Sunday, August 10, 2008

தத்து குழந்தை..சிறுகதை



" என்னம்மா , இன்னுமா கிளம்புற.. நேரமாச்சு.. சீக்கிரம்..."
" இதோ வந்துட்டேங்க... குழந்தைக்களுக்கு பரிசாக வாங்கிய சில பொருள்களை எடுத்துவைக்கிறேன்.."
ரிஷியும், ரேஷ்மாவும், ஆசையோடு , சந்தோஷமாக காரில் வந்து அமர்ந்தனர்..., ஏகப்பட்ட பரிசுபொருள்களோடு.
" ரேஷ்மி, நான் சொல்றேன்னு தப்ப எடுத்துக்காத..."
" இல்லை, இல்லை .. சொல்லுங்க....தப்பா எடுத்துக்கிறமாதிரி சொல்லமாட்டீங்க..." சிரிப்புடன்..
" நாம தத்தெடுக்கப்போற குழந்தையை பரமாரிக்க ரொம்ப பொறுமை வேணும்பா..."
"ஆமா, அதுக்கென்ன?.."
" இல்ல , ஒரு குழந்தைன்னா பரவாயில்லை.. இரண்டு குழந்தை.. அதுதான் ..."
" அதுக்கெல்லாம் தயாராதான் இருக்கேங்க..."
"அதுகில்லப்பா, இரண்டு குழந்தைக்கும் வேளாவேளைக்கு கவனிப்பு, வேணும்.. நீ ரொம்ப பொறுமைசாலி... ஆனாலும், குழந்தை தெரியாமல்
இருப்பிடத்திலேயே , மலம் கூட கழிக்கலாம்... அதுதான்.."
" ஏன் ரிஷி , இதுக்கெல்லாமா யோசிக்கணும்.. அந்த குழந்தைங்க தரப்போற புன்னகை, மனநிம்மதியும் , மகிழ்ச்சியும், நான் செய்யப்போற
எல்லாத்துக்கும் ஈடாகாதே...இத்தனை நாள் இதனையெல்லாம் இழந்ததற்கு மொத்தமா சேர்த்து அனுபவிக்கப்போறேன்னு நினைக்கும்போதே
சந்தோஷமாயிருக்கு ரிஷி..."
" சரிங்க தலைவியே, ஆனா இந்த ரிஷியையும் கொஞ்சம் அப்பப்ப கவனிச்சுக்கோங்க, தயவாக....."கெஞ்சுவதுபோல்..
" ரி....................ஷ்ஷ்ஷ்ஷீஈஈஈஈஈஈஈஈஈஈ" செல்லமாக இடித்தாள் ..
" அடிக்கடி மருத்தவமனை, செலவுகள் என்று எதிர்பாராத விஷயங்கள் வரலாம்... "
" அய்யோ .. என்ன ரிஷி... இதுகூடவா புரியாமலா..?.."
" இல்லம்மா, அதுமட்டுமல்ல, குழந்தைகளுக்கு என்ன வருத்தம் , நோய் என்றுகூட நமக்குத்தெரியாது.. ரொம்பவும் பாசம் வெச்சுட்டு ..அப்புரம், ஒருவேளை பிரிய..."
ரிஷியின் வாயைப்பொத்தினாள் ரேஷ்மி..
" போதும் ரிஷி.. இதுக்குமேல ஒண்ணும் பேசாதீங்கப்பா... கடவுள் இருக்கிறார்..."
வண்டியை நிறுத்தி கண்கலங்கியவளை அணைத்துக்கொண்டான்...
" உன்னுடைய வெகுளித்தனமான , இளகிய மனம் தெரிந்துதான் சொன்னேன்டா, மன்னிச்சுக்கோம்மா"
கார் மெதுவாக, முதியோர் இல்லத்துள் நுழைந்தது, இரு முதியோரை, குழந்தையாக, கொஞ்சுவதற்கு, தத்தெடுக்க ஆவலாய் வந்தார்கள் குழந்தைப்பேறு
இல்லாத, காதல் திருமணத்தால் உறவுகளையும் இழந்த ரிஷியும் , ரேஷ்மாவும்...



