Sunday, August 10, 2008






பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுத் திருவிழா.. - ஒரு பார்வை...
2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் மக்கள் சீன குடியரசுத் தலைநகரான பெய்ஜிங்கில் ஆகஸ்ட் 8, 2008 தொடங்கி ஆகஸ்ட் 24, 2008 வரை நடைபெறவுள்ளன. சீனப் பண்பாட்டில் 8ஆம் இலக்கம் இராசியாக கருத்தப்படுவதால், ஆரம்ப நிகழ்வுகள் மாலை 08:08:08 மணிக்கு நடைப்பெறும்.
கால்பந்தாட்டப் போட்டிகள், படகோட்டம், நீச்சல்ப் போட்டிகள், மரதன் ஓட்டம் உட்பட சில போட்டி நிகழ்வுகள் சீனாவின் வேறு நகரங்களில் நடைப்பெறும். குதிரைப் பந்தயங்கள் ஹாங்காங்கில் நடைபெறும்.
விளையாட்டின் முக்கிய அடையாளமாக "நடனமாடும் பெய்ஜிங்" என்பது பெய்ஜிங் பெயரில் காணப்படும் இரண்டாவது சீன எழுத்தான "ஜிங்" என்பதன் அழகியல் வடிவமாகும். போட்டியின் குறிக்கோளாக "ஒரே க‌ன‌வு ஒரே உல‌க‌ம்" தேர்ந்தெடுத்துள்ளார்கள்.. இவ்விளையாட்டில் 10, 500 க்கும் அதிகமான வீரர்கள் பங்கேற்கலாம்..மொத்த நிகழ்ச்சிகளும் 300 கும் அதிகமே.



கடந்த மார்ச் 24ஆம் நாள் கிரீசு நாட்டில் ஏற்றப்பட்ட சுடர் 5 மாத காலத்தில் 19 நாடுகள் வழியாக சீனா வந்தடைந்தது.

மிகப் பெருமையுடைய ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியைத் தான் நடத்துவதில் பெருமிதம் கொண்டது சீனா.

சீனாவின் பிடிக்குள் சிக்கி, பெயரளவிலான தன்னாட்சிப் பகுதியாகக் கிடக்கும் திபெத், தனது உரிமைக் குரலை தொடர்ந்து எழுப்பியது. , சீனாவின் ஆக்கிரமிப்பை எதிர்க்கும் நோக்கில் சீனாவிற்குக் கொண்டு செல்லப்படும் ஒலிம்பிக் சுடரைத் திபெத்தின் விடுதலைச் சுடராக மாற்றிக் கொண்டது திபெத்.

ஒலிம்பிக் விளையாட்டு என்பது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்ட கிரேக்கர்களின் தேசியத் திருவிழா. கிரேக்கர்களின் தெய்வம் வாழ்ந்த ஒலிம்பியா மலையில், கிரேக்க தெய்வத்தை வழிபட கிரேக்கர்கள் ஒலிம்பிக் விழாவை விளையாட்டு போட்டிகளை நடத்திக் கொண்டாடினார்கள்.
பெய்ஜிங்கில் பண்பாட்டு மற்றும் விளையாட்டு மையம், ஆங்கில மொழியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவும் பொருட்டு ஆங்கிலம் விசேஷமாக கற்றுத்தருகிறது... ஆச்சர்யம் என்னவென்றால் ,மாணவர்களின் சராசரி வயது, 58 .
பெய்ஜிங் மாநகர அரசின் திட்டத்தின் படி, 2008ம் ஆண்டு பெய்ஜிங்கில் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி நடைபெறும் போது, 40முதல் 60 லட்சம் வரையான பெய்சிங் நகரவாசிகள் ஆங்கில மொழி பேச முடியும்.

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெறும் போது, பெய்ஜிங் காற்று தர பிரச்சினையில் , காற்று தரத்துக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், பெய்ஜிங் சுற்றுச்சூழல் துறை மிகவும் கவனம் செலுத்தி பல கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.


ஒலிம்பிக் குழுவின் உலக ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டாளி, தொலைக்காட்சி ,அஞ்சல் நிறுவனங்கள், பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்பு குழுவின் சந்தை வளர்ச்சி ஆகிய திட்டங்கள், பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்பு குழுவின் ஏற்பாடு மற்றும் அனைத்து பணிகளுக்கு, அதிக நிதி, வசதிகள், தொழில் நுட்பம், சேவை ஆகியவற்றை திரட்டியுள்ளன.


பெய்ஜிங் ஒலிம்பிக் பூங்காவின் மையப் பிரதேசத்திலுள்ள தென் பகுதியில் , போட்டிக்கான சிறப்பு வாய்ந்த அரங்குகளில் ஒன்றான 17 ஆயிரம் இருக்கைகள் கொண்ட, சுமார் 80 ஆயிரம் சதுரமீட்டருள்ள ,நீர் கன சதுர விளையாட்டரங்கு, அதிகாரப்பூர்வமாகக் கட்டி , பயன்படுத்தப்படத் துவங்கியது.

பெய்ஜிங், 31 விளையாட்டரங்குகளையும் பயிற்சியரங்குகளையும் ,இதர 30 விளையாட்டரங்குகள், 44 பயிற்சியரங்குகளுடன் , 29வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் தேவையை நிறைவு செய்யும் வகையில்,கட்டியமைத்துள்ளது

