Wednesday, September 17, 2008

மடல் பார்த்ததும் அதிர்ச்சியும் கோபமும் வந்தாலும் அவனுடைய அதிகாரமான அன்பும், அக்கறையும் இதமாகவே இருக்குது வெறுத்துப்போன மனதுக்கு.
இருந்தாலும் அவனைப்பற்றி எனக்கு என்ன தெரியும்.. முன்பின் பார்த்ததில்லை..எப்படி நம்புவது?.குழம்பித்தான் போகிறாள்.
சரி முதலில் அவன் வருவதை தடுக்க வேண்டும்.. மடலுக்கு பதில் அனுப்ப முயல ,சரி சேட்டில் சொல்லிடலாம்..
" மது நீங்க ரொம்ப அவசரப்படுறீங்க..நல்ல நட்புன்னு நினைத்தேன் ஆனா இதென்ன புதுசா?.. காதலா?.. சே.."
" ஹஹ. எப்படி நீ பிணமானதும் , நிதானமா ஒரு பூமாலை வாங்கி வரவா?.ஹலோ ஒரு பெண்ணை காப்பாத்த காதலிக்கணும்னு அவசியமில்லை..
நான் உங்களை இப்பவும் காதலிக்கவில்லையே ஹி ஹி...."
" போதும் கிண்டல்.. சீரியஸா சொல்றேன்.. தலையிடவேண்டாம் என் விஷயத்தை நானே பார்த்துக்கொள்கிறேன்..இன்னும் பிரச்னையை அதிகமாக்காமல்
இருந்தால் சரிதான்... இதுவரை நீங்கள் செய்த உதவிகளுக்கு ரொம்ப நன்றி.. இனி நீங்க யாரோ.. நான் யாரோ.."
"....."
" பை.."
"....."
" என்ன பதிலேயில்லை?.."
" அதான் சொல்லிட்டீங்களே..நான் யாரோன்னு... ஆனா உங்களை விடுவிப்பதில் என் முடிவில் மாற்றமில்லை... பேசுவதை மட்டும் நானும் நிப்பாட்டிக்கொள்கிறேன்.."
" என்ன சொல்றீங்க?.. "
" தெரில .. இப்ப ஒண்ணும் சொல்வதற்கில்லை... பை..."
" மது.. இருக்கீங்களா?.. "
" மதூஊ.. ப்ச்.. என்னாச்சு.."
நாளை வந்துடுவானோ?.. ஒருவேளை நான் இத்தனை கண்டிப்போடு பேசியிருக்கக்கூடாதோ.. சே. என்ன பேச, எப்படி புரியவைக்கன்னு தெரியாம குழப்பிட்டேனோ?.
பயந்து பயந்து ஒன்றும் சாப்பிடாமல், காய்ச்சல் வந்துவிட்டது ..
இதற்கப்புரம் வழக்கம்போல் 2 முடிவுகள்..




--------------------------------------------------------------------------------------------------------------------------------------

