.."

மாவு பட்டர் எல்லாம் சேர்த்து ஓவனில் வைக்க அறைக்கு வெளியே எடுத்து வரும்போது
ஆளாளுக்கு வந்து கரண்டியை வைத்து கிண்ட ஆரம்பித்துவிட்டார்கள்..
முதலில் கத்த தோன்றியது.." சும்மா இருங்கள் "என்று.


அப்புரம் சரி அவர்களும் பங்கெடுக்கட்டும் என விட்டால் மாவை வேகமாக கிண்டி விழிம்பெல்லாம் வழிந்து....


சரி சரி விலகுங்கள் , உங்களுக்கென இன்னொரு நாள் தனியாக கேக் செய்யலாம் என சொல்லி விலக்கிவிட்டால் ,
கேக் பொங்குதா என முகத்தை ஓவன் கிட்ட வைத்து பார்த்து .

.கடைசியில் கேக் வந்தது கொஞ்சம் கடினமாகவே..


( ரொம்ப கிண்டினா இப்படித்தான்..:( )

அடுத்து டிசம்பர் 5ம்தேதி செல்லவிருக்கும் கிறுஸ்மஸ் நாடகத்துக்கும் சிறிது ஒத்திகை பார்த்தோம்.


கிறிஸ்து பிறப்பு குறித்த நாடகம்..

பெரியவர் நாடகத்தை வாசிப்பவர்..
சின்னவர் ஆடு மேய்ப்பாளராய்..


அதற்கேற்ற உடையை போட சொன்னால் மாட்டேன் நான் ஜீன்ஸ் தான் போடுவேன் என அடம்பண்ண.
ஒருவழியாய் அதற்கொரு கதை சொல்லி சமாதனப்படுத்தி நாடக ஒத்திகையும் முடிந்தது..

இப்படியாக கிறுஸ்மஸ் ஆரம்பித்தது இங்கு...

Saturday, November 14, 2009

சந்தீப்பின் சந்திப்பு




சந்தீப்பின் சந்திப்பு

வாரக்கடைசி இரு நாட்கள் உங்களோடு செலவிட வருவான் சந்தீப் என ஒரு மாதம்
முன்பே காகிதம் அனுப்பிவிட்டார்கள் பள்ளியில்.

அவனோடு சனி, ஞாயிறு இரு தினங்கள் செலவழித்து அதை பற்றி புகைப்படத்தோடு
சில வரிகளும் எழுதி ஆல்பம் ஒன்றில் ஒட்டணும். பின் பள்ளியில் அவனோடு
கழித்த அந்த இரு நாட்களைப்பற்றி சுவாரஸ்யமாக சொல்லணுமாம்.


காத்திருந்த சந்தீப் நேற்று வந்துவிட்டான்.

வீட்டுக்குள் நுழையும்போதே, , " அம்மா உங்களுக்கு ஒரு அதிசயம்
காத்திருக்கின்றது கண்டுபிடியுங்கள் பார்ப்போம் " என மாலைப்பொழுதை
இனிமையான புதிரோடு வரவேற்ற குழந்தை.

நானும் ஐன்ஸ்டீன் அளவு யோசித்து ஒண்ணும் முடியாமல் உதட்டைப்பிதுக்கிய
பொழுது, சட்டென்று முதுகுக்கு பின்னாலிருந்து வந்தான் சந்தீப்..

வாவ், என மிகப்பெரிய ஆச்சர்யத்தோடு சந்தீப்பை தழுவி நலம் விசாரித்து
முடிப்பதற்குள் , சந்தீப்புடனான பிரயாணங்களுக்கு திட்டமும் கூடவே
சொல்லப்பட ஆச்சர்ய விழிகள் இப்போது பயத்தில்..

சந்தீப்பை உடனே நீச்சல் குளத்துக்கு அழைத்து சென்றனர்.

முடிந்து வந்ததுமே, வாராந்திர சாமான் வாங்க செல்லும் மாலுக்கு அழைத்து சென்றோம்.

சந்தீப்பை எங்கு உட்கார சொல்வது முன் சீட்டிலா பின் சீட்டிலா என்ற
கருத்தாய்வுகள் தொடர்ந்து முன் சீட்டிலேயே அமர்ந்தான்.