கிட்டத்தட்ட 63 தொழில் நிறுவனங்கள் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஒத்துழைப்பு நிறுவனங்களாக மாறியுள்ளன.நிதி, பொருட்கள், தொழில் நுட்பம் மற்றும் சேவை போன்று பல்வேறு வகையிலும் ஆதரவுகளை இந்தத் தொழில் நிறுவனங்கள் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு வழங்கும். இதனால் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி வெற்றிகரமாக நடைபெறுவதற்கு தலைசிறந்த பொருட்களின் அடிப்படை உருவாக்கப்பட்டுள்ளது.
சர்வதேச தொழில் நிறுவனங்களைப் பொறுத்து, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, சீனாவின் சந்தையை விரிவாக்குவதற்கு வலிமையான வாய்ப்பை வழங்கும்.
சீனாவின் மிகப்பரப்பிலான ஆழமான பண்பாட்டையும் "ஒரே உலகம், ஒரே கனவு" என்ற தலைப்பின் அடிப்படையில் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை நடத்திக்காட்ட விரும்பியுள்ளது..
பெய்ஜிங்கிற்கு வருகை தரும் வீரர்கள், பயிற்சியாளர்கள் பல்துறை அதிகாரிகள், வெளிநாட்டு பார்வையாளர்கள் ஆகியோரின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 6 இலட்சம் இரூக்கலாம்.பண்பாட்டு நடவடிக்கைகள் ஒலிம்பிக் நடவடிக்கைகளின் முக்கிய பகுதியாகும். அனுமதிபெற்றுள்ள 20,000 மக்கள் தொடர்பு ஊடகங்கள் நேரடி ஒளிபரப்பு செய்யும்..
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி தொடக்க விழாவின் தீபத்தை ஏற்றும் வழிமுறை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், திட்டவட்டமான நுணுக்கங்கள், இரகசியமானது .தொடக்க விழா சடங்கு, கலைநிகழ்ச்சிகள், வீரர்கள் விளையாட்டரங்கில் நுழைவது, தீபத்தை ஏற்றுவது ஆகிய 4 பகுதிகளை இத்தொடக்க விழா உள்ளடக்கும்.

வண்ணமயமான வான வேடிக்கைகள் மூலம் ஒலிம்பிக் சின்னமான ஐந்து வளையங்களை முதன்முறையாக ஆகாசத்தில் காண்பிக்கப்படும்.. மேலும் கொடி ஏற்றத்தின்போது மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு செல்லும் அளவிற்கு கணினியின் துணையோடு வான வேடிக்கைகள் வெடிக்கப்படும்..

நிகழ்ச்சியின் இறுதியில் 2008 முகங்கள் உலகம் முழுவதிலிருந்தும் காண்பிக்கப்படுவது விசேஷமாக இருக்கும்..


மேலதிக விசேஷமான பாதுகாப்புகள், பார்வையாளருக்கும், வீரர்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..இதில் FBI யும் அடங்கும்..

மேலும் பெய்ஜிங்கில் வாகன , போக்குவரத்து வசதிகளும் , அதி வேக ரயில்கள் ஓவ்வொரு 5 நிமிடங்களுக்கு ஒன்றாக வசதியாகவே உள்ளது பெய்ஜிங்கில் மட்டும் 60 ஆயிரத்துக்கும் அதிகமான வாடகை மகிழ்வுந்துகள் இருக்கின்றது..

இதைத்தவிர உணவகங்கள், சர்க்கர நார்காலி வசதியுடன் கூடிய வண்டிகள், மது அருந்துமிடங்கள், தொலைபேசி வசதிகள், புகைப்பட வீடியோ வசதிகள்,மருத்துவ வசதிகள், இப்படி தேவையான அனைத்து வசதிகளும் அதிக அளவில் செய்யப்பட்டுள்ளன... பொது மக்களுக்கும் உதவி செய்திட விசேஷ பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது..
இந்த விளையாட்டை காண்பதற்காக விற்கப்பட்ட அனைத்து டிக்கெட்டுகளும் அதிரடியாக விற்றுத் தீர்ந்தன... இதற்காக 2 நாள்கள் கூட வரிசையில் காத்திருந்தார்கள் மக்கள்..

சீன கலாச்சாரத்தோடு இணைந்த சில நகைச்சுவை பாத்திரங்களாய் விளையாட்டுகளை சித்தரித்து மகிழ்கிறார்கள்..படத்தில் உள்ளது போல..மேலும் அழகான வேலைப்பாடுகள் நிறைந்த சிறபங்கள் பூங்காக்களை அலங்கரிக்கின்றன்..


பல பிரச்னைகளுக்கிடையிலும் இந்த விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதோடு தம் கலாச்சாரத்தையும் , பண்பாட்டையும் பேணும் சீனாவையும், இந்த விளையாட்டுக்கள் நல்ல முறையில் நடைபெறவும் நாமும் மன மகிழ்வுடன் வாழ்த்துவோம்...


பால் கெட்டியதோ தாய் பாசம் கெட்டியதோ?????


" அம்மா , அம்மா?.."
" அம்மா தூங்குறீங்க போல. பலகாரம் தர வந்தேன்.... சரி அப்புரமா வாரேன்.."
" யாரு விக்னேஷ் தம்பியா?.."
" இல்லம்மா நான் அருண்.."
" எப்பப்பா வந்த ஊர்ல இருந்து?. எல்லாரும் சொகந்தானே?"