முடிவு 1.: ( மதியே..!!!!)
காய்ச்சலில் ஒன்றுமே தோன்றாமல் அப்படியே ஸ்வெட்டரை , குல்லாவை போட்டுக்கொண்டு பால்கனியில் உட்கார்ந்து தூங்கிவிட்டாள்..
திடீரென்று 2 கார் ஹாரன் ஓசை கேட்டு சட்டென்று விழித்தாள்...
கீழே பார்த்தால்..
" யாரது .. விது கூட... ஒரு பெண்மணி.. ஓஹ் அந்த நடனக்காரி.. அடுத்த காரில் 2 ஆட்களுடன்...அ...து அ.....து...."
" கணினி சொல்லித்தரும் அலுவலகத்தின் இணையப்பக்கத்தில் பார்த்த மாதிரி... அப்போ.. இது மதுவா...????????????"
அப்படியே மயக்கம் வரும்போல் இருக்கிறது...
என்ன நடக்கப்போகுதோ அய்யோ கடவுளே.. நான் இன்னிக்கு காலி...எப்படி கொல்லப்போகிறானோ?.. அதுக்கு முன்னால் நான் பெற்றோரிடம் பேசணுமா..?."
இவள் படியிறங்க , இறங்க ஆயிரம் எண்ணங்கள், மண்டைக்குள் ஏறுது...
சரி முதலில் மன்னிப்பு கேட்டு பார்ப்போம்... அவன் வந்ததும்..
அதற்குள் காலிங் பெல் இம்சிக்க,
தூக்குக்கயிறுக்கு செல்வது போல், மெதுவாக அடிமேல் அடி எடுத்து நடக்கிறாள்...பாதி உயிர் பயத்திலேயே போய்விட்டது..
கண்கட்டிய பசி மயக்கத்தில் கண்களை மூடிக்கொண்டு கடவுளை மட்டும் எண்ணிக்கொண்டு, கதவைத் திறந்தவள்,
அப்படியே அந்த ஷூவின் காலில் விழுந்து கதற ஆரம்பித்தாள்... மன்னியுங்கள் என்று..
மெதுவாக இரு கரம் அவளது தோளைத்தொட,
அடுத்து எங்கு அடிக்கப்போகிறானோ, எங்கே அப்படி போய் விழுவோமோ என்று வலிமை இழந்தவளாய் எண்ணும்போதே, அவளை நிற்கவைத்து ஆதரவாய் அணைக்க முற்பட்டது... கரங்கள்..
அப்போதுதான் தடுமாறி விலகி, முகம் பார்த்து திடுக்கிடுகிறாள்...
" ஒன்றும் பயப்பட வேண்டாம் என கண்ணாலும் , சைகையாலும் அவளை அமைதிப்படுத்துகிறான் மது...
அவளையறியாமல் அவன் கைகளை இறுக பற்றிக்கொள்கிறாள் குழந்தையைப்போல்...
அதற்குள் வெளியே பார்க்க, விதுவின் பெண் உதவியாளர் விதுவின் கைபிடித்து ஏதோ பேசிக்கொண்டிருக்க, இந்தப்பக்கமே திரும்பாமல் விது தோல்வியில்.
அவமானமாய் வெறித்துப்பார்த்துக்கொண்டிருக்கிறான் எங்கேயோ..
" தேவையானதை எடுத்துக்கொள் .நாம் உடனே இந்தியா கிளம்புகிறோம், போலீஸ் பாதுகாப்போடு...எல்லாருக்கும் தெரியப்படுத்தியாச்சு.."
அடுத்த அரை மணிநேரத்தில் விமான நிலைய சாலையில் மது வண்டி ஓட்டிக்கொண்டே தொலைபேசியில் பேசிக்கொண்டே, தேவையான கடிதங்களை புரட்டிக்கொண்டே,
பின் இருக்கையில் இருக்கும் ரதியிடம்,
" இப்ப பரவாயில்லையா நீ...?.. பதட்டமில்லையே..."
" ம்.. நன்றாகவே இருக்கிறேன்.. மிக்க நன்றி..உதவிக்கு."
".நன்றில்லா.............ம் வேண்டாம்.. ஒரு உதவி செய்வீங்களா?."
" ஒஹ் கண்டிப்பா.. சொல்லுங்க செய்கிறேன்.."
" கண்டிப்பா?."
"ம்.ம். கண்டிப்பா.."
" இந்த காதல் னு சொல்றாங்களே.. அப்படீன்னா என்னதான்னு எனக்கு தெரியலை.. ஒரு பெண் தேவையாம்...நீங்க கொஞ்சம் உதவுங்களேன் அந்த புத்தகத்தை படிக்க.:-))."
"..."
" என்ன பதிலே காணோம்?.."
"இல்ல உங்களை எத வெச்சு எப்படி அடிக்கலாம் னு .யோசிக்கிறேன்......ஹஹ"
பனிபொழிய ஆரம்பித்த அந்த இடத்திலேயே வண்டியை நிப்பாட்டினான்.... புன்னகையோடு பின் இருக்கையின் கதவை திறந்து கைகளை நீட்ட........

