skip to main |
skip to sidebar
தனியார் கல்வி நிறுவனங்களின் துறை சார்பில் தாய்லாந்து கல்வியியல் அதிகாரிகள் ஒரு அவசர அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்கள்..
எல்லா தனியார் வெக்கேஷனல் பள்ளிகளிலும் பெண்கள் கெளரவமாக உடை அணியும்வரை பள்ளி/கல்லூரிகள் மூடப்படும் என்பதே..
பாங்காக் நகரின் பொதுமக்கள் பலரிடமிருந்து வந்துள்ள புகார்கள் பெண்களின் குட்டப்பாவாடை மிக சங்கடத்தை ஏற்படுத்துவதாக கூறியுள்ளனர்..
நகரின் முக்கிய சிறந்த பள்ளிகளில் பாவாடை முட்டிக்கு கீழ் இருக்கவேண்டும், சட்டைகள் தொள தொள எனவும் உடம்போடு ஒட்டாமலும் இருக்க வேண்டும் என்பது கட்டுப்பாடு..
சட்டத்தை மீறி கவர்ச்சியாக உடை அணிந்து வரும் பெண்களை பார்க்க நேர்ந்தால் அப்படி அனுமதிக்கும் கல்லூரி / பள்ளிகளை மூடப்போவதாக தனியார் கல்வி நிறுவன உயர்மட்டகுழு அறிவித்துள்ளது.. அதிகமாய் கவர்ச்சியை காட்டுவதன் மூலம் , நாட்டில் அதிக குற்றங்கள் ஏற்பட வாய்ப்பளிப்பதாகவும், பெற்றோரும் தங்கள் குழந்தைகள் உடையில் அதிக கவனம் செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்..படங்கள் நன்றி - http://www.thaivisa.com/



குழந்தைகளுக்கு இரு மாதம் விடுமுறை விட்டாச்சு.. அனேகம்பேர் ஊருக்கு செல்லும் நேரம்.. சிலர் போவதில்லை.. கணவர்மார் உணவுக்கு கஷ்டப்படனுமேன்னு..!!!
இதை சாக்காக வைத்து எல்லா பள்ளிகளும் இப்ப சம்மர் ஸ்கூல் என ஒரு பகல் கொள்ளை திட்டத்தை ஆரம்பித்துள்ளன...15 நாளுக்கு 15, 000... அதுவும் எத்தனை மணி நேரம்?. 9-12 , - 3 மணி நேரத்துக்கு..
அப்படி என்னதான் சொல்லிக்கொடுப்பாங்க னு பார்த்தா கலரிங், கொஞ்சம் பேப்பர் கட்டிங் , விளையாட்டு ஏற்கனவே நடத்திய பாடங்களை ரிவிஷன்..
சரி வீட்டுல தொல்லை பண்ணாமல் எங்கேயாவது ஒரு 3 மணி நேரம் போய்விட்டு வரட்டும் என அனுப்பலாம்தான்..
ஆனா பாவம் குழந்தைகள் லீவிலும் அதே 6 மணிக்கு எழுந்து அவசர அவசரமா பல் தேய்த்து , குளித்து , அறைகுறையா சாப்பிட்டு ( அதுக்கும் திட்டு வாங்கி ) தூக்கத்தோடே வேனில் ஏறி டிராபிக்கில் சிக்கி 1 மணி நேர பிரயாணத்துக்கு பின் பள்ளி அடையணும்..
அதுவும் ஒரே வகுப்பு தோழ, தோழியர் என்றால் பரவாயில்லை.. எல்லா வயதினருகும் ஒரே வகுப்பு.. ஏனெனில் ஒரு வகுப்புக்கு 4, 5 குழந்தைகளே சேருவதுண்டு..
இந்த முறை பணம் கட்ட சென்ற போது எங்க இடத்துக்கு வேன் வராது .. ஏன்னா உங்க பையன் மட்டுமே வருவதால் எனவும் , நானே கூட்டி வந்து விடணும் எனவும் சொல்ல நான் பரவாயில்லை வேண்டாம் என முடிவு செய்தேன்..சரி இப்ப என்ன செய்ய பையனுக்கு பொழுது உபயோகமாக கழியணும்.. ஏன் நாமே சம்மர் ஸ்கூல் ஆரம்பிக்க கூடாது.?
