Tuesday, August 25, 2009

ஒதுக்கப்பட்ட கல் - பாகம் 15முற்றும்

ஒதுக்கப்பட்ட கல் - பாகம் 15.


மாடிப்படியேறி சென்ற மலரை உள்ளே வர விடாமல் கதவை தாளிட்டுக்கொண்டான் ராஜ்.

" ராஜ் இதென்ன பிடிவாதம் சின்ன குழந்தைபோல்.? எவ்வளவு பெரிய கம்பெனி நிர்வாகி நீங்கள்.?"

" ஆமா . எல்லாம் எதுக்காக மலர்..?.. இந்த பணம் , பதவி எல்லாம் எதுக்காக..?.. என் சொந்த வாழ்க்கையில் நான் தோற்றுவிட்டேனே..நீ என் அன்பை புரிஞ்சுக்கிற மாதிரி நான் நடந்துக்கலையே?."

" அய்யோ இல்லை ராஜ்..உங்க மேல எந்த தப்புமில்ல.. என்னோட எண்ணமே வேறு.. சரி. இப்ப கதவை திறங்க முதலில்.."

அவள் மீண்டும் மீண்டும் வற்புறுத்தியதால் கதவை திறந்தான்..

இருவரும் மெளனமாக இருந்தனர்..சிறிது நேரம்...

" என்னை தயவுசெய்து கட்டாயப்படுத்தாதீங்க , செத்துருவேன்னு மிரட்டாதீங்க.. நாம நிதானமா பேச வேண்டிய விஷயம் இது ..ஒத்திபோடலாம்.. சரி இப்ப வாங்க கீழே போகலாம்.."

" அப்ப என்னையும் கட்டாயப்படுத்தவோ என் சாவை தடுக்கவோ வேண்டாம்.. அந்த உரிமையும் யாருக்குமில்லை.." எங்கோ பார்த்துக்கொண்டே கூறினான் விரக்தியாக...

சிரிப்பும் எரிச்சலும் ஒரே நேரத்தில் மலருக்கு..

" எப்படி புரிய வைக்க இவர்களுக்கு.. நான் தோற்கத்தான் செய்யணும் போல.." என எண்ணினாள்..

மீண்டும் நீண்ட மெளனம் நிலவியது..

------------------------------
-----------------------------------

2 ஆண்டுகள் கழித்து...

மாடியில் ஒரு குழந்தையுடன் ராஜும், கீழே அண்ணியார் ஒரு குழந்தையுடனும் இருக்க , வாசலில் கார் வந்து நிற்கிறது.

" வாங்க வாங்க... மலர் இதோ ரெடி ஆயிட்டா.. ஒரு 10 நிமிஷம்..உள்ளே வாங்க.."

" இரட்டைக்குழந்தைக்கு அம்மா அவள்.. எனக்கு புரியாதா அவளின் வேலைகள்,..? சரி ஐயா எப்படி இருக்கிறார்..?" நளினா..

" நீங்களே போய் பாருங்களேன் ..மாடியில்.."

கையில் குழந்தையையும் வாங்கிக் கொஞ்சிக்கொண்டே படியேறினாள்...

கோப்புகளுடன் அமர்ந்திருந்தவர் , இவள் வருகையை பார்த்ததும் எழுந்தார்..

கண்களோடு பேசிக்கொண்டே நலம் விசாரித்தனர் இருவரும் .

அதிக காதலில் , பாசத்தில் ஏதும் பேச விரும்பாமல் கொஞ்ச நேரம் மெளனமே நிலவியது..

காற்றில் பரவிய காந்த அலைகளிலேயே எண்ணங்களின் வாயிலாக இருவர் மனமும் பேசிக்கொண்டது..

" அப்ப நான் கிளம்பவா.." மனமேயில்லாமல்..

" ம்.இனி அடுத்து எப்ப..?"

" நீங்க கொஞ்சம் வெளியேயும் வரணும் .. இப்படி அடைஞ்சு கிடைக்காமல்.. மகன் ராகவ் பெரிய கம்பெனி ஆரம்பித்துள்ளான்.. அவனுக்கு உங்க அறிவுறைகள் , ஆசிகள் தரணும்.."

" எப்பவும் உண்டு.. அவன் திருமணத்துக்கு வருவேன் கட்டாயம்.. அதான் என் குடும்பத்தையே உங்கள் இருவர் வசமும் ஒப்படைத்துள்ளேனே.... நீயும் மலரும் இந்த குடும்பத்தை மட்டுமல்ல, நம் சமுதாயத்தையும் செழிக்க வைப்பது குறித்து மட்டில்லா மகிழ்ச்சி எனக்கு..." சொல்லிவிட்டு குழந்தையை வாங்கி முத்தம் ஒன்றை கொடுத்து மகிழ்ந்தார்..

" நீங்க போட்ட கோடு எல்லாம்.. நாங்க உங்க வேலையாட்கள் அவ்வளவுதான்.." என்றாள் நளினா தன்னடக்கத்தோடு..

" நான் உள்ளே வரலாமா..?" கேட்டாள் மலர்..

மலர் நுழைந்ததுமே அமைதியாய் இருந்த இடம் கலகலப்பாய் ஆனது..

" உனக்கெதுக்கம்மா அனுமதியெல்லாம்..உன் அனுமதிக்காக இந்த நாடே காத்திருக்கையில்..பத்திரிக்கை துறையே பயம் கொள்ளுது உன் பேர் சொன்னால்.." சிரித்தார்..

" எல்லாம் உங்க ஆசீர்வாதம் அண்ணா.." என அவரின் பாதம் தொட்டு வணங்கினாள்..குழந்தையையும் வாங்கிக்கொண்டு.


பின் இருவருமாய் குழந்தையை கொடுத்துவிட்டு காரில் கிளம்பி சென்றனர் சமூக சேவை செய்ய..

குடும்பமே வந்து வழியனுப்பியது மகிழ்வோடு.

விதியின் வசத்தால் சமூகத்தால் ஒதுக்கப்பட்ட கல் இன்று சமுதாயத்தின் மூலைக்கல்லானது விடாமுயற்சியால் , நல்லெண்ணத்தால்...

--------------------------------------முற்றும்------------------------------------------------

ஒதுக்கப்பட்ட கல் - பாகம் - 14.

ஒதுக்கப்பட்ட கல் - பாகம் - 14.



சிறுநீரக தானம் நளினாதான் வழங்கியுள்ளாள் என தெரிந்ததும் பலவகையான கேள்விகள் அதிர்ச்சிகள்..

அவர்கள் இருவரிடையேயான உத்தமமான அன்பை கண்டு பிரமித்துபோனாள்...

வாழ்க்கையின் மேலுள்ள பிடிமானம் அதிகரித்தது...

தன் நாவலின் இறுதிக்கட்ட பேட்டியை எடுத்துக்கொண்டாள் மலர்...நளினாவின் ஒவ்வொரு வார்த்தையும் அர்த்தம் பொருந்தியனவாக அனுபவ

வார்த்தைகளாக இருந்தன...

" பாலியல் தொழில் அங்கீகரிக்கப்படவேண்டும்.. அப்படி செய்யும்போது பலவித பிரச்னைகள் குறைய வாய்ப்பிருப்பதாகவும் , கற்பழிப்பு போன்ற

சம்பவங்கள் குறையலாம் என்பதை கேட்டதும் மலருக்கு மருத்துப்பேச தோன்றியது...ஆனால் சில சந்தேகம் மட்டுமே கேட்டாள்..

மேலும் ஒரு மனைவி நினைத்தால் மட்டும் தன் துணையை இப்படியான இடங்களுக்கு செல்வதை ஒருபோதும் நிறுத்திட முடியாது..

ஆனால் குறைக்கலாம்....என்னதான் ஆணுக்கும் பெண்ணுக்கும் உணர்ச்சிகள் ஒன்று என வாதிட்டாலும், சந்தர்ப்பம் கிடைத்தாலும்

பெண்கள் இப்படி செல்வார்களா , மாட்டார்கள்தானே ?..என்றும் வாதிட்டார்..

அதிலிருந்து என்ன தெரிகிறது ஆணுக்கு இது அவசியமான ஒன்று ஆதி காலந்தொட்டே...