குழ‌ந்தையின் கும்மி.. - 5

அன்று வார‌ விடுமுறை ..ஷாப்பிங் போயே ஆக‌ணும்.. என்ன‌ ச‌ட்டை போட்டாலும் பிடிக்காதாம்.. அதாவ‌து ப‌ர‌வாயில்லை.. நான் என்ன‌ உடுத்தினாலும் " இது வேனாமா. வேற‌ போடு.. இப்ப‌டியே 4 முறை மாற்றியாச்சு..."
அவுக‌ அப்பா கூட‌ சொன்ன‌தில்லை...இப்ப‌டி.
ஒருவ‌ழியா கிள‌ப்பி டிபார்ட்மெண்ட் ஸ்டோர் சென்றோம்.
எப்போதும் வ‌ண்டிக்குள்ள‌ தூக்கி போட்டாதான் நான் சாமான் வாங்க‌ முடியும்...
இன்னிகு பிடிவாத‌ம் .. கீழே விடுன்னு.. இறக்கி விட்டா அவ‌னும் ஒரு கூடையை எடுத்துக்கொண்டு, என் பின்னாலேயே க‌ண்ட‌ சாமானும் ( அவ‌னுக்கு பிடித்ததை ) எடுத்துப்போடுகிறான்..
அண்ணாவும் அப்பாவும் சொல்லி பாத்து , கெஞ்சிப்பாத்தாலும் முடிய‌லை..
"ச‌ரி விடுங்க‌.. ஏதோ உடையாத‌ சாமான் எடுக்கானான்னு ம‌ட்டும் பாருங்க‌..."
அவ‌னுக்கு நான் ச‌ப்போர்ட் ப‌ண்ற‌துக்கு ந‌ன்றியா உட‌னே என‌க்கு ஒரு முத்த‌மும், .....
அய்யோ என்ன‌ இது... இப்ப‌ என் வ‌ண்டியையும் சாமானால் நிற‌ப்ப‌ ஆர‌ம்பிக்கிறான்..
கேக்க‌ணுமா அண்ணாக்கும் அப்பாக்கும் சிரிப்பை.. மெதுவாக க‌ழ‌ண்டுகொண்டார்க‌ள்..நீயாச்சு பையனாச்சு என்று.
" என்ன‌ங்க‌.. ஏய் த‌ம்பி..கொஞ்ச‌ம்.. /..."ம்கூம்.. ஆள காணோம்..இப்ப‌ ட‌புள் வேலை...சின்ன‌வ‌ன‌ மேய்க்க‌ணும்.. சாம‌னன்க‌ளை ஞாப‌க‌மா வாங்க‌ணும்.. அப்ப‌ப்ப‌ அவ‌ன் கீழே போடுற‌தை எடுத்து குடுக்க‌ணும்.. எங்க‌யும் இடிக்காம‌ ச‌ர்க்கஸ் ப‌ண்ண‌னும்..முக்கியமா, கவுண்டரில் அவன் வாங்கிய சாமானை அவனுக்குத்தெரியாமல், மறக்காமல் எடுத்துவிடணும்.. சிலசமயம் வீடு வந்தபிந்தான் தெரியும் , இது எப்படி வந்தது என்று..?.
ஒருவ‌ழியா வாங்கிய‌தும் உண‌வு செக்ஷ‌‌‌ன்..
அங்கே சாம்பிளுக்கு ஒரு கேக்கை ப‌ல‌ துண்டா வெட்டி வெச்சுருந்தாங்க‌.. நான் எவ்வ‌ள‌வு ந‌ல்லா ( ????) கேக் ப‌ண்ணினாலும் வாச‌ம் கூட‌ பிடிக்காத‌வ‌ன், அந்த‌ பொண்ணு குடுத்த‌தும் வாங்கிக்கொண்டான்.. ஆச்ச‌ர்ய‌ம்.. ஓ அவ‌ அழ‌கா இருக்கான்னா.. ?//.
அவ‌ள் மேலும் மேலும் கொடுக்க‌ வாங்கி சாப்பிடுறான்.. அங்கே வ‌ந்த‌ அண்ணாவுக்கும் அப்பாவுக்கும் ஆச்ச‌ர்ய‌ம்.. என‌க்கோ ச‌ந்தோஷ‌ம் , பிள்ளை புதுசா கேக் சாப்பிடுறானேன்னு.. அண்ணாக்கு கோவ‌ம் வ‌ருது.." அம்மா , போதும்.. முழுதும் சாப்பிடுவான் போல‌.. என்ன‌ நினைப்பாங்க‌.."

" ப‌ர‌வாயில்லை மா.. நான் காசு கொடுக்கிறேன்...ஒரு சின்ன துண்டுதானே மா"
" அய்யோ அம்மா.. என‌க்கு அசிங்க‌மா இருக்கு..."
" ச‌ரி நீ அப்ப‌ கொஞ்ச‌ம் ஒதுங்கிக்கோ. என‌க்கு என் பிள்ளை சாப்பிடுற‌தே பெரிச‌ப்பா..புதுசா ஒன்று கத்துக்கொண்டிருக்கிறான் தொந்தரவு செய்யவேணடாமே.."
அதே கேக் ஒரு பார்ச‌லும் வாங்கிக்கொண்டேன்..வீட்டுக்கு வந்து அத தொட்டுகூட பாக்கலங்கறது வேற விஷயம்...
அடுத்து நான் காய்க‌றி வாங்க‌, அவ‌னோ திராட்சை பார்த்துவிட்டான்..ம்.. ரொம்ப‌ பிடிக்கும்.. அதுவும் க‌டையில் இருந்தால் ம‌ட்டும்..
திராட்சை கொத்தில் ஒன்றினை ம‌ட்டும் பிய்த்துவிட்டு, ஒடுகிறான், ப‌ண‌ம் செலுத்துமிட‌ம்..
பின்னாலே நானும்.. ஓடினேன்...க‌வுண்ட‌ரில் வைக்கிறான் அந்த‌ ஒரு திராட்சையை, ரொம்ப‌ உத்த‌ம‌னாட்ட‌ம்.. அவ‌ளோ சிரிக்கிறாள்.. அதற்குள் அப்பா ஒரு பையில் திராட்சையுட‌ன் வ‌ந்து ப‌ண‌ம் செலுத்த‌, அவ‌ன் திராட்சைக்கு ம‌ட்டும் அவ‌ன் கையில் ப‌ண‌ம் த‌ந்து. அதையும் ஒரு சின்ன‌ பையில் போட்டு கொடுத்த‌தும் ஏதோ சாதித்த‌ ச‌ந்தோஷ‌ம் .. ஆனா அண்ணாவுக்குதான் இதெல்லாம் பிடிக்க‌வில்லை... அவ‌ர் செய்த‌ குள‌ப்ப‌டிக‌ள் ம‌ற‌ந்து விட்டாரே.......

அடுத்து ஐஸ்கிரீம்... அப்பாவுக்குத்தெரியாம‌ல் வாங்க‌ணுமே... இல்லாட்டி திட்ட‌ ஆர‌ம்பித்தால் என் ப‌ர‌ம்ப‌ரை ப‌ல்லின் பெருமையெல்லாம் இழுப‌டுமே....
************************தொட‌ரும்..******************

லேசான தூறல்.. சிறுகதை..


" சாரிப்பா மன்னிச்சுக்கோ.."
" செய்றதையெல்லாம் செஞ்சுட்டு மன்னிப்பா?.. "
" அதான் சொன்னேன்ல.. மறந்துட்டேன்... திருமண நாளை.."
" அப்ப இப்படியே ஒரு நல்ல நாள் பார்த்து என்னையும் மறந்துடுங்க.."
" ம். சரி.."
" என்னாஆஆஆஆ.....து?"