சந்தீப் வந்ததால் இன்று மட்டும் ஐஸ்கிர்ரிம் வாங்கிக்கொள்கிறேனே என
கெஞ்சும்போது என்ன சொல்ல ?. பெரியவன் எனக்கும் வாங்கிக்கவா என கேட்க,
க்ர்ர்ர்ர்ர்ர், வேண்டாம் நீ வாங்கினால் எனக்கும் ஆசை வந்திடும் , என
தடுப்பதை பார்த்து சந்தீப் யோசித்திருக்கலாம்.

வீடு வந்ததும் , கொஞ்சம் விளையாட்டு , பின் ,இப்ப சந்தீப்பை எங்கு தூங்க
சொல்வது?... யார்கூட?..

தன்கூடவே படுத்துக்கொள்ளணும் என குழந்தை சொல்ல சந்தீப்புக்காக இடம்
ஒதுக்கப்பட்டது..

காலை எழுந்ததுமே ஒவ்வொருவராக வந்து சந்தீப்புக்கு காலை வணக்கம்
சொல்லவும், சந்தீப்புக்கு வெட்கம் போல.

பெரியவர் , சந்தீப்ப்பிடம் வழியனுப்பிவிட்டு பள்ளிக்கு செல்ல நானும்
சின்னவரும் சந்தீப்புடன் மார்கெட் சென்று வந்தோம்.. சீட் பெல்ட்
போட்டதிலிருந்து திரும்ப வீடு வந்து சேரும் வரை சந்தீப்பின் கேள்விகளாய்
குழந்தை கேட்க, ஒரே கதாகலாட்சேபம் தான்.

சில பதில்களில் திருப்தியடையாதபோது நான் சிறிது எரிச்சல்பட்டுவிட,
சந்தீப் முன் எரிச்சல்பட்டதுக்கு ரொம்பவே அவமானப்பட்டார் குழந்தை.

பின் இருவரிடமும் மன்னிப்பு கேட்கவேண்டியதாயிற்று.

வந்து உணவருந்திவிட்டு, சிறிது நேரம் ஆங்கில வார்த்தை கொண்ட சீட்டுகள்
விளையாடிவிட்டு, தூங்கிவிட்டனர் இருவருமே சோபாவில்.

அப்பாடா ஒருவழியாய் போன மாத ஆ.வி படிக்க நேரம் கிடைத்ததென்று நான் படிக்க
உட்கார, தூக்கத்தினூடையே, " அம்மா, சாயங்காலம் தயாராக இருங்கள்,
சந்தீப்பை பூங்கா அழைத்து சென்று ஊஞ்சலில் விரைவா ஆட்டிவிடணும் " என
சொல்லிவிட்டு, மீண்டும் தூங்க....ஆச்சர்யத்தில் நான்..

கவனமாக சந்தீப்போடு எடுத்த படங்களை பெரியவர் வந்து பார்த்து கமெண்ட் அடிக்க ,

இதோ கிளம்பிக்கொண்டிருக்கிறேன் பூங்காவுக்கு சந்தீப்போடு..

சந்தீப் யாரென புரிந்தீர்கள்தானே..?


சிறுவர்தின பதிவு..

Wednesday, November 11, 2009

காவ் சாம் லாய் யாட் - 300 சிகர மலைகள்...












தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலிருந்து சுமார் 400 கிமீ தொலைவில் உள்ளது காவ் சாம் லாய் யோட் ( 300 சிகரம் கொண்ட மலை ) .கடற்கரையை ஒட்டி அமைந்திருப்பதே இந்த இயற்கை பூங்காவுக்கான விசேச அழகும்.

மலைகளில்
காணப்படும் சுண்ணாம்புகல் பாறைகளால் கடற்கரையே வெண்மையாக காட்சியளிக்குது.
குகைகளுக்குள்ளே இந்த சுண்ணாம்புக்கல் வடிந்து அழகிய சிற்பமாக வடிவெடுத்து பார்ப்பவரை கொள்ளைகொள்ளச்செய்கிறது.