" ஆமாம்மா.. இப்பத்தான், ஊர்ல எல்லோருக்கும் நிம்மதி உங்களைப்பற்றி சொன்னதிலிருந்து..இதோ அம்மா அனுப்பிய பலகாரம்"
" அட.. வெச்சிருந்து சாப்பிடுவியா.. சரி சரி. குளிச்சுட்டு வா.. ஆப்பம் தயார் பண்ணுறேன் .. சாப்பிடு.."
----------------------------------------------------------------------------
கடந்த 3 மாதமாக சுகந்தி அம்மா தன் வீட்டு மாடியில் குடியிருக்கும் பசங்களுக்கு சமைத்து கொடுப்பதும்
அவர்களும் தன் அன்னையைப்போலவே நினைப்பதும், தாங்க முடியா சந்தோஷம் சுகந்திக்கு..
ஆனால் இவை யாவும் இதுவரை ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் உயர் அதிகாரியாக இருக்கும் வேணுகோபாலுக்கு
தெரியாது... பாதி நாட்கள் வெளிநாட்டுப்பயணம்... மீதி நாட்களும் படுக்க மட்டுமே வீட்டுக்கு...
அந்தஸ்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்..மிக வெற்றிகரமாக 2 பிள்ளைகளை வளர்த்து வெளிநாட்டுக்கு அனுப்பியவர்..
சொந்த வீட்டை வாடகைக்கு கூட கொடுக்கமல் இருந்தவர், மனைவியின் கட்டாயத்தின்பேரில், துணைக்காக சரி என்றார்..
இன்று ஞாயிறு ,அதிசயமாக வீட்டில் , வாசலில் பேப்பருடன்...
"அம்மா..."
" யாருப்பா நீங்க?.. ஓ மாடியில் உள்ளவரா.. என்ன வேணும்"
" அம்மா இல்லியா.. இந்த பாத்திரத்தை கொடுக்க வந்தேன் அங்கிள்.."
-------------------------------------------------------------------------------------------------
" என்ன நடக்குது இங்க?..பாத்திரங்கள் எல்லாம் ?..."
" நானே சொல்லணும்னு இருந்தேன் .. மாடியில் உள்ள 5 பேருக்கும் நானே சமைத்து தருகிறேன்.. அவர்கள்
அதற்கு பணம் 10,000 மாதம் தருகிறார்கள்..."
" ஓஹோ.. உனக்கு தேவையான பணத்தை நானும் , உன் பிள்ளைகள் இருவர் தரவில்லையா?.. ஏன் இப்படி
என் மானத்தை வாங்குகின்றாய்..?.. ஒரு சமையல்காரியாய்..???"
" அதாங்க வித்யாசம்.. உங்களுக்கு தெரிவதெல்லாம் அந்த பணம். அதனால்தான் அப்படிச்சொன்னேன்...இப்பத்தான்
வாழ்க்கையில் முதல்முறையாக முழுவதும் வாழ்வதுபோல் உணர்கிறேன்.. பிள்ளை பிறந்ததுதான் தெரியும்.. நான் பட்டிக்காடு
என்று சொல்லி குழந்தைகளை படிக்க வைக்க ஊட்டி காண்வெண்ட் அனுப்பினீர்கள்.. அப்புரம் ஐஐடியாம், வெளிநாடாம்..."

" ஓ பணம் சம்பாதிக்கிறோம் என்ற திமிர் வந்துவிட்டதா?.. என்னிடம் அனுமதி கேட்காமல் செய்கிறாயென்றால் ,என்னை கூட விட்டு போகத்தயாரா ?"
".நான் ஏங்க போகணும்.. என்ன குறை வெச்சீங்க இதைத்தவிர.. எனக்கும் கடமை இருக்கு உங்களுக்கு ஆயுசுக்கும் சேவை செய்ய..ஆனா; எனக்காக முதல்முறையா
வாழ்க்கையை ஆரம்பித்துள்ளேன் , இதை நிப்பாட்ட மாட்டேன் என்றே தோன்றுகிறது...பேரப்பிள்ளையாவது கொஞ்சலாம் என்றால் பேசும் பாஷை புரியவில்லை..
பிரசவித்தவளுக்கு ஒரு வருடம்தான் பால் கெட்டி அவதிப்படுவாள்... ஆனால் நானோ 25 வருடமாக பாசத்தை கெட்டி வைத்து அவதிப்பட்டுள்ளேன், இந்த போலி
வாழ்க்கையில்... இப்பதான் 5 குழந்தைகளுக்கு தாயாகியிருக்கேன்.. என் மனத்தில் சுமையாக தேக்கி வைத்திருந்த பாசமெல்லாம், அவர்கள் " அம்மா" என்று அழைக்கும்போது
அப்படியே பீறிச்சு வெளிவருகிறது..... கடைசி காலத்தில் இதற்காக எதையும் இழக்க தயார்..
பயமுருத்தவில்லை... புரிந்து கொள்ளுங்கள்.." என்று கண்ணீருடன் சென்றுவிட்டாள் சுகந்தி..
பெருமிதம் கொண்டிருந்த தன் போலி வாழ்க்கையின் மறுபக்கத்தினை உணர்ந்தவராய் அதிர்ச்சியில் மாடிக்கு ஏறினார் வேணுகோபால்..
" அங்கிள் நீங்களா?.. கூப்பிட்டா நானே வந்திருப்பேனே?." பயத்துடன் சீனு..
" அங்கிள் இல்லப்பா, அப்பான்னு சொல்லுவியா?.."
*******************************************************************************************************************
தத்து குழந்தை..சிறுகதை