" ம். இல்ல இல்ல ..கோவத்த பாரு.. ஆமா இந்த கோவத்தையெல்லாம் ஏன் கல்யாணத்துக்கு முன்னாடி காட்டல??"
" ம். பதில் சொல்ல மாட்டேன்.. "
" ஆமா.. ஏன் காட்டலன்னா, நீங்க ஒழுங்க இருந்தீங்க.. இப்படி இல்ல.."
" பதில் சொல்லிட்ட.. கிகிகி.."
" போதும் சிரிப்பு.."
" அய்யோ என் வேலை அப்படிம்மா... புரிஞ்சுக்கோ."
" அதுக்காக நம்ம கல்யாண நாள்கூட மறக்குமா?.. எங்க அப்பா எவ்வளவோ பரவால்ல.."
" என்ன .. எல்லா நாளையும் மறந்துடுவாரா மொத்தமா?..கிகிகி"
" ரொம்ப கோபப்படுத்தாதீங்க.. இப்பவே நான் அப்பா வீட்டுக்கு போறேன்...1 வாரம்..க்ர்ர்ர்"
" ஆ..ஊ ன்னா அப்பா னு சொல்லி எதுக்கு கம்பேர் பண்ற... உங்க அப்பா ஓட்டை ரைஸ்மில் வெச்சுட்டு வீட்டுக்கு
பக்கத்திலேயே வண்டிஓட்டுறார், வக்கணையா 3 நேரம் சாப்பிட்டு தூங்கி... என் நிலைமை அப்படியா கணினி யை கட்டி அழுவுறேன்,
நேரம் காலம் இல்லாம.."
" சரி.சரி, என் தேவதையே, வழக்கம்போல வழியனுப்புவியாம்... "
" மரியாதையா போய்டுங்க, இன்னும் கோவம் வரதுக்குள்ள.. சே என் பிரண்ட்ஸ் எல்லாம் என்ன நினைப்பாங்க.."
-----------------------------------------------------------------------------------------மதியம்
தோழியுடன்...அரட்டை...
" நல்லா டோஸ் விட்டேன் .. பயந்துட்டாருப்பா.."
" அதானே .. அதெப்படி திருமண நாளை மறக்கலாம்.."
" ம். இப்பத்தான் திருப்தியா இருக்கு...ஆனா பாக்க பாவமாயும் இருக்கு வருக்கு வேலை அப்படி.."
" நீயும் கொஞ்சம் பொறுமையா போயிருக்கலாமோ என்னவோ.."

" சரி சரி அப்புரம் பேசுறேன்.,.சாயங்காலத்துக்கு ஏதாவது விசேஷமா ஸ்வீட் பண்ணனும்.."
"ம். விட்டுக்கொடுக்க மாட்டியே.."
---------------------------------------------------------------------------------------------------
சாயங்காலம்..
அலுவல் முடிந்து கோபத்துடன் வீட்டிற்கு வருகிறான் .
" கிளம்பு.."
" எங்க..?."
" ம். உங்க அப்பா வீட்டுக்குதான்.."
" ம். எதுக்குங்க."
" ம். காலங்காத்தால கோபப்படுத்தி மனுசன அலுவலகம் அனுப்ப வேண்டியது... அங்க போய் நான்
தப்பு தப்பா செய்ய வேண்டியது.."
" சரி அது காலையிலேயே முடிஞ்ச விஷயம்.. இப்ப போய்."
" அதெல்லாம் தெரியாது.. இன்னும் 1 வாரம் உங்க அப்பா வீட்டுலதான் .,.. அப்பதான் என்னால புராஜெக்ட் ஒழுங்கா முடிக்க முடியும்.."
" ச்......என்ன இது திடீரென்று..."
" இப்ப நீ கிளம்புறயா இல்ல நான் எடுத்து வைக்கவா?."
எரிச்சலுடன் எடுத்து வைக்கிறாள்..
காரை எரிச்சலுடன் ஓட்டிக்கொண்டே செல்கிறான்... அவளோ தொண தொணன்னு..
" சரி இப்பவாவது ஒரு முடிவுக்கு வாங்க... ஏன் இந்த அவசரம்..."
" நீ மட்டும் கோபப்ப்டலாம் நான் படக்கூடாதா.."
" அதுக்கு பழிக்குப்பழியா.. ?. சரி சாமி இனி கேட்கல போதுமா?."
" அதெல்லாம் போதாது.."
" அப்ப.. என்ன மன்னிப்பு கேட்கணுமா?.."
" ம்.....ம்.. சரி ஆனா மன்னிப்பு நான் சொல்ற மாதிரி சொல்லும்போது கேளு போதும்..."
" என்ன புதிர் போடுறீங்க?.. ஆமா கார் எங்க போகுது ஸ்டேஷன் போகாம..?."
" பேசாம வா.."
" அட நீங்களே என்னை அப்பா வீடு வரை கொண்டு விடப்போறீங்களா??."
" இந்த தொண தொணப்பு தாங்காமதான் " பல்லை கடித்துக்கொண்டு...
" தங்காமதான்???" பயத்துடன்...
" 1 வாரத்துக்கு.."
" 1 வாரத்துக்கு..?????" திகிலுடன்
" ஹஹஹஹா.."
" நம்ம திருமண நாளை கொண்டாட ஊட்டி போறோம்....இப்ப உன் மன்னிப்பை தாராளமா இங்க தரலாம்.."

"..............:-)) " நாணத்துடனும் பொய் கோபத்துடனும்......
--------------------------------------------------------------------------------------------------
சரி இப்படில்லாம் சர்பிரைஸ் கொடுக்காதீங்க புதுசா கல்யாணம் ஆனவங்க... தாய்குலத்துக்கு பிடிக்காது...:-)))
அலெக்ஸ் தொடர்ச்சி..