இங்கேயே சதுப்பு நிலமும், அலையாத்திக்காடுகளும் இருந்தாலும் முக்கியமானது தம் ப்ரயா நக்கோன் ( Tham Phraya Nahon) என்கிற மலைக்குகைதான்.. சுமார் 1.5 கிமீ செங்குத்தான மலை மீது ஏறி இறங்கி மலையின் அடுத்த பக்கம் செல்லலாம் அல்லது நடக்க , ஏற விரும்பாதவர்கள் , படகில் அடுத்த கறைக்கு செல்லலாம்..

மலைமீது
ஏற்பவர்கள் மலை உச்சியில் கடல் சூழ்ந்த இடங்களையும் , குட்டி குட்டியாய் தெரியும் படகுகளையும் கண்டு
வியக்கலாம்..
ஆனாலும்
கொஞ்சம் ஆபத்தானது மலையேற்றம்..



கரணம்
தப்பினால் மரணம் என்பதுபோல , கொஞ்சம் பயத்தில் ஆடினாலும் விழ வாய்ப்புள்ளது.


இந்த
சதுப்பு நிலக்காடுகளை தேடி பல பறவைகள் குடிபெயர்ந்து சரணாலயம் போல் ஆனது..கிட்டத்தட்ட 100 சதுர கிமீ.அளவு கொண்டது இந்த பூங்கா..
மலையின் அந்தப்பக்கம் அடைந்ததும் மீண்டும் செங்குத்தான பயணம் சுமார் 500 மீட்டர்..

முதல்
மலையிலாவது சிமெண்டால் ஆன பாதையும் கம்பியும் போட்டு ஏற நடக்க வசதியாக இருக்கும்.
ஆனால் இந்தப்பாதை இய்றகையாகவே கற்களால் அமைக்கப்பட்டுள்ளது..

முதல்
சிலபடிகளில் கால் வைத்ததுமே மூலிகைகளின் வாசனை நாசியை துளைக்கின்றது..
கிட்டத்தட்ட நார்த்தாங்காய் இலையின் மணம் . அல்லது லெமன் கிராஸ் எனப்படும் செடியின் மணம்.. , வெகு சுகமாக இருக்குது..

தினம் பெய்த மழையில் படிகளில் உள்ள மண் ஈரம் பிடித்து பிசுபிசுப்பாக வழுக்காகவும் இருந்தது.
நல்ல காலணி அணிந்திருந்தால் நடப்பதும் ஏறுவதும் எளிது. அல்லது காலை பதம் பார்க்கும் கற்கள்..

கிட்டத்தட்ட டார்சான் வாழ்ந்த காடுகள் போல செடிகளும் கொடிகளும் சுர்றிலும் சூழ அதை விலக்கி நடக்கணும்.. சின சின்ன ஒளிக்கீற்றுகள் அம்மர இடுக்கிலிருந்து எட்டிப்பார்ப்பதும் ,, பறவை, பூச்சிகளின் சத்தங்களும் , நலம் விசாரிப்பது போன்றதொரு அழகு..

பாதி தூரம் ஏறியதுமே தாகம் எடுக்கிறது.. மேலே சென்றவர் கீழே இறங்கிவர நம் ஆயாசத்தை பார்த்து அவர்களாகவே தண்ணீர் வேணுமா என கேட்க , மறுக்கமுடியவில்லைதான். இறுதியாக உட்கார்ந்து உட்கார்ந்து ஒருவழியாக குகைகளை சென்றடைந்ததும் , பிரமிப்பூட்டும் அந்த குகையும் அதன் உச்சியில் இருந்து விழும் ஒளியும், நடந்து வந்த அலுப்பை மறக்க செய்கிறது. காவலர் ஒருவர் தண்ணீர் தருகிறார் அனைவருக்கும் சிறு தொகை பராமரிப்புக்காய் பெற்றுக்கொண்டு...

வெளிநாட்டினர் கைக்குழந்தைகளையும் தூக்கிக்கொண்டு சிறுஅவர் சிறுமிகளை நடத்திக்கொண்டு வெகு லாவகமாய், ஆர்வமாய் செல்வதை பார்த்தாலே நமக்கும் ஆர்வம் தொற்றிக்கொள்ளுது. குகையின் நடுவில் புத்தர் கோவில் உள்ளது.. அதனை சுற்றி வித்யாசமான பெரிய பெரிய பாறைகளும்..


தாய்லாந்து வந்தால் பார்க்க வேண்டிய குகைக்கோவில்.