பல வெளிநாடுகளில் இருப்பதுபோல வெளிப்படையாக இருந்துவிட்டால் பொதுஜனங்களின் மத்தியில் பாலியியல் தொந்தரவுகள் கணிசமாக குறையும்...

பல நாடுகளில் இதில் ஈடுபடும் பெண்களே, தாதாக்களிடமிருந்து விடுதலை பெற்று சில காலம் இத்தொழிலுக்குப்பின்,

தமக்கென ஒரு வாழ்வை அமைத்துக்கொள்கின்றனர்..குழந்தை
களை உயர்கல்வி படிக்க வைக்கின்றனர் முற்றிலுமாக விடுதலை கிடைக்குது..

யாரும் இவன்/ள் பெற்றோர் ஒரு பாலியல் தொழிலாளி என மோசமான பார்வை பார்ப்பதில்லை...

அந்த நிலைமை வரணூம் இங்கும்...

....ஆனால் இங்கு எதிராக இருப்பது வருத்தத்துக்குறியது..

இப்ப பல சமூக அமைப்புகள் இதை குறித்து பல கவுன்சிலிங் நடத்தி மறுவாழ்வு தருகிறார்கள்... இருப்பினும் அது நிரந்தரமல்ல..

இத்தொழிலுக்கு யாரும் வரக்கூடாது.. ஆனால் சூழ்நிலையால் வந்தாலும் அவர்களையும் மனிதராக கருதி மனிதாபிமானத்தோடு நடத்தப்படவேண்டும்..."

இன்னும் பல விஷயங்களையும் கேட்டுக்கொண்டு விடை பெற்றவளிடம், பூங்கொத்து ஒன்றை நீட்டினான் ராகவ்..

" நன்றி " என மட்டும் எவ்வித உணர்ச்சியும் இல்லாது சொல்லிவிட்டு பெற்றுக்கொண்டாள்...

அவள் புன்னகையையே சம்மதம்னு ராகவ் தவறாக புரிந்துகொண்டான்....இன்னிக்கு எப்படியாவது அம்மாகிட்ட பேசணும் னு முடிவுசெய்தான்..

மலரோ, தன் கல்யாண நாள் இன்று , அது ராகவுக்கு தெரிந்திருக்குமோ ?..நான் தான் கொண்டாட வில்லையே...சரி அது முக்கியமில்லை..

வருங்கால முதலாளி.. அவ்வளவே என் எண்ணிவிட்டு ஆட்டோ ஒன்றை கைகாட்டி நிப்பாட்டினாள்..

தொலைபேசி அழைப்பு...

" உனக்காக இங்க, உங்க அண்ணியார் வீட்டில் எல்லோரும் காத்திருக்கோம்.. நீ எங்கம்மா இருக்க?." அம்மா

" எதுக்கும்மா.."

" என்ன கேள்வி இது.. வேலையில உன் திருமண நாள் கூட மறந்துடணுமா.. "

" எதுக்கும்மா இதெல்லாம்.. எனக்கு பிடிக்காதுன்னு உங்க எல்லாருக்கும் தெரியுமே..."

பல உறையாடலுக்கு பின் ஆட்டோவை வீடு நோக்கி திரும்ப சொன்னாள்....

உள்ளே சென்றவளுக்கு அதிர்ச்சியாக எல்லா உறவினரும் கூடி இருக்க , நடு மேசையில் பெரிய கேக் ஒன்று வைக்கப்பட்டிருந்தது..

சாதாரண சுடிதாரில் இருந்தவளை அழகான கிளிப்பச்சையில் மஞ்சள் பார்டர் போட்ட சேலை கொடுத்து கட்டி வரச்சொன்னார் அண்ணியார்...

சக்கர நாற்காலியில் அவர் கணவரும்..புன்னகையோடு..பக்கத்தில் குழந்தைகள் தட்டில் , மிட்டாய் , பூ , பழங்களோடு...

இந்த வாரம் எப்படியாவது சொல்லிடணும் தனக்கு இத்திருமண வாழ்வில் விருப்பமில்லை னு என எண்ணிக்கொண்டிருந்தவளுக்கு மேலும் அதிர்ச்சியாய்..

ஏதோ கல்யாண வீடு போல களை கட்டிக்கொண்டிருந்தது....ஒரு பக்கம் சமையலும்...

" நம்ம வீட்டுல விசேஷம் நடத்தி சொந்தங்களை அழைத்து வெகு நாளாயிற்று.. அதான் இந்த ஏற்பாடு...மேலும் கம்பெனி நிர்வாகத்தை இனி தம்பியின் பொறுப்பில்

இன்றிலிருந்து முழுவதுமாய்.." என அவர் சொல்லவும் அப்பொதுதான் கணவரை தேடினாள்...

அவரோ முக்கியமான புள்ளிகளுடன் அடுத்த அறையில் பேசிக்கொண்டிருந்தான்...இவளைப்பார்த்ததும் புன்னகையோடு அருகில் வந்தான்...

" வாழ்த்துகள்.. "

" ம்.." கண்ணாலேயே கேட்கிறாள் " இதெல்லாம் உங்க வேலைதானா..?" னு

அண்ணியார் தந்த புடவையையும் வாங்காமல் , தவிர்த்ததும் எல்லோருக்குமே ஒருமாதிரியாகிவிட்டது...

அம்மா ஒடி வந்து திட்டினார் போட்டார் மெதுவாக..

எப்படி சொல்ல என்ன வார்த்தை பேச, யாரெல்லாம் புண்படப்போகிறார்கள் என மனதில் ஒரு முன்னோட்டம் மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தாள்..

இவள் ஏதாகிலும் பிரச்னை பண்ணிடுவாளோன்னு பயந்து அப்பாவே,

" சரி அவ ரொம்ப அலுப்புல வந்திருப்பா, முதலில் கேக் வெட்டட்டும்.. விருந்தினர்கள் சாப்பிட நேரமாச்சு.. "

" ஹ். ஆமா.. நான் ஒரு அவசர வேலையாய் மறுபடி செல்லணும்.. மன்னிக்கணும் எல்லோரும்..."

ராஜுக்கு கோபம் வந்தது..

" என்ன பேசுற நீ.. நமக்காக , நம்மை ஆசிர்வாதம் பண்ண வந்திருக்காங்க.. நீ என்னன்னா..கிளம்புறேன்னு சொல்ற...?" கொஞ்சம் அதட்டலாய்...

இப்ப அவளுக்கும் எரிச்சல் வர ஆரம்பித்தது...


" எனக்கே தெரியாம என்னை எதுவும் கேட்காம ஏன் இப்படி செய்தீங்க.. எனக்கு இந்த திருமண வாழ்க்கையே பிடிக்கல.." னு சொல்லிட்டு அழ ஆரம்பித்தாள்

எல்லோரையுமே வீணா காயப்படுத்துறோமேன்னு தெரிந்து...

எல்லோருமே அதிர்ச்சி அடைந்தார்கள்...

" எனக்கு ராஜ் மேல எந்த கோபமுமில்ல.. ஆனா நான் சமுதாயத்துக்காக செய்ய வேண்டிய காரியம் பல இருக்கு... சிலருக்கு மட்டுமே அந்த வரம் இருக்கு.. அதில் நானுமொருத்தி.."

" சும்மா அதிகப்பிரசங்கியாட்டம் பேசாதே.." அம்மா...கைபிடித்து அழுத்தினாள்...

" அய்யோ அம்மா. உனக்கு ஒண்ணும் புரியாது.. உனக்கு வீடு மட்டும்தான் உலகம்.. எனக்கு உலகம்தான் வீடு..".. கையை விடுவித்துக்கொண்டு..

" சரி இப்ப என்னதான்மா சொல்ற.." அன்போடு கேட்கிறார், அண்ணியரின் கணவர்...

" அண்ணா, ராஜுக்கு வேறு திருமணம் செய்யுங்க..." னு சொல்லி அவர் நாற்காலி பக்கம் முட்டிக்கால் போட்டு கெஞ்சுபவள்போல்.




இதை கேட்ட ராஜ் இடி விழுந்தவன் போல, அப்படியே நெற்றியில் கைவைத்துக்கொண்டு

" என்னை அவமானப்படுத்தும் எண்ணம்தானே மலர்..? "னு சொல்லிவிட்டு ,


மாடிப்படி ஏறி உள்ளே சென்றான்.., அவள் அக்கா, " ராஜ், ராஜ்..இருப்பா.. " என்று கத்திக்கொண்டே

பின்னாலேயே...