" என்னம்மா , இன்னுமா கிளம்புற.. நேரமாச்சு.. சீக்கிரம்..."
" இதோ வந்துட்டேங்க... குழந்தைக்களுக்கு பரிசாக வாங்கிய சில பொருள்களை எடுத்துவைக்கிறேன்.."
ரிஷியும், ரேஷ்மாவும், ஆசையோடு , சந்தோஷமாக காரில் வந்து அமர்ந்தனர்..., ஏகப்பட்ட பரிசுபொருள்களோடு.
" ரேஷ்மி, நான் சொல்றேன்னு தப்ப எடுத்துக்காத..."
" இல்லை, இல்லை .. சொல்லுங்க....தப்பா எடுத்துக்கிறமாதிரி சொல்லமாட்டீங்க..." சிரிப்புடன்..
" நாம தத்தெடுக்கப்போற குழந்தையை பரமாரிக்க ரொம்ப பொறுமை வேணும்பா..."
"ஆமா, அதுக்கென்ன?.."
" இல்ல , ஒரு குழந்தைன்னா பரவாயில்லை.. இரண்டு குழந்தை.. அதுதான் ..."
" அதுக்கெல்லாம் தயாராதான் இருக்கேங்க..."
"அதுகில்லப்பா, இரண்டு குழந்தைக்கும் வேளாவேளைக்கு கவனிப்பு, வேணும்.. நீ ரொம்ப பொறுமைசாலி... ஆனாலும், குழந்தை தெரியாமல்
இருப்பிடத்திலேயே , மலம் கூட கழிக்கலாம்... அதுதான்.."
" ஏன் ரிஷி , இதுக்கெல்லாமா யோசிக்கணும்.. அந்த குழந்தைங்க தரப்போற புன்னகை, மனநிம்மதியும் , மகிழ்ச்சியும், நான் செய்யப்போற
எல்லாத்துக்கும் ஈடாகாதே...இத்தனை நாள் இதனையெல்லாம் இழந்ததற்கு மொத்தமா சேர்த்து அனுபவிக்கப்போறேன்னு நினைக்கும்போதே
சந்தோஷமாயிருக்கு ரிஷி..."
" சரிங்க தலைவியே, ஆனா இந்த ரிஷியையும் கொஞ்சம் அப்பப்ப கவனிச்சுக்கோங்க, தயவாக....."கெஞ்சுவதுபோல்..
" ரி....................ஷ்ஷ்ஷ்ஷீஈஈஈஈஈஈஈஈஈஈ" செல்லமாக இடித்தாள் ..
" அடிக்கடி மருத்தவமனை, செலவுகள் என்று எதிர்பாராத விஷயங்கள் வரலாம்... "
" அய்யோ .. என்ன ரிஷி... இதுகூடவா புரியாமலா..?.."
" இல்லம்மா, அதுமட்டுமல்ல, குழந்தைகளுக்கு என்ன வருத்தம் , நோய் என்றுகூட நமக்குத்தெரியாது.. ரொம்பவும் பாசம் வெச்சுட்டு ..அப்புரம், ஒருவேளை பிரிய..."
ரிஷியின் வாயைப்பொத்தினாள் ரேஷ்மி..
" போதும் ரிஷி.. இதுக்குமேல ஒண்ணும் பேசாதீங்கப்பா... கடவுள் இருக்கிறார்..."
வண்டியை நிறுத்தி கண்கலங்கியவளை அணைத்துக்கொண்டான்...
" உன்னுடைய வெகுளித்தனமான , இளகிய மனம் தெரிந்துதான் சொன்னேன்டா, மன்னிச்சுக்கோம்மா"
கார் மெதுவாக, முதியோர் இல்லத்துள் நுழைந்தது, இரு முதியோரை, குழந்தையாக, கொஞ்சுவதற்கு, தத்தெடுக்க ஆவலாய் வந்தார்கள் குழந்தைப்பேறு
இல்லாத, காதல் திருமணத்தால் உறவுகளையும் இழந்த ரிஷியும் , ரேஷ்மாவும்...



குழ‌ந்தையின் கும்மி.. - 5

அன்று வார‌ விடுமுறை ..ஷாப்பிங் போயே ஆக‌ணும்.. என்ன‌ ச‌ட்டை போட்டாலும் பிடிக்காதாம்.. அதாவ‌து ப‌ர‌வாயில்லை.. நான் என்ன‌ உடுத்தினாலும் " இது வேனாமா. வேற‌ போடு.. இப்ப‌டியே 4 முறை மாற்றியாச்சு..."
அவுக‌ அப்பா கூட‌ சொன்ன‌தில்லை...இப்ப‌டி.
ஒருவ‌ழியா கிள‌ப்பி டிபார்ட்மெண்ட் ஸ்டோர் சென்றோம்.
எப்போதும் வ‌ண்டிக்குள்ள‌ தூக்கி போட்டாதான் நான் சாமான் வாங்க‌ முடியும்...
இன்னிகு பிடிவாத‌ம் .. கீழே விடுன்னு.. இறக்கி விட்டா அவ‌னும் ஒரு கூடையை எடுத்துக்கொண்டு, என் பின்னாலேயே க‌ண்ட‌ சாமானும் ( அவ‌னுக்கு பிடித்ததை ) எடுத்துப்போடுகிறான்..
அண்ணாவும் அப்பாவும் சொல்லி பாத்து , கெஞ்சிப்பாத்தாலும் முடிய‌லை..
"ச‌ரி விடுங்க‌.. ஏதோ உடையாத‌ சாமான் எடுக்கானான்னு ம‌ட்டும் பாருங்க‌..."
அவ‌னுக்கு நான் ச‌ப்போர்ட் ப‌ண்ற‌துக்கு ந‌ன்றியா உட‌னே என‌க்கு ஒரு முத்த‌மும், .....
அய்யோ என்ன‌ இது... இப்ப‌ என் வ‌ண்டியையும் சாமானால் நிற‌ப்ப‌ ஆர‌ம்பிக்கிறான்..
கேக்க‌ணுமா அண்ணாக்கும் அப்பாக்கும் சிரிப்பை.. மெதுவாக க‌ழ‌ண்டுகொண்டார்க‌ள்..நீயாச்சு பையனாச்சு என்று.
" என்ன‌ங்க‌.. ஏய் த‌ம்பி..கொஞ்ச‌ம்.. /..."ம்கூம்.. ஆள காணோம்..இப்ப‌ ட‌புள் வேலை...சின்ன‌வ‌ன‌ மேய்க்க‌ணும்.. சாம‌னன்க‌ளை ஞாப‌க‌மா வாங்க‌ணும்.. அப்ப‌ப்ப‌ அவ‌ன் கீழே போடுற‌தை எடுத்து குடுக்க‌ணும்.. எங்க‌யும் இடிக்காம‌ ச‌ர்க்கஸ் ப‌ண்ண‌னும்..முக்கியமா, கவுண்டரில் அவன் வாங்கிய சாமானை அவனுக்குத்தெரியாமல், மறக்காமல் எடுத்துவிடணும்.. சிலசமயம் வீடு வந்தபிந்தான் தெரியும் , இது எப்படி வந்தது என்று..?.
ஒருவ‌ழியா வாங்கிய‌தும் உண‌வு செக்ஷ‌‌‌ன்..
அங்கே சாம்பிளுக்கு ஒரு கேக்கை ப‌ல‌ துண்டா வெட்டி வெச்சுருந்தாங்க‌.. நான் எவ்வ‌ள‌வு ந‌ல்லா ( ????) கேக் ப‌ண்ணினாலும் வாச‌ம் கூட‌ பிடிக்காத‌வ‌ன், அந்த‌ பொண்ணு குடுத்த‌தும் வாங்கிக்கொண்டான்.. ஆச்ச‌ர்ய‌ம்.. ஓ அவ‌ அழ‌கா இருக்கான்னா.. ?//.
அவ‌ள் மேலும் மேலும் கொடுக்க‌ வாங்கி சாப்பிடுறான்.. அங்கே வ‌ந்த‌ அண்ணாவுக்கும் அப்பாவுக்கும் ஆச்ச‌ர்ய‌ம்.. என‌க்கோ ச‌ந்தோஷ‌ம் , பிள்ளை புதுசா கேக் சாப்பிடுறானேன்னு.. அண்ணாக்கு கோவ‌ம் வ‌ருது.." அம்மா , போதும்.. முழுதும் சாப்பிடுவான் போல‌.. என்ன‌ நினைப்பாங்க‌.."