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
முடிவு 2.: ( விதியே..!!)
இரவு வழக்கம்போல மனைவியை அணைக்க முற்பட்ட விது அவள் போர்வைக்குள் காய்ச்சலில் நடுங்குவது தெரிந்தது...
" ஏய் மாத்திரை ஏதாவது போட்டியா என்ன?.."
பதிலேயில்லை.. சரி தூங்கட்டும் என விட்டுவிட்டான்... சலிப்போடு..இருந்தவனை ரதியின் குரல் தூக்கிப்போட்டது..
" பிளீஸ் மது வராதீங்க வீட்டுக்கு.. அவர் என்னை கொன்னே போட்டுடுவார்.. மடலிலேயே பேசிக்கொள்ளலாம்.. பொறுங்க..பிளீஸ்..பிளீஸ்.."
தூக்கத்தில் காய்ச்சலில் உளறுகிறாள்..
முதலில் கோபப்பட்டவன், பின் நிதானமாக கவனிக்க ஆரம்பித்தான்.. கலக்கத்தோடு மடல் பார்க்க கணினியில் நுழைந்தான்...
தானாகாவே லாகின் போட்டு வைத்திருந்தாள் பேதைப்பெண்....
ஒவ்வொன்றாக அவளுடைய சாட் டினை கடந்த 6 மாத காலமாக பேசியதை வாசிக்க வாசிக்க, அவனுள் மிருக வெறி வந்தது..
ஆனால் கடைசியில் அவள் போக விரும்பாமல் தன்னுடனே இருக்க நினைத்ததை எண்ணிப்பார்த்து மிகுந்த ஆச்சர்யப்பட்டான்..
இத்தனை கொடுமை பண்ணியிருந்தும் இன்னும் நான் திருந்துவேன் என்ற நம்பிக்கையோடு இருக்கிறாளே.. இவளுக்குதான் என்ன துணிச்சல்..
சே நான் எவ்வளவு கேவலமானவன்.. கூண்டு திறந்தும் பறக்க விரும்பாத அன்னப்பறவை...
முதல்முறையாக அவள் அருகில் வந்து மென்மையாக அவள் நெற்றியில் முத்தமிட்டு, அவளுக்கு வேண்டிய மருந்தையும் நீரையும் எடுத்து வந்து
அருகில் அமர்ந்து அவளை கைத்தாங்கலாக எழுப்பி தோளில் சாய்த்து மருந்து கொடுத்தான்... சிறிது நேரத்தில் சுய நினைவு வந்தவளாய், தன் கண்ணை
கசக்கி கசக்கி கனவா, நினைவா என பார்த்துக்கொண்டாள்..
" ரதி.. பயப்படாதே மா. என்னை மன்னித்துக்கொள்.. உன்னிடம் எவ்வளவு கேவலாமாக நடந்துகொண்டேன்...இனி ஆயுசுக்கும் நாந்தான் உனக்கு கடமைப்பட்டுள்ள அடிமை.. என்னை குறித்து எனக்கே வெக்கமாயிருக்கு... "
" அய்யோ என்னாச்சு என்ன சொல்றீங்க.. நான் ஏதாவது தப்பா.."
அவள் வாயைப்பொத்தினான்...
" தப்பெல்லாம் என் மேலதான்.. இப்பவும் நீ விரும்பினால் மதுவிடம் நீ செல்லலாம்..எனக்கு தண்டனையாக..."
கண்ணீர் முட்டிக்கொண்டு வர அவன் வாயைப்பொத்தி விட்டு அவனை அணைத்துக்கொண்டு ஒரு குழந்தையாக அவன் மடியில் தஞ்சமடைந்தாள்...
வெளியே முதல் பனி மழை மென்மையாக பொழியத்தொடங்கியது...........
மெதுவாக போர்வை போத்தி பால்கனிக்கு அழைத்துச்சென்றான் மெளனத்தில் காட்சிகள் மட்டும் பேச..

*****************************************முற்றும்*******************************************************************

Wednesday, September 3, 2008




ரதியே விதியா? மதியா?



குளித்து முடித்து தலையில் ஈரம் சொட்ட சொட்ட வெளியில் வந்தவளை முரட்டுத்தனமாய்
இழுத்து அடுத்த காட்சிக்கு தயார்படுத்தினான்..


லண்டன் குளிரோடு சேர்ந்து போட்டிபோடுது பயத்தில் நடுக்கம்.
எரிச்சலும் கோபமுமாய் ரதி...


ஆனா ஒன்றுமே சொல்ல முடியாது அவனிடம்...திருமணம் முடிந்து 1 வருடம் ஆகப்போகிறது.. இந்த அடிமைத்தனத்தில் அவள் மூழ்கி..