எங்க வீடே ஒரு பிளே ஸ்கூல் மாதிரிதான் வைத்துள்ளேன்.. சருக்கு , ஊஞ்சல் , டேபிள் டென்னிஸ் , கார் , ஸ்கூட்டி, சைக்கிள் , என இப்படி.. மேலும் இப்ப முயல்குட்டி வேற இருக்கு விளையாட..படிப்புக்கு தேவையான புத்தகங்களும் கலர் பென்சில் , கிரயான்ஸ், பெயிண்ட் , பிளே டோவ் ( களிமண் போல ) , காகிதங்களும் ரெடி செய்தேன்.. குழந்தைகளுக்கு தேவையான வரையும் நோட்களும்..வாங்கி வைத்தேன்.
பின் எங்க குழுமத்தில் அறிவித்தேன் .. " சம்மர் பள்ளி இலவசம் " என
உடனே அழைப்புகள் வர தொடங்கின..
ஜூலை 1ம் தேதியிலிருந்து ஆரம்பிக்கலாம் என நினைத்தேன் ஆனால் போட்ட அன்றே ஆள் வந்தாச்சு.. ஜூன் 29ம்தேதியிலிருந்து ஆர்வமாய் குழந்தைகள் வந்து இப்ப வீடு பள்ளியாகிவிட்டது..
குழந்தைக்கு தேவையான ஆர்ட் ஒர்க் எல்லாம் இண்டெர்நெட்டில் அப்ப அப்ப பார்த்து சொல்லி கொடுக்கலாம்.. லட்சக்கணக்கில் இருக்கு ஐடியாக்கள்..
வகுப்பு 10 மணிக்கு ஆரம்பிப்பதால் குழந்தைகள் நன்றாக தூங்கி மெதுவா எழுந்து குளித்து நிதானமா உணவருந்தி மகிழ்ச்சியோடு வருகிறார்கள் ..
மதிய உணவுக்கு 1-2 மணிக்கு அன்னையர் அழைக்கும்போது போக மாட்டேன் னு பிடிவாதமாய் சொல்கிறார்கள்.. ஒரு குழந்தை சாயங்காலம் வரையிலும் என் வீட்டிலேயே விளையாடுது..:), முயல் குட்டியை கவனிப்பதே அவர்கள் வேலை..
நேரம் கிடைத்தால் கொஞ்சம் நடனமும் சொல்லிக்கொடுப்பேன்.. ( ச,.....ரி ச...ரி பயம் வேண்டாம் )
இலவசம் என்றாலும், ஒரு குஜராத்தி பெண்மணி , நான் ஏதாச்சும் உதவட்டுமா, ஏதாவது வாங்கி தரட்டுமா என அன்போடு கேட்கிறார்..நான் அன்போடு மறுக்கவேண்டியுள்ளது... நான் ஏற்கனவே குழந்தைகளுக்காக இப்படி இலவசமா பல முறை நிகழ்ச்சிகள் ( புதுவருட நிகழ்ச்சி, மாறுவேடப்போட்டி, அம்மாக்களுக்கு போட்டி , விளையாட்டு என ) நடத்தியதால் , பூங்கா , சுற்றுலா என அழைத்து சென்றுள்ளதால் எனக்கு இது கஷ்டமேயில்லை..
குழந்தைகளோடு அவர்கள் உலகத்தில் சஞ்சரிப்பது பிடித்தமான விஷயம்.. நம்மை அவர்களுக்கு பிடித்துவிட்டால் நாம் சொல்வதையெல்லாம் கேட்பார்கள்.. ( என்ன, அப்பப்ப கொஞ்சம் சாக்லேட் , ஜூஸ் தந்தா போதும்..)
இடையில் சிறிது நேரம் கீழிருக்கும் பூங்கா சென்று உதிர்ந்த மலர்கள் , இலைகள் குச்சிகளை எடுத்து வர செய்து ஒட்ட சொல்வேன்.. இப்படி சின்ன சின்ன வேலைகள் பழக்கலாம்..