Friday, October 16, 2009

ஆமா, நானும் புகை பிடிக்கிறேன்






விடியற்காலையில் ஆதவன் வருகையை
விழிவைத்து பார்த்து ரசிக்கையில் விரைவாய் நாசி ஏறுது கீழ்வீட்டிலிறுந்து
விழுங்குவது போல் சிகெரெட் புகை


ஆமாம் நானும் புகை பிடிக்கிறேன்.


அரக்க பரக்க அலுவல் செல்ல

அள்ளிபோட்டதை வாயில் மெல்ல

அருகே புகை வர , பிடிக்கிறேன்

அஞ்சு பைசா செலவில்லாமல்


ஆமாம் நானும் புகை பிடிக்கிறேன்.


மனம் மகிழ சினிமாவுக்கு போனா
மப்போடு மனிதன் பின்னாலிருக்க

மயக்கமாய் வருது புகை நெளிந்து

மன்றாடினேன் , புகை பலமாய் வருது.


ஆமாம் நானும் புகை பிடித்தேன் விரும்பாமலே..



( கீழ் வீட்டில் இருந்து புகை வருது பால்கனி வழியே. புகைபிடிப்பவனை திட்ட முடியாமல் அவசரமாய் ஒரு கவிதை..:)) )

பாசிவ் ஸ்மோகிங் தான் அதிக ஆபத்தும்.. தயவுசெய்து நிறுத்துங்க மக்களே...:)

தெளிவு.. ( குட்டிக்கதை )



house.jpg


ஊருக்கு போகிற மகிழ்ச்சியேதுமில்லாமல் பெட்டியை கடமைக்காக அடுக்கிக்கொண்டிருந்தார் கதிரேசன்.

ஒரு வார காலமாக சுறுசுறுப்பு ஏதுமில்லாததை கவனித்திருந்தான் ஹமீது..

கேட்கணும்னு நினைத்தாலும் தன்னை விட வயதிலும் பதவியிலும் பெரியவராய் இருப்பதால்

வாய் வரை வந்ததை தள்ளிப்போட்டே வந்தான்..ஆனால் இப்ப கேட்டே விடுவது என கேட்டான்.

" கதிரண்ணா , நானும் பாக்குறேன் ஒரு வார காலமா ஊருக்கு போற உசாரில்லாம இருக்கிறீகளே.. ஏன் ணா?.."

" அதொண்ணுமில்லப்பா.. சம்பாதிப்பது மட்டுமே நம்ம பொழப்புன்னு ஆயி போச்சு..கடைசி வரை இதான் போல.."

வெறுமையோடு சொன்னார்..

" அதுக்கேண்ணா வருந்தணும்.. நம்ம குடும்பம் நல்லா இருப்பது பெருமைதானே நமக்கு.. அதுக்கு சின்ன தியாகம்னு நெனச்சுக்கோங்க.."

" அப்படித்தான் நெனச்சு 15 வருசம் ஓட்டிட்டேன்.. ஆனா ஒவ்வோரு முறையும் ஊருக்கு போய்விட்டு வரும்போது அங்க நடக்கிற ஆடம்பரமும், அவங்க எதிர்பார்ப்பும்

எனக்கு கவலை அளிக்குது.. பணம் என்பது தேவைக்குத்தான் என்ற நிலை மாறி, விட்டா நாய்க்குட்டிக்கு தங்க பிஸ்கட் போட்டாலும் போடுவாங்க போல..இதைவிட சுற்றியிருக்கும் பொய் சொந்தங்களும்..ம்..ம். என்ன சொல்ல..."

"சரி ணா , அப்ப நான் சொல்றத கேளுங்க.."

கலங்கலாய் தெரிந்த மேகத்தை வருத்தமாய் பார்த்து விமானத்தின் ஜன்னலை மூடினார் தூங்கிட..

-------------------------------------------------------------------

விமான நிலையத்திலிருந்து இறங்கியதுமே விளங்கிப்போச்சு தன்னை வரவேற்க கால் டாக்ஸி மாட்டுமே வந்திருப்பதை..

நேராக வீட்டுக்கு போனதும் மனைவியும் குழந்தைகளையும் தவிர்த்து எப்போதுமிருக்கும் சொந்த பந்த கூட்டம் யாரும் இல்லை..