அடுத்து வந்த நாட்களில் அலெக்ஸின் வருகை குறைந்தது.. விஷயம் தெரிந்து வேதனைப்பட்டோம்..
அலெக்ஸின் அப்பாவுக்கு திடீரென்று வேலை போய்விட்டது... அது ஒரு பன்னாட்டு நிறுவனம்..எங்களால் முடிந்த அளவு
தேடினோம்.. இங்கு தாய் பாஷை கண்டிப்பாக தெரியணும்...இல்லாவிட்டால் கொஞ்சம் கடினமே.. இதனால் பாதிப்பு அலெக்ஸுக்கு..
அவன் படிப்பை தொடர முடியாத நிலைமை.
என்ன கொடுமை.. குழந்தைக்கு அது ஒன்றுதான் ஆறுதல்.. அதுவும் முடியாவிட்டால்...?..அவர் அப்பாவே வீட்டில் பாடம்
எடுக்க நினைத்தார்.. நானும் உதவுவதாய் சொன்னேன்.. அப்பதான் நான் மும்முரமாய் CCNP படித்துக்கொண்டிருந்தேன்,
ஆனால் இதை எதையும் வெளிக்காட்டாமல் அலெக்ஸ்..பின்பு ஒருவழியாக அவர் பள்ளி முதல்வரிடம் ( எனக்கு தெரிந்தவர்)
பேசி செலவுகளை பின்னாளில் தருவதாய் கூறி அந்த பிரச்னையை சமாளித்தோம்..பள்ளிக்கு சென்று அவன் ஆசிரியரை சந்தித்தால்
" அலெக்ஸ் சேட்டைக்காரந்தான்" என்கிறார்கள்.. நம்பவே முடியவில்லை.. இருந்தாலும் சந்தோஷம் .. பிள்ளைக்கு சமாளிக்கவும் தெரியணுமே உலகில்... தாய்க்கு எப்போதும் தன் பிள்ளை நல்ல பிள்ளையோ????
அவர் தந்தை இப்போது அமெரிக்கா செல்ல முயற்சி எடுத்தார்.. அவர் சகோதர சகோதரி அங்கு இருப்பதால்.. இடையில் அவர் மட்டும் போவதாயும் , அலெக்ஸ்ஸை எங்களிடம்
விட்டுப்போவதாயும்.. எனக்கே தத்து கொடுத்தது போல அப்படி ஒரு சந்தோஷம் ...என் மகனுக்கும்..கற்பனையில் மிதக்க ஆரம்பித்தேன்..
முதல் முறை விசா நிராகரிக்கப்பட்டது... அலெக்ஸ் அப்பா வந்து என்னிடம் ஜெபம் செய்யச்சொன்னார்கள்.. ஆனால் என் மகனோ,
" கடவுளே அலெக்ஸுக்கு விசா கிடைக்கக்கூடாது " என்று ஜெபிக்கிறான்... அவனுக்கு புரிய வைப்பதற்குள் பெரும்பாடு.
அலெக்ஸ் நல்லா இருக்கவேண்டாமா, அவன் நம்ம கூட இருப்பதைவிட அவன் வாழ்வு சிறக்கணுமே தம்பி.. ம்கூம்.. புரியவில்லை.
இதற்கிடையில்தான் என் மகன் நச்சரிக்க ஆரம்பித்தான் தனக்கு துணையாக ஒரு தம்பி வேண்டுமென்று.அலெக்ஸ் போய்விட்டால்
தான் தனிமைப்படவேண்டுமென்று..
அப்படி ஒரு எண்ணமே கிடையாது.. ஆனாலும் கடவுளிடம் ஜெபிக்கும்படி சொல்லிவைத்தேன்.. அவன் அதை வேத வாக்காய் எடுத்துக்கொண்டு
2 வருடம் தவறாமல் ஜெபித்தான்... நான் சிரித்துக்கொள்வேன்..

அலெக்ஸுக்கு விசா கிடைத்தது.. அதே நேரம் கடவுள் கிருபையால் ஒரு குழந்தையும்...அலெக்ஸுக்கும் என் மகனுக்கும் ரொம்ப மகிழ்ச்சி..
ஆனால் அலெக்ஸ் மார்ச் மாதம் அமெரிக்காவுக்கு செல்ல எங்க வீட்டுக்கு மே மாதம் குழந்தை வந்தான்..
அலெக்ஸ் க்கு சிறப்பாக ஒரு பிரிவுபசார விழா வைத்தேன்.. பிரிய மனமின்றி..உணர்ச்சிகளையும், அழுகையையும் கட்டுப்படுத்தி..
அவனுக்கு அலெக்ஸ் என்றே பெயரிட ஆசை.. ஆனால் ஆண்ட்ரி பிரியன் டேனி என வைத்தோம்...இவனோ அலெக்ஸுக்கு எதிர்புரம்.
அலெக்ஸ்ஸை மறப்பதற்கே வந்த குழந்தை... ஆனாலும் அலெக்ஸுக்கான இடம் யாராலும் நிரப்பப்படமாட்டாது..
என்றாவது சந்திக்கலாம்.. சந்திக்காமலே போகலாம்... ஆனால் பல இனிய நினைவுகளை தந்துவிட்டு சென்றுவிட்டான்..அவனுக்கான நேசம் வட்டியோடு வளர்ந்துகொண்டிருக்கிரது..:-))
நிறய அவனைப்பற்றி எழுதலாம் .. என் மேசையின் பேப்பர் ( டிஷ்யூ) காலியாகிவிட்டது...:-((
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நமக்கான அன்பானவர்களும் ,பிரச்னைகளும், தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவே நம்புகிறேன்.... அந்தந்த காலங்களில்..
கசப்போ, இனிப்போ ,அவற்றின் சுவையை பருகிக்கொள்ளவேண்டியுள்ளது.., .. இந்த நீண்ட வாழ்க்கை பிரயாணத்தில்..