" ஏம்மா நல்லா யோசித்துதான் பேசுறியா...?.. அதை இப்ப பேசணுமா என்ன..?" அப்பா..

" ஆமாப்பா, வேற வழியில்லை.. எத்தனை நாள் மனதுக்குள்ளேயே வைத்து புழுங்க..?ராஜ் ரொம்ப நல்லவர்... அவர் பொறுப்பான வேலைகள் நிறைய காத்திருக்கு... அவருக்கு அனுசரணையா, அவரை அன்பா பாத்துக்குற மாதிரி

ஒரு பெண் இருந்தா போதும்... ஆனா என்னோட எண்ணங்கள்லாம் நம்ம சமுதாயத்தின் மீதே இருக்கு..இதுக்கு என்னாலான உதவிகளை செய்யணும்...என் ஆயுசுக்குள்.."

" ஏம்மா எது வேணுமானாலும் தாராளமா நீ இப்படியே செய்யலாமே.. நான் உதவுறேன் உனக்கு.." அண்ணியாரின் கணவர்..

" இல்லண்ணா, ஒரு சாதாராண பெண்ணாய் , குழந்தை குடும்பம்னு என் வாழ்க்கை இருக்காது.. நான் முழுவதுமாய் சேவையில் ஈடுபடணும்னா , எனக்கு திருமண வாழ்க்கை ஒத்து வராது..

இதை கேட்டுகொண்டே வெளியே கோபமாய் வந்த ராஜ் மாடியிலேயே நின்று கத்தினான்...

" நீ இல்லாட்டி நான் செத்துருவேன் தெரிஞ்சுக்கோ... "

எல்லோரும் மேலே பார்க்க , மலர் கண்ணீரை துடைத்துக்கொண்டு நிதானமாக படியேறினாள்....ஒரு குழந்தையை சமாதானப்படுத்தும் விதமாய்.


அடுத்த தொடரில் முடியும்...

ஒதுக்கப்பட்ட கல் - பாகம் 13..

ஒதுக்கப்பட்ட கல் - பாகம் 13..

மருத்துவமனை லிஃப்டில் பார்த்த அந்த முகத்தை மீண்டும் மீண்டும் யோசித்து நியாபகப்படுத்த பார்த்தாள்

ஆனால் பத்திரிக்கை துறையில் பல்லாயிரம் பேரை சந்தித்துள்ளதில் சரியாக நியாபகம் வரவில்லை

சரி இனியும் மண்டையை குழப்ப வேண்டாம் என கிளம்பினாள்

--------------------------

ராகவிடமிருந்து தொலைபேசி அழைப்பு...

தொழிற்சாலை குறித்தும் , உதவியாளர் குறித்தும் பேசவேண்டும் வர முடியுமா என..

ஆனால் நாளைய அறுவை சிகிச்சைக்கு அண்ணியையும் குழந்தையையும் தயார் படுத்தணும்.. இன்னும் பல வேலை காத்திருக்கு...

நாளை சாயங்காலம் சந்திப்பதாக சொல்கிறாள்..ஆனாலும் ஏனோ பிடிவாதம்

----------------------------------------------------------------

அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்ததாக மருத்துவர் சொல்கிறார்... எல்லோருக்கும் பாரம் குறைந்த உணர்வும் மிக்க மகிழ்ச்சியும்.

அண்ணியார் தன் கணவனை கூட பாராமல் கிட்னி தானம் வழங்கிய நபரை பார்த்து எப்படியாவது தன் நன்றியை தெரிவித்தே ஆகணும்னு துடிக்கிறார்..கண்ணீரோடு..

சரி அவர் முகத்தை பார்க்காமல் அந்த அறைக்கு மட்டும் சென்று வர அனுமதி கொடுத்தார் மருத்துவர்...

உள்ளே சென்றதும் முன்பகுதி திரையினால் மறைக்கப்படிருந்தது...

அவரின் கால் பாதங்களை தொட்டு வணங்கிவிட்டு, அங்கேயே அழுதுவிட்டு நன்றியோடு வெளியேறினார் ...

வெளியே காத்திருந்த ,மலர், அண்ணியாரை அணைத்துக்கொண்டு அழைத்து சென்றார் அறைக்கு...

-----------------------------------------------------------------------------------

ஒரு வாரம் எங்கேயும் நகர முடியவில்லை...

அண்ணிகூடவே அவரது வீட்டில் உதவியாக இருப்பதும் குழந்தைகளை கவனிப்பதுமாய்...

அடுத்த வாரம் ராகவ் இடமிருந்து தொலைபேசி..கட்டாயம் சந்தித்தே ஆகணும் என..

கொஞ்சம் நெருடலாய் இருந்தது... இவன் ஏன் இவ்வளவு அவசரப்படுகிறான் என்று..

சரி எப்படியும் நளினாவையும் பார்த்து இந்த தொடரை முடிக்கவேண்டும் என கிளம்பினாள்..

எப்போதும்போல் நளினா வந்து வரவேற்கவில்லை...

அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என வேலையாள் சொன்னார்.

உள்ளே சென்றதும் , உட்கார முயற்சித்த நளினாவை கைத்தாங்கலாய் பிடித்தாள் மலர்..

விசாரிப்புகள் முடிந்ததும் தொலைபேசி அழைப்பு..

" உனக்காகத்தான்மா காத்துகிட்டிருக்கான் ராகவ்.. உன்னோட தொலைபேசி வேலை செய்யவில்லையா என்ன.?"

" ஒஹ்ஹ் .நான் கவனிக்கலை.. ஒருவேளை சார்ஜ் இல்லாது இருக்கும்.."

" சரி இந்தா மா நீயே பேசு.."

" ஹலொ.. ஹலோ.."

" சத்தமேயில்லையே.?"

" இங்க சிக்னல் கிடைக்காது.. வெளியே வெராண்டாவில் போய் முயன்று பாரும்மா.."

மீண்டும் தொலைபேசி அழைக்க...

வெளியே சென்று காதில் வைத்தவள்,

" என்ன ஆச்சர்யமா இருக்கா ?.. நான் பேசுவேன்னு எதிர்ப்பார்த்திருக்க மாட்ட இல்ல?.."

" .."

" எவ்வளவு பெரிய வேலை செஞ்சிட்டு இப்படி அமைதியா இருக்க நீ..?"

" ஒரு நிமிஷம்.. வந்து.."

" நீ ஒண்ணும் சொல்லவேண்டாம்... எனக்கு எல்லாம் தெரியும் எனக்கு கிட்னி குடுத்து என்னை பிழைக்க வைக்க இந்த உலகத்தில் உன்னை விட மேலான தெய்வம் யார் இருக்க முடியும்..?"

"..."


" ஒருநாளும் உன்னை நான் தொடக்கூடாது, நான் சுத்தமில்லாதவள்னு சொல்லிட்டே இப்ப உன்னோட உருப்பு என் உடம்பில்..இதுதான் கடவுளின் தீர்ப்பா?..

"அடுத்த ஜென்மம்னு ஒண்ணு இருந்தா உனக்கு நான் மகனாக பிறந்து இந்த கடனையெல்லாம் தீர்க்கணும்..."


அப்படியே அதிர்ச்சியில் சோபாவில் உட்கார்ந்தாள் மலர்... ஏதும் பேச முடியாமல்..

தன்னோட குடும்பத்துக்கும் நளினா சேவை செய்துள்ளாரா?.. அவர் தான் காதலித்ததாய் சொன்ன அந்த பெரிய மனிதன் தன் அண்ணியின் கணவரா... ?

மெதுவாக திரைச்சிலையை நகர்த்தி உள்ளே வந்தவள்,

தொலைபேசியை அப்படியே நளினா கையில் கொடுத்தாள் கண்ணீரோடு....

" என்னம்மா, என்னாச்சு.."

எதுவும் காதில் விழவில்லை அவளுக்கு.... அப்படியே நளினாவின் காலடியில் உட்கார்ந்துவிட்டாள்..