" ப‌ர‌வாயில்லை மா.. நான் காசு கொடுக்கிறேன்...ஒரு சின்ன துண்டுதானே மா"
" அய்யோ அம்மா.. என‌க்கு அசிங்க‌மா இருக்கு..."
" ச‌ரி நீ அப்ப‌ கொஞ்ச‌ம் ஒதுங்கிக்கோ. என‌க்கு என் பிள்ளை சாப்பிடுற‌தே பெரிச‌ப்பா..புதுசா ஒன்று கத்துக்கொண்டிருக்கிறான் தொந்தரவு செய்யவேணடாமே.."
அதே கேக் ஒரு பார்ச‌லும் வாங்கிக்கொண்டேன்..வீட்டுக்கு வந்து அத தொட்டுகூட பாக்கலங்கறது வேற விஷயம்...
அடுத்து நான் காய்க‌றி வாங்க‌, அவ‌னோ திராட்சை பார்த்துவிட்டான்..ம்.. ரொம்ப‌ பிடிக்கும்.. அதுவும் க‌டையில் இருந்தால் ம‌ட்டும்..
திராட்சை கொத்தில் ஒன்றினை ம‌ட்டும் பிய்த்துவிட்டு, ஒடுகிறான், ப‌ண‌ம் செலுத்துமிட‌ம்..
பின்னாலே நானும்.. ஓடினேன்...க‌வுண்ட‌ரில் வைக்கிறான் அந்த‌ ஒரு திராட்சையை, ரொம்ப‌ உத்த‌ம‌னாட்ட‌ம்.. அவ‌ளோ சிரிக்கிறாள்.. அதற்குள் அப்பா ஒரு பையில் திராட்சையுட‌ன் வ‌ந்து ப‌ண‌ம் செலுத்த‌, அவ‌ன் திராட்சைக்கு ம‌ட்டும் அவ‌ன் கையில் ப‌ண‌ம் த‌ந்து. அதையும் ஒரு சின்ன‌ பையில் போட்டு கொடுத்த‌தும் ஏதோ சாதித்த‌ ச‌ந்தோஷ‌ம் .. ஆனா அண்ணாவுக்குதான் இதெல்லாம் பிடிக்க‌வில்லை... அவ‌ர் செய்த‌ குள‌ப்ப‌டிக‌ள் ம‌ற‌ந்து விட்டாரே.......

அடுத்து ஐஸ்கிரீம்... அப்பாவுக்குத்தெரியாம‌ல் வாங்க‌ணுமே... இல்லாட்டி திட்ட‌ ஆர‌ம்பித்தால் என் ப‌ர‌ம்ப‌ரை ப‌ல்லின் பெருமையெல்லாம் இழுப‌டுமே....
************************தொட‌ரும்..******************

லேசான தூறல்.. சிறுகதை..


" சாரிப்பா மன்னிச்சுக்கோ.."
" செய்றதையெல்லாம் செஞ்சுட்டு மன்னிப்பா?.. "
" அதான் சொன்னேன்ல.. மறந்துட்டேன்... திருமண நாளை.."
" அப்ப இப்படியே ஒரு நல்ல நாள் பார்த்து என்னையும் மறந்துடுங்க.."
" ம். சரி.."
" என்னாஆஆஆஆ.....து?"

" ம். இல்ல இல்ல ..கோவத்த பாரு.. ஆமா இந்த கோவத்தையெல்லாம் ஏன் கல்யாணத்துக்கு முன்னாடி காட்டல??"
" ம். பதில் சொல்ல மாட்டேன்.. "
" ஆமா.. ஏன் காட்டலன்னா, நீங்க ஒழுங்க இருந்தீங்க.. இப்படி இல்ல.."
" பதில் சொல்லிட்ட.. கிகிகி.."
" போதும் சிரிப்பு.."
" அய்யோ என் வேலை அப்படிம்மா... புரிஞ்சுக்கோ."
" அதுக்காக நம்ம கல்யாண நாள்கூட மறக்குமா?.. எங்க அப்பா எவ்வளவோ பரவால்ல.."
" என்ன .. எல்லா நாளையும் மறந்துடுவாரா மொத்தமா?..கிகிகி"
" ரொம்ப கோபப்படுத்தாதீங்க.. இப்பவே நான் அப்பா வீட்டுக்கு போறேன்...1 வாரம்..க்ர்ர்ர்"
" ஆ..ஊ ன்னா அப்பா னு சொல்லி எதுக்கு கம்பேர் பண்ற... உங்க அப்பா ஓட்டை ரைஸ்மில் வெச்சுட்டு வீட்டுக்கு
பக்கத்திலேயே வண்டிஓட்டுறார், வக்கணையா 3 நேரம் சாப்பிட்டு தூங்கி... என் நிலைமை அப்படியா கணினி யை கட்டி அழுவுறேன்,
நேரம் காலம் இல்லாம.."
" சரி.சரி, என் தேவதையே, வழக்கம்போல வழியனுப்புவியாம்... "
" மரியாதையா போய்டுங்க, இன்னும் கோவம் வரதுக்குள்ள.. சே என் பிரண்ட்ஸ் எல்லாம் என்ன நினைப்பாங்க.."
-----------------------------------------------------------------------------------------மதியம்
தோழியுடன்...அரட்டை...
" நல்லா டோஸ் விட்டேன் .. பயந்துட்டாருப்பா.."
" அதானே .. அதெப்படி திருமண நாளை மறக்கலாம்.."
" ம். இப்பத்தான் திருப்தியா இருக்கு...ஆனா பாக்க பாவமாயும் இருக்கு வருக்கு வேலை அப்படி.."
" நீயும் கொஞ்சம் பொறுமையா போயிருக்கலாமோ என்னவோ.."