Monday, July 28, 2008

சந்தித்த அற்புதமானவர்கள்- பாகம் 3

இவனைப்பற்றி எழுதப்போகிறேன் என்றதுமே அப்படி ஒரு மகிழ்ச்சி மனதுள்... அவனோடு வாழ்ந்த அந்த 4 வருடங்களும்
என் வாழ்நாளின் பொற்காலம் அல்லவா?.. என் ரத்தம் இல்லை, என் உறவும் இல்லை... என் ஊர்?. என் பகுதி?. என் நாடு?, என் குலம்?.
ம்கூம்ம்... இல்லையே.. ஆனால் என் மனதில் ஒளிந்து கிடந்த அன்பை பன்மடங்காக பெருக வைத்தவன்... பெற்ற குழந்தைக்கு தாயாய் இருப்பது
ஆச்சர்யமேயில்லை... தன்னால் ஊறும் தாய்மை.. ஆனால் இவனுக்கு.. அதைவிட ஒரு படி அதிகம்..
அவன் தான் அலெக்ஸ்...
பள்ளியில் சரியான துணை கிடைக்காமலும், கேலி கிண்டலுக்கு ஆளாகி மனம் வருத்தமாயிருந்த நேரத்தில் விடுமுறை வகுப்புக்கு சென்று வந்தான்
மகன்.. வந்ததும் சொன்னான், அம்மா என்னைப்போலவே ஒரு புது பையன் வந்துள்ளான் ..அவனும் தனியாக எப்போதும்..
சொல்லிகொண்டிருந்தபோதே " அம்மா சீக்கிரம் வாங்க.. நான் சொன்ன பையன் இவந்தான்"
பால்கனியிலிருந்து அடுத்த அப்பார்ட்மெண்டில் பார்த்தால் அலெக்ஸ் அவன் துணியை காயப்போட்டுக்கொண்டிருந்தான்..
குழப்பமாயிருந்தது..
என் மகன் இங்கிருந்து அழைத்ததும் புன்னகையுடன் வருவதாகச்சொன்னான்..
சிறிது நேரத்தில் வந்து வீட்டின் மணியை அடித்து, நான் கதவை திறந்ததும், சுவரோடு சுவராக வெட்கத்தில்
குழந்தை ஒன்றி நின்று சாய்ந்து என்னை ஒருமாதிரியாக பார்க்க, மகிழ்ச்சியாக உள்ளே அழைத்து வந்தேன்..
அவனை எல்லா பசங்க மாதிரி சாதாரணமாக எண்ணிக்கொண்டு நான் என் சமையலை தொடர்ந்தேன் .
அவனுக்கு குடுத்த பழச்சாரு அருந்தும் முறையும் , அவன் என் மகனோடு சத்தமின்றி விளையாடும் முறையும்,
என் கவனத்தில் தவறவில்லை, நான் பிஸியாயிருந்தாலும்... அடுத்த 1 மணி நேரத்துக்குள்ளே அவன் மிகவும் பிடித்துப்போனான்..
எனக்கும் என் மகனுக்கும்...
அடுத்து வந்த நாள்களில் வளர ஆரம்பித்தது எங்களுக்கிடையிலான பாசம், நேசம் அன்பு எல்லாமாய்..
1 மாதத்திலேயே அவனை தேட ஆரம்பித்தோம் அவன் இல்லாத பொழுதுகளை..
என் மகனும் ரொம்ப மிருதுவான குணம் கொண்டவன்.. அவனுக்கு ஏற்றார்போல அதே மென்மையுடன்..
இருவரும் ஒன்றாக விளையாடுவதும், ஒன்றாக நீச்சல் பழகுவதும், தோட்டத்தை சுற்றி குருவி கூடு தேடி அதுக்கு சாப்பாடு
ஊட்டுவதும்...பின் வந்து அந்தக்கதைகளை என்னிடம் சொல்லி சிலாகிப்பதும்...
ஆனால் ஒன்று மட்டும் புரியவில்லை.. அவன் வீட்டில் அவன் அன்னையை பார்க்க முடியவில்லை...
கேட்கவும் தயக்கம்... அப்புரம் ஓர்நாள் என் மகன் அவன் வீட்டுக்கு சென்று வந்ததும் சொன்னான், அவன் அன்னையும் அப்பாவும்
பிரிந்து வாழ்கிறார்கள் என்றும், அம்மா பர்மாவில் இருப்பதாகவும்...
அவன் மேல் வைத்த பாசம் இப்போது 2 மடங்காகியது...
குழந்தை தனியே தன் படுக்கையை விரிப்பதை பார்த்து நான் இங்கு கண்கலங்கிக்கொண்டு இருப்பேன்...
என் குழந்தை என் மேல் கால்போட்டு தூங்க அவன்மட்டும் தனியே..
என் வீட்டு சாம்பார் அவனுக்கு ரொம்ப பிடிக்கும்.. அதை அவன் கரண்டியால் சாப்பிடும் அழகை
பார்த்துக்கொண்டே இருக்கலாம்.. நான் என்ன சொன்னாலும் ஒரு தலையசைப்புதான்..
என் மகனைவிட அவன்மேல் பாசம் வந்துவிட்டதோ என்றுகூட எனக்கு சந்தேகம் வருமளவிற்கு
அப்படி ஒரு நல்ல பையன்... சாது... எங்கு சென்றாலும் அவன் இல்லாமல் போகமாட்டோம்...
பழகிய முதலில் ஓர்நாள் நான் என் பையனை அழைத்துக்கொண்டு மிருகக்காட்சி சாலைக்கு சென்ற போது அவனும்
வருவதாகச்சொல்ல, கிளம்பி கீழே போனதும்தான் தெரியுது அவன் அப்பாவும் கூட வருவதாய்... எனக்கோ தர்மசங்கடம்..
அவன் தந்தையோ யாருட்னும் குழந்தையை அனுப்ப பயம் .. என்னத்த சொல்ல, நால்வருமாய் சென்றோம்..அவன் தந்தையிடம்
அவனும் பிள்ளையிடம் அப்பாவும் வைத்திருக்கும் பாசம் அப்போது புரிந்தது... ஆனாலும் இருவரும் நண்பர்கள் போல
பேசி சிரித்துக்கொள்வார்கள்.. வீட்டு வேலையும் அப்படியே.. அப்பா பொறியாளர்... வீட்டில் சமையல் , எல்லா வேலையும் அவரே..
அலெக்ஸ் எங்க கூட பழகி 6 மாதம்பின்தான் அவர் அப்பாவுடன் எங்களுக்கு பழக்கம்.. ( நான் எளிதாக யாரிடமும் பழகுவதில்லை அப்போதெல்லாம்)
இப்ப குடியிருப்பில் எல்லா பசங்களுக்கும் பொறாமை வருமளவிற்கு என் மகனும் அலெக்ஸும்..
அதைவிட அலெக்ஸுக்கு நான் அம்மாவாகவும் , அவன் எனக்கு பிள்ளையாக இருப்பதும்...அவனைப்பார்க்கும்போது
எனக்கான என் கஷ்டங்கள் பறந்து ஒடிவிடும்.. அந்த சின்னவயசிலேயே அந்த சாந்தமான முகம், கஷ்டங்களை , சுமைகளை தாங்கிய அந்த ஆழம்...
கணவருக்கே , ஏன் என் மகனுக்கே, நான் அலெக்ஸ் மேல் வைத்திருக்கும் பிரியம் பொறாமை கொள்ளச்செய்கிறது..
யாருக்குமே பிடிக்கும் அலெக்ஸை..இப்படியான சந்தர்ப்பத்தில்தான் அந்த துன்பம் வந்தது அலெக்ஸ் வாழ்வில்....என்னையும் புரட்டி போட்டது..
****************************************தொடரும்**********************************************