ஜாதகம் சரியாக அமைந்துள்ள காரணத்திலும், ஏழ்மையாலும், அவள் அழகு இங்கு விலைபோனது..


விது அல்லது விதி என அழைக்கப்படும் வித்யாசேகரன் தோற்றத்தில் ஜெயம் ரவி போலிருந்தாலும் குணத்தில் பயங்கர வில்லன்.


வெளிநாட்டு படிப்பு, உயர்ந்த உத்யோகம் கொடுத்த தெம்பு...யாரையும் விலைக்கு வாங்கிடலாம் என்னும் மனப்பான்மை..


படோபகமாக சென்னையில் திருமணம் முடித்த கையோடு ரதியை லண்டனுக்கு அழைத்து வந்து 2 மாதம் மோகத்தில் நல்லபடியாகவே கவனித்ததென்னவோ உண்மைதான்...


அதன்பிறகுதான் அவளை அடிமைப்படுத்த தொடங்கினான்..
தனிமை, கொடுமை எல்லாமுமாய் சேர்ந்து அவளை பாடாய் படுத்தியது...


இத்தனைக்கும், எல்லா துறையிலும் சிறந்து விளங்கியவள் ..எப்போதும் கலகலப்புடன், ஏதாவது போட்டியில் பங்கேற்று பரிசு வாங்கிக்கொண்டு உற்சாகமாய் வலம் வந்தவள்..


ஏழ்மையைப்பற்றி ஒருபோதும் அலட்டிக்கொண்டதில்லை அவள் திருமணம் வரையிலும்..


தன் கீழே இரு தங்கை இருந்த காரணத்தினாலும், எந்த வரனுக்கும் அவள் சம்மதித்தாள்..பெற்றோருக்கு எந்த பாராமும் தரக்கூடாது என்று மட்டுமே எண்ணினாள்..


அதிலும் வலிய இப்படி ஒரு பணக்கார வரன் அமைந்தது எல்லோரும் பெருமை படும்படியாக திருமணம் நடந்தது, இவற்றைவிட, பெற்றோரின் பாரம் சிறிதாவது குறைந்ததே என்பதில்தான் அவளுக்கு முழு மகிழ்ச்சியும்..


லண்டன் வந்ததும் தான் தெரிந்தது எப்பேர்பட்ட காமக்கொடூரனிடம் சிக்கியுள்ளோம் என்று..சிகரெட் வைத்து சுடுவதும்.. சாப்பாடு பிடிக்காவிட்டால் அவள்மேல் தூக்கி எறிவதும்..


ஆனாலும் தன் வீட்டினர் யாருக்கும் தெரியப்படுத்தி பச்சாதாபமோ , ஆறுதலோ பெறவில்லை..எப்படியும் திருத்திடலாம் என்றே நாட்களை எண்ணி வந்தாள்..பொறுத்துக்கொண்டாள்..தன் தங்கைகளுக்கு திருமணம் முடியும் வரையாவது பொறுக்கணும் என.

ஆனால் தன் துக்கங்களை பகிர்ந்து கொள்ளக்கூட பக்கத்தில் யாரும் தோழி இல்லையே..எங்கு அழைத்துச்சென்றாலும் கழுகுக்கண்ணால் பயமுறுத்துகிறான்...யாரிடமும் பேச அனுமதியில்லை...


இந்த நேரத்தில்தான் அவளுக்கு இணையத்தின் துணை அவனிடம் மன்றாடியதில் படிப்பதற்காக அனுமதி கிடைத்தது...


சில குழுமங்களில் , கணினி சார்ந்த படிப்பு பற்றி விவரம் கேட்க அவள் தன் மடலின் ஐடி தர, மறுநாள் வந்து விழுந்தது ஒர் மடல்..


அப்படித்தான் அறிமுகமானான் மதி என்ற மதியழகன்..நடிகர் பிரசன்னா போல.. புத்திசாலியும், அதே சமயம்,குறும்பாயும்.


சிறிது சிறிதாக கணினி இணையம் மூலமே சொல்லித்தரும் பொறுப்பிலிருந்தான் அவன்..தமிழன் என தெரிந்ததும் இரட்டிப்பு சந்தோஷம்...