அப்புரம் ஓடி ஆடி விளையாட்டு.. ஓய்ந்ததும் கொஞ்ச நேரம் கார்டூன் படம் டிவிடி யில்..
வாரம் ஒருமுறை நானே காரில் அவர்களை அழைத்துக்கொண்டு ஒரு சின்ன சுற்றுலா செல்லவும் என்ணியிருக்கேன்.. அவர்கள் அன்னையரோடு..
இப்படி திடீர் சட்னி, திடீர் குழம்பு போல " திடீர் சம்மர் வகுப்பு " தயார்..
தேவைதான் கண்டுபிடிப்புகளின் தாய் என சும்மாவா சொன்னாங்க..?
இதுபோல குழந்தைகளுக்கு மட்டுமல்ல நம் வீட்டில் வயோதிகர்கள் இருந்தால் அருகிலுள்ள வயோதிகர்களாய் அழைத்து இப்படி வாரம் ஒரு முறை ஒவ்வொருவர் வீட்டிலும் பொழுதுபோக்கிட செய்யலாம்.. நாம் அவர்களுக்கு முக்கியத்துவம் தருகிறோம் என்பதே அவர்களுக்கு மகிழ்ச்சியை அதிகரிக்கக்கூடும்..
நாம் முன்னின்று சுயநலம் கருதாது ஒரு காரியத்தை ஏற்பாடு செய்தோமானால் அதுக்கு கைகொடுக்க பலர் தயாராகவே இருக்கிறார்கள்..
புரிந்துகொண்டு பலனடைவோம் நாமும்...
( சுயபுலம்பல் , தற்பெருமை வகையிது.. வழக்கம்போல் பின்னூட்டம் தவிர்க்கவும்.)

மொபைலையும் இமெயிலையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தார் முருகேசன்...
" ஏங்க இவ்வளவு டென்ஷனா இருக்கீங்க.." டாக்டர் மனைவி 10 வது தடவையா புன்னகையோடு சொல்லிவிட்டு முதுகில் ஒரு தட்டும் தட்டிவிட்டு சென்றாள்.
இந்தியா சென்றிருந்த மகன் லோகேஷோட அழைப்புக்காக
காத்திருந்த முருகேசனுக்கு எதுவுமே காதில் விழவில்லை..
ட்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரிங்....................ட்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரிங்.....................
டக்கென எடுத்தார்..
" கண்டுபிடிச்சுட்டேன் அப்பா.." பதிலேயில்லை.. மகிழ்ச்சியில் மூச்சு முட்டுவது போலிருந்தது
" அப்பா ..அப்பா என்னாச்சு இருக்கீங்களா..?."
" சொல்லுப்பா ரொம்ப மகிழ்ச்சி..சரி மதன் கிட்ட விபரம் சொல்லிட்டு நீ கிளம்பி வந்துடு.."" மரகதம் , நாம இப்பவே இந்தியா கிளம்புறோம்.. " " என்னங்க நீங்க .மருமகள் பிரசவ நேரம். அவளோட பெற்றோர் வந்திருந்தாலும் நானும் கூட இருந்தா தான் நல்லாருக்கும்.. நீங்க கிளம்புங்க.."
---------------------------------------------------------
" என்னால இனியும் வச்சுக்க முடியாது உங்கம்மாவ.. உங்க தம்பிகிட்ட அல்லது முதியோர் இல்லத்துல விடுங்க.. மீறி வெச்சிருக்கதுன்னா நான் போறேன் எங்கப்பா வீட்டுக்கு.."
குழந்தைகளை இழுத்துக்கொண்டு மாடி ஏறினாள் நீனா.. செய்வதறியாமல் திகைத்து நின்றான் சரவணன்,..
" நான் தான் சொன்னேன்ல மா.. அவ குணத்துக்கு கொஞ்சம் அனுசரிச்சு போ னு.. வாரத்துல ஒரு முறை வீட்டுக்கு வரேன்.,. வந்தா நிம்மதியில்லை.. "
மகன் நிலைமை கண்டே கண்ணீர் வடித்தாள் தாய்..
" சரி வாப்பா தோச ஊத்துறேன்.. " எதையும் மனதில் வைக்காமல் அழைத்தாள் மகனை..