Wednesday, July 9, 2008

அலீமா இப்போது நலமாயுள்ளார்.. பயப்படும்படி ஒன்றுமில்லை... அவளுக்காக வேண்டிய நல்லிதயங்களுக்கு நன்றி..

---------------------------------------------------------------------------------------------------------------------------------
அடுத்து நான் பார்த்த கடவுள்..


என் பக்கத்து வீட்டு ஆன்டி சரஸ் ஆன்டி ..கடவுள்னா எப்படி இருப்பார்னு நினைப்போம்.நல்லவர், சாந்தமுள்ளவர், பொறுமையானவர்

கோபமே வராது, எல்லாரும் நல்லாருக்கணும்னு நினைப்பவர்..எதிரிகளே இருக்கமாட்டார்கள்.. இப்படி எத்தனை சொன்னாலும்

அதற்கெல்லாம் தகுதியானவர் சரஸ் ஆன்டி...

எனக்கு 3 வயதாகும் போது பாளையில் அருகருகே குடிவந்தோமாம்.. இன்றுவரை அதே வீட்டில்...ஆன்டி

அவர்கள் வாழ்க்கையை பற்றி மட்டும் சொல்கிறேன்... கமலாகாமேஷ் உருவ அமைப்பு.. வெள்ளைச்சட்டையும் , சாதாரண

நூல் புடவையும்..வசதி அதிகம் .. ஆனாலும் 2 தங்க வளையில் கையில் எப்போதும் .. அது தவிர பட்டுப்புடவை கட்டிகூட பார்த்ததில்லை அதிகம்..

அவங்க திருமணம் ஆன போதே அவர்கள் நாத்தனாருக்கு மனநிலை சரியில்லை.( திருமண பயத்திலாம்...)

மாமியார்தான் பார்த்துக்கொள்வாராம்..ரொம்ப செல்லமாக வளர்ந்த மகள்.. ஆனால் மாமியாரும் சீக்கிரமே தவறிவிட, அன்றிலிருந்து ஆன் டிதான் பார்த்துக்கொள்வார்கள்..

எப்படி?.. ஒரு மன நிலை சரியில்லாதவரை கவனிப்பதுபோல் இல்லை.. அவர்களுக்கு தனி அறை.. நேரத்துக்கு சாப்பாடு... குளிப்பாட்டுதல்,

உடை அணிவித்தல், நீளமான தலைமுடியை பின்னிவிடுதல்.. மேலும் பூ ரொம்ப பிடிக்குமாம் நாத்தனாருக்கு.. அதனால் தினமும் பூ வாங்கி

தலையில் வைப்பார்கள்... அவர்கள் அருகில் இருந்து பைபிள் வாசிப்பார்கள்.. சில சமயம் முரண்டுபிடிப்பார் நாத்தனார்..அப்பவும் பொறுமையா ஒரு

2 மாத குழந்தையை கையாளுவதைப்போல் மென்மையாக நடந்துகொள்வார்களேயொழிய சலித்துக்கொள்ளவேமாட்டார்கள்..

அப்படி ஒருத்தர் அந்த வீட்டில் இருப்பதே பலருக்கு தெரியாது...

சாப்பிட அழைக்கும்போது அவ்வளவு மரியாதையாக..

" அண்ணி , சாப்பிட வாரீங்களா?.." என்றுதான் கேட்பார்கள்... சிலசமயம் ஊட்டியும் விடுவார்கள்..

எத்தனையோ முறை எங்கள் வீட்டு ஜன்னலில் வந்து எட்டிப்பார்த்துக்கொண்டே நிற்பார்கள்.. பயந்து போயிருக்கேன்..

ஆனாலும் ஒன்றும் செய்யமாட்டார்கள்..

1, 2, அல்ல, சுமார் 30 வருடம் இந்த சேவையை மனம் கோணாமல் செய்ததோடு அவர்கள் படுக்கையில் விழுந்தும் அதேபோல் கவனிப்பு..

அடுத்து அவரது தந்தை .. நோய்வாய்ப்பட்டபோது, அதேபோல தந்தையையும் இறுதிவரை கவனித்தார்கள்...