" சரி சரி அப்புரம் பேசுறேன்.,.சாயங்காலத்துக்கு ஏதாவது விசேஷமா ஸ்வீட் பண்ணனும்.."
"ம். விட்டுக்கொடுக்க மாட்டியே.."
---------------------------------------------------------------------------------------------------
சாயங்காலம்..
அலுவல் முடிந்து கோபத்துடன் வீட்டிற்கு வருகிறான் .
" கிளம்பு.."
" எங்க..?."
" ம். உங்க அப்பா வீட்டுக்குதான்.."
" ம். எதுக்குங்க."
" ம். காலங்காத்தால கோபப்படுத்தி மனுசன அலுவலகம் அனுப்ப வேண்டியது... அங்க போய் நான்
தப்பு தப்பா செய்ய வேண்டியது.."
" சரி அது காலையிலேயே முடிஞ்ச விஷயம்.. இப்ப போய்."
" அதெல்லாம் தெரியாது.. இன்னும் 1 வாரம் உங்க அப்பா வீட்டுலதான் .,.. அப்பதான் என்னால புராஜெக்ட் ஒழுங்கா முடிக்க முடியும்.."
" ச்......என்ன இது திடீரென்று..."
" இப்ப நீ கிளம்புறயா இல்ல நான் எடுத்து வைக்கவா?."
எரிச்சலுடன் எடுத்து வைக்கிறாள்..
காரை எரிச்சலுடன் ஓட்டிக்கொண்டே செல்கிறான்... அவளோ தொண தொணன்னு..
" சரி இப்பவாவது ஒரு முடிவுக்கு வாங்க... ஏன் இந்த அவசரம்..."
" நீ மட்டும் கோபப்ப்டலாம் நான் படக்கூடாதா.."
" அதுக்கு பழிக்குப்பழியா.. ?. சரி சாமி இனி கேட்கல போதுமா?."
" அதெல்லாம் போதாது.."
" அப்ப.. என்ன மன்னிப்பு கேட்கணுமா?.."
" ம்.....ம்.. சரி ஆனா மன்னிப்பு நான் சொல்ற மாதிரி சொல்லும்போது கேளு போதும்..."
" என்ன புதிர் போடுறீங்க?.. ஆமா கார் எங்க போகுது ஸ்டேஷன் போகாம..?."
" பேசாம வா.."
" அட நீங்களே என்னை அப்பா வீடு வரை கொண்டு விடப்போறீங்களா??."
" இந்த தொண தொணப்பு தாங்காமதான் " பல்லை கடித்துக்கொண்டு...
" தங்காமதான்???" பயத்துடன்...
" 1 வாரத்துக்கு.."
" 1 வாரத்துக்கு..?????" திகிலுடன்
" ஹஹஹஹா.."
" நம்ம திருமண நாளை கொண்டாட ஊட்டி போறோம்....இப்ப உன் மன்னிப்பை தாராளமா இங்க தரலாம்.."

"..............:-)) " நாணத்துடனும் பொய் கோபத்துடனும்......
--------------------------------------------------------------------------------------------------
சரி இப்படில்லாம் சர்பிரைஸ் கொடுக்காதீங்க புதுசா கல்யாணம் ஆனவங்க... தாய்குலத்துக்கு பிடிக்காது...:-)))
அலெக்ஸ் தொடர்ச்சி..