போனை வாங்கி காதில் வைத்த நளினாவும் , பதில் பேச வார்த்தையின்றி கண்ணீரை மட்டுமே சாரை சாரையாக வடித்தாள்...

அங்கே பெரும் அமைதி , மகிழ்வோடு நிலவியது, இருவர் மனதிலும் பல்லாயிரம் கேள்வியோடு,...

இவை ஏதும் புரியாமல் உள்ளே வந்த ராகவ் , மலரின் கண்ணீரை பார்த்து கலக்கத்தோடு...பரிதவிக்கிறான்...

ஒதுக்கப்பட்ட கல் - பாகம் 12.



அலுவலகத்தில் நடந்த சம்பவத்தை நினைத்து பலவாறு குழம்பிப்போனாள் மலர்.. அருகில் மட்டும் ராஜ் இருந்திருந்தால்

கட்டிப்பிடித்து அழுதிருப்பாள்... சுதிர் இருந்தாலாவது பொங்கித்தள்ளியிருக்கலாம் கோபத்தை குமுறலாய்...

ஆட்டோ பிடித்து தன் வீட்டுக்கே முதலில் சென்றாள்... உள்ளே நுழைந்தவளை அம்மாவின் கேள்வி சரமாரியாய்

வந்து விழுந்தன... எந்த ஒரு வினாவுக்கும் பதில் சொல்லாது மும்முரமாய் எதையோ தேடிக்கொண்டிருந்தவளை பார்த்து

ஆறுதலாய் கை பிடித்தார் அம்மா..அப்பாவும் பின்னால்..

" என்னம்மா நான் பாட்டுக்கு கேட்டுகிட்டே இருக்கேன்.. என்னாச்சு உனக்கு..ஏதாவது பிரச்னையா?"

என்ன சொல்ல அம்மாவிடம்.. கூட கொஞ்சம் பயம் காட்டுவதாய்த்தான் அமையும்..எதையும் காட்டிக்கொள்ளாது,

" அம்மா , எனக்கு தட்டுல சாதம் போட்டுட்டு வா.. நீயே ஊட்டி விடும்மா.. எனக்கு உடனே கிளம்பணும், அண்ணி வீட்டுக்கு..

குழந்தைகள் காத்திருப்பாங்க..அண்ணாவுக்கு கிட்னி டிரான்ஸ்பிளாண்ட் விஷயமா ஒரு தகவல் உள்ள கோப்பை தேடுறேன்.."

விருப்பமே இல்லாமல் அம்மாவின் மன திருப்திக்காய் நன்றாக சாப்பிடுவதுபோல் பாவனை காட்டிவிட்டு மீண்டும் ஆட்டோவில் ஓடினாள்..


"என்ன பெண் இவள்.?. உதவின்னா ஓடி ஓடி செய்யுறா..என் வயிற்றில்தான் பிறந்தாளா? " னு ஆச்சர்யமா அம்மா வாசலையே பார்த்துக்கொண்டிருந்தார்..
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
காலையில் எழுந்தவளுக்கு போன்... நளினாவிடமிருந்து..

9 மணிக்கு மகன் வருவதாகவும் அப்படியே நேராக ஏர்போர்ட்டிலிருந்தே இடம் பார்க்க செல்வதாகவும் சொன்னதோடு, மலரையும் முடிந்தால் வரச்சொன்னாள்..

சரி 1 மணி நேர வேலைதான்.. அப்படியே இந்த கட்டுரையையும் சீக்கிரமாக முடித்து முதலாளியிடம் கொடுத்துவிட்டு வேறு வேலை தேட வேண்டும்.

மலர் ஏர்போர்ட் சென்று சேரவும் ராகவ்- நளினாவின் மகன் வரவும் சரியாக இருந்தது...

ராகவுக்கு பாத்திருக்கும் பெண்ணில் ஒருத்தியை விமான நிலையத்துக்கே அழைத்து வருவதாக சொல்லியிருந்தார் நளினா..

ஆனால் அது முடியாமல் போனது...அன்று..

சம்பிராதயமாக மலரையும் அவள் வேலை பற்றியும் மட்டும் சொல்லி அறிமுகப்படுத்தினாள் நளினா..

ராகவுக்கோ இவள்தான் தனக்கு அன்னை பார்த்திருக்கும் பெண் நன் நினைத்து உள்ளூர ஒரே மகிழ்ச்சி...

அசடு வழிகிறான்...கை குலுக்கிக்கொண்டே...

இவை ஏதும் கண்டுகொள்ளாமல் மலர், அவனின் புது புராஜக்ட் பற்றியும், அவனுக்கு தேவையான வேலையாட்கள், பற்றியுமே

குறிப்பெடுக்கிறாள்... அப்போதுதான் தான் அவன் சொல்ல சொல்ல , அந்த வேலைக்கு தானே மிக பொருத்தமாக இருப்பதாய் உணர்ந்தாலும் நாகரீகம் கருதி அதை சொல்லாமல் தவிர்த்தாள்.

ஆனால் மேம்போக்காக தற்போதுள்ள வேலையை விடப்போவதாக சொல்ல ஏதோ லாட்டரியில் கோடி விழுந்ததைப்போல் மகிழ்ச்சியடைகிறான் ராகவ்.

" நீங்க உடனே வந்து சேர்ந்துடுங்க..ஐ அம் வெரி லக்கி...டுடே..."

" இல்லை எனக்கு முடித்துக்கொடுக்க கொஞ்சம் பாக்கி வேலையிருக்கு அலுவலில் இன்னும்..."

அம்மாவிடம் எப்படி சொல்ல தனக்கு அந்த பெண்ணை பிடித்திருக்கு என்று, அம்மாவே கேட்கட்டும் ,வந்த வேலையை முதலில் பார்ப்போம் என அவனும் தள்ளிப்போட்டான்..

அதற்குள் நளினாவுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வர, அவள் பேசிக்கொண்டே கலவரமடைகிறாள்...

என்ன ஏதுன்னு சொல்லாமல், தான் உடனே கிளம்புவதாயும், அவர்கள் இருவருமே அந்த இடத்தை பார்த்துவிட்டு முடிவெடுக்க சொல்லிவிட்டு விரைகிறாள்...

அந்த தொழிற்சாலைக்கான இடம் செல்லும்வரை ஏதும் பேசிக்கொள்ளவில்லை.. சேர்ந்ததும்தான் தெரிகிறது தன் அண்ணியாரின் தோட்டம் அருகில் என்று..

எதுவும் காண்பித்துக்கொள்ளவில்லை...

தான் சகஜமாக பேசுவதுபோல ராகவ் பேசாதது கண்டு கொஞ்சம் குழம்பினாள்.. சரி ஒருவேளை பயண அலுப்பாக இருக்கும் என நினைத்தாள்..

எல்லாத்துக்கும் ஒரு புன்சிரிப்பை மட்டுமே உதிர்த்தான்..அதிலேயே அவனின் அன்பான வளர்ப்பும் குணமும் நிறைவாகத்தெரிந்தது..

------------------------------------------------------------------

அலுவலகத்துக்குள் வேகமாக நுழைந்தவளை கண்டு எல்லோருமே வித்யாசமாய் பார்ப்பது கண்டு ஆச்சர்யப்பட்டாள்.

கண்ணாலே என்னாச்சு என கேட்டாள் ...

முருகனை அறைக்குள் வரச்சொன்னாள்.விசாரித்தாள்.

"ஐயா சொன்னாங்க.. ஏதோ பிரச்னை .அதனால நீங்க வேலை விட்டு நின்னுட்டீங்கன்னு.." தயக்கத்தோடு சொன்னான்.

அவனை அனுப்பிவிட்டு நேராக முதலாளி அறைக்குள் சென்றாள்.

அவர் பயத்தில் எழுந்து நின்றார்.. சைகையால் உட்கார சொன்னாள்..

" எனக்கும் பொறுப்பு இருக்கு.. அதை முடிச்சு கொடுத்துட்டுதான் நான் வேலை விட்டு நிப்பேன்.. அதுக்குள்ள இஷ்டப்படி

பொய் பிரச்சாரம் பண்ண வேண்டாம் ..புரியுதா?.." னு சொல்லிட்டு கிளம்ப,

" சரி.... மேடம்.. நீங்க என்ன சொன்னாலும் சரிதான்..." னு ரொம்ப பவ்யமா பேசினார் முதலாளி.