நிம்மதியாயிருந்தது.. ஆனாலும் காண்பித்துக்கொள்ளவில்லை..

குளித்து ,உணவருந்தி முடித்ததுமே மனைவியிடம் இருந்து வெடுக்கென கேள்வி வந்தது..

" வேலை போயாச்சு..அப்ப இனி என்ன செய்வதாய் உத்தேசம்?.. எங்க அப்பா கேக்க சொன்னாங்க.."

பதிலேதும் பேசவில்லை. கை கழுவிவிட்டு சென்றார்.

பெரியவனும் சின்னவளும் மலங்க மலங்க விழித்தார்கள்.. அப்பாவிடம் சகஜமாக எப்போதும் போல்
சிரித்து பேசலாமா , இல்லை அம்மா திட்டுவாளா என..

அவர்களுக்கு வாங்கி வந்த பொருள்களையும் தயக்கத்துடனே வாங்கி சிரிப்பை நன்றியாக உதிர்த்துவிட்டு சென்றார்கள்..

2 நாள் மெளனமாக கழிந்தது ,தொலைபேசி அழைப்புகள் கூட இல்லாது.. வித்யாசமாயிருந்தது..

முன்பெல்லாம் விருந்துண்ண பெரிய கால்ஷீட் தயாராகும்.. கூடவே ஊர்சுற்ற கார்களும் வேன்களுமாய் களைகட்டும்.....

சாயங்காலமாய் காலாற நடந்து வரலாம் என தெருவில் நடந்தால் தினமும் பார்ப்பவரை பார்ப்பதுபோல் கடமைக்காக

புன்சிரிப்பொன்றை உதிர்த்துவிட்டு சென்றார்கள்...தையல் கடை திருமால் மட்டும் மாறவில்லை.. அவன் கடையில் உட்கார்ந்து ஊர் நிலவரம் தெரிந்துகோண்டார்...

எங்கே வேலை கேட்டு தன்னிடம் வருவானோ என்ற பயம் சந்திக்கும் அனைவரின் முகத்திலும் படர்ந்திருந்தது..

ஒரு வாரம் கழித்தே மச்சினனும் மாமனாரும் வந்தார்கள்... அன்று மட்டும் விசேடமாய் கறிக்குழம்பு வாசம் அடித்தது வீட்டினுள்..

ஏற்கனவே திட்டமிட்டபடி அவர்களுக்கு சாதகமாய் வியாபாரத்தில் வந்து கலந்துகொள்ள வேண்டினார்கள்..

அதுவும் கூட தான் அனுப்பிய பணத்தில் வந்த வியாபாரம் என்பதை பேச்சிலும் தவறி உணர்த்திடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருந்தார்கள்..

தான் ஆசையோடு கட்டி குடியிருக்கும் வீட்டை விற்றுவிட்டு மாமனார் ஊரில் வந்து வாடகைக்கு வீடெடுத்து குடியிருக்க இலவச அறிவுறையும் வழங்கினார்கள்..

தன் முன் பேசவோ உட்காரவோ அஞ்சிய மைத்துணன் எல்லாம் இப்ப அறிவுறை அள்ளி வழங்கும் பெரிய மனிதனாக்கப்பட்டான்...தன் மனைவியாலேயே..

எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டார் கதிரேசன்..

படிப்பில் நாட்டம் காட்டாத மனைவி இப்போது பிள்ளைகளை எதிர்கால பயம் குறித்து மிரட்டி படிக்க வைத்தாள்..

கழுத்தில் ஏறியிருந்த கனமான நகைகளும் தலையில் உள்ள கனங்களும் இந்த ஒரு மாதத்தில் வெகுவாக குறைந்திருந்தது...

வருடாவருடம் இருப்பதுபோல் பேருக்கு கூட விருந்தாளியில்லை, கல்யாண வீடோ, திருவிழாக்களோ , ஷாப்பிங்கோ இல்லை..

மறுநாள் காலை வேலை தேடுவதாக சொல்லிவிட்டு 2 நாள் கழித்தே திரும்பி வந்தார்..

வந்ததும் இனியும் தன் விடுமுறை 2 வாரமே இருப்பதால் குடும்பத்தினரை வருத்திடக்கூடது என எண்ணியவராய், மனைவி பிள்ளைகளை அழைத்தார்.