" நீங்க என்னம்மா நினைக்கிறீங்க..? தம்பி கிட்டயும் இருக்க முடியாது.. மாமனார் வீட்டோட இருக்கான் தொழில பாத்துகிட்டு.. ...........பே.........சா.................ம......" தயங்கினான் மேற்கொண்டு சொல்ல...
அதை கேட்டு அழ கூட வலுவிழந்தவளாய் திரையை விலக்கிக்கொண்டு அறைக்குள் நுழைந்தாள் முத்துலெஷ்மி..
---------------------------------------------------------------------------
" அட்ரஸ் சரிதானேப்பா.?.. இந்த குறுகலான தெருவிலா.. இரு யாரையாச்சும் கேட்டுக்குவோம்.."முருகேசன் மதனிடம்..
" ஏம்ப்பா தம்பி, இந்த முத்துலெச்க்மி அம்மா வீடு...??? " முடிப்பதற்குள்.,
" அத்வா சார், தோ லெஃப்டுல கட் பண்ணி நேர போனீனா , கட்சீ வீட்டுக்கு முந்தின பச்சை பெயிண்ட் வீடு.. "
" மதன் , 40 வருடம் கழிச்சு பார்க்க போறோம்..நான் தனியா மொதல்ல போறேன் . கார் இங்கயே நிற்கட்டும்.." இறங்கி நடந்து வீட்டு வாசலில் கால் வைக்கிறார்..பழைய நினைவுகளோடு...
----------------------------------------------------------------------------
" போறதுன்னா அந்த காவலியோட போய்டு.. குடும்பத்தோட செத்து தொலையுறோம்.."
" அப்பா எனக்கொண்ணும் தெரியாது.. என்ன நம்புங்கப்பா.." கதறுகிறாள்...
முத்துலெஷ்மியின் பெட்டியை வீசுகிறார் அவர் தகப்பன்..
" மன்னிச்சுருங்க சார்.. தப்பு என்மேல தான்.. என்னை தண்டியுங்க சார்.. " காலை பிடிக்கிறான் முருகேசன்..
" போடா பொறுக்கி .. ஏழை பையன்னு இலவசமா படிப்பு சொல்லி கொடுத்ததுக்கு நன்றியாடா நாயே.."
-----------------------------------------------------------------------
"என்ன இன்னும் முடிவு பண்ணலையா .. சரி நீங்க இருங்க உங்கம்மாவோட .. நானும் பிள்ளைகளும் கிளம்புறோம்.."" இரு .. இரு.. பேசலாம்.."
" எனக்கு பொறுமையில்ல..அவங்களே சுமை.. இதுல அவங்கள பார்க்க வருகிற கூட்டத்துக்கும் கொட்ட உங்கப்பா சொத்தா இருக்கு.. ?.."
" நானே போறேன் மா.. நீ அவனையும் குழந்தைகளையும் நல்லபடியா பாத்துக்கோ மா.. "
" அது எனக்கு தெரியும்.."
பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறியவர் இதுநாள் வரை தேக்கி வைத்திருந்த அழுகையை மொத்தமாக கொட்டவும், வாசலில் கேட்டை பிடித்தபடியே அதிர்ச்சியில் நின்றிருந்த முருகேசனை கண்களை சுறுக்கிக்கொண்டு சந்தேகத்தோடு பார்த்தாள் முத்துலெஷ்மி....
" இப்பவாவது என்கூட வருவியா எங்க வீட்டுக்கு லஷ்மி.. உனக்காக அங்கே ஒரு கூட்டமே இல்ல இல்ல குடும்பமே காத்திருக்கு..........."