" என்ன கிண்டலா..?" இடுப்பில் கை வைத்து அதட்டினாள்..

" அய்யோ ..இல்லீங்க.. " நிஜமாகவே பயந்தார்...

" ஒழுங்கா முன்பு போல மலர் னு கூப்பிட்டா போதும் சரியா..?" எச்சரிப்போடு சொல்லி சென்றாள்.

-------------------------------------------------------------------------------------------------------

மருத்துவமனைக்கு சென்றதும் ராஜ் ஓடி வந்தார்..

கைகளை பிடித்துக்கொண்டே மகிழ்ச்சியுடன்,

" மலர், அத்தானுக்கு மாற்று கிட்னிக்கு ஆள் கிடைச்சாச்சு... அனேகமா எல்லா பரிசோதனையும் பண்ணியாச்சு.."

" அப்படியா?.. யாரது ராஜ்.?" மகிழ்வோடு கைப்பையை கிழேவைத்துக்கொண்டே, அவன் கையையும் விலக்கியவள்,

" அதுதான் தெரியலை மலர்.. அந்த பேஷண்ட் தன்னைப்பற்றி எந்த விபரமும் வெளியில் தெரியக்கூடாதுன்னு சொல்லிருக்காங்களாம்..."

" இதென்ன புதுசா இருக்கு..?.. 5 லட்சம் பணத்துக்கு சம்மதித்தாங்களா , இல்ல, ?/"

" பணம் பற்றியெல்லாம் பேஷண்ட் அலட்டிக்கொள்ளவில்லையாம்... ஐயா உயிர் பிழைத்தால் போதும்னு சொல்லிருக்காங்களாம்.."

": .அண்ணாவின் தொழிற்சாலையில் வேலை செய்பவரா?"

" தெரியலையேம்மா.." அண்ணியிடமிருந்து பதில்...

" நான் வணங்குற அந்த வெங்கடாசலபதி கை விடமாட்டார்னு எனக்கு தெரியும்மா.." .. பிடிக்காவிட்டாலும் ஒண்ணும் சொல்லாமல் தலையை மட்டும் ஆட்டினாள்

" சரி நீ ரொம்ப கேள்வி கேட்காதே. பதிலில்லை. நாம இப்ப செய்ய வேண்டியவேலைகள் ஏராளம் இருக்கு..அத்தானின் அலுவலில் கையெழுத்திடவேண்டிய முக்கிய கோப்புகளை

பத்திரமாக எடுத்து வரணும்... நான் செல்கிறேன்.. நீ வேணா சென்று மருத்துவரை பார்..அக்கா பக்கத்து தோட்டம் விற்கிறோம் அது விஷயமாகவும்.. ."

" ஓஹ் அந்த தோட்டமா..." சொல்ல வாயெடுத்தவள் அடக்கிக்கொண்டாள்..

" என்ன..?"

" ஒண்ணுமில்ல நீங்க கிளம்புங்க.."

" கடவுளே எல்லா நல்லபடியா முடிந்தால் திருப்பதிக்கு வந்து தங்கத்தால் எல்லாம் செய்யுறேன் " னு உணர்ச்சி வசப்பட்டு அண்ணி வேண்ட,

எப்பத்தான் இவங்கெல்லாம் திருந்துவாங்களோ ன்னு ஒரு பெருமூச்சு விட்டு மருத்துவரை பார்க்க சென்றாள் மலர்..

நாளையே அறுவை சிகிச்சைக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், முக்கியமான விலையுயர்ந்த மருந்துகள் வாங்கி வரும்படியும் பணிக்க,

கெஞ்சிக்கேட்டாள், அந்த கிட்னி தானம் வழங்குபவரை பார்த்து நன்றி சொல்ல..ஒரு வாய்ப்பு தருமாறு...

இது எங்க தொழிலுக்கே செய்யும் துரோகம் மாதிரி.. தயவுசெய்து இப்ப கேட்காதீங்க...

எல்லாம் நல்ல படியா முடியட்டும் பின்னால் நான் அவரிடம் பேசி பார்க்கிறேன் என்றார் மருத்துவர்...

யாராயிருக்கும் னு மனசுக்குள் ஆயிரம் குடைசல்.. நல்ல மனிதர் பல நல்ல மனிதர்களை சம்பாதித்து வைத்திருப்பதில் என்ன ஆச்சர்யம் இருக்கமுடியும்..?

என எண்ணிவிட்டு யோசனையிலேயே வந்தவள் எதிரில் வந்தவர்மேல் முட்ட, திரும்பிப்பர்த்தவள்,

" எங்கேயோ பார்த்திருக்கோமே...முன்பு...?" என எண்ணுவதற்குள் ஆள் கடந்து சென்று லிஃப்டுக்குள் நுழைய, பின்தொடர்ந்து ஒடி சென்றவள்

மூடிய லிஃப்ட், முட்டி நின்றாள்...வெகுவாய் குழம்பி...


-------------------------------------------------தொடரும்--------------------------------------------------------------------

Thursday, August 6, 2009

பசி


" உள்ளே வா.."
அவள் கூப்பிட்டதுமே ஒருவித நடுக்கத்தோடுதான் நுழைந்தான்.

" என்ன பயத்தோட பாக்குற..?" என முந்தானையை விலக்கிவிட்டு சாவகாசமாக அமர்ந்தாள்..
பதறினான்...

" அய்யோ வேண்டாம்.. அதெல்லாம்.."

" இங்க பாருடா.. அப்ப ஏன் வந்த?.. " என மீண்டும் முந்தானையை மேலே போட்டுக்கொண்டாள்.
நின்றுகொண்டிருந்தவனை அருகில் உட்கார சொன்னாள்..

வேண்டாம் என்றவனை கையை பிடித்து
"புத்சா நீயு..? அதெல்லாம் போக போக சரியாயிடும்.. சும்மா உக்காரு..

" என பிடித்திழுத்தாள்..
" அந்த முரட்டு கரங்களின் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு அவள் கட்டளைக்கு பணிந்து கொஞ்சம் தள்ளி அமர்ந்தான்.
" என்ன உன்னோட ரவுசா இருக்கு.. வந்தமா சோலிய முடிச்சமான்னு போவேண்டியதுதானே... " எரிச்சலடைந்தாள்


" இல்லீங்க நான் உங்களைப்பற்றி என் வலைப்பூவில் ஒரு கட்டுரை எழுதலாம்னு.."

"ஹஹஹ.. " சிரித்தாள்..

" ஓஹ்.. அந்த ஆளா நீயு..?.. என் படம்லாம் போடுவியா..?

" கிண்டலா சிரித்தாள்..
" இல்லீங்க... நான் பத்திரிக்கை துறை இல்லை.. ஆனால் எல்லோருடைய மருபக்கம் பற்றி எழுத ஆவல் கொண்டவன்.."

" ஹ.. என்னப்பத்தி என்னத்த தெரிஞ்சுக்க போற..?"

" ஏன் இத்தொழிலுக்கு வந்தீங்க.. இத விடும் ஆசையிருக்கா இப்படி...'"


" ஹா.ஹாஹ்..ஹா.. " விழுந்து விழுந்து சிரித்தாள்.. பின் உடனே கோபப்பட்டாள்..

" ஏன்யா ஒனக்கெல்லாம் வேற வேலையே இல்லியா...? பரிதாபப்படுற மாதிரி ஒரு எழுத்த எழுதிப்போட்டு , நாலு பேர்கிட்ட பாராட்டு வாங்க நாங்கதான் கெடச்சோமா..? ஏன் வேற பொழுது போக்கு இல்லியா?..ஒனக்கெல்லாம் ஒழுங்கா 4 நேரம் வயித்துக்கு தீனி கெடக்கிங்கற கொழுப்புதானே?.. ஒனக்கெல்லாம் எங்கள பாத்தா எளக்காரமா தெரியுது..?"
அவன் பயந்து அரண்டு விட்டான்...அவள் கோபத்தின் அர்த்தம் புரிந்தது...அமைதியாக இருந்தான்..