அப்படியே கணினியோடு நல்ல நட்பும் ஏற்பட கொஞ்சம் கொஞ்சமாய் தன் வருத்தங்களை பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தாள்...



மதியும் தந்தை இழந்தவன்.. தாய் கஷ்டப்பட்டு தன்னை படிக்க வைத்து லண்டன் அனுப்பியதாகவும் தன் தாய் மேல் உயிரே வைத்திருப்பதாக கூற அவன் மேல் ரதிக்கு மரியாதை பன்மடங்காயிற்று..


ஒருவாரமாக நல்ல காய்ச்சல் ரதிக்கு.. அதைப்பற்றி சிறிதும் அலட்டிக்கொள்ளவேயில்லை விது.


" மாத்திரை சாப்பிடு எல்லாம் சரியாபோயிரும்.. ரொம்ப பிலிம் காட்டாதே.." இதுவே அதிக கரிசனம் கணவனிடமிருந்து...
ஒருவாரமாக மடலோ எந்த பதிலோ வராமல் இருப்பது கண்டு மதி பயந்துதான் போகிறான்..மடல் மேல் மடல் அனுப்புகிறான்..


பதிலேயில்லை.


"ஒருவேளை அந்த கொடூரன் அவளை ஏதாவது செய்திருப்பானோ?.. சே நான் ஒரு மடையன்.. போன் நம்பராவது வாங்கி வைத்திருக்கலாம்.. "


யோசிக்கும்போதே சாட் அழைப்பு மதியிடமிருந்து... அப்படி ஒர் உற்சாகம் அவனுக்கு...


அவனுடைய பரிதவிப்புகளை, ஆறுதலை பார்த்து அதிசயித்துதான் போகிறாள் ரதி..ஆனாலும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை...மிக சாதாரணமாகவே பேசுகிறாள்


" ஏன் ஒரு மடல் கூட இல்லை.. நான் எவ்வளவு பயந்தேன் தெரியுமா?.."


" காய்ச்சல் நேரம் இணையம் பார்க்க விரும்பலை அதான்.. ஆமா நீங்க ஏன் பயப்படணும்..?"


" உன்னை நான் ரொம்பவே மிஸ் பண்றேன் ரதி..எனக்கும் ஒரே நல்ல தோழி நீதான்."


இப்போது எரிச்சலாய் வந்தது அவளுக்கு..


" யாரும் என்னை மிஸ் பண்ணுவதெல்லாம் எனக்கு பிடிக்காது...சரி அப்புரம் பேசுகிறேன்" என்று நாசுக்காக சேட் ஐ கட் பண்ணுகிறாள்..

ஆனாலும் தனக்கென ஒரு ஜீவன் பரிதாபப்பட, விசாரிக்க இருக்கே என உள்ளூர மகிழ்ந்தாலும்...


அவனுடைய அலுவலக பார்ட்டிக்கு வேண்டா விருப்பாய் அழைத்துச்சென்றான் விது.. அங்கும் அவனின் உதவியாளரான நடிகை போன்றிருந்த பெண்ணோடு நடனமாடுவதும், அவ்ளோடு குடித்து கும்மாளமிடுவதையும் சகித்துக்கொண்டாள்...எரிச்சலாயிருந்தாலும்..


மனச்சுமை நீங்க மதியிடமும் சொல்ல அவனுக்கோ கோபம் வருகிறது...


" நீ ஏன் இவ்வளவு கஷ்டப்படணும் ரதி.. பேசாம இந்தியா போய்விடு.. ஒரு வேலை பார்த்து கூட பிழைத்துகொள்ளலாம்..இப்படி கொடுமை அனுபவிப்பதைவிட.."


" எல்லாம் ஒரு குழந்தை வந்தால் சரியாகிவிடும் மதி...ஆனால் அதற்கும் 2 வருடம் பொறுக்கணுமாம். அதுதான் என் வேதனை.."அதையும் சிரித்துக்கொண்டே சொல்கிறாள்..


அவளைப்பார்க்க பாவமாய் இருக்குது மதிக்கு.. பெண்ணாய் பிறந்தால் இத்தனை வேதனை அனுபவிக்கணுமா என்ன?.. முதலில் தன் தாய் , இப்ப இவள்..