------------------------------------------------------------------------------------
இந்த புதிய பக்கம் மூலம் உலகில் நடக்கும் சின்ன சின்ன செய்திகள் பதிவாக தொடரும்..ஜகார்தா - இந்தோனேஷியா : இந்தோனேஷிய காவல்துறையினர் அக்மாமூல் முக்மினின் என்ற 24 வயது இளைஞரை விலங்குகள் சரணாலய புலியை கொன்றமைக்காக கைது செய்தனர்..மிக பாதுகாக்கப்படவேண்டிய விலங்கினமான புலியை கொன்று அதன் தோலை எடுத்தமைக்காக குறைந்த பட்சம் 5 வருடம் சிறைத்தண்டனையும் 4 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படுவார்.. சரணாலயம் மூடியபின்பு புலி உணவில் விஷம் வைத்து கொல்லப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது..கோலாலம்பூர் - மலேஷியா : நூறாண்டுகளுக்கும் மேல் பழமையான சிறைச்சாலை ஒன்று நாட்டின் அபிவிருத்திக்காக இடம் தேவைப்படுவதால் இடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது..இதனை வரலாற்றாய்வாளர்கள் எதிர்க்கின்றனர்.. கோலாலம்பூரின் முக்கிய பகுதியில் அமைந்திருக்கும் " புடு" எனும் சிறைச்சாலை 115 வருடம் பழமை வாய்ந்தது..சுற்றுலா தளமாகவும் ,வரலாற்று சிறப்புமிக்க இடமாகவும் விளங்கி வந்தது..இதன் 394 நீள சுவர் நேற்று இடிக்கப்பட்டு மிகப்பெரிய உணவு விடுதிகளும், அடுக்ககங்களும் கட்ட அரசு சார்ந்த கட்டட துறையினர் திட்டமிட்டுள்ளனர்..சிறை ஒருபோதும் வரலாற்று தலமாகாது என்பதும் , பெருமைப்படக்கூடிய இடமுமல்ல என்பதும் அரசின் முடிவு..கொசுறு..:வெலிங்டன் - நியூஸிலாந்து : மிக அழகான யுவதி ஒருத்தி நேரே அருகில் திறந்திருந்த வீட்டுக்குள் சென்று வீட்டிலுள்ள நன்றாக மது அருந்திவிட்டு , உணவும் உண்டு விட்டு , உடைகளையும் போட்டுக்கொண்டு , படுக்கையில் படுத்து உறங்கிவிட்டார்..வீட்டு ஓனர் , காவல்துறைக்கு அறிவிக்க , காவலர் கையும் களவுமாய் பிடித்தனர்..விசாரித்ததில் , அன்று என்ன நடந்ததென்றே தெரியவில்லையாம்...!!!!!நஷ்ட ஈடாக 50,000 ரூபாய் பணமும், நன்னடத்தைக்காக வீட்டு காவலில் வைக்கும்படியும் தண்டனை பெற்றுள்ளார்..தொடரும்....


அவசரமான உலகம், போராட்டமான வாழ்க்கை , விதிக்கப்பட்ட வாழ்க்கை என வாழ்க்கையை வாழ்ந்து வருபவர்களுக்கு நகைச்சுவையை ரசிக்க நேரமின்றி மறத்துத்தான் போகிறது வாழ்க்கை..
எப்போதும் சீரியஸாகவே இருப்பவரிடம் விளையாட்டாய் ஒரு நகைச்சுவை சொல்லிப்பாருங்கள்.. கொலைவெறியோடு திருப்பி தாக்குவார்..
நாம் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவே மாட்டோம்.. நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை என்றுகூட விளக்கிட முடியாது..
ஏனெனில் அவர் நிலைமை அப்படி..அவர் சூழல் அப்படி..
ஆராய்ச்சியாளார்கள் சொல்கிறார்கள் , நகைச்சுவையும் , மனம் விட்டு சிரிப்பதும் மகிழ்ச்சியையும் , உற்சாகத்தையும் கொடுப்பதோடு மனதுக்கும் அதன் வழியாக உடம்புக்கும் மிக நல்லது..எப்படி.?
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்குது , நம் உடம்பின் நேர்மறை சக்தியை அதிகரிக்குது , வலிகளை குறைக்கின்றது...மேலும் மன அழுத்தத்தினால் ஏற்படும் அபாயத்தை வேறோடு அழிக்கின்றது..
நகைச்சுவை ஒரு தொற்று நோய்.. இருமல், தும்மலை விட உடனே பற்றிக்கொள்ளும்..அது முன்பின் தெரியாத மனிதரையும் இணைத்துவிடும் பசைகொண்டுள்ளது..