பெருமூச்சோடு எழுந்தவள் , கூந்தலை அள்ளி முடித்துவிட்டு , கண்ணாடி அருகில் சென்று தன் ஒப்பனையை சரிசெய்துகொண்டே ,

" நான் அழகா இருக்கேனா னு சொல்லு " என்றாள். அமைதியாய் இருந்தான்...

" சொல்லு .. நானெப்படி இருக்கேன்..? எனக்கு என்ன வயதிருக்கும் னு நினைக்கிறே..?..' பயந்தான் என்ன சொல்வதென்று தெரியாமல்...


எங்கே கூட்டி சொன்னால் குதறி விடுவாள் போல் தெரிந்தது... " ம். 25.."

" ஹிஹி...ம்..இல்ல 33.." புன்னகைத்தாள்.. மகிழ்ச்சியாக..

" நெசம்மா நான் 25 மாதிரி தெரியுறேனா ...

" கண்ணாடியில் முன்னும் பின்னும் கழுத்தை திருப்பி பார்த்துக்கொண்டாள்..'
அவள் நிதானத்தில் இருப்பது தெரிந்ததும்

" இந்த தொழிலை விடணும்னு தோணுமா..?"
அலட்சியமாக பார்த்தாள்.

' ஏன் ?.. ஆயுசுக்கும் சாப்பாடு போடுவியா..?"


" அப்படி போட்டால் விடுவீர்களா.?"


" எப்படி நம்ப...? கல்யாணம் செஞ்சுக்குவேன் னு பொய் சொல்ல போறியா..?" சிரித்தாள்..


" எனக்கு இம்மாதிரி பொண்ணுங்களுக்கு விடுதலை கொடுக்கணும்னு எண்ணம் இருக்கு...என்னால் முடிந்தவரை நான் எழுதுவேன்.. மக்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவேன்...என் சம்பளத்தில் ஒரு பகுதியை இதற்காக செலவழிப்பேன்...." ஆச்சர்யமாய் கேட்டுக்கொண்டிருந்தாள்...

" சொல்லுங்க எத்தனை பேர் வெளியே வர தயார்....?"

" ம். இரு வாரேன் .." உள்ளே சென்று மொபைலை எடுத்து வந்து அவனை படம் பிடித்தாள்.அவன் தடுக்குமுன்.. " ஏய் என்ன பண்றே..?"

" சரி நீ கிளம்பு...கிளம்பு..."


'ஏன் இன்னும் 1/2 மணி நேரம் இருக்கே....?"


" வேண்டாம்யா உங்கள மாதிரி ஆளுங்க உறவே... நீ நல்லவனா கெட்டவனா னு தெரியாது...ஆனா எங்க மனச கலச்சுராத... வயித்து பசிக்காக இத செய்யுறோம்.. இன்னும் காதல் அது இதுன்னு பேசி எங்க புள்ளங்க மனச கெடுத்துராத...அத தாங்க சக்தியில்லப்பா. .. அத நெசம் னு நம்பி சீரளிஞ்சு செத்து போனவுக ஏராளம்...எங்க ஒடம்பு கெட்டது போதும்..மனச கெடுத்துராத... நீ வெளீல போ மொதல்ல...."


" அய்யோ நான் நிஜமாத்தான் ங்க சொல்றேன்..."

" சொல்றேன்ல இந்த பக்கமா நீ வராத.. அதுக்குதான் போட்டோ எடுத்தேன் .. வெளில கொடுக்க....உன்னை உள்ளே விடாம...வயித்து பசி மட்டும்தான் இப்போதைக்கு இருக்கு... வேற காதல் பசிக்கெல்லாம் அடிமையாக்கிடாத... வெளில போ..."

எத்தனை தூரம் அவநம்பிக்கையோடு இவர்களை வாழ வைத்துள்ளோம் என வெட்கப்பட்டுக்கொண்டே வெளியேறினான்...

Friday, July 10, 2009

கெட்டிமேளம்...



கெட்டிமேளம்...

" ஹேய் மதி , மீட் மை பிரண்ட் விஷ்ணு.. பெங்களூர்ல இருக்கான் பொட்டி தட்டிட்டு.. ஐயா ஸ்டேட்ஸ்ல தான் இருந்தாரு.. கல்யாணம் முடிஞ்ச கையோடு இங்க செட்டில் ஆயிட்டாரு.."

நரேன் அறிமுகப்படுத்தினான் நன் நண்பர்களை., தன் வருங்காலத்திடம்...
" டேய், என்ன கல்யாணம் முடிஞ்சதும் திரும்ப அமெரிக்காவா..?" ஸ்ரீராம்...

" ஆமாடா. அங்கேயே செட்டில் ஆயிடலாம்னு இருக்கேன்... பட் ஆல்சோ மதியோட விருப்பம் பொறுத்தும்.. அவங்க குடும்பம் ரொம்பவே ஆச்சாரம்...அவங்க பேரண்ட்ஸ் என்ன சொல்றாங்களோ..."

" டேய் , உன்னையே சுத்தி சுத்தி வந்தாளே ரீமா..என்னாச்சுடா..?..செம ஸ்மார்ட் கேர்ல் யு நோ?.. ஐபிஎம் ல இருந்ததா சொன்னா போன முறை லண்டன் ல மீட் பண்ணினேன்.."

" ம். ஷி இஸ் அ குட் பிரண்ட் டா. நான் நேரா சொல்லிட்டேன் எனக்கு அவ மேல பிரியம் இல்லேன்னு... ஷி வாஸ் ஷாக்ட் யு நோ.. மொதல்ல..."



" அப்புரம்.."

" ஹே , என்ன கதயா சொல்லிட்டிருக்கேன்... அவள நான் ரிஜக்ட் பண்ணுவேன்னு அவ கனவுலேயும் நெனக்கலயாம்..."

" சவுண்ட்ஸ் இண்ட்ரெஸ்டிங்.. மேலே சொல்லு.."


" ஏன் நீ புரோபோஸ் பண்ண போறியா...ஷி இஸ் செட்டில்ட் ஆல்ரெடி.."

" அடச்சே.. சரி லூஸ்ல விடு..ஜஸ்ட் க்யூரியஸ்.. அவ்ளோதான்.."

" நரேன், நாளியாச்சு.. இன்னுமா ரெடி ஆகிட்டிருக்க?. கமான் க்விக்..." அம்மா கீழேயிருந்து...



" டேய் பார்ட்டி எப்ப தரப்போற..? ஹனிமூன் எங்கே... ?" துளைத்து எடுத்துக்கொண்டிருந்தனர் தோழ, தோழியர்..

" ஹலோ மொதல்ல நல்லபடியா திருமணம் முடியணுமேன்னு நானே கலவரமா இருக்கேன்... உங்களுக்கு ஜாலியா..?"

" ஹேய் வாட்ஸ் த பிராப்ளம் மேன்..?" அமெரிக்க கருப்பரின நண்பன்..சுருள் முடியோடு , பானையை கவுத்தாற்போல..

" அடேய் , உன் இங்கிலீஸை ஒடப்புல போட... நீ மேடைக்கு பக்கத்துல வந்துராத...நீந்தான் பிராப்ளமா இருப்பேடா ..

" வீட்டு வேலையாள் முருகன் நரேனின் அமெரிக்க நண்பரை பார்த்து
கமெண்ட் விட்டான்.. எல்லோரும் சிரிக்க....

" மது ஆர் யு ரெடி... ? " " இல்லடா.. எனக்கு இந்த புடவை கட்ட வரலடா.."

" ஹேய் லூஸு.. எத்னி வாட்டி சொன்னேன் பழகிக்கோ ன்னு...ஆர்த்தி கொஞ்சம் ஹெல்ப் பண்ணேன்...நீயெல்லாம் ஒரு பிரண்டா..?"

" போடா.. அதெல்லாம் பியூட்டி பார்லர் ப்ரிட்டி கேர்ல்ஸ் வந்திருக்காங்க அவங்க கிட்ட சொல்லு.. ஓவர் வேலை செஞ்சா ஓல்டா காமிக்கும் என் மேக்கப்..மைண்ட் இட்.."


------------------------------
------------------------------

" பொண்ண அழச்சுண்டு வாங்கோ... " புரொகிதர் சத்தம் போட்டார்..

" மெதுவா இறங்கு.. சேலை தடுக்கிடாம...." ஆர்த்தி..