ஒரு முடிவுக்கு வருகிறான் மதி...ஆனால் ரொம்பவும் தயக்கம்.. மெதுவாக நடவடிக்கை எடுக்கணும். முதலில் அம்மாவிடம் சம்மதம் வாங்கணும்... அம்மாவுக்கு எடுத்துச்சொல்ல, அவரோ எல்லாத்துக்கும் பயப்படுகிறார்..


" அடப்பாவமே.. தம்பி, நல்லாயிருப்பே, அந்த பொண்ணை அவ வீட்டுல சேர்த்துடுப்பா எப்படியாவது..இவ்வளவு கொடுமை அனுபவிக்கிறது தெரிஞ்சு எந்த பெற்றோரும் சும்மா இருக்க மாட்டாங்க..."



" அய்யோ அம்மா, இந்த விஷயம் யாருக்கும் தெரிய வேண்டாம் னு நினைக்கிறா...அதனால்தான் நானே அவளுக்கு விடுதலை தரலாமான்னு யோசிக்கிறேன்...ரொம்ப நல்ல பொண்ணும்மா.."


"என்ன சொல்லன்னே தெரில தம்பி.. நீ எதை செய்தாலும் நல்லதாய் செய்வாய்னு மட்டும் எனக்கு நம்பிக்கை இருக்கு.. ஆனாலும் உனக்கு எந்த பிரச்னையும் வரக்கூடாதே.."


ஒருவழியாய் அம்மாவின் சம்மதம் கிடைத்ததும், அவளிடம் தொலைபேசி எண் கேட்கிறான்..ஆயிரம் யோசனைக்குபின் கொடுக்கிறாள் பயந்துகொண்டே..

அடுத்த வாரம்....


" பிறந்த நாள் வாழ்த்துகள் ரதி..."


திடீரென அழைப்பு வந்ததும் அதிலும் தானே மறந்திருந்த பிறந்த நாள் வாழ்த்துடன்... அதிர்கிறாள்..


" ம். அங்.. எ..ன்.ன.. யாரு..நீங்..க..?"


"நான் மதி.. சரி வாழ்த்து சொன்னா நன்றி லாம் கிடையாதா.?"


" அய்யோ சாரி.. நானே மறந்துட்டேன் .. நீங்க எ..ப்ப..டி..?"


" ஓஹ்.. அந்த அளவு ஆயிபோச்சா நிலைமை..?"


"இல்ல அப்படி இல்ல.. சும்மாதான்...சரி வேலையிருக்கு அப்புரமா பேசுறேன்..."


" சரி உனக்கு விருப்பமிருந்தால் நான் உனக்கு ஒரு விருந்து தரலாம் னு நினைக்கிறேன்...உங்க அப்பா சார்பானு வெச்சுக்கோயேன்.."


" அய்யய்யோ அதெல்லாம் ரொம்ப அதிகம்.. அவருக்கு தெரிஞ்சா கொன்னே போட்டுடுவார்..."


" தெரிஞ்சாதானே?.. "


" இத பாருங்க நீங்க என் தோழர் என்பதால் ரொம்ப உரிமை எடுத்துக்காதீங்க..."


"சரி நேரடியாகவே கேட்கிறேன் ...எத்தனை நாள் இந்த சிறையிலேயே இருப்பதாய் உத்தேசம்.."


" என்ன சொல்றீங்க நீங்க .. எனக்கு விதிச்சது இதுதான்... இப்படியே வாழ்ந்துட்டு செத்து போறேன்.. "


" சரிதான்.. வாழ்ந்தா சரி.. அதுதான் தினம் தினம் செத்துகொண்டிருக்கிறாயே..??"


" ம். பரவாயில்லை எல்லாம் ஒரு குழந்தை வந்தால் சரியாயிடும்... வாழ்க்கையே ஒரு போராட்டம்தானே.. எல்லாருக்கும் ஏதாவது ஒரு விதத்தில் கஷ்டம் இருக்கத்தான் செய்கிறது.."


"ம். தத்துவமா. ஹஹ.. நல்லாருக்கு.. கேக்க..நீங்கெல்லாம் திருந்தவே மாட்டீங்களா??"


கொஞ்சம் கோபத்துடன் இப்போது..