அடுத்து தாய்.. அவருக்கு கான்ஸர் வந்து எல்லாவிதமான சிகிச்சையையும் நெய்யூர் முதலான ஊருக்கு சென்று அலுப்பின்றி

சலிப்பின்றி அருமையாக கவனித்துக்கொண்டார்கள்.. பாட்டியம்மாவுக்குதான் வருத்தமாயிருக்கும்.." என் மகளுக்கு பாரமா இருக்காமல்

சீக்கிரமா போகணும்னு சொல்லிட்டே இருப்பாங்க.."

திடீரென்று ஓர்நாள் ஜன்னலில் சன்னமான குரலில் அழைப்பு..என் வீட்டிலும் யாருமில்லை.

" என்ன ஆன்டி "

" சாந்தி கொஞ்சம் வாரீயா?..அம்மாவுக்கு என்னவோ பண்ணுது.."

போய் பார்த்தால் பாட்டி மரணம்.. ஆன் டி துடித்து முதல்முறையாக அதுவும் மெதுவாகவே அழுவதைக்காணமுடியவில்லை..

சிறிது நேரத்துக்கெல்லாம் சமாதானம் அடைந்தார்கள்.. அன்னைமட்டும் அந்த நேரத்துக்கான ஜெபத்தை வாசிக்கச்சொல்லி கேட்டார்கள்..

பின் அங்கிளுக்கு போன் போடச்சொன்னார்கள்... முகத்தைத்துடைத்துக்கொண்டு.. அதன்பின் அழுகையை இறுதிவரை அடக்கிக்கொண்டு

வந்தவர்களுக்கு காபி குடுப்பதிலேயும் கவனிப்பதிலேயும் இருந்தார்கள்..தன் அழுகை கூட யாரையும் வருத்தக்கூடாது என்ற எண்ணம்..

எங்க வீட்டில் எந்த ஒரு பிரச்சனை, விழா என்றாலும் ஆன் டி , அங்கிள்தான் முதலில்...

ஞாயிறனறு தூங்கினால் அம்மா எழுப்பும்போதே

" இந்தா ஆன்டி அங்கிள் வந்திருக்காங்க " னு சொன்னா போதும் , எல்லோரும் துண்டை காணோம் துணியை காணோம்னு

எழும்பி ஓடுவோம் குளிக்க.. அவர்கள் முன் கெட்டவராய் இருப்பதில் அவ்வளவு வெட்கம்..

எங்க வீட்டுல நடக்கிற கலாட்டா அத்தனையும் அவர்களுக்கு அத்துபடி..

" என்ன அழுகை?. காலேஜ் பஸ் போயிடுச்சா?.. சரி நான் கொண்டு விடுறேன்.."

" என்ன மேலே படிக்கமாட்டாயா?.. வேலைக்கு போகணுமா?.. படிச்சால் நல்லதுதானே?.." அக்காவிடம்..உடனே சரிதான் பதில்

" என்ன கல்யாணம் இப்ப வேண்டாமா.. பண்ணிக்கோ.." சரி அங்கிள் - அண்ணா.

ஒரு மந்திரத்துக்கு கட்டுப்பட்ட மாதிரி...

எங்களுக்கு மட்டுமல்ல பலபேருக்கு எங்கள் தெருவில்..பூக்காரி வந்து அவள் கஷ்டத்தை சொன்னால்கூட அமைதியாய், ஆறுதலாய் கேட்பார்கள்..

நாந்தான் அவர்களை அதிகம் தொந்தரவு செய்திருப்பேன்.. சவ்வு மிட்டாய், தேங்காய் மிட்டாய் , மல்பெரி ஜாம் அடிக்கடி எனக்கு செய்து தருவார்கள்..

இன்றுவரை உலகத்தில் ஆன்டி யின் தேங்காய் மிட்டாய்போல் சுவை எங்குமே கிடைத்ததில்லை.இப்பவும் நான் சென்றால் எனக்காக செய்து தருவார்கள்..

அடிக்கடி அவர்கள் சமையலரையில் இருந்து பைபிள், வாழ்க்கை குறித்த அனைத்து விஷயங்களையும் சொல்லித்தருவார்கள்.

லீவு விட்டால் , குரோஷா, கூடை பின்னுதல், எம்பிராய்டரி, செடி வளர்த்தல் எல்லாமாய் கற்றுக்கொண்டேன்.. இன்னும் அவர்கள்

நினைவில் செடி வளர்க்கிறேன் அபார்ட்மெண்டில்.. செல்லமாய் பூனை , கோழி வளர்த்தார்கள்.. அவர்கள் உலகம் எப்போதும் அன்பானது..

வாழ்க்கையில் அவருக்கு பல சோதனை.. சிலவற்றை பேசி சமாளிக்கலாமோ என நினைப்பேன்.. அப்போதும், அதை கடவுள்

குடுத்த பரிசாகவே எண்ணி மனமுவந்து ஏற்றுக்கொண்டார்களே தவிர ஒரு குற்றம் குறை கூறியது கிடையாது....

அவர்கள் வீட்டுக்கு வந்த மருமகனும் , மருமகளும் அவரைப்போலவே மாறியது இன்னொரு அதிசயம்..

அவர்கள் மகனுக்கு, பெண்பார்க்க சொன்னார்கள்.. நானும் என் மிக நெருங்கிய தோழியை சொன்னேன்..ஏனோ ஒத்துவரலை..

" சாந்தி நீ சொல்ற பெண்ணைத்தான் நாங்க முடிவு பண்ணுவோம் "

அதேபோல் அண்ணியை நாந்தான் முதலில் சென்று பார்த்தேன் ஒக்கே சொன்னேன்.. அவர்கள் என் கல்லூரி சீனியரும்..

பிள்ளைகளை அடித்து வளர்ப்பதில் கொஞ்சமும் விருப்பமில்லாதவர்கள்.. அன்பாலேயே எப்படித்தான் வளர்க்கமுடியும்னு

கேட்பேன்... சேட்டை ரொம்ப பண்ணினா என்ன பண்ண?..