" ம். ஆர்த்தி நீ எதுக்கும் தள்ளியே இரு.. நரேன் மறந்து போய் உன் கழுத்துல கட்டிட போறான்..." பிரதாப்...

" நோ , பிராதாப்... தாலி சமாச்சாரெமெல்லாம் கிடையாது .. ஒன்லி மோதிரம் மட்டும்தான்..." "அப்ப எதுக்கு ஹோமம், மந்திரம் எல்லாம்..?"


" அதெல்லாம் அப்பாவோட பிடிவாதத்துக்காக.. காதல் கல்யாணம்னாலும் மொறப்படி நடக்கணும்னு சொன்னார் நல்ல நாள்ல.. கொஞ்சம் விட்டுக்கொடுத்தேன்..ஒரே பையனாச்சே..."

" செத்த சீக்கிரம் வாங்கோ."
எல்லா மந்திரமும் சொன்னதும் இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டார்கள்...

பெத்தவா காலில் விழுந்து நமஸ்காரம் பண்ணிக்கோங்கோ...
தடால்னு மது புரோகிதர் காலில் விழ, தடுமாறினார் புரோகிதர்..



" என் காலில் இல்லேம்மா.. பெத்தவா காலில்...

" மது சரியாத்தான் விழுந்திருக்கான் மாமா.. ஆசீர்வாதம் பண்ணுங்கோ...


"
அதிர்ச்சியானார் புரோகிதர்...

" சாரி மாமா.. நானும் மதுவும் கல்லூரி நாட்களிலேயே நண்பர்கள்..நான் அமெரிக்கா போயும் கூட என்னால் மதுவை மறக்க முடியலை... யாரையும் திரும்பி கூட பார்க்க முடில.."

" சாரி அப்பா.. நானும் உங்க கிட்ட சொல்ல பயந்துட்டு..."


"இதிலென்ன இருக்கு நாம என்ன 2010 லா இருக்கோம்?.. 2050 ல இருக்கோம்... இதுக்கு ஏன் தயக்கம்... ஏன்கிட்ட முன்னமே சொல்லிருக்கப்டாதா .?"

" ஐ லவ் யூ சோ மச் அப்பா.." கட்டியணைத்தான் மதியழகன்...

" டேய் போதும்... என்னை தப்பா நெனச்சிடப்போறாங்க.. எதுக்கும் கேப் விட்டு தள்ளியே நில்லு,."

-------------------------------------------------------------

ஆதரவுமில்லை எதிர்ப்புமில்லை.. இப்படியும் நடக்கலாம் என்று ஒரு நகைச்சுவை கற்பனையே... ( கும்மிராதீங்க..)

Tuesday, June 23, 2009

32 கேள்விகள்



இந்த 32 கேள்விகள் சங்கிலியில் என்னையும் இணைத்துவிட்ட தலைவி பூங்குழலிக்கு நன்றி1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது?

எங்க வீட்டில் அனைத்து பெண்களின் பேரும் "தி' யில் முடியும்...
அதானால் இந்த பெயர்...மேலும் நான் கடக்குட்டி என்பதால் மங்களம் பாட நினைத்து " மங்களா ' என்ற பெயரும்... ஒரு தம்பி தங்கை இருந்திருக்கலாம்...:)
உங்களுக்கு இந்தப் பெயர் பிடிக்குமா?

சின்ன வயதில் சாந்தி , பூந்தி னு தோழிகள் கிண்டலடிப்பார்கள்..

விபரம் தெரிந்து அர்த்தம் புரிந்து பிடித்தது...எனக்கு அமைதியானவர்கள் , ஆர்ப்பாட்டமில்லாத எளிமையானவர்களை பிடிக்கும்...அதேபோல் இந்த‌ பேர் சொல்லி அழைக்கும்போதெல்லாம்...
2. கடைசியாக அழுதது எப்பொழுது?


ம். 2 நாளுக்கு முன்னால்..குழந்தையை திட்டிவிட்டு நான் அழுதேன்...


திரைப்ப‌ட‌ம் பார்க்கும்போது , தொலைக்காட்சியில் கொடூர‌ செய்தி பார்க்கும்போது , ரோட்டில் விப‌த்து பார்த்தால் அழுகை வ‌ரும்.




3. உங்களுடைய கையெழுத்து உங்களுக்குப் பிடிக்குமா?


பள்ளியில் கையெழுத்து அழகாக இருந்தே ஆகவேண்டிய கட்டாயம்...
ஆங்கில‌ எழுத்து அழகாக இருப்பதாக சொல்வார்கள்.. பெரிதாக இருக்கும்...ஆனால் தமிழ் எழுத்து சகிக்காது...அதற்காக கைமொழியில் அடி வாங்கியுள்ளேன்...

4. பிடித்த மதிய உணவு என்ன?

சூப் வகைகள் , தாய்லாந்து வந்ததிலிருந்து.. உணவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதேயில்லை எப்போதும்...
5. நீங்கள் பார்த்தவுடன் யாருடனாவது உடனே நட்புக் கொண்டாடக் கூடியவரா?

கண்டிப்பாக இல்லை... விலகி இருக்கவே பிரியப்படுவேன் ...எனக்கென்று தனியாக நட்பு வைத்துக்கொள்வதைவிட எல்லோருடனும் கலகலப்பாக இருப்பதையே விரும்புவேன்....

ந‌ட்பென்று சொல்லி என்னை அடைத்துக்கொள்ள‌வோ, அடுத்த‌வ‌ரை உரிமை கொள்ள‌வோ பிடிப்ப‌தில்லை..


6. கடலில் குளிக்கப் பிடிக்குமா? அருவியில் குளிக்கப் பிடிக்குமா?

இரண்டுமே என் பால்ய காலந்தொட்டு அதிகமாய் அனுபவித்திருந்தாலும் , ஓடும் ஆற்றில் எதிர்நீச்சல் போடுவது ஓடி விளையாடுவது த்ரில்லிங்...


7. முதலில் ஒருவரைப் பார்க்கும்போது எதனைக் கவனிப்பீர்கள்?

கண்ணும் ( பார்வையும் ) , அவர் புன்னகையும்....

எளிமை என்றாலும் சுத்த‌மாக‌ இருக்க‌ணும்..


8. உங்களிடம் உங்களுக்குப் பிடித்த விடயம் என்ன? பிடிக்காத விடயம் என்ன?பிடித்தது - நிறைய ( துணிவு, கடின உழைப்பு, உதவும் எண்ணம், எதிர்பார்க்காத நேசம் , மரியாதை, குழந்தைகளை கொஞ்சுவது, கலகலப்பு, ஊக்கமளிப்பது , கடவுள் பக்தி...கலைத்திறன்., விட்டுக்கொடுத்தல் )


பிடிக்காதது -சோம்பல் ,முன்கோபம் ,பிடிவாதம்.. ( மற்றதை மற்றவங்கதான் சொல்லணும்..)9. உங்கள் பாதியிடம் உங்களுக்குப் பிடித்த, பிடிக்காத விடயங்கள் என்ன?பிடித்தது -கடின உழைப்பு , அதீத அன்பு, அதீத எளிமை , அழகான சிரிப்பு ( கன்னத்தில் விழும் குழியோடு..) .. அடுத்தவர் விஷயத்தில் மூக்கு நுழைக்காதது... மிக சுத்தமாய் இருப்பது..


பிடிக்காதது -முன்கோபம் , கொஞ்சம் சமூகப்பார்வை குறைவு...10. யார் பக்கத்தில் இல்லாமல் இருப்பதற்காக வருந்துகிறீர்கள்?

என் குடும்பத்தார், என் அத்தை, என் பக்கத்து வீட்டு ஆன்டி...மொத்தத்தில் இந்தியாவில் உற‌வின‌ர் , தோழிக‌ள்....:(

11. இதை எழுதும்போது என்ன வண்ண ஆடை அணிந்திருக்கிறீர்கள்?பிங் சேர்ட் , புல் ஹேண்ட் , கருப்பு பேண்ட். ( அலுவலில்)12. என்ன பாட்டு கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்?

வீணை வாத்திய இசை...ரொம்ப பிடிக்கும்...
13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக மாற உங்களுக்கு ஆசை?