"கணவனுக்கு பயம், பெற்றோருக்கு மரியாதை உடன்பிறந்தவருக்கு நன்றி, எல்லாம் இருக்க வேண்டியதுதான்.. ஆனால் எல்லாம் அளவோட... தன்னையே அழித்துக்கொண்டு பெரிய தியாகி ஆகி இதையெல்லாம் செய்யணும்னு கட்டாயமில்லை..."

" சரி எனக்கு வேலையிருக்கு.... நான் தொலைபேசியை வைக்கிறேன்....."

" கொஞ்சம் இருங்க... நான் இன்னிக்கு உங்ககிட்ட பேசியாகணும்..நீங்க ஒத்துழைக்காவிட்டால் உங்க வீட்டுக்கு தெரியப்படுத்த வேண்டி வரும்.."


அழ ஆரம்பித்துவிட்டாள்..


" என்ன மிரட்டலா?..இதுக்குதான் உங்ககிட்ட சொன்னேனா?."

" மிரட்டல் எல்லாம் இல்லை... ஆனா நீங்க ஒரு நல்ல முடிவு எடுக்கணும் இந்த கூண்டிலிருந்து விடுபடணும்...அதுதான் என் ஆசை..."


" விடுபட்டு அப்புரம் , வேலை கிடைத்து, அப்புரம் இரண்டாவது திருமணத்துக்கு பெற்றோர் இன்னும் வேதனை அனுபவிக்கணுமா?.. "


" ஏன் எப்பவுமே எதிர்மறையா நினைக்கிறீங்க..முதலில் வெளியே வாங்க... மற்றதை அப்புரம் யோசிக்கலாம்.."

" நீங்க நடைமுறை தெரியாமல் பேசுறீங்க.. மாப்பிள்ளை கிடைப்பது ஒன்றும் எளிதல்ல.. அப்படியே கிடைத்தாலும்..எனக்கு இன்னொரு வாழ்க்கக பற்றி நினைத்துக்கூட பார்க்கவில்லை.."


" இனி நினையுங்களேன்..சரி நேராகவே சொல்கிறேன்...நான் உங்களை திருமணம் செய்ய விரும்புகிறேன்.. சம்மதிப்பீங்களா?... "


அதிர்ச்சி அடைகிறாள்..


" கண்டிப்பா முடியாது... எவ்வளவு தைரியம் உங்களுக்கு.. இதுக்குத்தான் என்னிடம் பேசினீர்களா?.. " சட்டென்று வைத்துவிட்டாள் தொலைபேசியை...


மணிக்கணக்காய் அழுதாள் ஏன் என்று தெரியாமலே... அவனுடைய அக்கரை, தன்னுடைய கஷ்டம் பெற்றோர், தங்கையின் நிம்மதி , கணவனின் கொடுமை எல்லாம் மாறி மாறி திரைக்காட்சி போல வந்து குழப்புது அவளை.. ஆனாலும் தன் குடும்ப கெளரவத்திற்காக பிடிவாதமாய் இருக்கிறாள் தன் முடிவிலிருந்து...


அடுத்த ஒரு வாரம் அவனிடம் தொடர்பு கொள்ளாமல் பார்த்துகொண்டாள்... ஆனால் அவனிடமிருந்தோ மடலுக்கு மேல் மடல்...

இந்த ஒரு வாரம் அவனிடம் பேசாமல் இருப்பது பெரிய சோதனையாக இருக்குது..

ஏன் ஒரு நல்ல நண்பனாவே இருக்கலாமே .. ஏன் இப்படி கட்டாயப்படுத்தணும்.. நான் ஏதும் சொல்லி இருக்கக்கூடாதோ அவனிடம்... இப்ப அவனையும் இழந்து நிற்கிறேனே..


ஆசுவாசப்படுத்திக்கொண்டு மடல் திறந்தவளுக்கு அதிர்ச்சி...பயமும்...


" இந்த மடலுக்கும் பதில் இல்லாவிட்டால் நாளை நான் உன்னை நேரில்

சந்திக்கவேண்டி வரும்
"



**********உங்க முடிவு என்னன்னு சொல்லுங்க அப்புரமா முடிக்கிறேன்...***************

Friday, August 29, 2008

ஆண்மகனுக்கோர் கவிதை...