அடுத்து வந்த நாட்களில் அலெக்ஸின் வருகை குறைந்தது.. விஷயம் தெரிந்து வேதனைப்பட்டோம்..
அலெக்ஸின் அப்பாவுக்கு திடீரென்று வேலை போய்விட்டது... அது ஒரு பன்னாட்டு நிறுவனம்..எங்களால் முடிந்த அளவு
தேடினோம்.. இங்கு தாய் பாஷை கண்டிப்பாக தெரியணும்...இல்லாவிட்டால் கொஞ்சம் கடினமே.. இதனால் பாதிப்பு அலெக்ஸுக்கு..
அவன் படிப்பை தொடர முடியாத நிலைமை.
என்ன கொடுமை.. குழந்தைக்கு அது ஒன்றுதான் ஆறுதல்.. அதுவும் முடியாவிட்டால்...?..அவர் அப்பாவே வீட்டில் பாடம்
எடுக்க நினைத்தார்.. நானும் உதவுவதாய் சொன்னேன்.. அப்பதான் நான் மும்முரமாய் CCNP படித்துக்கொண்டிருந்தேன்,
ஆனால் இதை எதையும் வெளிக்காட்டாமல் அலெக்ஸ்..பின்பு ஒருவழியாக அவர் பள்ளி முதல்வரிடம் ( எனக்கு தெரிந்தவர்)
பேசி செலவுகளை பின்னாளில் தருவதாய் கூறி அந்த பிரச்னையை சமாளித்தோம்..பள்ளிக்கு சென்று அவன் ஆசிரியரை சந்தித்தால்
" அலெக்ஸ் சேட்டைக்காரந்தான்" என்கிறார்கள்.. நம்பவே முடியவில்லை.. இருந்தாலும் சந்தோஷம் .. பிள்ளைக்கு சமாளிக்கவும் தெரியணுமே உலகில்... தாய்க்கு எப்போதும் தன் பிள்ளை நல்ல பிள்ளையோ????
அவர் தந்தை இப்போது அமெரிக்கா செல்ல முயற்சி எடுத்தார்.. அவர் சகோதர சகோதரி அங்கு இருப்பதால்.. இடையில் அவர் மட்டும் போவதாயும் , அலெக்ஸ்ஸை எங்களிடம்
விட்டுப்போவதாயும்.. எனக்கே தத்து கொடுத்தது போல அப்படி ஒரு சந்தோஷம் ...என் மகனுக்கும்..கற்பனையில் மிதக்க ஆரம்பித்தேன்..
முதல் முறை விசா நிராகரிக்கப்பட்டது... அலெக்ஸ் அப்பா வந்து என்னிடம் ஜெபம் செய்யச்சொன்னார்கள்.. ஆனால் என் மகனோ,
" கடவுளே அலெக்ஸுக்கு விசா கிடைக்கக்கூடாது " என்று ஜெபிக்கிறான்... அவனுக்கு புரிய வைப்பதற்குள் பெரும்பாடு.
அலெக்ஸ் நல்லா இருக்கவேண்டாமா, அவன் நம்ம கூட இருப்பதைவிட அவன் வாழ்வு சிறக்கணுமே தம்பி.. ம்கூம்.. புரியவில்லை.
இதற்கிடையில்தான் என் மகன் நச்சரிக்க ஆரம்பித்தான் தனக்கு துணையாக ஒரு தம்பி வேண்டுமென்று.அலெக்ஸ் போய்விட்டால்
தான் தனிமைப்படவேண்டுமென்று..
அப்படி ஒரு எண்ணமே கிடையாது.. ஆனாலும் கடவுளிடம் ஜெபிக்கும்படி சொல்லிவைத்தேன்.. அவன் அதை வேத வாக்காய் எடுத்துக்கொண்டு
2 வருடம் தவறாமல் ஜெபித்தான்... நான் சிரித்துக்கொள்வேன்..

அலெக்ஸுக்கு விசா கிடைத்தது.. அதே நேரம் கடவுள் கிருபையால் ஒரு குழந்தையும்...அலெக்ஸுக்கும் என் மகனுக்கும் ரொம்ப மகிழ்ச்சி..
ஆனால் அலெக்ஸ் மார்ச் மாதம் அமெரிக்காவுக்கு செல்ல எங்க வீட்டுக்கு மே மாதம் குழந்தை வந்தான்..
அலெக்ஸ் க்கு சிறப்பாக ஒரு பிரிவுபசார விழா வைத்தேன்.. பிரிய மனமின்றி..உணர்ச்சிகளையும், அழுகையையும் கட்டுப்படுத்தி..
அவனுக்கு அலெக்ஸ் என்றே பெயரிட ஆசை.. ஆனால் ஆண்ட்ரி பிரியன் டேனி என வைத்தோம்...இவனோ அலெக்ஸுக்கு எதிர்புரம்.
அலெக்ஸ்ஸை மறப்பதற்கே வந்த குழந்தை... ஆனாலும் அலெக்ஸுக்கான இடம் யாராலும் நிரப்பப்படமாட்டாது..
என்றாவது சந்திக்கலாம்.. சந்திக்காமலே போகலாம்... ஆனால் பல இனிய நினைவுகளை தந்துவிட்டு சென்றுவிட்டான்..அவனுக்கான நேசம் வட்டியோடு வளர்ந்துகொண்டிருக்கிரது..:-))
நிறய அவனைப்பற்றி எழுதலாம் .. என் மேசையின் பேப்பர் ( டிஷ்யூ) காலியாகிவிட்டது...:-((
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நமக்கான அன்பானவர்களும் ,பிரச்னைகளும், தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவே நம்புகிறேன்.... அந்தந்த காலங்களில்..
கசப்போ, இனிப்போ ,அவற்றின் சுவையை பருகிக்கொள்ளவேண்டியுள்ளது.., .. இந்த நீண்ட வாழ்க்கை பிரயாணத்தில்..