பிங்க் அல்லது புல்லின் பச்சை
14. பிடித்த மணம்?பச்ச குழந்தையின் மணம்....மிள‌கு ர‌ச‌ம் , சூப், பேக்க‌ரி ம‌ண‌ம் , திரும‌ண‌ வீட்டின் ம‌ல்லிகை ம‌ண‌ம்.,15. நீங்கள் அழைக்கப் போகும் நபர்கள் யார் யார்? ஏன் உங்களுக்கு அவர்களைப் பிடித்து உள்ளது? அவர்களை அழைக்கக் காரணம் என்ன?

என் த‌ங்கை ம‌ரியா .. அருமையான‌ பெண்.. மென்மையான‌ ம‌ன‌து.. உத‌வுவ‌தில் ஆர்வ‌ம், க‌டுஞ்சொல் பேச‌ தெரியாது, துன்ப‌த்தை சும‌ந்துகொள்ளும் ப‌க்குவ‌ம்...அவ‌ளின் இறை பக்தி, ப‌ணிவு...
சொல்லிட்டே போலாம்..
அடுத்து என் ம‌க‌ன் ரிஷி.. அவ‌ரை ப‌ற்றி நான் என்ன‌ சொல்ல‌?.. அழைத்த‌தும் வ‌ருவாள் ம‌ம்மி , ம‌ம்மி பாடாத‌ குறைதான்... ம‌ம்மி ஆன்லைன்ல‌ இருந்துகிட்டே ஏன் குட்மார்னிங் சொல்ல‌ல‌ நு ச‌ண்டை பிடிக்கும் என் 4 வ‌து ம‌க‌ன்.. ( டூ ம‌ச் ஆணாதிக்க‌ம்பா..:)) )

கிரிஜா ம‌ணாள‌ன் சார்.. அடுத்த‌வ‌ரை சிரிக்க‌ வைப்ப‌து ம‌கிழச்செய்வ‌து எளித‌ல்ல‌ . 40 வ‌ருட‌மாக‌ செய்து வ‌ரும் ம‌ஹா ம‌னித‌ர்.. என்னை இணைய‌த‌ள‌த்தில் அதிக‌ ம‌கிழ்ச்சியோடிருக்க‌ செய்த‌வ‌ர்..எளிமையான‌வ‌ர்.. இறக்க‌குண‌முடைய‌வ‌ர்.. ப‌ல‌ க‌லைஞர்க‌ளை ஊக்குவிக்கும் பெருந்த‌ன்மையான‌வ‌ர்..


16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு


நேரமில்லை என்ற கவிதை மிக அருமை... இவர் ஒரு சிறப்பான பெண்...

அனைவருக்கும் அருமையாக பின்னூட்டம் போட்டு ஊக்குவிப்பவர்...

மருத்துவ துறைக்கு மிக பொருத்தமானவர்...

கலகலப்புக்கு பஞ்சமில்லாத அறிவாளி...

தமிழுக்கும் , நட்புக்கும் இனிமை சேர்ப்பவர்...
17. பிடித்த விளையாட்டு?

பேட்மிண்டன், ஸ்குவாஷ்., டேபில் டென்னிஸ் , குழந்தையோடு யானை , சவாரி முதுகில்

சில‌ ச‌ம‌ய‌ம் ச‌மைய‌லும்..:))
18. கண்ணாடி அணிபவரா?

இதுவரை இல்லை ..க‌ண்ணு போடாதீங்க‌..
19. எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?

நகைச்சுவை படங்கள் சர்வர் சுந்தரம் போல..
உணர்ச்சிமிக்க குடும்ப படங்கள் சிந்து பைரவி போல
கண்ணியமான காதல் படங்கள் ரோஜா , நிலாவே வா பாட்டு போல ( என்ன படம் அது?)

20. கடைசியாகப் பார்த்த படம்?

பசங்க - நன்று, அனந்த தாண்டவம்... எங்க ஊரை மிக அழகா ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது...

21. பிடித்த பருவகாலம் எது?

வெயில் முடிந்து மழைக்காலம் அரம்பிக்கும் இடையில்
22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?

புத்தகம் படிக்க வழக்கமேயில்லை , படிப்பு புத்தகம் தவிர....:( ( ஆவி, குமுதம் புத்தகமில்லைதானே??)

ம‌க‌னுக்காக‌ அடோப் ப‌ய‌ரொர்க்ஸ் ப‌டிக்கிறேன்..


23. உங்கள் டெக்ஸ்-டொப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒரு தடவை மாற்றுவீர்கள்?

ஒருபோதும்...ஆனா வீட்டில் புலிக்குட்டியோடு உள்ள‌ ப‌ட‌த்தை போட்டு ப‌ய‌ங்காட்டுகிறார் ம‌க‌ன்..
24. உங்களுக்குப் பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?பிடித்த சத்தம் - பக்கத்து ஆற்றில் சொட்டு சொட்டாய் விழுந்து ,சோரென்று பெய்யும் மழை, குழந்தையின் சிரிப்பொலி, அழுகை, கோவில் மணியோசை.


பிடிக்காத சத்தம்- இடி , தொலைக்காட்சி கத்தல் , மென்மையில்லாத எதுவும்...25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிகபட்சத் தொலைவு?

பல கிழக்காசிய நாடுகள்...
26. உங்களுக்கு ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?கொஞ்சம் எழுத்து ,கொஞ்சம் பேச்சு, கொஞ்சம் நடனம் , குழந்தை வளர்த்தல் , ஒரு நாள் முழுதும் கார் ஓட்டுவது , எந்த இடத்துக்கும் துணிந்து செல்வது... எதையும் அனுசரிப்பது.., எதற்கும் ஆசைபடாதது..( உணவு, உடை, நகை , வசதிகள் போல...)27. உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத விடயம்?

ஏழை என்பதற்காக இழிவாய் நினைப்பது...
எல்லாம் இருக்கு என அகந்தை கொள்வது..கண்ணியமற்ற பேச்சு...
28. உங்களுக்கு உள்ளே இருக்கும் ஒரு சாத்தான்?
சோர்வு, உலகத்தை வெறுப்பது , தப்பை தட்டிகேட்பது , சோம்பல்..இப்படி நிறைய

29. உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?தாய்லாந்து- காஞ்சனாபுரி படகு வீடும் அறுவியும்...30. எப்படி இருக்கவேண்டுமென்று ஆசை?அன்பா அதே சமயம் நியாயத்தோடு...இர‌க்க‌த்தோடு கூடிய‌ க‌ண்டிப்பு..31.கணவர் இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?அனேகமா அப்படி ஏதுமில்லை..
அவ‌ர் இருக்கும்போது செய்ய‌தான் நிறைய‌ இருக்கு...
பெரிய‌வ‌ருக்கு பாட‌ம் ந‌ட‌த்தும்போது த‌லையில் உட்காரும் சின்ன‌வ‌ரை வெளியே கூட்டி செல்ல‌ணும்..

என‌க்கு உட‌ம்பு ச‌ரியில்லாத‌ ச‌ம‌ய‌மாவ‌து க‌தை சொல்லி பாட்டு பாடி தூங்க‌ ப‌ண்ண‌னும்...



32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்கள்.

நல்ல மனிதர்கள், நல்லெண்ணங்களோடு பயணித்தால் வாழ்வு சுகமே...அன்பை பெறுவதை விட கொடுக்க தெரிந்தவர் ஆசீர்வதிக்கப்பட்டவர்...வாழ்வை நேசிக்க அறிவாளியா இருக்க அவசியமில்லை...

அதிர்ஷ்ட‌சாலிக‌ளுக்கே இவ்வுல‌க‌ம்...
அடுத்த‌ ஜென்ம‌த்திலாவ‌து பெண்ணா பிற‌க்க‌ கூடாது..அதுவும் த‌மிழ்நாட்டில்..:))))

பிர‌ச்னையில்லாத‌ நாட்டில் , ஊரில், வீட்டில் பிற‌ந்த‌தால் ம‌ட்டும் வாழ்வு சுவையா?..இல்ல‌வே இல்லை...
ச‌ம‌த்துவ‌மில்லாத‌ இவ்வுல‌க‌ம் தேவையேயில்லை. இதற்கு ப‌தில் மிருக‌மா பிற‌க்க‌லாம்..