பெண் என்றால் எல்லா கலைகளும்
தெரிந்திருக்கணுமென எல்லாம் கற்றுகொள்ளச்செய்தாய்.

மணமானதும் கணவன் பேச்சை மட்டும் கேள்,
மணாளன் ரசிக்காததை விட்டுவிடு..

மாப்பிள்ளைக்கு பிடித்தமாதிரி நடந்துகொள் என்கிறாயே??
இதுதான் அதிமுக்கியமான கலையா அண்ணா?.

உன்மீது வருத்தமில்லை அண்ணா, ஆனால்
வரப்போகிற அண்ணியிடம் நீயாவது ரசிக்கக்கற்றுக்கொள்..

ஆண்மகனுக்கோர் கவிதை

ரிமோட் எடுக்கும் உன் பிஞ்சு கைகளை
பிடித்து இழுத்து முத்தமிடுகிறேன்..

குளித்து முடித்து உடை உடுத்த ஒடி
ஒளிகின்ற உன் பாதம் எடுத்து கிச்சுமூட்டுகிறேன்..

சமையலறையில் அழிச்சாட்டியம் பண்ணும் உன்னை
இருக அணைத்தே பல்லைக்கடித்து கொஞ்சுகிறேன்..

அலுக்காமல் சேட்டை பண்ணி சலிக்காமல்
தண்டனையும் அன்பாலே பெறுகிறான் குழந்தை..

நான் செய்தால் இத்தண்டனை எனக்குண்டா என்கிறாய்..
தண்டனையில்தானே வந்ததிந்த பெருஞ்சேட்டை என்றறிந்தும்..

ஆண்மகனுக்கோர் கவிதை...

இன்றைய கவி:


இரவு கண்டு பயப்பட்டேன்..
உறங்காதிருப்பேன் அருகில் என்றாய்.

சைக்கிள் கற்க மாட்டேன் என்றேன்,
உபயோகம் சொல்லி கற்றும்தந்தாய்

அறிவியல் பாடம் பிடிக்காதென்றேன்
அறிவாளி என்தங்கை என சொல்லிதந்தாய்..

தண்ணீரென்றாலே பயந்தோடுவேன்,
தள்ளியே விட்டு நீச்சல் பழக்கினாய்..

எல்லாம் கற்றுத் தந்தாய், தந்தையாய்,
கணவரை, குழந்தையை சமாளிக்க கற்கவில்லையே ணா????

ஆண்மகனுக்கோர் கவிதை...

அதிசயமாய் தானிருக்குது இப்போதெல்லாம்
நீ உன் பைக்கில் என்னை அழைத்துச்சென்று
கல்லூரியில் விடுவதும்,பின்பு காத்திருந்து அழைத்து வருவதும்..

பெட்ரோலுக்கு காசு தருகிறேன் என்றா?.. இருக்காதே...???

ஆனால் ஒன்றுதான் புரியவில்லை ,
அடுத்த தெரு முனைக்கு சென்றதும்
தினமும் மக்கர் பண்ணுதே உன் பைக்கும் உன் மனம் போல..???

பின்பு நடுரோட்டில் வீரன் போல சரி செய்வதும்,
முடித்ததும் கண்ணாடிக்கு முத்தம் கொடுப்பதும்...
நான் வரவில்லையடா அண்ணா நாளையிலிருந்து ...!!!

ஆண்மகனுக்கோர் கவிதை...

இனி அண்ணா என்ற கோணத்தில்....

அது ஏன் அண்ணா என் தோழிகள்

நம் வீட்டுக்கு வரும்போது மட்டும்
உன் சாமான்கள் தொலைவதும்,
அதை அவர்கள் அமர்ந்துள்ள
அறைகளில் மட்டும் தேடுவதும்.
எப்போதும் கைபேசிக்கு வரும் அழைப்புகள்
வீட்டு தொலைபேசிக்கு வருவதும்
தொலைக்காட்சி அலறுவதும்,
ஒழுங்காய் உடற்பயிற்சி செய்பவன் போல
அதற்கான உபகரணங்களை எடுத்து செல்வதும்
நீ என்னை என்னடா, என்னம்மா

என செல்லமாக அழைப்பதும்...????

தாங்கத்தான் முடிவதில்லை...:-))