" அன்பால கேக்காத பிள்ளை அடித்தாலும் கேட்காது " என்பார்கள்.. என்னவோ நமக்கெல்லாம் அது இன்னிக்கு வரை ஒர்கவுட் ஆனதில்லை..

யாராவது அந்த கடவுளைப்பார்த்தாலே போதும்.. அத்தனை சந்தோஷமாயிருக்கும் உள்ளம்..

பார்க்கணுமா?., தனிமடலில் விவரம் தருகிறேன்... கண்டிப்பாக சந்தியுங்கள்...

***********************************************தொடரும்******************************************

தொடர்ச்சி...- பாகம் 1.

அலீமாவின் வீட்டுக்கு சென்று பார்த்தோம் அவளால் வேகமாக நடக்கமுடியவில்லை... முதுகில் வலி.. மாத்திரை சாப்பிட்டும் நிற்கவில்லையாம்..

மேலும் பல பரிசோதனைக்கு பரிந்துரைத்தார்களாம்.. அவளுக்கு பயம் .. தண்டுவடம் டிஸ்க் விலகியிருக்கலாமோ என.. வாழ்நாளெல்லாம் கஷ்டப்படணுமே என கவலை..

சொல்லும்போதே கண்களில் நீர்த்துளி..எனக்கும்.." அப்படியெல்லாம் ஒன்றும் இருக்காது.. இருந்தாலும் மருத்துவ உலகில் இப்ப நவீன சிகைச்சையுள்ளது.. சரியாகிவிடும்.."

என ஆறுதல் சொல்ல, " இல்லை, ஆயுசுக்கும் இருக்குமாம்.. எனக்கு குழந்தைகள் பத்திதான் அதிக கவலை " என்கிறாள்..

" அப்படி ஒன்று நேர்ந்தால் ஆயுசுக்கும் நானிருக்கேன் அலீமா.." என்று மட்டுமே என்னால் கூற முடிந்தது...எனக்கு உள்ளே பயம் அதிகரித்தது...அவள் வேதனை குறித்தும், இன்னும் என்னை நல்ல நிலைமையில் வைத்திருக்கும் கடவுளை நன்றியோடு எண்ணியும்..நான் செய்ய வேண்டிய வேலை அப்ப நிறைய இருக்கு போல...

அவள் கணவரே எல்லா பணிவிடைகளும் செய்கிறார் அன்பு மனைவிக்கு...

--------------------------------------

3 வருடம் முன்பு.. சலீம் அழைக்கிறார்.. " சாந்தி ஒரு விஷயம். அலீமா வந்து சொல்வாள்.."

என்னவாயிருக்கும்.. வரும்வரை சஸ்பென்ஸ் தாங்கவில்லை.. உள்ளே நுழைந்தவளைப்பார்த்ததும் அப்படி ஒரு மகிழ்ச்சி.. வாயும் வயறுமாய்..

அதே நேரம் நானும் அதே நிலைமையில் இருப்பதை பார்த்தௌம் அவளுக்கும் மகிழ்ச்சி..

இருவருக்கும் இரண்டாவது குழந்தை 3 மாத வித்யாசத்தில்.. பிரசவத்துக்குமுன் ஓர்நாள் அவளை பார்ப்பதற்காக நான் வருகிறேன் என்றபோது,

" என் கணவர் வந்து அழைத்து வருவார்.. வீடு மாற்றியுள்ளோம்... சிரமம் வேண்டாம் என்றாள்.."

அடுத்த 1 மணிநேரத்தில் பலத்த மழையில், அவர்கள் வண்டி வந்தது.. மூத்த மகன் ஓடிவந்தான் .. ஏறச்சென்றபோது அதிர்ச்சி...

ஓட்டுனர் இருக்கையில் அலீமா... " என்ன இது.. நீயேன் இந்த நேரத்தில் மழையில் வண்டியை ஓட்டிக்கொண்டு?" திட்டினேன்..

" என் கணவர், உங்களுக்காக இந்திய உணவு ( ரொட்டி ) தயாரிக்கிறார்.. அதனால்தான்..."

இப்படித்தான் 300 கிமீ பயணத்தைகூட சாதரணமாக ஓட்டிச்செல்வாள்.. அதுவே முதுகுவலி வந்திருக்குமோ?..

என் பையன் அதிசயிப்பான், அம்மா ஆண்டி உங்களவிட ரொம்ப ஸ்மார்ட் என்று .. பெருமையாயிருக்கும்...என் தோழியைபற்றி..

என்னவென்று சொல்வது அவர்கள் என் மீது வைத்திருக்கும் அன்பை, இல்லை, அன்புத்தொல்லையை...???இப்படித்தான் அதிகமா என்னை வருத்தப்படச்செய்வாள்

டெலிவரி சமயம் கண்டிப்பாக என்னை கூப்பிடு.. நான் வருவேன் உடனே என்றேன்.. குழந்தை பிறந்தபின் கூப்பிடுகிறாள்.. எனக்கு உதவ நினைப்பாளே தவிர,

என்னிடம் உதவி கேட்டு என்னை தொந்தரவு செய்துடக்கூடாது என்று நினைப்பாள்...

கணவருக்காக பாகிஸ்தான் உடையணிந்து முஸ்லீமாக மாறி, பாகிஸ்தான் சென்று உறவுகளையும் 2 மாதம் மகிழ்ச்சிபடுத்தி வந்தாள்..

இன்றும் அலுவல் விஷயமாய் மட்டும் தாய்லாந்து உடை, மற்றபடி பாகிஸ்தான் உடையில்.. .

சிலரிடம் அன்பு காட்டினால் ஏமாறலாம்.. ஆனால் அலீமா போன்றோர் அதை பன்மடங்காக்கி திருப்பித்தருகிறார்கள்....நான் இப்ப கடனாளியாய்..

-------------------அடுத்து நான் பார்த்து வளர்ந்த ( சரஸ் ஆன்டி) கடவுள்...------------------------------------------------------