சீக்கிரமாகவும் மிக எளிதாகவும் நம்மை ஒரு சமநிலைமைக்கு கொண்டு வருகின்றது..அடுத்த 45 வினாடிகளுக்கு அந்த புத்துணர்ச்சி நம் தசைகளை தளர்த்தி வலி குறைத்து வலிமையை அதிகரிக்கின்றது..
மனம் விட்டு சிரிக்கும்போது நம் உடம்பில் எண்டார்ஃபின் என்ற நல்ல ஹார்மோன் சுரந்து வலி குறைப்பதோடு, முழு ஆரோக்கியத்தை வழங்குகின்றது.. அது மட்டுமா, ரத்த ஓட்டத்தை நாளங்களில் அதிகரித்து இருதயத்தை பலப்படுத்தி இருதய நோய் வராமல் தடுக்கின்றது..
உடற்பயிற்சி செய்ய முடியாத இருதய நோயாளிகள் கூட வயறு குலுங்க ( கவனிக்க தொப்பை குலுங்கணும் ) சிரிப்பது உடம்புக்குள்ளேயே ஒரு ஓட்டப்பயிற்சி செய்வதற்கு சமம்.. ( எதுக்கும் பாஸ் பக்கத்தில இருக்காரா னு பார்த்துட்டு சிரிங்க)
அது மட்டுமா , வயறு குலுங்கும்போது சுவாசப்பையிலுள்ள காற்று உள்ளிழுப்பதைவிட அதிகமாய் வெளியேற்றப்படுகிறது.. இந்த சுற்றப்படுத்துதல் ஆழ்மூச்சுப்பயிற்சிக்கு சமம்..இது முக்கியமா எம்ஃபைசைமா , போன்ற சுவாச நோயுள்ளவர்களுக்கு மிகுந்த பலன் தரும்..
ரத்த அழுத்தத்தை கட்டுப்பாடில் வைத்திருக்க ஆண்களைவிட பெண்களுக்கு அதிக பயனளிக்குது..
இது பற்றி எழுத நிறைய விஷயங்கள் இருக்கு..நோய்கள் பற்றி, நேர்மறை எண்ணம் பற்றி , சிரிப்பு ஜீன்கள் னு லட்ச விஷயங்கள்.. என்ன எழுத தான் நேரமில்லை,.. ( மொக்கை வேற போடணுமே..நானும் கொஞ்சூண்டு சிரிக்கணுமே தினமும்.. )
சரி மொக்கைக்கும் சிரிப்புக்கும் என்ன சம்பந்தம்னு கேட்கிறீங்களா, நகைச்சுவையின் ஆணி வேரே இந்த மொக்கை , கும்மி தானுங்க..
சிறப்பா நகைச்சுவை சொல்லும் கலை சிலருக்கு தெரியாமல் இருக்கலாம்.. ஆனால் மொக்கை/கும்மி போட எல்லாருக்கும் தெரியும்... மொக்கை போடும்போது ஈகோ அழிகிறது.. இழிவை கூட நகைச்சுவையாக ஏற்கமுடிகிறது.. அதிலுள்ள குற்றம் தவிர்த்து நகைச்சுவையை உணர முடிகிறது..
அதனால இந்த சீரியஸ் கட்டுரையை இப்ப நிப்பாட்டிக்கிறேன்.. அட இதுவும் மொக்கைதான் னு நீங்க நினைச்சா, வலிக்காம சிரிச்சுட்டு போங்க...
மொக்கை போடுங்க, முழுசா வாழுங்க...
முன்னேறுவதற்காக நேரம் செலவழிப்பதோடு நகைச்சுவைக்கென நேரம் ஒதுக்கிட பழக்கிக்கணும்.. அல்லது அப்படியான நட்போடு இருக்கவாவது பழகிக்கணும்... ஆனாலும் நகைச்சுவை என அதிகமா சிலர் காழ்ப்புணர்ச்சியோடு தாக்குதலையும் நடத்துவார்கள்.. அவர்களிடம் கவனமாயும் இருந்திடணும்..:)
மொக்கை என்பது யாதெனில்...யாதொன்றும் தீமை இல்லாத சொல்..
----- தொடரும்...
( பொன்னான நேரத்தை பின்னூட்டமிடுவதில் செலவிடவேண்டாமே..)