Monday, July 28, 2008

சந்தித்த அற்புதமானவர்கள்- பாகம் 3

இவனைப்பற்றி எழுதப்போகிறேன் என்றதுமே அப்படி ஒரு மகிழ்ச்சி மனதுள்... அவனோடு வாழ்ந்த அந்த 4 வருடங்களும்
என் வாழ்நாளின் பொற்காலம் அல்லவா?.. என் ரத்தம் இல்லை, என் உறவும் இல்லை... என் ஊர்?. என் பகுதி?. என் நாடு?, என் குலம்?.
ம்கூம்ம்... இல்லையே.. ஆனால் என் மனதில் ஒளிந்து கிடந்த அன்பை பன்மடங்காக பெருக வைத்தவன்... பெற்ற குழந்தைக்கு தாயாய் இருப்பது
ஆச்சர்யமேயில்லை... தன்னால் ஊறும் தாய்மை.. ஆனால் இவனுக்கு.. அதைவிட ஒரு படி அதிகம்..
அவன் தான் அலெக்ஸ்...
பள்ளியில் சரியான துணை கிடைக்காமலும், கேலி கிண்டலுக்கு ஆளாகி மனம் வருத்தமாயிருந்த நேரத்தில் விடுமுறை வகுப்புக்கு சென்று வந்தான்
மகன்.. வந்ததும் சொன்னான், அம்மா என்னைப்போலவே ஒரு புது பையன் வந்துள்ளான் ..அவனும் தனியாக எப்போதும்..
சொல்லிகொண்டிருந்தபோதே " அம்மா சீக்கிரம் வாங்க.. நான் சொன்ன பையன் இவந்தான்"
பால்கனியிலிருந்து அடுத்த அப்பார்ட்மெண்டில் பார்த்தால் அலெக்ஸ் அவன் துணியை காயப்போட்டுக்கொண்டிருந்தான்..
குழப்பமாயிருந்தது..
என் மகன் இங்கிருந்து அழைத்ததும் புன்னகையுடன் வருவதாகச்சொன்னான்..
சிறிது நேரத்தில் வந்து வீட்டின் மணியை அடித்து, நான் கதவை திறந்ததும், சுவரோடு சுவராக வெட்கத்தில்
குழந்தை ஒன்றி நின்று சாய்ந்து என்னை ஒருமாதிரியாக பார்க்க, மகிழ்ச்சியாக உள்ளே அழைத்து வந்தேன்..
அவனை எல்லா பசங்க மாதிரி சாதாரணமாக எண்ணிக்கொண்டு நான் என் சமையலை தொடர்ந்தேன் .
அவனுக்கு குடுத்த பழச்சாரு அருந்தும் முறையும் , அவன் என் மகனோடு சத்தமின்றி விளையாடும் முறையும்,
என் கவனத்தில் தவறவில்லை, நான் பிஸியாயிருந்தாலும்... அடுத்த 1 மணி நேரத்துக்குள்ளே அவன் மிகவும் பிடித்துப்போனான்..
எனக்கும் என் மகனுக்கும்...
அடுத்து வந்த நாள்களில் வளர ஆரம்பித்தது எங்களுக்கிடையிலான பாசம், நேசம் அன்பு எல்லாமாய்..
1 மாதத்திலேயே அவனை தேட ஆரம்பித்தோம் அவன் இல்லாத பொழுதுகளை..
என் மகனும் ரொம்ப மிருதுவான குணம் கொண்டவன்.. அவனுக்கு ஏற்றார்போல அதே மென்மையுடன்..
இருவரும் ஒன்றாக விளையாடுவதும், ஒன்றாக நீச்சல் பழகுவதும், தோட்டத்தை சுற்றி குருவி கூடு தேடி அதுக்கு சாப்பாடு
ஊட்டுவதும்...பின் வந்து அந்தக்கதைகளை என்னிடம் சொல்லி சிலாகிப்பதும்...
ஆனால் ஒன்று மட்டும் புரியவில்லை.. அவன் வீட்டில் அவன் அன்னையை பார்க்க முடியவில்லை...
கேட்கவும் தயக்கம்... அப்புரம் ஓர்நாள் என் மகன் அவன் வீட்டுக்கு சென்று வந்ததும் சொன்னான், அவன் அன்னையும் அப்பாவும்
பிரிந்து வாழ்கிறார்கள் என்றும், அம்மா பர்மாவில் இருப்பதாகவும்...
அவன் மேல் வைத்த பாசம் இப்போது 2 மடங்காகியது...
குழந்தை தனியே தன் படுக்கையை விரிப்பதை பார்த்து நான் இங்கு கண்கலங்கிக்கொண்டு இருப்பேன்...
என் குழந்தை என் மேல் கால்போட்டு தூங்க அவன்மட்டும் தனியே..
என் வீட்டு சாம்பார் அவனுக்கு ரொம்ப பிடிக்கும்.. அதை அவன் கரண்டியால் சாப்பிடும் அழகை
பார்த்துக்கொண்டே இருக்கலாம்.. நான் என்ன சொன்னாலும் ஒரு தலையசைப்புதான்..
என் மகனைவிட அவன்மேல் பாசம் வந்துவிட்டதோ என்றுகூட எனக்கு சந்தேகம் வருமளவிற்கு
அப்படி ஒரு நல்ல பையன்... சாது... எங்கு சென்றாலும் அவன் இல்லாமல் போகமாட்டோம்...
பழகிய முதலில் ஓர்நாள் நான் என் பையனை அழைத்துக்கொண்டு மிருகக்காட்சி சாலைக்கு சென்ற போது அவனும்
வருவதாகச்சொல்ல, கிளம்பி கீழே போனதும்தான் தெரியுது அவன் அப்பாவும் கூட வருவதாய்... எனக்கோ தர்மசங்கடம்..
அவன் தந்தையோ யாருட்னும் குழந்தையை அனுப்ப பயம் .. என்னத்த சொல்ல, நால்வருமாய் சென்றோம்..அவன் தந்தையிடம்
அவனும் பிள்ளையிடம் அப்பாவும் வைத்திருக்கும் பாசம் அப்போது புரிந்தது... ஆனாலும் இருவரும் நண்பர்கள் போல
பேசி சிரித்துக்கொள்வார்கள்.. வீட்டு வேலையும் அப்படியே.. அப்பா பொறியாளர்... வீட்டில் சமையல் , எல்லா வேலையும் அவரே..
அலெக்ஸ் எங்க கூட பழகி 6 மாதம்பின்தான் அவர் அப்பாவுடன் எங்களுக்கு பழக்கம்.. ( நான் எளிதாக யாரிடமும் பழகுவதில்லை அப்போதெல்லாம்)
இப்ப குடியிருப்பில் எல்லா பசங்களுக்கும் பொறாமை வருமளவிற்கு என் மகனும் அலெக்ஸும்..
அதைவிட அலெக்ஸுக்கு நான் அம்மாவாகவும் , அவன் எனக்கு பிள்ளையாக இருப்பதும்...அவனைப்பார்க்கும்போது
எனக்கான என் கஷ்டங்கள் பறந்து ஒடிவிடும்.. அந்த சின்னவயசிலேயே அந்த சாந்தமான முகம், கஷ்டங்களை , சுமைகளை தாங்கிய அந்த ஆழம்...
கணவருக்கே , ஏன் என் மகனுக்கே, நான் அலெக்ஸ் மேல் வைத்திருக்கும் பிரியம் பொறாமை கொள்ளச்செய்கிறது..
யாருக்குமே பிடிக்கும் அலெக்ஸை..இப்படியான சந்தர்ப்பத்தில்தான் அந்த துன்பம் வந்தது அலெக்ஸ் வாழ்வில்....என்னையும் புரட்டி போட்டது..
****************************************தொடரும்**********************************************