வருமானம் தரக்கூடிய 2 தோட்டங்களையும் , அதனோடு அமைந்த வீட்டையும் விலை பேசியிருப்பதை காண்பித்தார்..

" இப்ப எதுக்கு இது " என அவசரப்பட்டு பேச முனைந்த மனைவியை செய்கையால் அமர்த்தினார்.

அருகிலுள்ள ஊனமுற்றோர் மற்றும் முதியோர் இல்லத்துக்கு மாதாமாதம் தான் பணம் அனுப்புவதாய் வாக்களித்த பத்திரத்தையும் காண்பித்தார்.

இவருக்கென்ன பித்து பிடித்ததா என எரிச்சலோடு உள்ளே செல்ல எண்ணிய மனைவி கையை பிடித்து அமர வைத்தார்..

மெதுவாக விளக்க ஆரம்பித்தார்..

ஒவ்வொரு முறையும் பணத்தோடு பொருளோடு வரும் தமக்கு கிடைத்த போலி மரியாதையையும், தன் இல்லத்தில் நிரம்பி வழிந்த

போலியானவர்களையும் அவர்கள் நடவடிக்கையையும் , தற்போது வேலையின்றி வந்ததால் ஏற்பட்டுள்ள மாற்றத்தையும் ஒப்பிட்டார்..

பிள்ளைகளுக்கு பொறுப்பை பற்றி நிதர்சனமாய் எடுத்துச்சொன்னார்..

மனைவியின் ஆடம்பரம் தேவையற்றதாகவும் , தற்போது ரசிக்கவோ , மதிக்கவோ ஆளில்லாமல் போனதையும் சுட்டிக்காட்டினார்..

நிஜமான மகிழ்ச்சியை ஊனமுற்றோர் , முதியோர் இல்லம் சென்று எப்படியெல்லாம் பெருக்கிக்கொள்ளலாம் என மென்மையாக சொன்னார்.. அதில் நம் எல்லோருக்கும் கடமை இருப்பதையும் எடுத்துரைத்தார்..

பொட்டில் அடித்தாற்போல் இருந்தது குடும்பத்தினருக்கு..

தான் மீண்டும் அதே வேலைக்கு வெளீநாட்டுக்கு செல்வதாக கூறினார்..

தாம் ஏமாற்றப்பட்டதை அறிந்தாலும் எல்லாம் நன்மைக்கே என்பதை கொஞ்சம் கோபத்தை காட்டிவிட்டு புரிந்துகொண்டாள் மனைவி..

அந்த நாளும் வந்தது... மனைவி கலங்கிய கண்களோடு ,

" பணம் மட்டுமே இருந்தா போதும்னு நினைத்திருந்தேன்.. இப்பத்தான் நிஜமான வாழ்வுக்கான அர்த்ததை சொல்லித்தந்தீர்களே, இன்னும் பணம்

சம்பாதிக்க நீங்க போய்த்தான் ஆகணுமா..? நம்மிடம் இருப்பதை வைத்து எளிமையாகவே நான் இல்லறம் நடத்துவேனே இனி.. தயவு செய்து போகவேண்டாமே"

என கெஞ்சினாள்..

வாழ்நாளில் முதன்முறையாக மனைவியிடமிருந்து இப்படி ஓர் வார்த்தையைக்கேட்டு மனமகிழ்ந்தார் கதிரேசன்..

தன் பொறுப்புகளை மற்றொருவரிடம் கொடுத்துவிட்டு முறைப்படி வேலையிலிருந்து விடைபெற்றுக்கொண்டு வருவதாக சொல்லி விடை பெற்றார் .

சிறுவனாயிருந்தாலும் ஹமீது சொன்ன யோசனை , வலிகள் பல தந்தாலும் எத்தனை தெளிவை தந்துள்ளது என எண்ணியவாறே

நிறைந்த மனதோடு விமானத்தின் ஜன்னலில் கடக்கும் மேகங்களை குழந்தையின் மகிழ்வோடு ரசிக்க ஆரம்பித்தார் முதன்முறையாக....

?ui=2&view=att&th=1245b7df79420677&attid=0.1&disp=attd&realattid=ii_1245b7df79420677&zw